Monday, 13 June 2016

THE CONJURING 2 – சினிமா விமர்சனம்பேய் திரைப்படம் என்றாலே உடனே நினைவுக்கு வரும் ஆள் ஜேம்ஸ் வான். ஆள் பார்க்க பாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் கிளறும் வட இந்திய பையன்போல் இருந்துகொண்டு ஹாரர் ஜானரில் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக பேய் திரைப்படங்களில் ஜேம்ஸ் வான் செய்த சாதனைகளை மறக்கவே முடியாது. DEATH SILENCE, THE CONJURING, INSIDIOUS இரண்டு பாகங்கள் இயக்கியதோடு ANNABELLE , INSIDIOUS 3, வெளிவர இருக்கும் LIGHTS OUT ஆகிய பேய்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இது போதாதென்று SAW திரைப்படங்களைத் துவக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் 6 பாகங்களை தொடர்ந்தார்போல் தயாரித்துள்ளார். என்னால் இன்னும் நம்பமுடியாத விசயம் FAST AND FURIOUS 7 திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது என்பதுதான். 

THE WARREN FILES எனப்பெயரிடப்பட்டு இன்ஷிடியஸ் முதல் சாப்டரை முடித்த கையோடு ஜேம்ஸ் வான் இயக்க ஆரம்பித்த திரைப்படம் தான் கான்ஜுரிங். வெறும் 20 மில்லியன் பட்ஜெட்டில் உருவான அத்திரைப்படம் அடித்த கலெக்ஷனைப் பார்த்து ஹாலிவுட்டே ஸ்தம்பித்தது எனலாம். கிட்டத்தட்ட 320 மில்லியன் டாலர் வசூல்வேட்டை நடத்திய அமிட்டிவில்லி பேயைப் பார்த்து உலகமே நடுநடுங்கியது (இந்த அமிட்டிவில்லியானது ஹாலிவுட் பேய்த்திரைப்பட இயக்குநர்களுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட இடம்போன்றது. எப்போது பார்த்தாலும் அமிட்டிவில்லியிலேயே பேய் உள்ளது என எக்கச்சக்கமாக அடித்து துவைத்துள்ளார்கள். இரண்டாவது பேவரைட் ஸ்பாட் கனெக்டிக்கட்). ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் ஹிட் ஆனாலே சீக்குவல்ஸ் அல்லது ப்ரீக்குவல்ஸ் எடுத்து கல்லா கட்டாமல் விடமாட்டார்கள். சூப்பர்ஹிட் அடித்தால் சும்மா விடுவார்களா ???

எட்வர்ட் வார்ரன் மற்றும் லோரைன் வார்ரன் தம்பதியினர் பேய் ஓட்டுவதில் வல்லவர்கள் என சென்ற பாகத்திலேயே பார்த்துவிட்டோம். சென்ற பாகமான அமிட்டிவில்லி கொலைகளைப் பற்றிய ஆய்வு செய்யும்போது லோரைன் தன் கணவரும் பார்ட்னருமான எட்வர்ட் கொடூரமாக கொல்லப்படுவதையும், ஒரு கன்னியாஸ்திரி பேய் (கன்னியாஸ்திரினா ஏதோ மோகினிப் பிசாசு போல சின்ன வயசு பேயா இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அதற்கு 60-க்கும் மேல் இருக்கும் வயது.) தன்னை எச்சரிப்பதையும் உணருகிறாள். இனிமேல் பெண்டிங்கில் இருக்கும் கேஸ்களை முடித்துவிட்டு இத்தொழிலை விட்டொழித்துவிடலாம் என லோரைன் முடிவெடுக்கிறாள். அதேசமயம் இங்கிலாந்தில் கணவரைப் பிரிந்து தன் 4 குழந்தைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்துவருகிறாள் பெக்கி ஹாட்க்சன். அவளுடைய குழந்தைகளில் ஒருத்தியான ஜானெட்டிற்கு அமானுஷ்ய குரலும் தொடர்ந்தாற்போல் அமானுஷ்ய விசயங்களும் நடக்கிறது. ஒருகட்டத்தில் அவளை வழக்கம்போல பேய் கடித்துவிட, அதைத்தொடர்ந்து காவலர்கள் வர, அவர்களும் வீட்டில் நிகழும் அமானுஷ்யங்களை கண்டு கதிகலங்க, இவ்விஷயமெல்லாம் டி.வி மற்றும் பேப்பரில் வர, இதைக் காணும் சர்ச் ஆட்கள் அமெரிக்காவிலிருக்கு வார்ரன் தம்பதியினருக்கு போன் போட்டு அங்கு வரசொல்லுகிறார்கள்.

