Saturday, 20 September 2014

CN's - MeMeNtO - சினிமா விமர்சனம் அல்ல


CN’S –MEMENTO – திரைக்குப்பின்னால்

சென்ற பதிவில் , நோலனின் மெமென்டோ படத்தைப்பற்றிப்பார்த்தோம் . இப்பதிவில் , அப்படத்தின் பிண்ணனி மற்றும் திரைக்குப்பின்னால் நடந்த நிகழ்வுகளைக்காணலாம் .


நோலன் ,  இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இணைந்த கலவை . நோலனின் பெற்றோர் அமெரிக்க , இங்கிலாந்து நாட்டைச்சார்ந்தவர்கள் . ஆங்கில இலக்கியத்தை, இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துமுடித்தார் . இங்கிலாந்தில் இருக்கும்போதுதான் , தன்னுடன் படித்து வந்த எம்மாவை காதலிக்க ஆரம்பித்தார் . இருவரும் பால்யகால சிநேகிதர்கள் . கல்லூரி நண்பர்களை சேர்த்து எப்படியோ Following படத்தினை முடித்தார் . அதன்பின் , அவரின் காதலி எம்மாவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட , அமெரிக்கா சென்றுவிட்டார் .


உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விஷயம் , மெமென்டோ திரைப்படம் , ’ மெமென்டோ மோரி ‘ எனும் ஜொனதனுடைய  சிறுகதையின் தாக்கத்தால் உருவானது என்று .  FOLLOWING திரைப்படத்தை முடித்தபின் , தன்காதலியான எம்மா தாமசின் வேண்டுதலின்பேரிலும் , FOLLOWING படத்தினை சான் – பிரான்சிஸ்கோ விழாவில் திரையிடுவதற்காகவும் இங்கிலாந்திலிருந்து , அமெரிக்கா வந்தடைந்தார் நோலன் . அங்கு FOLLOWING படத்தைத்திரையிட சரியான ப்ரஜக்டர் கிடைக்கவில்லை . ஏனெனில் , அப்போதைய காலகட்டங்களில் வெளிவந்த படங்கள் அனைத்தும் 35 MM –ல் ரிலிசானது . நோலனின் FOLLOWING திரைப்படமோ , 16 MM கேமராவால் படமாக்கப்பட்டது . பின் , நண்பர்களிடம்  கடன் வாங்கி , அதை 35 MM –க்கு மாற்றி திரையிட்டார் . இதற்கும் , முழு சப்போர்ட்டாக இருந்தவர் , நோலனின் காதலியும் இன்றைய மனைவியுமான எம்மா .

(Following படத்திற்கு , தியேட்டரில் வெளியிட போஸ்டர்கூட டிசைன் செய்யப்படவில்லையாம் . படத்தை , விழாவில் திரையிட , விழா நடக்கும் திரையரங்கின்முன் போஸ்டர் ஒட்டுவதற்காக , மீண்டும்  அதில் நடித்த நடிகரை வைத்து அவசரகதியாக ஒரு போட்டோவை எடுத்து , அதை ஒட்டினார்களாம் . இப்போதும் Following படத்தின் போஸ்டரை Google-ல் தேடினாலும் , ஒரே ஒரு போஸ்டர் மாத்திரமே வரும் .)
எப்படியோ திரையிட்டபின் , ஒருநாள் ஜொனதனும் , இவரும்  தங்கள் தந்தையின் காரை எடுத்து ஒரு ரவுண்ட் அடிக்க சென்றார்கள் .

‘என்ன ப்ரோ ! படிப்பு முடிச்சிட்ட ! அடுத்து என்ன செய்யப்போற ?’ என்று நோலன் கேட்க ,

‘ஒரு Short Sory எழுதலாம்னு இருக்கேன் ப்ரோ ’ – னு ஜொனதன் சொன்னாராம் .

‘என்ன கதை ப்ரோ ?’ னு கதை கேட்டாராம் நோலன் .

‘ஒரு மனுஷன் . அவனுக்கு ஒரு ஆக்சிடன்ட்ல மண்டையில அடிபட்டு , புதுசா எதையும் ஞாபகம் வச்சிக்கமுடியாத கன்டிசனுக்கு வந்துடறான் . அவனோட மனைவிய கொலை செஞ்சவங்கள எப்படி பழிவாங்குறாங்கிறதுதான் கதை ப்ரோ’ னு ஜொனதன் சொன்னாராம் .

‘வாவ் ! இது சூப்பரா இருக்கே ! இதையே டெவலப் பண்ணி சூப்பர்டூப்பர் படம் கொடுக்கலாம் போல இருக்கே’-னு சொன்ன நோலன் , அடுத்ததாக எழுத ஆரம்பித்த ஸ்கிரிப்ட் தான் ,  மெமென்டோ .ஸ்கிரிப்ட் எப்படி ஆரம்பிக்கலாம்னு மனுஷன் செம குழப்பத்தில் ஆழ்ந்தாராம் . ஒருநாள் குழம்பியபடியே , காபி குடித்துக்கொண்டே ஸ்கிரிப்ட் யோசிக்கும்போது , திடிரென ‘நாம் எத்தனை காபி குடித்தோம்’ னு யோசித்தாராம் .  அந்நேரத்தில் ஏற்பட்ட மறதிக்கு காரணம் என்ன என்று யோசித்தவருக்கு , கிடைத்ததுதான் Reverse & Forward Chronological . இதன்படி எழுதினால் , கண்டிப்பாய் படத்தினை பார்ப்பவர்களுக்கும்  , தற்காலிக மறதி நோய் வரும் என்பதை உணர்ந்த நோலன் , அதன்பின்தான் இதை எழுதிமுடித்தார்.சரி , ஜொனதனுக்கு எப்படி இக்கதை மாட்டியது என்று பார்த்தால் , அது ஒரு தனிக்கதை . ஜொனதன் , ஜார்ஜ் டவுனில்  மனோதத்துவம் பற்றிய படிப்பினை படித்தார் . அப்போது , அங்கிருக்கும் மனோதத்துவ மருத்துவமனையில் , ஒரு விசித்திரமான நோயாளியை சந்தித்தார் . அந்த நோயாளிக்கு வந்திருந்த Anterial Grade Memory Loss  என்ற பாதிப்பு தான் , இந்த சிறுகதையாக பரிணமித்தது . இந்த நோயைப்பற்றிய மருத்துவ ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாமல் , நேராக அந்த நோய் வந்தவனுடைய மனநிலை என்னவாக இருக்கும் ? அவனது வாழ்க்கையை எப்படி வாழ்வான் ? ஒருவேளை இந்த பிரச்சனையால் ஏற்படும் குழப்பங்களை எப்படி சமாளிப்பான் என்று யோசித்ததன் வெளிப்பாடே ‘Memeno Mori’ .

இதெல்லாம் கரெக்டுதான் . இப்போது படத்தை தயாரிக்க ஆள்வேண்டுமே ? எங்கு செல்ல ? ஏதோ தம்பி புண்ணியத்தில் கிடைத்த ஐடியாவினால் ஒரு ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது . அதை திரையில் காண்பிக்க , யாரேனும் உதவினால் மட்டுமே முடியும் . ஏற்கனவே , சொந்த பந்தம் , உறவினர் என அனைவரிடமும் கடன் வாங்கியாயிற்று என்று முழித்துக்கொண்டிருந்தவருக்கு , மீண்டும் உதவியது எம்மா தான் . New Market எனும் கம்பெனிக்கு அழைத்துச்சென்று , ஏற்கனவே நோலன் இயக்கிய Following படத்தினை அவர்களுக்கு திரையிட்டுக்காட்டி , பின்  இவரின் ஸ்கிரிப்டை , எம்மா படிக்கச்செய்தார் . அவர்கள் ஓ.கே கூறியதும் , எம்மாவே அசோசியேட் தயாரிப்பாளாராகவும் இருந்து , படத்தினை முடித்துக்கொடுத்துள்ளார் . எம்மா மட்டும் அங்கில்லையெனில் , நோலனின் திரைக்கதை மாற்றச்சொல்லி , ஏதேனும் உள்குத்து ஏற்பட்டிருக்கலாம் .


உங்களுக்குள் தோணலாம் . என்னப்பா அந்த பொண்ணுக்கு வேறவேலையே இல்லையா ? என்று . எம்மா , வேலை செய்தது , இதுபோன்ற தயாரிப்பு சார்ந்த பணிகளில்தான் . பின்னாளில் நோலன் உருவாக்கிய Syncopy படத்தயாரிப்பு நிறுவனத்திலும் எம்மா பகுதி பங்குகளுக்கு உரிமையாளர் ஆனார் .தயாரிக்க ஆள் கிடைத்தாயிற்று . அடுத்து , நடிகர்களை பிடித்துப்போட வேண்டியதுதான் என்று தலைவர் நேராக சென்றது பிராட்-பிட்டிடம் . ஸ்கிரிப்டைப்படித்து குழம்பியதாலோ அல்லது கால்ஷிட் பிரச்சனைகளாலோ இப்படத்தில் பிராட்-பிட் , நடிக்கமுடியாமல் போய்விட்டது (அந்நேரத்தில் Brad Pitt-ன் Fight Clup ப்ளாக்பஸ்டர் வெற்றியாகி , அடுத்ததாக Snatch எனும் படத்தில் , நடித்துக்கொண்டிருந்தார் ) . அடுத்ததாக வேறுவழியின்றி Guy Pearce-டம் போய் நின்றார் நோலன் . படத்தின் ஸ்கிரிப்டை படித்த Guy pearce , உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் . படத்தின் கதையையும் , திரைக்கதையையும் விட , தன் பாத்திரத்தின் விவரிப்பை பார்த்ததும் உடனே நடி்கக , தேதி ஒதுக்கிவிட்டார் . அதுவரை , டீ.வி சீரியல்களிலும் ஒருசில படங்களிலும் சிறுசிறு வேடங்களில் வந்தவர்க்கு , மெமென்டோ தான் , டர்னிங் பாய்ண்ட் . அதற்கு நோலன் தந்த பரிசு என்னவென்று பார்த்தால் , இதுவரை Guy pearce நடித்த படங்களில் எதிலுமே இல்லாத அளவிற்கு , விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டதுடன் , வென்றும் இருக்கிறார் . (இவர்தான் Iron-Man – 3ம் பாகத்தில் வில்லனாக வருபவர்) .அடுத்ததாக , நாயகி என்றும் இப்படத்தில் யாருமில்லாத பட்சத்தில் , நாயகனுக்கு உதவுபவராக வரும் நடாலி கேரக்டரில் நடிக்க மேட்ரிக்ஸ் புகழ் Carrie Anne Moss – டம் நோலன் அணுகினார் . அவருடைய போர்சன் முழுமையாக முடிய எடுத்துக்கொண்ட காலம் , வெறும் 8 நாட்கள் தான் .இந்த பதிவில் முக்கியமாக குறிப்பிட படவேண்டிய இன்னொருவர் , ஒளிப்பதிவாளர் Walley Pfister . இப்படத்திற்கு , நோலனின் மனதில் வந்த ஒளிப்பதிவாளர் யாரென்று பார்த்தால் Evil-Dead -2 , Scream series ,Cabin in the Woods , Drag me to Hell , Oz போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் , பீட்டர் டெமிங் . அவருக்கு , அந்நேரத்தில் Scream தொடரின் 3-ம் பாகத்தில் ஒளிப்பதிவு செய்யவேண்டிய நிலையில் இருந்ததால்  , மெமென்டோவை கைவிடவேண்டியதாயிருந்தது . அப்போது நோலன் கண்ணில் மாட்டியவர்தான் Walley .
Walley , அதற்குமுன் சிறு சிறு தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார் . நோலன் அவரைச்சந்தித்தபோது , ஒரு மொக்கைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார் . Walley-யிடம் தன் ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச்சொன்னாராம் நோலன் . படித்ததும் , எமோஷனலாகி , கண்கலங்கிவிட்டாராம் . காரணம் , படத்தில் லென்னிக்கு இருப்பதுபோலவே , Walley –ன் தந்தைக்கும் , DEMENDIA எனும் ஒருவிதமான மறதி நோய் இருந்ததாம் . கிட்டத்தட்ட , கதையைப்படிக்கும்போது , தன் தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்தாராம் . அதன்பின் , நோலனுடன் இணைந்தவர் , மிகமிக ஆர்வமாக , கடினமுயற்சியோடு இப்படத்தினை முடித்துக்கொடுத்தாராம் . தனக்கு , நோலனின் அறிமுகத்திற்கு காரணமான பீட்டர் டெமிங்கை நினைத்து இவ்வாறு ஒரு பேட்டியில் Walley கூறியிருந்தார் .

‘I was very lucky , Coz He wasn’t Available ’

அன்றுமுதல் , இன்றுவரை நோலனின் அனைத்துப்படங்களுக்கும் ஒளிப்பதிவு Walley Pfister தான் . இந்த ஆண்டு , Walley இயக்கிய  Transendence எனும் திரைப்படத்தின் Executive Producer , வேறு யாருமில்லை , சாட்சாத் நம்ம நோலன் தான் . யாருடைய படத்தில் கமிட் ஆகியிருந்தாலும் , நோலன் அழைத்தால் உடனே Walley ஓடிவந்துவிடுவார் . மற்ற இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவு செய்தாலும் , நோலனின் படத்திற்கு மாத்திரம் , கடும் உழைப்பை கொடுப்பார் . மெமென்டோ படத்திற்காக தான் முதன்முதலில் , இவர் விருதுக்கான நாமினேட் ஆனது .


ஜிம்மியை கொன்றபின் , லென்னி ஜிம்மியின் காரில் போய் அமர்ந்துகொள்வான் . அப்போது , டெடி வந்து அவனுடன் விவாதம் செய்வான்  . இந்தக்காட்சிதான் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில்  எடுக்கப்பட்ட முதல்காட்சி . இந்தக்காட்சி எடுக்கப்பட்ட இடம் Pasadena . படத்தில் , பெரும்பாலான காட்சிகள் கலிபோர்னியாவின் BurBane நகரில் எடுக்கப்பட்டுள்ளது . அந்நகரம் சிறிது  மண்புழுதி மற்றும் புகைநிறைந்ததாகவும் காணப்படும் . அதைஅப்படியே , படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் . அதுவும் ஒருவகையில் படத்தின் உயிர்ப்புக்கும் , இயல்பான தன்மைக்கும் காரணமாக அமைந்தது .


14 வருடங்களுக்குமேலாக , இன்னமும் குழப்பத்தினிடையே வாழும் இத்திரைப்படம் எடுத்துமுடிக்க , வெறும் 25 நாட்கள்தான் ஆனது . இத்திரைப்படம் , சிறந்த திரைக்கதைக்கான , ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தது , குறிப்பிடத்தக்கது . இத்திரைப்படம் முழுமையும் Anamorphic Lense-களை பயன்படுத்தி எடுத்துமுடித்துள்ளார்கள் . மேலும் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் , லீனியர் வெர்சன் என்று ஒரு டீவிடீ ரிலிசானது . யூட்யூப்பில் அது இருக்கிறது என்று கேள்விபட்டுள்ளேன் . பார்க்கும் ஐடியா வரவில்லை . ஒருவேளை ,  அதைப் பார்த்தால் , மெமென்டோ மீது இருக்கும் மரியாதை குறைந்துவிடும் .


ஜொனதனுடைய சிறுகதையைத்தழுவி இப்படம்  எடுக்கப்பட்டாலும் , படம் வெளியாகும்வரை , அச்சிறுகதையை வெளியிடாமல் நிறுத்திவைத்திருந்தனர் , நோலன் சகோதரர்கள் .


இப்படத்தினைப்பற்றி கேட்டபோது நோலன் அளித்தபதில் ‘இப்படம் , கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்து , முழுமையடையாமல் இருக்கின்றது . ஒவ்வொருமுறை கானும்போதும் , ஒரு புரிதலும் , புதுக் குழப்பமும் ஏற்படும் . ஒவ்வொருமுறையாக பார்த்து , இதுதான் இப்படத்தின் கதை என்று எப்போது உங்கள் மனது ஒருவிஷயத்தை ஏற்றுக்கொள்கிறதோ , அதுவரை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டியதுதான் . இதற்கு முடிவு என்று எதுவும் என்னால் கூற முடியாது . ’


நோலன் கூறியது உண்மைதான் . ஒவ்வொரு முறை நான் படத்தினைப்பார்க்கும்போதும் , எனக்குள் ஒரு குழப்பம் அகன்று , புதுக்குழப்பம் தங்கிவிடும் . நோலன் கூறுவதுப்படிப்படி பார்த்தால் , இப்படத்தின் முடிவு என்பது , ஏற்கனவே நான் கூறியதுபோல் , நம் மனது , எதை ஏற்றுக்கொள்கிறதோ , அதுவாய்த்தான் இருக்கவேண்டும் .  இல்லை , நான் கண்டுபிடித்தே தீருவேன் என்று யாரேனும் கங்கணம் கட்டித்திரிந்தால் ,” All The Best ”


Mementoபதிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தாயிற்று . அடுத்த பதிவில் , நோலன் ப்ளாக்பஸ்டர் வட்டத்தினுள் அடியெடுத்து வைக்கக் காரணமான இன்சோம்னியா பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன் !!! மறக்காமல் , நோலனைப்பற்றி , உங்களுக்குத்தெரிந்த செய்திகளை , கமெண்ட் மூலம் தெரிவித்துவிட்டுச்செல்லுங்கள் .

தொடர்புடைய பதிவுகள் 

நோலன்'S - Memento -Part 1

நோலன்'s - Following


Friday, 19 September 2014

பயணம் @ டைம்மெஷின் - 8


பயணத்துள் பயணம்
தொடர்புடைய இடுகைகள்


அன்றைய நாள் , அவர்களுக்கு அப்படி அமையும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் . முந்தையநாள் காலை நடந்த அக்கலகச் சண்டை கூட அவர்களை அந்தளவு பாதிக்கவில்லை . மனமெல்லாம் பாராமாய் இருக்க ,தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தனர் .

அச்சமயம் , தங்களை யாரோ தடுப்பதுபோல் இருக்க , யாரென்று பார்த்தனர் . ஆம் , அவரே தான் . இரண்டுநூற்றாண்டுகளுக்கப்பின் , தாங்கள் இருவரும் அடையாற்றில் குளிக்கும்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரே தான் . அப்போது , இதனை நம்பமுடியாமல் அன்று  , சிரித்த இருவரும் அதிசயங்கலந்து அவரைப்பார்த்தனர் .200 ஆண்டுகள் பின்னும் , அவர் இப்படியே தான் இருந்தார் . இப்போதும் அப்படியே உள்ளார் எனில் , கண்டிப்பாய் இவர் சித்தர் தான் . உண்மையா ? கனவா ? என்று ஆராய இப்போது முடியவில்லை .இவை அனைத்தும் கனவுலகில் சஞ்சரிப்பதுபோல்தான் உள்ளது . தடுத்த அவர் முகத்தை , ஏன் என்று வினவும் தோனியில் இருவரும் பார்த்தனர் . அவர் , தன் கையில் இருந்த ஒரு பாத்திரத்தை அவர்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டு , பாலாவைப்பார்த்து புன்னகைத்தவாறே சென்றுவிட்டார் . இவர்கள் அவரிடம் என்ன வினவினாலும் அவரிடமிருந்து எப்பதிலும் வரவில்லை . ஆட்டுமந்தையுடன் சென்றுகொண்டிருந்தவரை , வழிமறித்து என்ன ? ஏன் என்று கெஞ்சும் தோனியில் இருவரும் கேட்டனர் . அவர் , பாலாவின் நெற்றியில் தன் கட்டைவிரலைப்பதித்தார் . ஒருநிமிடத்திற்குப்பின் , அவன்

சரிங்க சாமி .ரொம்ப நன்றிங்கஎன்று கூறிவிட்டு அவரிடமிருந்து விலகி சென்றான் .

டேய் ! என்னடா ஆச்சு ? என்னடா பன்னாரு அவரு ?’ - சந்துரு

‘அது ஒரு பெரிய கதை மச்சி . உடனே நாம இப்போ டைம்மெஷின் இருக்க இடத்துக்கு போகனும் ’ - பாலா

என்னடா விளையாடுறயா ? பெட்ரோல் எடுக்கனும் , அது இதுனு சொன்ன . இப்போ என்ன திடீர்னு கிளம்பனும்னு சொல்ற ?’ - சந்துரு

பெட்ரோல் இப்போ கிடைக்காது மச்சி . அதுக்கு இன்னும் 175 வருஷம் ஃபார்வேர்டா டைம் ட்ராவல் பண்ணனும் .’ - பாலா

‘டேய் ! என்னடா விளையாடுறியா ? எப்படிடா இன்னும் 150 வருஷம் பின்னாடி போவ ? பெட்ரோல் இல்லனு சொன்னியே டா ? அத வச்சி இன்னும் 20 வருஷம்கூட போகமுடியாதுனு அப்போ சொன்ன ? இன்னும் எப்டிடா 175 வருஷம் . ? அந்த தாடிக்காரர நம்பி இப்டி ஆகிடுச்சேடா .அந்த ஆளு அப்பவே சொல்லிருந்தா பண்ணிருக்கலாம்ல . போச்சு . நம்ம லைஃப் முடிஞ்சிடுச்சி - சந்துரு

டேய் ! அதெல்லாம் ஒன்னுமில்லடா . ஒரு நிமிஷம் நா ..’ -

நிறுத்துடா ! உன்ன நம்பி வந்தேன்பாரு . என்ன செருப்பால அடிச்சிக்கினும் . ஆஃப்ட்ரால் ஒரு கன்னுக்குட்டி செத்ததுக்கு , அங்க என்னடானா, சொந்த மகனையே கொல்றான் . இன்னொரு பக்கம் , எங்கிருந்து வரானுங்கனே தெரியாம திடீர்னு அட்டாக் பண்ணி கொல்றானுங்க . போறவன் வரவென்னாலாம் , புத்த பிட்சுவா ? , ஜெயினானு ? கேட்டு டார்ச்சர் பன்றானுங்க .பத்தாததுக்கு , எங்கப்பார்த்தாலும் zoo-ல இருக்கமாதிரி காடு. பொம்பளைங்களா இங்க இருக்கவலுங்க ? முரத்த எடுத்து புலிய துரத்துறா ! அப்பப்பா ! என்னால இங்க இருக்கமுடியாது . நீ என்ன எழவ செஞ்சாச்சும் , இங்கிருந்து என்ன கொண்டுபோய் விட்ரு . உனக்கு கோடிபுண்ணியம்

டேய் லூசு. நா சொல்றத முதல்ல கேளுடா ! இந்த பாத்தரத்துல இருக்கறது ஒருவகையில பெட்ரோல்தாண்டா

என்னடா சொல்ற ?’

ஆமா ! இதுல இருக்கறதும் பெட்ரோல் தான் . இத வச்சும் நம்ம டைம் மெஷின ரன் பன்னலாம்’

அப்படினா , வீட்டுக்கு போயிடலாமா ?

இல்ல மச்சி! வீட்டுக்கு போகமுடியாது . பட் , அந்த டேம் கட்ற டைமுக்கு போகலாம்

ஏன்டா இவ்வளவு இருக்கே . நீ ஒரு லிட்டர்க்கு அவ்ளோ மைலேஜ் தரும் , இவ்ளோ மைலேஜ் தரும்னு சொன்ன ?

அது ப்யூர் பெட்ரோல் டா

சரி ! இது எப்படி அந்தாளுக்கு கிடைச்சது ?

நாம தான்டா கொடுத்தோம்

என்னடா உளர்ற ?

மச்சி . தெளிவா சொல்றேன் கேளு. இப்போ நாம பாத்த கிங் இருக்காருல , அவரோட பேரனோட பையன்தான் , கரிகாலன் . அவன் வாழ்ந்த காலத்துக்கு போனதான் , நம்மால பெட்ரோல் எடுக்க முடியும் . இப்போ என்ன மேட்டர்னா , நாம இங்கேயே ஸ்ட்ரக் ஆகிட்டோம் . இங்க இருந்து 5 வருஷமா நா ஆராய்ச்சி பண்ணி , இந்த பெட்ரோல கண்டுபிடிச்சேன் .பட் அத வச்சி, நம்மால 2 சென்சுரி தான் ட்ராவல் பண்ணமுடியும் . என்ன ரீசன்னு தெரியல . நீயும் நானும் ஒன்னா வந்து , இங்க இந்த சித்தர்கிட்ட  நம்மோட பெட்ரோல கொடுத்து , நம்மகிட்டயே தர சொல்லிருக்கோம் . நம்மோட ஃப்யூச்சர , நாமளே நேர்ல பார்த்தா , ஹிஸ்டரியே மாறிடும் . சோ , நாமதான் இங்க வந்து நம்மகிட்டயே கொடுக்கசொல்லிருக்கோம் .’

என்னடா சொல்ற ?இதெல்லாம் நிஜமா ?
வியப்பு மேலிட பாலாவை கேட்டான் சந்துரு .

ஆமா ! இப்போ உடனே , நாம மெஷின்கிட்ட போய் இதவச்சி, கரிகாலன் காலத்துக்கு போகனும்

அவனோட காலம்னு எப்படி கண்டுபிடிப்ப ?

ஒன்னும் பிரச்சனையில்ல . அந்த முனிவர் அதுக்கும் ஐடியா கொடுத்திருக்காரு . சரியா 175 வருஷம் , நாம இங்கிருந்து பின்னாடி போகனும் .

சரி . அப்படினா ஒன்னு பன்னலாம் . நாம இங்கருந்து போகனும்னா மறுபடியும் நடந்துபோக முடியாது.  சோ ,நீ வெயிட் பண்ணு . நா எங்கயாச்சும் போய் , ஏதாச்சும் குதிரவண்டி பிடிச்சுட்டு வரேன் .

‘சரி . நீ அப்படியே பண்ணு மச்சி
சந்துருவுக்கு பலவிதமான  எண்ணங்கள் மனதில் ஓடினாலும் , எப்படியோ , இக்காலத்தில் இருந்து செல்லப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட ஆரம்பித்தது . ஆனால் , அவன் மனதின் ஓரத்தில் , அவ்வணிகனுடன் மேற்கொண்ட பயணத்தைப்பற்றிய எண்ணமும் உருண்டோடியது . மன்னன் செய்ததில் தவறுமில்லை என்று சிலசமயம் தோன்றியது . நீதி , நேர்மை என  அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் , பழிக்கு அஞ்சி உயிரையும் விடுவது , அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது . வீதிவிடங்கன் , முகத்தில் புன்னகை தவழ மரணத்தை வரவேற்றது , அவனுக்கு அதிசயத்தையும் கொடுத்தது .சாதாரண வாணிகனான , ஒரு இளைஞன் , தன்னாட்டிற்கு ஒரு துயரம் என்றதும்  , உயிரையும் பொருட்படுத்தாது , வாளினை எடுத்து , எதிரியின் நெஞ்சில் இறக்கியதை எண்ணும்போது , உடல் சில்லிட்டது . அதேநேரத்தில் பாலாவுக்கும் , அதேபோன்றதொரு உணர்வே ஓடிக்கொண்டிருந்தது . மகனை இழந்த மன்னன் என்ன ஆனான் ? இவ்வளவு நாகரீகமுள்ள மனிதர்கள் அக்காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்துள்ளார்கள் என்று எண்ணி பேருவுவகை அடைந்தான் . சிறிது நேரத்திற்கு பின் , சந்துரு இரண்டு குதிரைகள் கட்டப்பட்ட ஒரு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் .

பாலா ! வா . ஏறுடா

சந்துரு . உனக்கு குதிரவண்டி ஓட்டத்தெரியுமா ?

யாருக்கு தெரியும் . சும்மா ஹை ஹை னேன் . அதுவா போகுது

டேய் ! ஏற்கனவே நடந்ததெல்லாம் , இப்போ தான பார்த்த ?

சீ ! அந்த மாதிரிலாம் ஆகாது டா’

சரி . குதிரவண்டி வாங்க என்ன பன்ன ? திருடிக்கிட்டு வந்துட்டியா ?

டேய் . மெல்ல பேசுடா . எவனாச்சும் கேட்டு , மன்னர்கிட்ட கோத்துட்டுற போறான் .’

சரி . இத எப்படி வாங்குன ?

முருகன்தான் காப்பாத்துனாரு .

யார்ரா அந்த முருகன் ?

அந்த முருகன் டாலர் போட்ட செயின கொடுத்துக் கேட்டேன் . அதுக்காக , இந்த குதிர வண்டியும் , கூடவே கொஞ்சம்  தங்கக்காசும் கொடுத்தானுங்க .

என்னடா ? அந்த செயினுக்கு , இவ்வளவு தங்கமா ?அந்த செயினு ரெண்டு பவுனு தேறுமா ? ஆனா, இந்த காசெல்லாம் சேர்த்தா எப்படியும் அரைகிலோ தேறுமேடா

அதான் எனக்கும் ஆச்சரியமா இருந்துச்சி . ஒருவேள அந்த செயின் மேக்கிங்டிசைன் பாத்துட்டு கொடுத்துட்டாங்கனு நினைக்கிறேன்’

சரி சரி . அப்படியே கிளப்பு. போலாம் ’இருவரும் கூறிவிட்டு கிளம்பினர் . அதேநேரம் , அருகில் இருந்து இரு உருவங்கள் , அவர்கள் இருவரையும் மறைந்திருந்த வண்ணம் கவனித்துக்கொண்டிருந்தன . யாரென்று உற்றுநோக்கினால் ,என்ன மச்சி. இவ்வளவு கோபப்படுற ?’ - பாலா

ஆமா ! பின்ன இருக்காத ’ - சந்துரு

‘ம் . 5 வருஷம் கஷ்டப்பட்டு பெட்ரோல் கண்டுபிடிச்சி கொடுத்துருக்கேன் . எதுவும் கிடையாத எனக்கு ?’ - பாலா

இரு . என் தங்கச்சிக்கிட்ட சொல்லி கோர்த்துடறேன்’ - சந்துரு

சொல்லு . நானும் சொல்றேன் .நீ நேத்து கள்ளுக்கடைக்கு போனது . குடிச்சிட்டு எங்க வீட்டுல வந்து கிடந்தது எல்லாத்தையும் சொல்வேன்’

டேய் வேணாம்டா ! அப்புறம் அவ செம காண்டாயிடுவா .சரி வா . நம்ம டைம்மெஷின்கு போய் , நம்ம வாழ்க்கைய தொடரலாம்

‘ம் சரிடா

என்று கூறியவாறே , ஒரு மூலையிலிருந்து இருவரும் வெளிப்பட்டு டைம்மெஷினை அடைந்தனர் . அவர்கள் இருவரும் தான் , சிறிது நேரத்திற்குமுன் , அந்த சித்தரிடம் வந்து  , அந்த பெட்ரோலை ,தங்களுக்கே கொடுக்காமறு வேண்டிக்கொண்ட பாலா, சந்துரு . இவர்களின் , 5 வருடத்திற்கு முந்தைய வாழ்க்கையை தூரத்திலுருந்து பார்த்தவாறே இருந்தனர் . பின் , தங்களின் வாழ்க்கையை தொடர , டைம்மெஷினை நோக்கி சென்றனர் .
இன்னொருபுறம் , நம் கதையின் நாயகர்களான பாலாவும் , சந்துருவும் , குதிரைவண்டியில் சிறிது வேகமான பயணத்தை தொடர ஆரம்பித்தனர் . ஏற்கனவே , அவ்வணிகனுடன் வந்த பாதை என்பதாலும் , மேலும் , தங்களைப்போலவே ஆங்காங்கே சிலர் பயணம் மேற்கொண்டிருந்ததாலும்  , அவர்களின் பயணம் எளிமையானதாக இருந்தது . பசித்தால் , கையில் இருக்கும் பொற்காசுகளைக்கொண்டு உணவருந்தி விட்டுசென்றனர் . இருட்டும் நேரத்தில் , குதிரைகளின் வேகத்தால் ,கச்சிப்பேட்டை அடைந்தனர் .ஏற்கனவே , அவர்கள் படுத்துறங்கிய மண்டபத்தில் உறங்கி விட்டு  , காலையில் அதே ஏரியில் குளித்துவிட்டு வேகவதி ஆற்றின் கரையோரம் வந்தனர் . அங்கே வழிகேட்டு , ஆற்றின் ஆழமில்லாத பகுதியின் வழியே கரையை கடந்தனர். பின் , மீண்டும் குறிஞ்சி நிலத்தின் ஊடான பயணத்தின்வழி , அடுத்த 3 மணிநேரத்தில் , தங்களின் டைம்மெஷினை நெருங்கினார் .

மச்சி ! இந்த ஸ்பாட் தான ? ’ - சந்துரு

ஆமாண்டா ! தோ . அங்க இருக்குப்பாரு . ’ - பாலா

சரி வா ! பெட்ரோல் ஃபில் பண்ணலாம் .’ - சந்துரு

இருவரும் டைம்மெஷினை சரிசெய்து , கிளம்ப ஆரம்பித்தார்கள் .

‘மச்சி ! ஒருநிமிஷம்டா- பாலா

என்ன மச்சி ?’ - சந்துரு

இங்கயே நாம டைம்ட்ராவல் பண்ணா , மறுபடியும் , இங்க இருந்து ஒவ்வொரு ஊரா திரியனும் . அதுவுமில்லாம , இந்த குதிரவண்டியும் மறைஞ்சிடும் . அதையும் நம்மக்கூட கூட்டிட்டு போகமுடியாது . சோ , நாம டைம்மெஷினோட இங்கிருந்து தஞ்சாவூர் கிளம்பலாம் .அங்கபோயிட்டு , டைம் ட்ராவல் பண்ணிக்கலாம் . ’ - பாலா

சூப்பர்ப் மச்சி . சரி . இந்த டைம்மெஷின எப்படி எடுத்துட்டு போறது ?’ - சந்துரு

இருடா ! நா டிஸ்மேன்டில் பண்ணித்தரேன் . அங்க போனதும் ஃபிக்ஸ் பண்ணிக்கிலாம்’ - பாலா

‘டேய் ! டிஸ்மேன்டல் பன்றேன்னு சொல்லி , ஏதாச்சும் ரிப்பேர் பண்ணிடாதடா ? இங்க ஒரு ஸ்பேனர் , போல்டு கூட கிடைக்காது ’ - சந்துரு

ச்சீ ச்சீ ! அதெல்லாம் தேவையில்ல மச்சி. நா இத புல்ட்- இன் – வொர்க் மெத்தேட்லதான் டிசைன் பண்ணிருக்கேன் . நோ போல்ட்’ - பாலா
சிறிது நேரத்திற்குப்பின் , டைம்மெஷினை கழட்டி , குதிரைவண்டியில் இருந்த கோணிப்பையினுள் இருவரும் பத்திரப்படுத்தினர் . தங்களின் தஞ்சைநோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர் . அடுத்த நாள் காலை , தஞ்சையை அடைந்தனர் . தஞ்சை , அப்போது சிற்றூர் போன்ற அமைப்புடன் காணப்பட்டது . ஊரெங்கிலும் , மகனை முறைசெய்த மன்னவன் பேச்சாய் விஸ்தரித்திருந்தது .

‘ஏனுங்கோ ! நம்ம ராசா இலங்கைக்கு போறாராமே ?’

‘ஆமாங்கோ ! மகன விட்டு வாழமுடியாம தவிக்கிறாரு . இப்போ , இலங்கமேல படையெடுத்துப்போறதா சொல்றாங்க’

என்று ஆங்காங்கே மக்கள் பரவலாக பேசிக்கொண்டிருந்ததை இருவரும் கேட்டனர் . பின் , ஊரின் அருகிலிருக்கும் காட்டிற்குள் நுழைந்து , டைம் மெஷினை தயார் செய்து , மீண்டும் காலத்தைக்கடந்தனர் .


    -தொடரும்  இதன் தொடர்ச்சியைப்படிக்கபயணம் @ டைம்மெஷின் ,
அத்தியாயம் – 3
பகுதி -6
பயணத்துள் பயணம்
©

Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com

Wednesday, 17 September 2014

கலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா ?எங்கள் கிராமத்தில் , இன்னும் எம்.ஜி.ஆர் , சிவாஜிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் . இன்னும் பண்டிகைக்காலங்களில் எள்ளிடி ,ஆப்ப கசாயாம் , வெள்ளம்புலி கறி ,  போன்ற தமிழர் மறந்த பலகாரங்கள் தான் வீட்டில் செய்து சாப்பிட்டு வருகிறார்கள் . சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில் , 1960 – களின் வாழ்க்கை நிலையை மதிக்கும் மக்கள் அதிகம் .எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்களை சுற்றியுள்ள பல சுற்றுவட்டார ஊர்களிலும் , இதே நிலை தான். உறவினர் அல்லாத , ஒரு பெண்ணோ பையனோ இரண்டு நிமிடம் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான் . என் வயதில் இருக்கும் இளவட்டங்கள் , அவளின் நடத்தையைப்பற்றி “A” சர்டிபிகேட் கொடுக்குமளவிற்கு , கற்பனையில் வாய்கிழிய கிளப்பி விடுவார்கள் . நடுத்தர வயதினரோ , அப்பெண்ணை மிரட்டி , பையனை மரத்தில் கட்டிவைத்து அடித்த நிகழ்வுகளெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் வரை நடந்து கொண்டிருந்தது . மாற்று சமூகம் என்றால் சொல்லவே வேண்டாம் .


ஒருமுறை கவுண்டர் இனத்தைச்சார்ந்நத பையன் ஒருவன் , நாடார் இனப்பெண்ணுடன் ஓடிச்சென்றான் . அவனை பிடிக்க அவனுடைய தந்தை , டாட்டா சுமோக்கள் சகிதம் 40 பேருக்கு மேல் கிளம்பி அவனை விரட்டினார்கள் . அவன் எப்படியோ தப்பி , கலெக்டர் ஆபிஸ்க்கு (பழைய கலெக்டர் ஆபிஸ்) சென்றான் . பையனின் தந்தையோ , தெலுங்கு பட வில்லன் கணக்காய் , கலெக்டர் ஆபிசினுள் காரை விட்டு , ஆபிசினுள்ளேயே வைத்து அப்பையனை பிடித்து அடித்து துவைத்தனர் . போலிசாருக்கும் இதில் செம அடி . இந்நிகழ்ச்சி நடந்து 5 வருடம் ஆகிறது .சன்டீவியின் தலைப்பு செய்திகளில், இப்பிரச்சனை ஒருநாள் அலங்கரித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . இந்த பிரச்சனையில் அல்டிமேட் விஷயம் என்னவெனில் , அந்த பையன் படித்தது 10 வகுப்பு.  அவனுக்கு , அவன் வீட்டாரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணோ  , ஒரு வக்கில் . அவளும் உள்ளே புகுந்து , வரும் போலிஸ்காரர்களை வார்த்தையால் லெப்ட் –ரைட் வாங்கியபடியே , இன்னொரு பக்கம் பையனின் கன்னத்திலும் லெப்ட் – ரைட் வாங்கினார் .


சரி, டென்சன் ஆகாதிங்க . இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றால் , சென்றவாரத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் . மாப்பிள்ளை , எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் . மணப்பெண்ணோ , வேறொரு சமூகத்தைச்சார்ந்தவர் . 6 வருடக்காதல் , திருமணத்தில் இன்பமாக ‘கமா’ போட்டு கன்டினியூ ஆகிஇருக்கிறது . அதுவும் , அவர்கள் குடும்பத்தின் அங்கிகாரத்தோடு . இதில் என்ன இருக்கு ? நல்ல விஷயம்தானே என்கிறீர்களா ?  அதுதான் இல்லை .


என்னடா இவன் , கலப்பு திருமணத்தை எதிர்க்கிறான் என்று யோசிக்கிறீர்களா ? திருமணம் முடியும் வரை அவர்கள்  , காதலில் வெற்றியடைந்த ஆச்சரியமான ஜோடிகளாகத்தான் நம் கண்களுக்கு தெரிவார்கள் . வீட்டிற்க்கு வந்ததும் , நமக்கான பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்துவிடுவோம் .  ஆனால் , திருமணத்திற்கு பின் அவர்கள் என்னவானார்கள் என்று யாரேனும் யோசித்திருப்பீர்களா ?


காதலிக்கும்போது உயிரையே விட்டுவிட நம்மால் முடியும் போது , அந்த காதல் நிறைவேற சொந்தபந்தங்களை , தூரத்தூக்கிவீசுவது பெரிய விஷயமாக இருக்காது . எனவே , அவர்களை உதறி , பெற்றோரை மிரட்டி , இன்றைய காதல் ஜோடிகள் திருமணத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்கிறார்கள் .  ‘நீ போனா , நா குடும்பத்தோட செத்துருவேன்னு’ மிரட்டுற பெற்றவர்களை , இன்று அசால்டாக  ‘செத்தா சாவு’ என்று கூறும் நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது (ஒருசிலர் விதவிலக்கு) . இதற்காகவே , பெற்றவர்களும் மனது இல்லாமல் ஏற்றுக்கொண்டு , பத்திரிக்கை அடிக்கிறார்கள் .

கல்யாணத்தன்றின்போது  பெற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம் சொல்லிமாளாது . ஒவ்வொரு உறவினரும் வந்து , பொன்னைப்பற்றியோ , பையனைப்பற்றியோ கேட்கும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் , ஒருவாறு தலையை குனிந்துகொண்டு நழுவி செல்லும் அவமான நிலை , கொலை செய்தவனுக்குக்கூட வராது . எப்படியோ , திருமணத்தை முடித்து , அவர்களை வேறொரு வீட்டில் குடிவைக்கிறார்கள் . அதன்பின் , மணமக்கள் இருவரும் சந்தோஷமாகத்தான்  இல்வாழ்க்கையை தொடங்குவார்கள் .  சரியாய் , தங்களின் குழந்தையை பள்ளிசேர்த்தும்வரை , எந்த பிரச்சனையும் இருக்காது . பள்ளிச்சேர்க்கையின்போது தான் முதல் பிரச்சனை ஆரம்பிக்கும் . பையனை எந்த ஜாதியில் சேர்த்துவது ?


எப்படியும்  அப்பாவின் ஜாதியின்பெயரில் தான் சேர்த்துவார்கள் என்றாலும் , அது சம்பந்தமாக அந்த  தாயின் மனதில் ஒரு சில வருத்தம் இருக்கும் . காரணம் , காதலுக்கு தான் ஜாதி தேவையில்லை . மனிதனுக்கு , ஜாதி தேவை . குழந்தை வளர வளர , குழப்பமும் அதிகரிக்கும் . எப்படியும் , இந்த இடைப்பட்ட காலத்தில் , பையனின் உறவினர் , பெண்ணின் உறவினர் என்று , பெரும்பாலோனவர் சடங்கு , சம்பிரதாயங்களுக்கு அழைக்கமாட்டனர் . நல்லது , கெட்டது என்று எங்கும் செல்லமுடியாது . அப்படியே நெருங்கிய உறவினர் அழைத்தாலும் , அங்கே சரிசமமான மரியாதை , இருவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் . பின் , இருவருக்குள்ளும் குழப்பங்களும் சச்சரவுகளும் அதிகரிக்க ஆரம்பிக்கும் . சிலர் , இந்த சண்டைகளை புரிந்துகொண்டு தவிர்த்தாலும் , மனதினுள் ஒருவிதமான வலி உண்டாகும் . அது , எப்போதாயினும் வெளியே வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம் . கிட்டத்தட்ட , நம் அருகிலே எல்லோரும் இருப்பது போல் இருந்தாலும் , யாருடைய உதவியும்  உண்மையாக , முழுமையாக கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .


தங்களின் குழந்தைகள் , மணவயதை அடையும்போதுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும் . என்னதான் , தாங்கள் காதலித்து மணம் செய்திருந்தாலும் , தங்களின் குழந்தைகளின் காதலை ஏற்கும் மனநிலையில் , இருப்பவர்கள் சிலரே ! மீதிபேர் , தம் குடும்பத்திலோ , சொந்த பந்தத்திலோ தான் வரன் தேடவேண்டி இருக்கும் . கடலில் தொலைத்த சிம்கார்டு போன்றதுதான் , சொந்த பந்தத்தில் வரன் தேடுவதும் .


எனக்குத்தெரிந்த உறவினர் ஒருவர் , கலப்பு திருமணம் செய்தவர்தான் .  அப்போது குஜாலாக இருந்தவர் , இப்போது மணவயதை தாண்டிய அவனது மகனின் ஏச்சுபேச்சுகளை தாங்கமுடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறார் . அம்மாவின் ஜாதியில் இருக்கும் பெண்ணாக தேடிச்சென்றால் , அப்பாவின் ஜாதியைக்காட்டி நிராகரிப்பு செய்கிறார்கள் . அப்பாவின் ஜாதியில் இருக்கும் பெண்களைத்தேடி சென்றால் , நிராகரிப்புடன் இளக்காரமும் செய்கிறார்கள் . என்னசெய்வதென்று தெரியாமல் , ‘சரி நாளஞ்சு பொட்டபுள்ள இருக்கற வீட்டுக்காச்சும் போலாம்’னு சென்றார்கள் . அங்கு வாங்கிய பேச்சுகளால் , மனமுடைந்து மனிதர் பெண் பார்க்கவே செல்வதில்லை . யாரையாவது தன் மகன் காதலித்தாவது இழுத்து வரமாட்டானா என்ற ஆதங்கத்தில்வாழும் அவரது மகனுக்கோ , பெண்களிடன் பேசுவதற்கே பயம் .


ஜாதி மாற்றி செய்பவர்களை விட , மதம் மாறி திருமணம் செய்துகொள்பவர்களின் நிலை , அதைவிட மோசம் . ஏதோ , வேறு ஜாதி பெண் என்றால் பேசுவதற்காகவாது ஆள் இருப்பார்கள் . ஆனால் ,  மதம் மாறி திருமணம் செய்பவர்கள்  , நாட்டைவிட்டு தள்ளிவைக்கப்பட்டவர்களின் நிலையில் இருக்கிறார்கள் .


கலப்புத்திருமணம் என்பது  மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் சாதாரணமானதாக இருப்பினும் (மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் இருக்கும் நிலையைப்பற்றி , எனக்கு சரிவரத்தெரியவில்லை .) , எங்களது ஊரைப்போன்ற கிராமங்களில்  , இன்னும் பெரிதளவில் அங்கிகரிக்கப்படவில்லை என்பதே உண்மை . அப்படியொரு பட்சத்தில் அங்கிகரித்தாலும் , அது பிள்ளைகளின் நிர்பந்தத்தின்காரணமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது .  இதற்கெல்லாம் காரணம் , காதல்தான் .


அப்படியே வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஓடிச்செல்பவர்களில் பலரின் வாழ்க்கை அந்தோகதி தான் .  எனக்கு தெரிந்து இதே போன்றதொரு சம்பவம் நடந்தது .  வீட்டை விட்டு ஓடிய பெண்  , 3 வருடங்களுக்கு பின் ஓசுரிலிருந்து தன்குடும்பத்தினருக்கு போன் செய்திருக்கிறாள் . நாங்கள் அவளை மீட்கச்சென்றோம் . அவள் கூறிய இடத்திற்கு சென்ற எங்களுக்கு பேரதிர்ச்சி . காரணம் , அவள் இருந்தது ஒரு விபச்சார விடுதியில் . இம்மாதிரி , காதல் எனும் பெயரில் சில அயோக்கியர்கள் , பெண்களை கடத்தி இம்மாதிரியான நிலைக்கு உபயோப்படுத்தி வருவது  , அதிகரித்தவண்ணம் உள்ளது .


என்னைப்பொறுத்தவரை , காரைத்துரத்தும் நாயைப்போன்றது தான் காதலும் . சக்சஸ் ஆகும் வரை துரத்த நினைப்போம் . சக்சஸ் ஆனபின் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம் . ஒருவேளை திருமணத்தில் முடியும் காதல் தான் வெற்றி என்று கூறினாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் , இன்றைய நிலையில் , டைவர்ஸ்க்காக விண்ணப்பத்திருக்கும் பெரும்பாலோனர் , காதல் ஜோடிகள் தான் . ‘என்னடா பன்றது , வீட்ட விட்டுட்டு வந்துட்டமே’ னு நிறைய பேர் , தங்கள் காதல் வாழ்க்கையை சந்தோஷமாக வெளி உலகிற்கு காட்டிக்கொண்டு , உள்ளே புழுங்கி கொண்டிருக்கிறார்கள் .  ஒருநொடியில் உதிப்பது தான் காதல் என்றால் , இப்போது காதலிக்கும் பெண்ணிற்கு முன் எத்தனையோ பெண்களை நாம் காதலித்திருக்க வேண்டும் .  இன்றைய காலகட்டத்தில் , காதல் என்பது தன்னுடைய புரபோசலை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன்தான் . ஏற்றுக்கொள்ளவில்லையெனில் , துரத்தி துரத்திக்காதலிக்கும் காதலர்களை பார்ப்பது அரிது . அவ்வாறிருக்கும்பட்சத்தில் , அந்த காதல் எத்தனை நாள் நீடிக்கும் என்பதெல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கிறது . திருமணத்திற்கு முந்தைய காதல் , காலாண்டு பரிட்சை போல் தான் .  குழந்தை பிறந்தவுடன் இருக்கும் காதல் அரையாண்டுத்தேர்வைப்போல் . காலாண்டில் தேறுபவர்கள் , அரையாண்டில் கோட்டை விட்டுவிடுகிரார்கள் . பின் வாழ்க்கை எனும் முழாண்டுத்தேர்வில் , அவர்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகம்தான் .

என்னைப்பொறுத்தவரை , நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் காதலும் . என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடத்தில் ஒரு வார்த்தை கூறியிருந்தார் .
நம்முடைய செயல்களால் , நமக்கோ அல்லது பிறருக்கோ , நம்மேல் இருக்கும் மரியதை குறைந்தாலோ  அல்லது துன்பம் நேரிட்டாலோ , அந்த செயலை செய்வதற்கு , செய்யாமலிப்பதே உகந்தது .

என்னைப்பொறுத்தவரை , கலப்புத்திருமணங்களை ஆதரிக்கும் சமூகநிலைபாடு மக்களிடையே வளரும் வண்ணம் பார்த்துக்கொண்டாலன்றி ,  அதனால் கஷ்டங்கள்தான் வரும் . அந்த கஷ்டங்களை தாங்கும் மனநிலையில் இருப்பின் , தாராளமாய் கலப்புத்திருமணம் செய்துகொள்ளலாம் .மேலே நீங்கள் படித்த , கலெக்டர் ஆபிசில் புகுந்த பையன்  , கடைசியில் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை மணந்து கொண்டான் . இல்வாழ்க்கையை வெற்றிகரமாய் துவங்கினான் . கடைசியில் யார் கண் பட்டதோ , தொழிலில் பெருத்த நட்டமாகி தூக்குமாட்டிக்கொண்டான் .  அந்த பையனுடன் இருந்த சில கயவர்கள் , அவனிடமிருந்து அனைத்தையும் சுருட்டிக்கொண்டுவிட்டார்கள் . கடைசியில் , அப்பெண்ணின் உறவினர்கள் , பையனின் உறவினர்கள் என்று யாருமே வரவில்லை . சடலத்தை தூக்கிச்செல்ல 4 பேர்கூட இல்லாமல் , அப்பெண் கதறிக்கொண்டிருந்தாள் .

CN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்

கிறிஸ்டோபர் நோலன் . நீங்கள் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களை பார்த்திருப்பீர்கள் என்றால் , இப்பெயரை கேள்விப்படாமல் இருக்கமுடியாது . மனுஷர் , ஒவ்வொரு படமும் , ஒவ்வொரு விதமாக எடுப்பார் .இதுவரை எடுத்த படங்களின் கதைச்சூழல் , ஒவ்வொன்றிலும் வெவ்வேறாகதான் இருக்கும் . முதல் படமான FOLLOWING முதல் , கடைசியில் வெளிவந்த THE DARK KNIGHT RISES வரை , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் .இவர் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படமான INTERSTELLER திரைப்படம் , நவம்பரில் வெளியாக உள்ளது. எப்படியும் அந்த படம் ரிலிசானவுடன் ,வலைப்பதிவு உலகத்தில் ,ஹாலிவுட் விமர்சகர்களால் குறைந்தது ஒரு மாதத்திற்காவாது உச்சரிக்கப்படும் பெயர் ,இவருடையதாகதான் இருக்கும் . அதனால் , அவரின் ஒவ்வொரு படங்களையும் , ஒரு சின்ன தொடர்பதிவாக , இப்போதே எழுதி தள்ளவிடலாம் என்றிருக்கிறேன் .

பொதுவாக , ரேட்டிங் எனப்படும் தரவரிசையில் சாதிக்கும் படங்கள் , வசூலில் கவிழ்ந்துவிடும் . ஆனால் , வசூலிலும் கலக்கிவிட்டு , ரேட்டிங்கிலும் இடம்பெறும் வகையறா படங்கள் தான் நோலனின் படங்கள் . இவரின் ஒவ்வொரு படமும் , ஒரு இலக்கியம் போன்றதுதான். ஒவ்வொரு படைப்பும் ஒருவித அனுபவத்தை கொடுக்கும் . ஒரு படம் , நமக்குள் என்ன செய்யும் ? பெரும்பாலும் நம் மூளையை உறங்கச்செய்துவிட்டு , உணர்ச்சியுடன்விளையாடும் . ஆனால் , இவரின் படங்களோ , உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு , மூளையை கசக்கிப்பிழிந்து வேலைவாங்கும் . நம்ப முடியாத விஷயங்களை கூட , அழகாக நம்மை நம்பவைத்து , ஏமாற்றி , நம் மூளையுடன் இரண்டு மணிநேரம் , மென்மையாக விளையாடுவதுதான் ,நோலனின் தனித்துவம் . திகில் படங்களிலோ , க்ரைம் படங்களிலோ , வில்லன் யாரென்று கண்டுபிடிக்கத்தான் நம் மனம் , அலைபாயும் .ஆனால் இவரின் படங்களில் ,  கதை என்ன என்று தேடவைக்கும் .சரி, FOLLOWING கதைக்கு வரலாம் .
மற்றவர்களை பின்தொடர்வதே எனது வேலை என்று ஒருவன் போலிசிடம் சொல்வதாக , படம் ஆரம்பிக்கும் . எழுத்தாளனாக வேண்டும் என்பதை , லட்சியமாக கொண்டுள்ள ஒரு இளைஞன் . அதற்காக , மற்றவர்களை பின்தொடர்ந்து , அவர்களின் வாழ்க்கைச்சூழலை அறிந்து கொள்ள முயற்சிக்கிறான் . அதிலிருந்து , தனக்கு தேவைப்படும் கதை கிட்டலாம் என்பதே அவனது எண்ணம் . அவனுக்கென்று சில விதிகளை , அவனே உருவாக்கிக்கொள்கிறான் . யாரையும் அதிக காலம் பின்தொடரக்கூடாது . பெண்களை பின்தொடர்தல் கூடாது. அதேபோல் , தான் பின்தொடரும் மனிதர்களின் வசிப்பிடத்தைத்தெரிந்து கொண்டால் , அப்போதே அவர்களை மறந்துவிட்டு வெளியேறிவிடவேண்டும் .  ஒருவனை பின்தொடர்ந்துசென்றால் , மீண்டும் அவனைபின்தொடரல் கூடாது. இது போன்ற சில விதிகளை உருவாக்கிக்கொள்கிறான் . அந்நேரத்தில் ஒருவனை தொடரும்போது , அவனிடம்  மாட்டிக்கொள்கிறான் . அவனிடம் , உண்மையைக்கூறிவிடுகிறான் . அவனோ , தன் பெயர் காப் எனவும் ,அவனுடன் வந்தால் , சில இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை காட்டுவதாகவும் கூறி ஒரு வீட்டிற்கு அழைத்துச்செல்கிறான் . யாருடையவீடு என்பது அறியாமலே ஹீரோ, அவனை பின்தொடர்கிறான் . அங்கு சென்ற காப்  ,  ஹீரோவிடம் அந்த வீட்டில் வாழ்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை , அவ்வீட்டின் சூழலை வைத்தே விளக்குகிறான் . ‘காப்’ உடன் பழகும் நாட்களில் , அடுத்தவர் வீட்டின் சுற்றுச்சூழலைக்கொண்டே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் , மற்றவர் இடங்களில் எவ்வாறு நுழைவது என்பதையும்  , அரையும்குறையுமாக  ஹீரோ அறிந்து வைத்திருப்பார் . அதேநேரத்தில்  ஹீரோ , ஒரு பாரில் அழகான பெண்ணைப்பார்க்கிறார் . அவள் முகத்தில் ஏதோ ஒருவிதமான கஷ்டங்கள் தெரியவர , அவளையும் பின்தொடர்கிறான் . அவளிடம் பேசும்போது , தன்னை அந்த பாரின் ஓனர் கடத்தி வைத்து சித்தரவதைப்படுத்துவதாகவும் , அவன் ஒரு கேங்ஸ்டர் எனவும் கூறுகிறாள் . அவளுடன் பழக பழக , ஹீரோ அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார் . அவளை அங்கிருந்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்கிறான் . அதற்கு அவளோ , தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் அந்த ரவுடியிடம் இருப்பதாகவும் , தான் எங்காவது வெளியேறினால் , அதை வெளியிட்டுவிடுவதாகவும் கூறுகிறாள் . அவளை காப்பாற்ற  ஹீரோ , ‘காப்’பிடம் உதவி கேட்கிறார் . ‘காப்’போ , தன்னைப்பற்றிய உண்மைகளை அவளிடம் எதற்காக கூறினாய் என்று , ஹீரோவை நாலு சாத்து சாத்துகிறார் . அதன்பின் , ‘காப்’பிற்கு பணம் தருவதாக கூறி, ஹீரோ  அவனிடம் வேண்டுகிறார்.’காப்’பும் அங்கு நுழைய ஐடியா கொடுக்கிறார் . ஹீரோவிற்கு தேவையானது , அந்த பாரில் , ரகசிய இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிப்பதாக கூறிய ஹீரோயினின் , அந்த மாதிரியான படங்கள் . அங்கு சென்று பார்த்தால் , அம்மாதிரியான படங்கள் எதுவுமில்லை . சரி ,காப்பிற்கு கொடுக்கவேண்டிய பணத்தை , அந்த பாரில் இருந்து கொள்ளையடித்துவிட்டு வெளியே தப்பிக்கமுயலும்போது , பாரில் வேலைசெய்யும் ஒருவன் , ஹீரோவை பார்த்துவிட , அவனை  அடித்துவிட்டு , ஹீரோ வந்துவிடுவார்  .ஹீரோயின் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்த ஹீரோ , இவையனைத்தும் காப்பின் திட்டங்கள் என்று கண்டுபிடித்து ,  போலிசிடம் சென்று நடந்த உண்மைகளை கூறுவான் . அதன்பின்  , முடிவு யாரும் எதிர்பாராதது . ஏன், அந்த படத்தில் ஹீரோவுக்கே , முடிவு எதிர்பாராதது தான் . அவ்வளவு நேரம் நாம் ஒருவனை ஹீரோவாக நினைத்துக்கொண்டிருக்கும்போது , ‘செல்லக்குட்டி ! அவரு ஹீரோனு யார் சொன்னா ? இவருதான் ஹீரோ’னு நோலன் , ‘நச்’சென்று ஒரு ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருப்பார் .இதே கதையை , எங்கோ பார்த்தது போலோ , கேட்டது போலோ இருந்தால் , உங்கள் ஞாபகத்திறன் அதிகம் என்றுதான் அர்த்தம் . ஜெய் எனும் ஆஸ்கார்விருது வாங்கப்போகும் நாயகர் ஒருவர் நடித்து ‘வாமனன்’ எனும் பெயரில் , இப்படத்தினை ‘உல்டா’வாக்கியிருப்பார்கள் . ஆனால் , இப்படம் இமயமலை உயரம் எனில் , அந்தப்படம் பரங்கிமலை உயரம்கூட வராது . இதே படத்தை அப்படியே காப்பியடித்து எடுத்திருக்கலாம் . நோலன் , என்ன இங்கவந்து பாக்கவா போறாரு ?மேலே நான் கூறியவாறு படத்தை எடுத்திருந்தால் , இது ஒரு சுமாரான படமாகமுடிந்திருக்கும் . ஆனால் , இப்படத்தின் திரைக்கதை அமைப்பை , நான்-லீனியர் அமைப்பில் எழுதி இருப்பதால் , இது ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கின்றது . பொதுவாக திரைக்கதையில் பலவிதம் உண்டு. அதை ரசிகர்களின் முன்னிலையில் எடுத்துச்சொல்லும் விதத்தைப்பொறுத்து , லீனியர் , நான்- லீனியர் என்று பிரிக்கலாம் .1,2,3,4,5,6,7,8,9 என்று வழக்கமான பாணியில் எண்களை சொன்னால் , அது லீனியர் . அதுவே 3,6,1,5,8,2,4 என்று மாற்றி மாற்றி கூறிவிட்டு , கடைசியில் நமக்கு அனைத்து எண்களையும் புரியவைக்கும் பாணியே , நான்-லீனியர். இதில் , இரண்டாம் வகைசார்ந்தவர் தான் நோலன் . இப்போதெல்லாம் ,ப்ளாக்பஸ்டர் வட்டத்தில் சிக்கிக்கொண்டதால் , முன்போல் நான் – லீனியர் வகையறா படங்களை எடுப்பதில்லை .

இவரிடம்  ஒரு பேட்டியில் , நான்- லீனியர் பற்றிய ஒரு கேள்வி கேட்கப்பட , அதற்கு நோலன் ‘முதலில் ஒரு காட்சியினை காண்பித்துவிட்டு , பின் வேறுகாலகட்டங்களில் நிகழும் காட்சியை காண்பிக்கிறேன் . பின் மீண்டும் முதல் காட்சியின் தொடர்ச்சியினை காட்டப்படும்போது , பார்வையாளர்களுக்கு , அக்காட்சியின் தொடர்ச்சி , சரிவர பினைந்திருக்கவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது .ஏனெனில் , அவர்களின் மனதினுள் , அக்காட்சியினை ஏற்கனவே தொடர்பு படுத்தியிருப்பார்கள்’ என்றார் . கிட்டத்தட்ட , இவரின் படங்களில் , THE DARK KNIGHT TRIOLOGY மற்றும் INCEPTION தவிர , மற்ற அனைத்தும் இம்மாதிரியான ரகங்களே !
நோலனின் படைப்புகளுக்கு , மாபெரும் தூண் என்றால் , அது திரைக்கதை . நோலன் படம் என்றாலே , அதில் திரைக்கதைதான் முக்கிய பங்கு வகிக்கும் ..இவரும் , இவருடைய சகோதரர் , ஜொனதன் நோலனும் சேர்ந்து திரைக்கதை எழுதுகிறார்கள் என்றால் , நமக்கு குறைந்தது 3 தடவையாவது பார்க்கும்படியான , ஒரு அற்புத திரைப்படம் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் . இன்றும் உலகளவில் சிறந்த திரைக்கதை அம்சங்கள் உடைய 3 படங்களில் ‘MEMENTO’வும் ஒன்று . நோலன் படைக்கும் பாத்திரங்களை பெரும்பாலும் உளவியல் , மனோதத்துவ ரீதியாக அணுகி , நம் கண்களின்முன் உலாவிட்டிருப்பார் . இதுவரை இவர் படைத்த பாத்திரங்களான  ‘COPP’ முதல் ‘BRUCE WAYNE’ வரை அத்தனை கேரக்டர்களையும்  ,மேற்கண்டவாறே அணுகியிருப்பார் .


இந்த படம் எடுப்பதற்கு , நோலனுக்கு இரண்டு விஷயங்கள் , உந்துதலாக இருந்ததாம் . ஒன்று, அவர் வாழ்ந்த கூட்ட நெரிசல்மிக்க லண்டன் மாநகரம் . மற்றொன்று , அவருடைய அபார்ட்மென்டில் நடந்த ஒரு திருட்டுச்சம்பவம் . இதை இரண்டையும் கொண்டு அவர் யோசிக்கும்போது சிக்கியதே , FOLLOWING படத்தின் கதை . படத்தின் நீளம் 1 மணிநேரம் 10 நிமிடம் .  இப்படத்தை பார்க்கும்போது , இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது . எப்படி படத்தை முடிப்பார்கள் ? ஒன்றுமே புரியவில்லையே என்று மண்டையை குழப்பிக்கொண்டிருக்கும்போது , கடைசி இரண்டு நிமிடங்களில் , அந்த ஒரு மணிநேர குழப்பங்களையும் , அசால்டாக நோலன் முடித்துவைத்திருப்பார் .


இப்படம் எடுக்க ,தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறுவதைவிட , இல்லை என்றே சொல்லலாம் . இப்படத்தின் தயாரிப்பாளர்கள் யாரென்று பார்த்தால் நோலனின் காதலியான எம்மா தாமஸ் , மற்றும் நோலன் , அடுத்து இப்படத்தில் ஹீரோவாக வரும் நோலனின் நண்பர் ஜெர்மி  ஆகியோர் தான் . இவ்வளவுதான் பட்ஜெட் என்று அறுதியிட்டு எடுக்கப்படாத திரைப்படம் . பணம் கையிலிருந்தால் 16 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு , வார இறுதியில் படம்பிடிக்க கிளம்பிவிடுவார்களாம் . இந்த கேமராவில் எடுக்கப்படும் படம் , தியேட்டரில் திரையிடமுடியாது. நம் பள்ளிகளில் , ஏதேனும் காட்சிகளை ப்ரஜெக்டரில் காட்டுவார்கள் அல்லவா ? அந்த திரைக்குத்தான் உகந்தது .(பின்னாளில் , இத்திரைப்படம் 35 MMக்கு மாற்றப்பட்டு , ரிலிஸானது என்பது தனிக்கதை .) ஷூட்டிங் ஸ்பாட் , லொகேஷன் என்று எதற்கும் அலையவில்லை . நோலனின் அபார்ட்மென்ட் மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளைச்சுற்றியே , இப்படத்தை எடுத்துமுடித்தார்களாம் . படத்தில் வரும் ரெஸ்டாரன்ட் மற்றும் பார்காட்சிகள் கூட ,நோலனின் நண்பர்களுடைய இடங்களில் எடுக்கப்பட்டது . நம்மிடம் பணம் இல்லையெனில் , கலரில் ஒருபடத்தை ஸ்டைலிஷாக எடுப்பது முடியாத காரியம் . அப்படி எடுத்தாலும் , அது படுகேவலமான லுக்கையே தரும் . அதற்குபதில் , ஸ்டைலிஷாக கருப்பு-வெள்ளையலே எடுத்துவிட்டு செல்லலாம் என்பது நோலனின் முடிவு . அது , படம் பார்க்கும்போது , பார்ப்பவர்களுக்கு  நன்றாக உணர்த்தியிருப்பார் . இப்படத்தில் , ஹீரோயினாக நடித்தவரைத்தவிர அத்தனைபேரும் , நோலனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாத்திரமே ! குடும்ப படம் என்று முடிவு செய்துவிடாதீர்கள் . மற்றவர்களை நடிக்க அழைத்தால் , அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்ற காரணத்தினால் தான் . ஹீரோயின் மாத்திரம் ஒரு தொழில்நடிகை . படம் எடுக்கப்படுவதற்குமுன் , ஆறுமாத காலம் , வெறும் ஒத்திகை மாத்திரமே பார்த்தாராம் . ஒரு பைசாகூட வீணாகிவிடக்கூடாது என்பதில் முழுகுறியாயிருந்த நோலன்  , இப்படத்தின் ஷூட்டிங்கின்போது  , பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்கில் ஓ.கே ஆக்கிவிட்டாராம் .சில காட்சிகள் மட்டும் , இரண்டாவது டேக் . ஆனால் , இரண்டு டேக்குகளுக்க மேல் எக்காட்சியும் எடுக்கப்படவில்லை. இந்த படத்தின் பட்ஜெட் , மொத்தம் 6000 டாலர் . உலகின் அடிமட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படங்களில் , இதுவும் ஒன்றாய் திகழ்கிறது . இந்த பட்ஜெட்டைக்கொண்டு , 1998 களில் கூட , எந்த தமிழ்ப்படமும் எடுத்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் .


அடுத்து , இந்த படத்தின் டெக்னிசியன்கள் என்று பார்த்தால், எல்லாமே நோலன்தான் . கேமராமேனும் அவர்தான், எடிட்டரும் அவர்தான் . இசைமாத்திரமே வேறொருவர் . T.R கணக்காய் , கதை , திரைக்கதை, வசனம் , ஒளிப்பதிவு , எடிட்டிங் , இயக்கம் , தயாரிப்பு என எல்லா வேலைகளையும் நோலனே சிறப்பாக செய்துள்ளார் .

கிட்டத்தட்ட , இந்தியமதிப்பில் இரண்டு லட்சம் ரூபாயில் (1998 ல் , அமெரிக்க டாலர் , இந்திய மதிப்பில் 40 ரூபாய்க்கும் குறைவு என நினைக்கிறேன் .) எடுக்கப்பட்ட இத்திரைப்படம் , இன்று 100 கோடியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தராத அனுபவத்தை , நமக்கு கொடுக்கும் வகையில் உள்ளது . இந்த படத்திற்கு பின்னர்தான் , மெமெண்டோ எனும் மாபெரும் திரைக்குழப்பத்தை உருவாக்கினார் ! மெமென்டோவைப்பற்றி , அடுத்த பதிவில் காணலாம் .


இதன் தொடர்ச்சிப்பதிவான , மெமென்டோவைப்பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்