Tuesday, 27 January 2015

UNBREAKABLE –சினிமா விமர்சனம்மனோஜ் ஷ்யாமளன் . ஹாலிவுட்டில் பெருமை நாட்டிய இந்தியர் . மலையாளி தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவர் . நோலனைப்போல சிறுவயதிலே சினிமா தான் வேண்டும் என்று அடம்பிடித்து 8 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு படம்பிடித்தவர் .  இவரின் படங்களை உற்றுநோக்கினால் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைத்தான் அதிகமாய் காட்சிப்படுத்தியிருப்பார் . குடும்ப உறவைத்தான் பெரும்பாலும் படம்பிடிப்பார் . முதல் படத்திலேயே அடுத்த ஸ்பில்பெர்க் , ஹாலிவுட்டைக்காக்க பிறந்த ரட்சகன் என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் . துப்பாக்கி தோளில் சுமந்து வெடிகுண்டை அல்லையில் வைத்துக்கொண்டு திரிந்த ப்ரூஸ் வில்லிசை வைத்து எடுத்த THE SIXTH SENSE படத்தின்மூலம் வில்லிசை வேறொரு லெவலுக்கு அழைத்துச்சென்றவர் . SIXTH SENSE-ன் தாக்கம் எனக்கு எந்தளவிற்கு என்றால் என்னுடைய முதல் குறும்படத்திற்கு அந்த படத்தின் தலைப்பையே வைத்தேன் (நீங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் , இல்லையெனில் என்னுடைய குறும்படமும் நன்றாக வந்து உங்களை படுத்தி எடுத்திருக்கும்). தான் வாழ்ந்த ஊர்களிலேயே தான் ஷூட்டிங்கை நடத்துவார் . இவரின் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒரு ட்விஸ்ட் இருக்கும் . பெரும்பாலும் அது திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் . இவரின் LADY IN THE WATER , AFTER EARTH ஆகிய இரண்டுப்படங்களைத் தவிர்த்துப்பார்த்தால் மற்ற படங்கள் எல்லாமே ஹாலிவுட்டில் கமர்சியல் ப்ளாக் பஸ்டர்கள் . இவருடைய வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுத்த படமான SIGNS இந்தியாவிலேயே நன்றாக ஓடியது . பெரும்பாலோனவர்கள் இவரின் முதல் படத்திற்குப்பின் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் சுமார் தான் என்ற ரீதியில் விமர்சிப்பார்கள் . ஆனால் அதற்குப்பின்னும் நல்ல படங்களைத்தந்தவர் மனோஜ் . எனக்கு இவரின் படங்களிலேயே மிகமிக பிடித்தபடம் என்றால் அது THE VILLAGE தான் . அந்த படம் மிகவும் பொறுமையாக நகரும் . ஏதோ பீரியட் படம்போல இருக்கும் . அப்படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்டைக்காட்டிலும் , அந்த படத்தின் மூலக்கதைக்கரு என்னை மிகவும் பாதித்தது எனலாம் .இன்று பாக்ஸ் ஆபிஸில் நம்பர்.1 ல் இருக்கும் அவதார் படத்தின் டைட்டிலை ஏற்கனவே வைத்திருந்தவர் இவர்தான் . இவருடைய THE LAST AIRBINDER எனும் திரைப்படத்திற்கு முதலில் அவதார் எனும் டைட்டில்தான் சூட்டப்பட்டிருந்தது . பின் கேமரூனின் வேண்டுகோளுக்கு இசைந்து டைட்டிலை விட்டுக்கொடுத்தார் .இவரின் படங்களில் பிட்டுக்காட்சிகள் என்பது துளிகூட இருக்காது . குடும்பத்துடன் உட்கார்ந்து தாராளமாய் பார்க்கும் வண்ணம்தான் படமெடுப்பார் . குடும்ப உறவுகள் , நடுவே ஒருவித படபடப்புடன் நகரும் திரைக்கதை , கடைசியில் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட் , இதுதான் இவரின் பார்முலா . கழுத்தில் தாயத்தைக்கட்டிக்கொண்டே ஆஸ்கார் நிகழ்வில் கலந்துகொண்டவர்( SIXTH SENSE ஆஸ்காரில்  மொத்தம் 6 துறைகளுக்கான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது .) இவருக்கு பத்மஶ்ரீ விருதை இந்திய அரசு வழங்கியபோதுகூட சில சர்ச்சைகள் ஏற்பட்டன . எப்படி இருப்பினும் , இந்தியாவில் இருந்து சென்றாலும் ஒரு இந்தியர் , உலகளவில் முத்திரைப்பதித்துக்கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் முத்திரை பதிப்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான் .


SIXTH SENSE-ன் இமாலய வெற்றிக்குப்பின் ஷியாமளன் மீண்டும் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் உடன் இணைந்து எடுத்த இரண்டாவது படம்தான் UNBREAKABLE . அப்படியானால் இப்படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கவேண்டும் ? ஆனால் அதை முடிந்தவரை பூர்த்தி செய்திருப்பார் . படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஸ்லைடு போடுகிறார்கள் . அதைப்படித்ததும் அப்படியே டென்சனாகிவிடாதீர்கள் . அமெரிக்கர்களுக்கு காமிக்ஸ் ஆர்வம் மிக மிக மிக அதிகம் . நம்மூர் காமிக்ஸ் ஆசிரியர்களெல்லாம் இப்போது கூட ஆங்கிலத்தில் காமிக்ஸ்களை , அமெரிக்காவில் சரியான சப்போர்ட்டுடன் வெளியிட்டால் ஒரே வருடத்தில் மாபெரும் கோடிஸ்வரர் ஆகிவிடலாம் . அந்தளவு காமிக்ஸ் மோகம் . இல்லாமலா பேட்மேன் , சூப்பர்மேன், ஹீமேன், ஹிட்மேன், அவெஞ்சர்ஸ் போன்று சூப்பர்ஹீரோ படங்களை ஆயிரம்கோடி செலவு செய்துஎடுப்பார்கள் (ஆனால் இந்த சூப்பர்ஹீரோ படங்களுக்கு அமெரிக்காவை விட இந்தியா , சீனா போன்ற ஓவர்சீஸ் மார்க்கெட்தான் கைக்கொடுக்கிறது . காரணம் அமெரிக்கர்கள் காமிக்ஸில் ஏற்கனவே பார்த்த விஷயத்தை கிராபிக்ஸோடு பார்ப்பதில் அவ்வளவாக திருப்தியடைய மாட்டார்கள் ). எல்லோரும் காமிக்ஸை வைத்து படமெடுப்பார்கள் , ஆனால் மனோஜ் , காமிக்சையே படமாக்கியிருக்கிறார் .


சரி படத்தின் கதைக்கு வருவோம் (அப்பாடி !) . எலைஜா  (சாமுவேல் ஜாக்சன்)   என்பவன் எலும்பு வளர்ச்சி மரபு குறைபாட்டோடு (ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்ட்டா) பிறக்கிறான் . எங்காவது கீழே விழுந்தால் நமக்கெல்லாம் கையில் சிராய்ப்பு , காயம் போன்றவை ஏற்படும் . பலமாக மோதினால் எலும்பு உடைந்து புத்தூருக்குப்பறப்போம் . ஆனால் எலைஜாவுக்கு அப்படியில்லை . அவன் தடுக்கிவிழுந்தால் கூட உடலில் பாதி எலும்புகள் நொறுங்கிவிடும் . அவனுக்கு சிறுவயதுமுதலே காமிக்ஸ் மேல் கொள்ளைப்பிரியம் . அதில் வரும் சூப்பர்ஹீரோக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் ,ஆனால் அவர்களின் திறமையை அவர்களே உணராமல் இருக்கிறார்கள் என்பது அவன் கருத்து . இந்நிலையில் டேவிட் என்பவனைப்பற்றி தெரிந்து கொள்ளும் எலைஜா , அவனை சந்திக்கிறான் . டேவிட் ஏற்கனவே ஒரு ரயில் விபத்திலிருந்து தப்பியவன் . அவனிடம் எலைஜா , ‘நீ ஒரு சூப்பர்ஹீரோ’ என்று கூற , அதை மறுக்கிறான்  டேவிட் . சில நாட்களில் டேவிட்டுக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகிறது  . இன்னொருபுறம் கடைசிவரை நீ சூப்பர்ஹீரோ என்று கூறிக்கொண்டே இருக்கும் எலைஜா கூறியதுபோல் டேவிட் ஒரு சூப்பர்ஹீரோ தானா ? என்பதே படத்தின் கதை .

ப்ரூஸ் வில்லிஸ் , வழக்கம்போல ஒரு அமைதியான குடும்பத்தலைவராகவும் எந்நேரம் பார்த்தாலும் குழப்பத்தில் திரிவது என அருமையாக நடித்திருக்கிறார் . ரயிலில் பயணிக்கும்போது அவருடன் ஒரு பெண் அமர்ந்ததும் உடனே தன் கையில் இருக்கும் திருமணமோதிரத்தை கழட்டிவைத்துவிட்டு அவளிடம் கடலைப்போடுவதும் , அவளிடம் பின் பல்பு வாங்கும்போதும் ஒரு அசடு வழிவார் பாருங்கள் , நச்சென்று இருக்கும் . சாமுவேல் ஜாக்சன்  , மனம் முழுதும் தன்னிடம் இருக்கும் பிரச்சனையை நினைத்து ஒரு வெறுமையான பார்வையைக்காட்டும்போதும் சரி , நீ தான் சூப்பர்ஹீரோ என்று ப்ரூஸிடம் சொல்லும்போது அவரின் முழுநம்பிக்கையையும் கண்களின்வழியே கடத்தும்போதும் சரி, மனிதர் சும்மா கிழி கிழி கிழி தான் . ப்ரூஸைக்காட்டிலும் இவரின் நடிப்புத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .  ஒளிப்பதிவாளரும் அருமையாக தன் பியினைச்செய்திருப்பார் . இசை , ஜேம்ஸ் நியுட்டன் ஹோவர்ட் . எப்படி முந்தைய ஷ்யாமளன் படத்தில் தன் பணியினைச்செய்திருப்பாரோ , அதைவிட தன்னுடைய பெஸ்ட்டை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் .

