Sunday, 29 June 2014

கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்

கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்(இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை இல்லை!அவ்வாறு இருந்தால் தயை கூர்ந்து மன்னித்துவிடவும்)

சிறப்பாயிரம்


இப்போது எந்த தமிழ்ச்செய்தித்தாள்களைத் திருப்பினாலும்,எங்காவது ஒரு மூலையில் கள்ளக்காதலால் கணவனைக்கொன்ற மனைவி,குழந்தையைக் கொன்ற தாய்,மனைவியை எரித்த கணவன்,போன்ற செய்திகளையெல்லாம் தாண்டி முதல் கள்ளக்காதலன்,இரண்டாம் கள்ளக்காதனை கதறக்கதற கொன்றான் எனும் அளவிற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தக்கள்ளக்காதலால் யாருக்கு நன்மையெனில் தமிழின் முன்னனி நாளிதழ் என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் நாளிதழ்,இன்று கள்ளக்காதல் செய்திகள் மூலமாகவே வாழ்ந்துவருகிறது.அந்த செய்தித்தாளைத்தவிர மற்ற அனைவருக்கும் ஒரு சோகம் தரக்கூடிய விஷயமே.
சரி,முதலில் கள்ளக்காதல் ஸ்டேஜ்களை,பாலின் அடிப்படையிலும்,வயதின் அடிப்படையிலும்,செயலின் அடிப்படையிலும் காணலாம்.

ஆண்கள்

பிஞ்சிலே பழுக்கும் வகையறா.

இன்றைய காலகட்டத்தில்,தொழில்நுட்பம் என்பது,எவ்வளவுக்கெவ்வளவு பயனளிக்கிறதோ,அவ்வளவு கெடுதலையும் உண்டாக்குகிறது.மனிதனின் மனம் என்றும் நல்ல விஷயங்களை நாடிச்செல்லாது.அதற்கு தீயவைதான் என்றும் பிடிக்கும்.20 ரூ புத்தகம் வாங்க ஆளில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியின் எதிரில் உள்ள டாஸ்மாக்கில் போட்டி போட்டு சரக்கு வாங்குவதைப்பார்த்தாலே இது விளங்கும்.இன்று இணையத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை விட அதிகமான கெட்ட விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.வெறும் 6-ம் வகுப்பு மாணவனுக்கு இன்று முகநூலில் 200 பெண்நண்பர்கள்.டீன்-ஏஜ் பிராயத்தை அவன் அடையும்போது அவன் இன்டெர்நெட் முதல் ஆபரேட்டிங் சிஸ்டம் வரை கரைத்துக்குடித்துள்ளான்.அன்றைய காலகட்டத்தில்,நடிகையின் தொப்புளை க்ளோஸ்-அப்பில் காட்டினாலே ஜொள்ளு விடுபவர்கள் நம் ஆட்கள்.ஆனால்இன்று,நடிகையின் முக்கால் நிர்வாணம் கூட எளிதாக தெரிகிறது மனதுக்கு.காரணம்,பார்த்து பார்த்து புளித்துவிட்டது.அதைவிட பலவகையான பலான படங்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கின்றன.இந்த செல்போனைக்கண்டுபிடித்தவர் பேசும் நோக்கத்திற்காகத்தான் கண்டுபிடித்திருக்க வேண்டும் என எண்ணிய எனக்கு,இப்போது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் ஒரு சாத்தானாக தான் தெரிகிறான்.பலான படங்களை பதின்ம வயதில் பார்க்கும் ஒருவனுக்கு,காம ஆசை துளிர்விடுவது இயற்கை.ஆனால் அதற்கு வடிகாலாக அவன் செயல்படுத்தத்துணியும் விஷயம்,மிகக்கொடுமையானது.ஏனெனில் அவன் வயதை ஒத்த மாணவன்,எங்கோ ஒரு பள்ளியில்,அவனுடன் படிக்கும் பெண்ணை அனுபவிக்கும் வீடியோ,இவன் கையில்.அவ்வாறு இருக்கும்போது உடன்படிக்கும் மாணவிகளை அவன்எவ்வாறு பார்க்கத்துணிவான்.கிட்டத்தட்ட அம்மாணவிகளைப்பற்றி வேசியைப்போன்ற எண்ணம் தான் அவன் மனதில் எழும்.தன் தாகத்தை தணிக்கும் முயற்சியில் அவன் ஈடுபடும்போது,தவறானதொரு பாதையை நோக்கி செல்கிறான். அவ்வாறு இருக்கும் மாணவனை மயக்க,காம இச்சைக்கு ஏங்கித்தவிக்கும் ஏதேனும் ஒரு பெண் அவனை தன்பால் ஈர்க்கிறாள்.அரவணைக்கிறாள்.ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?தன் திருவிளையாடல்களைத்தொடர ஆரம்பிக்கும்.அவன் அதன்பின் திருமணமே ஆனாலும் பிற பெண்களை ருசிக்கவே எண்ணுவான். இவ்வாறான ஆண்கள் என்ன ஆனாலும் திருந்தவே மாட்டார்கள்.இவர்களைப்போன்றோர் தான் மனைவிகளை கொல்லக்கூட துணிவர்.

