புலி – சினிமா விமர்சனம்







எச்சரிக்கை – இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டசி என்பதால் , இதற்கான என் விமர்சனமும் ஃபேன்டசியாகவே இருக்கும்.

அங்கே, இங்கே என்று சுற்றிவளைத்து , உங்களின் நேரத்தை வீணடித்து, உங்களை ரணமாக்காமல் நேராக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். பொதுவாக நான் விஜய் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. காரணம், என்னை நான் அஜித் ரசிகன் என்று பொதுவெளியில் பிரகடனப்படுத்தியபின்பு , விஜய் திரைப்படங்களுக்கு எழுதப்படும் விமர்சனம் கண்டிப்பாக நடுவுநிலையில் இருக்காது என்று மற்றவர்களால் கூறப்படும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்படும் நிலை உள்ளது. ஒருவேளை படம் நன்றாக இல்லை என்பதனை அப்படியே எழுதினால் , ‘நீ ஒரு அஜித் ரசிகன்; அதனால் தான் எங்கள் தளபதி படத்தைத் தரக்குறைவாக எழுதுகிறாய் ’ என்ற கம்ப்ளைன்ட் வரும். இங்கே நான் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் நான் அஜித் ரசிகன்; ஆனால் விஜய் ஹேட்டர் கிடையாது. காவலன் திரைப்படத்திலிருந்து அனைத்து விஜய் திரைபடங்களையும் முதல்நாள் முதல்ஷோ என்ற ரேஞ்சில் (ஜில்லா தவிர) பார்த்துவருகிறேன். சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் தன்னை அஜித் ரசிகன் என்று கொக்கரித்துவிட்டு, எப்போது பார்த்தாலும் விஜயை ஓட்டுவதையே பிழைப்பாக கொண்டிருப்பார்கள்; காரணம் தங்களை ஒரு விஜய் ஹேட்டர் என்று வெளிப்படையாக கூறாமல் , அதற்கென ஒரு காரணத்தைக் கற்பிக்கும் பொருட்டு அஜித் ரசிகன் என்ற சாயத்தைப் பூசிக்கொண்டு இப்படியெல்லாம் செய்துவருகிறார்கள். இதே எதிர்வினை அஜித்திற்கும் உண்டு.

சுற்றிவளைக்காமல் மேட்டருக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இவ்வளவு சுற்றி வந்து உங்களைக் கடுப்பாக்குவதற்கு காரணம் நான் விஜய் ஹேட்டர் இல்லை என்பதை உங்களுக்கு விளக்கவே! இவ்வளவு நாள் விஜய் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதாமல் இப்போது மட்டும் என்ன கூந்தலுக்கு எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. என்ன செய்ய ? இது ஒரு நார்மல் திரைப்படமாக இருந்திருந்தால் நான் எழுதியிருக்கமாட்டேன். இது ஒரு ஃபேன்டசி அட்வெஞ்சர் திரைப்படமாயிற்றே ! இதற்கு நான் விமர்சனம் எழுதவில்லை என்றால் ஆத்தா ஃபேன்டசி காளியத்தாள் என் கனவில் வந்து என் கண்ணைக் குத்திவிடுவாள்.

பொதுவாக ஃபேன்டசி படங்களுக்கு அவ்வளவாக தமிழகத்தில் வரவேற்பில்லை என்பது என் ஆதங்கம்; இத்தனைக்கும் தமிழ்சினிமாவின் ஆரம்பகாலகட்டங்கள் பேன்டசி எனும் மாயவலையத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. அன்று வந்த பல ஃபேன்டசி திரைப்படங்களை இப்போது ஹாலிவுட்டில் பட்டி, டிங்கரிங் செய்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் , பேன்டசியில் தாயான நம் தமிழ்சினிமா , அப்படியே அதைமறந்து விட்டு வேறெங்கெங்கோ பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஏன் என்றால் நம்மவர்கள் ஃபேன்டசி கதைகளைக் குழந்தைகளுக்கானது என்று எண்ணத்துவங்கியது தான். நாமும் ஒரு காலத்தில் குழந்தையாகத் தானே இருந்தோம்?

