THE DEPARTED – ஒரு பார்வை



ஒருசில படங்களைப்பார்க்கும் போது நம்மை அப்படியே கட்டி இழுத்துக்கொண்டு செல்வார்கள் . ஆனால் நாம் அசந்த நேரம் பார்த்து அப்படியே நம்மை நிலைகுலையவைக்கும் விதமாக ஒரு முடிவினைத் தருவார்கள் . நம்மால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்கவே முடியாது . எப்படிச்சொல்லலாம் என்றால் நாம் காதலிக்கும் பெண் நம் காதலை ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது , அவளுடைய அழகான தோழி நம்மைக்காதலிப்பதாக  சொன்னால் நமக்கு எப்படியிருக்கும்நம் காதலியையும் மறக்கமுடியாமல் , வழிய வந்தவளையும் விட்டுவிடமுடியாமல் ஒருவித பதற்றநிலைக்குத்தள்ளப்படுவோமே ! அம்மாதிரியான நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் . ROAD TO PERDITION திரைப்படம் பார்க்கும்போது , எல்லாப்பிரச்சனையையும் டாம் ஹேங்ஸ்  சால்வ் செய்துவிட்டு , கடைசியில் தன் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ முற்படுவார் . நாமும்அப்பாடி ! எப்படியோ ஹீரோ தப்பிச்சிட்டாரு . இனிமேலாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்னுமனதினுள் வாழ்த்துவோம் . நாம் வாழ்த்தி முடிப்பதற்குள் உள்ளே ஒரு கொலைகாரன் புகுந்து டாம்ஹேங்சைப்போட்டுத் தள்ளிவிடுவான் . நமக்கு ஒருநிமிடம் என்ன நடந்தது என்பதே புரியாது . ‘என்ன ! சிவாஜி செத்துட்டாரா ?’ என்பதுபோல் நம் முகம் தானாக ரியாக்சனைக்காட்டும் . இதேபோல் ஆரண்யகாண்டம் கிளைமேக்சினையும் குறிப்பிடலாம்எப்படியோ ஜாக்கியிடம் இருந்து ரவியும் அவன் அப்பாவிக் காதலியும் தப்பிவிட்டார்கள் என நினைக்கும்போதுபட்டென்று ரவியைப்போட்டு விட்டு அந்த பெண் எஸ்ஸாகிவிடுவாள் . நாம் எதிர்பார்க்காத ஒன்று அங்கு நடக்கும் . அடுத்த காட்சியே அவள் ரோட்டினை கிராஸ் செய்யும்போது லாரி ஒன்று மிகவேகமாக அவளை மோதவருவது போல் காட்டியிருப்பார்கள் . அவளை அடித்துச் சாகடிக்கப்போகிறது என்று நாம் நம்பும்போது அங்கேயும் நம் எதிர்பார்ப்பை அப்படியே நொறுக்கிவிட்டு அவள் பிழைத்துவிட்டாள் என்பதுபோல் காட்டியிருப்பார்கள் . அதாவது நாம் எதிர்பார்ப்பது நடக்காமல் போய்விடுகிறது . நாமோ அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் , மறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருப்போம் . இதுதான் ஒரு திரைப்படம் , வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கங்களில் முதன்மையானது.

தமிழில் கறுப்பு ஆடு என்று நமக்குள் ஒளிந்திருக்கும் துரோகிகளை குறிப்பிடவோம் அல்லவா ? அதேபோல் அமெரிக்காவில் RAT என்று துரோகிகளைக்குறிப்பிடுவார்கள் . அப்படிப்பட்ட துரோகிகளை மையமாக வைத்து படம் எடுத்து பெரும்புகழ் அடைந்த இயக்குநர் ஸ்கார்சேசேயின் அட்டகாசமான திரைப்படம் தான் தி டாபார்ட்டட் . ஸ்கார்சேசேக்கென்று ஒரு அதிர்ஷ்டம் உள்ளது . அவரின் பெரும்பாலான ஹிட் படங்கள் எல்லாம் மாஃபியா சம்பந்தமானது தான் . அதேபோல் மாஃபியா மற்றும் இரு கறுப்பு ஆடுகளை வைத்து பட்டாசு கிளப்பியிருக்கும் திரைப்படம்தான் இது .

