Tuesday, 21 July 2015

TERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்
ஒரு பேட்டியில் கேமரூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதாகப்பட்டது நீங்க ஏன் தலீவரே ரெண்டு பார்ட்டோட டெர்மினேட்டர் சீரிச நிறுத்திட்டிங்க என்பதே அக்கேள்வி . அதற்கு அவரும் எளிமையானதொரு பதிலைத் தந்தார் . எவ்விதமான முன்யோசனையுமில்லாமல் எடுக்கப்படும்  ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பதே பெரிய விஷயம்; காரணம் பார்வையாளர்கள் முதல் பாகத்தினை மனதில் பலவாறாக கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் .  அதே கற்பனையுடன் வரும்போது இரண்டாம் பாகம் என்னதான் நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் . இரண்டாம் பாகத்திற்கே இந்நிலை என்றால் மூன்றாம் பாகத்தினைப்பற்றி சொல்லவேண்டுமா ? அவர்கள் மனதில் நிலைக்கும்படியான இரு படங்களை நான் தந்துவிட்டேன் . அது போதும் எனக்கு  என்றார் கேமரூன் . 

கிட்டத்தட்ட யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக் கூடிய விசயம்தான் இது . ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும் .காரணம் அவளை மிக மிகப் பிடித்திருப்பது தான் . சரி விடுங்க ! சிக்மன்ட்  பற்றியும் ஆண் , பெண் சார்ந்த அவரின் மனோதத்துவக் கொள்கையெல்லாம் விளக்கி கழுத்தை அறுக்கமாட்டேன் . உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் மேட்டர் அதுதான் .மக்கள் தாங்களாக கற்பனை செய்யப்பட்ட ஒரு விசயத்தின் அடுத்தகட்டம் , கொஞ்சம் சறுக்கினாலும் அனைத்தும் தவறாக முடிந்துவிடும் . எடுத்துக்காட்டாக டெர்மினேட்டரின் மூன்றாம் பாகத்தையே கூறலாம் . RISE OF THE MACHINE திரைப்படம் சரியாக JUDGEMENT DAY வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து வந்தது . பயங்கர எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் முதல் வாரத்தில் செம கலக்கு கலக்கிவிட்டு , அடுத்த வாரத்திலிருந்து தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்டது . காரணம் முதல் வாரம் கேமரூனின் முதலிரண்டு பாகங்களின் தாக்கத்தினால் வந்த கூட்டம் ; அதன்பின் மீண்டும் 6 வருடங்களுக்குப் பிறகு SALVATION ரிலிசானது . மூன்றாம் பாகத்தைப் பார்த்து டெர்மினேட்டரை வெறுத்த எனக்கு சால்வேசன் ஓரளவு ஆறுதலாக இருந்தது ; நான்காம் பாகத்தில் அர்னால்ட் இல்லை என்ற குறையே தெரியாத அளவிற்கு படுஸ்பீடாக இருந்தது.  ஆனால் சால்வேசன் மரண அடி என்பது தான் ஜீரணிக்க முடியவில்லை .. சரி , ஐந்தாம் பாகம் வேறுவிதமாக இருக்கும் ; கண்டிப்பாக அர்னால்டு இருப்பார் . படம் பட்டாசாக இருக்கப்போகிறது ; அதுவும் ட்ரைலர் வேறு மிரட்டி எடுத்திருந்தது . இவ்வளவு நம்பிக்கையுடன் தியேட்டரருக்குச் சென்ற எனக்கு , டார்க் நைட் ரைசஸில் பெய்ன்  , பேட்மேனைப்போட்டு பொரட்டி பொரட்டி அடிப்பதைப் போல்  முரட்டு அடியாக கொடுத்தனுப்பி இருக்கார் இயக்குநர் டெய்லர் . 

வழக்கம்போல ஒவ்வொரு டெர்மினேட்டரிலும் சொல்லக்கூடிய மிகமுக்கியமான விஷயங்கள் ஸ்கைநெட் , சாரா கார்னர் , ஜான் ஓ கார்னர் , கைல் ரீஸ் , T – 800 , T – 1000  . இதில் அவ்வப்போது வெவ்வேறு புது கேரக்டர்களும் வருவார்கள் போவார்கள் ; ஆனால் மேட்டர் என்னவோ சாராவையும் , ஜான் கார்னரையும் சுற்றியே நடக்கும் . முதல் பாகத்தில் சாரா , இரண்டாம் பாகத்தில் சிறுவயது ஜான் , மூன்றாம் பாகத்தில் ஜான் மற்றும் அவன் காதலி  என ஜல்லியிடித்துக்கொண்டிருந்த டெர்மினேட்டரை சிறிது மாற்றியவர் MCG .  SALVATION திரைப்படத்தை முழுக்க முழுக்க நிகழ்காலத்தில் நடப்பதாகவே  எடுத்திருப்பார் .சரி  டெர்மினேட்டர் கதை இப்போதுதான் சூடுபிடிக்கப் போகிறது என்று ஆசையுடன் காத்திருந்த எனக்கு ,  டேய் ! நாங்க மட்டும் என்ன கதைய வச்சிகிட்டா வஞ்சனை பன்றோம் ? சத்தியமா தெரியாததால தான்டா மறுபடியும் மறுபடியும் கேமரூன் எடுத்ததையே  அரைச்சிகிட்டு இருக்கோம் என்று நிருபித்துள்ளார் டெய்லர். 

படத்தின் கதை என்னவெனில் ஜட்ஜ்மென்ட் டே இப்போதும் தள்ளிப்போகிறது . காரணம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முதல் மூன்று பாகங்களைப் பாருங்கள் புரியும் . ஒவ்வொருமுறை முந்தைய பாகத்தில் நடக்கும் விஷயங்களால் ஜட்ஜ்மென்ட் டே  இம்முறை 2017 – ல் நடக்கிறது .ஓ! ஜட்ஜ்மென்ட் டே ? மனிதர்கள் வருங்காலத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஸ்கைநெட் எனும் ஆர்ட்டிபிஷியில் ப்ரோகிராமினை உருவாக்குகிறார்கள் .  ஸ்கைநெட்டோ , தங்களின் அழிவுக்கு மனிதர்களால் ஆபத்து வரும் என்று பயந்து  ,கணினியுடன் இணைகப்பட்ட மெஷின்களை எல்லாம் கன்ட்ரோல் செய்து உலகம் முழுக்க அணு ஆயுதங்களை ஏவி 300 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கிறது . மீதம் இருப்பவர்களை  சிறை பிடிக்கிறது . அதற்கு உதவியாக செயல்பட டெர்மினேட்டர்கள் எனும் ரோபோட் மெஷின்கள் உருவாக்கப்படுகிறது .  இப்போது சிறிது காலத்திற்குபின் இந்த ஸ்கைநெட்டை அழிக்கிறான் அல்லது கைப்பற்றுகிறான் ஜான்  கார்னர் என்பவன் . இவனைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளும் ஸ்கைநெட் , தன்னிடம் இருக்கும் மனித உருகொண்ட டெர்மினேட்டரை  , கடந்த காலத்திற்கு அனுப்பி  ஜானின் தாயை கொல்ல முயற்சிக்கும் .  இருங்க இருங்க ! இதுதான் முதல்பாகமாச்சே னு நீங்க கேட்க வரது எனக்குப் புரியுது . ஆனா , ஒரு சீன் மாறாம அப்படியே இதையே எடுத்து வச்சிருக்காய்ங்க இந்த படத்துல .  இப்போது மேட்டர் என்னவெனில் , சால்வேசன் திரைப்படத்தில் கைல் ரீஸ் எனும் இளைஞன் இறந்தகாலத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என அப்போதைய சால்வேசனின் ஜான் கார்னரின் வயதான தாயார் கூறியது நினைவிருக்கலாம் . இப்போது அதே தான் நடக்கிறது . கைல் , இறந்தகாலத்திற்கு அனுப்பபடுகிறான் சாராவைக் காப்பாற்ற . அங்கே ஆல்ரெடி வதிருக்கும் T -1000 டெர்மினேட்டரான அர்னால்ட் , சாராவோடு இருக்கிறார் . அதன்பின் மூவரும் சிறிதுகாலம் 1984 –ல் உலாத்திய பின் , ஜட்ஜ்மென்ட் டேயை நிப்பாட்டலாம் என 2017 –க்கு செல்கின்றனர் . அங்கு பெருத்த ஆச்சரியம் , ஜான் கார்னர் அங்கே இருக்கிறார் . இம்முறை மிகப்பெரிய விஞ்ஞானி போல் . ஸ்கைநெட் ப்ரோகிராமை அதிதீவிரமாக செயல்படுத்தும் ஜெனிசிஸ்-ன் முக்கிய புள்ளியாக இருக்கும்  ஜான் கார்னர் , சாராவையும் தன் தந்தையான கைல் ரீசையும் கொல்ல எடுக்கும் முயற்சிகளும் அதிலிருந்து எப்படி இவர்கள் தப்பித்து ஜெனிசிஸை அழித்து , ஜட்ஜ்மென்ட் டேவை நிகழாமல் காப்பாற்றினார்கள் என்பதையும் நம்மைக் குறட்டை விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் .

அர்னால்டைப் பார்ங்ககும்போது பரிதாபம் தான் மிஞ்சுகிறது . டெர்மினேட்டர் , கமென்டோ , ட்ரூ லைஸில் கலக்கிய அர்னால்டா இது என மனம் ஏற்றுக்கொள்ளவே மறுத்துவிட்டது  . பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க செல்வது நலம் . அதைக்காட்டிலும் படத்தில் விட்டார்கள் பாருங்கள் ஒரு புருடா! மிஷின் பழசாகும் . அது கரெக்ட் தான் . ஆனால் மனிதத்திசுக்களைப்ப பயன்படுத்தி செய்யப்பட்ட டெர்மினேட்டர் என்பதால் முகத்தில் சுருக்கம் வந்து மனிதர்களைப்போலவே நரைத்தும் போகுமாம் . ரத்தமே பாயாத சின்தடிக் தோலுக்கும் , ஸ்டெம்செல்லுக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டைங்களா பார்வையாளரை நினைச்சிட்டாங்க போல . சரி , இதாவது பரவாயில்லை என்றால் இன்னும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குக்கள் . சாராவும் கைலும் ஸ்கைநெட் ப்ரோகிராமர்களை அழிக்கச் சொல்வதாக்கூறிவிட்டு ஜட்ஜ்மென்ட் டேக்குபோய் சண்டை போடுவதைக் காட்டிலும் நீட்டாக இன்னும் கொஞ்சம் முன்னர் சென்று உருவாக்கப் போகிறவர்களைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் . சரி , ஜட்ஜ்மென்ட் டே இம்முறையும் தடுக்கப்பட்டது . கார்னரின் மரணம் உறுதியாகிவிட்டது . ஒருவேளை எதிர்காலத்தில் அம்மரணமும் தடுக்கப்படலாம் . ஆனால் கைல் ரீஸ் ?  

இந்த இயக்குநர் ஆல்ரெடி தி டார்க் வேர்ல்ட் திரைப்படத்தினை இயக்கியவர் . இருட்டில் படம்பிடிப்பதில் இவருக்கு என்ன அலாதியான ஈடுபாடோ ! படம் முழுக்க முழுக்க இருட்டிலேயே எடுத்துவிட்டு கிளைமேக்ஸிற்கு முந்தைய லாஸ் ஏஞ்சலஸ் பாலத்தில் நடக்கும் சண்டையை மட்டும் பகலில் எடுத்துவிட்டார் . பாதி படம் மயமயவென்று தான் தெரிந்தது . கேட்டால் நியோ நார் , டார்க் தீம் என்று ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லுவார்கள் . தியேட்டரை விட திரை  தான் அதீத இருட்டாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .  திரைக்கதை ? அப்படியொரு வஸ்து படத்தில் இருந்ததா என்று நானும் தேடித் தேடிப் பார்த்தேன் . ஆனாலும் கிடைக்கவில்லை .  இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் அர்னால்ட் I am Back என்பதையே சொல்லி ஒப்பேற்றி வருவார் என பார்க்கலாம் என்றிருந்தேன் ; நல்லவேளையாக இதில் I will be back என்று கூறிவிட்டார் . படத்தில் மிகமிக போராடிய ஜீவன் இசையமைப்பாளர் தான் . எப்படியாவது படத்தினை ரசிக்கைவைக்கும்படியாக ஏதாவது செய்துவிடவேன்டுமென்று , கூல் பேன்ட் போடுமிடத்தில் கூட பாட்ஷா , சாரி சாரி டெர்மினேட்டர் தீமை அலறவிடுகிறார் . டப்ஷ்மேஷ் என நினைக்கிறேன் .  எடிட்டர் மட்டும் கொஞ்சம் எடிட்டிங் ரூமில்  தூங்காமல் முழித்திருந்தால் , சிறிதளவாவது நம்மை தூங்கவிடாமல் செய்திருக்கலாம் . 

டெர்மினேட்டர் ப்ரான்சீஸில் வெளிவந்த பெரும் மொக்கைப் படமாக இதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன் . சி.ஜியும் 3டியும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை . காஞ்சனா 3யில் ராகவா லாரன்ஸ் செய்த சி.ஜியை ஹாலிவுட்டிற்கு ஏற்றமாதிரி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது . நடிகர்களும் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை . நான் இத்திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புடன் சென்றேன் . செல்லும்முன் முந்தைய நான்கு பாகங்களையும் பார்த்துவிட்டு சென்றேன் . அதனாலோ என்னவோ சூரமொக்கையாக படம் தெரிந்தது .சில காட்சிகளில் நிஜமாகவே தூங்கிவிட்டேன் . நான் தியேட்டருக்குச் சென்று  பாதி படத்தில் எழுந்து ஓடிவந்த திரைப்படங்கள் இரண்டு . ஆனால் எந்நிலையிலும் தியேட்டருக்குள் தூங்கமாட்டேன் . ஒரே நாளில் ஐந்து காட்சிகளும் பார்த்தபோது கூட தூங்கியதில்லை . ரிட்டிக்-ன் இரண்டாம் பாகம் முதல்முறையாக என்னைத் தாலாட்டுப் பாடி தூங்கவைத்தது . இது ரிட்டிக் அளவு பெரும் மொக்கையாக இல்லையெனினும் தூங்கவைத்துவிட்ட திரைப்படங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுவிட்டது . இனிமேல் டெர்மினேட்டர் சீரிஸே எனக்கு வேண்டாம் என்ற மனநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது இத்திரைப்படம் .


உங்கள் விருப்பம்

3 comments:

  1. ரொம்ப எதிர்ப் பார்த்து நொந்து போனது புரிகிறது...

    ReplyDelete
  2. //ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும்// ஹிஹி நல்ல உவமை ....

    ReplyDelete
  3. நீங்க ஏன் இன்னும் cusdom domain name வாங்காம இருக்கறிங்க.. இப்ப 100 ரூபாய்க்கே godaddy domain names கிடைக்குது...

    ReplyDelete