Sunday, 5 June 2016

THE PURGE – சினிமா விமர்சனம்சயின்ஸ் பிக்சன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த சயின்ஸ் பிக்சனிலேயே நெறைய வகையறா உள்ளது. ஸ்பேஸ் அட்வெஞ்சர், டைம் ட்ராவல், எதிர்காலத்தில் நிகழும் த்ரில்லர், க்ரைம் என எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்த ஒரு சீட்எட்ஜ் ஹார்ரர் கம் த்ரில்லர் தான் இந்த பர்ஜ். 2022-ல் அமெரிக்கா மிகசுத்தமாக இருக்கிறது. க்ரைம் ரேட் 1 சதவீதமாக குறைந்து நாடே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எப்படி? வருங்கால அமெரிக்கர்கள் குற்றங்கள் குறையவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு தினத்தை ஆண்டவன் பெயரில் அறிவிக்கிறார்கள். அதுதான் பர்ஜ். அந்த தினத்தில் மனதில் உள்ள துவேஷத்தையும், கொலைவெறியையும், வஞ்சத்தையும் இன்னபிற கெட்டவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். அன்றிரவு 7 மணியிலிருந்து அடுத்தநாள் 7 மணி வரை போலிஸ் கிடையாது; மருத்துவமனை கிடையாது; இவ்வளவு ஏன்? அரசாங்கமே  12 மணிநேரம் செயல்படாது. அன்றைய தினம் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் ரேப் செய்துகொள்ளலாம்.  கொலை செய்வதற்குக்கூட குறிப்பிட ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கமே பரிந்துரை செய்யும். அன்றைய தினத்தை ரேடியோக்களும், டி.விக்களும் ஏதோ பொங்கல் திருநாள் நிகழ்வுபோன்று கொண்டாடும். அந்த தினம்தான் பர்ஜ்.

கதைப்படி ஜேம்ஸ் எனும் பணக்காரர் தன் மனைவி மேரி, டீன் ஏஜ் மகள் ஷோயி மற்றும் மகன் சார்லி வசித்து வருகிறார். அன்றைய தினம் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணிவரை அந்த வருடத்தின் சுத்திகரிப்பு தினம் கொண்டாடப்பட இருக்கிறது.  அன்றிரவு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளே இத்திரைப்படம். ஜேம்ஸ் ஒரு செக்யூரிட்டி சிஸ்டத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. அவர் உருவாக்கிய செக்யூரிட்டி சிஸ்டத்தையே அமெரிக்காவின் மிகப்பெரும்பாலான வீடுகள் பயன்படுத்துகின்றன. மகள் ஷோயி அவளின் காதலன் ஹென்றியுடன் ஜாலியாக இருக்கிறாள். ஜேம்ஸ் அலுவலகம் முடித்து காரில் வீடு திரும்புவதாக படம் துவங்குகிறது. இதைக் கண்டு ஷோயி தன் காதலன் ஹென்றியை வீட்டிலிருந்து அனுப்புகிறாள். இன்னொருபுறம் சார்லி தான் கண்டுபிடித்த ஸ்பூகேமராவை வைத்துக்கொண்டு வீட்டில் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டிற்கு ஜேம்ஸ் வந்ததும் டின்னர் முடிகிறது. மணியும் 7-ஐத் தொடுகிறது. பர்ஜ் தினத்திற்கான அறிவிப்பு சத்தம் கேட்டதும் தன் வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குச் செல்கிறார்கள். ஷோயியின் அறையில் ஹென்றி வீட்டிற்கு செல்லாமல் ஒளிந்துகொண்டிருக்க, ஷோயி வந்ததும் அவளிடம் ஜேம்ஸிடம் நம் காதலைச் சொல்லவேண்டும் என்று கிளம்புகிறான். இன்னொருபுறம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் சார்லி ஒரு மனிதன் ஓடிவருவதையும் அவனைக் காப்பாற்றுமாறு கதறுவதையும் கண்டு அவனுக்கு உதவ முயற்சிக்கிறான்.

செக்யூரிட்டி சிஸ்டத்தை அன்லாக் செய்துவிட்டு அந்த மனிதனைக் காப்பாற்றுகிறான் சார்லி. சிஸ்டம் அன்லாக் ஆனதை உணரும் ஜேம்ஸ் கதவருகே வர, அதேநேரம் ஹென்றியும் அங்கே வருகிறான். பட்டென்று ஹென்றி துப்பாக்கியை எடுத்து ஜேம்சைக் கொல்ல முயற்சிக்க, நடக்கும் சண்டையில் ஹென்றி ஜேம்சால் கொல்லப்படுகிறான். அந்த கேப்பில் உள்நுழைந்த அந்த மனிதன் வீட்டிற்குள் எஸ்ஸாகிறான். சிறிது நேரத்தில் ஒரு டீன்-ஏஜ் ஆண்களும் பெண்களும் முகமுடி அணிந்து சைக்கோக்கள் போல வீட்டிற்கு வந்து ஜேம்சை மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். உள்நுழைந்த ஆசாமியை வெளியில் பிடித்துத் தந்தால் ஜேம்ஸின் குடும்பத்தை விட்டுவிடுவதாக சொல்கிறார்கள். வீட்டிற்குள் சார்லி அந்த மனிதனுக்கு உதவி செய்ய, இன்னொருபுறம் ஷோயி மனதளவில் ஹென்றியின் இறப்பை ஜீரணிக்கமுடியாமல் எங்கோ ஒளிந்து கொள்கிறாள். அந்த மனிதனை ஜேம்ஸ் பிடித்தாரா, ஜேம்ஸின் குடும்பம் என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

இந்த திரைப்படத்தில் உள்ள மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அதிவேக பரபர  திரைக்கதையே ஆகும். ஒரு ஆசாமி ஜேம்ஸ் வீட்டினுள் துழையும்போது ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும்வரை துளிகூட குறையாமல் நகர்ந்துகொண்டே இருக்கும். கான்செப்ட் ரீதியாக நம்பமுடியாததாக இருந்தாலும் திரைக்கதையானது அதையெல்லாம் ஓரங்கட்டி நம்மையும் அந்த வீட்டிற்குள் இழுத்துச்செல்லும். வில்லனாக வரும் ரைஸ் வேக்ஃபீல்டின் நடிப்பு அசத்தலாக இருக்கும். ‘மிஸ்டர் சான்டின். உங்கள் வீட்டிலிருக்கும் அந்த மனிதனைக் கொன்று எங்கள் மனதைத் தூய்மைப் படுத்தவேண்டும். தயவு செய்து அவனை வெளியே அனுப்புங்கள்’ என்று ரைஸ் கேட்கும்போது கூட இருக்கும் ஒரு பர்ஜர் கெட்ட வார்த்தையில் ஹீரோவைத் திட்டும்போது படக்கென்று அவனைச் சுட்டுவிட்டு ‘சீக்கிரம் அனுப்புங்கள். இவன் என் நண்பன்; ஆனால் நீங்கள் என் நண்பன் இல்லை’ என்று கூலாக மிரட்டும்போது நமக்கே உடல்சிலிர்க்கும். உள்ளே நுழையும் ஆசாமியான எட்வின் ஹாட்ஜ் உயிர்பிழைக்கவேண்டும் என்று துடிக்கும்போது நமக்கேபாவமாக இருக்கும். இவர்களையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டு கலக்குகிறார் உமா தெர்மனின் முன்னாள் கணவரும் ‘அந்த குழந்தையே நீங்க தான் ’ புகழ் ப்ரிடெஸ்டினேசன் ஹீரோவுமான ஈதன் ஹாக். ஜேம்சாக வரும் இவர் வீட்டில் பதுங்கியிருக்கும் எட்வின் ஹாட்ஜை சேரில் கட்டிப்போடும்போது ஏதோ சமையல் குறிப்பு சொல்வதுபோல மனைவியிடம் ‘கத்தியை எடுத்து அவன் உடலில் புல்லட் இறங்கிய இடத்தில் சொருகு’ என்று சொல்லிவிட்டு ‘இங்கே பாருங்க. இப்படி பண்ண உங்களுக்கு வலிக்கும். தயவு செஞ்சு என் குடும்பத்த காப்பாத்தறதுக்காக வெளிய போய் செத்துடுங்க’ என்று சொல்வதெல்லாம் ரணகளம். 

படத்தில் மூன்றுபேரை மிகமுக்கியமாக பாராட்டவேண்டும். ஒளிப்பதிவாளர் ஜாக்கஸ், இசையமைப்பாளர் நாதன் வைட்ஹட் மற்றும் எடிட்டர் பீட்டர். ஒளிப்பதிவு ஏதோ பிரம்மாண்ட திரைப்படங்களைப் பார்ப்பதைப் போன்றதொரு குவாலிட்டியில் உள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் டீமொனாக்கோ (இவர் பெயரும் ஜேம்ஸ் தான்) எழுதி, இயக்கிய இரண்டாவது படம் இது. 3 மில்லியனில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 90 மில்லியன் வசூல் செய்த காரணத்தால் தொடர்ந்தாற்போல் இரண்டாண்டுகளுக்கு ஒரு பர்ஜ் திரைப்படத்தை இயக்கிக்கொண்டே போகிறார். 2014-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இரண்டாம்பாகமும் செம ஹிட் ஆனதைத் தொடர்ந்து இவ்வருடம் ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் ரிலிசாக இருக்கிறது.

வருங்காலத்தில் இப்படியெல்லாம் ஆகுமா? ஆகாதா என்பதை யோசிப்பதற்கு பதில் ஆகாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் தவறில்லை; ஏனென்றால் நம் மனதில் இருக்கும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்பு கிடைக்கும்போது என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதை படத்தின் கிளைமேக்ஸில் பார்க்கும்போதும் அதைப் பற்றி யோசிக்கும்போதும் மனது துடிதுடிக்கிறது. இன்று உத்தமர்களாக மெச்சக்கொள்ளும் ஹோமோசெப்பியன்ஸ் ஒரு காலத்தில் நியான்டர்தால் மனித இனத்தையே கூண்டோடு அழித்த பழிக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஏற்கனவே மதம்,இனம்,சாதி,நாடு, மொழி எனப்பல்வேறு காரணங்களால் மனிதர்கள் தங்கள் வெறுப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் இம்மாதிரியெல்லாம் அறிவிக்கப்பட்டால் அவ்வளவு தான். அதையெல்லாம் விடுங்கள்; இந்த திரைப்படம் ஒரு மஸ்ட் வாட்ச் என்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. படம் முடிந்தபின் ரேடியோவிலும், டி.வி.யிலும் வரும் அறிவிப்புகளைக் கேட்க மறக்காதிர்கள்.
உங்கள் விருப்பம்

0 கருத்துகள்:

Post a Comment