படத்தின் கதை என்னவென்றால் நம் கமலின் காக்கிச்சட்டை போன்றதுதான் . ஆனால் அது கிடையாது . மாஃபியா தலைவனான ஃப்ரான்சிஸ் காஸ்டெல்லாவைப் (ஜாக் நிக்கல்சன்) பிடிக்க முயலும் போலிஸ் அதிகாரிகளான டிக்னமும் குயினைனும் ஒரு அன்டர்கவர் காப்பை (லியானர்டோ டீ காப்ரியோ) அனுப்பி வைக்கிறார்கள் .  அதேநேரம் காஸ்டெல்லாவோ போலிஸில் ஒருவனைச்சேர்த்துவிட்டு (மேட் டாமன்) அங்கு உளவுபார்க்கவிடுகிறான் . இப்போது என்ன பிரச்சனை என்றால் டிக்னம் மற்றும் குயினைனுக்கு போலிஸிலேயே யாரோ உளவு பார்ப்பது தெரிகிறது . அதேநேரம் காஸ்டெல்லாவுக்கும் தன் கும்பலில் யாரோ உளவு பார்க்கிறார்கள் என்று தெரிகிறது . அந்த கறுப்பு ஆடு யார் ? என இருபுறமும் தேட ஆரம்பிக்கிறார்கள் . அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இத்திரைப்படம். உலகில் நல்லது , கெட்டது இரண்டும் நிலவியிருக்கிறது . நாம் எப்போதும் நல்லதே ஜெயிக்கும் என்றுதான் கூறிவருகிறோம் . ஆனால்  நல்லதுதான் ஜெயிக்கிறதா ? நல்லவனுக்கு எல்லா உதவியும் கிடைக்கிறதா ? இதுதான் படத்தின் மேஜர் கரு .









I don't wanna be a product of my environment.
I want my environment to be a product of me.

என்றவாறு தல ஜாக் நிக்கல்சன் அறிமுகமாகும் காட்சியில் அப்படியே உடல் சிலிர்க்கும் . அவரின் இன்ட்ரோ காட்சியானது படத்தைப்பார்த்தபின் மீண்டும் பார்க்கும்போது விசிலடிக்க வைக்கும் ரகம் . அசால்டாக ஒரு ஜோடியை சுட்டுவிட்டு “JEEZ ! SHE FEL FUNNY” என்று கமென்ட் அடிக்கும்போது , அந்த கொலைக்கூட ஜாலியான விஷயமாகத்தெரியும் . என்னைப்பொறுத்த வரை வன்முறை அழகியல் மற்றும் டார்க் ஹூயூமரை மிகச்சாதாரணமாக அதேநேரம் ரசிக்கும்படி படைக்கும் திறமை ஸ்கார்சேசேக்கு மட்டுமே உண்டு. ஒரு காட்சியில் காப்ரியோ பாரில் அமர்ந்துகொண்டு க்ரான்பெர்ரி ஜூஸ் ஆர்டர் செய்வார் . அப்போது அருகிலிருப்பவன் ‘WHAT ? R U GOT PERIOD ?’ என கலாய்க்க , அவனை காப்ரியோ நாலு சாத்து , சாத்துவார் . அப்போது ஒரு பெருசு உள்ளே புகுந்து தடுக்கும் . வில்லனின் அல்லக்கைகளில் முக்கிய கையான அந்த பெருசின் பேச்சினைக்கேட்டு காப்ரியோ அமைதியாகிவிடுவார் . அடிபட்டவனிடம் அந்த பெருசு சென்றுவிடு . நம்ம பையன் தான்என்று சொல்ல , அவனோஎன்று சலிப்படைந்து இழுத்துக்கொண்டு சொல்லுவான் .  ‘என்னடா னு இழுக்கற என்று அந்த பெருசும் நாலு சாத்து சாத்துவார் . இதுமட்டுமின்றி படத்தின் இடையில் வரும் சீனர்களிடம் பிஸ்னஸ் பேசும் காட்சிகள் திக் திக் ரகம் . ஒருபுறம் காப்ரியோ போலிஸிடம் போட்டுக்கொடுக்க இன்னொருபுறம் போலிசிலிருக்கும் மேட் டாமன் ஜாக்கிடம் போட்டுக்கொடுக்க என இருபுறமும் நடக்கும் தில்லுமுல்லு வேலைகளும் அதைத்தொடர்ந்து ஜாக் நிக்கல்சன் அவர்களைத் தப்பிக்கவிடுவதும் அட்டகாசம் .