கிட்டத்தட்ட சாவுமணியடித்து ஃபேன்டசி எனும் பெயரே தமிழ்நாட்டில் மறையத்துவங்கும் வேளையில் ஒரு பக்கா ஃபேன்டசியைக் கொடுத்து திரையுலகில் ஒரு புரட்சி செய்தார் இயக்குநர் சிம்புதேவன். இம்சை அரசன் திரைப்படத்தை இன்றளவும் என் லேப்டாப்பில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்றால் பாருங்கள். அவரின் வரவுக்குப் பின் பேன்டசி சித்திரங்கள் மறுபடியும் கொஞ்சம் உயிர்பெற்றது எனலாம். தொடர்ந்தாற்போல் சில பேன்டசி திரைப்படங்களாக எடுத்து சிம்புதேவன் தன்னை ஃபேன்டசி இயக்குநராகவே காட்ட ஆசைப்பட்டார். அதன் வெளிப்பாடு அறை எண் 305-ல் கடவுள்,  இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என வரிசையாக ஃபேன்டசி திரைப்படங்களைக் கொடுத்தார். 

இன்னொருபுறம் நான்கு ஆண்டுகளுக்குமுன் வாங்கிய சறுக்கலில் இருந்து பரிபூரணமாக வெளிப்படும் பொருட்டு இளையதளபதி தனக்கேற்ற கதைகளாக தேடித்தேடி நடித்தார் . ஜில்லா கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. சுறாவிற்கு பின் மரணமொக்கைத் திரைப்படங்களைத் தவிர்த்து வந்த இளையதளபதிக்கு வேறொரு வடிவில் பிரச்சனை வந்தது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ! ஒவ்வொரு படமும் ரிலிசாகுமா ? ஆகாதா ? என்று பணம்போட்ட ப்ரொடியூசர்களை விட , பர்ஸ்ட்ஷோக்கு டிக்கெட் எடுத்து , ரீஃபண்ட் பண்ணுவானுங்களா ? மாட்டாங்களா ? என்று அதீத புலம்பலில் தவித்தவர்கள் நிறையபேர். ஆனாலும் அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குமிடையே படம் ஹிட் ஆனது தனிக்கதை.

வரிசையாக ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்துவந்த இளையதளபதிக்கு கொஞ்சம் போர் அடித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பகவதியில் ஆரம்பித்து (இடையில் காவலன், நண்பன் தவிர்த்து) கடைசியாக வந்த கத்தி வரை தளபதி முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படங்களிலேயே தான் நடித்துவருகிறார். இந்த காரணங்களால் வெரைட்டி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தளபதியிடம் சிம்புதேவன் தன் கற்பனையை முன்வைக்க , இம்ப்ரஸ் ஆன விஜய் ஓ.கே செய்து உருவானது தான் புலி.

பொதுவாக ஃபேன்டசி திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி இலக்கணம் கிடையாது என்பதே இலக்கணம். கதை எப்படி வேண்டுமானாலும் போகலாம், கற்பனை எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் ; ஆனால் திரைக்கதை பக்காவாக இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து எப்படியும் ஃபேன்டசி திரைப்படங்களை குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்க்கும்படியாகத் தான் இருக்கும். இந்த ஆவலில் சேலத்தில் என்னுடைய இன்ப்ளூயன்ஸை (?) வைத்து எப்படியோ 15 டிக்கெட்களை வாங்கிக்கொண்டு முதல்காட்சிக்கு நண்பர்கள் படைசூழ கிளம்பினோம். அங்கேபோனால் ஸ்பெஷல்ஷோ ரத்து என்றும் , எங்களுடைய 11 மணி ஷோவை ஸ்பெஷல் ஷோவாகவும், எங்களின் ஷோ டைமை 2.30 மணிக்கு என்றும் மாற்றிவிட்டார்கள். காலை 7 மணிக்கு ரசிகர்ஷோவிற்கு வந்த ரசிகர்களால் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டர் வாசலெங்கும் பிய்ந்துபோன செருப்புகளாகவே இருந்தது. கடனே என்று 2 மணிவரை காத்திருந்த நாங்கள் , ஸ்பெஷல் காட்சி முடித்துவிட்டு வந்திருந்த ரசிகர்களிடம் ச்சும்மானாச்சுக்கும் படம் எப்படி இருக்கு பாஸ் என்று கேட்க , அவர்களோ முகத்தில் சக்தியே இல்லாமல் எங்கோ பார்ரத்தபடி நல்லா இருக்கு பாஸ் என்று கூறிவிட்டுபறந்துவிட்டார். உடனே என் நண்பன், ‘இவனுங்க நல்லா இருக்குனு சொன்னா , சுமாரா இருக்குனு அர்த்தம்’ என்றுசொல்ல , நானோ வாயைவைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ‘இவனுங்களுக்கு ஃபேன்டசி படத்தையெல்லாம் ரசிக்கத் தெரியாது டூட். ஆளாளப்பட்ட செல்வாவோட படங்களையே ப்ளாப் ஆக்கி, போங்கடா நீங்களும் உங்க ஃபேன்டசியும் என செல்வாவையே பித்துபிடிக்க வச்ச ஆளுங்க டூட் இவனுங்க’ என்றேன். எப்படியோ அடித்துப்பிடித்து போய் அமர்ந்தோம். இளையதளபதியின் ரசிகர்கள் தயவு செய்து அப்படியே கடைசி நான்கு பேராவிற்கு சென்று படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழே உள்ள பத்தி உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல; என் மனதில் புண்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ள .