கட்டிய மனைவி,காமத்திற்கு சரியானபடி உடன்படாததால்,கள்ளக்காதலியை ஏற்படுத்தி கொள்ளும் வகையறா.

ஒரு சில ஆண்கள்,காமத்தைப்பற்றி முழுதும் தெரிந்திருக்கும் பொருட்டு,பல வகையான மேநாட்டு காம விஷயங்களை அறிந்து வைத்திருப்பர். எண்ணற்ற கனவுகளுடன் மனைவியைக்கைப்பிடிப்பர்.ஆனால் மனைவியோ,மேநாட்டு கலாச்சாரங்களை அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உணருவர்.அவ்வாறு இருக்கும்போது மனைவி,தன் காம விளையாட்டிற்கு சரியான ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறாள் என்றெண்ணி  பிற பெண்களை நாடிச்செல்வர்.

மனைவிக்கு,கணவனைப்பிடிக்காததால்,கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் வகையறா.
இந்த வகையறா ஆண்கள்,மனைவியுடன் முழு தாம்பத்ய வாழ்க்கை வாழ முயற்சிப்பர்.ஆனால்,மனைவிமார்கள்,வீட்டின் மிரட்டல்கள் காரணமாகவோ,முன்னால் காதலனின் நினைவு காரணமாகவோ,அல்லது கணவன் அசிங்கமாக இருக்கிறான் என்ற நினைப்பின் காரணத்திலோ,ஆண்களை தம் பக்கம் அண்டவே விடமாட்டார்கள்.பின்,வழக்கம்போல ஆண்கள்,தன்னுடன் பணிபுரியும் பெண்ணையோ,அல்லது தன் வீட்டின் அருகில் இருக்கும் பெண்களையோ நாடிச்சென்று நாசமாய்ப்போவார்கள்.கிட்டத்தட்ட முதல்மரியாதை கான்செப்ட் தான் இவர்கள்.

மனைவியை பிடிக்காத ஆண்கள் வகையறா.

இவ்வகை ஆண்களும் கிட்டத்தட்ட மேற்கூரிய வகையறாவைச்சார்ந்தவர்கள் தான்.ஆனால் அவர்கள் விதியே என்று வேறோரு பெண்ணைத்தேடிச்சென்றால்,இவர்கள் வேண்டுமென்றே நாடிச்செல்வார்கள்.இவர்களுக்கு முதல் பிரச்சினை,மனைவியின் அழகின்மையே.இரண்டாவது முன்னால் காதலி.

மேல்கண்ட வகைகளையும் தாண்டி ஒருசிலர் இருக்கின்றனர்.அவர்களைப்பொறுத்தவரை காமம் மட்டுமே வாழ்வின் பிரதானம்.அவர்களுக்குத்தன் மனைவியையும் பிடிக்கும்,மாற்றான் மனைவி என்றால் இன்னும் பிடிக்கும்.இவர்கள் தம் வீட்டினுள்ளும் அன்பைப்பொழிவார்கள்.மாற்றான் வீட்டினுள்ளும் அன்பைப்பொழிவார்கள்.இத்தனைக்கும் இவர்களின் மனைவி என்னதான் அனைத்துவிஷயங்களுக்கும் உடன்பட்டாலும்,மற்றொரு பெண்ணைத்தொடமல் இவர்களால் இருக்கவே முடியாது.

