Friday, 29 May 2015

மாஸ் - சினிமா விமர்சனம்
இது பேய்ப்படம் என்று பலர் கூறியபோது நான் நம்பவில்லை . வெங்கட்பிரபாவது  பேய்ப்படங்கள் எடுப்பதாவது . மனிதர் ஜாலியாக படம் எடுத்து பார்க்கவருபவர்களையும் ஜாலியாக இருக்கவைத்து , நிம்மதியாக அனுப்புவதில் வல்லவர் . அவர் போய் பேய்ப்படம் எடுக்கிறாரா ? அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா ? எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா ? தலைவர் கதையினுள் சென்டிமென்ட் காட்சிகளையும் புகுத்தி, தன் பழையபாணியிலிருந்து கொசம் விலகி எடுத்திருக்கிறார் என்பது படம் முடிந்தபோது எனக்கு தோன்றிய உணர்வு .

மாஸ் எனும் மாசில்லாமணி ஒரு அநாதை. அவருடைய நண்பர் , வழக்கம்போல நம்ம ப்ரேம்ஜீ தான் .இருவரும் சிலபல திருட்டுவேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் . மாசுக்கு முதல்பார்வையிலேயே நயன்மீது காதல் வந்துவிடுகிறது . ஒருமுறை ஒரு பெரிய கையின் பணத்தை அடித்து மாசும் , அவரது நண்பர் ஜெட்லியும் மாட்டிக்கொள்கிறார்கள் . தப்பிக்கும்போது ஏற்படும் விபத்தில் ப்ரேம்ஜீ இறந்துவிட , மாசுக்கு இறந்தவர்களெல்லாம் தெரிய ஆரம்பிக்கிறார்கள் (THE SIXTH SENSE நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ) . இறந்தவர்களிடம் பேசும் மாஸ் , அவர்களுக்குத் தேவையானவற்றை செய்வதாக நம்பவைத்து அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார் . அதாவது ஆவிகளை ஒவ்வொரு வீடாய் அனுப்பி , அவ்வீட்டிலுள்ளோர்களுக்கு தொல்லைக்கொடுத்து , ஆவி ஓட்டும் ஆளாக தானே என்ட்ரி ஆகி , ஆவிகளை விரட்டுவது போல் நடித்து பணம் சம்பாதிக்கிறார் . ஒருமுறை ஒரு வீட்டினுள் ஆவி விரட்ட செல்லும்போது , அங்கே சூர்யாவை போல இருக்கும் ஆவியை சந்திக்கிறார் . அந்த ஆவியின் பெயர் சக்தி . அது மாசியைப்பற்றி எல்லாவற்றையும் கூறுகிறது . மேலும் தான் சொல்லும் இடத்திற்கு சென்றால் 75 கோடி பணம் கிடைக்கும் என நம்பவைத்து அழைத்துச்சென்று மாசிக்குத் தெரியாமலே கொலை செய்யவைக்கிறது . இதேபோல் இன்னொருவனையும் கொலைசெய்யவைக்கிறது . யார் அந்த சக்தி ? மாஸ் கொலை செய்தவர்கள் யார் ? மாஸை நம்பி வந்த ஆவிகளின் நிலை என்ன ? மாஸின் திருட்டுத்தனத்தை அறிந்து பிரிந்துபோன காதலியின் நிலை என்ன ? என்பதெல்லாம் படத்தினைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

முதலில் படத்தின் குறைகளை பார்த்துவிடலாம் . முதல்குறை சூர்யா - நயன்தாரா காதல் போர்ஷன் . படத்திற்கும் அதற்கும் துளி சம்பந்தமுமில்லை எனினும் தேவ்வையில்லாமல் வலுக்கட்டாயமாக உள்நுழைத்திருக்கிறார் வெங்கட் . மங்காத்தா படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு ரோல் கொடுத்து , அந்த ரோலை கதையுடன் சம்பந்தப்படுத்தியவர் , இப்படத்தில் ஏனோ படுகோட்டை விட்டுவிட்டார் . தேவையில்லாமல் 20 நிமிடம் வேஸ்ட் .மேலும் அந்த  காதல் காட்சிகளெல்லாம் படுதிராபை . கோவா , சென்னைபோன்ற படங்களில் காதலை அழகாக காட்சிப்படுத்திய வெங்கட்பிரபா இப்படி கோட்டைவிட்டார் என்ற சந்தேகம் மனதில் எழாமல் இல்லை .

அடுத்து பிரேம்ஜீ . வழக்கம்போல வழவழ கொழகொழ கேரக்டர் ; அதே மேனரிசம் ; அதே மாடுலேசன் ; அதே டயலாக் . முடியல பாஸ் .

பாராட்டுக்குரியவர்கள் என்றால் முதல் ஆள் யுவன் . இரண்டு RD ராஜசேகரின் கேமரா , மூன்று பிரவினின் எடிட்டிங் , சி.ஜீ . பாடல்கள் அனைத்தும் அட்டகாசமாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது .

மொத்தத்தில் ஜாலியாக ொரு சீரியஸ்கதை இந்த மாஸ் . பக்கா மாஸ் இல்லையெனினும் நல்ல கமர்சியல் ஐட்டமாக வெளிவந்துள்ளது . வெங்கட் பிரபுவின்  இந்த சிக்ஸர் , பார்டரில் விழுந்துள்ளது .

டைட்டில் மாசு தான ?னு உங்களுக்கு டவுட் வரும் . என்ன செய்ய ? தினம் ஒரு டைட்டிலை இத்திரைப்படத்திற்கு வைத்துக்கொண்டிருப்பதால் பழைய டைட்டிலே இருக்கட்டும் என்று நானே வைத்துவிட்டேன் .


Wednesday, 27 May 2015

FLIGHT OF PHOENIX- சினிமா விமர்சனம்உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பயணம் என்றால் சத்தியமாக அது வான்வழிப்பயணம் தான் . இன்னமும் என்னதான் பந்தாவாக விமானத்தில் ஏறினாலும் , டேக் ஆஃப் ஆகும் போது நம் உயிர் டேக் ஆஃப் ஆகிவிடக்கூடாதென்று காயத்ரி மந்திரத்தையும் கந்த சஷ்டி கவசத்தையும் , பைபிளையும் மனதினுள் நினைத்துக்கொள்ளும் பலர் இருக்கின்றனர் . ரைட் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ப்ளைட்டுக்கு எலுமிச்சை பழி கொடுக்காததாலோ என்னவோ இன்னும் விமானப்பயணத்தால் பலவிதமான விபத்துகள் நடந்தவாறே இருக்கின்றன . நீர் ,நிலம் . நெருப்பு , காற்று ஆகியவற்றால் அதுவரை மக்களைக் கொத்துகொத்தாக கொலைசெய்துகொண்டிருந்த ஹாலிவுட் இயக்குநர்களுக்கு   விமானங்கள் என்ற பெயரில் வரப்பிரசாதம் கிடைக்க அதன்வழியேயும் முடிந்தவரை மக்களைக்கொன்று வருகிறார்கள் . விமானக்கடத்தல் , மோசமான வானிலையில் சிக்கிக்கொள்ளும் விமானங்கள் , விமானத்தில் விஷஜந்து என்ற மேட்களையெல்லாம் கொண்டு அந்த தம்மாத்துண்டு விமானத்தை வைத்து படத்தை எடுத்துவிடுகிறார்கள் . 1972 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 2000 –க்கும் மேற்பட்டோர் விமான விபத்தில் இறந்துள்ளார்கள் . மலேசிய விமானம் , ஆல்ப்ஸ் மலையில் நொறுங்கிய விமானம் என்று கடந்த ஒரு வருடத்துள் நமக்குத்தெரிந்தே இருபெரும் விமானவிபத்துகள் நடந்துள்ளன .

விமானப்பயணத்தில் பறவைகளின் தாக்குதல் , விமானத்தின் பாகங்கள் தீப்பிடித்தல் , மோசமான வானிலை , கார்கோ எடை அதிகமாயிருத்தல் , விமானியின் கவனக்குறைவு,  எரிபொருள் பற்றாக்குறை , மின்னல் ,  விமான வடிவமைப்பு போன்ற பலகாரணங்களால் விபத்து ஏற்படுகிறது . கடந்த 10 ஆண்டுகளில் 400 – க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நடந்திருக்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ? இவ்வளவு விபத்துகள்ள நடைபெறுவதாலோ என்னவோ ராபர்ட் செமிக்கிஸ் கூட தன்னுடைய முந்தைய படத்தில் இதை ஒரு முக்கிய அங்கமாக வைத்திருந்தார் . வெறும் ப்ளைட் ஹைஜாக்கை மட்டும் மையமாக வைக்காமல் , வேறுபலகாரணங்களை வைத்து , ப்ளைட்டுக்குள்ளேயே ஏதேதோ கதையெல்லாம் கூறி படமெடுத்துள்ளார்கள் ஹாலிவுட்டின் பல இயக்குநர்கள் .  திரில்லராக வெளிவந்த FLIGHT PLAN திரைப்படத்தில் தன்னுடன் வந்த மகளைக் காணவில்லை என ஹீரோயின் புலம்ப , உங்களுடன் மகளே வரவில்லை என்று விமானத்திலுள்ளவர்கள் கூற அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என நம்மை கொத்தாக படத்துடன் ஒன்றவைத்திருப்பார்கள் .  SNAKE AT THE PLANE எனும் திரைப்படத்தில் விமானத்துக்குள் தப்பிய பாம்புகளின் அட்டகாசம் என்றெல்லாம் பில்டப் செய்து அட்டகாசமான வசூலை வாரிக்குவித்தனர் . தமிழில் விமானக்கடத்தலை மையமாக வைத்து பெரியளவில் வெற்றி பெற்ற படமென்றால் பயணம் திரைப்படத்தைக் கூறலாம் . தாயகம் படத்தில் கூட ஓரளவு தத்ரூபமான ப்ளைட் ஹைஜாக்கையும் தொடர்ந்து நடக்கும் க்ராஷ்ஷையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள் . டாம் ஹேங்ஸின் கேஸ்ட் அவே திரைப்படம் கூட மோசமான வானிலையால் ஏற்படும் விபத்தில் தப்பிப்பிழைக்கும் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படி சர்வைவல் செய்கிறான் என்பதனையே அடிப்படையாக கொண்டிருக்கும் .