படத்தின் கதை என்னவென்று சிம்புதேவனிடம் தான் கேட்க வேண்டும் . ஏதோ அப்படி, இப்படியென்று ஒட்டவைத்து , பூதக்கண்ணாடி , மைக்ராஸ்கோப், டெலஸ்கோப் என்று வைத்து நான் கண்டுபிடித்த கதை என்னவெனில் வேதாளக்கோட்டை எனும் ராஜ்ஜியம்; அதன் கொடூர ஆட்சியின்பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்கள்; அந்த கிராமங்களில் ஏதோ ஒரு கிராமத்தில் , ஐ மீன்  ஹீரோவின் கிராமம்; அக்கிராமத்தின் பெரியவர் பிரபு . ‘உங்கள் ஆட்கள் இப்படியெல்லாம் அநியாயம் செய்கிறார்கள் ’ என்று ராணி ஶ்ரீதேவியிடம் கோர்த்துவிடச்செல்லும் பிரபுவின் ஒருகையை வெட்டி அனுப்பிவிடுகிறார் படுபாதக கொடூர தளபதி சுதீப். அப்போதே நமக்கெல்லாம் சுதீப்பின் வெறித்தனங்களைப் பார்த்து அதீத பயத்தினால் சீட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறோம். பிரபுவின் கிராமத்தில் ஒருமுறை வேதாளங்கள் வந்து ராவடி செய்ய , கடுப்பான ஒரு சிறுவன் கல்லை எடுத்து எறிந்துவிடுகிறான். அவர்தான் நம் ஹீரோ என்று யாருக்கும் அப்போது தெரியாது. வேதாளங்கள் டென்சனாகி யாரென்று கேட்க , அச்சிறுவனின் அக்கா நான் தான் எறிந்தேன் என்று சொல்ல அச்சிறுமியையும் கொன்றுவிடுகிறார்கள். இப்போது அந்த கிராமத்தைக் காட்க யாருமே இல்லையே என்று தவிக்கும்  அக்கிராம மக்களுடன் நாமும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தவிக்கிறோம்.