பெண்கள்

பெண்களைப்பொறுத்தவரை அன்புக்கு ஏங்கும் பெண்கள்,ஆசைக்கு ஏங்கும் பெண்கள் என்ற இருவகையே எனக்குத்தெரிந்து இருக்கிறது.
அன்புக்கு ஏங்கும் பெண்களைப்பொறுத்தவரை,அவர்களுக்கு தேவை முதலில் பாசம்.பின் ஆறுதல் வார்த்தைகள்.
கணவன்,தன்னை காரணமேயின்றி நிராகரிக்கப்படும்போது ஏற்படும் அந்த வலி,பாசம் சிறிதுமின்றி தன் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கத்தெரியாத கணவன்,ஒரு சில விதவை கைம்பெண்கள்,எப்போதும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கும் கணவன் போன்ற வகையறா பெண்கள் இதில் அடங்குவர்.இந்த மாதிரியான சமயத்தில் தன்மீது அன்பு காட்டுவது போல் ஒருத்தன் நடிக்கிறான் என்று தெரிந்தாலும்,அவர்களுக்கு அந்த பொய்யான அன்பாவது கிடைக்காதா?என்றெண்ணி அவனுக்காக எதையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்களுக்கு தன் குழந்தைகள்,சமூகம் பற்றிய பயம் இருந்தாலும்,அன்பு மட்டுமே பிரதானமாக தெரியும்.

அடுத்த வகையறா தான்,தற்போது தாறுமாறாக கொலைகளை செய்து கொண்டிருக்கும் வகை பெண்கள்.இவர்களுக்கு கணவனிடத்தில் நல்ல அன்பும்,காம சுகமும் கிடைத்தாலும்,அவர்களுக்கு போதுமானாதாக தோன்றாது.அதன்காரணமாக,தன்னிடம் கண்டிப்பாக விசுவாசமாக இருப்பான் என்று நினைக்கும் ஆட்களை வளைத்துப்பிடித்து விடுவார்கள்.இதில் சிக்கி சீரழியும் ஆண்களில் பலர் திருமணமாகதவர்களாகத்தான் இருப்பார்கள்.இவர்களுக்கு காம இச்சையின் காரணமாக, அந்த நேரத்தில் என்ன தோன்றினாலும் செய்துவிடுவார்கள்.அவ்வாறாக நடப்பது தான் கள்ளக்காதல் கொலைகள்.இவர்களின் கணவனாலோ,குழந்தைகளாலோ காமம் தடைபடுமாயின் அவர்களைக்கொலை செய்யவும் யோசிக்கமாட்டார்கள்.

விளைவுகள்

1.குடும்பத்தின்மீது சமூகத்தில் கேவலமான எண்ணம்.
2.குழந்தைகளின் எதிர்காலம் நாசம்.
3.ஜெயில் தண்டனை,
4.வாழ்க்கை வீணாதல்
யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு இவர்கள் குடும்பத்தையே நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்சிறப்பாயிரம் 


கள்ளக்காதல் ஏற்படாமல் இருக்கவும்,தடுக்கவும் ஓரே வழி,அன்பு மட்டுமே.பெண்களே!நீங்கள் உங்கள் கணவரைப்புரிந்து கொண்டு வாழப்பழகுங்கள்.அவரிடம் விட்டுக்கொடுத்துச்செல்ல முயலுங்கள்.முடிந்தவரை அவரை உங்கள் முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்களின் கண்சிமிட்டல் போதும்,உங்கள் கணவரை காலியாக்குவதற்கு.
கணவன் மார்களே!உங்கள் மனைவியை புரிந்துகொள்ள முயலுங்கள்.அவர்களிடம் அன்பாக பேசி உங்கள் பேண்ட் ஜோப்பில் சொருகிக்கொள்ளுங்கள்.அவர்களை சிறுசிறு பரிசு,சுற்றுலா,அன்பான வார்த்தை,ஆறுதலான ஸ்பரிசம் போதும்,மடக்குவதற்கு.
உங்கள் மனைவியோ அல்லது கணவனோ நடத்தைத்தவறுகிறார் என்றால் அது உங்கள் மேல் உள்ள தவறுதானே தவிர,அவர்கள் மீது இல்லை.முடிந்தவரை அதைக்களையப்பாருங்கள்.இருப்பது வெறும் 50 ஆண்டுகள்தான் இந்த பூமியில்.அதிலும் சாவு என்பது எக்கணத்திலும் வரும்.இறந்த பின் நாம் அவர்களை அப்படிப்பார்த்திருக்கலாம்,இப்படி கவனித்திருக்கலாம் என்று ஒப்பாரி வைப்பதற்கு பதில்,இருக்கும்போதே நினைத்ததை செய்யுங்கள்.(இது எப்பவும் திருந்தாத கேசுங்களுக்கு பொருந்தாது.அந்த கேசுங்கள டைவர்ஸ் பண்ணிட்டு எஸ் ஆகறது தான் புத்திசாலித்தனம்)