இப்படத்தின் திரைக்கதை என்பது எந்தளவிற்கு கட்டக்கோப்பானது என்பதை படத்தைப்பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம் . மேலோட்டமாக பார்க்கும்போது லீனியராக பயணிப்பதுபோல் தெரிந்தாலும் ஹீரோயின் சம்பந்தமான காட்சிகள்  நான்-லீனியரிலேயே நகர்கிறது . மேட் டேமன் வீட்டிற்கு ஹீரோயின் வருவது போல் முதலிலேயே காட்டிவிடுவார்கள் . ஆனால் சிறிதுநேரம் கழித்து அவள் தன் சொந்தவீட்டில் காப்ரியோவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நாளை தன் பாய்பிரெண்ட் வீட்டிற்கே குடிபெயர்வதாக சொல்வாள் . அதேபோல் கவுன்சிலிங் காட்சிகளும் முதலிலேயே வந்துவிட்டு , பின் எதற்காக காப்ரியோ கவுன்சிலிங் வருகிறார் என சிறிதுநேரம் கழித்து காட்டுவார்கள் . ஒருவிஷயம் நடந்துகொண்டிருக்கும்போது  வெளிப்படும் வசனங்களை மட்டும் ஓடவிட்டு அதனுடன் சம்பந்தப்படாத சில விஷயங்களை விஷுவலாக காட்டிவிட்டு பின் வசனம் முடியும் தருவாயில் அனைத்தையும் சம்பந்தப்படுத்தும் மெத்தேடில் படம்பிடித்திருப்பது அட்டகாசம் . ஆரம்பக்காட்சியை அப்படியே எடுத்துக்காட்டாக சொல்லலாம் . இதில் இம்மிப்பிசகினாலும் அப்படியே குழப்பிவிடும் என்றாலும் இயக்குநர் ஸ்கார்சேசே ஆச்சே ! அதேபோல் படத்தின் வசனம் அட்ட்காசமானதொரு சிறப்பு . படத்தின் பெரும்பலமே அதுதான் .

Fu*king rats.
It's wearing me thin. என்று காஸ்டெல்லோ சொல்லுமிடத்தில் அவரின் சகாவான ஃப்ரெஞ்ச்
Francis, it's a nation of fu*king rats.
என்று சொல்லுவார் . இதேபோல் பல இடங்களில் வசனம் கைத்தட்டலை பெறவைத்துவிடும் . எத்தனைமுறை பார்த்தாலும் இத்திரைப்படம் சலிக்காமல் இருப்பதற்கு ஸ்கார்சேசேயின் இயக்கத்திற்கு அடுத்து கட்டுப்பாடான திரைக்கதை , வசனம் மற்றும் இசை ஆகிய மூன்றும்தான் காரணம் .