அதன்பின் வருடங்கள் உருண்டோட சிறுவன் வளருகிறார்; அவ்வப்போது அட்டூழியம் செய்யலாம் என்று ஆசையோடு வரும் வேதாளங்களை , தன் ராஜதந்திரத்தால் தலைத்தெறித்தோடச் செய்கிறார் ஹீரோ. உடனே நமக்கெல்லாம் உடல், சட்டை, செருப்பு என எல்லா இடத்திலும் புல்லரிக்கச் செய்யும் டி.எஸ்.பியின் புலி, புலி , புலி பாடல் வருகிறது. பாடல்முடிந்ததும் தமிழ்சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு அறிய விஷயத்தை ஊடாலே புகுத்தி நம்மை குப்புறப்படுத்து கும்பிடவைத்திருக்கிறார் இயக்குநர்; ஆம் இதுவரை யாருமே கண்டிராத வகையில் ஹீரோயினின் இன்ட்ர’டொக்’சனை வைத்து நம் மனதை அள்ளிவிடுகிறார். இப்போது என்ன செய்யவேண்டும் ? ஹீரோவையும் காட்டியாகிவிட்டது, ஹீரோயினையும் காட்டியாகிவிட்டது ; அடுத்து , டூயட் என்று நாமெல்லாம் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் போது இமயமலை அளவிற்கு ஒரு பெரும் ட்விஸ்டை நம் தலையில் வைத்து சீட்டோடு நம்மை அமுக்கிவிடுகிறார் இயக்குநர் ; வச்சோஸ்கி சகோதரர்கள் மேட்ரிக்ஸ் எனும் படத்தில் வைத்த சண்டைக் காட்சிகளையெல்லாம் அள்ளித்தூக்கி மென்று ஏப்பம் விடும் அளவிற்கு அந்த முரட்டு சண்டை காட்சி இருக்கிறது.  ஐயகோ! அவசரப்பட்டு தளபதி வேதாளங்களை அடித்துவிட்டாரே ? இனிமேல் வேதாளங்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டுமென நாம் இரக்கமழை பொழிந்துகொண்டிருக்க , திடீரென தளபதி பாடிய பாடலைப் போட்டு நம் இரக்கமனதைக் காதல் ரசம், காம சாம்பார் என்று எல்லாம் பிழிந்தோட செய்துவிட்டார்கள். அப்பாடல் காட்சியில் ஸ்ருதிஹாசனின் தொப்பையைப் பார்த்து தியேட்டரில் இருந்தவர்களும் ஏன்டி , ஏன்டி எங்கள கொல்லுற? என்று பாடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அடுத்த காட்சியில் ஸ்ருதிஹாசனின் சேவை இப்போதைக்கு போதுமென்று அவரை வேதாளக்கேட்டைக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்கள் வேதாளங்கள். அதைத்தடுக்க போன பிரபுவை இரக்கம் சிறிதுமின்றி வயிற்றில் கத்தியை இறக்கிவிடுகிறார்கள். ஹீரோ வரும்வரை தன் உயிரை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்திருந்து , ஹீரோ வந்ததும் தான் செய்த சாகசங்களை அவரிடம் சொல்லிவிட்டு செத்துப்போகிறார் பிரபு. அங்கிருந்தவர்களைக் காட்டிலும் தியேட்டரில் இருந்தவர்கள் பிரபுவின் இழப்பைத் தாங்க முடியாமல் நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு , தியேட்டரின் கீழே காலை வைக்கமுடியாத அளவிற்கு கண்ணீர் ஆற்றினை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நல்லவேளையாக தியேட்டருக்கு வெளியே லைப்ஜாக்கெட்டை முன்னேற்பாடாக கொடுத்திருந்ததால் அதைப்போட்டு அந்த ஆற்றினுள் இருந்து தப்பித்தோம். அதன்பின் நடப்பது நம் கற்பனைக்கு அப்பால் , தொலைதூரத்தில், ரொம்ப தூரத்தில் நடக்கும் விஷயங்கள். இடையிடையே உங்களிடம் சொல்லமறந்துவிட்டேனே!  படத்திற்கு போகும்முன் ஜெலுசில் மாத்திரை மூன்று, வயிற்றுவலி மாத்திரை மூன்று  ஆகியவற்றை முன்னேற்பாடாக எடுத்துக்கொண்டு செல்லுங்கள் . தம்பிராமையாவும் , சத்யனும் சேர்ந்து செய்யும் காமெடியால் பக்கத்து வரிசையில் இருந்த பலர் வயிற்று வலி அதிகரித்து , வாயில் ரத்தவாந்தி எடுத்துவிட்டனர். இதைப்பார்த்த தியேட்டர் நிர்வாகம் உடனே அருகில் இருந்த பச்சிலை மருத்துவர் பச்சிலைக் கண்ணனை தியேட்டரில் வயிற்றுவலி எடுப்பவர்களுக்கு மருத்துவம் பார்க்க நிரந்தரமாக நியமித்துவிட்டது. படம் முடியும் முன்பே பச்சிலைக் கண்ணன் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலை விலைக்கு வாங்கிவிட்டார் என்ற வாய், செவி, கண்வழி செய்திகள் வெளிவந்தன. எனக்கோ பெருத்த சந்தேகம்; ‘ஏங்க ? அல்லோபதி டாக்டர கூட்டிட்டுவராம இவர எதுக்குங்க கூட்டிட்டு வந்திங்க?’ என்று வினவ , தியேட்டர் நிர்வாகமோ ‘தம்பி ! இந்த படத்துல எங்கனாச்சும் அந்தமாதிரி டாக்டர் வராங்களா? இல்லல! அதனால முள்ள முள்ளால தான் எடுக்கனும்’ எனும் அரியமொழியினை உதிர்த்துவிட்டு என்னிடமிருந்து அவரும் உதிர்ந்தார். நல்லவேளையாக நான் காமெடிக்காட்சிகளில் காதைப்பொத்திக்கொண்டதால் என் வயிற்றையும் கொண்டு போன சில்லரையையும் காப்பாற்றிக்கொண்டு வந்தேன்.

சத்யன், தம்பிராமையாவின் காமெடியால் கதிகலங்கி, நிலை ஸ்தம்பித்து போன பார்வையாளருக்கு , உலகசினிமா வரலாற்றிலேயே யாரும் கண்டிராத ஒரு பெரிய விஷயத்தைப் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்திற்குப்பின் தன் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். நாம் யாருமே மனக்கண், அகக்கண், பூனைக்கண், யானைக்கண் என்று எந்த கண்ணிலும் கண்டிராத சித்திரக்குள்ளர்களை திரையில் உலவவிட்டு நம்மை டர்ராக்கிவிட்டார்கள். சித்திக்குள்ளர்களைக் கண்டதும் பக்கத்தில் இருந்த எழுபது வயது பெரியவர் , திடீரென சிறுகுழந்தையாக மாறி பக்கத்தில் இருந்த தன் சகாவிடம் ‘மாமா ! பிஸ்கோத்து’ என்று கேட்ட அதிசயமும் அப்போது அங்கே நடந்தேறியது.

பெரியவர்தான் சிறுகுழந்தையாக மாறினார் என்றால் , ஹீரோவோ சித்திரக்குள்ளனாகவே மாறி ஒரு முரட்டுக் குத்து சாங்கிற்கு ஆடியேவிட்டார். அந்த பாடலைக் கண்ட ரசிகர்கள் தியேட்டர் திரையின் அருகே சென்று ஆட, ஒருகட்டத்தில் வேதாளங்களைப் போன்று சக்திபெற்ற ஆட்டக்காரர்கள் தியேட்டரின் சீலிங்கில் ஏறி தலைகீழாக ஆட ஆரம்பித்துவிட்டார்கள். தலைகீழாக ஆடுபவர்களுக்கு வசதியாக தியேட்டர் ஆபரேட்டர் , பாடலை தலைகீழாக ஒளிபரப்பி அந்த ரசிகர்களின் குஷயை பன்மடங்கு பெரிதாக்கிவிட்டிருந்தார். பாடல் முடிந்ததும் சித்திரக்குள்ளர்களின் தலைவர் வழிகாட்டுதலின்படி , ஒரு மாபெரும் ஆமையைச் சந்திக்கிறார்கள்.  தமிழ்மொழி வரலாற்றிலேயே யாரும் கண்டறியமுடியாத பல புதிர்களை கவிதைகளாக கோர்த்துத் தருகிறது அந்த ஆமை ஐயா. அந்த புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க சில ரசிகர்கள் எழுந்து சென்று தமிழ்மொழியின் புதிர்களும் விடுகதைகளும் போன்ற புத்தகங்களை மணிக்கணக்காக திருப்பித்திருப்பி படித்தார்கள். ஒருசிலர் அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கி விட்டதாக இன்றைய செய்தித்தாள்களில் செய்திவெளியானது. ஆனால் டாக்டர் பட்டம் வாங்கியவர்களாலும் அந்த விடுகதைக்கான விடையை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது தான் சரித்திரசோகம்.