(சிறப்பாயிரம்னா-முன்னுரை,தற்சிறப்பாயிரம்னா-முடிவுரை)

Saturday, 28 June 2014

தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு

தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு


நேற்று ‘சிவகாசிக்காரன்’ அண்ணன் ராம்குமாருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது மழையைப்பற்றிய பேச்சு வந்தது.தமிழ்நாட்டில் தாறுமாறாக மழைபெய்தாலும் எங்கள் சேலத்தில் சிறு சாரல் மட்டுமே வீசும்.ஆனால் அதிசியமாக நேற்று தமிழகத்தை இன்ச் பை இன்ச்சாக அளந்துகொண்டிருந்த சூரியக்கதிர்களிடம் இருந்து காக்க ஹைட்ரஜனும்,ஆக்ஸிஜனும் கலந்து எங்கள் சேலத்தை மழையாக குளிர்வித்துக்கொண்டிருந்தது.இதுவரை ஒரு கட்டுரை எழுத தலைப்புக்கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த எனக்கு கணநேரத்தில் உதயமானது இந்த யோசனை.


இப்போது எந்த செய்தித்தாள்களிலும் மழையைப்பற்றி செய்தி இருந்தால் கூடவே ‘எல்நினோ’ என்ற அழையாவிருந்தாளியும் அவ்விடத்தில் இருப்பார்.யார் அந்த எல்நினோ?எதற்கு நம்மை படுத்தி எடுக்கிறார்?அவரால் என்ன பிரயோஜனம் என்று பலருக்கும் பல குழப்பம் இருக்கும்.அவரைப்பற்றியும் அவரின் செயல்களைப்பற்றியும் சிறிது அலசுவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
நமக்கு மழை எவ்வாறு வருகிறது?நிலத்திலோ அல்லது கடலிலோ இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்திற்கு இரையாகி,ஆவியாகி,கருமேகமாகி வளிமண்டலத்தின்மேல் சென்று அங்கு குளிர்விப்பதால் தான் மழைவருகிறது என்று ஆறாம் வகுப்புக்குழந்தைக்குகூடத்தெரியும்.ஆனால் ஏன் ஆவியாகும் இடத்திலே அம்மழை பெய்வதில்லை?இப்போது  ஆப்பிரிக்கா ஒரு வெப்ப நாடு.சராசரியாக அங்குதான் அதிக வெயில் அடிக்கும்.அதனால் ஆவியாகும் செயலும் அந்த கண்டத்தைச்சுற்றியே நடக்கும்.அவ்வாறிருந்தும் அங்கு மழையளவு நம் மழையளவைக்காட்டிலும் குறைவே.காரணம் அங்கு சிறந்தபடியான குளிர்விப்பான் கிடையாது.சகதியான இடங்களில் மேலும் சகதியும், புழுதியான இடங்களில் மேலும் புழுதியும் தான் ஆப்பிரிக்காவில் உள்ளது. இதற்கெல்லாம் கிளைமேட் என்றழைக்கப்படும் காலநிலையே காரணம்.