GOOD FELLAS திரைப்படத்தைப்பற்றி எழுதியபோது ஸ்கார்சேசே தன் திரைப்படத்தில் அற்புதமாக இசையைப் பயன்படுத்துவதைப்பற்றி எழுதியிருந்தேன் . இப்படத்திலோ அவர் ஒருபடி மேலே சென்றிருக்கிறார் எனலாம் . இசையையும் ரசிக்கவைத்து , அதை படத்துடன் சரியானபடிஒன்றவைக்கும் திறமை இன்றைய இயக்குநர்களிடம் கூட இல்லை . நோலன் கூட ஹன்ஸ் ஜிம்மரின் புண்ணியத்தால் தான் பிழைத்துக்கொண்டிருக்கிறார் . இன்டர்ஸ்டெல்லர் , ரைசஸ் தவிர்த்து அவருடைய முந்தைய படங்களில் ஜிம்மரின் இசை கலைகட்டியிருந்தாலும் அது ஏனோ படத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றும் . க்வென்டின் படங்களில் பிண்ணனி இசை பிரமாதமாக இருந்தாலும் படத்துடன் அது ஒன்றிவருகிறதா என்று கவனித்துப்பார்த்தால் நான் சொல்லாமலே  உங்களுக்குத்தானாக புரியும்  . அர்வ்னாஸ்கி மாத்திரமே இவ்விஷயத்தில் ஸ்கார்சேசே போன்றே இசையை பயன்படுத்துகிறார் . அவரைத்தவிர்த்து மற்ற இளம்இயக்குநர்களெல்லாம் இசையை படத்தின் ஒரு அங்கமாகவே நினைக்கிறார்களே தவிர படத்தின் உயிர்ப்பாக நினைக்கவில்லை . தமிழில் செல்வா தன் படங்களில் அட்டகாசமாக இசையைப் பயன்படுத்தியிருப்பார் . ஷங்கர் , கௌதம் போன்ற பெருந்தலைகள் எல்லாம் இன்னும் பிண்ணனி இசையை சரியாக பயன்படுத்தவில்லையோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது . இப்படத்தில்  "I'm Shipping Up to Boston"  தீம் வரும்போதெல்லாம் தானாக உடல் சிலிர்க்கும் . அதுவும் இரண்டு மேஜரான காட்சிகளில் . அதேபோல் "The Departed Tango" "Sail On, Sailor" ஆகிய தீம்களும் அட்டகாசமாக இருக்கும் . படம்பார்த்துவிட்டு தனியாக டவுன்லோட் செய்து கேட்டுப்பாருங்கள் .

படத்தில் வில்லியம் காஸ்டிகன் கேரக்டர் இவ்வாறாக இருக்கும் . அவன் வாழ்ந்தது ஒரு மோசமான சூழலில் . அவன் குடும்பம் மொத்தம் கிரிமினல்கள் . ஆனால் அவனோ சிறுவயதிலிருந்தே நல்லவனாக வளர்ந்தவன் . போலிசாகவேண்டும் என்பது அவனுடைய ஆசை . ஆனால் அது நடக்காமல் போகிறது . அவனுடைய  ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக போலிஸ் உளவாளியாக பணியாற்றுகிறார் . அதுவும் எங்கே ? மிகப்பெரும் ஆபத்தான படுபயங்கர குற்றவாளியான நிக்கல்சனிடம் . பில்லியின் காதல் உண்மையாக இருந்தாலும் அதுவும் நிறைவேறாமலே போகிறது . என்னதான் அவன் போலிஸ் உளவாளியாக இருந்தாலும் அவனுக்கு எந்தவிதமான OFFICIAL சப்போர்ட்டும் கிடையாது , அதை அவன் நினைத்தாலும் பெறமுடியாது . அவனுடைய உயிர்க்கும் யாரும் உத்திரவாதம் கிடையாது .