மொத்தத்தில் , ஒரு அமைதியான , அழகான அதேநேரம் குடும்பத்துடன் ஒரு அட்டகாசமான திரில்லரை பார்க்கவேண்டுமெனில் இத்திரைப்படத்தைத் தாரளமாக பாருங்கள் . கண்டிப்பாய் இப்படம் ஏமாற்றாது .

(பின்குறிப்பு – மனோஜ் ஷ்யாமளன் தன்னுடைய பெயரை NIGHT M.SHYAMALAN என்றுதான் டைட்டிலில் போடுவார் .இவர் இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்காவிலேயே குடியுரமை பெற்று அங்கேயே வாழ்க்கை நடத்துகிறார் . எனினும் பிறப்பால் இவர் இந்தியர். இவரின் முதல்படம் PRAYING WITH ANGER என்பதும் தவறு . அந்த படம் விளையாட்டாய் அவர் எடுத்தது . அதன்பின் வந்த WIDE AWAKE கூட திரையரங்குகளில் முதலில் ரிலிசாகவில்லை . SIXTH SENSE –ன் வெற்றிக்குப்பின் ரிலிசாகி ஓரளவு சுமாராக ஓடியபடம் தான் WIDE AWAKE . அதனால் OFFICIAL ஆக  உலகம் முழுக்க ரிலிசான முதல்படமாக SIXTH SENSE ஷ்யாமளனின் முதல்படமாகக் கூறப்படுகிறது . மேலும் இவரின் ஒவ்வொரு படத்திலும் கௌதம்மேனன் போல ஏதாவது ஒரு குட்டி ரோல் செய்திருப்பார் . இத்திரைப்படத்தில் ஒரு போதைப்பொருள் விற்பவனாக ஒரு காட்சியில் திருட்டுமுழி முழித்தவாறே வருவார். )

தொடர்புடைய இடுகைகள்


Saturday, 24 January 2015

தாயகம் – சினிமா விமர்சனம்சிறுவயதில் நான் கேப்டனின் பரமரசிகன் . அவர் எதிரகளை பேக் கிக்கில் அடித்துத்துவைக்கும் சண்டைக்காட்சிகளைப்பார்த்து அதேமாதிரி பிராக்டிஸ் செய்த ஆள் நான் . வல்லரசு படத்திற்கு தியேட்டரில் சென்று பார்க்கும்போது எனக்கு 7 வயது இருக்கும் . அந்த படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியைப்பார்த்து , உணர்ச்சிவெள்ளத்தில் எனக்குமுன்னால் அமர்ந்திருந்தவரை எட்டி உதைத்ததெல்லாம் இப்போது கூட நினைவிற்கு வருகிறது . ஆனால் அதன்பின் அவர் ஓவர்மாஸ் என்கிற பெயரில் குப்பையாய் படங்களை எடுக்க , நானோ அர்ஜூனின் ரசிகனாய் மாறிவிட்டேன் . நரசிம்மா படம் கூட வந்த புதிதில் பார்க்கும்போது பவராக இருந்தது . இப்போதெல்லாம் பார்த்தால் பவர்ஸ்டாரே விழுந்து சிரிக்கும் வண்ணம் இருக்கும் . ஆனால் எது எப்படியாயினும் கேப்டனின் விருதகிரி வரை பார்த்துவிட்டேன் . இந்த தாயகம் திரைப்படத்தை பார்க்காமல்விட்டிருந்ததால் இப்போது டவுன்லோடிப் பார்த்தேன் . உண்மையைச்சொல்லவேண்டுமெனில் நான் பார்த்த விஜயகாந்த் திரைப்படங்களிலே பெஸ்ட் இதுதான் என்பேன் . இன்னும் பத்து வருடங்கள் கழித்துப்பார்த்தாலும் இந்த படம் சூப்பராகத்தான் இருக்கும் .

முதல்காட்சியிலேயே மூன்று கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள் . அவர்கள் தப்பிக்க உதவுபவன் கான் . அவன் அந்த மூன்றுபேருக்கும் ஒரு வேலையை ஒப்படைக்கிறான் . ஒரு ஆராய்ச்சியாளரை கடத்தவேண்டும் என்பதே . அந்த ஆராய்ச்சியாளர் ப்ளட் க்ளாட்டிங் எனும் ரத்தப்போக்கைக்கட்டுப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடிக்கிறார் . அவரின் வளர்ப்பு மகள் தான் வீடியோ புகழ் ரஞ்சிதா . ஆராய்ச்சியாளருக்கு ஒரு மீனவ நண்பன் . அவர் தான் விஜயகாந்த் . ஒருமுளை அந்த ஆராய்ச்சியாளர் , ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு விமானத்தில் செல்ல ,  விமானத்தை ஹைஜாக் செய்யமுயற்சிக்கிறார்கள் அந்த மூன்று கைதிகளும் . அப்போது நடக்கும் மோதலில் , பைலட்டான நெப்போலியன் காஷ்மீரின் பனி அடிர்ந்த ஒருபகுதியில் விமானத்தைத்தரையிறக்குகிறார் . விமானம் இறங்கிய  பகுதியில் இருக்கும் பனிக்கரடி (மன்சூர் அலிகான்) எனும் தீவிரவாதிக்கு விஷயம் தெரிந்து அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்கிறான் . அவனுக்கு அந்த கைதிகளின்மூலம் அந்த பயணிகளிடையே இருக்கும் ஆராய்ச்சியாளரின் மருந்து பற்றி தெரிகிறது . அந்த மருந்தின் பார்மூலா தனக்கு வேண்டும் என அங்கிருப்பவர்களை மிரட்டுகிறான் . இன்னொரு பக்கம் ஆராய்ச்சியாளரின் நண்பரான விஜயகாந்தின் தந்தை , தன் நண்பரை மீட்டுவரவேண்டும் என்று விஜயகாந்திற்கு கட்டளையிட , ரஞ்சிதாவைக்கூட்டிக்கொண்டு காஷ்மீர் கிளம்புகிறார் விஜயகாந்த் . அது ஏன் விஜயகாந்தே தான் போகனுமா ? ராணுவம் என்ன தூங்கிக்கொண்டிருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம் . ராணுவத்திற்கு பனிக்கரடி மிரட்டல் விட்டதாலும் அங்கு என்ன நடக்கிறது என அறியமுடியாமல் ராணுவம் தன் நடவடிக்கையை கைவிட்டிருக்கும் . சரி , ப்ளட் க்ளோட்டிங் மருந்தை ஆராய்ச்சியாளர் , பனிக்கரடியிடம் கொடுத்துவிட்டு வந்துவிடலாமே ?  என்ற கேள்வி உங்களைப்போலவே எனக்கும் எழுந்தது . அவனிடம் கொடுத்தால் அவன் பாகிஸ்தானிடம் விற்றுவிடுவான் . அவர்கள் மேட் இன் பாகிஸ்தான் என போட்டு உலகமெங்கும் விற்றுவிடுவார்கள் .  சரி ,மீனவரான கேப்டன் காஷ்மீர் போனதும் டமால் டுமில் என சுட்டுவிட்டு எல்லாரையும் காப்பாற்றிவிடுவார் என நினைக்காதிர்கள் . இங்கிருந்து கிளம்பும்போதே தலைவர் துப்பாக்கி முதல் அனைத்து ஆயுதங்களையும் சுட்டு பயிற்சி எடுத்துவிட்டுத்தான் செல்வார் . அங்கே போனதும் சும்மா சடசடவென்று எல்லாரையும் ஆயுதத்தால் கொல்லாமல் அறிவால் தீர்த்துக்கட்டி வெற்றிபெறுவார் .

 மீனவனாகவும் கோவக்கார இளைஞனாகவும் கேப்டன் . வில்லன் பனிக்கரடியாக மன்சூர் . பாக்சர் பயில்வானாக அருண்பாண்டியன் . பைலட்டாக நெப்போலியன் .பேசஞ்சர்களில் விவேக் , தியாகு போன்றோர் .ஏர்ஹோஸ்டசாக மோகினி . ஆராய்ச்சியாளரின் தந்தையாகவும் , கேப்டனை ஒருதலையாக காதலிப்பவராகவும் ரஞ்சிதா என அத்துனைப்பேரும் தங்களின் கதாபாத்திரங்களைச்சிறப்பாக செய்துள்ளனர் .நான் நிச்சயமாய் இப்படி ஒரு படத்தினை எதிர்பார்க்கவேயில்லை . ஒருசில மைனர் மிஸ்டேக்குகள் இருந்தாலும்  , இது ஒரு சிறந்த படம் என்பதில்துளி சந்தேகமுமில்லை . திரைக்கதை பெட்ரோலைப்போல் வேகவேகமாய் பற்றிக்கொண்டு எரிகிறது . படத்தின் நீளம் 2.38 மணிநேரம் என்றதும் தயங்கியபடியே பார்த்தேன் . முதல் 10 நிமிடங்களிலேயே இப்படம் கவர்ந்தது . என்னடா அதுக்குள்ள முடிஞ்சிடுச்சினு தான் தோண்றியது . இன்னொரு முக்கிய விஷயம் , இப்படத்தை அப்படியே THE DARK KNIGHT படத்தின் திரைக்கதையோடு கம்பேர் செய்யலாம் . காரணம் படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும் . நம்பினால் நம்புங்கள் , இப்படத்தில் கேப்டன் 45 நிமிடங்கள் கடந்தபின்னே இன்ட்ரோ ஆகிறார் . பொதுவாக தமிழ்சினிமாவில் கதை , திரைக்கதை , வசனம், இயக்கம் அனைத்துத்துறைகளையும் ஒருத்தரேதான் கவனித்துக்கொள்வார்கள் . இதில் டி.ஆர் போன்றோர் லைட்டிங் பிடிப்பவது வரை தாங்களே செய்துகொள்வார்கள் . ஆனால் இத்திரைப்படமோ கதை , ஒருவர் , திரைக்கதை ஒருவர் , இயக்கம் ஒருவர் என ஹாலிவுட் பாணியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது .

படத்தில் பெரும் ப்ளஸ்பாய்ன்ட் மன்சூர் அலிகான் தான் . மனிதர் பனிக்கரடி எனும் தீவிரவாதி கேரக்டரில் அதகளம் செய்கிறார் .டார்க்நைட்டில் ஜோக்கர் செய்யும் சேட்டைகளைப்போலவே , சாரி இவர் செய்யும் சேஷ்டைகளைப்போலவே டார்க் நைட்டில் ஜோக்கரின் கேரக்டரும் அமைந்திருக்கும் . என்ன , அதில் ஜோக்கர் அதிபுத்திசாலி , இதில் சுமாரான புத்திசாலி .  வசனங்கள் எல்வாம் செம ஷார்ப் . மன்சூரும் கேப்டனும் பேசிக்கொள்ளும் இடத்தில் வரும் வசனங்கள் அட்டகாசம் .

ஒரு காட்சியில் மன்சூர் அலிகான் 70 பேரையும் வரிசையாய் நிற்கவைத்து சீட்டு எடுக்கச்சொல்லுவார் . யாருக்கு 1-ம் நம்பர் சீட்டு வருகிறதோ அவரைக்கொன்றுவிடுவதாய் தெரிவிப்பார் . அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நெப்போலியன் வாதிடுவார் .

‘நீ யாரு மேன் ஒத்துக்கறதுக்கு ?’ என மன்சூர் கேட்க ,

‘இங்க இருக்க பேசன்சர் எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு ’ என்று நெப்போலியன் கூற
‘நீயே என் பொறுப்புல இருக்க. நீ இவங்களுக்கு பொறுப்பா ? பெரிய பருப்பு மாதிரி பேசாத மேன் ’ என்றுசொல்வார் .

சண்டைக்காட்சிகளை படமாக்கியவிதம் அருமை . அக்கால ஹாலிவுட் உலகிற்கே சவால்விடும் அளவிற்கு சண்டைக்காட்சிகளையும் சேசிங் காட்சிகளையும் படமாக்கியுள்ளார்கள் . பொதுவாக கார் சேசிங் காட்சிகள் என்றாலே , ஹீரோவின் கார் இடித்ததும் ஸ்டன்ட் மேன்கள் ஓட்டிவரும் பைக்கோ , காரோ பறக்கும் . இதில் அந்தமாதிரியில்லாமல் , அவர்கள் கல்லின்மேல் மோதியோ , அல்லது எங்கேனும் இடித்தோதான் பறப்பது போல் காட்டியுள்ளார்கள் . அதேபோல் வண்டி எங்கயாவது இடித்தாலே பனைமரம் உயரத்திற்கு வெடித்துப்பறப்பதைப்பார்த்திருப்போம் . இதில் பெட்ரோல் லீக் ஆகி வெடிப்பது போல் காட்டியிருப்பார்கள்.நான் பார்த்த பெஸ்ட் கார் சேசிங் காட்சிகளில் இப்படத்தின் காட்சிகளும் ஒன்று . விஜயகாந்த் , கவிழ்ந்த காரினுள் மாட்டிக்கொள்ள , அதை வில்லனின் வண்டி இடித்துக்கொண்டே இழுத்துச்செல்லும் காட்சிகள் மிரட்டியிருக்கிறார்கள் . ஆனால் முதலில் தீவிரவாதிகளிடமிருந்து நெப்போலியன் மற்றும் அருண்பாண்டியன் , அங்கிருப்பவர்களைக்கூட்டிக்கொண்டு தப்பிச்செல்லும் காட்சி மட்டும் கொஞ்சம் திருஷ்டியாய் இருக்கும் . அதில் ஒருவாறு சமாதானம் செய்துகொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறோம் . சரியாய் குறிபார்த்துக்கூட சுடத்தெரியாத தீவிரவாதிகளா என எண்ணத்தோன்றும்படியாய் இருக்கும் . ஆனால் நரசிம்மா போன்ற படங்களுடன் கம்பேர் செய்யும்போது , இது ஒரு சாதாரணம் தான் .

விஷ்வரூபத்தில் ஒமர் , தான் மதுரையில் தமிழ் கற்றதாக தெரிவிக்கும்போது கூப்பாடு போட்டவர்கள் இப்படத்தினைக்கவனிக்காமல் விட்டது ஏனோ தெரியவில்லை . இதில் மன்சூர் அலிகான் , தான் சென்னையில் தமிழ் கற்றதாகத்தெரிவிப்பார் . மேலும் தாங்கள் ஜிகாதிகள் என்றும் கூறுவார் . காஷ்மீர்த்தீவிரவாதிகள் வெள்ளி மதியம் 1.30 மணிக்குத்தொழுகை நடத்துவதை வேறு காண்பிப்பார்கள் . விஷ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளுக்கெல்லாம் பிரச்சனை செய்தார்களோ , அதைவிட அதிகமாய் காட்சிகள் இருக்கின்றன . இப்படத்திற்கு பிரச்சனை செய்தார்களா என்றுதான் தெரியவில்லை .

ஒருவகையில் ராம்போ போல் கதை இருந்தாலும் , இது அதுவல்ல . இப்படம் ஹாலிவுட் காபியா என்று தெரியாது . ஆனால் கண்டிப்பாய் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம் . படத்தில் ஒரு காட்சியாவது ட்ரான்ஸ்பார்மை வெடிக்க வைப்பார் , அல்லது சண்டைக்காட்சிகளில் ஏதேனும் மாஸாய் செய்வதாய் நினைத்து நம்மை சிரிக்கவைப்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருந்தேன் . ஆனால் அதற்கெல்லாம் துளிகூட சான்ஸ் கொடுக்காமல் நேர்த்தியான ஒரு ஆக்சன் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் இயக்குநர் . அதிவேக திரைக்கதை மற்றும் பிரம்மாண்ட லொகேசன்கள் , சண்டைக்காட்சிகள் , அடுத்தது என்ன என்ற ஆர்வம் , எதிர்பாராத ட்விஸ்டுகள் என துளிகூட சோர்வடையாமல் செல்லும் படம் . ஆக்சன் விரும்பிகள் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது .


யூட்யூப்பில் இத்திரைப்படத்தைப்பார்க்கதொடர்புடைய இடுகைகள்


Wednesday, 21 January 2015

ஆம்பள & டார்லிங் – சினிமா விமர்சனம்

 .


சுந்தர்.சி யின் இயக்கத்தில் ஒரு படம் என்றதுமே எனக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது . பொங்கலுக்கு முதலில் இத்திரைப்படத்திற்குத்தான் செல்வதாய் இருந்தேன் . ஆனால் சிலபல காரணங்களால் ஐ –க்கு போகவேண்டியதாகிவிட்டது . இப்போதைய சுந்தர்.சி படங்கள் எதிலுமே கதை என்பதைக்காணவே முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படம் . முழுக்க முழுக்க காமெடி மாத்திரமே . அவருக்கு நன்றாய் வரும் காமெடி ட்ரீட்மென்டை சரியாய் பயன்படுத்தி , அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் சுந்தர் . ஊட்டியில் கூட்டத்திற்கு ஆள்சேர்க்கும் வேலையைச்செவ்வனே செய்துவரும் விஷால் , ஒரு கட்டத்தில் தந்தையைத்தேடி மதுரைக்கு வருகிறார் . ஊரின் பெரியமனிதராய் இருக்கவேண்டிய விஷாலின் தந்தை பிரபு , ஒரு திருடனாய் இருக்கிறார் . அவரையும் தன்னுடைய இரு சகோதரர்களையும் சந்திக்கும் விஷால் , தன் தந்தையின் பிளாஷ்பேக்கை அறிகிறார் . தவறுதலாக தன் தந்தையைக்கொன்றுவிட்டதாகவும் , தங்கைகளின்மேல் இருக்கும் பாசத்தால் சொத்துகளை தங்கைகளுக்கு எழுதிவைத்ததாகவும் தெரிவிக்கிறார் பிரபு . தந்தையைக்கொன்றதால் பிரபுவை வெறுத்து ஒதுக்கும் மூன்று தங்கைகளையும் சமாதனப்படுத்தி , அவர்களின் மகள்களை விஷாலும் அவரின் தம்பியரும் திருமணம் செய்வதுதான் கதை .

படத்தில் மெய்ன் ஹீரோ என்றால் அது சந்தானம் தான் . இவரைத்தவிர்த்து பார்த்தால்  , சத்தியமாக படத்தைப்பார்க்கவே முடியாது . மனிதர் டீ ப்ரொமோட் ஆகும் காட்சிகளிலும் , வில்லனை சமாதானப்படுத்த செய்யப்போய் அது உல்டாவாகும் காட்சிகளில் கும்மியெடுத்துருக்கிறார் . இவருக்கு அடுத்து , சதீஷின் இயல்பான நகைச்சுவை நிறைந்த ஒலைன்னர்கள் ஆங்காங்கே வொர்க் அவுட் ஆகிறது .ஒருவகையில் சுந்தர்.சி , ஜாக்கிஜானின் பாதையைப்பின்பற்றுவதை இப்படத்தில் நன்றாக உறுதிசெய்துகொள்ளலாம் . ஜாக்கிஜான் காமெடிக்குள் கிளாமரை நாசுக்காக உள்புகுத்தியிருப்பார் . அதேபோல் தான் சுந்தர் .சியும் . ஹன்சிகாவின் கிளாமரை காட்டுவதைப்போன்ற பல காட்சிகள் கடுப்பைத்தான் வரவைத்தன .இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா , சிறப்பான பாடல்களைக்கொடுத்துள்ளார் . பாடல்களில் இரைச்சலைக்குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . பெரும்பாலான சுந்தர்சியின் படங்கள் , இசை பெரிதளவு எடுபடாமல் போயிருக்கும் . ஆனால் இப்படம் கொஞ்சம் பரவாயில்லை .

இந்த படம்  ஒரு ஆக்சன் படம் என்று சொன்னால் , சாம் ஆன்டர்சனே விழுந்து விழுந்து சிரிப்பார் . மேன் ஆஃப் ஸ்டீலில் கூட இப்படியொரு சண்டைக்காட்சிகளை நான் பார்த்ததில்லை .தம்மு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் போடும் சண்டைக்காட்சிகளைப்பார்த்து நான் வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன் . எப்படியோ , தமிழில் இம்மாதிரி யாரும் முயற்சிக்கவில்லை என்று ஆறுதலாய் இருந்த எனக்கு ஆப்படிக்கும் விதமாய் ஜூனியர் என்.டி.ஆரின் சண்டைக்காட்சிகளையே விஷால்  தூக்கிசாப்பிட்டுவிட்டார் . மற்றவர்களைப்பற்றி பெரிதாய் சொல்ல எதுவுமில்லை . பிரேமில் வரும் நடிகர்கள் தங்களின் பணியைச்சிறப்பாக செய்துள்ளனர் .

மொத்தத்தில் , காமெடியால் இது ஆம்பள .டார்லிங் ஒரு எதிர்பார்க்காத திரைப்படம் என்று தாராளமாய்ச்சொல்லலாம் . ஒரு சப்பைக்கதையை வைத்து , ஜாலியாக திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் . ஒரு படம் ரசிகர்களுக்குப்பிடிக்க சி.ஜி , பிரம்மாண்டம் , 200 கோடி தேவையில்லை, நல்ல திரைக்கதை இருந்தால் போதும் என்பதை இப்படம் நிறுபித்துவிட்டது . ஹீரோ ஜ.வி.பிரகாஷ் , தன் நண்பருடன் தற்கொலைச்செய்ய முடிவெடுக்கிறார் . அவர்களுடன் ஹீரோயினும் , கருணாசும் இணைந்துகொள்கிறார்கள் . ஹீரோயின் , பிரகாஷை ஒருதலையாக காதலித்தவர் என்பதும் , அவளும் ஹீரோவின் நண்பரும் இணைந்து ஹீரோவின் தற்கொலையைத்தடுக்க முயற்சிக்கிறார்கள் .இதற்குள் ஹீரோயினுக்கு பேய் பிடித்துவிடுகிறது . ஒரு கட்டத்தில் ஹீரோயினின் உண்மையான காதலை அறிந்த ஹீரோ , அவளுடன் வாழ முடிவெடுக்கிறார் . ஆனால் ஹீரோயினுக்குள் இருக்கும் பேய் , அவர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்கிறது . கடைசியில் என்ன ஆனது என்பதே கதை . கதையைப்படித்தால் பெரிதாய் இருக்காது . ஆனால் திரைக்கதை , சலிப்படைய வைக்காமல் ஜாலியாய் நகர்கிறது . யாமிருக்க பயமே படம் கிட்டத்தட்ட ஃஸ்பூஃப் வகையறாவாக அமைந்திருக்கும் . இப்படம் காமெடியாய் அமைந்திருக்கும் . ஹீரோவாக வரும் ஜீ.வி.பிரகாஷைவிட , இசையமைப்பாளர் ஜ.வி.பிரகாஷ் அதகளப்படுத்தியிருக்கிறார் . பாடல்கள் மட்டுமின்றி பிண்ணனி இசையும் அருமை ரகம் . அதிகமான கேரக்டர்கள் இல்லாமல் , இயல்பாய் அதேநேரத்தில் பார்ப்பவர்களை குழப்பாமல் அமைதியான ஒரு படம் . கருணாஸ் மற்றும் ஹீரோவின் நண்பராய் வருபவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ஜாலியாய் நகர்கின்றன . ஒரே காட்சிக்கு வந்தாலும் ரான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி , செம ராவடி .முக்கால்வாசிப்படம் காமெடியில் நகர , கிளைமேக்ஸ் சென்டிமென்டாக முடிவது திருப்தி . இயக்குனர் சாம் ஆன்டன் ஒரு பொழுதுபோக்கான திரைப்படத்தை இப்பொங்கலுக்குத்தந்திருக்கிறார் . என்னைப்பொறுத்தவரை இந்த பொங்கல் வின்னர் டார்லிங் தான் .

தொடர்புடைய இடுகைகள்


காதல் காதல் – தொடர்கதை – நிறைவுப்பகுதி


அவள் எதற்காக கோவப்படுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய மதன் , ஏதேதோ முயற்சி செய்தும் அவளிடமிருக்கும் காரணத்தைக் கண்டறியமுடியவில்லை . இப்படியே இரு நாட்கள் முடிந்தது . அவள் கல்லூரியே கதி என்றிருந்தான் இன்றைய தினம் அவளிடம் பேசி என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும் என்றவாறு முடிவெடுத்தவன் அவள் கல்லூரியை விட்டு வரும் வழியில் நின்றுகொண்டிருந்தான் . அவளும் வந்தாள் . அவள் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் .

‘எங்கிட்ட ஏன் அம்மு பேசமாட்டேன்ற ?’ என்று குரல் தழுதழுத்தவாறே கேட்டான் . கண்கள் வழக்கம்போல கண்ணிருக்கு பழகியிருந்தது . காதலித்தால் அதிகம் சுரப்பது கண்ணிர் தான் . அவள் தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள் . அவளின் முகத்தைப்பிடித்து நிமிர்த்தினான் . அவளும் கண்ணிரை மறைக்கத்தான் தலைகுனிந்து நின்றிருந்தாள் . அவன் கண்களைப்பார்த்ததும் , அவளின் மனதினில் குடிகொண்டிருந்த சோகம் கண்களின் வழியே கண்ணீராக பீறிட்டது .

‘எங்கிட்ட எதுவும் கேட்காதடா. என்ன இப்பவே எங்கயாச்சும் கூட்டிட்டு போய்டு ’ என்று அழுதவாறே கூறினாள் .

‘நாம ஒன்னும் அனாத இல்லைடி . யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க . அதான் உங்க வீட்டுல ஓ.கே சொல்லிட்டாங்கள .’ என்றான் . உண்மையில் மையலின் தந்தை , மதனை அனுப்பிவைத்தபின் மாலினியை அழைத்து பேசியிருந்தார் . அவளும் பயந்துகொண்டு மையலுக்கு மதனின்மேல் இருக்கும் காதல் பற்றியும் , இவர்களைப்பிரிக்க நினைத்தால் ஓடிச்சென்றாவது திருமணம் செய்துகொள்வார்கள் என்பதனையும் தெரிவித்திருக்கிறாள் . இனி இவர்களிருவரும் பேசுவதைக்கண்காணிக்கும் பணியை மாலினியிடம் ஒப்படைத்துவிட்டு , மையலுக்கு அன்று இரவே மாப்பிள்ளைத்தேடும் பணியைத்தொடங்கியிருந்தார் . மையலோ தந்தையிடம் புரியவைக்க முயற்சிக்க ,

‘உனக்குப்பின்னாடி இவ வாழ்க்கைய நீ நினைச்சிப்பாத்தியாமா ? . தயவு செஞ்சு என் குடும்ப மானத்த அழிச்சிடாதமா ’ என்று அழுதார் . அவளும் அழுதுகொண்டே அவளின் தந்தையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள் . தன்னைப்பெற்றவருக்காக , தான் பெறாத தன் காதலனை கைவிட முயற்சித்தாள் . கையை மட்டும் பிடித்திருப்பவனாக இருந்தால் அவனை கைவிட்டிருக்கலாம் . ஆனால் அவளின் உயிரைப்பிடித்திருக்கும் மதனை எப்படி விட முடியும் ? இரண்டு நாட்களிலேயே அவளின் தந்தை பாசத்தை வென்றது அவளின் காதல் .

இப்போது மதனும் ஒருவாறு யோசித்தான் . இவளின் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மாத்திரம் புரிந்தது .

‘சரி  . கவலப்படாத அம்மு .நா பாத்துக்கறேன் ’ என்றவாறு அவளுடன் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினான் . இரண்டு நாட்களாய் துடிதுடித்துக்கொண்டிருந்தவன் இன்று ஆறுதலாய் இருந்தான் . மனதில் மாத்திரம் பயமும் , என்ன செய்யலாம் என்ற குழப்பமும் ஓடியது . பஸ் ஸ்டான்டில் காத்திருந்த கண்ணனிடம் கேட்டபின் ஒரு நல்ல யோசனை தோன்றியது . நாளை மறுநாள் நல்ல முகூர்த்த தினம் . அன்றைய காலைப்பொழுதில் ரிஜிஸ்டர் ஆபிஸ் அழைத்துச்சென்று அவளை மனம் புரிந்துகொள்ளலாம் . அதன்பின் அவள் வீட்டிலேயே அவள் இருக்கட்டும் . யார்வீட்டிலும் சொல்லவேண்டாம் . அடுத்தவாரம் வரவிருக்கும் கேம்பஸ் இன்டர்வியுவில் எப்படியாவது வேலையை வாங்கிவிட்டால் சாமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்தான் . அதை மையலிடமும் தெரிவித்தான் . மையல் ஓரளவு ஆறுதலடைந்தாள் . ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து இன்னொருத்தி பதறிக்கொண்டிருந்தாள் . இவர்களிருவருக்கும் மூன்று வருடமாய் இணைப்புப்பாலமாய் இருந்த மாலினி தான் . மையலின் தந்தை அன்றைய பொழுது இவளை மிரட்டியது இவளின் நினைவுக்கு வந்தது .

‘இங்க பாருமா . நீ செஞ்சத எல்லாம் உங்க வீட்டுல சொன்னா என்ன ஆகும்னு தெரியும் தான ?’ என்ற அவரின் குரல் அவளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஒருவேளை அவளின் வீட்டில் இதெல்லாம் தெரிந்தால் அவளின் படிப்பு பாதியில் நின்றுவிடும் . அதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்துவிடும் . அவளுக்கு அதில் துளிகூட உடன்பாடில்லை . அவள் வாழ்க்கையை நன்றாய் அனுபவிக்க நினைப்பவள் மாலினி .

அடுத்த இரு தினங்கள் மையல் அந்த பேருந்தில் வரவில்லை . அவளின் தோழிகளிடம் கேட்டபின் தான் தெரிந்தது , அவளின் தந்தையே கல்லூரிக்கு கொண்டுவந்துவிடுகிறார் என்று .எப்படியாவது அவளைப்பார்த்து பேசியாகவேண்டும் என்று அவளின் கல்லூரிக்குள் நுழைந்தான் . அவளின் வகுப்பறையின்வழியாக சைகை செய்து வெளியே வர சொன்னான் . அவளின் முகம் முற்றும் பொலிவிழந்து கிடந்தது . கணவனை இழந்த கைம்பெண் போல் காட்சியளித்தாள் .

‘என்ன ஆச்சு மையல் ?’

‘நமக்குள்ள செட் ஆகாது மதன் . நாம பிரிஞ்சிடலாம் .’

‘ஹேய் என்ன விளையாட்றியா ?’


‘ ப்ளீஸ் மதன் . ’ என்றாள் அழுதுகொண்டு . அவளின் அழும் முகத்தைப்பார்த்து அவனுக்கு கோவம் தான் வந்தது .

‘ஈஸியா வருதுனு உடனே அழ ஆரம்பிக்காத . எப்போப்பாரு அழுறது . இப்போ என்னடி உன் பிரச்சன . நா உன்ன விட்டு போகனுமா ?’

அவள் பதிலேதும் சொல்லவில்லை.  ஒருவாறு கோத்தைக்குறைத்தபடியே மென்மையாக அவளிடம் கூறினான் .

‘நா உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணத மறந்துட்டியா ? உன்ன விட்டு போற நாள் வந்துச்சுனா என் உயிர் என்ன விட்டு போய்டும் அம்மு .’

அவள் இன்னும் அதிகமாய் விசும்ப ஆரம்பித்தாள் .
‘எங்கப்பாவுக்கு இது பிடிக்கல ’

 ‘ உங்க அப்பன் பெரிய இவன் . அவனோட பாசம் உன்ன அப்படியே தடுக்குதா ?என்னோட அங்குளுக்குக்கூட தான் இது பிடிக்கல . அதுக்காக நா உன்ன விட்டுட்டேனா ?’

‘உனக்கு அப்பா இருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்று யோசிக்காமல் கூறினாள் . அவனோ தலையில் இடி இறங்கியதைப்போல் சிலையாய் நின்றான் . தன்னை ஏறத்தாழ அநாதை என்று கூறிவிட்டாளே என்பதை அவனால் ஜீரனிக்கமுடியவில்லை . அம்மா இல்லாத குறைய தீர்த்தவள் , இன்று நீ ஒரு அநாதை என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்குள் பெரும் துக்கத்தை வார்த்தது . கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது .

‘சரி ! நா உன்ன விட்டுப்போறதுதான் உனக்கு சந்தோஷம்னா , உன் சந்தோஷத்துக்காக நா போறேன் ’ என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் . அவனுக்குள் விவரிக்கமுடியாத துயரம் தாண்டவமாடியது . அவனின் தாய் மட்டும் இருந்திருந்தால் , அவளின் மடியினில் முகம்புதைத்து அழுதுகொண்டே இருந்திருப்பான் . அந்நேரத்தில் கண்ணன் கூட அங்கில்லை .  திக்கற்ற வழியினில் மனம் முழுமையும் துயரத்தில் ஆழ்த்தி , கால் போனபோக்கில் பயணிக்க ஆரம்பித்தான் . என்ன பெண் இவள் ? ஒருநாள் வேண்டும் என்கிறாள் , இன்னொருநாள் வேண்டாம் என்கிறாள் . சுயமாய் முடிவெடுக்கத்தெரியாத முட்டாள் இனத்தைச்சார்ந்தவள் . இவள் படித்துக்கிழித்தால் மட்டும் போதுமா ? வாழ்க்கைச்சார்ந்த ஒரு முக்கியமான முடிவினைக்கூட எடுக்கத்துணிவில்லாத பேடி . என்று ஆள்மனது அவனுக்குள் அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றது .

‘உனக்கு அப்பா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்ற குரலே அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது . பேருந்து நிலைத்தை அடைந்ததிலிருந்து எத்தனை சி்கரெட் அடித்திருப்பான் என்று சிகரெட்டுக்கேத்தெரியாது . அவன் மனதில் இருக்கும் துக்கத்தைத்தீர்க்க , நுரையீரலுக்குள் கார்பன் படிமத்தையும் பொலேனியம் 210 ஐயும் கிங்ஸின் வழியாக செலுத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு அப்போது தனிமையின் துணை தேவைப்பட்டது .

கல்லூரியில் இருந்த மையலுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது . அவ்வார்த்தையைக்கூறியபின் அவனை விட அதிகமாய் துன்புற்றவள் அவள்தான் . சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று ஒருவனை அவர் கொண்டுவந்து நிறுத்தியிறா விட்டால் இவ்வளவு தூரம் ஆகியிருக்காது . அன்று அவளின் தந்தைக்கு எதிராய் பெரும்போரேத்தொடுத்திருந்தாள் .

‘எனக்கு மதன் போதும் பா . நீங்கள்லாம் வேண்டாம் . அவனவிட்டு என்னால இருக்கமுடியாது’ என்று தீர்மானமாய் கூறினாள் . அடிக்க வந்த அவளின் தாயின் கையினைத்தடுத்தாள் . அதுவரைப்பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த அவளின் தந்தை அப்படி மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் , இந்நேரம் மதனின் கையால் தாலிகட்டிக்கொண்டு எங்கேனும் சென்றிருப்பாள் .

‘இங்க பாருடி .நீ மட்டும் அந்த பள்ளிப்பையனோட ஓடிப்போன , நாங்கலாம் குடும்பத்தோட தற்கொலைப்பண்ணிப்போம் ’ என்றால் அவளின் தாய் .

‘நீங்க வாழ்ந்து என்ன பண்ண போறிங்க ? பெத்த பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம  இருக்க நீங்கலாம் வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறிங்க ?’

இவளைவிட்டாள் இன்றே கிளம்பிவிடுவாள் என்று முடிவெடுத்த அவளின் தந்தை , யாரும் செய்யாத காரியத்தைத்துணிந்து செய்தார் . எழுந்து வேகமாக மையலிடம் வந்தவர் , சிறிதும் யோசிக்காமல் அவள் காலில் விழுந்து அழ ஆரம்பித்தார் . அதுவரை அவள் மனதில் இருந்த திடம் , சுக்குநூறாய் உடைந்துபோனது .

5.15 பேருந்தில் வழக்கம்போல முன்வாயில் சீட்டில் அவள் கன்னங்கள் வீங்கி அமர்ந்திருந்தாள் . படிக்கட்டில் தொங்கியவாறு தன் பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தான் மதன் . இருவருமே பேசிக்கொள்ளவில்லை . இன்னும் ஒரு நிமிடத்தில் மதனின் ஊர் வந்துவிடும் .

‘மதன்’ என்று அவளின் குரலுக்கு மெல்ல திரும்பினான் . கண்கள் சிவந்து , முகம் வெளிறிப்போயிருந்தான் .

‘எனக்கு யாரும் வேண்டாம் . நீ மட்டும் போதும் . இப்பவே என்ன எங்கயாவது கூட்டிட்டுப்போய்டு . ப்ளீஸ் ’  என்றாள் . அவள் முகம் கெஞ்சலின் உச்சத்தில் இருந்தது . அவன் மட்டும் சரி என்று சொன்னால் அப்போதே கிளம்பிவிடுவாள் . அவன் மௌனமாய் இருந்தான் . அருகில் மாலினியோ இன்று நடப்பதை வீட்டினுள் சொல்லக்காத்திருந்தாள் .

‘மதன்’ என்று மறுபடியும் அவள் அழைக்க திரும்பினான் . ஒருவாறு தீர்மானமாய் கூறினான் .

‘சாரி மையல் . எனக்கு என்னோட அங்குள் தான் முக்கியம் . அவரோட பெருமைய எனக்கு புரியவச்சதுக்கு தேங்ஸ் .’ என்று திரும்பினான் . அவள் கண்களில் நீர் ஓட ஆரம்பித்தது என்று சொல்லவா வேண்டும் . மதனின் ஊர் வந்துவிட்டது . பஸ் மெல்ல நிற்க ஆரம்பித்தது . மையல் அவனின் கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு இருந்தாள் . அவள் கிட்டத்தட்ட அவன் காலைப்பிடித்துக்கெஞ்சும் மனநிலையில் இருந்தாள் . அவனோ  தன் மனதில் இருக்கும் காதலை ஓரங்கட்டிவிட முயன்று கொண்டிருந்தான் . அவளே வருகிறாள் , பேசாமல் அவளோடு சென்றுவிடலாம் என்று மனம் ஒருபுறம் அலைபாய ஆரம்பித்தாலும் மறுபுறம் அவளின் தீச்சொற்களும் , முடிவெடுக்கத்தெரியாத சிந்தனையையும் நினைத்து பயந்தான் . கடைசியில் ஒருவாறாய் முடிவெடுத்து அவளின் உயிரை அவனின் கையிலிருந்து பிரித்துவிட்டான் .  உயிரற்ற பிணமாய் அவனுடைய ஊரில் இறங்கி முன்னே நடந்தான் . அவளின் சத்தமான அழுகுரல் பேருந்திலிருந்து வந்தது . இவனின் கண்களில் கண்ணீரும் மனதினுள் வலியும் ஒருசேர இருந்தது . பஸ் மெல்ல நகர்ந்தது .அவள் இவனைப்பார்த்து ‘மதன்’ என்று அழுதவாறே கத்திக்கொண்டு சென்றாள் . ஓடிப்போய் அவள் கண்களில் ஓடும் கண்ணீரைத்துடைக்க , இவனின் புலன்கள் துடிதுடித்தன .


                                *****
நான்கு வருடங்களுக்குப்பிறகு ,

‘செமயா படம் போகுதுல்ல ?’ என்றான் பிரபு .

‘ஆமா டூட் ’ என்று பதில் கூறியவனின் குரல் மதனுடையதுதான் . பிரபு , மதனின் ஊர்க்காரன் . கண்ணனுக்கும் தேவிக்கும் திருமணம் முடிந்தபின் , கண்ணன் இல்லறவாழ்க்கையில் பிசியானான் . அந்நேரத்தில் பிரபுதான் மதனுக்கு எல்லாமுமாக இருந்தான் .

‘தியேட்டர்ல வந்து இனிமே படமே பாக்கக்கூடாது டூட் .’ என்றான் பிரபு .