உலகில் மொத்தம் 6 வகையான காலநிலைகள் நிலவுகின்றன.காலநிலை என்பது சூரியனுக்கும் அவ்விடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு மற்றும் கோணம் ஆகியவற்றைப்பொருத்து அமைத்திருப்பார்கள். ஆனால் இந்தியா அதற்கு மாறானது.இந்த 6 காலநிலைகளைத்தாண்டி இந்தியாவிற்கு மட்டும் புதிதாக இரண்டு காலநிலையை உருவாக்கி உள்ளார்கள் அறிஞர்கள்.இந்தியாவை வடக்குத்தெற்காகப்பிரிக்கும் கடகரேகையைக்கொண்டு பிரித்துள்ளார்கள்.அதாவது வட இந்தியாவில் நிலவும் காலநிலை கண்ட காலநிலை எனவும்,தென் இந்தியாவில் நிலவும் காலநிலை மிதவெப்ப காலநிலை என்றும் பிரித்துள்ளனர்.(இதுவும் இந்தியாவை துணைக்கண்டம் என்று கூற ஒரு காரணம்)வட இந்தியாவைப்பொறுத்தவரை,கோடை காலங்களில் அதிக வெப்பமும்,குளிர் காலங்களில் அதிக குளிரும் நிலவும்.இதற்கு காரணம் வட இந்தியாவானது கடல் பகுதியிலிருந்து அதிக தொலைவில் அமைந்திருப்பதே!தென் இந்தியாவானது குளிர் காலத்தில் மிதவெப்பமும்,வெயில்காலத்தில் கொடுர வெப்பமும் நிகழும்.

வட இந்தியாவை வாழவைப்பது தென்மேற்குப்பருவக்காற்று.அதுதான் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் மழையைக்கொட்டிவிட்டுச்செல்லும்.தமிழகத்தின் மேல் என்ன கோவமோ,தமிழ்நாட்டைத்தவிர மற்ற சகோதரி மாநிலங்களான ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் ஆகியவற்றை நனைத்துவிட்டுச்செல்லும்.அதனால் அங்கு நதிகளில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடும்.நாம் அவர்களிடம் நீரைப்பிச்சைகேட்டுகொண்டிருக்கவேண்டும்.நம் தமிழகத்தின் மேல் துளிகூட கரிசனை இல்லாத காற்று.
அப்படி இருந்தும் நம் தமிழகத்தின்மேல் காலம்காலமாக தீரா காதலுடன் வந்து பாசத்தை நீராகக்கொட்டிச்செல்லும் காற்று நம் வடகிழக்குபருவக்காற்றுதான்.

பொதுவாக காற்று என்பது எங்கும் நிறைந்திருக்கும்.காற்றும் நீரைப்போல தான்.சூரிய வெப்பத்தால் ஆவியாகும் தன்மை உடையது.ஒரு இடத்தில் சூரிய வெப்பத்தின் மூலம் காற்று ஆவியாகினால் அங்கு ஏற்படும் மாற்றம் தான் குறைந்த காற்றழுத்தம் எனப்படும்.அதை சமன் செய்யும் பொருட்டு வேறோரு இடத்தில் இருந்து காற்றானது அந்த குறைந்த இடத்தை நோக்கி வரும்ப்படி வரும்போது நீராவியான மேகமும் அடித்துவரப்பட்டு மழையும் பெயும்.

இப்போது எல்-நினோக்கு வரலாம்.எல்-நினோ என்பதன் பொருள் குழந்தா ஏசு.இது கிறிஸ்துமஸ் காலங்களில் தோண்டி சில மாதங்கள் நீடிக்கும்.இது 5 அல்லது 6 ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பருவநிலை மாற்றமாகும்.இந்த குழந்தை ஏசுவிற்கு தமிழகத்தின்பால் பயங்கர பாசம்.அதனால் தான் கடந்த 2002 முதல் 2004 வரை 3 ஆண்டுகள் தமிழகத்தில் குடிகொண்டு பெருத்த வறட்சியை உண்டுபண்ணியது.
பெரு மற்றும் ஈக்வேடர் நாடுகளில் உள்ள கடற்கரையில் வெப்பநிலை துரிதமாக அதிகரிக்கும்.அதனால் அங்குள்ள இதனால் அங்கு குறைந்த காற்றழுத்தம்உருவாகும்.இதனை ஈடுகட்டும் பொருட்டு அனைத்துத்திசைகளிலிருந்தும் காற்று அங்கு இழுக்கப்படும்.இதன் காரணமாக பசுபிக் மற்றும் இந்தியப்பெருங்கடல்களில் உருவாகும் பருவக்காற்றுகள் வலுவிலந்து திசை மாறும்.இதன் காரணமாக இந்தியாவை நோக்கி வீசும் தென்மேற்கு பருவக்காற்று காலதாமதத்துடன் தொடங்கும்.1மாதம் பெய்யவேண்டிய மழை 15 நாட்கள் தள்ளி வெறும் 15 நாட்களே பெய்யும்.