அங்கு வேண்டா வெறுப்பாக செல்லும் லோரைனால் அங்கு இருக்கும் ஆவியுடன் பேசமுடியவில்லை. ஆனால் அங்கு அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்பதை உணருகின்றனர். வழக்கம்போல திடீர் திடீர் என டி.டி.எஸ் சவுண்டோடு பேய் வந்து அலப்பறை செய்ய அதைப் படமெடுத்து சர்ச்சுக்கு அணுப்பலாம் என முடவெடுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இம்மாதிரியெல்லாம் ஜானெட்டே செய்து நடிக்கிறாள் என்பது வீடியோ ஆதாரத்தில் தெரியவர , அவர்கள் அவ்வீட்டை விட்டு கிளம்பும்படியாக ஆகிறது. அதன்பின் ஜானெட் என்ன ஆனாள், அவர்களைப் பாடாய் படுத்தும் ஆவி எது, வார்ரன் தம்பதியினரின் நிலை, லோரைன் கண்ட காட்சிகள் போன்றவற்றிற்கெல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் எனக்கு படத்தின் முதல்பாதி சுத்தமாக பிடிக்கவில்லை (முதல்பாதி என்றால் நம்ம ஊர் ஆட்கள் அவர்களாக இஷ்டப்பட்டு இடைவேளை விடும் நேரம் வரை) . ஒரு கட்டத்தில் கொட்டாவி மேல் கொட்டாவியாக விட்டு தூங்கும் அளவிற்கே சென்று விட்டேன். ஏனென்ற காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். பேய் திரைப்படங்கள் என்றாலே ஃபுல் சவுண்டில் தன்னந்தனியாக பார்த்து பார்த்து பழகியவன் நான். அதுவும் லேப்டாப்பில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சரியாக இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல்தான் எந்தவொரு பேய்த்திரைப்படத்தையும் பார்ப்பேன். எனக்கு அப்படிப் பார்ப்பதில்தான் பிரியம். அந்த அனுபவங்களாலோ என்னவோ தான் என்னை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாமல் இயக்குநர்கள் திணறுவார்கள். என்னால் நன்றாகவே உணரமுடியும்; இந்திந்த இடங்களில் சவுண்ட் எஃபெக்ட், இங்கெல்லாம் கோரக்காட்சிகள் என முன்னதாகவே என் மனதையும் உடலையும் தயார் செய்துவிடுவேன். அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் எனக்குள் எந்தவித படபடப்பும் இருக்காது. நான் தனியாக பார்த்த பல பேய்த்திரைப்படங்களை என் நண்பர்கள் பார்த்து விட்டு அடிவயிறு கலங்கியெல்லாம் வந்துள்ளார்கள். அதற்காக என்னைப் பெரிய தைரியசாலி என்றெல்லாம் சொல்லவில்லை; நிறைய படங்களைப் பார்த்த அனுபவத்தால் அந்த படபடப்பைக் கையாள பழகிக்கொண்டேன். போதாக்குறைக்கு நாங்கள் 12 பேர் தியேட்டருக்கு காலைக் காட்சி சென்றோம். தியேட்டரில் பீதியிலிருந்த பலர் பேய் வரும்போதெல்லாம் சிரித்துக் கொண்டும், தான் பயப்படவில்லை என காண்பிப்பதற்காக பேசிக்கொண்டும் இருந்ததெல்லாம் எனக்கு  எரிச்சலைத் தான் வரச்செய்தது. அதிக பயத்தில் இருந்தவர்கள் தான் பயப்படுவதை மறைக்க  கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் என்பது தான் உளவியல் உண்மை.

ஆனால் இரண்டாம்பாதியில் வழக்கம்போல கொட்டாவி விட வாயைத் தொறந்த எனக்கு வைத்தார் பாருங்கள் ஷாக். சாமி; உடம்பே தூக்கிப்போட்டுவிட்டது. முதல்பாதியில் மெதுவாக நகர்த்திக்கொண்டு சென்ற படத்தை இரண்டாம்பாதியில் திடுக் திடுக் சவுண்ட் எபக்டோடு அட்டகாசமாக சென்று முடித்தார்.  என் நண்பர்களெல்லாம் முதல் பாதியிலேயே அடிவயிறு கலங்கிவிட்டது; எழுந்து ஓடிவிடலாம் போலிருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் என்னை நன்றாகவே ஏமாற்றி திடுக்கிட வைத்துவிட்டார் ஜேம்ஸ் வான். இத்தனைக்கும் படத்தில் முதல் காட்சி மட்டுமே கொடூரமாக இருக்கும். மற்றபடி டீசன்டாகவே செல்லும்.

படத்தில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், லொகேசன் எல்லாம் பிரம்மாதம். சோர்ஸ்  கோட் மற்றும் ஆர்பன் புகழ் வெரா பார்மிகா அருமையாக நடித்துள்ளார். பேய் பிடித்து திரியும் ஜேனட்டாக வரும் மேடிசன் நடிப்பு அட்டகாசம். படத்தில் ஓஜா போர்டு காட்சிகளும் தொடர்ந்தாற் போல் பேய் பற்றிய காட்சிகளும் பார்க்கும்போது எனக்குள் ஆச்சரியம். சென்ற வாரம் நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஓஜா போர்ட் விளையாடினேன். ஆனால் பேயெல்லாம் வரவில்லை. நாங்கள் பேயை வரவைக்க பேசிய பல வசனங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. ஓஜா போர்ட் விளையாடும்போது வராத பேய், அதன்பின் வரும். அதேபோல் நாம எத்தன பேய உசுப்பிவிட்டமோ தெரியலையேனு யோசிக்கும்போதே ‘நல்லவேளை. நாம் பேயிற்கு குட்பை சொல்லிவிட்டுதான் ஓஜா போர்டை அழித்தோம்’ என்றான் நண்பன். 

மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்கலாம். இதயம் பலவீனமானவர்கள் தவிர்ப்பது நலம். இம்மாதிரியான திரைப்படங்களால் ஸ்ட்ரோக் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்னது? சாகற அளவுக்கு வொர்த்தா என்று ஆச்சரியப்படாதீர்கள். 3 காட்சிகள் நம் நெஞ்சை அடைத்துக்கொள்ளும் வண்ணம் சவுண்ட் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது. மற்றபடி முதல் பாகத்தின் ரெக்கார்டை அடித்துத் துவைத்துவிடும் இந்த லண்டன் பேய். எனக்கே பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

Sunday, 5 June 2016

THE PURGE – சினிமா விமர்சனம்சயின்ஸ் பிக்சன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த சயின்ஸ் பிக்சனிலேயே நெறைய வகையறா உள்ளது. ஸ்பேஸ் அட்வெஞ்சர், டைம் ட்ராவல், எதிர்காலத்தில் நிகழும் த்ரில்லர், க்ரைம் என எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்த ஒரு சீட்எட்ஜ் ஹார்ரர் கம் த்ரில்லர் தான் இந்த பர்ஜ். 2022-ல் அமெரிக்கா மிகசுத்தமாக இருக்கிறது. க்ரைம் ரேட் 1 சதவீதமாக குறைந்து நாடே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எப்படி? வருங்கால அமெரிக்கர்கள் குற்றங்கள் குறையவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு தினத்தை ஆண்டவன் பெயரில் அறிவிக்கிறார்கள். அதுதான் பர்ஜ். அந்த தினத்தில் மனதில் உள்ள துவேஷத்தையும், கொலைவெறியையும், வஞ்சத்தையும் இன்னபிற கெட்டவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். அன்றிரவு 7 மணியிலிருந்து அடுத்தநாள் 7 மணி வரை போலிஸ் கிடையாது; மருத்துவமனை கிடையாது; இவ்வளவு ஏன்? அரசாங்கமே  12 மணிநேரம் செயல்படாது. அன்றைய தினம் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் ரேப் செய்துகொள்ளலாம்.  கொலை செய்வதற்குக்கூட குறிப்பிட ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கமே பரிந்துரை செய்யும். அன்றைய தினத்தை ரேடியோக்களும், டி.விக்களும் ஏதோ பொங்கல் திருநாள் நிகழ்வுபோன்று கொண்டாடும். அந்த தினம்தான் பர்ஜ்.

கதைப்படி ஜேம்ஸ் எனும் பணக்காரர் தன் மனைவி மேரி, டீன் ஏஜ் மகள் ஷோயி மற்றும் மகன் சார்லி வசித்து வருகிறார். அன்றைய தினம் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணிவரை அந்த வருடத்தின் சுத்திகரிப்பு தினம் கொண்டாடப்பட இருக்கிறது.  அன்றிரவு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளே இத்திரைப்படம். ஜேம்ஸ் ஒரு செக்யூரிட்டி சிஸ்டத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. அவர் உருவாக்கிய செக்யூரிட்டி சிஸ்டத்தையே அமெரிக்காவின் மிகப்பெரும்பாலான வீடுகள் பயன்படுத்துகின்றன. மகள் ஷோயி அவளின் காதலன் ஹென்றியுடன் ஜாலியாக இருக்கிறாள். ஜேம்ஸ் அலுவலகம் முடித்து காரில் வீடு திரும்புவதாக படம் துவங்குகிறது. இதைக் கண்டு ஷோயி தன் காதலன் ஹென்றியை வீட்டிலிருந்து அனுப்புகிறாள். இன்னொருபுறம் சார்லி தான் கண்டுபிடித்த ஸ்பூகேமராவை வைத்துக்கொண்டு வீட்டில் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டிற்கு ஜேம்ஸ் வந்ததும் டின்னர் முடிகிறது. மணியும் 7-ஐத் தொடுகிறது. பர்ஜ் தினத்திற்கான அறிவிப்பு சத்தம் கேட்டதும் தன் வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குச் செல்கிறார்கள். ஷோயியின் அறையில் ஹென்றி வீட்டிற்கு செல்லாமல் ஒளிந்துகொண்டிருக்க, ஷோயி வந்ததும் அவளிடம் ஜேம்ஸிடம் நம் காதலைச் சொல்லவேண்டும் என்று கிளம்புகிறான். இன்னொருபுறம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் சார்லி ஒரு மனிதன் ஓடிவருவதையும் அவனைக் காப்பாற்றுமாறு கதறுவதையும் கண்டு அவனுக்கு உதவ முயற்சிக்கிறான்.

செக்யூரிட்டி சிஸ்டத்தை அன்லாக் செய்துவிட்டு அந்த மனிதனைக் காப்பாற்றுகிறான் சார்லி. சிஸ்டம் அன்லாக் ஆனதை உணரும் ஜேம்ஸ் கதவருகே வர, அதேநேரம் ஹென்றியும் அங்கே வருகிறான். பட்டென்று ஹென்றி துப்பாக்கியை எடுத்து ஜேம்சைக் கொல்ல முயற்சிக்க, நடக்கும் சண்டையில் ஹென்றி ஜேம்சால் கொல்லப்படுகிறான். அந்த கேப்பில் உள்நுழைந்த அந்த மனிதன் வீட்டிற்குள் எஸ்ஸாகிறான். சிறிது நேரத்தில் ஒரு டீன்-ஏஜ் ஆண்களும் பெண்களும் முகமுடி அணிந்து சைக்கோக்கள் போல வீட்டிற்கு வந்து ஜேம்சை மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். உள்நுழைந்த ஆசாமியை வெளியில் பிடித்துத் தந்தால் ஜேம்ஸின் குடும்பத்தை விட்டுவிடுவதாக சொல்கிறார்கள். வீட்டிற்குள் சார்லி அந்த மனிதனுக்கு உதவி செய்ய, இன்னொருபுறம் ஷோயி மனதளவில் ஹென்றியின் இறப்பை ஜீரணிக்கமுடியாமல் எங்கோ ஒளிந்து கொள்கிறாள். அந்த மனிதனை ஜேம்ஸ் பிடித்தாரா, ஜேம்ஸின் குடும்பம் என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

இந்த திரைப்படத்தில் உள்ள மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அதிவேக பரபர  திரைக்கதையே ஆகும். ஒரு ஆசாமி ஜேம்ஸ் வீட்டினுள் துழையும்போது ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும்வரை துளிகூட குறையாமல் நகர்ந்துகொண்டே இருக்கும். கான்செப்ட் ரீதியாக நம்பமுடியாததாக இருந்தாலும் திரைக்கதையானது அதையெல்லாம் ஓரங்கட்டி நம்மையும் அந்த வீட்டிற்குள் இழுத்துச்செல்லும். வில்லனாக வரும் ரைஸ் வேக்ஃபீல்டின் நடிப்பு அசத்தலாக இருக்கும். ‘மிஸ்டர் சான்டின். உங்கள் வீட்டிலிருக்கும் அந்த மனிதனைக் கொன்று எங்கள் மனதைத் தூய்மைப் படுத்தவேண்டும். தயவு செய்து அவனை வெளியே அனுப்புங்கள்’ என்று ரைஸ் கேட்கும்போது கூட இருக்கும் ஒரு பர்ஜர் கெட்ட வார்த்தையில் ஹீரோவைத் திட்டும்போது படக்கென்று அவனைச் சுட்டுவிட்டு ‘சீக்கிரம் அனுப்புங்கள். இவன் என் நண்பன்; ஆனால் நீங்கள் என் நண்பன் இல்லை’ என்று கூலாக மிரட்டும்போது நமக்கே உடல்சிலிர்க்கும். உள்ளே நுழையும் ஆசாமியான எட்வின் ஹாட்ஜ் உயிர்பிழைக்கவேண்டும் என்று துடிக்கும்போது நமக்கேபாவமாக இருக்கும். இவர்களையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டு கலக்குகிறார் உமா தெர்மனின் முன்னாள் கணவரும் ‘அந்த குழந்தையே நீங்க தான் ’ புகழ் ப்ரிடெஸ்டினேசன் ஹீரோவுமான ஈதன் ஹாக். ஜேம்சாக வரும் இவர் வீட்டில் பதுங்கியிருக்கும் எட்வின் ஹாட்ஜை சேரில் கட்டிப்போடும்போது ஏதோ சமையல் குறிப்பு சொல்வதுபோல மனைவியிடம் ‘கத்தியை எடுத்து அவன் உடலில் புல்லட் இறங்கிய இடத்தில் சொருகு’ என்று சொல்லிவிட்டு ‘இங்கே பாருங்க. இப்படி பண்ண உங்களுக்கு வலிக்கும். தயவு செஞ்சு என் குடும்பத்த காப்பாத்தறதுக்காக வெளிய போய் செத்துடுங்க’ என்று சொல்வதெல்லாம் ரணகளம். 

படத்தில் மூன்றுபேரை மிகமுக்கியமாக பாராட்டவேண்டும். ஒளிப்பதிவாளர் ஜாக்கஸ், இசையமைப்பாளர் நாதன் வைட்ஹட் மற்றும் எடிட்டர் பீட்டர். ஒளிப்பதிவு ஏதோ பிரம்மாண்ட திரைப்படங்களைப் பார்ப்பதைப் போன்றதொரு குவாலிட்டியில் உள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் டீமொனாக்கோ (இவர் பெயரும் ஜேம்ஸ் தான்) எழுதி, இயக்கிய இரண்டாவது படம் இது. 3 மில்லியனில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 90 மில்லியன் வசூல் செய்த காரணத்தால் தொடர்ந்தாற்போல் இரண்டாண்டுகளுக்கு ஒரு பர்ஜ் திரைப்படத்தை இயக்கிக்கொண்டே போகிறார். 2014-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இரண்டாம்பாகமும் செம ஹிட் ஆனதைத் தொடர்ந்து இவ்வருடம் ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் ரிலிசாக இருக்கிறது.

வருங்காலத்தில் இப்படியெல்லாம் ஆகுமா? ஆகாதா என்பதை யோசிப்பதற்கு பதில் ஆகாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் தவறில்லை; ஏனென்றால் நம் மனதில் இருக்கும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்பு கிடைக்கும்போது என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதை படத்தின் கிளைமேக்ஸில் பார்க்கும்போதும் அதைப் பற்றி யோசிக்கும்போதும் மனது துடிதுடிக்கிறது. இன்று உத்தமர்களாக மெச்சக்கொள்ளும் ஹோமோசெப்பியன்ஸ் ஒரு காலத்தில் நியான்டர்தால் மனித இனத்தையே கூண்டோடு அழித்த பழிக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஏற்கனவே மதம்,இனம்,சாதி,நாடு, மொழி எனப்பல்வேறு காரணங்களால் மனிதர்கள் தங்கள் வெறுப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் இம்மாதிரியெல்லாம் அறிவிக்கப்பட்டால் அவ்வளவு தான். அதையெல்லாம் விடுங்கள்; இந்த திரைப்படம் ஒரு மஸ்ட் வாட்ச் என்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. படம் முடிந்தபின் ரேடியோவிலும், டி.வி.யிலும் வரும் அறிவிப்புகளைக் கேட்க மறக்காதிர்கள்.

Saturday, 4 June 2016

SNATCH - சினிமா விமர்சனம்


கிட்டத்தட்ட ப்ளாக்கில் சுறுசுறுப்பாக இயங்கி நான்குமாதங்களுக்கும் மேலாகின்றது என நினைக்கிறேன். சில பர்சனல் காரணங்களால் எழுதுவது மட்டுமில்லாமல் வாசிப்பது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற மகத்தான காரியங்களையும் தடைசெய்யவேண்டியதாகி விட்டது. இந்நான்கு மாத காலத்தில் அதிகபட்சமாக பார்த்த  திரைப்படங்களின் எண்ணி்க்கை 20 இருக்கலாம். அதேபோல் இக்காலகட்டத்தில் படித்த நாவல்களின் எண்ணிக்கையும் 10-ஐத் தாண்டவில்லை என்பது எனக்கே வாய்த்த சோகம். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாவல், 3 திரைப்படம் என்று சூளுரைத்த சபதத்தை நிறைவேற்ற கடைசி 20 நாட்களாக போராடி வருகிறேன். கிட்டத்தட்ட தினமும் 3 திரைப்படங்களும் 3 நாளுக்கு ஒரு நாவலும் படித்துவருகிறேன். இதைத்தவிர வேறு வேலையே இல்லையா என்று என்னைப்பார்த்து நீங்கள் பொறுமுவது புரிகிறது. சரி இப்போது எதற்கு இந்த ப்ளாஷ்பேக்? தேவையற்ற ஒரு பத்தி. பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள். எல்லாம் க்வென்டின் திரைப்படம் பார்த்து  என்னைத்தாண்டி இப்படி ஒட்டிக்கொண்டது.

உங்களுக்கு பரபர வேகத்தில் கேங்ஸ்டர் காமெடி திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் சிறிதும் தாமதிக்காமல் இந்த திரைப்படத்தை டவுன்லோட் செய்துவிடுங்கள்; ரிவியூகூட படிக்கத் தேவையில்லை. திரையுலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்; இந்த கேட்டகரியில் 95 சதவீத இயக்குநர்களை அடக்கிவிடலாம். ஸ்டைல் இல்லையென்று காட்டுவதுகூட ஒரு ஸ்டைல் தான்; ஸடான்லீ குப்ரிக் போன்ற ஒரு சிலரை இதில் சேர்க்கலாம். இயக்குநர் கெய் ரிட்சி (GUY RITCHIE) எழுதும் திரைக்கதைகள் அலாதியானவை. அசால்டாக போகிறபோக்கில் காமெடியைத் தூவிவிட்டு, அழகாக திரைக்கதையை நகர்த்திச் செல்வார். LOCK,STOCK AND TWO SMOKING BARRELS, SNATCH, ROCKNROLLA என இவர் எழுதிய இயக்கிய படங்கள் எல்லாம் சுந்தர்.சி ரகம். அதுவும் வெறும் காமெடியை மட்டும் பிரதானப்படுத்தாமல் ஒரு கேங்ஸ்டர் கதையில் பயங்கரமான சூழலில் தன் கேரக்டர்களை உலாவவிட்டு அதனுள் காமெடியைத் திணித்து நமக்கு ஒரு கலக்கல் கா்கடெய்லைக் கொடுத்துவிடுவார். அதுதான் கய் ரிட்சி ஸ்பெஷல். 

சினிமா எடுக்கப்படும் விதத்திலும் திரைக்கதை அமைப்பைக் கொண்டும் பல்வேறு வகையாக சினிமாவை வகைபடுத்துவார்கள் என்பது ஊரறிந்ததே. அந்தாலஜி, ஃப்லிம் நாய்ர், ஆர்ட் ஃப்லிம், எக்ஸ்பிரமென்டில் ஃப்லிம் இப்படி ஏகப்பட்ட ஸ்டைல்களை  சொல்லிக்கொண்டே போகலாம். 2005-ல் டான் ரூஸ் எனும் பிட்டுப்பட இயக்குநர் இயக்கிய ஹாப்பி என்டிங்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய அலைசா முதன்முதலில் அப்படத்தின் ஸ்டைல் குறித்து ஒரு புது வார்த்தையை உதிர்த்தார். அதுதான் ஹைபர்லிங்க் சினிமா எனும் பதம் (முன்குறிப்பு – ஸ்டைல் வேறு; ஜேனர் வேறு. திரைப்படம் எடுக்கப்படும் விதத்தைக் கொண்டு சொல்வது ஸ்டைல் எனப்படும். திரைப்படம் கொண்டு செல்லப்படும் விதத்தைப் பொறுத்து ஜேனர் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக இத்திரைப்படத்தின் ஸ்டைல் ஹைபர்லிங்க் சினிமா; அதேநேரம் ஜேனர் என்றால் இது காமெடி க்ரைம் ஜானரை வந்து சேரும்). 

அதாவது ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல கேரக்டர்கள் கடைசியில் ஒருமுறை தெரிந்தோ, தெரியாமலோ சந்திக்கும்போது படத்தின் கதை திசை திரும்புவதே இந்த பதம். தமிழில் தசாவதாரம், சூதுகவ்வும் போன்ற படங்களைக் கூறலாம். இந்த பதம் வழக்கிற்கு வந்தபின் இதற்கு முன்வந்த திரைப்படங்களையெல்லாம் வகைப்படுத்த ஆரம்பத்தார்கள். அப்படி வகைப்படுத்திய பின் ஹைபர்லிங்க் சினிமாவில் கெத்துக்காட்டியவர்கள் இருவர் என கண்டறிந்தனர். ஒன்று கய் ரிட்சி; மற்றொருவர் தொடர்ந்தார்போல் இந்த ஆண்டும் கடந்த ஆண்டும்  ஆஸ்கார் அடித்த அலயேந்த்ரோ கொன்சாலஸ் இன்அரிட்டு. ஆனால் அலயேந்த்ரோ ஆரம்பத்தில் ஸ்பானிஷில் இயக்கியவர் என்பதால் ஹாலிவுட் ஹைபர்லிங் சினிமாக்களில் அவர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஹைபர்லிங்க் சினிமாவில் உலகளவில் முன்னோடி யாரென்று பார்த்தால் நமக்கெல்லாம் உடல் சிலிர்க்கும். ஆம்; அவர் ஒரு இந்தியர் தான். சினிமா என்றதும் நினைவுக்கு வரும் சத்யஜித்ரே எனும் அந்த மேதை தான் உலகின் முதல் ஹபைர்லிங் சினிமாவை இயக்கிய பெருமைக்குரியவர்.

சரி; இத்திரைப்படத்திற்கு வருவோம். திரைப்படமானது டர்கிஷ் (ஜேசன் ஸ்டாதம்) வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது. ‘வைரங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் ஒரு பாக்ஸிங் ப்ரமோட்டர். இது என் பார்ட்னர் டாம்மி’ என்று அவர் தன்னையும் தன்னுடன் இருப்பவரையும் அறிமுகப்படுத்தும் அதேநேரம் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப் வைரப்பாதுகாப்புக் கிடங்கில் நான்கு ஆசாமிகள் ஜாலியாக க்வென்டின் திரைப்படத்தில் வருவதுபோல் பேசிக்கொண்டு வருகின்றனர். மெயின் டோரை அடைந்து உள்நுழைந்ததும் படபடவென்று ஆடைக்குள் பதுக்கியிருக்கும் துப்பாக்கிகளை எடுத்து ஒரு பெரிய வைரக்கல்லைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர். அக்கூட்டத்தின் தலைவன் ஃப்ராங்கி தி ஃபோர் பிங்கர்ஸ் (பெனிசியோ டெல் டோரா). தடதடவென திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் (ஆக்சுவலி காட்சிகளில் வரும் அனைவருமே முக்கிய கதாபாத்திரங்கள்தான்) நமக்கு அறிமுகமாகின்றன. 

கொள்ளைக்கு பின்பு அனைவரும் லண்டன் சென்று பிரிகின்றனர். பிரியும் நேரத்தில் ஒரு ரஷ்யன் ஃப்ராங்கிடம் ‘உனக்குத் துப்பாக்கி வேண்டுமெனில் இவரைப் பார்’ என்று கூறி ஒரு அட்ரஸைத் தருகிறான். அந்த ரஷ்யனின் அண்ணன் தான் அந்த ஆயுத விற்பனையாளர் ; போரிஸ் தி ப்ளேட் (அ) போரிஸ் த புல்லட் டாட்ஜர் (ரேட் செர்பெட்ஷீசா). ஃப்ராங் , போரிசைப் பார்த்து துப்பாக்கி வாங்குகிறான். அவனிடம் போரிஸ் கேம்ப்ளிங்கைப் பற்றிக்கூறுகிறான். ஃப்ராங்கிற்கு கேம்ப்ளிங் மேல் அதீத ஆர்வம். இன்ஃபாக்ட் ஃப்ராங் தி ஃபோர் பிங்கர்ஸ் எனும் பேர் உண்டானதே சூதாட்டத்தில் தன் ஒருவிரலை பந்தயம் கட்டி இழந்ததால்தான். ஏற்கனவே போரிஸின் சகோதரன் ஃப்ராங்கைப் பற்றியும் அவனிடம் இருக்கும் வைரத்தைப் பற்றியும் போரிஸிடம் தெரிவித்ததால் கேம்ப்ளிங்கை வைத்து ஃப்ராங்கை கவிழ்த்துவிடுவான் போரிஸ். 

அதேநேரம் டர்கிஷ் ஒரு பாக்ஸிங் ப்ரமோட்டர். லண்டனில் வெய்ட்டு கையான ப்ரிக் டாப் (ஆலன் ஃபோர்ட்) ஏற்பாடு செய்யும் ஒரு அன்லைசென்ஸ்டு பாக்ஸிங்கில் தன் ஆளான பாக்சர் கோர்ஜியஸ் ஜார்ஜை  விளையாட வைக்கிறான். டர்கிஷ்கு அவசரமாக ஒரு கேரவன் தேவைப்பட, வாங்கிவர டாமியையும் கோர்ஜியஸ் ஜார்ஜையும் அனுப்பி வைக்கிறான். சிப்பாக கிடைக்குமென்பதால் டாமி செல்லுமிடம் பைக்கி என்றழைக்கப்படும் ஐரிஷ் நாடோடிகள் இனத்திற்கு. அங்கே மைக்கி எனப்படும் ப்ராட்பிட்டைச் சந்தித்து கேரவன் வாங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் வாய்க்கால் தகராறாக கோர்ஜியஸ் ஜார்ஜுக்கும்  மைக்கிக்கும் சண்டை வர, ஜார்ஜை ஒரே அடியில் வீழ்த்திவிடுகிறான் மைக்கி. டர்கிஷ் இப்போது சண்டையில் பங்கேற்க வைக்க ஆளில்லாமல் தவிக்க, மைக்கியையே சண்டையில் கலந்துகொள்ள செய்யவைக்கிறான். அதற்காக ப்ரிக் டாப்பிடம் சென்றுபேச, ப்ரிக்டாப் ‘உன்னுடைய ஆளை 4 ரவுண்ட் வரைத் தாக்குபிடித்து விளையாடி தோற்க வேண்டும்’ என்று கட்டளையிடுகிறான். ப்ரிக்டாப் பற்றி சின்ன முன்னோட்டம்; தனக்கு ஆகாதவர்களே, தன் சொல் கேட்காதவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி ஒரு வாரம் பசியோடு இருக்கும் பன்றிகளுக்கு உணவாக்கிவிடுவான் (தடையறத்தாக்க நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை). டீலை ஏற்றுக்கொள்கிறான் டர்கிஷ்.

அதேநேரம் போரிஸ்,  அடியாள்களை வைத்து ஃப்ராங்கியைக் கடத்தி, அவன் கையுடன் இணைக்கப்பட்டுள்ள வைரத்தைக் கடத்த முடவெடுக்கிறான். அதற்காக அவன் தேடிச்செல்வது அடகுக்கடை ஓனரான வின்னி. வின்னியின் பார்ட்னர் சால் மற்றும் தைரன். அவர்களிடம் பாக்சிங் நடக்கும் இடத்தில் கொள்ளையடிக்கவேண்டும் மற்றும் ஒருவனைக் கடத்தவேண்டும் என்று போரிஸ் கூற, மூவரும் கொள்ளையடிக்கச்செல்லும்போது ப்ரிக் டாப் ஆபிசில் இருக்கும் CCTVயில் மாட்டிக்கொள்கிறார்கள். எப்படியோ அடித்துப்பிடித்து அவர்கள் ஃப்ராங்கியைக் கடத்தி வருகிறார்கள். ஃப்ராங்கியிடம் இருக்கும் வைரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் மூவரும் போரிசிடம் அதிக அமௌன்ட் கேட்க, போரிசோ ஃப்ராங்கியைக் கொன்றுவிட்டு கிளம்புகிறான். அதேநேரம் பாக்சிங் மேட்சில் தோற்கவேண்டிய மைக்கி, ஒரேஅடியில் எதிரியை வீழ்த்திவிடுகிறான். இதனால் செம காண்டாக இருக்கும் ப்ரிக்டாப், டர்கிஷ்ஷை மிரட்டி, மீண்டும் மைக்கியை சண்டையில் கலந்துகொண்டு தோற்கவைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான். டர்கிஷ், மைக்கியிடம் சென்று கேட்க அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறான் மைக்கி. இதனால் காண்டாகும் ப்ரிக்டாப் , மைக்கியின் அம்மாவை கேரவனில் வைத்து எரித்துவிடுகிறான். அதனால் தான் மீண்டும் சண்டையிடுவதாக ஒப்புக்கொள்கிறான் மைக்கி.

அதேநேரம் அமெரிக்காவின் ஃப்ராங்கியின் சொந்தக்காரரும் வைரவியாபாரியுமான கசின் ஏவி, ஃப்ராங்கி கடத்தப்பட்டதை அறிந்து கிளம்பி லண்டன் வருகிறார். அங்கே அவனுடைய தோழன் டஃப் த ஹெட்டைச் சந்தித்து, ஃப்ராங்கியையும் வைரத்தையும் கண்டறிவதற்காக புல்லட் டூத் டோனி என்பவனை நியமிக்கிறான். இவர்கள் மூவருக்கும் போரிஸ் பற்றி தெரியவர, போரிஸ் மாட்டிக்கொள்கிறான். 

ப்ரிக்டாப் தன் ஆபிசில் மிரட்டிய வின்னி குழுவினரைக் கொல்லமுயற்சிக்க, அவர்கள் வைரத்தைப் பற்றித் தகவல் தர, வைரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு வர 2 நாள் கெடு விதிக்கிறான் ப்ரிக்டாப். அதேநேரம் போரிஸ் ஒரு கட்டத்தில் ஏவி குழுவிடம் இருந்து தப்பிக்கிறான். வைரம் என்ன ஆனது? மற்ற கதாபாத்திரங்களின் நிலை என்ன? போன்ற பல என்ன-க்களைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 


அடேங்கப்பா. சிம்பிளாக வைரக்கொள்ளை என்று ஒரு வார்த்தையில் எவனும் கதையைச் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே மாய்ந்து மாய்ந்து இத்தனை கேரக்டர்களை நுழைத்து மிகத்துல்லியமாக தான் நினைத்ததைச் சாதித்திருக்கிறார் கெய் ரிட்சி. கதையை ஒரு பத்தியில் எழுதிவிடலாம் என்று நினைத்த என்னையே இந்த வாங்கு வாங்கவைத்துவிட்டார். கதை பயங்கர குழப்பகரமானதாக படிக்கும்போது உங்களுக்கு தோனலாம். ஆனால் திரையில் பார்க்கும்போது துல்லியமாக, மிகத்துல்லியமாக விளங்கவைத்திருப்பார் இயக்குநர். ஒவ்வொரு கேரக்டரைப் பற்றியும் முன்பே அறிமுகப்படுத்திவிட்டு (ஒரே செகன்டில்) அவர்களைப் பற்றிய பின்னூட்டங்களை ஆங்காங்கே விவரித்திருப்பார். எடுத்துக்காட்டாக ஃப்ராங்கி தி ஃபோர் பிங்கர்ஸ் என்று கூறப்பட்டவன் எதற்காக ஃபோர் பிங்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறான் என்பதை நடுவில் கூறப்படும். இதேபோல் ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒவ்வொரு விசயத்தைக் குறிப்பிட்டிருப்பார். தீப்பொறித் திருமுகம், அட்டாக் ஆறுமுகம், படித்துறை பாண்டி என நமக்கு இந்த அடைமொழியெல்லாம் புதுசல்ல. எம்.ஜி.ஆர் காலத்து படங்களிலேயே கத்தி கபாலி, பயில்வான் பாண்டியன், கருந்தேள் கண்ணாயிரம் (கருந்தேள் அண்ணன சொல்லலிங்க) போன்று பல அடைமொழிகளைப் பார்த்துவிட்டோம். ஆனால் ஆங்கிலத்தில் பார்க்கும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது.  

படத்தில் ஒன்லைன் காமெடிகள் கொடிகட்டி பறக்கிறது. டர்கிஷ் , டாமியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது (நம்மிடமும் தான்) சமையல் செய்து கொண்டிருப்பவனைப் பார்த்து
What's with those sausages,Charlie? என்று கேட்க,
Two minutes, Turkish. என்பான் சமையல் செய்பவன். சிறிதுநேரம் கேரவன் பற்ற டாமியிடம் பேசிவிட்டு மீண்டும்,
What's happening with them sausages? என்று கேட்க
-Five minutes. என்பான் .
It was two minutes five minutes ago. என்று டர்கிஷ் சொல்லும்போது நமக்கே சிரிப்பு முட்டும். 

அதேபோல் வின்னி, தன் பார்ட்னர்ஸ் சால் மற்றும் தைரனுடம் காரில் செல்லும்போது, குண்டாக இருக்கும் தைரன் கார் ஓட்ட உட்காருவான். அவனை எதற்கு உட்கார வைக்கிறாய் என்று சால் கேட்க, அவன் ஹவிவெய்ட் ட்ரைவ்விங்கில் ஸ்பெசல் ட்ரைனிங் எடுத்தவன் என்று வின்னி கூறுவான். காரைக்கொண்டுபோய் பார்க் செய்யும்போது அங்கே பார்க்கிங் இடம் இருக்கிறது தைரன் என்று சால் சொல்ல, அது மிக மிக நெருக்கமாக இருக்கிறது என்று தைரன் சொல்லுவான். திரும்பி வின்னியும் சாலும் பார்க்க, 20 மீட்டர் அகலத்திற்கு இடைவெளி விட்டு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆம் இவன் ஹெவிவெய்ட் ட்ரைவர் தான் என்று சால் சொல்வதும் தாறுமாறு.. மைக்கியிடம் டாமும் டர்கிஷ்ஷும் மீண்டும் சண்டை போட வா என்றழைக்க மைக்கி ஐரிஷ் கலந்த இங்கிலிஷில் பல கண்டிசன்களை போட, இரு என் பார்ட்னரிடம் கேட்டுவிடுகிறேன் என்று திரும்பி டர்கிஷ் டாமிடம் ‘அவன் பேசியதில் ஒருவார்த்தையாவது உனக்கு புரந்ததா?’ என்று அப்பாவியாய் கேட்குமிடம் குபுக் சிரிப்பு.  இதேபோல் எண்ணற்ற காமெடிகளைப் பார்க்கலாம் . அதுவும் கடைசி 30 நிமிடம் காமெடிக்கென்று நேர்ந்துவிட்ட திரைப்படம் இது. 

பைக்கிகளைப் பற்றி சொல்லவேண்டுமெனில் எக்கச்சக்கம் உள்ளது. நம் ஊரில் குறவர், குறத்தியர் போன்ற நாடோடி இனமக்கள் தான் இந்த பைக்கிகள். அவர்களின் ஆங்கிலமானது ஐரிஷ் உச்சரிப்போடு கூடியது. டாக் (நாய்) என்பதை , டேக் என்று சொல்லுவார்கள். படபடவென பேசிக்கொண்டே செல்வார்கள். அந்த கேரக்டரில் ப்ராட்பிட் அசத்தியிருப்பார் . பிராட் பிட்டின் ரசிகர்கள் தவறவிடக்கூடாத திரைப்படம் இது (மற்றொன்று 12 மங்கிஸ்). ஜேசன் ஸ்டாதமை ஆக்சன் ஹீரோவாக மட்டும் பார்த்தவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு ஷாக். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, வேலைக்காகதவர்களை வைத்துக்கொண்டு அவர் படும்பாட்டைப் பார்க்கும்போது தானாகவே புன்னகைப் பூக்கும். புல்லட் டாக் டூத்தாக வரும் வின்னி ஜோன்ஸ் மிரட்டியிருக்கிறார். படத்தில் என்னால் நம்பமுடியாதது இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் எப்படி இத்திரைப்படத்தில் இணைந்தது என்பதுதான். பெனிசிலோ டெல் டோரா, ஆலன் ஃபோர்ட், பிராட் பிட், ஸ்டேதம் என எங்கு திரும்பினும் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. 

படத்தில் இதைத்தாண்டிய விசயம் இசை. கிக் ஆஸ் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜான் மர்பி தான் இத்திரைப்படத்திற்கும் இசை. டேனி பாய்ல்லின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர், கெய் ரிட்சியின் முதலிரண்டு திரைப்படங்களும் இசையமைத்தார். அதில் இத்திரைப்படம் கிளாஸிக்கல் என்றுகூட சொல்லலாம். ஆட்டகாசமான பிண்ணனி இசை. நான் இதுவரை பிஜிஎம்களை அவ்வளவு எளிதாக டவுன்லோட் செய்யமாட்டேன். Road To Perdition, Departed, Kill-Bill என என்னிடம் இருக்கும் மியூசிக் ட்ராக்குகளில் இப்போது இத்திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. எடிட்டர் ஜோன்ஹாரிஸ் மிகச்சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளார். ஒரு காட்சியில் கிட்டத்தட்ட 30-லிருந்து 40 டேக்குகள் வரை சொருகப்பட்டுள்ளன. ஆனால் அத்தனையும் மிகத்தெளிவாக கத்திரித்து ஒட்டியிருப்பதில் இவரின் திறமை வெளிப்படுகிறது.

மொத்தத்தில் காமெடி பிரியர்கள், வித்தியாசமான திரைக்கதைக் கொண்ட படங்களின் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம் இது. ஒரே ஒரு இடத்தில் அரைநிர்வாண காட்சி இடம்பெறுகிறது என்பதையும் முன்னமே சொல்லிவிடுகிறேன். வன்முறைக்காட்சிகள் படத்தில் காட்டப்படவில்லை என்பது ஆறுதல் விசயம்.