‘ஏன் டூட் ’

‘பின்ன . சன்டிவில போடற விளம்பரத்தவிட அதிகமாக போடுரானுங்க .’ என்று சொன்னான் .

வழக்கம்போல இடைவேளை நேரத்தில் செல்லை நோண்ட ஆரம்பித்திருந்தான் மதன் .

‘ஹே டூட் . இத நா உங்கிட்ட காட்டிட்டனா ?’ என்று ஒரு புகைப்படத்தைக்காட்டினான் மதன் .

‘இல்ல டூட் ’ என்றவாறே அதைப்பார்த்தான் . ஒரு அழகிய குழந்தை செரலாக் மற்றும் ஜூனியர் ஹார்லிக்ஸின் உதவியால் கொழுக் மொழுக் என்றிருந்தது .

‘நல்லா இருக்குடா பாப்பா ’ என்றான் பிரபு . தொடுதிரையைப்பிடித்து இழுக்க , அந்த படம் ஜூம் அவுட் ஆகி ஒரு குடும்பப்போட்டோவைக்காண்பித்தது . ஒரு ஆண்டி , அவளின் கையில் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தாள் .

‘யாரு டூட் இது ?’ என்றான் பிரபு .

‘என்னோட மையல்விழி டா . பார்த்தியா ? அவ பேபி எவ்ளோ அழகா இருக்கு . அப்படியே அவளோட கண்ணு . இவ பாரேன் . காலேஜ் படிக்கும்போது விலுவிலுனு இருந்தா . இப்போ என்னடானா நல்லா ஊறிட்டா .கல்யாணமானாலே பொண்ணுங்க பொதபொதன்னு ஆயிடுவாங்க போல .’ என்றான் மதன் .

‘டேய் . இவ மொவரைய எதுக்குடா வச்சிருக்க ? அறிவில்ல உனக்கு ?’ என்று கோவப்பட்டவாறே திட்டினான் பிரபு . அவனுக்கு மதனின் காதலைப்பற்றி நன்கு தெரியும் . அவள் ,. அவனைவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளையைத்திருமணம் செய்துகொண்டு சென்றால் என்பதனை அறிந்து அவனை விட அதிகமாய்த்துடித்தவன் . திருமணத்தன்று மதன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே ‘அவ என்னோட மையல்டா . கண்டிப்பா என்ன தேடி வருவா’ என்று கூறியதெல்லாம் இன்னும் ஞாபகத்திலிருந்தது .

பிரபுவின் கேள்விக்கு மதன் பதிலேதும் தெரிவிக்காமல் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான் . ஓரளவு கோவத்திலிருந்து வெளிவந்து அவனிடம் கேட்டான் .

‘நீ இப்படில்லாம் பன்றதுக்கு பேர் என்னனு தெரியுமா ?’ என்று கேட்டான் .

‘ம் . தெரியும் டூட் . காதல்’ என்று அவன் கூறும்போது தியேட்டரில் படம் போட்டிருந்தார்கள் . அந்த சத்தத்தில் பிரபுவுக்கு மதன் கூறியது காதில் விழவில்லை .

‘என்ன டூட் ’ என்று சத்தமாய் மீண்டும் கேட்டான் பிரபு . மீண்டும் கூறினான் மதன் , கொஞ்சம் சத்தமாக , மனதில் உணர்ச்சி பொங்க

‘காதல் ……………………………………………………………………………………. காதல் ’


--------- முற்றும் --------தொடர்புடைய கதைகள்

காதல் காதல் – தொடர்கதை – 7


‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .  

‘எப்படி தெரிஞ்சது ?’

இடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க  போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது .  மதனிடம் மையல் சிரித்து பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ , மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில் சொல்லிவிட்டான் .

‘யாரோ எங்க வீட்டுல சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .

‘அம்மு . அழாத ! இப்போ என்ன ? உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன் .’

‘அதெல்லாம் வேண்டாம் . என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள் .

‘ஹே ! லூசாடி நீ . நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’

‘எனக்கு பயமா இருக்குடா . ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’

‘ஒருநிமிஷம் பொறுமையா யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு நினைக்கிறேன் .  இப்போ இருக்க நிலைமைல எப்டிடி ? நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும் . அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான் . அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது .
வீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன் அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான் . அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் , எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான் .

‘அங்குள் ’

‘ம் ’

‘உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .

‘நா ஒரு பொண்ண மூனு வருஷமா லவ் பன்றேன் .’

என்னது மூனு வருஷமா என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .

‘அதுக்கு ?’

‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . ’

அவர் அவனின் கண்களை கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .

‘அவள கல்யாணம் பண்ணிக்கனுமா ?’

இவன் தலைகுனிந்தவாறே நின்றுகொண்டிருந்தான் .

‘உன் வயசு என்ன ? என்ன வேலைக்கு போற ? ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா ?’
என்ற அவரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள் தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .

‘பொண்ணு என்ன ஜாதி ?’

‘******* அங்குள் .’

‘செட் ஆகாது . விட்ரு .’

‘அங்குள் ’ என்று ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது . அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார் .

‘மீறி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன் பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு .’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் .  அவனை எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும் போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும் அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும் மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .

மதன் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல் இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே முடிந்திருக்கும் .  இனி யோசிக்க ஒன்றுமில்லை . கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின் வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .

கிளம்பும்முன் கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான் . அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான் . அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம் முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன் வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ?’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன் மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .

மதன் அவளின் வீட்டை அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .

‘அச்சோ ! இங்க எதுக்கு வந்திங்க ? ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக  அவளின் தந்தையின் குரல் வந்தது .

‘யாரும்மா ?’

‘யாருனு தெரிலப்பா  . ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின் அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின் வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .

‘யாருப்பா நீங்க ?’

‘சார் . நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் .’

‘உள்ள வாங்க ’ என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .

‘சொல்லுப்பா .’

‘சார் . எம்பேரு மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது .

‘நானும் உங்க பொண்ணும் லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .

மையலின் தந்தை எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் .

‘அம்மா . இங்க கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .

‘இந்த பையன நீ லவ் பன்றியாமா ?’ என்றார் அழுத்தமாக .

அவள் தொடர்ந்து மௌனம் சாதித்தாள் .

சரி தம்பி . நீங்க உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் .என்றவாறு அவர் எழுந்து நின்றார் .

‘சார் . எங்க வீட்ல ….’

‘என்னப்பா ?’

‘எங்க வீட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’

‘அப்றம் எப்டிப்பா ?என்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா ? சரி நீ வேல செய்ற ?’

‘படிச்சிட்ருக்கேன் சார் .பி.இ. பைனல் இயர் .’

‘ஓ ! நல்ல படிப்பு தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது . எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு , ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை . காலையில் வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் .  சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான் . ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச , அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான் இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே  அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம் கோவப்பட்டு கேட்டான் .

‘ஹே ஏன்டி பேசமாட்டேன்ற ?’
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .


‘எனக்கு உன்ன பிடிக்கல . இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’

இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Tuesday, 20 January 2015

காதல் காதல் – தொடர்கதை -5காத்திருப்பு என்பது ஒருசில நேரங்களில் இனிமையாகவும் , பல நேரங்களில் கடினமாகவும் இருக்கும் . ஆனால் மொத்தமாக ,  காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகவே இருக்கும் . அதுவும் காதலில் விழுந்தவர்களின் காத்திருப்பு என்பது அனல்மேல் துடிக்கும் புழுவைப்போல் தான் .விட்டில் பூச்சி ஒளியைத்தேடுவதுபோல் , இங்கு ஒரு கன்னியின் விழிகள் தன் காதலனைத்தேடிக்கொண்டிருக்கிறது . நேரம் ஆக ஆக அவள் இருதயம் துடிக்கும் வேகமும் அதிகரித்தது . எல்லாம் இந்த மாலினியால்தான் . அவள் மட்டும் இவ்விஷயத்தை மதனிடம் சொல்லாமல் இருந்திருந்தால் தனக்கு இந்நிலையே வந்திருக்காது என்று மனதினுள் துடிதுடித்தாள் மையல் . போனவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் இவள் ஆழ்ந்திருக்க , கூட நிற்கும் தோழிகளோ நேரமாகிறது என்று கூப்பாடு போட ஆரம்பித்தார்கள் . மனதை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு  பேருந்தினுள் ஏறிச்சென்றாள் .

இந்த மதனைப்பார்த்த நாளில் இருந்து தனது தூக்கத்தைத்தொலைத்தவளுக்கு , பெரும்பாலான இரவுகள் துக்கத்தையே கொடுத்திருந்தது . இன்றைய இரவு நீண்டதொரு இரவாய் , பல யுகங்கள் கடப்பதுபோல கடந்தது . பூமியில் ஒருவேளை கருந்துளைகள் இருந்திருந்தால் , அன்றைய காலைப்பொழுதிற்கு டைம்ட்ராவல் செய்து மூர்க்கத்தனமாக மிரட்டிய அந்த கரியன் பயணித்த பேருந்தில் ஏறாமல் இருந்திருப்பாள் . அவன் மிரட்டியதைக்காட்டிலும் , மதன் அவனிடம் சண்டைக்குச்சென்றதே பெருங்கவலையாய் அவளை வாட்டியெடுத்தது . அடுத்தநாள்  விடிந்தது . கவலை இன்னும் தீர்ந்தபாடில்லை . மதனைப்பார்த்தால் மட்டுமே மனதை விட்டு அந்த கவலையின் ரேகைகள் ஓடும் . எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று அவனைப்பார்த்து நன்றாகத்திட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவாறே பேருந்தில் ஏறினாள்  . நேற்று மிரட்டியவன் இன்று இல்லை .ஏதோ பெரிதாய் நடந்திருக்கவேண்டும் . தோழிகளின் அரட்டை அன்று அவளை ஈர்க்கவில்லை .சில நிமிடங்களில் மதனின் பஸ் ஸ்டாப் வந்தது . அதோ ஏறுகிறான் . பொறுக்கி . தெருவில் போய் சண்டையிடும் பொறுக்கி என்றவாறு மனதினுள் நினைத்தாள் . வரட்டும் , கவனித்துக்கொள்ளலாம் என்றவாறே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தாள் . அவனுடைய கன்னம் லேசாய் சிவந்திருந்தது . இரண்டுவிரல்கள் பதிந்த அடையாளம் தெரிந்தது ., அவளுக்கோ கோவம் பீறிட்டது . இப்போது மாத்திரம் நேற்று மிரட்டியவன் இருந்திருந்தாள் , அவனை சட்டையைப்பிடித்து உலுக்கி காட்டில் வசிக்கும் காளியைப்போல் ருத்ரநடனம் ஆடியிருப்பாள் .

மதன் படிக்கட்டிலேயே இருந்தான் . உள்ளே வரவில்லை . அவன் வருவான் என்று ஏக்கப்பார்வை பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது . நேரம் ஆக ஆக , பேருந்து நிலையத்துனுள் பேருந்து நுழைந்து தன் அப்போதைய பயணத்தை முடித்தது . மதன் வேகவேகமாய் இறங்கி அவன் கல்லூரிக்குச்செல்லும் பாதையினில் பயணிக்க ஆரம்பித்திருந்தான் . இவள் பேருந்து நின்றதும் அவன் சென்ற திசையினை நோக்கி பயணித்தாள் .

‘மதன்’ என்ற அவளின் குரல் கேட்டதும் சிலைபோல் அவன் நின்றான் . மெல்ல திரும்பியவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான் .

‘நேத்து என்ன ஆச்சு ?’

‘ஒன்னுமில்ல . அந்த பையன பாத்து பேசுனேன். தட்ஸ் ஆல் ’

‘கன்னத்துல என்ன  ?’

‘அதுவா ! அவன் கொஞ்சம் ஓவரா சீன் போட்டான் . பேசிட்ருக்கும்போதே கை வச்சான் . அப்பறம் நானும் கைவச்சேன் . சண்ட பெருசாயிடுச்சி . கடைசில அவன் ஓடிட்டான் . இனிமேல் உன் பக்கம் அவன் வரமாட்டான்  .’ என்று சொல்லிவிட்டு அவன் நேராய் கிளம்பினான் .

அவனைத்திட்ட வாயெடுத்தவள் அவன் செல்வதைப்பார்த்ததும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் . கோவமாய்த்திரும்பி தனக்காக காத்திருக்கும் தோழிகளை மதிக்காமல் அவர்களைக்கடந்து அவள் நேராய் கல்லூரி சென்றடைந்தாள் .

‘தேவி ! நீ சொன்னமாதிரியே அவ பஸ் ஸ்டான்ட்ல பேசுனா . மேடம் செம கோவத்துல இருந்தாங்க . நேத்து நைட் நீ சொன்னமாதிரியே , நடந்தத சொல்லிட்டு ஓடிவந்துட்டேன் . அங்க மட்டும் நின்னுருந்தா , அவ என்ன திட்டிதீத்துருப்பா . அப்பா ! அவ்வளவு கோவம் அவளுக்கு வரும்னு நா நினச்சுக்கூட பாக்கல . பஸ்ல வரும்போது அவள பாக்கனுமே ! நானே பயந்துட்டேன்டீ ’ என்றவாறு தேவியிடம் தெரிவித்தான் . நேற்றைய சண்டை முடிந்தபின் தேவியிடம் இதைப்பற்றி பேசியிருந்தான் . அவள்தான் இன்று அவளை கண்டுகொள்ளாதே ! அவளுக்கு உன்மேல் இருக்கும் ஈர்ப்பு , பயங்கர கோபத்தை உண்டாக்கியிருக்கும் என்றவாறெல்லாம் தெரிவித்திருந்தாள் . அன்றைய மாலை பேருந்தில் மையலின் அருகே நின்று கொண்டிருந்தான் . அவளின் கோவம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து காதல் மிகுந்திருப்பதை கண்ணால் கண்டான் .

‘எதுக்கு நீ பொறுக்கி மாதிரி சண்டைக்கு போன ?’

‘அவன் உன்ன திட்டிட்டான் . அதான் ’

‘ஓ ! திட்டுனா சண்டைக்கு போவிங்களா ?’

‘ஆமா !’

‘நீ கூடத்தான் முதல்நாளே என்ன திட்டுன ’ என்று அவள் கூறிமுடிக்கும்போது , மதனின் முழுக்கை சட்டையை மடித்தான் . அவனின்  முழுங்கைக்கு அருகில் சிகரெட்டால் உண்டாகியிருந்த காயம் தெரிந்தது .

‘ஹேய் ! என்னடா ஆச்சு ?’

‘அன்னைக்கு உன்ன திட்டுனப்போ மனசு கேட்காம , நானே சூடு வச்சிகிட்டேன் .’

‘லூசாடா நீ ! அறிவில்ல உனக்கு …’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள் . அவள் திட்டிமுடிக்கவும் அவன் ஊரைப்பேருந்து நெருங்கவும் சரியாய் இருந்தது . அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான் .
‘என்ன இது ? லவ் லெட்டரா ?’ என்று சிறிய கோவப்பார்வை பார்த்தாள் .

‘அதெல்லாம் இல்ல . என்னோட போன் நம்பர் . ’

‘எதுக்கு எங்கிட்ட கொடுக்கற ?’

‘உங்கிட்ட பேசலாம்னு தான் .’

‘எங்கிட்ட மொபைல் இல்ல .’

‘இந்த காலத்துப்பொண்ணுங்க கிட்ட வெட்கம்கூட இல்லாம இருக்கும் . மொபைல் இல்லாம இருக்காது .’

‘எங்கிட்ட போன் இல்லடா . அதுவுமில்லாம எங்கிட்ட ப்ரபோசல் பண்ணக்கூடாதுனு நா உங்கிட்ட ஆல்ரெடி சொல்லிருக்கேன் . அப்படி ஏதாச்சும் நீ ட்ரை பண்ண , உன்னவிட்டு போய்டுவேன்னும் சொல்லிருக்கேன் . இதுக்குமேல உன் இஷ்டம் ’ என்றாள் . அவளின் பேச்சுகளை காதில் போட்டுக்கொள்ளாமல் பேருந்தில் இருந்து இறங்கினான் . உண்மையாகவே அவளிடம் போன்  இல்லையோ ? நாம் புதிதாய் ஒரு போன் வாங்கிக்கொடுத்துவிடவேண்டியதுதான் . அடடா ? போன் வாங்க  காசு ? சரி அதான் ஸ்காலர்ஷிப் பணம் வருமே! என்றவாறே வீட்டினுள் நுழைந்தான் . இரவெல்லாம் அவள் அவனைப்பொறுக்கி என்று செல்லமாய்த்திட்டியதே ஞாபகம் வந்தது . உருண்டு புரண்டு படுக்க முயற்சித்தவனை தொல்லை செய்வதற்கென்றே போன் வந்தது . கண்ணன் தான் லைனில் .

‘சொல்லு மச்சி .’

‘மச்சி ! நாளைக்கு காலேஜ் போலாமா இல்ல கட் அடிக்கலாமா ?’

‘அத காலைல முடிவு பண்ணிக்கலாம் மச்சி’ என்றவாறு போனை கட் செய்தான் .  உடனே புது எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது .

‘ஹலோ ’ என்றவனுக்கு ஒரு பெண்குரல் கேட்டது .

‘உங்க நம்பர் ஒரு போட்டியில வின் பண்ணிருக்கு . கோவா போற சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ்டர் மதன் ’ என்று அவள் சொல்ல , கடுப்பாகி போனை அணைத்தான் .  மீண்டும் ஒரு அழைப்பு வர அட்டன்ட் செய்தான் .

‘ஹே ! நா மையல் பேசுறேன் . இதுதான் என்னோட நம்பர் . திருப்பி கால் , மெசேஜ் எதுவும் பண்ணிடாத . பை ’ என்றவாறு வேகவேகமாக கூறிவிட்டு போனை கட் செய்தாள் . உடனே அவளின் நம்பருக்கு போன் செய்தான் . கடைசி ரிங்  அடித்தபின்பு அவள் போன் எடுத்தாள் .

‘ஹேய் ! நான்தான் சொல்லிருந்தேன்ல . எதுக்கு கால் பண்ண ?’
செல்லமாக கோவித்தபடி , சிணுங்கியவாறே பேசினாள் .

‘ஏன்டி ? போன் பண்ணாதனு சொல்றதுக்கு யாராச்சும் போன் பண்ணுவாங்களா ? ’

‘சரி . சரி . ஏதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு . நா படிக்க போகனும் ’

‘ஐ லவ் யூ டி .’இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்காதல் காதல் – தொடர்கதை – 6


‘ஐ லவ் யூ டி’ என்ற அவனின் ஹஸ்கியான குரலைக்கேட்டதும் சிலவிநாடிகள் அமைதியாய் இருந்தாள் . ஒருவித குறும்புடன் நக்கலும் சேர்த்து ஒலிக்கும்படி அவனிடம் கேட்டாள் .

‘இத சொல்றதுக்குத்தான் போன் பண்ணியா ?’

‘இன்னும் சொல்ல நிறைய இருக்கு .’

‘எங்க சொல்லு . கேட்கலாம் ’ என்று ஆவலோடு அவள் கேட்டது இவனுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடும் . எழுந்து வீட்டை விட்டு தெருவுக்கு வந்தான் . அவனுடைய ஊர் ஒரு கிராமம் என்பதால் வீடுகள் தள்ளி , தள்ளி தூரமாய்த்தானிருக்கும் . ஒரு ஒத்தையடி பாதையில் இரவு பத்துமணிக்கு நடந்துகொண்டே பேச ஆரம்பித்தான் . அவனுடைய பேச்சு முடிவதற்கு முக்கிய காரணமாய் அவனுடைய செல்போன் பேட்டரி இருந்தது . அது மட்டும் ஆஃப் ஆகாமல் இருந்திருந்தால் , மதன் இன்னும் எவ்வளவு நேரம் பேசுவான் என்பது அவனுக்கேத்தெரிந்திருகாது . இரவு 1 மணிக்கு மீண்டும் தன் தனியறைக்கு வந்து படுத்தான் . அன்றைய இரவைப்போல் நிம்மதியான ஒரு இரவினை அவனால் அனுபவித்திருக்கமுடியாது . உலகம் அழிந்தாலும் சிரித்துக்கொண்டே இறக்கத்துணிந்துவிட்டான் . அவனுக்கு அவளிடம் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்னவென்றால் , அவ்வளவு நேரம் பேசியும் அவள் ஒருமுறைக்கூட இவனிடம் தன் காதலை சொல்லவில்லை . அதன்பின்  காலையில் சந்தோஷமான பேச்சும் , மாலையில் ஒரு சின்ன சண்டையும் , அதை சமாளிக்க இரவினில் பேச்சுமென பேசிப்பேசியே பொழுதுகள் கழிந்தன . அவள் கூறுவதைச்செய்யத்தான் , தான் இந்த உலகில் பிறந்ததாய் நினைக்கொண்டான் . அவளும் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே ஒரு மகன் கிடைத்துவிட்டான் என்பதுபோல , மதனை சீராட்டி அன்பமுதம் காட்டி அவனுடன் வாழ்ந்தாள் . அவர்களிருவருக்கும் சண்டை என்பது ஒன்று வருவதற்கு முக்கிய காரணமாய் இருந்தது ஒரே விஷயம்தான் .

‘தம் அடிக்காதனு எத்தன தடவ சொல்றேன் . கேட்க மாட்டியா ?’ என்று ஆரம்பத்தில் சண்டையிட்டவள் , இவன் திருந்தவே மாட்டான் என்றுணர்ந்து ‘சரி ! ஒருநாளை ஒன்னே ஒன்னு தான் . என்மேல பிராமிஸ் பண்ணு’ என்றவரைக்கும் வந்துவிட்டாள் . ஆனால் அவன் சத்தியம் செய்யமாட்டான் .
‘ஹே ! எனக்குனு நா நினைக்கிற ஒரு விஷயத்துல இதுவும் ஒன்னுடி . உனக்காக என்னால நிறுத்தமுடியாது . நீ கம்பல் பன்றத முதல்ல நிறுத்து . எனக்கா தோனுச்சுனா நா விட்டுடுவேன் ’ என்பான் . உடனே அவளுக்கு முகம் கோணிக்கும் . பஸ்ஸில் அதைப்பற்றி தொடர்ந்து பேசமாட்டாள் . வீட்டிற்கு வந்ததும் போன் செய்துஅவனை கடையோ கடையென்று கடைவாள் . அவனும் சமாதானப்படுத்துவான் . கடைசியில் இருவரும் உருகிக்கொள்வார்கள் . இருவரும் காதலித்து ஒரு வருடம் தாண்டியபின்பும் இன்னும் அவள் காதலை அவனிடம் சொல்லவில்லை . அவள் உதட்டிலிருந்து அதைக்கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவனும் ஏதேதோ தகிடுதத்தம் வேலைகள் எல்லாம் செய்து பார்த்தான் . அவள் மசியவே இல்லை .

அவ்வப்போது மையலிடம் ஒருசிலர் ப்ரபோசல் செய்வார்கள் . மதன் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு சிரிப்பான் . ‘ஹே ! நல்ல பையன்டி . உனக்காக உயிரையும் கொடுப்பான் . பாவம் அக்சப்ட் பண்ணிக்கோடி’ என்று அவளை ஓட்டுவான் . அச்சமயங்களில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வரும் . அந்த கோவத்தையெல்லாம் தனிமையில் தான் அவனிடம் காட்டுவாள் . நடுவே அவளின் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண மறந்து , அவளிடம் அடியும் வாங்கிக்கட்டிக்கொண்டான் .

அவளின் அறிவுரைப்படி இருந்த அரியர்ஸ் எல்லாம் கிளீன் செய்தான் மதன் . ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் கொஞ்சமாய் டொனேஷனும் ரெக்கமென்டேசனுடனும் சீட் வாங்கி சேர்ந்துவிட்டான் . கண்ணன் மற்றும் தேவியும் அதே கல்லூரியில் சேர்ந்தார்கள் . கல்லூரிக்கு செல்கிறானோ இல்லையோ ! தினமும் மையலைப்பார்ப்பதற்கே கிளம்பி விடுவான் . ஒருநாள் காலை மையல் ‘எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டுப்போடா’ என்று ஆசையுடன் கேட்க , அதுவரை ஒருநாள் கூட கட் அடித்துவிட்டு வராத அவளே கேட்கிறாளே என்ற சந்தோஷத்தில் முதலில் ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குக் கூட்டிச்சென்றான் . அவனுடன் ஒன்றுசேர்ந்து அமர்ந்தாள் . அவளுக்குப்பிடித்த ஸ்ட்ராபெரி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில் , மதனின் கையைப்பிடித்தவாறே அவன் தோளில் தலை சாய்ந்தாள் . கைவிரலைப்பிடித்தாலே கதறும் அவள் , இன்று மதனின் தோளில் சாய்ந்திருப்பது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது . ஐஸ்கிரிம் வந்ததும் அவளே அவனுக்கு ஊட்டினாள் .

‘என்னடி ஆச்சு உனக்கு ? இன்னைக்கு ரொம்ப பாசத்த காட்ற ?’

‘ஐ லவ் யூ டா ’ என்றாள் . இரண்டு வருடங்களுக்குப்பிறகு இன்று தான் அவனிடம் அவள் வாய் திறந்து ஐ லவ் யூ என்று கூறுகிறாள் . அவளின் காதலை நன்றாய் மதன் உணர்ந்திருந்தாலும், அவளிடமிருந்து அதைக்கேட்கும்போது இதுவரை அவன் கேட்ட பாடல்களிலேயே இனிமையானதாக ஒலித்தது . ஐஸ்கிரிமை ஊட்டிவிட்ட பின் படத்திற்கு கூட்டிச்செல்லுமாறு அவள் கேட்க , தியேட்டரை அடைந்தார்கள் . வழக்கம்போல காதலர்களை ஆதரிக்கும் கார்னர் சீட்டுகளில் அடைக்கலம் அடைந்தனர் . படம் ஓட ஆரம்பித்ததும் அவன்  கையைப்பிடித்தபடியே அவன் தோளில் சாய்ந்தாள் .

‘என்ன கிஸ் பண்ணனும்னு உனக்கு ஒருநாள் கூட தோனுனதே இல்லையாடா ?’ என்றாள் ஏக்கமாக . அவளின் பார்வையில் காதல் கொந்தளித்தது . அது காமத்தைத்தாண்டிய பார்வை .  காதலின் தவிப்பால் முத்தம் கேட்கும் பார்வை .

‘என் மனசுக்குள்ள உன்ன கிஸ் பண்ணாத நாளே இல்லடி  ’ என்று மெல்லிய புன்னகையுடன் சிரித்தான் .

‘எனக்கு ஒரு கிஸ் வேணும்டா . ப்ளீஸ் ’ என்றாள் ஏக்கமாக . உண்மையான காதலை அனுபவித்தவர்களுக்கு அந்த முத்தம் எத்தகைய உணர்வு என்று தெரியும் . அவள் தன்னுடைய உடல்தாகத்தை அணைக்க அவ்விடத்தில் முத்தத்தைக்கேட்கவில்லை . அவனோ , அவள் கேட்டதும் இன்பஅதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் . அவளின் இதழைப்பற்றிக்கொள்ள  , அவனின் உதடுகள் துடித்தன . அவனின் கண்கள் , அவளின் பாதி சொருகிய விழிகளைப்பார்த்து உருகியது . மூச்சுக்காற்று மெல்ல உள்ளே சென்று பெருமூச்சாய் வெளிவந்தது . குரல் தழுதழுத்தவாறே அவளிடம் மென்மையாக பேச ஆரம்பித்தான் .

‘இல்ல மையல் . கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன எச்சப்பண்ண எனக்குஇஷ்டமில்லடி . நீ முழுசா எனக்கு வேணும். நம்மோட முதல்முத்தத்துக்காகத்தான் நா வாழ்க்கைல போராடிட்டுருக்கேன் . அது திருட்டுத்தனமா  கிடைக்கறதுல எனக்கு இஷ்டமில்லடி . நீ எனக்குனு மட்டும் ஆன பின்னாடி , முழு உரிமையோட உன்ன தொடனும் .   ’ என்றான் காதலோடு .

அவன் தோளைப்பற்றியிருந்த அவளின் கைகள் இருக்கத்தைக்காட்டியது . அவனை அவள் இறுகப்பற்றிக்கொண்டாள் . அவளின் முகம் அவனின் தோளின் மேல் அழுத்தமாய் பதிந்தது . சூடான கண்ணீர் அவன் தோளில் பட்டதும் ‘அம்மு ! என்ன ஆச்சு ?’ என்று கவலையுடன் அவன் கேட்டான் . மெல்லமாய் அவன் முகம் நோக்கி தன் தலையைத்தூக்கியவளின் கண்கள் கலங்கியவாறு இருந்தது . ‘அம்மு’ என்று மறுபடியும் அவன் அழைக்க ,

‘ஏன்டா என்ன இவ்ளோ லவ் பண்ற ? ப்ளீஸ் . என்ன இவ்ளோ அதிகமா லவ் பண்ணாத . நாந்தான் உன்ன அதிகமா லவ் பண்ணனும் .  என்ன தோக்கடிச்சிடாதடா’ என்று அழுதவாறே கூறினாள் . மதனின் கண்களும் கொஞ்சம் கொஞ்சமாய்க்கண்ணீரில் நனைய , அவனின் கைகள் மையலின் விழிகளில் ஓடிய கண்ணீரைத்துடைத்தது . அவள் அப்படியே இவனின் தோளின்மேல் சாய்ந்து கிறங்கிக்கிடந்தாள் . இவனோ அவளின் தலையின்மீது தன்னுடைய கன்னங்களை வைத்து கண்களை மூடியவாறு அவளின் அருகாமையை உணர்ந்தான் . அங்கு உண்மையாகவே ஈருடல்களில் ஓருயிர் உலவிக்கொண்டிருந்தது .


இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்