நம் தமிழகத்துக்கு தான் அந்த பருவக்காற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று நினைப்பவர்கள் கவனிக்கவும்.நாம் பருவமழையைவிட அண்டை மாநிலங்களின் நதிகளையே பெரிதும் சார்ந்திருக்கிறோம்.அவர்களுக்கே மழையில்லையெனில் நமக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்?தண்ணீர் இல்லாத காரணத்தினால் வறட்சி ஏற்படும்.விவசாயம் நசியும்.பொருளாதாரம் சீர்குலையும்.நமக்கு இப்படியென்றால் ஆஸ்திரேலியாவின் நிலைமை இன்னும் மோசம்.புதர்க்காடுகளுக்கு பெயர் போன ஆஸி புதர் தீ மற்றும் வறட்சி நம்மைவிட அதிகமாக இருக்கும்.பிரேசில்,இந்தோனிசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த எல்-நினோ ஒரு காட்டு காட்டிவிடும்.

சரி பழைய கதையை விடுவோம்.இந்த ஆண்டு குழந்தை ஏசுவின் பார்வை நம்மீது விழுமா,என்றால் கண்டிப்பாக விழும்.ஆனால் இந்த முறை அவர் பார்வை கொஞ்சம் சிறிய அளவிலே தான் என்பதால் இந்த முறை நம் தென்மேற்கு பருவக்காற்றில் 20 % மட்டும் அவர் எடுத்துக்கொண்டு மிச்சத்தை நம்மிடமே கொடுத்துவிட்டுச்செல்ல போகிறார்.அதனால் முடிந்தவரை பெய்கின்ற மழையை சேகரித்தால் மட்டுமே நம்முடைய நீர்வளத்தையும்,நம்மையும்,நாட்டையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும்.


(குறிப்பு:-இந்த பதிவின் வார்த்தைகள் மட்டுமே என்னுடையது.விஷயங்கள் அனைத்தும் விக்கிப்பீடியா மற்றும் சில புத்தகங்களுடையது)

Thursday, 19 June 2014

பூமி - சிறுகதை

பூமி


நண்பர்களே!!இது என் முதல் சிறுகதை!!!படித்துப்பார்த்து குறைகள் இருப்பின் கூறவும்.நிறைவாக இருப்பின் எனக்கு மேலும் எழுத உற்சாகப்படுத்தவும்.


            இன்று என் வாழ்வின் மிகமுக்கியமான நாள். எனக்கு மட்டுமல்ல, எங்கள் உலகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கும் மிக முக்கியமான நாள். காரணம்  , போர். கண் விழித்ததும் எழுந்து மிக வேகமாக ஆயுத்தமாகி கிளம்பினேன். என் வாகனம் எனக்காக காத்திருந்தது.  அதில் ஏறியதும் நான் சொல்வதை அப்படியே கேட்கும் என் வாகனம் கமாண்ட் ஆபஸிற்கு செல் என்றதும் என்னைப் படுக்கவைத்து , படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது.
      

               சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்களைத்தேடி ஒரு வினோதமான சிக்னல் வந்தது.அந்த சிக்னல் தான் இந்த போரையும் கொண்டுவந்தது.ஆம்.நீங்கள் நினைப்பது சரிதான்.அது ஒரு வேற்று கிரகத்தில் இருந்து ஒருவகையான உயிரினிங்களால் அனுப்பப்பட்ட சிக்னல்.அதை அறிந்ததும் அது எங்கிருந்து வந்தது என்பதை எங்கள் விஞ்ஞானிகள் குழு மிகத்தீவிரமாக ஆராய்ந்து அந்த கிரகத்தினை கண்டறிந்தனர்.அந்த கிரக வாசிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.ஆனால் முடியவில்லை.பின் ஒரு பிரம்மாண்ட  விண்கலத்தின் வழியே என் தந்தை மற்றும் சிலர் அந்த கிரகத்தினை தேடி சென்றனர்.       எனக்கு திரும்பி வருவேனா?என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்த போரில் எது வேண்டுமானாலும் ஆகலாம்.இதை அறியாத என் மகள் நான் எங்கோ  சுற்றுலா செல்கிறேன் என்றெண்ணி சில பொருட்களை வாங்கி வரச்சொன்னாள். அவள் கூறிய பொருட்கள் மிகவும் வேடிக்கையானது. அவள் வயதுக்கே உரியது. அவளுக்கு நீர் வேண்டுமாம்.அது எங்கள் உலகில் இருந்து அழிந்து விட்டது. நான்கூட என் வாழ்க்கையில் நீரை பார்த்ததில்லை. நீர் என்பது ஒருவகையான திரவமாம். அதிலிருந்து தான் நாமெல்லாம் தோன்றினோம் என்று என் தந்தை எனக்கு சிறுவயதில் கூறிய ஞாபகம். திடிரென்று என் அடிவயிற்றில் வலிக்க ஆரம்பித்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது,வலியைக்கொல்லும் மாத்திரையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். என்னுடைய வாகனத்திலும் அந்த மாத்திரை இல்லை.அப்படியே அமர்ந்து வெளியுலகத்தைப்பார்த்தேன். எங்கள் உலகம் அழிந்து கொண்டே இருக்கிறது.ஆம் முதலில் நீரை எங்கள் முன்னோர் காக்கத்தவறினர். இப்போது , காற்றும் மாசுபட்டுக்கொண்டே வருகிறது .        எனது தந்தையுடன் பயணித்த குழு அந்த கிரகத்தினை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பயணம் செய்து கண்டறிந்தனர்.அந்த கிரகத்திலிருந்தவர்கள் மிக குள்ளமாக,உடல் வலுவின்றி இருந்தனராம்.அவர்கள் அந்த கிரகத்தில் வேடிக்கையாகவும் பல கோமாளித்தனங்களையும் செய்வதாக என் தந்தை எங்களுக்கு தகவல் அனுப்பினார்.மேலும் அவர்களுக்கு என்று எந்த நோக்கமும் இல்லாமல் இருந்தனராம்.அவர்களின் போர்க்கருவிகள் மிகவும் பழமையானதாகவும் கிட்டத்தட்ட எங்களைவிட 1000 ஆண்டுகள் பின்னோக்கியும் காணப்பட்டார்களாம்.அவர்களின் வான்வெளியிலிருந்து அவர்களைத்தொடர்பு கொள்ள முயன்றபோது திடிரென அவர்கள் எம் தந்தை இருந்த விமானத்தை முன்னறிவிப்பின்றி தாக்கி அழித்தார்கள்.


என் வாகனம் போர்ப்பயிற்சிமையத்தை அடைந்தது.அந்த ராட்சஸ கட்டிடத்துள் சென்றதும் என்னுடைய கண்விழியையும்,குரலையும் வாடகைக்கு எடுத்து உள்ளே அனுப்பியது பாதுகாப்பு கருவி.உள்ளே சென்றதும் என் கால்களுக்கு ஓய்வு கொடுத்து ஒரு மின்தூக்கி என்னை தூக்கிக்கொண்டு என் அறைக்குக்கூட்டிச்சென்றது.என் அறையினுள் என்னுடன் பயணம் செய்து என் உலகத்தைக்காக்க போகும் வீரர்கள் எனக்காக காத்திருந்தனர்.குடும்பத்தை பிரிந்துவிட்டு வரும் கவலை அவர்கள் கண்ணில் தெரிந்தாலும்,நம் உலகைக்காக்க செல்கின்றோம் எனும் வெறி அவர்களுல் இருந்ததை என்னால் அறிய முடிந்தது.