உங்களுக்கு கேஸ்ட் அவே திரைப்படம் பிடிக்குமெனில் இத்திரைப்படமும் பிடிக்கும் . ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது தெரியுமா ? உடனே தார் என்றோ சஹாரா என்றோ உங்களின் பொது அறிவைக்கொட்ட வேண்டாம் . மங்கோலியப்பாலைவனம் என்றழைக்கப்படும் கோபி பாலைவனம் தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது .  கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவை உடைய இப்பாலைவனம் உருவானது நம்முடைய இமயமலையால் தான் . வரும் மழையினை தன் உயரத்தால் தடுத்த இமயமலை , வெறும் வெப்பக் காற்றை அங்கே அனுப்பிவிடும் . இந்த கோபி பாலைவனத்திலிருந்து வந்தவர்கள் தான் நம்மையெல்லாம் 800 வருடங்களாக ஆண்ட முகலாயர்கள் . இந்த பாலைவனத்தின் சிறப்பு என்னவென்றால் இரவு நேரங்களில் 0 டிகிரியையும் குறைத்து உறையவிடும் அளவிற்கு குளிரும் , பகல்நேரத்தில் வேகவைக்காமலேயே மசாலா பூசிய கோழியை சாப்பிடும் அளவிற்கு கொடூர உஷ்ணமுமாக மாறிவிடும் . இந்த நிலை போதாதென்று அமெரிக்காவில் வீசும் புயல்களைப்போல் வலுவான பூயல்களும் உருவாகும் . ஆனால் இது மணற்புயல் . 

சரி , கண்ட குப்பையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு படத்தினைப் பற்றி பார்க்கலாம் . இத்திரைப்படம் 1964 –ல் இதே பெயரில் வெளிவந்த நாவலைத் தழுவி 1965 –ல் இப்படத்தின் பெயரையே வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ரீமேக் .  புரியவில்லையா ? 1964 –ல் FLIGHT OF PHOENIX எனும் நாவலை எல்லஸ்டன் ட்ரேவர் என்பவர் எழுதினார் . நம் ஹாலிவுட்காரர்கள்தான் எவன் நாவல் போடுவான்னு பார்த்துக்கொண்டிருப்பார்களே ! விடுவார்களா ? அடுத்த ஆண்டே இதே பெயரில் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டு வங்கிக்குச் சென்றார்கள் . அதன்பின் 2004 – ம் ஆண்டு ஸ்பில்பெர்க்கே கதையில்லாமல் தவிர்த்துக்கொண்டிருந்த காலம் . அக்காலத்தில் விழிபிதுங்கிய ஸ்டுடியோக்கள் , ஏற்கனவே எடுத்த திரைப்படத்தையே மீண்டும் தற்காலத்திற்கேற்றவாறு பில்லாவாக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள் . அப்படி 20TH CENTURY FOX – க்கு மாட்டியதுதான் இத்திரைப்படம் . பழைய படத்தின் திரைக்கதையைத் தூசு தட்டி சரிபார்க்கும் வேலையை எட்வர்ட் எடுத்துக்கொள்ள , படம்பிடிக்க ப்ரென்டனை அப்பாய்ன்ட் செய்துவிட்டு இத்திரைப்படத்தை இயக்க ஜான்மூரிடம் சென்று நின்றார்கள் . அப்போது தலைவர் பிகைன்ட் எனிமி லைன்ஸ் திரைப்படத்தினால் உலகமெங்கும் புகழ்பெற்றிருந்தார் . அதுவும் சர்வைவல் கான்சப்ட் , இதுவும் சர்வைவல் கான்செப்ட் என்பதால் சிறிது தயங்கியபடியே ஜான் ஒப்புக்கொண்டார் ( இவரின் மற்ற திரைப்படங்களின் பெயரைச் சொன்னால் கண்டிப்பாக உங்களுக்கு இவரைத்தெரிந்திருக்க வாய்ப்புண்டு . ஓமன் , டைஹார்டின் ஐந்தாம் பகுதி  போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான் ). அதன்பின் 2004 –ல் வெளிவந்து வசூலை இத்திரைப்படம் அள்ளினாலும் விமர்சகர்கள் கிழிகிழயென்று கிழித்துத்தொங்கப்போட்டு விட்டார்கள் . எல்லாரும் கூறிய காரணம் ஒரிஜனலின் சுவாரஸ்யமும் தாக்கமும் இத்திரைப்படத்தில் இல்லை என்பதுதான் . அதனால் இப்போதே கூறிவிடுகிறேன் . யாராவது 1965 –ல் வெளிவந்திருந்த ப்ளைட் ஆஃப் பீனிக்ஸ் பார்த்திருந்தால் இத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டாம் . நான் அத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்பதால் இத்திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது .

படத்தின் கதைப்படி மங்கோலியப் பாலைவனத்தில் உபயோகமற்ற ஒரு எண்ணெய்கிணற்றைவிட்டு (கிணறுனா கிணறே கிடையாது . பெட்ரோல் பங்க் மாதிரி தான் இருக்கும் ) கிளம்பும்படி கெல்லி ஜான்சன் குழுவிற்கு உத்தரவு வருகிறது . அவர்களின் குழுவை அழைத்துச்செல்ல  கேப்டன்  ஃப்ராங்க் மற்றும் அவரது உதவியாளர் AJ உடன் அவர்களை  அழைத்துச்செல்ல வருகிறார் . கெல்லியின் குழுவை அழைத்துச் செல்லும்  வழியில் பாலைவனமணற்புயல் வர அதில் சிக்கி விமானம் கட்டுப்பாட்டை இழந்து நடு பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறது . கேப்டனோ உதவி வரும்வரை காத்திருக்கலாம் என்று கூற , உதவி எதுவும் வராது என்று கெல்லி கூறுகிறார் . பின் இருக்கும் நீரை  வைத்து இரண்டுநாட்களைக் கடத்துகிறார்கள் . உதவி எதுவும் வராது என்று தெரிந்தபின்னர் எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும்போது கெல்லியின் குழுவில் இருக்கும் எல்லியாட் என்பவன் தான் விமானத்தயாரிப்பில் பணிபுரிந்ததாகவும் , அந்த அனுபவத்தைக்கொண்டு இருக்கும் விமானப்பகுதிகளை வைத்து புதுவிமானம் தயாரிக்கலாம் என்றும் கூறுகிறான் . கூட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்ப அதையெல்லாம் சமாளித்து விமானத்தின் மீந்த பாகங்களை வைத்து புது விமானம் உருவாக்க ஆரம்பிக்கிறார்கள் . இந்நேரத்தில் பாலைவனக்கொள்ளையர் கும்பல் வர , அவர்களுடன் நடக்கும் மோதலில் இவர்கள் பக்கம் ஒருவர் இறந்துவிட , கொள்ளையர் கூட்டத்தைச் சார்ந்த ஒருவன் தப்பிவிடுகிறான் . விமானத்தயாரிப்பு முடியும் நேரத்தில்தான் ஒரு உண்மை தெரிகிறது . எல்லியாட் உண்மையிலேயே வேலைசெய்தது குழந்தைகளுக்கான சிறிய ரிமோட் விமானம் செய்யும் தொழிற்சாலையில் . இந்த உண்மை தெரிவதற்குமுன் ஒரேயடியாக எல்லாரையும் ஆட்டுவித்துக்கொண்டிருந்த எல்லியாட்கு தாழ்வுமனப்பான்மை உருவாகிறது . இருந்தாலும் தன் கண்டுபிடிப்பு வேலை செய்யும் என்றுகூறி அனைவரையும் சமாதனப்படுத்தி மேற்கொண்டு வேலைகளைச் செய்கிறான். அதேநேரம் தப்பித்தோடிய கொள்ளைக்காரன் தன் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கூட்டி வர , அதேநேரம் இவர்களிடமிருந்த FUEL , நீர் , உணவு எல்லாம் முடிந்துவிட , தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை .


கேப்டன் ஃப்ராங்காக டென்னிஸ் , AJ வாக ஃபாஸ்ட் சீரிஸ் புகழ் டைரிஸ் கிப்சன் , எல்லியாட்டாக ரிபிசி மற்றும் கெல்லியாக மிரன்டா . விமானத்தில் ஏறும்முன்பும் ஏறிய பின்பும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்காலத்தைப்பற்றிக் கொண்டிருக்கும் கனவைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதே நமக்குத் தெரிந்துவிடுகிறது ; பயபுள்ளைங்க வாழ்க்கைல அனுபவிக்கமுடியாத கஷ்டத்த இன்னைக்கு அனுபவிக்க போறாங்கனு . அதேபோல் எண்ணற்ற துயரங்கள் , கோவம் , குரோதம் , தாழ்வு மனப்பான்மை , உதவும் மனப்பான்மை , இரக்கம் , காதல் என அனைத்து மனித உணர்வுகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பதாலே எனக்கு இத்திரைப்படம் பிடித்திருந்தது . படத்தில் தன் நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் என்றால் எல்லியாட்டாக வரும் ரிபிசி தான் . தாழ்வு மனப்பான்மை , தான் தான் இங்கு எல்லாம் என்ற திமிர் , தன் குட்டு அம்பலமாகிவிட்டதே என்று பதறும் இடம் , தான் கண்டுபிடித்தது வெற்றுபெறும் என்கிற நம்பிக்கை என ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார் . தெனாவெட்டாக இருக்கும் ஆசாமியாய் அறிமுகமாகும் டென்னிஸ் , கடைசியில் எந்தளவு மனிதஉணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக மாறுகிறார் என்பதை கண்டிப்பாக கவனிக்கவேண்டும் . இசையமைப்பாளர் மார்ரக்கோ , படத்திற்கு ஏற்ற பசைபோன்ற இசையை வழங்கியிருக்கிறார் . ஒளிப்பதிவாளர் படத்தில் நிகழும் வெப்பத்தைக் காட்க நம் கண்களையும் வெப்பப்படுத்தும் மாதிரியான வைல்ட் டோனில் எடுத்திருப்பது எனக்குப்பிடிக்கவில்லை . மற்றபடி பத்து நிமிட மணற்புயல் சி.ஜி அட்டகாசம் . 


மொத்தமாக CAST AWAY , THE WAY BACK , BURIED , THE EDGE , THE PIANIST அளவிற்கு இல்லையெனினும் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கும் ஒரு சர்வைவல் திரைப்படம் இது . 

Monday, 25 May 2015

BLOOD DIAMOND - சினிமா விமர்சனம்படம் ஆரம்பிக்கும்போதே கதை நடக்கும் இடத்தையும் , அதன் சூழ்நிலையையும் நமக்குக் காட்டிவிடுகிறார்கள் . இருண்டகண்டம் என்றழைக்கப்பட்டதாலோ என்னவோ நம் மக்களுல் பெரும்பாலானோர் நைல் நதி பாயும் எகிப்து மட்டுமே சிறிது வளமான நாடு என்றும் மற்ற நாடுகள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் தகிக்கும் சஹாரா பாலைவனமாகவும் மீந்த இடங்கள் அவற்றின் எச்சமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் . ஆனால் உண்மையில் ஆப்ரிக்கா , இயற்கை வளங்களின் சொர்க்கம் . உலகின் மிகமுக்கியமான  விலையுயர்ந்த பலபொருட்களுக்குப் பிறப்பிடம் ஆப்பிரிக்கா தான் . அதனால் தான் என்னவோ அக்கண்டம் காலங்காலமாய் சோகத்தின் விளிம்பில் வாடுகிறது . அந்நாட்டு மக்கள் பிறக்கும்போதே சாவை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் . காரணம் , காலனி ஆதிக்கம்  மற்றும் ஏகாதிபத்தியம் . நாம் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் பதிவில் பார்த்த ஏகாதிபத்தியத்தை ஒருமுறை நினைவிற்கு கொண்டுவாருங்கள் . ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் உலகமே ஒருமுறை அடங்கிக்கிடந்திருந்தாலும் , ஐரோப்பியர்களைக் காட்டிலும் அமெரிக்காவின் காலனியில் மாட்டிய நாடுகளின்  நிலை தான் மிகமிக மோசம் என்பது உலகறிந்ததே ! அப்படி மாட்டிய ஒரு நாடான சியர்ரோ லியோன் எனும் ஆப்ரிக்க நாட்டில் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை விளக்குவது தான் இத்திரைப்படம் .

ஒரு அழகான காலைப்பொழுது . மீனவனான சாலமன் வான்டே(டி) தன் மகனை எழுப்பி பள்ளிக்கு கிளப்புகிறான் . அவன் மனைவி கைக்குழந்தையுடன் படுத்துக்கொண்டிருக்கிறாள் . மகனைப் பள்ளிமுடித்து திருப்பி அழைத்து வருகிறான் . தன்னைப்போன்று தன் மகனும் மீனவனாகிவிடக்கூடாது என்ற நடுத்தரவர்க்கத்துமக்களின் நியாயமான ஆசை அவனுக்குள் இருப்பது ஆச்சரியமன்று . திடீரென மூன்று ஜீப்களில் கையில் துப்பாக்கியும் பெரிய ரேடியோவில் பாப் பாடலும் போட்டுக்கொண்டு கும்பல் வருகிறது . சாலமனின் கிராமத்தை நோக்கி நுழையும் ஜீப்களில் இருப்பவர்கள் இறங்கக்கூட நேரத்தை வீண் செய்யாமல் அங்கிருந்தபடியே படபட வென சுட்டுத்தள்ளுகிறார்கள் . சுடுபவர்களில் பலர் சிறுவர் . பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் வெறிபிடித்தபடி சுட்டுவிட்டு சிரிக்கிறான் . சாலமன் தன் குடும்பத்தைத் தப்பிக்க வைக்கிறான் ; ஆனால் அவன் மாட்டிக்கொள்கிறான் . ஊரிலிருப்பவர்களை வரிசையாக நிற்க சொல்லி ஒவ்வொருவரின் கையையும் அந்த கும்பல் வெட்டுகிறது . சாலமனின் முறை வரும்போது அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறான் .
மேலே சொல்லும் கும்பலின் பெயர்  RUF . அந்த கும்பல் எதற்காக கையை வெட்டினார்கள் தெரியுமா ? மக்கள் யாரும் ஓட்டு போடக்கூடாதென்பதற்காக. இதுதான் அப்போது அந்நாட்டின் வழக்கம் . 
ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பதை முதன்முதலில் ஒரு சிறுவன் கண்டுபிடித்ததாக கூறுவர் . நான் அக்கட்டுரையை வாசித்திருந்தாலும் மறந்துவிட்டது . அங்கு வைரம் இருப்பது தெரிந்தபின் அந்நிய நாட்டினர் உட்பட அனைவரின் படையெடுப்பும் ஆப்ரிக்காவை நோக்கியதாகவே இருந்தது . ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டுநிறுவனங்கள் பலவிதமான அன்பளிப்புகளையும் பணத்தையும் காட்டி ஒவ்வொரு நாட்டையும் விலைக்கு வாங்கின . பின் அந்நாட்டின் வளங்களை ஸ்ட்ராவுக்கு பதில் பெரிய பெரிய மோட்டர் போட்டு உறிஞ்சின . அப்படியொரு நாடுதான் இந்த சியர்ரோ லியோன் . காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்நாட்டை ஆண்ட முதல் ஆட்சியாளரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஊழல் பெரும்பன்னிகளாகவும் , பணத்திற்காக பெற்ற தாயையே அவுசாரிகளாக்கும் அளவிற்கு மோசமானவர்களாகவும் இருந்தனர் . ஒருபுறம் கார்ப்பரேட் கொள்ளை , மறுபுறம் ஆட்சியாளர்கள் தொல்லை. என்னசெய்வதென்றே புரியாமல் தவித்த மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதானது . அரசின் கஜானா , பீடி வாங்கக்கூட முடியாதநிலைக்குள்ளானது . அரசு அதிகாரிகளுக்கே சம்பளம் தரமுடியாத நிலைக்கு போனது . அந்நேரத்தில் மக்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் . பொறுத்துப்பார்த்த மக்களின் துணைவனாய் RUF இயக்கம் வந்தது . தங்களின் எதிர்கால சந்ததியினரையாவது மகிழ்ச்சியுடன் வாழவைக்கவேண்டும் என்ற நோக்கில் மக்களும் அதை ஆதரித்தனர் . ஆனால் அவ்வியக்கத்தின் மகிமையும் போகப்போக தெரியவந்தது . புரட்சி இயக்கம் மக்களை வைத்துத் திருட ஆரம்பித்தது . நாட்டிலிருக்கும் வைரங்களை அள்ளி , தங்களை ரட்சிப்பவனாய்க் காட்டிக்கொண்டு , தங்களின் சுகபோகவாழ்வினை மேம்படுத்த முயன்ற ஒரு ஹிப்பிக்கூட்டமாக RUF மாறியது . அவ்வியக்கம் , தன்னை ஆதரிக்காத மக்களை துரோகி என்று கூறி சுட்டது . எல்லாபக்கமும் மக்களுக்கு மரண அடி . இந்தமாதிரியான சூழலில்தான் ஐரோப்பியநாடுகளிலுள்ள நிறுவனங்கள் சியர்ரோ லியோனின் வைரத்தை இனி வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தன . ஆனால் அது வெளியுலகிற்கு , உள்ளுக்குள்ளே தங்களின் ஏஜென்ட்களை வைத்து RUF –ன் வைரங்களை வாங்கி , சியர்ரோ லியோனின் அண்டை நாடான லிபியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வைரம் என்றுகூறி வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தன . இந்த வைரங்களைக் கடத்தும் ஏஜென்டாக தான் நம்ம காப்ரியோ இப்படத்தில் வருகிறார் .

சரி கதைக்கு வருவோம் . சாலமன் RUF – விடம் மாட்டியபிறகு வைரத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறான் . அவ்வாறு அவன் தேடும்போது 100 கேரட் மதிப்புள்ள ஒரு பெரிய பிங்க் வைரம் கிடைக்கிறது . அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கப்போகும்போது RUF காமென்டரிடம் மாட்டிக்கொள்கிறேன் . அதேநேரம் ராணுவத்தாக்குதல் நடக்க , அங்கிருந்து தப்பித்து ராணுவத்திடம் மாட்டிக்கொள்கிறான் . அதேநேரம் வைரக்கடத்தல் ஏஜென்டான முன்னாள் ராணுவ வீரர் ஆர்ச்சர் , ஒரு கடத்தலில் ஈடுபட்டபோது மாட்டி சிறையில் இருக்கிறான் . படுகாயமடைந்த RUF கமான்டரை , ராணுவம் கைதுசெய்து சிறைக்கு அழைத்துவருகிறது . அந்த கமான்டர் , சாலமனைப் பார்த்து வைரத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று சிறையிலேயே கத்த , அந்நேரம் ஆர்ச்சர் அதனை நன்கு கவனிக்கிறான் . ஆர்ச்சருக்கு வைரம் ராணுவத்தில் மாட்டிவிட்டதால் தன் முதலாளியான காலினலிடம் பணம் தரவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது . பின் சிறையிலிருந்து  வெளிவந்த ஆர்ச்சர் , சாலமனை வெளியில் கொண்டுவருகிறான் . அவனிடம் வைரத்தைப்பற்றி கேட்கிறான் . ஆனால் சாலமன் எதுவும் தெரியாதது போல் இருக்கிறான் . ஒருகட்டத்தில் தொலைந்துபோன அவனது குடும்பத்தை மீட்டுக்கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கும் ஆர்ச்சர் , அதற்கான பயணத்தை மேற்கொள்கிறான் . அதேநேரம் ஒரு பாரில்  மேடி எனும் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான் . அவளுக்கு அவன் ஏஜென்ட் என்பது தெரியவர அவனிடமிருந்து உண்மையை தெரிந்துகொள்ளவேண்டுமென முயற்சிக்கிறாள் . ஆனால் ஆர்ச்சர் உண்மையைக் கூறாமல் சென்றுவிடுகிறான் . இப்போது சாலமனுக்கு உதவ வேண்டுமெனில் ஜர்னலிஸ்டான மேடியின் உதவி தேவைப்படுகிறது . அவளுக்கு வைரக்கடத்தலைப்பற்றிய விஷயங்களை ஆதாரத்துடன் சொல்வதாக ஒப்புக்கொண்டு அதற்கு கைமாறாக சாலமனின் குடும்பத்தைக் கண்டறிய உதவவேண்டுமென்கிறான் . ஒருவழியாக சாலமனின் குடும்பத்தைக் கண்டறிந்தாலும் சாலமனின் மகன் RUF –ல் மாட்டிக்கொண்டான் என்பது தெரியவருகிறது . வைரத்தைத் தேடி சாலமனும் ஆர்ச்சரும் , அவ்வைரத்தைப் பதுக்கிய இடத்திற்கு செல்கிறார்கள் . ஆனால் அவ்விடத்தில் RUF –ன் கேம்ப் இருக்கிறது . உடனே தன் கலினலுக்கு ஆர்ச்சர் இதைப்பற்றித் தெரிவிக்கிறான் . அவர்களும் அங்கு காலை வான்வழித்தாக்குதல் நடத்துவதாக கூறிவிடுகிறார்கள் . ஆனால் இரவில் தான் சாலமனுக்குத் தன் மகன் அங்கு ஒரு இளம்தீவிரவாதியாக இருப்பது தெரியவருகிறது . ஆனால் RUF – ன் கமான்டரிடம் சாலமன் மாட்டிக்கொள்கிறான் . இப்போது சாலமனிடம் வைரத்தை எடுத்துத்தருமாறு கமான்டர் சொல்ல , அதேநேரம் வான்வழி தாக்குதல் நடக்க , அதைத்தொடர்ந்து என்ன ஆனது என்பதனை படத்தினைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் .

படத்தில் பல காட்சிகள் ரசித்துப் பார்க்கும்படியானதாக இருக்கும்ம . அதுவும் வசனம் ; சான்ஸே இல்ல ரகம் . ஆர்ச்சர் காலினலுடன் பேசும்போது சாலமனுக்கு கிடைத்த சிவப்பு வைரத்தைப்பற்றி காலினல் விசாரிப்பார் . அப்போது ஆர்ச்சர் ‘அந்த வைரம் கிடைத்திருந்தால் நான் இந்நேரம் இந்த கண்டத்தில் இருந்திருப்பேனா ’ என்பார் . அப்போது காலினல் ஆர்ச்சரின் கையை நீட்டச்சொல்லி அதில் சிறிது மண்ணை எடுத்துப் போடுவார் . அப்போது அவர் பேசும் வசனத்தை நன்கு கவனியுங்கள் .
Danny, give me your hand.
That's red earth. It's in our skin.
The Shona say the color
comes from all the blood
that's being spilled
fighting over the land.
This is home.
You'll never leave Africa.

இதேபோல் ஆர்ச்சர் பழகும் அந்த பார் ஓனரும் , அடுத்தநாள் RUF வந்து அனைத்தையும் அழித்துவிடும் என்பதை அறிந்தும் இது என்நாடு என்று அங்கேயே அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பார் .

RUF- விடம் மாட்டிய சாலமனின் மகன் டியா வாண்டிக்கு அவர்கள் எப்படியெல்லாம் பேசி மனமாற்றுகிறார்கள் என்பதனையும் முதல்முறை அவன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கண்ணைக் கட்டிவிட்டு ஒருவனைக் கொலைசெய்யவைத்து அவன் பிஞ்சுமனதில் நஞ்சுபாய்ச்சுகிறார்கள் என்பதனையும் பார்க்கும்போது மனம் கனக்கும் . சியர்ரோ லீயோனின் தலைநகரான ஃப்ரீ டவுனை RUF கைப்பற்றும் காட்சியில் ஈவிரக்கமே இல்லாமல் ராணுவமும் தீவிரவாதிகளும் அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுவீழ்த்தும்போது போரின் கொடுமை என்னவென்று தெரியாதவர்களுக்கு கண்டிப்பாக புரியும் . கைப்பற்றிய பின் புரட்சிகர இயக்கம் என்றழைத்துக்கொள்ளும் RUF படையினர் நடத்தும் வெறியாட்டங்கள் சொல்லிமாளாது . காரில் ராணுவத்தினரைக்கட்டி தெருவில் இழுத்துச்செல்வதும் , தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்யும்போது மனிதநேயமென்றால் கிலோ எவ்வளவு என்பதுபோல் இருக்கும் .

சாலமனுக்காக ஆர்ச்சர் மேடியிடம் உதவிகேட்பான் . அவள் கேட்ட விஷயங்களை சொல்வதாகக்கூறி அவன் கேட்ட உதவியை அவளும் செய்வாள் . சாலமனின் குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக கிய்னி அகதி முகாமிற்கு செல்வார்கள் . அந்த முகாமை பார்த்து வெறுப்பான மனதுடன் மேடி சொல்லுவாள் . மொத்த நாடும் அகதிகள் முகாமில் இருக்கிறது என்று . உண்மைதான் . அந்த கிய்னி முகாமில் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் வாழ்ந்தார்கள் . தன் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்த சாலமன் தன் மகனைப்பற்றி கேட்பான் . அவள்  , RUF அவனை இழுத்துச்சென்றதைச் சொல்வாள் . என்னசெய்வதென்று புரியாமல் கதறும் சாலமனை ராணுவத்தினர் வந்து அடிப்பார்கள் . அந்நேரத்தில் ராணுவத்தினர் சாலமனை சுட்டுக்கொல்லக்கூடத் தயாராகுவார்கள் . ஆனால் அதைப்பொருட்படுத்தாத சாலமன் , தன் மகன் RUF – ல் சிக்கிக்கொண்டானே என்று கதறுவான் .  மனிதனின் உணர்ச்சிகளுக்கு முன் மூளையாவது மயிராவது என்பது போன்ற காட்சி அது . அது உண்மைதான் . ஓரிடத்தில் நம்முயிர் போகும் என்று தெரிந்திருந்தாலும் அந்த கணத்தில் நம் உணர்ச்சிதான் மேலிடும் . பைய வீட்டில் அமர்ந்து யோசிக்கும் போது லூசு மாதிரி பன்னுறான்னு மற்றவர்களை நாம் குறை கூறினாலும் அந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளின் சக்தி மகத்தானது . மரணத்தைப்பற்றிய பயமில்லாதது.


தன்னைப்பற்றி ஆர்ச்சர் , மேடியிடம் சொல்லும்போது தன் ஆப்ரிக்காவைப்பற்றிய  ஒரு வசனத்தைக் கூறுவான் .
Sometimes I wonder will God ever forgive us for what we've done to each other? Then I look around and I realize God left this place a long time ago.
இந்த வசனத்தை எதுக்காக இங்குமுன்வைத்தேன் என்று தெரியவில்லை . இது படிப்பதற்காக அல்ல ; புரிவதற்காக . இதேபோல் சாலமனின் கேள்விக்கு ஆர்ச்சர் பதிலளிக்கும் காட்சிகளில் வரும் வசனங்களும் அட்டகாசம் . லௌலீக வாழ்க்கையை மிக எளிமையான கேள்விகளால் கேட்பான் சாலமன். 

அதேபோல் மேடிக்கும் ஆர்ச்சருக்குமிடையே உருவாகும் அழகான காதல் கவிதையைப்போன்றது. நான் பார்த்த படங்களிலேயே முதன்முறையாக கிஸ்ஸே அடிக்காத காதலர்கள் , இந்த ஆங்கிலப்படத்தில்தான் இருக்கிறார்கள் .

இதுபோல் பல விஷயங்கள் குறிப்பிட்டு சொல்ல இருந்தாலும் வழக்கம்போல இதுவும் நீளமானதொரு பதிவாகிவிடக்கூடாது என்பதில் நான் கொஞ்சம் கவனம்கொள்ள ஆரம்பித்துவிட்டேன் . ஆர்ச்சராக டீகேப்ரியோ . இவரின் நடிப்பைப்பற்றி தனியொரு பதிவெழுதிவிடலாம் என்பதால் இப்பதிவில் மேற்கொண்டு எதனையும் குறிப்பிட இயலவில்லை . சாலமனாக வாழ்ந்திருப்பவர் ட்ஜுமான் ஹௌன்சௌ ( என்னங்கடா பேரு இது ? ) . கடைசியாக வந்த FAST 7 –ல் மோஸ் எனும் மொசப்பிடிக்கும் வில்லனாக வந்திருப்பாரே ! அவர் தான் . ஆனால் இப்படத்தில் வெறுமனே வராமல் அட்டகாசமாக நடித்தும் இருக்கிறார் . வழக்கம்போல இப்படத்திற்காகவும் ஆஸ்கார் பரிந்துரைக்கப்பட்டு வாசற்படியோடு வெளியே துரத்தப்பட்டார் . ட்ஜூமாவிற்கும் பரிந்துரைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் . சார்லஸ் லிவ்விட்டின் எழுத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு உயிர்கொடுத்தவர் எட்வர்ட் ஸ்விக் . எட்வர்டுக்கு பக்கபலமாக உயிரோட்டமான இசை கொடுத்தவர் எனக்கு மிகமிகப்பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஹோவர்ட் ; எட்வர்டின் கனவை திரையில் பிடித்துக்கொடுத்தவர் எடார்டோ செர்ரா .   

BLOOD DIAMOND என்பதற்கான வரலாற்றை பார்க்கத்தேவையில்லை . இப்படத்திலே எதற்காக BLOOD DIAMOND என வைத்தார்கள் என்பதற்கு கிளைமேக்ஸில் விளக்கம் இருக்கிறது . மொத்தத்தில் அருமையான திரைப்படம் . கண்டிப்பாக பாருங்கள் . வன்முறைக்காட்சிகள் போகிறபோக்கில் காட்டப்பட்டாலும் மனதைக் கொஞ்சம் திடமாக வைத்துக்கொண்டே பார்ப்பது நலம் .

Sunday, 24 May 2015

டிமான்டி காலனி - சினிமா விமர்சனம்கடந்த ஒருமாதகாலமாக எந்த திரைப்படத்திற்கும் செல்லவில்லை என்பதைவிட பார்க்கவே இல்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். நேரமின்மை மற்றும் தீவிர வாசிப்பில் ஆழ்ந்தகாரணத்தால் எத்திரைப்படத்தையும் பார்க்கமுடியவில்லை . உத்தமவில்லன் , புறம்போக்கு, MAD MAX FURY ROAD என மிஸ் செய்த படங்கள் ஏராளம் . நேற்று வெள்ளிக்கிழமை என்பதைக்கூட மறந்துவிட்டேன் என்றால் பாருங்களே ! எப்படியாவது இந்த திரைப்படத்தையாவது பார்த்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்து சற்றும் அறிமுகமில்லாத ஒரு கிராமத் தியேட்டருக்கு சென்றேன் . அந்த தியேட்டரைப் பார்த்தால் இழுத்துமூடி பலவருடங்களான பாழடைந்த பங்களா போன்ற எஃபெக்டை காட்டியது . திடீரென எக்சலில் வந்த ஒருவர் கேட்டைத் திறந்தார் . பின் வெளியில் நின்றிருந்த என்னையும் என்னைப்போலவே அதைத் தியேட்டர் என நம்பி படம் பார்க்க வந்திருந்த சிலரையும் அழைத்தார் . எதுக்கு கூப்டராங்கனு தெரியாமலே அவரை நோக்கி சென்றால் 50 ரூபாய்பா என்றார் . எதுக்குங்ணே என்றால் டிக்கட் விலை பா என்றார் . சரி என்று அவரிடம் கொடுத்து விட்டு டிக்கெட்டுக்காக நின்றேன் . என்னப்பா ? என்றவரிடம் டிக்கெட் என்றால் அதெல்லாம் வேண்டாம்பா நீ போய் பாரு என்றார் . எனங்கடா இது ? தியேட்டரா இல்ல டூரிங் டாக்கிஸா என்று படத்தைப் பார்க்குமுன்னே பயந்தவாறு உழ்நுழைந்த எனக்கு இன்ப அதிர்ச்சி . வெளியே பார்க்க படுகேவலமாக இருந்த திரையரங்கு , உள்ளே சுத்தமாகவும் ஓரளவு நன்றாகவும் இருந்தது . சிலசமயங்களில் திருவள்ளுவரின் வாக்கைக்கூட நம்மவர்கள் பொய்க்கவைத்து விடுகிறார்கள் என்றவாறே படத்தைப்பார்க்க ஆரம்பித்தேன் . என்ன ஆச்சரியம் ? RDX , AURO 3D போன்ற சவுண்ட் டெக்ன்றாலஜியையெல்லாம் அடித்துத் தூக்கி எறிந்தார்போல் சவுண்ட் எஃபெக்ட் அதகளம் செய்தது . படத்தில் ஒரு இடி இடித்தால்கூட தியேட்டரே வைப்ரேட் மோடுக்கு மாறியது . எனக்கெல்லாம் ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்துவிட்டது .

பொதுவாக பேய்ப்படங்களைத் தியேட்டருக்குச் சென்று ரசிப்பதைவிட , வீட்டில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு FULL VOLUME –ல் தனியாக பார்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும் . தியேட்டருக்குச் சென்றால் பக்கத்தில் வரும் சில பக்கோடா வாயர்கள் , மெனமெனவென்று ஏதாச்சும் அருகிலிருப்பவர்களிடம் கமெண்ட் அடித்துக்கொண்டோ , பாடாவதியான செல்போனில் ‘ஆளான நாள் முதலா ’-வென்று  ரிங்டோன் அடித்துக்கொண்டோ , நம்மை வெறுப்பேத்தும் . இன்றும் என் பக்கத்தில் ஒரு கலூரிமாணவர்கள் கூட்டம் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்கும் முன்னே ஆதிகால டப்ஸ்மேஷ்களை போட்டு சாவடித்துக்கொண்டிருந்தார்கள் . போச்சுடா ! இன்னைக்கு நாம படத்த பாத்த மாதிரிதான்னு தவித்த எனக்கு படம் ஆரம்பித்ததும் தியேட்டர் சவுண்ட் எஃபெக்டில் அவர்கள் பேயரைந்தவர்களாகினர் .

இந்த தியேட்டர்புராணத்தை ஓரங்கட்டிவிட்டு திரைப்படத்தைப்பற்றி பார்க்கலாம் . நம் தமிழ் சினிமாவில் கடைசியாக வந்த சீரியஸ் பேய் ஹாரர் & த்ரில்லர் எதுவென்று உங்களுக்கு நியாபகமிருக்கா ? கொஞ்சம் கடினமான கேள்விதான் . ஒருநிமிடம் யோசித்துவிட்டு தான் ‘யாவரும் நலம்’ என்று பதில் சொல்லவேண்டியுள்ளது (நடுவில் வந்த ‘ரா’ , ‘ஆ’ எல்லாம் அந்தளவு திருப்தி படுத்தாமல் போன திரைப்படங்கள் . வந்த தடமும் போன சுவடுமில்லாமல் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டன .) . காரணம்  அந்தளவு நம்மை காமெடி பேய்த்திரைப்படங்கள் ஆக்கிரமித்துவிட்டன . வழவழவென நாய்க்குட்டி போடுவதுபோல் தமிழ்சினிமாவில் காமெடிப்பேய்களை உலாவவிட்டுக்கொண்டே இருந்ததால் எனக்கே ஒரு டவுட் வந்துவிட்டது . உண்மையில் பேய்ப்படங்கள் என்றால் இதுதான் என்றவொரு இலக்கணத்தை எனக்குள்ளே எழுதமுற்படும் அளவிற்கு ப்ரைன்வாஷ் செய்துவிட்டார்கள் தமிழ் இயக்குநர்கள் . இனிமேல் தமிழ்சினிமாவில் பேய் என்றாலே காமெடிதான் என்றநிலையை உருவாக்கி வைத்துவிட்டார்கள் .
1408 , DRAG ME TO HELL , HAUNTING IN CONNECTICUT , SHINING , CABIN IN THE WOODS , CONJURING மாதிரியான சீரியஸ்பேய் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான் . இதில் 1408 திரைப்படத்தை மட்டும் நான் திரும்ப பார்க்கவே கூடாது என்று சத்தியம் செய்துவைத்திருக்கிறேன் . காரணம் அந்த படம் பயப்படுத்தாது ; ஆனால் பயங்கரமாக பதட்டப்படவைக்கும் . பேய்ப்படங்களைப் பொறுத்தவரை முதல்முறை ஆஹா ஓஹோவென்று தெரிந்தாலும் மீண்டும் பார்க்கும்போது முதல் 20 நிமிடங்களிலேயே கொட்டாவி வரவைத்துவிடும் . காரணம் பேய்ப்படங்களுக்கு வெறும் ஸ்பெசல் எஃபெக்ட் , சவுண்ட் எஃபெக்டை மட்டும் நம்பி எடுக்கப்படுவதுதான் . ஆனால் SHINING மற்றும் 1408 போன்ற திரைப்படங்கள் அதனின்று தள்ளி நிற்கின்றன . காரணம் ஆடியன்சை , பேயைக்காட்டி பயமுறுத்தாமல் அந்த கதையின் சிச்சுவேசனையும் , கேரக்டர்களின் உணர்வுகளையும் நமக்குள் இறக்கியிருப்பதுதான் . அப்படிப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெகுகுறைவு . சமீபகாலங்களில் அப்படியொருத் திரைப்படமே கடந்த 4 ஆண்டுகளில் வரவில்லையென்றுதான் சொல்லவேண்டும் . இப்படியெல்லாம் என்னைப்போலவே  புலம்பிக்கொண்டிருக்கும் ஹாரர் பிரியர் நீங்களென்றால் தயங்காமல் இத்திரைப்படத்திற்கு செல்லலாம் .

படத்தின் கதைப்படி நான்கு நண்பர்கள் ; அதில் ஒருவன் இயக்குநராக ஆசைப்படுகிறான் . அவனுக்கு டிமான்டி காலனி எனுமிடத்தில் உள்ள ஒரு பங்களாவைப்பற்றிய தகவல்களும் அதன் வரலாற்றுப்பிண்ணனியும் அரசல்புரசலாகத் தெரியவருகிறது . அதைவைத்து ஒரு பேய்த்திரைப்படம் இயக்கமுயற்சிக்கிறான் . ஆனால் வாய்ப்புக் கிடைக்கவில்லை . ஒருமுறை நால்வரும் குடித்துவிட்டு  , எங்கேயாவது செல்லலமா எனக்கேட்க , அப்போது இயக்குநராக விரும்புவபன் டிமான்டி காலனி பேய்பங்களா பற்றி கூறி அங்குசெல்லலாமெனக் கூறுகிறான் . நால்வரில் ஒருநண்பன் பயந்தசுபாவமுள்ளவன் ; அவனையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு பங்களாவிற்கு செல்கிறார்கள் ; பின் திரும்பியும் வந்துவிடுகிறார்கள் . வந்தபின் இயக்குநராக முயற்சிப்பவன் அந்த பங்களாவிற்கு சென்றது அங்குள்ள ஒரு அரியவகைகல்லாலான நகையைத் திருடுவதற்குத்தான் என்றுகூறி நகையை எடுத்துக்காட்டுகிறான் . அதன்பின் ? நகையைத்தேடி டிமான்டி வர , நடிகர்களைக் காட்டிலும் நமக்கு பயம் அதிகமாகிவிடுகிறது . இந்த டிமான்டி யார்? அவன் எதற்காக பேயாகிறான் என்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது . அதெல்லாம் கூறிவிட்டால் த்ரில் போய்விடும் .

வழக்கமாக பேய்வரும் நேரத்தில் மட்டும் காத்தடிப்பது , கதவடிப்பது , மழைபெய்வது என இயற்கையைத் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்த இயக்குநர்கள் மத்தியில் இப்படத்தின் இயக்குநர் அஜய்  மிகச்சரியாக கையாண்டிருப்பதுமுதல்  ஒவ்வொருவரின் சாவைப்பற்றியும் லவாகமாக காட்டியிருப்பது சபாஷ் . கதையில் சிலஇடங்களில் 1408 –ன் மிகச்சிறியசிறிய அளவு தாக்கமிருந்தாலும் 1408 –ன் காப்பி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது . ஒவ்வொருத்தரைப்பற்றியும் சுருக்கமான அறிமுகத்துடன் துவங்கும் திரைப்படத்தில் இந்த சீன் தேவையில்லை , அந்த சீன் தேவையில்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை . காமெடி என்றபெயரில் மொக்கை போட ஆயிரம் இடம் இருந்தாலும் , நீட்டான கதையுடன் அட்டகாசமான திரைக்கதையை வைத்து டெக்னிக்கலாக ஒரு அட்டகாசமான பக்கா ஹாரரைக் கொடுத்திருக்கிறார் அஜய் . அஜய்க்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் அஜய் சிங்கும் இசையமைப்பாளர் கேபா ஜெரமியாவும் செமையாக கைகொடுத்துள்ளார்கள் . கேமரா ஆங்கிள் அட்டகாசம் , ஹாலிவுட் நேர்த்தி ; ஏன் ஹாலிவுட்டில்கூட இந்தளவு அருமையாக கேமரா ஆங்கிள் உபயோகிக்கப்படவில்லை என்றே சொல்லலாம் . முதல்பாடல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பிண்ணனி இசையில் கேபா வெளுத்து வாங்கியிருக்கிறார் .

படத்தில் மைனஸ் என்றால் , வோஜா போர்டு காட்சிகளில் நண்பர்கள் கூப்பிட்டதும் உடனே பேய்வந்துவிடும் என்பதை மட்டும் கொஞ்சம் ஜீரணிக்கமுடியவில்லை . அதேபோல் அருள்நிதியின் லுக் தான் மாறியிருக்கிரதே தவிர நிறைய இடங்களில் வழக்கம்போல திருடிமாட்டியவர்போல முழிக்கின்றார் . இவற்றைத்தவிர இந்த படத்தில் வேறெதுவும் பெரிய மைனசாக தெரியவில்லை .

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து பயப்படவேண்டிய ஒரு MUST WATCH HORROR .  படத்தின் வெற்றியைப்பொறுத்து இதேபோல் பக்கா HORROR –க்கு தமிழ்சினிமா மாற வேண்டும் .

Friday, 8 May 2015

BACK TO THE FUTURE – 1 ஒரு பார்வை
ராபர்ட் செமெக்கிஸ் தலைவரைப்பற்றி எளிமையாக சொல்லவேண்டுமெனில் இவர் ஒரு ஹாலிவுட் கே.எஸ்.ரவிக்குமார் . 1978 – ல் சினிமாவினுள் நுழைந்து இன்றுவரை உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் , தனி பாக்ஸ் ஆபிசையும் வைத்திருப்பவர் . இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கியவர் . வெறும் பணத்திற்காக மட்டுமில்லாமல் ஆங்காங்கே மக்களிடையே சமூக விழிப்புணர்வைப்பற்றியும் ஏற்படுத்தும் அதிசய இயக்குநர் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த FLIGHT திரைப்படத்தில்கூட குடிக்கெதிரான தனது கருத்தை ஆணித்தரமாக பதிந்திருப்பார் . சுமாரான திரைப்படமான FLIGHT  பாக்ஸ் ஆபிசில் முதலைக்காட்டிலும் ஐந்து மடங்கு லாபத்தை சம்பாதித்து என்றால் அதற்கு காரணம் செமெக்கிஸ் தான் . இவரது அடுத்த படமான THE WALK , பிலிப் பெடிட் என்பவர் , விமான தாக்குதலில் தகர்க்கப்பட்ட இரட்டைக்கோபுரத்திற்கிடையே கயிறு கட்டி நடந்து சாதனை படைத்ததை வைத்து அவரது வாழ்க்கையைப்பற்றிய சுயசரிதமாக எடுக்கப்படுகிறது . ஆனால் செமெக்கிஸின் வாழ்க்கையையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் .

திரைப்படக்கலை பற்றிய கல்லூரிப்படிப்பை  முடித்தபின் செமெக்கிஸ் ஒரு டி.வி. சேனலில் எடிட்டிங் துறையில் பணியாற்றினார் . கல்லூரியில் படிக்கும்போதே தன்னைப்போன்ற ஒத்த சிந்தனையுடன் இருந்த  BOB GALE என்பருடன் தன் நட்பினை வலுப்படுத்திக்கொண்டார் . திரைப்படக்கல்லூரியில்  நடந்த குறும்படத்தேர்வில் செமெக்கிஸின் A Field of Honor குறும்படம் ,  விழாவிற்கு வருகைதந்திருந்த ஸ்பில்பெர்க்கை வெகுவாக கவர்ந்தது . கல்லூரி முடிந்தபின் தடுமாறிக்கொண்டிருந்த செமெக்கிஸும் பாப்பும் ஸ்பில்பெர்க்கிடம் சரணாகதி அடைந்தனர் . ஸ்பில்பெர்க்கும் இருவரிடமிருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் செமெக்கிஸின் முதல்திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார் . பாப் கேல் மற்றும் செமெக்கிஸ் இருவரும் இணைந்து எழுதி , செமெக்கிஸ் இயக்கத்தில் 1978 – ல் I WANNA HOLD YOUR HAND வெளிவந்தது . முதல்படம் தோல்வி என்பதைக்காட்டிலும் படுதோல்வி என்றே சொல்லலாம் . செமெக்கிஸ் கூட மனம் தளர்ந்திருக்கலாம் . ஆனால் ஸ்பில்பெர்க் , செமெக்கிஸின் திறமையை உலகிற்கு அடையாளப்படுத்துவதில் மும்முரமாகவே இருந்தார் . மீண்டும் செமெக்கிசை அழைத்த ஸ்பில்பெர்க் , இம்முறை அவருக்கு வழங்கியது எழுத்துப்பணி . செமெக்கிஸ் மற்றும் பாப்கேல் கதை , திரைக்கதை எழுத ஸ்பில்பெர்க் அத்திரைப்படத்தை இயக்கினார் . 1979 – ல் வெளிவந்த 1941 என்ற திரைப்படமே அது . அதில் திரைக்கதைக்காக செமெக்கிசும் பாப்கேலும் பாரட்டப்பட்டனர் . இம்முறை மீண்டும் செமெக்கிசுக்கு இயக்குநர் வாய்ப்பை வழங்கினார் ஸ்பில்பெர்க் . 1980 – ல் செமெக்கிஸின் இரண்டாவது திரைப்படம் HAND  வெளிவந்தது . அதுவும் அட்டர்ப்ளாப் . இம்முறை நான்காண்டுகள் காத்திருந்த செமெக்கிஸ் மீண்டும் திரைப்படம் இயக்க வந்தார் . மறுபடியும் ஸ்பில்பெர்க் தயாரிப்பில் பாப் மற்றும் செமெக்கிஸின் கதை, திரைக்கதையில் 1984 – ல் ROMANCING THE STONE திரைப்படம் வெளிவந்தது . ஏற்கனவே இருமுறை தோல்வியின் விரக்தியிலிருந்த செமெக்கிசிற்கு இத்திரைப்படம் ஒரு ஆறுதல் வெற்றி எனலாம் .

ஆனால் அதற்குமுன்பே பாப்கேலின் கதை ஒன்று செமெக்கிஸிற்கு பிடித்துப்போக பலரிடம் அதைக்கூறினார் . ஆனால் யாரும் தயாரிக்க முன்வராததால் விழிபிதுங்கியபடி நின்ற செமெக்கிஸிற்கு ம்முறையும் கைகொடுத்தவர் ஸ்பில்பெர்க் தான் .  கதையைக்கேட்டதும் உடனே ஒப்புதல் வழங்கி படத்தினை ஆரம்பிக்கச்சொன்னார் ஸ்பில்பெர்க் . ஆனால் ஸ்டுடியோக்கள் யாரும் தயாரிக்க முன்வரவில்லை . அந்நிலையில் தான் ஸ்பில்பெர்க் உதவியுடன் எடுக்கப்பட்ட ROMANCING THE STONE வெற்றி பெற்றதால் அதன்பின் மீண்டும் அவருடைய கதை படமாக்க சம்மதிக்கப்பட்டது . அக்கதைதான் BACK TO THE FUTURE . திரைக்கதையை பாப்கேலுடன் இணைந்து எழுதினார் செமெக்கிஸ் . திரைக்கதையை முடித்தபின் காஸ்டிங் பிரச்சனை உதயமானது . மார்ட்டி வேடத்தில் நடிப்பதற்காக செமெக்கிஸ் முதலில் சென்றது மைக்கேல் . ஜெ . பாக்ஸ் . ஆனால் அக்காலகட்டத்தில் தொலைக்காட்சித்தொடர்களில் பிஸியாக இருந்த மைக்கேலால் இத்திரைப்படத்தில் நடிக்கமுடியவில்லை. இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டுடியோக்கள் தான் . எங்கே  சினிமாவில் நடித்து பெரியாளானால் சம்பளத்தை ஏற்றிவிடுவாரோ என்று பயந்து அவரை நடிக்கவிடாமல் ஸ்டுடியோ தடுத்தது . பின் ஸ்பில்பெர்க்குடன் ஆலோசித்த செமெக்கிஸ் மூன்றுபேரை மனதில் வைத்திருந்து கடைசியாக எரிக் ஸ்டால்ட்ஸ் என்பவரை நடிக்கவைத்தார் . ஒருமாத ஷூட்டிங் முடித்தபின் ஸ்பில்பெர்க்கிடம் செமெக்கிஸ் தன் திரைப்படத்தைப்போட்டுக் காண்பிக்க , எரிக்கின் பர்பாமென்ஸ் திருப்தியளிக்காததால் மீண்டும் ஷூட்டிங்கை நிறுத்தவேண்டியதாயிற்று . பின் அடித்துப்பிடித்து மீண்டும் மைக்கேலையே செமெக்கிஸ் அணுகினார் . இம்முறை ஸ்டுடியோக்காரர்களிடம் கேட்டு , டி.வி.தொடர் விடுமுறை கேப்பில் அவரைவைத்து படம்பிடித்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர் . ஒருவேளை இப்படத்தின் ஷூட்டிங்கில் மைக்கேல் நடித்துக்கொண்டிருந்தாலும் , டி.வி.காரர்கள் கூப்பிட்டால் உடனே விட்டுவிட்டு ஓடிவிடவேண்டியிருக்கும் அளவிற்கு ஒரு கன்டிசனோடு அனுப்பிவைத்தார்கள் . அடுத்து படத்தின் பிரதான வேடமான DOC கேரக்டரில் நடிக்க செமெக்கிஸ் அனுகியது ஜான் லித்கோ எனும் நடிகர் . ஆனால் அவருடைய கால்ஷிட் அப்போது கிடைக்கவில்லை . அதன்பின் டாக்டர்.எம்மட் ப்ரௌன் வேடத்தில் நடிக்க க்றிஸ்டோபர் ஃப்ளாய்டை செமெக்கிஸின் திரையுலக நண்பரும் அந்நேரத்தில் ஃப்ளாய்டை வைத்து THE ADVENTURES OF BUCKAROO BANZAI எனும் திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருந்த  நீல் , பரிந்துரைத்தார் . இது மட்டுமல்லாமல் படத்தின் முக்கிய வேடங்களான ஜார்ஜ் மெக்ஃப்ளை , பிஃப் டேனன் என பாதி வேடங்களுக்கு தேடிச்சென்ற ஆட்கள் வேறு ; ஆனால் நடிக்க கிடைத்தவர்கள் வேறு . இந்த காஸ்டிங் பிரச்சனையை சமாளிப்பதற்குள் செமெக்கிஸிற்கு தாவு தீர்ந்துவிட்டது . எப்படியோ எல்லாம் சரிவர படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்களுல் முடித்துவிட்டார்.  இப்படத்தில் வரும் ஹில்வாலி எனும் குறுநகரத்திற்காக யுனிவர்சல் நிறுவனத்தின் ஒரு நகரையே உருவாக்கிக்கொடுத்தது . படம் முடிந்தபின் பலமுறை ப்ரிவியூ பார்த்தபின்னே ஸ்பில்பெர்க் படத்தை வெளியிட அனுமதித்தார் . காரணம் செமெக்கிஸிற்கென்று இருக்கும் ராசி அப்படி . எல்லாம் ரெடியாகி படம் ரிலிசாகும்போது யுனிவர்சல்நிறுவனம் இத்திரைப்படத்தை ஒரு இன்செஸ்ட் படம் போன்று விளம்பரப்படுத்தியது . கடுப்பான செமெக்கிஸும் பாப் கேலும் என்ன செய்வதென்று புரியாமல் விழிபிதுங்கி நின்றனர் . செமெக்கிஸ் மனதில் இத்திரைப்படம் ப்ளாப் ஆகிவிடும் என்ற எண்ணமே இருந்தது . படம் என்னுடைய பிறந்த தேதியான ஜூலை 3 ல் வெளிவந்தது . யாரும் எதிர்பார்க்காத அளவில் படம் வசூலை அள்ளியது . முதல்வாரத்தைக்காட்டிலும் அடுத்தவாரம் அதிக வசூல் . போகப்போக திரையரங்குகளில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது . செமெக்கிஸின் வாழ்வில் முதல் மெஹா ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக மட்டும் இல்லாமல் செமெக்கிஸை அடுத்த ஃப்ராங்க் கப்ரா என்றழைக்கப்படும் அளவிற்கு பேரும்புகழும் அடைந்தார் . இதன்பின் டாம் ஹேங்ஸுடன் இணைந்து FORREST GUMP , CAST AWAY , THE POLAR EXPRESS என கலக்கியது தனிக்கதை .

மைக்கேல் இத்திரைப்படத்தினால் தினம் தன் தூக்கத்தை இழந்தார் . படம் வெளியாகுமா ? ஆகாதா ? என்று செமெக்கிஸ் ஒருபுறம் பதறிக்கொண்டிருந்தார் . ஆனால் கடினஉழைப்பிற்கு கண்டிப்பாக பலன் உண்டு என்பதற்கு இத்திரைப்படத்தின் வெற்றி ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு . இதுவரை வெளிவந்த செமெக்கிஸின் திரைப்படங்களில் டாப் – 5 ல் இன்னும் இத்திரைப்படம் நிலைத்து நிற்கிறது . பலவிதமான விருதுகள்  , உலகளவில் சிறந்த படங்களுக்கான அங்கிகாரங்கள் என பேரும்புகழும் செமெக்கிஸிற்கு இத்திரைப்படத்தில்தான் முதலில் கிடைத்தது . படத்தின் அதிதீவிர விசிறியான அக்கால அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனை , டாக் கேரக்டர் கலாய்ப்பதாக இருக்கும் . அதிபர் முதல்முறை பார்க்கும்போது அக்காட்சி வந்ததும் மீண்டும் போட்டுக்காட்ட சொன்னாராம் . பதறிய குழவினார் ‘போச்சுடா ! செமெக்கிஸ்க்கு சனி பிடிச்சிகிச்சி’ என்றபடியே போட்டுக்காட்டினார்களாம் . ஆனால் அதை மீண்டும் ரசித்துப்பார்த்தாராம் ரீகன் .

படத்தின் கதை என்னவென்றால் மார்ட்டி மெக்ஃப்ளை எனும் டீனேஜர் தன் குடும்பம் , காதலி என ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் . அவனின் உற்ற நண்பராக ஒரு ஆராய்ச்சியாளர் இருக்கிறார் . அவர்தான் டாக்டர் எம்மெட் ப்ரௌன் . ஒருமுறை இரவுநேரத்தில் தன்னைச்சந்திக்க வரும்படி டாக் ஆழைக்க அங்கு செல்கிறான் மார்ட்டி . அங்கே ஒரு காரைக்காட்டி தான் உருவாக்கிய டைம்மெஷின் என்று டாக் கூறுகிறார் . அந்த காரை இயக்க 1.21 ஜீகா ஹெர்ட்ஸ் மின்சக்தி தேவைப்பட்டதால் , லிபியத்தீவிரவாதிகளிடம் பாம் செய்து தருவதாகக் கூறி ப்ளுட்டோனியம் வாங்கியதாக டாக் கூறுகிறார் . அச்சமயம் லிபியத்தீவிரவாதிகள் டாக்கைச்சுட்டு விட , மார்ட்டி அக்காரில் ஏறித் தப்பிக்க முயல்கிறான் . அக்காரைக்கொண்டு 88 மைல் வேகத்தில் பயணிக்கும்போது டைம்ட்ராவல் பயணம் சாத்தியமாகும் . மார்ட்டி , தீவிரவாதிகளிடிமிருந்து தப்பிக்க வேகமாக காரைச்செலுத்த , அது டைம் ட்ராவல் ஆகி 1955 ஆம் வருடத்திற்குச்செல்கிறது . அதாவது மார்ட்டி இருக்கும் காலத்திலிருந்து முப்பது வருடம் பின்னோக்கிச்செல்கிறது (பின்னோக்கியா ? முன்னோக்கியா ?). அங்கு செல்லும் அவன் தன் தாய் , தந்தையின் இளம்பிராயத்தினைப்பார்க்கிறான் .

இப்போது மேட்டர் என்னவென்றால் தன் தாயும் , தந்தையும் சந்தித்து காதல் மலருவது ஒரு விபத்தில் . ஆனால் அந்த விபத்து நடக்கும்போது மார்ட்டி தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக , தான் மாட்டிக்கொள்கிறான். இப்போது எதிர்காலம் மாறத்துவங்குகிறது . அவன் தாய் , மார்ட்டியின் மேல் காதல் கொள்கிறாள் . இதை அறியாத மார்ட்டி , அப்போது இருக்கும் டாக்கைச்சென்று பார்த்து அவரிடம் உண்மையைச்சொல்கிறான் . 1.21 ஜீகா ஹெர்ட்ஸ் மின்சக்தி வேண்டுமெனில் மின்னலிடமிருந்து தான் கிடைக்கும் என்கிறார் . ஹில்வாலியில் அடுத்த வாரத்தில் ஒருநாள் ஒரு சுவற்றில் இருக்கும் கடிகாரத்தின்மீது மின்னல் தாக்கப்போவது ஏற்கனவே வருங்காலத்தில் இருக்கும் மார்ட்டிக்கு நியாபகம் வர அதை பயன்படுத்தித் தப்பிக்க முயற்சிக்கிறான் . ஆனால் , இங்கு தன் தாயும் தந்தையும் இன்னும் காதலில் விழாததால் எதிர்காலம் மாறுகிறது  . இவர்களிருவரையும் சேர்த்துவைக்க மார்ட்டி முயற்சிக்கிறான் . இம்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் எனபடும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் தன் தந்தையை , கல்லூரி காலத்திலேயே பிஃப் டேனன் , ஒரு அடிமை போல நடத்துவதைக்கண்டு வெகுண்டெழும் மார்ட்டி அவனிடம் பிரச்சனை செய்கிறான் . அதேநேரம் மார்ட்டியின் தாய் , மார்ட்டியையே காதலிக்க அவள் மனதையும் மாற்றி , தன் தந்தையையும் தாயையும் சேர்த்துவைத்து எப்படி அங்கிருந்து நிகழ்காலத்திற்கு வருகிறான் ? நிகழ்கால டாக் என்ன ஆனார் ? அவனுடைய எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ? என்பதையெல்லாம் நகைச்சுவையுடனும் ரசிக்கும்படியும் பரபரப்பாக கொடுத்திருப்பார் செமெக்கிஸ் .

இன்றளவும் டைம்ட்ராவல் சயின்ஸ்-பேன்டசி பிக்ஷன் ஜானர்களில் தேடினால் முதலில் வரும் இத்திரைப்படம் டைம்ட்ராவல் மற்றும் பேன்டசி ரசிகர்கள் எப்போதும் மிஸ் செய்யக்கூடாத திரைப்படம் . நடிகர்களின் அற்புதமான நடிப்பு  , ட்ராமாட்டிகல் இசை , அக்காலகட்டத்தில் சி.ஜியில் நடத்தியிருக்கும் சாகசகங்கள் என அனைத்துமே அட்டகாசமாக இருக்கும் . படத்தில் எனக்கு மிகமிக பிடித்த கேரக்டர் என்றால் பால்யவயதில் ஜார்ஜ் மெக்ஃப்ளையாக வரும் கிறிஸ்பின் க்ளோவர் தான் . மனிதர் ஒருமாதிரி இம்பீரியாரிட்டி காம்பளக்சுடனும்  , ஒரு அரைவேக்காட்டு பேக்காகவும் வாழ்ந்திருப்பார் . இதற்கடுத்து டாக்காக வரும் கிறிஸ்டோபர் லாய்டு . “GREAT SCOTT” என ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட்டு இவர் உச்சரிக்கும்போது நாமும் ஆச்சரியப்பட்டு நிற்போம் . மார்ட்டி மெக்ஃப்ளை வேடத்தினை பொறுத்தவரை திறமையைக்காட்ட போதிய இடமில்லை . அவருக்கு சாகசம் செய்யவே நேரம் சரியாக இருக்கும் . இருந்தாலும் ஒரு டீனேஜ் மாணவனை கண்முன் நிறுத்தியிருப்பார் . படத்தின் பெரிய ப்ளஸ்ஸாக  நான் கருதுவது படத்தினைப் பார்ப்பவர்களையும் அப்படியே டைம்ட்ராவல் செய்யவைத்தது போன்ற ஒரு ஃபீலிங்கை உருவாக்கியதுதான் . இதன்பின் இரு பாகங்கள் வெளிவந்தாலும் இம்முதல்பாகத்தின் அளவிற்கு பெரும் வரவேற்பினை பெறவில்லை . ஆனால் அத்திரைப்படங்களும் கண்டிப்பாக என்ஜாய்மென்டிற்கு குறைவில்லாத திரைப்படங்கள் என்பதில் துளி ஐயமுமில்லை . இன்னும் பல இன்ட்ரஸ்டிங்கான தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம் .