அதன்பின் ஹீரோ, அவருடன் வந்த ஒரு  பேசும் பறவை மற்றும் தன் இரு காமெடி சகாக்கள், 3 சித்தரக்குள்ளர்கள், சட்டையில் ஒட்டியிருந்த நான்கு பாக்டிரியாக்கள், ஷூவினுள் சாரி பாதணியில் இருந்த ஐந்து வைரஸ்கள் போன்றவற்றுடன் தன் சாகசப்பயணத்தைத் தொடர்கிறார். சாகசம் என்றால் சாகசம் ; அப்படி ஒரு சாகஸம்.  சிந்துபாத் சாகஸம், ஹாத்தீம் தாய் சாகஸம் எல்லாவற்றையும் கமட்டையில் மென்று துப்பினாலும் புலிசாகஸத்திற்கு ஈடாகாது. இந்த சாகஸ காட்சிகளைப் பார்த்து ஆவி சிலிர்த்து குப்ரிக், ஹிட்ச்காக், விட்டலாச்சார்யா போன்றோர் மேலோகத்தில் இப்படிப்பட்ட சாகஸத்திரைப்படத்தை எடுக்கவில்லையே என்று இந்திரனிடம் புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இடைவேளை விட , தியேட்டரை விட்டு நகரவே மனமில்லாத ரசிகர்கள் ஆவலோடு இடைவேளையின் அந்த 20 நிமிடத்தை மிக ரணமாக ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின்தான் அகிலவேதாள உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ராணி ஶ்ரீதேவியின் இன்ட்ரோ. அவரின் கெட்டப்பைப் பார்த்து வாயைப் பிளந்த சிலரின் வாயில் ஈ, எறும்பு எல்லாம் தாண்டி அருகிலிருக்கும் குருவம்பட்டியில் இருந்து தப்பிவந்த ஒரு கரடியும், ஐந்து மான்களும் புகுந்துவிட்டன. அதை எப்படி வெளியில் எடுப்பது என்று வனத்துறை அலுவர்களும், மருத்துவர்களும் தங்களின் மண்டை, சட்டை, பக்கத்தில் நின்றிருக்கும் ஆட்களின் சட்டை என எல்லாவற்றையும் பிடித்து கிழித்துப் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.  கடைசியில் வேறு வழியே இல்லாமல் மீண்டும் ராணியின் இன்ட்ரோ காட்சியைப் போட்டு , மறுபடியும் அவர்களின் வாயைப்பிழக்கவைத்து , உள்ளே இருந்த விலங்குகளை பத்திரமாக மீட்டார்கள்.

அதன்பின் மயிர், தலை, உடம்பு, கத்தி, சுத்தி, தரை, வானம், தண்ணீர் என எல்லாவற்றியும் கூச்சரியச்செய்யும் காட்சிகளை பலத்த, கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை , இடியென தாக்கியது அந்த காட்சி. திடீரென யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்தது அது ; அவர் தான் புலி. அவர் தான் ஹீரோவின் தந்தை என்றும் தெரிந்தது. தியேட்டரில் இருந்த பலரும் புலியாக நடித்தவர் யாரென்று தெரியாமல் முழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். பலர் பக்கத்திலிருக்கும் போலிஸ் ஸ்டேசன், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, , ஷெர்லாக் ஹோம்ஸ், ஐ.எம்.எஃப் போன்ற உளவுத்துறை அமைப்புகள் மற்றும் ஏஜென்ட்களிடம் புலியாக நடித்திருந்தவர் யாரென கண்டுபிடித்துத் தருமாறு பெட்டிசன் போட்டார்கள். இவர்களெல்லாம் கைவிரிக்க வேறுவழியே இன்றி ஜேம்ஸ்பாண்டை அனுக , அவரும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று சோகங்கலந்து குரலில் கண்ணீருடன் சொன்னார். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அகதா கிறிஸ்டியின் நாவல்களில் வரும் மாபெரும் துப்பறிவாளர் பொய்ரெட் தன் குள்ள உடலையும் பெருத்த தொப்பையும் உருட்டிக்கொண்டு தியேட்டருக்கு வந்து அந்த ரகசியத்தைக் கூறினார்; அப்பா வேடத்தில் நடித்ததும் விஜய் என்று தெரிந்ததும் தியேட்டரில் சோ-வென கூச்சலிட்டார்கள். மாறுவேடத்தில் ஏற்கனவே வந்த கெட்டப்பைக் கண்டுபிடிக்கத் தடுமாறிய ரசிகர்களை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்திவிட்டது தந்தையின் கெட்டப்.

