Tuesday, 21 July 2015

TERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்
ஒரு பேட்டியில் கேமரூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதாகப்பட்டது நீங்க ஏன் தலீவரே ரெண்டு பார்ட்டோட டெர்மினேட்டர் சீரிச நிறுத்திட்டிங்க என்பதே அக்கேள்வி . அதற்கு அவரும் எளிமையானதொரு பதிலைத் தந்தார் . எவ்விதமான முன்யோசனையுமில்லாமல் எடுக்கப்படும்  ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பதே பெரிய விஷயம்; காரணம் பார்வையாளர்கள் முதல் பாகத்தினை மனதில் பலவாறாக கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் .  அதே கற்பனையுடன் வரும்போது இரண்டாம் பாகம் என்னதான் நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் . இரண்டாம் பாகத்திற்கே இந்நிலை என்றால் மூன்றாம் பாகத்தினைப்பற்றி சொல்லவேண்டுமா ? அவர்கள் மனதில் நிலைக்கும்படியான இரு படங்களை நான் தந்துவிட்டேன் . அது போதும் எனக்கு  என்றார் கேமரூன் . 

கிட்டத்தட்ட யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக் கூடிய விசயம்தான் இது . ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும் .காரணம் அவளை மிக மிகப் பிடித்திருப்பது தான் . சரி விடுங்க ! சிக்மன்ட்  பற்றியும் ஆண் , பெண் சார்ந்த அவரின் மனோதத்துவக் கொள்கையெல்லாம் விளக்கி கழுத்தை அறுக்கமாட்டேன் . உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் மேட்டர் அதுதான் .மக்கள் தாங்களாக கற்பனை செய்யப்பட்ட ஒரு விசயத்தின் அடுத்தகட்டம் , கொஞ்சம் சறுக்கினாலும் அனைத்தும் தவறாக முடிந்துவிடும் . எடுத்துக்காட்டாக டெர்மினேட்டரின் மூன்றாம் பாகத்தையே கூறலாம் . RISE OF THE MACHINE திரைப்படம் சரியாக JUDGEMENT DAY வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து வந்தது . பயங்கர எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் முதல் வாரத்தில் செம கலக்கு கலக்கிவிட்டு , அடுத்த வாரத்திலிருந்து தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்டது . காரணம் முதல் வாரம் கேமரூனின் முதலிரண்டு பாகங்களின் தாக்கத்தினால் வந்த கூட்டம் ; அதன்பின் மீண்டும் 6 வருடங்களுக்குப் பிறகு SALVATION ரிலிசானது . மூன்றாம் பாகத்தைப் பார்த்து டெர்மினேட்டரை வெறுத்த எனக்கு சால்வேசன் ஓரளவு ஆறுதலாக இருந்தது ; நான்காம் பாகத்தில் அர்னால்ட் இல்லை என்ற குறையே தெரியாத அளவிற்கு படுஸ்பீடாக இருந்தது.  ஆனால் சால்வேசன் மரண அடி என்பது தான் ஜீரணிக்க முடியவில்லை .. சரி , ஐந்தாம் பாகம் வேறுவிதமாக இருக்கும் ; கண்டிப்பாக அர்னால்டு இருப்பார் . படம் பட்டாசாக இருக்கப்போகிறது ; அதுவும் ட்ரைலர் வேறு மிரட்டி எடுத்திருந்தது . இவ்வளவு நம்பிக்கையுடன் தியேட்டரருக்குச் சென்ற எனக்கு , டார்க் நைட் ரைசஸில் பெய்ன்  , பேட்மேனைப்போட்டு பொரட்டி பொரட்டி அடிப்பதைப் போல்  முரட்டு அடியாக கொடுத்தனுப்பி இருக்கார் இயக்குநர் டெய்லர் . 

வழக்கம்போல ஒவ்வொரு டெர்மினேட்டரிலும் சொல்லக்கூடிய மிகமுக்கியமான விஷயங்கள் ஸ்கைநெட் , சாரா கார்னர் , ஜான் ஓ கார்னர் , கைல் ரீஸ் , T – 800 , T – 1000  . இதில் அவ்வப்போது வெவ்வேறு புது கேரக்டர்களும் வருவார்கள் போவார்கள் ; ஆனால் மேட்டர் என்னவோ சாராவையும் , ஜான் கார்னரையும் சுற்றியே நடக்கும் . முதல் பாகத்தில் சாரா , இரண்டாம் பாகத்தில் சிறுவயது ஜான் , மூன்றாம் பாகத்தில் ஜான் மற்றும் அவன் காதலி  என ஜல்லியிடித்துக்கொண்டிருந்த டெர்மினேட்டரை சிறிது மாற்றியவர் MCG .  SALVATION திரைப்படத்தை முழுக்க முழுக்க நிகழ்காலத்தில் நடப்பதாகவே  எடுத்திருப்பார் .சரி  டெர்மினேட்டர் கதை இப்போதுதான் சூடுபிடிக்கப் போகிறது என்று ஆசையுடன் காத்திருந்த எனக்கு ,  டேய் ! நாங்க மட்டும் என்ன கதைய வச்சிகிட்டா வஞ்சனை பன்றோம் ? சத்தியமா தெரியாததால தான்டா மறுபடியும் மறுபடியும் கேமரூன் எடுத்ததையே  அரைச்சிகிட்டு இருக்கோம் என்று நிருபித்துள்ளார் டெய்லர். 