என் தந்தை எங்களுக்கு அனுப்பிய செய்திபயிலிருந்து அந்த கிரகத்தில் இருந்தவர்கள் தாங்கள் வாழ வேறொரு கிரகத்தை தேடிக்கொண்டிருப்பதை எங்களால் அறிய முடிந்தது.அதே சமயம் எங்கள் உலகத்தில் அவர்களால் வாழவும் முடியும்.எனவே அவர்கள் எங்களைத்தேடி வருவதற்குள் நாங்கள் அவர்களைத்தேடி சென்றாக வேண்டும்


என்னுடைய குழுவை அழைத்துக்கொண்டு விமான மைதானத்திற்கு சென்றேன்.கிட்டத்தட்ட அந்த மைதானத்தில் எங்கள் குழுக்களைப்போல ஆயிரமாயிரம் குழுக்கள் எங்கள் உலகைக்காக்க சென்று ஒவ்வொரு விண்வெளி ஓடத்திலும் சென்று ஏறிக்கொண்டிருந்தார்கள்.எல்லோர் முகத்திலும் வெறி படவியிருந்தது.நான் எங்களின் ராட்சத விமானத்தை சென்று அடைந்ததும் அதன் ஓட்டுநர் எங்களை அமரச்சொல்லி ஓடத்தை எடுத்தார்.பேரிரைச்சலுடன் அது மெதுவாக மேல்நோக்கி சென்றது.சிறிது தூரத்திற்கு அதன் முழுவேகத்தையும் உயர்த்தி அதனிடம் இருந்து இரக்கமின்றி அந்த ஓட்டுநர் வேலைவாங்கினார்.


எங்களின் விஞ்ஞானிக்குழுக்கள் எப்போதும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கு இந்த போரைப்பற்றிய செய்தி கிடைத்ததும் மிக விரைவாக செல்லக்கூடிய விண்வெளி ஓடத்தினை தயார் செய்தனர்.என் தந்தை சென்ற ஓடத்தின் வேகத்தைவிட 500 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை உருவாக்கினர்.அந்த விமானமே இப்போது இந்த பிரபஞ்சத்தின் அழகை எங்களுக்கு அதன் வழியே காட்டிச்செல்கிறது.

மீண்டும் அந்த வயிற்றுவலி வந்தது.நான் என் இருக்கையில் இருந்து எழுந்து அந்த மாத்திரை வைத்திருக்கும் அறையை அடைந்து ஒரு மாத்திரையை விழுங்கினேன்.சிறிது நேரத்தில் வலி போனது.இனி நாளைதான் வலிக்கும்.நான் ஓட்டுநர் அறைக்குச்சென்று அவரிடம் கேட்டேன்.இன்னும் எவ்வளவு நேரம் அந்த கிரகத்தை அடைய என வினவினேன்.இன்னும் ஒருமணிநேரம் என்றார்.நான் அமைதியாக அவரிடத்துள் அமர்ந்து கொண்டிருந்தேன்.

எனக்கு என் குடும்பம் கண்ணில் வந்தது.என் மனைவி,மிகுந்த தைரியம் உடையவள்.என்னை வெற்றிபெற்று வருமாறு ஆனையிட்டவள்.நாம் இல்லையென்றாலும் அவள் எங்கள் மகளைப்பார்த்துக்கொள்வாள்.இந்த குள்ளர்கள் எதற்காக என் தந்தையைக்கொன்றனர்?அவர்களிடம் நட்புறவு நாடிச்சென்றது தவறா?காட்டுமிராண்டிகள் என பலவாறு எண்ணுக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநர் என்னை அழைத்தான்.நாம் அந்த கிரகத்தை நெருங்கிவிட்டதாக கூறினான்.உடனே என் குழுவை அழைத்து பலவகை ஆலோசனைகளைக்கூறினேன்.அந்த வான்வெளியில் எங்கள் உலகைச்சார்ந்த ஓடங்கள்,ஆயிரத்திற்கும் மேல் காத்துக்கொண்டிருந்தனர்.எங்கள் தலைமை போர் அதிகாரியின் உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.உத்தரவு வந்தது.அந்த கிரகத்தை நோக்கி முன்னேறினோம்.அப்போது தான் என் குழுவைச்சார்ந்த ஒரு சிறிய வயதுடைய வீரன் ஒரு சிறிய சந்தேகம் என்றான்.அதற்கு விடையை நான் கூறினேன்


‘நாம் தாக்கப்போகும் கிரகத்தின் பெயர் பூமி.இங்குள்ள குள்ளர்களின் பெயர் ஹோமோசெப்பியன்ஸ் என தன்னைத்தானே அழைக்கும் மனிதர்கள்’