இந்த சந்தோஷம் அதிகநேரம் நீடிக்கவில்லை; ஒருகட்டத்தில் அந்த துக்ககரமான விஷயம் நடந்தது. பிரபுவின்  இறப்புக்கே கண்ணீரை காலி செய்திருந்ததால் , கண்ணீர் ஆறு அங்கு ஓடவில்லை என்பதே ஆறுதல். ஆனால் ஐ.சி.யூ-வில் சேர்க்கப்படும் நிலைக்குப் பலர் ஆளாகிவிட்டார்கள் . இதற்குமேல் கதையைச் சொல்லிவிட்டால் படம் முடிந்துவிடும்.  அதனால் இதுவே போதும். இதுவரை படத்தில் ஃபேன்டசி என்ற வஸ்து சரிவர இல்லாததால் என் விமர்சனத்தில் அதைக் கொஞ்சம் தூக்கலாக்கிவிட்டேன். இனி கொஞ்சம் சீரியஸாக பார்க்கலாம்.

விஜய் எனும் மாஸ் ஹீரோவை வைத்து கோலிகுண்டு விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம். எல்லோரும் விஷுவல் ட்ரீட், விஷூவல் ட்ரீட் என்று சொல்லும்போது எனக்கு இன்னும் செம காண்டுதான் வருகிறது. மயக்கம் என்ன திரைப்படம் விஷுவல் ட்ரீட். இந்த படத்தில் காட்டப்படும் காடுகள் எல்லாம் ‘நட்புக்காக’ படத்தில் வயதான சரத்குமார் இன்ட்ரோ ஆகி சண்டைப்போடும் காடுகள் போலுள்ளது . இதில் விஷுவல் ட்ரீட் எங்கிருக்கிறது? முந்தைய விஜயின் படங்களை  எடுத்துப் பார்த்தால் அழகிய தமிழ்மகன் சினிமாட்டோகிராபி சுமாராகத்தான் இருக்கும்; இந்த படம் அதைவிட செம சுமார் ஒளிப்பதிவு. ஆயிரத்தில் ஒருவன் அட்வென்சர்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேசன்களைப் பார்த்தவர்கள் இதைப் பார்த்தால் வாய்விட்டு சிரிப்பார்கள். இது என்ன புதுஹீரோ நடிப்பில் வெளியாகும் படமா? இருக்கின்ற பணத்தை வைத்து எடுக்க? 100 கோடி ரூபாய் பிஸினஸ் நடத்தும் விஜய்யின் படத்திற்கான தரம் என்பதும் அதிகமாகத்தான் இருக்கவேண்டும். 2 கோடி, 3 கோடியில் திரைப்படம் எடுப்பவர்களே விஷுவலில் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மிகச்சுமாரான விஷுவலை காமித்துவிட்டு , இது விஷுவல் ட்ரீட் என்றால் செம காண்டுதான் வருகிறது. நட்டுவுக்கு என்ன கோவமோ தெரியவில்லை. இந்தி சினிமாக்களில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் தமிழில் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. காட்சிகளில் ஏதோ கடமைக்கு ஆங்காங்கே ரிச் லுக் கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு ஹீரோயின்கள் எதற்கு என்று கேட்க தோன்றினாலும் படத்தில் விஜயைத்தவிர்த்து வேறு எந்த கேரக்டருமே தேவையில்லை  என்பதைப் போல் தான் உள்ளது. சரி, காதலி கேர்கடர் கடத்தப்படுகிறாள், படத்திற்கு அவசியமென்றால் , இளவரசி ஹன்ஸிகா கேரக்டர் எதற்கு? அவளின்மூலம் அரண்மனையில் நுழைவதற்கா? அப்படியெனில் இந்த சின்ன கேரக்டரைசேசனுக்கு எதற்கு ஹன்ஸிகா ? தேவையில்லாத செலவு . எதற்கு செய்யவேண்டுமோ அதற்கு செய்யவேண்டும். இன்னும் படத்தில் பல கேரக்டர்கள் எதற்கு என்று தெரியாமலேயே வருகிறார்கள். விஜயகுமார் கட்டப்பாவாக வரும்போது செம செட்டப்பா இருக்கிறது.  