படத்தின் கதை என்னவெனில் ஜட்ஜ்மென்ட் டே இப்போதும் தள்ளிப்போகிறது . காரணம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முதல் மூன்று பாகங்களைப் பாருங்கள் புரியும் . ஒவ்வொருமுறை முந்தைய பாகத்தில் நடக்கும் விஷயங்களால் ஜட்ஜ்மென்ட் டே  இம்முறை 2017 – ல் நடக்கிறது .ஓ! ஜட்ஜ்மென்ட் டே ? மனிதர்கள் வருங்காலத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஸ்கைநெட் எனும் ஆர்ட்டிபிஷியில் ப்ரோகிராமினை உருவாக்குகிறார்கள் .  ஸ்கைநெட்டோ , தங்களின் அழிவுக்கு மனிதர்களால் ஆபத்து வரும் என்று பயந்து  ,கணினியுடன் இணைகப்பட்ட மெஷின்களை எல்லாம் கன்ட்ரோல் செய்து உலகம் முழுக்க அணு ஆயுதங்களை ஏவி 300 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கிறது . மீதம் இருப்பவர்களை  சிறை பிடிக்கிறது . அதற்கு உதவியாக செயல்பட டெர்மினேட்டர்கள் எனும் ரோபோட் மெஷின்கள் உருவாக்கப்படுகிறது .  இப்போது சிறிது காலத்திற்குபின் இந்த ஸ்கைநெட்டை அழிக்கிறான் அல்லது கைப்பற்றுகிறான் ஜான்  கார்னர் என்பவன் . இவனைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளும் ஸ்கைநெட் , தன்னிடம் இருக்கும் மனித உருகொண்ட டெர்மினேட்டரை  , கடந்த காலத்திற்கு அனுப்பி  ஜானின் தாயை கொல்ல முயற்சிக்கும் .  இருங்க இருங்க ! இதுதான் முதல்பாகமாச்சே னு நீங்க கேட்க வரது எனக்குப் புரியுது . ஆனா , ஒரு சீன் மாறாம அப்படியே இதையே எடுத்து வச்சிருக்காய்ங்க இந்த படத்துல .  இப்போது மேட்டர் என்னவெனில் , சால்வேசன் திரைப்படத்தில் கைல் ரீஸ் எனும் இளைஞன் இறந்தகாலத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என அப்போதைய சால்வேசனின் ஜான் கார்னரின் வயதான தாயார் கூறியது நினைவிருக்கலாம் . இப்போது அதே தான் நடக்கிறது . கைல் , இறந்தகாலத்திற்கு அனுப்பபடுகிறான் சாராவைக் காப்பாற்ற . அங்கே ஆல்ரெடி வதிருக்கும் T -1000 டெர்மினேட்டரான அர்னால்ட் , சாராவோடு இருக்கிறார் . அதன்பின் மூவரும் சிறிதுகாலம் 1984 –ல் உலாத்திய பின் , ஜட்ஜ்மென்ட் டேயை நிப்பாட்டலாம் என 2017 –க்கு செல்கின்றனர் . அங்கு பெருத்த ஆச்சரியம் , ஜான் கார்னர் அங்கே இருக்கிறார் . இம்முறை மிகப்பெரிய விஞ்ஞானி போல் . ஸ்கைநெட் ப்ரோகிராமை அதிதீவிரமாக செயல்படுத்தும் ஜெனிசிஸ்-ன் முக்கிய புள்ளியாக இருக்கும்  ஜான் கார்னர் , சாராவையும் தன் தந்தையான கைல் ரீசையும் கொல்ல எடுக்கும் முயற்சிகளும் அதிலிருந்து எப்படி இவர்கள் தப்பித்து ஜெனிசிஸை அழித்து , ஜட்ஜ்மென்ட் டேவை நிகழாமல் காப்பாற்றினார்கள் என்பதையும் நம்மைக் குறட்டை விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் .

அர்னால்டைப் பார்ங்ககும்போது பரிதாபம் தான் மிஞ்சுகிறது . டெர்மினேட்டர் , கமென்டோ , ட்ரூ லைஸில் கலக்கிய அர்னால்டா இது என மனம் ஏற்றுக்கொள்ளவே மறுத்துவிட்டது  . பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க செல்வது நலம் . அதைக்காட்டிலும் படத்தில் விட்டார்கள் பாருங்கள் ஒரு புருடா! மிஷின் பழசாகும் . அது கரெக்ட் தான் . ஆனால் மனிதத்திசுக்களைப்ப பயன்படுத்தி செய்யப்பட்ட டெர்மினேட்டர் என்பதால் முகத்தில் சுருக்கம் வந்து மனிதர்களைப்போலவே நரைத்தும் போகுமாம் . ரத்தமே பாயாத சின்தடிக் தோலுக்கும் , ஸ்டெம்செல்லுக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டைங்களா பார்வையாளரை நினைச்சிட்டாங்க போல . சரி , இதாவது பரவாயில்லை என்றால் இன்னும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குக்கள் . சாராவும் கைலும் ஸ்கைநெட் ப்ரோகிராமர்களை அழிக்கச் சொல்வதாக்கூறிவிட்டு ஜட்ஜ்மென்ட் டேக்குபோய் சண்டை போடுவதைக் காட்டிலும் நீட்டாக இன்னும் கொஞ்சம் முன்னர் சென்று உருவாக்கப் போகிறவர்களைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் . சரி , ஜட்ஜ்மென்ட் டே இம்முறையும் தடுக்கப்பட்டது . கார்னரின் மரணம் உறுதியாகிவிட்டது . ஒருவேளை எதிர்காலத்தில் அம்மரணமும் தடுக்கப்படலாம் . ஆனால் கைல் ரீஸ் ?  

இந்த இயக்குநர் ஆல்ரெடி தி டார்க் வேர்ல்ட் திரைப்படத்தினை இயக்கியவர் . இருட்டில் படம்பிடிப்பதில் இவருக்கு என்ன அலாதியான ஈடுபாடோ ! படம் முழுக்க முழுக்க இருட்டிலேயே எடுத்துவிட்டு கிளைமேக்ஸிற்கு முந்தைய லாஸ் ஏஞ்சலஸ் பாலத்தில் நடக்கும் சண்டையை மட்டும் பகலில் எடுத்துவிட்டார் . பாதி படம் மயமயவென்று தான் தெரிந்தது . கேட்டால் நியோ நார் , டார்க் தீம் என்று ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லுவார்கள் . தியேட்டரை விட திரை  தான் அதீத இருட்டாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .  திரைக்கதை ? அப்படியொரு வஸ்து படத்தில் இருந்ததா என்று நானும் தேடித் தேடிப் பார்த்தேன் . ஆனாலும் கிடைக்கவில்லை .  இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் அர்னால்ட் I am Back என்பதையே சொல்லி ஒப்பேற்றி வருவார் என பார்க்கலாம் என்றிருந்தேன் ; நல்லவேளையாக இதில் I will be back என்று கூறிவிட்டார் . படத்தில் மிகமிக போராடிய ஜீவன் இசையமைப்பாளர் தான் . எப்படியாவது படத்தினை ரசிக்கைவைக்கும்படியாக ஏதாவது செய்துவிடவேன்டுமென்று , கூல் பேன்ட் போடுமிடத்தில் கூட பாட்ஷா , சாரி சாரி டெர்மினேட்டர் தீமை அலறவிடுகிறார் . டப்ஷ்மேஷ் என நினைக்கிறேன் .  எடிட்டர் மட்டும் கொஞ்சம் எடிட்டிங் ரூமில்  தூங்காமல் முழித்திருந்தால் , சிறிதளவாவது நம்மை தூங்கவிடாமல் செய்திருக்கலாம் . 

டெர்மினேட்டர் ப்ரான்சீஸில் வெளிவந்த பெரும் மொக்கைப் படமாக இதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன் . சி.ஜியும் 3டியும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை . காஞ்சனா 3யில் ராகவா லாரன்ஸ் செய்த சி.ஜியை ஹாலிவுட்டிற்கு ஏற்றமாதிரி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது . நடிகர்களும் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை . நான் இத்திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புடன் சென்றேன் . செல்லும்முன் முந்தைய நான்கு பாகங்களையும் பார்த்துவிட்டு சென்றேன் . அதனாலோ என்னவோ சூரமொக்கையாக படம் தெரிந்தது .சில காட்சிகளில் நிஜமாகவே தூங்கிவிட்டேன் . நான் தியேட்டருக்குச் சென்று  பாதி படத்தில் எழுந்து ஓடிவந்த திரைப்படங்கள் இரண்டு . ஆனால் எந்நிலையிலும் தியேட்டருக்குள் தூங்கமாட்டேன் . ஒரே நாளில் ஐந்து காட்சிகளும் பார்த்தபோது கூட தூங்கியதில்லை . ரிட்டிக்-ன் இரண்டாம் பாகம் முதல்முறையாக என்னைத் தாலாட்டுப் பாடி தூங்கவைத்தது . இது ரிட்டிக் அளவு பெரும் மொக்கையாக இல்லையெனினும் தூங்கவைத்துவிட்ட திரைப்படங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுவிட்டது . இனிமேல் டெர்மினேட்டர் சீரிஸே எனக்கு வேண்டாம் என்ற மனநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது இத்திரைப்படம் .


Friday, 17 July 2015

மாரி – சினிமா விமர்சனம்
   


     வழக்கமாக தனுஷ் திரைப்படங்களைப் பொறுத்த வரை  , இந்த படத்திற்கு
செல்லலாம் , நம்மை ஏமாற்றாது என்று உள்மனது கூறும்  படங்களுக்கு மட்டுமே செல்வேன் . அந்த முடிவுடன் சென்று பார்த்த புதுப்பேட்டை , வேலையில்லா பட்டாதாரி, ஆடுகளம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அனைத்தும் பிடித்திருந்தன. அனேகன்  மட்டும் தியேட்டருக்குச்  செல்லலாம் என்று முடிவு செய்து, கடைசியில் போகமுடியாமல் முடிவை கைவிடவேண்டியதாயிற்று. மாரி பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லை என்றே கூறலாம் . காலையில் டைப்பிங் கிளாஸ் முடித்துவிட்டு , மிகப்பொறுமையாக வீட்டிற்கு வந்தால் , பஸ் ஸ்டாப்பில் என் வயதுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தார்கள் . ’ஹே டூட் ! வாட்ஸ்அப் மேன்?’ என்று பீட்டர் விட்டுக்கொண்டே அவர்களிடம் கேட்டபோது,  படத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாக கூறினார்கள் . அடப்பாவிகளா ! என்னைய விட்டுட்டே ப்ளான் போட்டுட்டிங்களே டா என்று மனதுக்குள் நினைத்தவாறே
அடுத்த பத்து நிமிடத்தில் திரையரங்கிற்குச் சென்றுவிட்டேன் . சாதாரணமாக
ரெடி ஆகி, தியேட்டருக்குச் செல்ல அரைமணிநேரத்திற்கு மேலாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது .

 பாலாஜி  திரைப்படங்களில் (எடுத்ததே 2 தான்னு சொல்றிங்களா! எனக்கு காதலில் சொதப்புவது எப்படி? யைக் காட்டிலும் வாயை மூடிப் பேசவும் மிகமிக பிடித்திருந்தது . ஆனால் மாரி ட்ரைலர் வந்தபோது கொஞ்சம் அசந்துவிட்டேன். என்னடா? இவரு சாஃப்டான  ஆள் ஆச்சே!  எப்படி லோக்கல்
டான் கான்செப்ட் படம் ? என்ற யோசனையிடன் திரையரங்கில் அமர்ந்தேன் . ஆனால்  உள்ளே பாலாஜி காட்டிய படம் இருக்கிறதே ! அப்பப்பா !!!

தனுஷுக்கு என்றே யோசித்து யோசித்து எழுதி, இயக்கியிருக்கிறார். பேசாமல் இந்த படத்திற்கு மாஸ் என்ற டைட்டில் வைத்திருக்கலாம்  ச்சும்மா தெறிக்குது. இன்ட்ரோ ஆகுமிடத்தில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, மாஸ் ! மாஸ்! மாஸ்!.  அப்படி என்ன கதை ?

  கெட்டவனுக்கும் , ரொம்பகெட்டவனுக்குமிடையே நடக்கும் பிரச்சனைகளும், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் திரைப்படம் . மாரி , ஏரியாவில் பெரிய டான் ; புறா ரேஸில் பல வருடங்களாக ஜெயித்து வருபவர்; புறாவின்மீது காட்டும் பாசத்தைக் கூட ஏரியா ஆட்களிடம் காட்டமாட்டார்; மாமூல் வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து என எல்லாவற்றையும் கன்ட்ரோலில்
வைத்திருப்பவர். மாரியைப் போன்றே இன்னொரு ரவுடியான பேர்ட் ரவி , புறாப் பந்தயத்தில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்றிருப்பவர் .  இவர்கள்
இருவருக்கும் மேலே பெரிய கையாக வேலு .  பொய்மான் கரடு எனும் கல்கியின் நாவலில், கொலையைச்ச சுற்றிய சம்பவங்களே கதை என்று முன்னுரை எழுதியிருப்பார். ஆனால் நடக்காத கொலையைச்சுற்றிய கதை . அதேபோல் சில வருடங்களுக்கு முன் ஒருவரை மாரி போட்டதால் , பெரிய டானாகி விட்டார் எனபதை அறிந்துகொள்கிறார் ஏரியாவில் புதிதாக வரும் எஸ்.ஐ. அந்த கேஸுக்கான சரியான ஆதாரம் இல்லாமல் , மாரியை எப்படியாவது ஜெயிலில் போட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறார் . இந்த மாதிரியான நேரத்தில் தான் காஜல் இன்ட்ரோ. 1970-களில் இருந்து தமிழ் சினிமாவில் பின்பற்றி வரும் பழக்கமான மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் என்றே அதே டெக்னிக்  இங்கேயும் பின்பற்றபடுகிறது; ஆனால் கொஞ்சம் சுவாரஸயமாக. ஒரு கட்டத்தில் மாரியிடம் ‘உண்மையில் நீ என்ன செய்து ரவுடி ஆனாய்?’ என கேட்குமிடத்தில், பழைய கொலைக் கேஸைப்பற்றி , போதையில் மாரி சொல்லிவிட , அதை மொபைலில் ரெகார்ட்
செய்து போலிஸில் போட்டுகொடுக்கிறார். அதைத்தொடர்ந்து 7 மாதம் ஜெயில் தண்டனை. வெயிட் , வெயிட்! அதாவது ஹீரோ கொலை செய்ய முயற்சித்தார்
என்பதனால் தான் 7 மாதம் . உண்மையில் ஹீரோ குத்திய இரண்டு நாட்களுக்குப்பின் வேறொருவரால் கொலை நடத்தப்பட்டிருக்கிறது .

ஏழு மாதங்களுக்குப் பின் ரிலிசாகும் மாரியிடம், ஏரியாவில் நடைபெற்ற நிகழ்வுகளை அவர்களின் சகாக்கள் எடுத்துரைக்கிறார்கள் . மாரி ஜெயிலுக்குப்
போன பின், பேர்ட் ரவியை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்ளும் எஸ். ஐ . அர்ஜுன் (or அஜித்) , ஏரியாவில் அதிக மாமூல் வசூலிப்பது , பொய்கூறி ஏரியாவிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு சந்தனமரம் கடத்தி, அம்மக்களையே காட்டிக்கொடுத்து ஜெயிலில் அடைப்பது, மாரியைக் காப்பாற்ற வந்த வேலுவை போடுவது என அனைத்துவித குற்றங்களையும் சரமாரியாக செய்கிறார். இதையெல்லாம் கேட்டதும் பொங்கி எழுந்து எல்லோரையும் அடுத்துத் தூள் கிளப்பாமல், தன்னை ஜெயில் போட்டவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை ஏரியாவை  விட்டு கிளம்ப முடிவெடுக்கிறார் . அப்போது பேர்ட் ரவியின் ஆட்களுடன் ஒரு சண்டை. அதன்பின் , மாரி தனது ஏரியாவை எப்படி மீண்டும் கைப்பற்றுகிறான் என்பதையும் , போலிசையும், பேர்ட் ரவியையும் எப்படி முடித்தான் என்பதையும் ஜாலியாக , செம மாஸ்ஸாக கொடுத்திருக்கிறார் பாலாஜி
.
 நடிகர்களின் நடிப்பைப் பற்றியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை  . வழக்கம்போல தனுஷ் தூள் கிளப்பியிருக்கிறார் . காஜல் அகர்வால் ஆங்காங்கே வருகிறார் . ரோபோ சங்கர் , தனுஷின் நண்பராக வந்து கிச்சுகிச்சுமூட்டுகிறார் . வில்லனாக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ் சரியான தேர்வு . மற்றொரு வில்லனாக வரும் கோபி ஓ.கே ரகம். காளி வெங்கட்டும் தன் பங்கினைச் சிறப்பாக செய்துள்ளார் .

 மாரி இன்ட்ரோடக்சனில் வரும் பிண்ணனி இசையும் , முதல் பாடலு்ககு
தனுஷ் ஆடும் நடனத்தில் ஆரம்பிக்கும் வேகம், படம் முடியும் வரை அப்படியே இருக்கிறது . படத்தில் செம ரிச்சான ஒளிப்பதிவிற்கு ஓம் பிரகாஷ் தான் காரணம் . ஒளிப்பதிவும் , கலரைசேசனும் செம . அனிரூத் இணையில் பாடல்கள் படமாக்கிய விதம் அட்டகாசம். டானு டானு  டானு , மாரி போன்ற பாடல்கள்தான் அனிரூத் இசையில் எனக்குப் பிடித்திருந்தன. மற்ற பாடல்களெல்லாம் திரையில் பார்க்கும் நன்றாக இருந்தாலும் கேட்க பிடிக்கவில்லை . பிண்ணனி இசை பல இடங்களில் பலம் என்றாலும் பல இடங்களில் நம் காதுக்கு ரணம் . கிட்டாரை வைத்து சொய்ங்ங்ங்ங்ங்ங் என்று நாலு இழுப்பு இழுத்து , பிண்ணனியில் அடிவயிற்றில் ஆய் போக முக்குவது போல் மாரிஇஇஇஇஇ என்று குரல் கொடுக்கும் சில இடங்களில் என் காதிலிருந்து ரத்தம் மட்டும் தான் வரவில்லை .  சண்டைக் காட்சிகள் எல்லாம் செம கிளாஸ் . உண்மையில் தனுஷின் வெறித்தனமான ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புல்மீல்ஸ் .  மற்றவர்களுக்கு ஜாலியான ஒரு மசாலா திரைப்படம் .

Friday, 10 July 2015

பாகுபலி – சினிமா விமர்சனம்

வெல் , ராஜமௌலியைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை . ட்ரைலர் வந்த நாள்முதல் எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் ராஜமௌலியும் அவரின் பாகுபலியும் தான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தன . அவரின் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் முதல்  நான் ஈ வரை அனைத்துப்படங்களைப் பற்றியும் ஒரு சிறிய தொடர்பதிவு எழுதிவிடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தும் எழுதமுடியாமல் போய்விட்டது . இருக்கட்டும் ; இன்னும் பாகுபலியின் இரண்டாம் பாகம் வேறு அடுத்த ஆண்டு வெளிவரப்போகிறது . அச்சமயத்தில் மொத்தமாக எழுதிவிடுகிறேன் .

நான் முதன்முதலில் பார்த்த தெலுங்கு படம் ராஜமௌலியின் விக்ரமார்க்குடு தான் .  படம் பார்த்து முடித்ததும் தோன்றிய விஷயம் , ரவிதேஜா பின்னிருக்காரு என்பதுதான் . பரவாயில்லையே ! ஆந்திரவாலாக்கள் கூட கிராபிக்ஸ் எல்லாம் பட்டைத்தீட்டி எடுத்திருக்கிறார்களே என்று சிறிது ஆச்சரியமடைந்த திரைப்படம் . ஏனெனில் அதற்குமுன் வரை பாலகிருஷ்ணாவின் சில படங்களையும் , சிரஞ்சீவியின் சில  படங்களையும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் தமிழ் டப்பிங்கில் பார்த்ததோடு சரி . அதன்பின் ஒரு ஆந்திரப்பெண்ணைக் காதலித்து , அவளுக்குத் தமிழ் தெரியாமல் போய்விட , எனக்குத் தமிழைத்தவிர எதுவும் தெரியாமல் போய்விட , அரைகுறை ஆங்கிலத்தில் நடந்த இஸ், பிஸ் பேச்சுவார்த்தைகள் சரிவராத காரணத்தால் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன் . அதனைத் தொடர்ந்து பாரிஸ் கார்னரில் ஒரே தெலுங்கு படமாக வாங்கித்தள்ளினேன் . ஒரு கட்டத்தில் சப்டைட்டில் இல்லாமலே தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தது . அச்சமயத்தில் தான் விக்ரமார்க்குடு திரைப்படத்தை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரின்  வேண்டுகோளுக்கிணங்க மரியாத ராமண்ணா  திரைப்படத்திற்கு சென்றேன் . அப்படத்தின் ஹீரோ சுனில் , சப்பை சப்பையான வேடத்தில் , பல படங்களில் நான் பார்த்திருந்ததாலும் , படத்தின் போஸ்டர்கள் என்னைக் கவர்ந்திழுக்கும்படியாக இல்லாததாலும் ச்சும்மா உள்ளே சென்று அமர்ந்தேன். ஆனால் அன்றைக்கு காசினோவில் செம  கூட்டம் . உத்யோகம் ஓடிப்போயிந்தி பாடல் வந்ததும் தியேட்டரில் இருந்த பாதி பேர் திரையில் ஏறி ஆட்டம் ஆடிகொண்டிருந்தனர் . அருகில் என்னை அழைத்துவந்தவரிடம் கேட்டேன் .

‘ஏன்ணா ! இந்த ஹீரோவுக்கு இவ்ளோ மாஸ்சா ? இவரு காமெடி ஆக்டர் தான ?’

‘மாஸ் , ஹீரோவுக்கு இல்ல தம்பி . டைரக்டருக்கு’ என்று அவர் கூறிய பின் தான் ராஜமௌலி எனக்கு அறிமுகம் . அதைத்தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன் லிருந்து மகதீரா வரை அனைத்துப்படங்களையும் ஒவ்வொரு கடையாக தேடிப்பிடித்து வாங்கிப் பார்த்தெல்லாம் தனிக்கதை . இதுவரை ஒரு ப்ளாப்  , ஏன் ஆவரேஜ் என்ற ரீதியில்  கூட கொடுக்காமல் எல்லாம் சூப்பர்ஹிட் கொடுத்த ஒரே இயக்குநர் ராஜமௌலி தான் . எப்படியாவது சினிமாவில் வென்றுவிடவேண்டும் என்று தவித்த ராஜமௌலிக்கு என்.டி.ஆர் கைகொடுக்க , என்.டி.ஆருக்கு மூன்று மெகா ப்ளாக்பஸ்டர்களை பரிசாக கொடுத்தவர் . மகதீரா , ஆந்திராவின் சென்சேஷனல் ஹிட் படங்களின் வரிசையில் முதலிடம் . ஈகா தெலுங்கு மாத்திரமல்லாமல் தமிழ் , கன்னடம் ஏன் ஹிந்தியில் கூட கலெக்சனை தந்தத் திரைப்படம் . ஒரு பழுத்த வேலைநாளில் எங்கள் ஊரிலுள்ள தியேட்டரில் மதியக்காட்சிக்கு ஹவுஸ்புல் ஆகி நான் பார்த்த முதல் திரைப்படம் நான் ஈ தான் .

பாகுபலி , கிட்டத்தட்ட ராஜமௌலியின் கனவுத் திரைப்படம் என்றே சொல்லலாம் . மரியாத ராமண்ணா திரைப்படத்தைத் தயாரித்த அர்கா நிறுவனம் , பாகுபலி தயாரிப்பில் மும்முரம் காட்டியது ஆச்சரியப்படத் தேவையில்லாத விஷயங்களில் ஒன்று . இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் . முதல்முறையாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இருபாகங்களைக் கொண்ட திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் . மூன்று ஆண்டுகால உழைப்பு . ஜிம் பயிற்சியாளரிலிருந்து VFX வரை மிகப்பெரும் ஆளுமைகள் பணிபுரிந்துள்ள திரைப்படம் . எப்படி இருக்கும் ?

நான் இத்திரைப்படத்திற்கு செல்லும் முன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றேன் ; அப்படிச்சொல்வதைக் காட்டிலும் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு சென்றேன் . ட்ரைலரைப் பார்க்கும் போது BC 10000 , கோச்சடையான் , கிளாடியேட்டர் , EXODUS , LOTR , 300 என்று நான் பார்த்திருந்த அத்தனை பேன்டசி , ஹிஸ்டரிக்கல் படங்களும் மனதில் ஓடின. எங்கே இவரும் அந்த படங்களைப் போல எடுத்துவைத்து இருப்பாரோ என்ற பயமல்ல ; இத்தனை நாட்கள் கட்டிக்காப்பாற்றிய பெயரை , முகநூலில் போட்டு நாரடித்துவிடுவார்களே என்று தான் பயம் . அதுமட்டுமின்றி , இது முதல் பாகம் என்பதால் , என் எதிர்பார்ப்பு எல்லாம் இரண்டாம் பாகத்தை நோக்கியே இருந்தது எனலாம் .

சரி , படத்தின் கதைக்கு வருவோம் . துவக்க காட்சியில் ரம்யாகிருஷ்ணன் ஒரு குழந்தையை கையிலேந்தியபடியே , ட்ரைலரில் அந்த மிகப்பெரும் நீர்வீழ்ச்சியினடியில் வருகிறார் . அவரைக் கொல்ல இரு வீரர்கள் வருகின்றார்கள் . அவர்களைக் கொன்று விட்டு நதியில் குழந்தையுடன் விழுந்துவிடுகிறார் . ஆற்றில் குழந்தையை கையில் தூக்கிப்பிடித்த படியே செல்லும் அவரைக் காப்பாற்ற அங்கு வாழும் மலைவாசிகள் முயல்கின்றனர். ஆனால் குழந்தையை அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்நீர்வீழ்ச்சி விழும் மலையின் திசையினை கைகாட்டிவிட்டு ஆற்றோடு போய்விடுகிறார் . அக்குழந்தையை அம்மலைவாசிகளின் தலைவி போன்றொருத்தி எடுத்து வளர்க்கின்றாள் . அக்குழந்தைக்கு வளர வளர அந்நீர்வீழ்ச்சிக்கு அந்தபக்கம் என்ன இருக்கும் என்று காண ஆசை . அதற்காக அந்நீர்வீழ்ச்சியில் ஏற பலமுறை முயற்சிக்கிறான் . ஆனால் முடியவில்லை  . ஒருமுறை ஒரு பெண்ணின் முகமுடி நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகிறது . அந்த முகமுடியைப் பார்த்ததும் காந்தர்வ காதல் கொள்ளும் ஹீரோ , அவளைப் பார்ப்பதற்காக முயற்சித்து அந்நீர்வீழ்ச்சியை ஏறி கடக்கிறார் . அங்கு அவளைச் சந்திக்கிறார். ஆனால் அவள் (தமன்னா) ஒரு புரட்சிப்படையில் மறைமுகமாக இருப்பதை அறிகின்றான் . அதன்பின் அவளை அப்படி இப்படி என்று கரெக்ட் செய்துவிடுகிறார் . அவள் இருக்கும் புரட்சிப்படையில் அவளுக்கு ஒரு கட்டளைக் கிடைக்கிறது . அதாவது மகிழ்பதி எனும் பேரரசில் , 25 வருடங்களாக கொடுமைப் படுத்தப்பட்டு வரும் தேவசேனா (அனுஷ்கா) என்பவரைக் காப்பாற்ற வேண்டும் . ஹீரோ , தமன்னாவிற்கு பதில் தானே மீட்டு வருவதாக அங்கு செல்கிறார் . அந்நாட்டின் அரசன் பல்வாள்தேவன் (ரானா டகுபாட்டி) , அவன் தந்தை பெல்லால தேவன் (நாசர்) போன்றோர் நாட்டு மக்களை படுபயங்கரமாக கொடுமைப் படுத்துகிறார்கள் . அங்கிருந்து தேவசேனாவைக் காப்பாற்றி வருவதற்குள் ஹீரோவைப் பார்ப்பவர்கெல்லாம் பாகுபலி என்று கூறி ஆச்சரியப்பட , ஒரு கட்டத்தில் ராணா வின் மகனைப் போட்டுத்தள்ளுகிறார் ஹீரோ . அப்போது அதைத் தடுக்கவரும் ராணாவின் அடிமையும் மாவீரனும் ஆன சத்யராஜும் பிரபாசைக் கண்டு மிரள்கிறார் . அதன்பின் சத்யராஜ் சொல்ல ப்ளாஷ்பேக் ஆரம்பமாகிறது . எச்சரிக்கை – இது முதல் பாகம் என்பதால் பாதி ப்ளாஷ்பேக் தான் வரும் . இதற்குமேல் எழுதினால் ராஜ்மௌலி என் சட்டையைப் பிடித்து மண்டையில் கொட்டுவார் . அவருக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியுமாம் .

பிரபாஸ் – ராஜமௌலி எதுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் இவரை ஹீரோவாக போடனும் ? பேசாம இந்தில ஷாருக் மாதிரியான ஆட்களிடம் கால்ஷீட் வாங்கி எடுத்திருந்தால் இன்னும் பெரிய பிஸ்னஸ் ஆகியிருக்கும் என்று என் நண்பர் வருத்தப்பட்டார் . படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு செல்லும் அந்த காட்சி சொல்லும் எதற்காக என்று ! மனிதர் உழைப்பை  தாறுமாறாக போட்டுள்ளார் என்பது அவர் வரும் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது . அப்பாவியான சிவாவாகவும் , அமரேந்திர பாகுபலியாகவும் இருவேறு பரிமாணங்களையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார் .

ராணா – யப்பா ! மனுஷனா இவன் . இது நான் சொல்லலைங்க . என் பக்கத்துல படம் பாத்துட்ருந்த ரெண்டு பேர் ராணாவோட இன்ட்ரோ வரும்போது சொன்னது . இரண்டாம் பாதியில் பிட்டாக வரும் ராணாவையும் முதல் பாதியில் வயதான பல்வாள்தேவனாக வரும் ராணாவையும் பார்த்து ஆச்சரியாமாக இருக்கிறது . படுபயங்கர உழைப்பு . இப்படத்தின் பெஸ்ட் இன்ட்ரோ சீன் என்றால் அது இவருடையது தான் . தாக்க வரும் காட்டெருமையை போட்டு பந்தாடிக்கொண்டே இன்ட்ரோ ஆகிறார் .

சத்யராஜ் – கட்டப்பனாக வரும் சத்யராஜைப் பற்றி மேலே குறிப்பிடாததற்கு ஒரு காரணம் உள்ளது . பாகுபலி திரைப்படத்தில் எனக்கு மிக மிக பிடித்த கேரக்டர் என்றால் அது கட்டப்பன் தான் . கட்டப்பனாக சத்யராஜ் வெளுத்து வாங்கியுள்ளார் . வெள்ளைத்தாடியைத் தவிர்த்து ஒவ்வொரு காட்சியிலும் மனிதர் இன்றைய ஹீரோக்களுக்கு சவால் விடுமளவுக்கு சண்டையில் சுழட்டி அடித்துள்ளார் . சீனியர் – ஜூனியர் வித்தியாசம் பார்க்காமல் ப்ரபாஸின் காலை , தன் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் இடமெல்லாம் ஆச்சரியம் தான் . கடைசியில் இவர் வைத்த ஒரு ட்விஸ்டான வசனம் அடுத்த பாகத்திற்கான ஹைப்பை ஏற்றிவிட்டு , நம்முடைய கற்பனைக் குதிரைகளையும் அவிழ்த்துவிட்டது எனலாம் . கலக்கிட்டாரு .

தமன்னா – வெகு நாட்களுக்குப் பின் தமன்னாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கிய திரைப்படம் . பழிவாங்கும் உணர்ச்சியும் , காதல் பரிதவிப்புமென நன்றாக செய்துள்ளார் . பச்சைத் தீ பாடலில் வரும் டாப்லெஸ் உண்மையா ?

அனுஷ்கா – முதல்பாகத்தில் பெரிய ஸ்கோப் இல்லை . முழுக்க முழுக்க அனுஷ்காவின் சாகசமெல்லாம் இரண்டாம் பாகத்தில் தான் . ஒரே ஒரு இடத்தில் அனுஷ்கா நடிப்பில் செம ஸ்கோப் செய்துள்ளார் . கட்டப்பன் , தேவசேனாவிடம்  வந்து விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கெஞ்சும்போது திரும்பி அனுஷ்கா பேசும் வசனங்கள் செம.

ரம்யா கிருஷ்ணன் – நீலாம்பரி வேடத்திற்குப்பின் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த மற்றொரு அரிய வேடம் இப்படத்தின் சிவகாமி தான் . கெத்தான பெண்ணாக அறிமுகமாகி , அந்த கெத்தினை கடைசி வரை கெத்தாகவே மெய்ன்டெய்ன் செய்திருக்கிறார் . இருள் கொண்ட வானில் பாடலும் , அப்போது வரும் காட்சிகளும் அட்டகாசம் . தன்னைக் கொல்ல வருபவனை , கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சட்டென்று போட்டுத்தள்ளும் போது நமக்கே ஒரு நிமிடம் ஆச்சரியம் வருகிறது . அப்படியே ஒரு வீரப்பெண்மணியைக் காட்டியுள்ளார் ரம்யா .

நாசர் – பிங்காலத்தேவனாக நாசர் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்துள்ளார் . ராணாவை மன்னனாக்க இவர் செய்யும் தகிடுதத்தங்களும் போர்காட்சியின்போது இவரின் முகபாவமும் செம .

இவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே சில பல ஆந்திர நடிகர்கள் வந்து போகிறார்கள் . மரகதமணி இசையில் ஏற்கனவே எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்திருந்தன . குறிப்பாக சிவாய போற்றி , மனோகரி , இருள்கொண்ட வானில்  போன்ற பாடல்கள் வழக்கம்போல அவரின் கிளாஸிக் . தீரனே பாடலும் , பச்சைத் தீ , மகிழ்நதி பாடலும் சுமார் தான் என்றாலும் விஷுவலோடு பார்க்கும் போது அட்டகாசம் . பிண்ணனி இசையில் முதல்பாதி சுமாராக இருந்தாலும் , இரண்டாம்பாதியில் கலக்கி எடுத்திருக்கிறார் . ஆமாம் , இவருடைய பெயர் தெலுங்கில் MM கீரவாணி தானே ! தமிழுக்கென்று மரகதமணி என்று வருகிறதா ? ஒன்றும் புரியவில்லை .

செந்தில்குமாரின் ரிச்சான ஒளிப்பதிவு அட்டகாசமாக , நம் கண்களை உறுத்தாத வகையில் , சரியான கலரைசேசனுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது . ஹேட்ஸ் ஆஃப் செந்தில்ஜீ . எடிட்டிங் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் . ஒரு காட்சி கூட தேவையில்லை என்று சொல்லமுடியாது ; அந்தளவு சரிவிகிதமாய் கத்திரியைப் போட்டுள்ளார் . சாபுசிரிலின் ஆர்ட் டைரக்சில் பல காட்சிகளில் எது கிராபிக்ஸ் , எது செட் , எது ரியல் என்று கண்டுபிடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்க  வேண்டியுள்ளது . சி.ஜியெல்லாம் மிரட்டி உள்ளார்கள் . ஆங்காங்கே மகதீராவின் தாக்கம் இருப்பது மட்டும் மைனஸ் . பனிச்சரிவு காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றியது . ஆனால் கடைசி போர்க்காட்சிகளெல்லாம் அட்டகாசம் .மொத்தத்தில் இது இந்தியாவின் 300 , LORD OF THE RINGS  எனலாம் . ஏன் , திரைக்கதையில் மேற்கூறிய ஆங்கிலப்படங்களை விஞ்சி ஒரு படி மேலே நிற்கிறது . இது அக்மார்க் ராஜமௌலி திரைப்படம் . தான் எப்போதும் திரைக்கதையில் செம ஸ்ட்ராங்க் என்பதை இம்முறையும் சீல் அடித்துச் சொல்லிவிட்டார் .