சுல்லிவனோ அப்படியில்லை . அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள் . அவன் நேசித்தவேலைக்கு அவன் செல்லவில்லை . தாய் , தந்தையை சிறுவயதிலே இழந்து பணம் பிடித்துப்போக நிக்கல்சனிடம் இணைந்துகொள்கிறான் . அவன் எதிர்பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது . போலிசில் இணைந்தவனுக்கு உடனே ப்ரமோஷன் கிடைக்கிறது . அப்படியே முன்னேறி கடைசியில் டிக்சனின் இடத்திற்கே வந்துவிடுகிறான் . கிளைமேக்ஸின்போது கிட்டத்தட்ட ஒரு பெரிய போலிஸ் அதிகாரியாக மாறிவிடுகிறான் . இத்தனைக்கும் அவன் அவ்வளவு திறமையானவன் கிடையாது . அதை அவனுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம் . காதலியும் அவனுக்கு உடனே கிடைத்துவிடுவாள் . படம் முடியும்போது ஒரு எலி ஓடும் . அந்த எலியைப்பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது ? யாரின் உருவம் உடனே அதை நியாபகப்படுத்துகிறது என்று யோசித்துப்பாருங்கள் . அவர்தான் இப்படத்தில் பர்ஃபெக்ட் RAT .

ப்ரான்சிஸ் காஸ்டெல்லோ  - ஒரு மாஃபியாத்தலைவன் . இவ்வுலகில் எதுவாக இருந்தாலும் நாம்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாழ்பவன் . யாராக இருந்தாலும் அசால்டாக போட்டுத்தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டிருப்பான் . ஆனால் ஒன்றைக் கவனிக்கவேண்டும் . காஸ்டெல்லாவும் கிட்டத்தட்ட ஒரு கறுப்பு ஆடு தான் . அவன் தன்னுடன் வேலைசெய்யும் ஆட்களை FBI-யிடம் அவ்வப்போது கோர்த்துவிடுவான் .  அவனுடைய சகா  ஃப்ரெஞ்ச் என்கிற அர்னால்ட் அவரின் படுபயங்கர விசுவாசி . தன் மனைவியால் காஸ்டெல்லாக்கு பிரச்சனை வரலாம் என்றெண்ணி கட்டிய மனைவியையே போட்டுத்தள்ளிவிடுவார் .


டிக்னம் மற்றும் குயினைன் பாத்திரங்களைப் பார்த்தால் இருவரும் நேர்மையானவர்கள் .  டிக்னம் உடனுக்குடன் உணர்ச்சிவசப்படக்கூடியவர் . ஆனால் குயினைன் தன் வயதுக்கேற்றார்போல் பொறுப்புடன் இருப்பவர் . டிக்னம் , குயினைன் இறந்தபோது உணர்ச்சிவசப்பட்டதால் தான் அவருக்கு சஸ்பென்ட் கிடைக்கிறது . அந்நேரத்தில் அவர் சஸ்பெண்ட் ஆகாமல் இருந்திருந்தால் படத்தின் முடிவு வேறுமாதிரியிருந்திருக்கும் .  

ஃப்ரான்சிஸ் காஸ்டெல்லோவாக தல ஜாக் நிக்கல்சன் . வில்லியம் காஸ்டிகன் ஜூனியராக லியனார்டோ டீ காப்ரியோ . சுல்லிவனாக மாட் டேமன் . டிக்னமாக மார்க் வாஹ்ல்பர்க் . குயினன் ஆக மார்ட்டின் ஷீன் . ஸ்கார்சேசேயின் ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர் வில்லியம் மனோகன் திரைக்கதை எழுத , ஏறத்தாழ 30 ஆண்டுகளாக ஸ்கார்சேசேயின் படங்களுக்கு எடிட்டாராக இருக்கும் தெல்மாவின் எடிட்டிங்கில் , ஹோவர்ட் ஷோர்ரின் இசையில்  ப்ராட் பிட் தயாரிப்பில் INFERNAL AFFAIRS எனும் சீனப்படத்தின் மூலக்கதையைத் தழுவி ரீமேக் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2006 .


நடிப்பைத்தொழிலாக பார்க்கும் நடிகர்கள் மத்தியில் நடிப்பை உயிராக நினைப்பவராகத்தான் லியானர்டோ டீ காப்ரியோ இருக்கிறார் . தன் மொத்தக்குடும்பத்தையும் வைத்து கிழிகிழியென கிழித்துத்தொங்கப்போடும் இடத்தில் , அவருக்கு வரும் கோவத்தை காட்டமுடியாமல் வெறுப்பில் முகம் வெளிரிப்போவதும் , அதைத்தொடர்ந்து போலிஸ் ஆகமுடியாது என்று அவர்கள் சொல்லும்போது மனிதர் நடிப்பின் உச்சத்தைத்தொட்டிருகிறார் . குயினனைச்சந்திக்கும்போது தாங்கள் எதிரிகளால் சூழப்பட்டிருப்பதை உணர்ந்து அங்கிருந்து காப்ரியோ தப்பித்து வரும்வேளையில் திடுமென குயினைன் உடல் மேலிருந்து காப்ரியோ முன் விழும் காட்சியில் காப்ரியோவின் ரியாக்சன்லாம் சான்ஸே இல்ல ரகம் . தன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக டாக்டராக இருக்கும் ஹீரோயினிடம் செல்லும் காப்ரியோ , அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவளையே கரெக்ட் செய்யுமிடமெல்லாம் ரசனையான காட்சிகள் . GANGS OF NEWYORK , THE AVIATOR ஆகிய படங்களைத்தொடர்ந்து காப்ரியோ , ஸ்கார்சேசேயுடன் இணைந்த மூன்றாவது திரைப்படம் . இத்திரைப்படத்திற்காக பாஸ்டன் நகர மக்களிடம் சென்று அவர்களுடன் பழகி , அவர்களைப்பற்றி சிறிய ஆராய்ச்சியே செய்து தன் கேரக்டரை மேன்மேலும் செதுக்கியிருக்கிறார் காப்ரியோ .  இதன்பின் காப்ரியோ SHUTTER ISLAND , WOLF OF THE WALL STREET என இரு படங்களில் ஸ்கார்சேசேயுடன் இணைந்து பணிபுரிந்தார் . இதற்கு காரணம் ஸ்கார்சேசே நடிகர்களின் இயக்குநர் . ஒரு திரைப்படத்தில் தன் பெயர் மாத்திரமே முத்திரையாக தெரியவேண்டும் என்று மெனக்கெடும் இயக்குநர்களுக்கு மத்தியில் உடன் பணிபுரியும் மற்றவர்களையும் மேலே கொண்டுவர முயற்சிக்கும் இயக்குநராக ஸ்கார்சேசே இருப்பார் . ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமா இயக்கியிருந்தாலும் இத்திரைப்படத்திற்காகத்தான் முதன்முதலில் ஆஸ்கார் பெற்றார் . ஆனால் இவருடைய ஆஸ்தான எடிட்டரான தெல்மா , இவருக்கு முன்பே மூன்றுமுறை ஆஸ்கார் பெற்றிருக்கிறார் . அது அனைத்தும் பெற்றுக்கொடுத்தது இவருடைய திரைப்படங்கள் தான் . அதேபோல் ராபர்ட் டீ நீரோவிற்கும் ஆஸ்கார் வாங்கித்தந்த பெருமை ஸ்கார்சேசேயே சேரும் . பலமுறை ஆஸ்கார் நாமிநேட் ஆகியும் விருது கிடைக்காமல் வெளியேறிய ஸ்கார்சேசே அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார் . ஆனால் இப்படத்திற்கு ஆஸ்கார் கிடைத்ததும் என்னது , எனக்கா ? எப்பா . ஒருமுறை அந்த லிஸ்ட்ட செக் பண்ணுங்கஎன்று தலைவர் கமெண்டினாராம் . இவ்விருதை தன் நீண்டகால சகாக்களான ஃப்ரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ , ஜார்ஜ் லூகாஸ் மற்றும் ஸ்பில்பெர்க் ஆகியோர் கையில் வாங்கியபோது அவ்விருதைக் கொடுத்தவர்கள் கண்டிப்பாக பெருமைப்பட்டிருப்பார்கள் . என்னைப்பொறுத்தவரை இப்படத்துடன் ஸ்கார்சேசேயின் மாஸ்டர்பீஸ்களான GOOD FELLAS , TAXI DRIVER , GUNDUN , RAGING BULL போன்ற திரைப்படங்களுக்கும் நியாயமாக ஆஸ்கார் கிடைத்திருக்கவேண்டும் .

ஸ்கார்சேசேயே என்னிடம் வந்து தம்பி ! இந்த படத்தோட ஹீரோ காப்ரியோ தாம்பாஎன்றாலும் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் . என்னைப்பொறுத்தவரை படத்தின் ஹீரோ தல தான் . ‘தலஜாக் நிக்கல்சனின் நடிப்பைப்பற்றி விமர்சிக்கவே தனி தைரியம் வேண்டும்  . சிங்கம் எப்படி வேட்டையாடும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா ? இப்படத்தில் தலைவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசம் . டீகாப்ரியோவின் கையை உடைத்துக்கொண்டே நீ போலிஸா என்று விசாரிப்பதாகட்டும்அதன்பின் அவருடைய சகாவுடன் அமர்ந்துகொண்டு பேசும் அக்காட்சியாகட்டும் சரவெடி . வில்லத்தனம் கலந்த ஒரு சிரிப்பினை உதிர்க்கும்போது நிக்கல்சனின் மேனரிசம் , கிழட்டுச்சிங்கத்தின் கர்ஜனையாய் ஒலிக்கும் அவரது குரல் நம்மை அப்படியே கட்டிப்போடுகிறது . படத்தில் என்ன நடந்தாலும் நிக்கல்சன் மட்டும் சாகக்கூடாது என்று நான் பதறியவாறே படம்பார்த்தது தனிக்கதை .  காட்டில் என்னதான் சிறுத்தை , புலி என பல்வேறு விலங்குகள் வெறித்தனமாக வேட்டையாடினாலும் சிங்கத்தின்முன் ஈடாகுமா ? இப்படத்தைப்பொறுத்தவரை காப்ரியோ உயிரைக்கொடுத்து நடித்திருந்தாலும் , மாட் டேமன் அமைதியாக துரோகத்தனம் செய்வதை வெளிப்படுத்தியிருந்தாலும் அவையனைத்தும் தலைவரின் காட்சிகள் வரும்போது ஜூஜுபியாகி விடுகிறது . ஒருவேளை நான் US-ல் பிறந்திருந்து இக்காலக்கட்டத்தில் இப்படம் வந்திருந்தால் முதல் நாள் முதல் ஷோவன்று தல-க்கென்று பெரிய ப்ளக்ஸ் அடித்து பாலாபிஷேகம் செய்து தியேட்டரில் தல வரும் காட்சியிலெல்லாம் விசிலடித்து தூள் கிளப்பியிருப்பேன் . என்னசெய்ய ? கொஞ்சம் லேட் . என்னடா இவன் ? இந்தாள பத்தி இப்படி புகழ்ந்து தள்ளுறான்னு பாக்கறிங்களா ? இவரோட நடிப்பு பற்றி அறிய நான் சஜ்ஜஸ்ட் செய்யும் ஒரே திரைப்படம் THE SHINING . அது ஒன்று போதும் , தல யாரென்று தெரிந்துகொள்ள . இவருடைய பாத அச்சினை ஒரு தியேட்டரில் ப்ரேம் போட்டு ஜாக் நிக்கல்சனே இங்க வந்துருக்காருங்கஎன்று பெருமையுடன் வைத்துள்ளார்கள். மொத்தம் 12 ஆஸ்கார் நாமிநேசன் . 3 முறை ஆஸ்கார் வென்றவர். இதுமட்டுமில்லை , உலகில் இருக்கும் அத்தனை விருதுகளையும் வாங்கி வீட்டில் அடுக்க இடமில்லாமல் தவித்த ஆள் . விருது வாங்குவதற்கென்றே டிசைன் செய்யப்பட்ட மனிதர் என்றால் அது தல தான் . மேலும் படத்தில் காஸ்டெல்லோவும் சுல்லிவனும் தியேட்டரில் சந்திக்கும் காட்சியில் டில்டோமேட்டர் தலயின் ஐடியாதான் .