இவ்வளவு மொன்னையான வசனங்களை நான் எந்தவொரு படத்திலும் பார்த்ததோ , கேட்டதோ இல்லை. நேற்று ப்ளாக் தொடங்கி , சிறுகதை எழுதுபவர்களின் வசனங்கள் இதைவிட பிரமாதமாக இருக்கும். இசை ஒன்றும் பெரிதும் எடுபடவில்லை என்றாலும் பிண்ணனியில் முடிந்தளவு ஏதேதோ போட்டிருக்கிறார் டி.எஸ்.பி. ஶ்ரீதேவி கேரக்டர் பற்றியும் பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சுதீப் ? பாவம் அந்த ஆள். நல்ல நடிகரை வைத்து மொக்கையடித்து விட்டார்கள். பிரபுவுக்கு வழக்கம்போல துளிகூட வேலையில்லாத ஒரு கேரக்டர். கிராபிக்ஸ் ஒற்றைக்கண்ணன் எதற்கு ? தண்டச்செலவு. கேஸ்டிங் செலவைக் குறைத்திருந்தாலே படத்தின் தரத்தை அதிகரித்திருக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான கதையை செலக்ட் செய்து பெரியவர்களை ரசிக்கவைக்கும் திரைக்கதையை எழுதி , நல்ல டெக்னீசியன்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தால் இந்த புலி கொண்டாடப்பட்டிருக்கும்;  கதை செலக்ட் செய்தவிதத்தை , திரைக்கதை எழுதுவதிலும் காட்டியிருக்கவேண்டும். அதைவிட தன் திரைப்படத்தின் அவுட்புட் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை ஒரு இயக்குநர்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கோ படுமட்டமான கிராபிக்ஸ் காட்சிகளையும், அபத்தப்போக்கிலான விஷுவலையும் பார்க்கும்போது இது விஜய் படமா என்று கேட்கத்தோன்றுகிறது. இத்தனைக்கும் படத்தின் கிராபிக்ஸ் நல்லாயில்லை என்று விஜய் கூறி , மீண்டும் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தார்களாம். எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் பிடிக்கும் என்பதற்கு இது யாரோ நடித்த திரைப்படம் இல்ல! மாஸ் ஹீரோக்களின் திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பில்லாமல் எப்படி பார்க்கமுடியும்?


தனக்குக் கிடைத்தப் ‘புலி’யங்கொம்பை கோட்டைவிட்டுவிட்டார் சிம்புதேவன். முழுத்தவறும் இயக்குநரின் பேரில்தான் சுமத்தமுடியும். அவ்வளவு கேர்லெஸ் விஷயங்கள் படத்தில் நிறைந்திருக்கின்றன.  கதையைக்கேட்டு ஒப்புக்கொள்வதை எல்லா மாஸ் ஹீரோகளும் நிறுத்திவிட்டு ஹாலிவுட்டைப்போல் திரைக்கதை முழுமையும் படித்துப் பின் நடிக்க ஆரம்பிக்கவேண்டும்  என்பதைத்தான் புலி வலியுறுத்துகிறது. குழந்தைகள் கூட ரசிப்பது கடினம் தான். இதைவிட சிறந்த அட்வெஞ்சர்களையும் பேன்டசிகளையும் சோட்டாபீமில் தினசரி பார்க்கும் குழந்தைகளுக்கு பிடிப்பது கடினம். மற்றபடி ஏதோ போலாம் என்றால் போலாம். 

Comments

  1. I will never go sir. But, fantastic review. Screen ah kizhichittinga ponga...

    ReplyDelete
  2. அப்ப புலி துன்பவியல் அனுபவம் எண்டுறியள்...

    ReplyDelete
  3. ஒரு வித்தியாசமான கோர்வையாக இருக்கிறது :)

    ReplyDelete
  4. சகோ என் மெயிலுக்கு ஒரு தடவை தொடர்பு கொள்ள முடியுமா?
    mathisutha56@gmail.com

    ReplyDelete
  5. கலக்கிட்டிங்க தோழா

    ReplyDelete
  6. கலக்கிட்டிங்க தோழா

    ReplyDelete
  7. வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை