Thursday, 26 February 2015

Mr.PEABODY & SHERMAN – சினிமா விமர்சனம்

டைம் ட்ராவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? நாமும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து  மண்டையைக்குடைந்து கொண்டேதானிருக்கிறோம் . இன்னும் காலப்பயணம் என்பது கனவுப்பயணமாகவே இருக்கிறது . (17-ஆம் நூற்றாண்டு என்பது மேலைநாட்டினவர்க்கு . நமக்கெல்லாம் மஹாபாரதத்திலேயே ஒரு இன்டர்ஸ்டெல்லர் கிளைக்கதை இருக்கிறது .) சரி , அம்மாதிரியான விஷயங்களைத்திரைப்படத்தில் பார்த்து சிலாகிப்பது தான் நம்விதி என்றால் யாரால் மாற்றமுடியும் . இந்த படம் டைம்ட்ராவலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமேஷன் , அட்வெஞ்சர் , பேமிலி ட்ராமா . இது நான் எழுதும் இரண்டாவது அனிமேஷன்  திரைப்படம் என தினைக்கிறேன் .

ஏற்கனவே டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு THE TIME TRAVELER’S WIFE , INTERSTELLAR ஆகிய திரைப்படங்களைப்பார்த்துள்ளோம் . இந்த படத்தில் நம்மை அசத்தும் விஷயம் என்னவென்றால் , படத்தில் காலப்பயணம் செய்யும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும்தான் . அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்கிறீர்களா ? எகிப்திய பாரோ டட்டான்க் ஆமன் , மோனலிசா புகழ் ஓவியர் லியானர்டோ டாவின்ஸி , பிரஞ்சுப்புரட்சியின்போது பிரான்ஸ் அரசியான மேரி அன்டோனன்ட் , மஹாத்மா காந்தி (கேமியோ) , ஷேக்ஸ்பியர் (கேமியோ) , ஜார்ஜ் வாஷிங்டன் , ஐன்ஸ்டைன் , நியூட்டன் , கிரேக்க வரலாற்றின் முக்கியநிகழ்ச்சியான ட்ராய் போர் , ஆபிரஹாம் லிங்கன் (கேமியோ) என கலக்கியெடுத்திருக்கிறார்கள் . இவர்களைப்பற்றி விரவாக பார்த்தால் நான் வரலாற்றுப்பாடம் தான் எடுக்கவேண்டியிருக்கும் . ஏற்கனவே என்னுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் புத்தகம் போடும் அளவிற்கு பெரிதாகிக்கொண்டே வருவதால் , எவ்வளவு முடியுமோ அவ்வளவு சின்னதாகவே இந்த பதிவை எழுதியிருக்கிறேன் .

PEABODY எனும் நாய் ( இந்தபேர தமிழ்ல டப் பண்ண ஒரு மாதிரியா இருக்கறதால , ஆங்கிலத்துலயே மணக்கட்டும் ) பயங்கர புத்திசாலி . நோபல் பரிசெல்லாம் வாங்கியிருக்கும் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா .  ஒருசமயம் வழியில் ஒரு குழந்தை அநாதையாக இருப்பதை பார்க்கின்றது .வழக்கமாக நாயைத்தான் மனிதர்கள் தத்தெடுப்பார்கள் . இங்கோ நாய் மனிதனை தத்தெடுக்கிறது . அந்த குழந்தையைக் கோர்ட்டு அனுமதியுடன் அநாதையான PEABODY , அந்த குழந்தைக்கு ஷெர்மான் எனும் பெயரிட்டு பாசமாக வளர்க்கிறது . ஷெர்மான் எப்படிப்பட்டவன் என்றால் நம் தந்தை , நம்மை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவாரோ அம்மாதிரியே இருக்கிறான் . ஷெர்மானுக்கு , தான் கண்டுபிடித்த WAPAC எனும் டைம்ட்ராவல் மெஷினின்வழியே ஒவ்வொரு நாளும் பயணித்து  உலகின் வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் PEABODY காட்டுகிறது . ஷெர்மானுக்கு 7 வயது ஆகியதும் பள்ளியில் கொண்டு சேர்க்கிறது . பள்ளியில் ஆசிரியை கேள்வி கேட்க , யாரையும் சொல்லவிடாமல் அனைத்துக்கேள்விகளுக்கும்  ஷெர்மானே பதிலளிக்கிறான் . வகுப்பறையில் அவன் உடன்படிக்கும் பென்னி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல , அதை தப்பு என்று கூறுகிறான் . காண்டான பென்னி , அவனைக்கலாய்த்து டீசிங் செய்ய ஒரு கட்டத்தில் ஷெர்மான் அவளைக்கடித்துவிடுகிறான் . பள்ளியில் அப்பெண் கம்ப்ளைன்ட் செய்ய , மனிதஉரிமை மாதிரியான ஆனையத்திலிருந்து ஒரு பெண் விசாரணைக்கு வருகிறாள் . அவள் PEABODY – யின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி ஷெர்மானை , PEABODY-யிடம் இருந்து பிரிக்க  முயற்சி செய்கிறாள். பென்னியையும் ஷெர்மானையும் நட்பாக்க  PEABODY , பென்னியின் பெற்றோர்களை டின்னருக்கு அழைக்கிறது . எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது பென்னியின் வற்புறுத்தலால் , ஷெர்மானும் பென்னியும் டைம்மெஷினில் பயணிக்கிறார்கள் . பழங்கால எகிப்தில் கிங் டட்டை திருமணம் செய்யப்போகிறேன் என்று பென்னி (7வயது!!) கூறிவிட்டுத்திரும்பி வர மறுக்கிறாள் . மீண்டும் ஷெர்மான் மட்டும் நிகழ்காலத்திற்கு வந்து PEABODY – யிடம் கூறி , அவரைக்கூட்டிச்செல்கிறான் . அங்கே இருந்து பென்னியை மீட்டுக்கொண்டு வரும்போது பிரச்சனை ஆக , எல்லோரும் டாவின்சியின் காலத்திற்கு செல்கிறார்கள் . ஏற்கனவே PEABODY – க்கும் டாவின்சிக்கும் அறிமுகமிருக்க , டாவின்சியின் உதவியோடு டைம்மெஷினை சரிசெய்து செல்கிறார்கள் . வழியில் கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு ட்ராய் போரில் மாட்டிக்கொள்கிறார்கள் . அதில் PEABODY இறந்துவிட , அதன்பின் நடக்கும் சம்பவங்களே இத்திரைப்படம் .படத்தின் கதை என்னவோ சுமாராக இருந்தாலும் வரலாற்றின் கதாநாயகர்களை ஸ்பூஃப் செய்யப்பட்டிருக்கும் விதம் அருமையான ரசனை . மோனலிசாவுக்கும் டாவின்சிக்கும் நடக்கும் சண்டையும் , அதன்பின் அவர் எப்படி போஸ் கொடுக்கிறார் என்பதனையும் படத்தின் கதாபாத்திரங்களுடன் லிங்க் செய்திருப்பது அட்டகாசமான விஷயம். நான்காம் அமோனத்தோவ் எனும் கொடுங்கோலன் , ஏடோன் எனும் கடவுளை வணங்கச்சொல்லி கட்டாயப்படுத்தியதும் , அதன்பின் வந்த அவரது மகன் கிங் டட் , அடோனிலிருந்தும் அதோமிற்கு வணங்கச்சொன்ன நிகழ்வை இதில் அட்டகாசமாக லிங்க் செய்திருப்பார்கள் . உணவின் காரணமாக ஏற்பட்ட பிரெஞ்ச் புரட்சி போன்றவற்றையும் ஜாலியாக எடுத்திருப்பார்கள் . விஷுவல் , அனிமேசன் ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக சாதாரணமாக இருந்தாலும் , திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளால் அருமையாக போகிறது . கிளைமேக்ஸ் காட்சியில் ஜார்ஜ் வாஷங்டன்  ஹீரோ குருப்புடன் பேசிக்கொண்டிருக்கும்போது காந்தி ஒருவித புன்னகையுடன் இருப்பது செம . படத்தில் ஸ்பூஃப் செய்யாமல் காந்தியின் இரு பிரேம்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள் .

கிரேக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ட்ராய் போர் பற்றி ,  பார்வையற்ற ஹோமரால் எழுதப்பட்ட கிரேக்க காவியங்கள் லியெட் மற்றும் ஒடிசி ( இவைகளுடன் ஒப்பிடத்தக்க அளவில் தமிழிலும் ஒரு அட்டகாசமான இலக்கியம் உள்ளது . வேறு என்ன ? சீவக சிந்தாமணிதான் ) ஆகியவற்றில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன . இதைவிட கிரேக்க வரலாற்றாசிரியரும் உலகவரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹெரடைடஸை வாசித்தால் எகிப்தின் வரலாறு , கிரேக்க வரலாறு உட்பட பல வரலாற்றுகளை அறிந்துகொள்ளலாம் . மக்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டத்தில் பிரான்ஸின் அரசகுடும்பத்தினர் மக்களைக்கண்டுகொள்ளாமல் , பிரபுக்களின் ஆதிக்கத்தில் விட்டிருந்தனர் . அந்த பிரபுக்களோ மக்களை வாட்டியெடுக்க , அரசகுடும்பத்தினர் சுகபோகத்தில் திளைக்க , வெறுப்பான மக்கள் பிரெஞ்ச் புரட்சியை உண்டாக்கினர் . உலகின் முன்னேற்றத்திற்கு தேவை குடியாட்சியே என்று வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய அப்புரட்சியின் இறுதியில் கில்லட்டில் தலை துண்டிக்கப்பட்டு அரசகுடும்பத்தினர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அச்சோ ! மன்னித்துவிடுங்கள் . பாடம் நடத்த ஆரம்பித்ததற்கு .


இப்படம் 1960-களின் இறுதியில் தொலைக்காட்சி அனிமேஷன் தொடராக வெளிவந்து ஹாலிவுட்டை கலக்கியது . அதன்பின் அதேகான்செப்டை தூசிதட்டி ஏதேதோ பெயர்களில் ஒளிபரப்பாக்கியிருக்கிறார்கள் . பின் 2014-ல் THE LION KING , STUARD LITTLE போன்ற படங்களை இயக்கிய ராப்பின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது . வசூல் ரீதியிலும் ஓரளவு கலக்கிய இத்திரைப்படத்தை , நேரமிருப்பின் ஒருமுறை பாருங்கள் . நல்லதொரு எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் . சயின்ஸ் பிக்சன் ரசிகர்கள் , இயற்பியல் துறைசார் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம் . வழக்கம்போல அனிமேஷன் படங்களில் இருக்கும் கண்ணியமான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகள் என்பதால் குடும்பத்துடன் பார்க்கலாம் . 


தொடர்புடைய இடுகைகள்

Tuesday, 24 February 2015

CN’S - INCEPTION – ஒரு பார்வை

“ FILMS ARE SUBJECTIVE – WHAT YOU LIKE , WHAT YOU DON’T LIKE . BUT THE THING FOR ME THAT IS ABSOLUTELY UNIFYING IS THE IDEA THAT EVERYTIME I GO TO THE CINEMA AND PAY MY MONEY AND SITDOWN AND WATCH A FILM GO UP ONSCREEN , I WANT TO FEEL THAT THE PEOPLE WHO MADE THAT FILM THINK IT’S THE BEST MOVIE IN THE WORLD , THAT THEY POURED EVERYTHING INTO IT AND THEY REALLY LOVE IT . WHETHER OR NOT I AGREE WITH WHAT THEY’VE DONE , I WANT THAT EFFORT THERE – I WANT THAT SINCERITY . AND WHEN YOU DON’T FEEL IT , THAT’S THE ONLY TIME I FEEL LIKE I’M WASTING MY TIME AT THE MOVIES ”
-     CHRISTOPHER NOLAN

காமிக்ஸ் தழுவலும் இல்லை . நாவல் அடாப்சனும் இல்லை . வீடியோகேம்களை கொண்டும் உருவாக்கப்படவில்லை . தொலைக்காட்சித்தொடர்களைத்தழுவியும் எடுக்கப்படவில்லை . ஆனால் இன்செப்ஷன் மேற்கண்ட தழுவல்களில் அந்த சம்மரில் வந்த அத்தனைப்படங்களையும் ஊதித்தள்ளி வெற்றிக்கொடி நாட்டியது . இத்தனைக்கும் ஒரு சின்ன விஷயத்தை வைத்து 830 மில்லியன் டாலர் சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயமா ?

கனவுகள் இதைப்பற்றி அறியாத தமிழர்களே இருக்கமுடியாது . பகல்கனவு என்பது தமிழர்களுடன் பிறந்தது . கனவுக்காட்சிகள் என்பது தமிழ்சினிமாவுடன் பிறந்த ஒரு விஷயம் . 90 சதவீத தமிழ்ப்படங்களில் கனவுக்காட்சிகள் ( பெரும்பாலும் பாடல்கள் ) இல்லாமல் இருக்கவே முடியாது . இந்த ஐடியா தான் நோலனுக்கு இன்செப்ஷனை உருவாக்க உதவியிருக்கலாம் . நாமெல்லாம் ஹீரோ அல்லது ஹீரோயினின் கனவுக்குள் புகுந்து பாடல்களைத்தான் இயக்குவோம் . நோலன் ஒருபடி மேலே போய் கனவுக்குள் ஒரு படமே எழுதி இயக்கிவிட்டார் . நமக்கு சாதாரணமாக ஒரு இரவுக்கு 2 முதல் 4 வரை கனவுகள் வரும் . ஆனால் கனவுக்குள் கனவு என்பது ரொம்ப ரேர் ஆன விஷயம் . ஒருவகையில் இன்செப்ஷனுக்கும் என்னுடைய ப்ளாக்குக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது . இந்த படம் பார்த்தபின்தான் கிறிஸ்டோபர் நோலன் எனும் இயக்குநர் இருப்பதே எனக்குத்தெரியும் . அதன்பின் அவருடைய படங்களைத்தேடிப்பிடித்து பார்த்து , அவரின் வெறித்தனமான ரசிகரானதெல்லாம் தனிக்கதை . ஒருவேளை இந்த படம் மட்டும் பார்த்திராமல் இருந்திருந்தால் , இந்த வலைத்தளத்தை ஆரம்பித்து , அந்த படத்தைப்பார் , இந்தப்படத்தைப்பார் என்று உங்களையெல்லாம் எழுதி எழுதி மிரட்டியிருக்கமாட்டேன் . நீங்களும் நிம்மதியாய் இருந்திருக்கலாம் . நோலன் இஸ் கிரேட் .

சரி ,என் வலைத்தளத்திற்கும் இன்செப்சனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

சம்பந்தம் எண் 1 எனக்கு இப்படம் பார்க்கும்முன் நோலன் என்றால் யாரென்றே தெரியாது . என்னுடைய சினிமா பார்வையானது , தமிழ் , தெலுங்கில் சில படங்கள் , ஆங்கிலப்படங்களில் குறைந்தபட்சம் 400கோடிக்குமேல் பட்ஜெட்டில் உருவாகும் கிராபிக்ஸ் படங்கள் அவ்வளவே. இந்த படத்திற்குபிறகு தான் திரைக்கதை என்ற ஒன்றின் முழு அர்த்தமும் தெரியும் . இந்த படத்திற்குபிறகுதான் சிறந்த திரைக்கதைகளை உடைய படங்களாக தேடிப்பிடித்துப்பார்க்க ஆரம்பித்தேன் (உண்மையில் நோலனின் இயக்கத்தில் முதன்முதலில் நான் பார்த்த திரைப்படம் தி டார்க் நைட் ரைசஸ் தான் ).

சம்பந்தம் எண் 2 நான் ப்ளாக்குகளை ஓரளவு வாசிப்பவன் . அப்படி வாசித்துவிட்டு இரவு தூங்கும் வேளைகளில் நானும் ப்ளாக் ஆரம்பித்து இப்படியெல்லாம் எழுதி பெரும்பேரும்புகழும் வாங்குகின்ற மாதிரியான கனவுகள் அவ்வப்போது வந்து என்னை மகிழ்விக்கும் . ஒரு கட்டத்தில் கனவானது 6 மாதங்களுக்குமுன் நனவானது . நான் எழுதும் படங்களுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாகவும் , என் கனவின் வெளிப்பாடாகவும் இருந்தது இன்செப்சன் தான் .
சரி , என் கனவு ஒருபுறம் இருக்கட்டும் . புவியீர்ப்பு விசையைக்கண்டுபிடித்த நியூட்டனிடம் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் .

எப்படிணே கண்டுபுடிச்சிங்கஎன்று செந்தில் போல கேட்க , அவரோ
நா எங்க கண்டுபுடிச்சேன் . எல்லாம் தானா வந்து விழுந்துச்சி என்றிருக்கிறார் . அவர் விழுந்தது என்று குறிப்பிடுவது ஆப்பிளை இல்லை , ஐடியாவை .

லூசி எனும் ஆங்கிலத்திரைப்படத்தைப்பற்றி அறிந்திருப்பீர்கள் . அந்த படத்தில் ஹீரோயினின் மூளையானது 100 சதவீதத்தை நெருங்கியதும் , கிட்டத்தட்ட இந்த பிரபஞ்சத்தின் அனைத்துவிஷயங்களையும் கற்றுக்கொள்வதாக காண்பித்திருப்பார்கள் . அதாவது , நம் மூளையானது தன்னுடைய அதிகபட்சத்தை எட்டும்போது , நமக்குமுன் நடந்த விஷயங்களைத்தானே அறிந்துகொள்ள முயல்கிறது . இன்னும் சொல்லப்போனால் அவதார் படத்தில் நாவிக்கள் குடியிருப்பதாக ஒரு மரம் காட்டுவார்கள் . அம்மரத்தை அழிக்கக்கூடாது என்று எப்போது பார்த்தாலும் தம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பாட்டி சொல்லும். எதனால் அதை வெட்டக்கூடாது என்றால் அம்மரத்தில் மனிதமூளையிலிருக்கும் நியூரான்கள் போன்ற கனெக்ஷென்கள் , அக்கிரகத்தின் ஒட்டுமொத்த தகவல்களையும் தன்னுடன் சேமித்துவைத்துள்ளது எனக்கூறுவார் . கிட்டத்தட்ட அதேநிலைதான் நம் மூளைக்கும் . நாம் நம்முடைய முழு அளவினாலான அறிவை எட்டும்போது நமக்குமுன் நடந்த விஷயங்களை , எதிலும் படிக்காமல் தன்னால் அறிந்துகொள்வோம் என்று அறிவியலார் கண்டறிந்துள்ளார்கள் . அந்த தியரியைப்பயன்படுத்தித்தான் லூசி படமே எடுக்கப்பட்டிருக்கும் .
சரி , படிக்காமல் எப்படி அறிந்துகொள்வது ? இதுதான் உள்ளுணர்வு . இதை மனிதர்கள் ஆழமான நிலையில் முழுமையாக உணருவார்கள் . ரொம்ப சிம்பிளாக உங்களைக்குழப்ப வேண்டுமென்றால் நம் எல்லோருக்கும் அவரவர் தந்தை மற்றும் தாயின் ஜீன்கள் உள்ளே இருக்கின்றன . இப்போது யோசித்துப்பாருங்கள் . நம் தந்தையின் ஜீன்கள் , நம்முடைய தாத்தாவிடமிருந்து வந்திருக்கும் . அதேபோல் ஒவ்வொருத்தராய் சென்றால் , கடைசியில் சைனோ பாக்டிரியாவில் (இதுதான் உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரி ) சென்று நம்முடைய ஜீன்கள் முடிவடையும் . அதனால் , நம் அனைவரிடமும் , நம் மனித இனத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ஜீன்கள் இருக்கின்றன . அதைத்தூண்டிவிடுவதன் மூலம் நம் இறந்தகாலத்தை அறிந்துகொள்ளலாம் (குறைந்தபட்ச தமிழ் உதாரணம்ஏழாம் அறிவு) .

இறந்தகாலம் என்ற ஒன்றை நம்மால் அறிந்துகொள்ளமுடியும் என்றால் எதிர்காலத்தையும் அறிந்துகொள்ள நம்மால் முடியுமல்லவா ? அதை எவ்வாறு அறிந்துகொள்வது ? கனவுகள் தான் அதற்கான தூண்டுகோள் . உங்களில் பலருக்கு தேஜாஊ எனும் நிலை ஏற்பட்டிருக்கும் . அதாவது ஒரு விஷயம் நடைபெறும்போது  , இந்தவிஷயம் ஏற்கனவே எங்கோ நடந்திருக்கிறதே என்றுதோன்றும் . அதைத்தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , இடம் என அத்தனையும் நாம் ஏற்கனவே அறிந்திருந்தது போன்றதொரு பிரமை ஏற்படும் . கிட்டத்தட்ட அதுகூட கனவுமாதிரிதான் .


இந்த கனவைப்பற்றிய ஆராய்ச்சியில் எக்கச்சக்கமான விஞ்ஞானிகளும் உளவியல்நிபுணர்களும் இறங்கியிருந்தாலும் , இன்னும் யாரும் 100 சதவித உண்மையான நிருபணத்தைக் கண்டுபிடிக்கவில்லை . கனவு என்றாலே உடனே நியாபகம் வரும் சிக்மென்ட் ஃப்ருய்ட் என்ற ஆஸ்திரிய உளவியல் நிபுணர் என்ன சொல்கிறார் என்றால் COMPENSATION THEORY- குறிப்பிட்டு நிஜவாழ்வில் நிறைவேறாத விஷயங்கள் கனவாக வருவதாக தெரிவிக்கிறார். இப்போது நாம் பஸ்ஸில் ஒரு சூப்பரான ஃபிகரைப்பார்க்கிறோம் , பார்த்ததும் இவளமாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்னு தோன்றும் . ஆனால் நாமோ , அவளின் கணவனை நினைத்தோ , இல்லை நம் மனைவியை நினைத்தோ அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்துவிடுவோம் . அந்த பெண்ணின் உருவமோ நம் மனதின் அடியில் தங்கிவிடும் . நம்மையும் தாண்டி  அவள் என்றாவது ஒருநாள் நம் கனவில் , நமக்கு மனைவியாய் வருவார் . இதுதான் அந்த தியரி . ஆனால் , இதனால்கூட கனவுகள் வரலாம் என்று சில விஷயங்களைப் போகிறபோக்கில் சிலர் தூவிவிட்டுச்சென்றுள்ளார்கள் . முதலாவதாக நம் கானும் கனவுகளுக்கும் நிஜவாழ்விற்கும் தொடர்பிருக்கலாம் என்று சிலரும் , நாம் உறங்கும்போது நம்மூளையானது அன்று நடந்த நிகழ்ச்சிகளைத்தொகுத்து , தேவையானதை வைத்துக்கொண்டுத் தேவையில்லாதவற்றை அழித்துக்கொண்டிருக்கும் என்றும் அதனால் கனவுகள் ஏற்படுகின்றன என்று சிலரும் கூறுகின்றனர் . இதுகுறித்து நம் தமிழ் இலக்கியங்களில்கூட பல்வேறு குறிப்புகள் உள்ளன .

சச்சந்தனை , கட்டியங்காரன் போட்டுத்தள்ளப்போவதையும் , சீவகன் பிறக்கப்போவதையும் , அவன் எட்டு பெண்களை திருமணம் செய்யப்போவும் நிகழ்ச்சியை  அசோக மரம் வேருடன் பிடுங்கி சாய்வதாகவும் , அதன்கீழே ஒரு குட்டி மரம் தோன்றியதாகவும் , அது எட்டு மணிகளுடன் ஜெகஜோதியாய் இருந்ததுஎன்றும் சீவகசிந்தாமணியில் விசையை கனவு காண்பாள் . அதாவது  கனவுகள் , ஒரு குறியீடுகளாய் கூட வரும் என்று 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்கத்தேவர் கூறியிருக்கிறார் . மேலும் சச்சந்தனுக்கு அந்த கனவுகளின் பலன் என்ன என்பதும் தெரிந்துவைத்திருப்பான் . இங்கே சீவக சிந்தாமணியில் அசால்டாக கூறிய விஷயத்தைத்தான் 19-ம் நூற்றாண்டில் 20 வருடம் கஷ்டப்பட்டு கனவுகள் குறியீடுகளாய் வரலாம்என்று சிக்மென்ட் கூறியிருக்கிறார் . சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் என பல இலக்கியங்களில் கனவுகள் பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக இருக்கிறது .


சரி , இன்ஷெப்சன் படத்தின் கதையை ஒருமுறை மேலோட்டமாக பார்ப்போம் (அப்பாடா !).
காப் (டீ காப்ரியோ)ஒருவரின் கனவினுள் புகுந்து , அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் ரகசியத்தைக் களவாடும் கெட்டிக்காரன் .

மால் (மரியன் கோடிலார்ட்)காப்பின் மனைவி . இந்த வாழ்க்கை கனவா ? நனவா எனப்புரியாமலே தற்கொலை செய்துகொள்கிறாள் . இவளின் சாவுக்குத்தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் ஹீரோ தவிக்கிறார். அவள் இறக்கும்முன் என் சாவுக்கு காரணம் என் புருஷன்தான் என்று எழுதிவிட்டு சாக , செத்தும் கெடுத்த மாலால் , ஹீரோ தன்தாய்நாடான அமெரிக்கா பக்கம் போகமுடியாமல் தவிர்க்கிறார் . அதேநேரம் ஹீரோ , ஒருவரின் கனவில் புகுந்து திருட முயலும்போது மாலின் நினைவுகள் குறுக்கிடும் .

சைட்டோ (கென்) பெரிய கோடிஸ்வரர் . இவரிடமிருந்து ரகசியம் ஒன்றை கனவின்வழியே களவாடச்செல்லும் ஹீரோவை , இவர் கண்டுபிடித்து , தனக்காக ஒருவன் மனதில் ஒரு ஐடியாவை விளைக்கவேண்டும் என்று நிர்பந்தபடுத்துவார் . அப்படி மட்டும் கரெக்டாக செய்துவிட்டால் , ஹீரோவை , மாலின் கொலைவழக்கிலிருந்து மீட்டு , அமெரிக்காவில் உள்ள அவருடைய குழந்தைகளிடம் சேர்ப்பதாக கூறுகிறார் .

பிஷ்ஷர் (சில்லியன் மர்பி)இவன்தான் சைட்டோவின் புது தொழில் எதிரி . இவனுக்கும் இவன் தந்தைக்கும் ஒருவிதமான குழப்பநிலையே ஓடிக்கொண்டிருந்தாலும் , இவனுடைய கம்பனி  , சைட்டோவின் கம்பனியைவிட பெரிதாகிக்கொண்டே வரும் . அதைவிரும்பாத சைட்டோ , ஹீரோ காப்பின் உதவியை நாடிச்சென்று , அவன்மனதில் புது ஐடியாவை உருவாக்கி , அதன் வழியே அவன் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறான் .

அடுத்து , காப்பின் டீம் .

ஆர்த்தர் (ஜோசப் கார்டன்)காப்பின் வலதுகை .

ARIADNE (எலன் பேஜ்) ( இந்த பேர எப்படி தமிழ்ல சொல்றதுனு தெரியல .) – கல்லூரி மாணவியான இவர்  காப்பினால் , கனவு உலகை டிசைன் செய்யும் வேலைக்கு பொறுப்பேற்கிறார் . அதாவது ஆர்ட் டிசைனர்னு வச்சிக்கோங்க .

யூசுப் (திலிப் ராவ்)இவர்  தூக்கத்தை அதிகரித்து , கனவின் நிலையைப்பாதுகாக்கும் ஒரு மருந்துவியாபாரி எனலாம் .

ஈம்ஸ் (டாம் ஹார்டி)கனவுக்குள்ளே ஒரு போர்ஜரி மன்னன் . கனவினுள் யார்மாதிரியான உருவமும் வாய்ஸும் எடுத்துக்கொள்பவன் . இவர்தான் டார்க்நைட் ரைஸஸில் பெய்ன் ஆக வருவார் .
 இப்போ மேட்டர் என்னவென்றால்  காப் , பிஷ்ஷரின் கனவுக்குள் புகுந்து ஐடியாவை விதைக்கவேண்டும் . ஆனால் , அது பலமாக அவன்மூளையில் இறங்கவேண்டும் . அதற்கு என்ன செய்யவேண்டும் ? கனவுக்குள் நுழைந்து , கனவினுள் பிஷ்ஷருக்கு இன்னொரு கனவை வரவைத்து , அந்த கனவுக்குள்ளேயும் இன்னொரு கனவை வரவைத்து , கடைசியில் ஐடியாவை விதைக்கவேண்டும் . இதற்கு பெயர்தான் இன்செப்ஷன் . பிஷ்ஷரின் கனவுக்குள் ஹீரோவின் டீமுடன் சைட்டோவும் செல்கிறார் . ஒரு கனவுக்குள் நுழையவே தூக்கமருந்துகள் அதிகம் உபயோகப்படுத்த வேண்டி இருக்கும் . அந்த கனவுக்குள் இன்னொரு கனவு என்பதால் , அதற்குள்ளும் மருந்துகள் பயன்படுத்தவேண்டும் . சாதாரணமாக ஒரு கனவில் யாராவது இறந்துவிட்டால் , அவர்கள் கனவிலிருந்து நிஜஉலகிற்கு விழித்துக்கொள்வார்கள் .ஆனால் மருந்தின் அளவு அதிகரிப்பதால் , இன்ஷெப்சனுக்குள் நுழைந்தவர்கள் லிம்போ எனும் கோமா நிலைக்குத்தள்ளப்படுவார்கள் . ஏற்கனவே மாலினால் குழப்பம் ஏற்பட , அதேநேரம் சைட்டோவும் கனவில் அடிபட்டுவிட , அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் இன்செப்ஷன் . புரியலயா ? அப்டினா படத்த பாருங்க ! தானா புரியும்  இதற்கான விளக்கங்களைத்தான் படத்தின் முதல் 45நிமிடம் நம்மை உட்காரவைத்து பாடம் நடத்துவார் நோலன் . நீங்களெல்லாம் பாடம் புரிஞ்சிடுச்சி , இல்லை குழப்புகிறது என்றால் கடைசியில் உங்கள் பழைய குழப்பத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து , புதுக்குழப்பத்திற்கு கமா இடுவார் .

படத்தில் கனவுக்கென்று சில இலக்கணங்களை நோலன் கூறியிருப்பார் .நான் தேடியவரையில் அதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை . உங்கள் யாருக்காவது தெரிந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள் . இந்த டாட்டும் , கனவுகளின் நிலை , லிம்போ , போன்றவைப் பற்றியெல்லாம் பலர் பொழந்துகட்டி எழுதியதால் நான் மீண்டும்மீண்டும் மொக்கை போடாமல் முடித்துவிடுகிறேன் . இந்த லிம்போ , கனவு, டாட்டம் , காட்சிகள் போன்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த லிங்கை அழுத்தி படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


   

நாம் FOLLOWING பதிவிலேயே பார்த்திருக்கிறோம் , நோலனுக்கு இலக்கியபரிட்சயம் எந்நிலையில் இருக்கிறது என்று . சுஜாதா ஒரு பேட்டியில் படைப்பாளிகள் , தாங்கள் அனுபவித்ததை ,அனுபவிக்க நினைத்ததை , அல்லது தங்களின் வாழ்வினில் தாங்கள்  கண்ட உண்மைகளை வைத்துதான் மிகச்சிறந்த படைப்புகளை கொடுக்க முடியும்என்கிறார் ஒரு ஆக்ஸிடன்டை மையமாக வைத்து அவர் எழுதிய ஒரு சிறுகதையில் இதைக்குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன் . இப்போது நோலனிடம் வருவோம் . நோலனின் திரைப்படங்களை உற்றுநோக்கினால் ஒன்று தெரியும் . FOLLOWING ஒரு நான்லீனியர் சிறுகதையைப்போல பயணித்து கடைசியில் ஒரு ட்விஸ்டோடு முடியும் . MEMENTO திரைப்படமோ ஒரு நான்லீனியர் நாவலின் தாக்கம் படம் முழுக்க வீசும் . THE PRESTEGE ஒரு துப்பறியும் நாவலைப்போல நகரும் . BATMAN உளவியல் ரீதியிலான ஒரு சூப்பர்ஹீரோ  தொடர்கதையாய் இருக்கும்  ( யோவ் போதும்யா ! என்னதான் சொல்லவர நீ ?னு டென்சன் ஆகதிங்க ) . இப்போது மேட்டர் என்னவென்றால் இதுதான் . இப்படத்தில் காப்  , தன் மனைவி இறந்ததற்கு தான்தான் காரணம் என்றெண்ணி குற்ற உணர்வில் இருப்பார் . இந்த குற்ற உணர்வு அடாப்சன் ஆனது நோலனின் அண்ணனான மேத்யூவிடம் இருந்துதான் . 2005-ல் ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேத்யூ , 14 மாதம் சிறையில் இருந்திருக்கிறார் . உண்மையில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை . தன்கண்முன்னே அண்ணனின் வாழ்வினில் நடந்த விஷயங்களைக்கொண்டு , காப்பின் கேரக்டரைசேசனை பூர்த்திசெய்திருப்பார் .

நோலனின் சிறுவயதில் மனதினுள் எழுந்த ஐடியாவின் பரிமாணமே , இன்செப்ஷன் . கனவுகளுக்கும் சினிமாவுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று சிறுவயதுமுதலே நினைத்தவருக்கு , பெரிதாக பெரிதாக அந்த நினைப்பு எனும் ஐடியா , இன்செப்ஷன் எனும் படத்தின் திரைக்கதையாக பரிணமித்தது . கிட்டத்தட்ட 10 வருடங்கள் இப்படத்தின் திரைக்கதையை பூர்த்தி செய்ய நோலனுக்கு முழுதாக ஆனது . PAN’S LIBYRINTH , THE INFERNO , MINATAUR , THE MATRIX போன்றவைகளின் ஐடியாக்களை கொண்டுதான் நோலன் இன்செப்ஷனின் ஐடியாவை விரிவாக்கினார் . இன்சோம்னியா முடித்த கையோடு எடுக்கப்பட வேண்டிய இத்திரைப்படம் , நோலனின் அனுபவமின்மையாலும் , ஸ்கிரிப்டில் காணப்பட்ட சில குறைகளாலும் அப்போது எடுக்கப்படவில்லை . அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாய்  , ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுமையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார் நோலன் . WB-ன் நெருக்கடியால் இப்படத்தின் சில காட்சிகளை  3D டெக்னாலஜிக்கு மாற்றிப்பார்த்த நோலன் திருப்தியடையாததால் , படத்தை 2D யிலே வெளியிட்டார் .கிளைமேக்ஸ் காட்சியில் காப்பின் டோ ( அதாங்க பம்பரம் ) , சுற்றிக்கொண்டேஇருக்கும் . ஆனால் காப் , தன் குழந்தைகளைப்பார்த்ததும் அவர்களை நோக்கிச்செல்வான் . இக்காட்சியைப்பற்றிய எண்ணற்ற குழப்பங்கள் இன்னும் உலா வருகிறது . இது காப்பின் லிம்போவில் ஏற்படும் விஷயம் என்று பலர் கொக்கறித்தாலும் , இதற்கான விடையை நோலன் இவ்வாறு சொல்கிறார் . அதை லிம்போவா , நிஜமா என்று ஆராய்ச்சி செய்வதைகாட்டிலும் , காப்பின் பாசத்தை உணர்ந்தாலே போதும் . படத்தில் அடிக்கடி காப்பின் இரு குழந்தைகள் வருமே  , அதில் வரும் குட்டிப்பையன் நோலனின் மகனே தான் . ஆனால் , கிளைமேக்ஸில் வருவது கொஞ்சம் பெரிய குழந்தைகள் . நன்கு கவனிக்கவில்லையெனில் செம குழப்பம் ஏற்படக்கூடிய காட்சி அது .இன்னொரு விஷயம் . நோலனின் FOLLOWING, INSOMNIA தவிர்த்து மற்ற படங்களை உற்றுநோக்கினால் ஒரு விஷயம் தெரியும் . மெமென்டோவில் ஹீரோவின் பொண்டாட்டியை கொன்றுவிடுவார் . BATMAN TRIOLOGY-ல் காதலியைக் (ரேச்சல்) கொன்றுவிடுவார் . இன்செப்ஷனில் மனைவி (மால்) தற்கொலை செய்யவைத்துவிடுவார் . இன்டர்ஸ்டெல்லரிலும் மனைவி இறந்துவிட்டதாக காட்டுவார் . ஒவ்வொரு படத்திலும் மனைவகளை  பழிவாங்கிக்கொண்டிருக்கிறார் . எம்மா மேல் என்ன கோவமோ ?

படத்தில் ANTI GRAVITY காட்சிகள் எல்லாம் சி.ஜி இல்லாமல் ஒரிஜினாலாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . இதிலென்ன ஆச்சர்யம் ? நோலன் சி.ஜி உபயோகித்து எடுத்திருந்தால் தானே ஆச்சரியம் என்கிறீர்களா ? அதுவும் கரெக்டுதான் . ஆனால் இப்படத்தில் இவர் உபயோகித்த சில சி.ஜி காட்சிகள் ஆஸ்காரைத்தட்டிச்சென்றன . பெரும்பாலும் சி.ஜி உபயோகப்படுத்தமாட்டார் . உபயோகப்படுத்தினால் வெற்றி காணாமல் விடமாட்டார் . இன்டர்ஸ்டெல்லரும் நேற்று அவார்டு தட்டியதை மறக்கவேண்டாம் .இந்த ஆன்டி கிராவிட்டி காட்சிகளின் அடிப்படை , 2001 A SPACE ODISSEY தான் என்று தனியாக சொல்லத்தேவையில்லை .


டீகேப்ரியோ , இப்படத்திலும் உயிரைக்கொடுத்து நடித்திருப்பார் . ஆஸ்கார் குழுவுக்கு இவர்மேல் என்ன கோவமோ ? இதுவரை ஒன்றுகூட கிடைக்கவில்லை . நோலனுக்கும் இதேபிரச்சனைதான் . மாலாக வரும் மரியன் , அழகுதேவதையாகவும் கனவுலகில் வில்லியாகவும் அசத்தியெடுத்திருப்பார் . போதையேற்றும் பேதைப்பெண்ணாக இவர் வரும் காட்சிகளிலெல்லாம் ஆஹா போடவைத்திருப்பார் . சைட்டோவாக வரும் கென்னும் வில்லத்தனத்திலும் , சில காட்சிகளில் கெத்து காட்டும்போதும் செம . பிஷ்ஷர் போகும் விமானத்தில் டிக்கெட் போடுங்கள் என காப்ரியோ கட்டளையிடும்போது  , அந்த விமானநிறுவனத்தையே வாங்கிவிட்டேன் என இவர்கூறுவதெல்லாம் ஹுயுமரின் உச்சம் . பிஷ்ஷராக வரும் சில்லியன் மர்பி , அசட்டுப்பிள்ளையாகவும் , தன் தந்தையின் மீது உள்ளுக்குள் பயங்கர பாசம் வைத்திருப்பவராகவும் அட்டாகசம் செய்திருக்கிறார் . ஒரே காட்சியில் மைக்கேல் கெய்ன் , ஹீரோவின் தந்தையாக வந்தாலும் மனதில் நிற்கிறார் . ஆர்தராக வரும் ஜோசப் ., ஹீரோவுக்குப்பின் அதிக ஸ்கோப் இருக்கும் கேரக்டர் . மனிதர் இருப்பதே தெரியாமல் நடித்திருப்பார் . இன்னும் திலிப் ராவ் , டாம் ஹார்டி , எலன் ஆகியோர் என படத்தில் வரும் அத்தனை பேருத் மிகச்சிறப்பாக தங்களின் பாத்திரத்தை பூர்த்திசெய்திருப்பார்கள் . நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மர் , வழக்கம்போல படதுக்குத்தேவையான இடத்தில் , சரியான இசையை வழங்கியிருப்பார் . விஷுவல் எஃபெக்ட் டீமும் அட்டகாசம் செய்திருப்பார்கள் . வாலி பிஸ்டர் பற்றி ஏற்கனவே மெமன்டொ பதிவில் பார்த்திருக்கிறோம் . அந்த மனிதரின் கடும் உழைப்புக்கு இப்படத்தில்தான் ஆஸ்கார் கிடைத்தது . இத்துடன் இன்னும் இருவிருதுகளும் இப்படத்திற்கு கிடைத்தது . மொத்தம் 8 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் 4- த் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது .


இன்னும் எழுதவேண்டும் என்ற ஆசையிருந்தாலும் , படிக்கும் நீங்களெல்லாம் பாவம் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் . விடுபட்டதையெல்லாம் , நோலனின் படங்கள் எழுதிமுடித்தபின் தனிப்பதிவாய் எழுதிவிடுகிறேன் . அடுத்து என் வாழ்க்கையின் மிகமுக்கியமான திரைப்படமான டார்க் நைட் ரைஸஸில் உங்களைச்சந்திக்கிறேன் .

ஆமா ! இப்போ நா எழுதனதெல்லாம் கனவா இல்ல நனவா ????


தொடர்புடைய இடுகைகள்