டிக்னமாக வரும் மார்க் , இப்படத்திற்காக முதன்முறையாக அகாடமி விருதினைத்தட்டிசென்றார் . படம் முழுதும் கெட்டவார்த்தை பேசிக்கொண்டே ஆஸ்காரைத்தட்டிச் சென்ற  ஒரே ஆக்டர் இவர் தான் . படத்தில் அதிகமாக FU*K என்பதைக்கூறியவரும் இவர்தான் . படத்தில் அனைவரும் பேசும் FU*K தவிர்த்துவிட்டுப்பார்த்தால் 1.30 மணிநேரம் தான் படத்தின் நீளம் வரும் .

இப்படத்தில் ஒரு விஷயம் பொதுவாக இருக்கும் . காஸ்டெல்லவும் காஸ்டிகனும் ஐரிஷ் அமெரிக்கர்கள் . இதேபோல் ஸ்கார்சேசேயின் முந்தைய படங்களான GANGS OF NEWYORK , GOOD FELLAS , TAXI DRIVER ஆகிய படங்களிலும் ஐரிஷ்அமெரிக்கன் மற்றும் இத்தாலிய பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பிண்ணனி இருக்கும்.  காரணம் ஸ்கார்சேசே ஒரு ஐரிஷ்அமெரிக்கர் . பொதுவாக ஒரு படத்தில் ட்விஸ்ட் இருக்கும் . அது நம் எண்ணத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டுவிடும் அல்லது நமக்கு ஏமாற்றத்தைத்தரும் . இவையிரண்டு தான் படத்தின் ட்விஸ்டாக இருக்கும் . இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் . நாம் எதிர்பார்த்தது அப்படியே வருவது ட்விஸ்ட் கிடையாது . பெரும்பாலான படங்கள் மேலே கூறிய இருவகையான ட்விட்களில் ஏதாவதொன்றை பின்பற்றிதான் முடியும் . ஆனால் இப்படத்தில் மட்டும்தான் இரண்டு வகையான ட்விஸ்டையும் ஒருசேரவைத்து கொடுத்திருக்கிறார்கள் . முதலில் குயினைன் மற்றும் நிக்கல்சன்  இறப்பது எதிர்பார்க்காத ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ட்விஸ்ட். காப்ரியோ காட்சியோ ஒருதுளிக்கூட எதிர்பார்க்காத , ஏற்றுக்கொள்ளமுடியாத ட்விஸ்ட். கடைசியில் வரும் ட்விஸ்ட் அனைத்தையும் டைஜஸ்ட் செய்யும்விதமாக இருக்கும் .

இத்திரைப்படம் தமிழில் பத்து வருடங்களுக்குப்பின் ரீமேக் ஆகவேண்டும் . அதில் ஹாலிவுட் தல கேரக்டரில் தமிழ்நாட்டுத் தல நடிக்கவேண்டும் என்பது என் ஆசை . நடக்குமா என்பது சந்தேகம்தான் . இத்திரைப்படத்தைப்பார்த்து INSPIRE ஆன J.D.சக்ரவர்த்தி , தெலுங்கில் HOMAN என்ற பெயரில் திரைக்கதை எழுதி இயக்கி பேர் வாங்கினார். இத்திரைப்படத்தின் இன்ஸ்பிரேசன் உற்று கவனித்தால் மீகாமனில்கூட தெரியும் . இப்போது இந்தியில்கூட இத்திரைப்படத்தை ரீமேக் செய்ய ஹிருத்திக் ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தியும் வெளிவருகிறது .

-     

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை