Saturday, 29 November 2014

பயணம் @ டைம்மெஷின் - 11உயிரும் உணர்வும்


முந்தைய பதிவுகள்இருவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே இருந்தனர் .

‘ம் கிளம்புங்கள் .’ என்ற தலைமைக்காவலனின்  குரலுக்கு அடங்கி எழுந்தனர் . தலைமைக்காவலன் முன்னே செல்ல , பின்னாள் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அவர்கள் இருவரின் கழுத்தையும் பதம் பார்க்கும்வண்ணம் ,  சுற்றியும் வேல்கள் இருக்க , அந்த வேல்களை உடைய வீரர்கள் அவர்களை பாதுகாத்த வண்ணம் கிளம்பினர் . மண்டபத்தைத்தாண்டி வெளியே வரும் நேரம் ‘ஐயகோ’ என்ற குரலும் அதைத்தொடர்ந்து வாள்களும் வேலும் மோதிக்கொள்ளும் சத்தமும் கேட்டது . இவர்கள் இருவரையும் கைது செய்து கிளப்பிய நேரத்தில் வளவன் துரிதமாக செயல்பட ஆரம்பித்திருந்தான் . கடைசியாக சென்ற வீரனின் தோளை தட்டினான் . அவன் திரும்புவதற்குள் வேகமாக குனிந்து தன் கால்களால் அவனின் கால்களை கிடைமட்டமாக தாக்கினான் . நிலைகுனிந்த வீரன் சட்டாரென கீழே விழ , அவனின் வேலை எடுத்து அவனின் பின்கழுத்தில் இறக்கினான் . அந்த சத்தம் கேட்டு பாலாவையும் சந்துருவையும் சுற்றியிருந்த வீரர்களில் ஒருவன் வேகவேகமாக வளவனை நோக்கி வர , வளவன் கீழே இறந்து கிடந்த வீரனின் உடைவாளை துரிதமாக எடுத்து , அருகிலிருந்த மூட்டையின்மேல் கால்வைத்து ஒரே எகிறாக நேரே அந்த வீரனின் தலைக்கு தன் வாளை குறிவைத்து செலுத்தினான் . அவனின் மண்டை பிளக்கும்போது அவ்வீரன் ஏற்படுத்திய சத்தமே ‘ஐயகோ’ என்று றை முழுதும் எதிரொலித்தது . அதன்பின் ஐந்து வீரர்கள் பாலாவையும் சந்துருவையும் விட்டுவிட்டு வேகவேகமாய் வளவனை நோக்கி ஓடினார்கள் . ஒரே நேரத்தில் தன்னைநோக்கி வந்த வேல்கள் அனைத்தையும் தன் பலம்முழுவதையும் வாளில் கொண்டு வந்து தடுத்தான் . தடுத்த உடனே அவன் மறுகையிலிருந்த வேல் , கீழே காவலர்களின் கால்நோக்கி விசிறியது . அவர்களின் காலிலிருந்து சீரிய செங்குருதி , வளவனின் மார்பில் சூடாகத்தெளித்தது . அவர்கள் நிலைதவறி விழும்போது வளவனின் வாள் அவ்வைந்து பேரின் கழுத்தைக்குறிவைத்து சுழன்றது . வாளுடன் சேர்ந்து தலைகளும் குருதி தெளிக்கும் வண்ணம் அவர்களின் உடலிலிருந்து கழன்றது . அதற்குள் பின்னாளிலிருந்து இரு வீரர்கள் வளவனின் கழுத்தில் வேலை வைத்தனர் . மீதமுள்ள வீரர்கள் வளவனின் நெஞ்சில் வேல்களை வைத்தனர் . ஆனால் யாரும் உள்ளே வேலை பாய்ச்சவில்லை .

‘நிறுத்துங்கள்’ என்ற சத்தம் வந்த திசைநோக்கி அனைவரும் பார்த்தனர் . தலைமைக்காவலன் வளவனை நோக்கி நடந்து வந்தார் .

‘இளவரசரே ! எங்களின் கடமையைச்செய்ய விடுங்கள் .’ என்று கூறிவிட்டு , அங்கிருந்த வீரர்களை , வேல் மற்றும் வாளைக்கொண்டு வளவனை சிறிதுநேரம் பாதுகாக்க வைத்துவிட்டு சந்துருவையும் பாலாவையும் கூட்டிக்கொண்டு சென்றார் . இவ்வையெல்லாம் நடந்துமுடிய வெறும் பத்து விநாடிகளே ஆகியிருந்தது . மண்டபத்தினுள் நடந்த எதுவும் தெரியாமல் விழிபிதுங்கிய வண்ணம் வாயிலில் நின்று கொண்டிருந்த சந்துருவும் பாலாவும் , திடுமென ஐந்து தலைகள் கழன்று விழுவதைப்பார்த்ததும் அதிர்ச்சியாயினர் . மேலும் உள்ளே இளவரசே என்று தலைமைக்காவலன் அழைத்தது மேலும் வியப்பூட்டியது . அதன்பின் தலைமைக்காவலனுடன் இருவீரர்கள் வர அவர்களுக்கு நடுவில் வாளின் முனையில் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அரண்மனை நோக்கி செல்லும் வழியில் இருவரும் மரணபயத்தை சிறிது  நடுக்கமுற்றுத்தான் இருந்தனர் . ஆனாலும் , ஒருவனைக்காப்பாற்றியதற்காக கைது செய்வதெல்லாம் அநியாயம் என்பதை மன்னரிடம் எடுத்துக்கூறி தப்பித்துவிடலாம் என்று இருவரும் ஒரேமாதிரியாக யோசித்தனர் . சோழமன்னர்கள் நீதிநெறி தவறாமல் ஆட்சிசெய்ததை கண்கூடாக பார்த்ததினால் , அவர்களுக்கு மரணபயம் அவ்வளவாக இல்லை .சந்துருவுக்கு மாத்திரம் , ஒருவேளை அவளை சந்திக்காமலே இறந்துவிடுவோமோ என்ற பயம் அவ்வப்போது வெளிப்பட்டது . ‘ச்சீ ! என்ன கருமாந்திரம் பிடித்த காதலோ ! பெற்றெடுத்த தாயின்முகம் காணத்துடிக்காத மனது , காலையில் கண்ட ஒருதலைகாதலியை எண்ணுவது என்னே மடமைத்தனம் ! ’ என்று தன்னைத்தானே திட்டினான் . அவனின் தாயும் தந்தையும் கண்முன்னே வந்தனர் . கடந்த மூன்றாண்டுகளாய் தான் சந்துரு வேலைக்குச்செல்ல ஆரம்பித்திருந்தான் . அதற்குமுன் வரை தனக்காக உழைத்த தன் தாயையும் தந்தையையும் எந்தவொரு நொடியிலும் வருந்தவைக்ககூடாது என்று முடிவெடுத்திருந்தான் . அந்த முடிவை முடிந்தவரை உறுதியாய் காப்பாற்றவும் செய்தான் . அவர்களைப்பற்றி எண்ணும்போதுதான் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியும் , தனக்குத்திருமணம் ஆகப்போவதையும் , தன்னை நம்பி ஒரு பெண் எதிர்காலத்தில் இருப்பதையும் உணர்ந்தான் . என்ன காரணத்தினாலோ , சந்துருவுக்கு நகரத்து பெண்களின் மீது அவ்வளவாக ஈடுபாடில்லை . தனக்கு பெண் பார்க்க போகும்போது கூட நவநாகரீக மங்கையைக்காட்டிலும் , கிராமத்து மங்கையே வேண்டும் என தன் பெற்றோரிடம் உறுதியாய் சொன்னவன் . அப்படி பார்த்து பார்த்து தேடிப்பிடித்தவள் தான் மைதிலி . அவனுக்குப்பிடித்துப்போக , சித்திரையில் திருமணத்தேதியை குறித்தனர் . மைதிலியுடன் அவ்வபோது போனில் பேசுவதோடு சரி . இதோ , காலையில் சந்தித்த மங்கையின் வீடு . அவள் வீட்டினுள் தான் இருக்கிறாளோ என பார்க்க சந்துருவுக்கு ஆசை வந்தது . ஆனால் , வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது .மாடத்தை நோக்கி தன் பார்வையை செலுத்தினான் .  அங்கும் யாருமில்லை . என்னே மடத்தனமான எண்ணம் என்னுடையது என்று எண்ணியவாறே தலையை குனிந்து நடந்தான் . அவள் எதற்கு இவனுக்காக இவ்விரவில் காத்துக்கொண்டிருக்க வேண்டும் ? நாம்தானே அவளின்மீது ஆசை கொண்டோம் . 21 – ம் நூற்றாண்டைச்சார்ந்த நமக்கு , இன்னும் பெண்களின் குணம் பற்றி அறியாமல் அவள் நமக்காக காத்திருப்பாள் என்பது எவ்வளவு மூடத்தனமான எண்ணமாயிருக்கவேண்டும் என்றவாறே தன் நடையைக்கட்டினான் .

பாலாவுக்கு , மனதில் சிறிது மரணபயம் இருந்தாலும் அதைவெளியில் காட்டிக்கொள்ளவில்லை . அவனுக்கு டைம்ட்ராவல் மீது அதீத ஆர்வம் வரக்காரணம் என்னவோ தமிழ்நாட்டின் சந்திரசேகர் தான் . அவரின் சந்திரசேகர் விளைவு எனும் ஆராய்ச்சியையும் , ஐன்ஸ்டைனின் வார்ம்ஹோல் தியரியையும் படித்ததாலே பைத்தியமானான் . எப்படியாவது டைம்மெஷினை கண்டுபிடித்தாகவேண்டும் என்று உறுதிபூண்டவன் , அதற்காக தன்னுடைய 3 ஆண்டுகளை ஒரே அறையில் , இயற்பியலுடனும் , எந்திரங்களுடனும் கழித்தான் . அதைத்தாண்டி அவனுக்கு வேறு எதன்மேலும் பற்று அதிகமாய் இருந்ததில்லை . தந்தை இறந்து பத்து ஆண்டுகள் ஆகிற்று . ஏதோ அவர்போகும்போது சேர்த்துவைத்துவிட்டுப்போன சொத்துகள் மற்றும் மைலாப்பூரில் இருக்கும் அவர்களது காம்ப்ளக்ஸ் வாடகை போன்றவற்றால் காலந்தள்ளிக்கொண்டிருக்கும் குடும்பம் அவனுடையது .வீட்டினுள் டீவி சீரியலை சீரியஸாக பார்க்கும் தாய் என்றாலும் பாலாவின்மேல் அவனின் தாய்க்கு அதிக கவலை .  மற்ற இளைஞர்களைப்போலில்லாமல் ஆராய்ச்சியிலே மூழ்கிக்கிடக்கும் மகனை நினைத்து கவலைப்படாமல் எப்படி இருக்கமுடியும் . நம் நாட்டிற்கு ஐன்ஸ்டைன்கள் தேவை தான் . ஆனால் நமது வீட்டிற்கு ஐன்ஸ்டைன்கள் தேவையில்லை என்று எண்ணும் அதிகபட்ச சாதாரண மனநிலைதான் இன்னும் ஒவ்வொரு வீட்டிலும் நிகழ்கிறது .

அவர்களின் இருவரும் காவலர்களுடன் செல்லும்நேரத்தில் , ஒரு வீட்டின் மாடத்தில்  ஒரு இதயம் தனது வழக்கமான துடிப்புகளைக்காட்டிலும் அதிகமாய் துடித்துக்கொண்டிருந்தது . அது பூங்குழலி எனும் இளம்மங்கையின் இதயமே தான் . பூங்குழலிக்கு சிறுவயதிலிருந்தே , ராஜகுமாரனையொத்த ஒருவன் தன் கழுத்திற்கு மாலையிடுவது போன்ற கனவு அடிக்கடி வரும் . ஆனால் , சிறிது நாட்களாக அவளுக்கு சில துர்சம்பவங்களும் , கெட்ட கனவுகளும் வருவது அவளைப்பாடாய் படுத்தி எடுத்தது . தான் சந்தித்த ராஜகுமாரனை இருள் விழுங்குவது போலவும் , அவள் யாருமற்ற இருட்டில் தன்னந்தனியே கதறுவது போலவும் கனவு வந்து அவளை வாட்டியது . அந்த கனவு வரும் வேளைகளில் படக்கென்று கண்விழித்துக்கொள்வாள் . இப்படியாக கழிந்துகொண்டிருந்த நாட்களில் தான் இன்று காலையில் அவள் சந்துருவைப்பார்த்து மனதைப்பறிகொடுத்தாள் . அன்றைய இரவும் ராஜகுமாரனாய் சந்துரு கனவில் வரவும் , அவன் திடிரென இருளில் செல்வதுமாய் இருக்க வேகமாய் கண்விழித்தாள் . அப்படி அவள் கண்விழித்தபோதுதான் அவளின் தந்தையிடம் காவலன் பேசிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை கண்டாள் . . தன் தந்தையும் , தஞ்சையின் தலைமைக்காவலருமான வீரமல்லனுக்கு தஞ்சை அரண்மனையிலிருந்து ஒரு காவலன் கொண்டு வந்திருந்த செய்தியைக்கேட்டதுமே அவள் சிறிது கலக்கமுற்றுத்தானிருந்தாள் . இளவரசன் வளவனுக்கு உதவிசெய்த அவ்விரு இளைஞர்களையும் கழுவிலேற்றுமாறு வந்திருந்த அச்செய்தி , ஏதோ துர்நிகழ்ச்சியை உணர்த்துவதாகவே இருந்தது . பின் பூங்குழலியின் தந்தை அங்கிருந்து கிளம்ப , அவள் மாடத்தில் இருந்து என்ன நடக்கிறது என்று படபடக்கும் இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் . அங்கிருந்து மண்டபத்தில் நடக்கும் விஷயங்களை பார்க்கமுடியாதெனினும் , எப்படியும் அரண்மனைக்கு கூட்டிச்செல்ல தன் வீட்டின் வழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று அங்கு வந்திருந்த மூன்று மாதத்தில் உணர்ந்திருந்தாள் . அவர்கள் இருவரும் தப்பித்துவிடக்கூடாதா என்ற நம்பிக்கையில் படபடக்கும் இதயத்தோடு இருந்தவளுக்கு , தன் நம்பிக்கையைச்சுக்கு நூறாக உடைக்கும் வண்ணம் தன் தந்தை அவர்களை அரண்மனைக்கூட்டிச்செல்வதைக்கண்டு மனத்துயரத்தில் ஆழ்ந்தாள் . சிறுவயதுமுதலே தான் விரும்பியது எதுவுமே நடக்காத ஒரு துர்ப்பிறவியான தன்னை மிகவும் நொந்துகொண்டாள் .தான் மட்டும் அவரின்மேல் காதல் கொள்ளாதிருந்தால் இவையாவுமே நடந்திருக்காது என தன்னைத்தானே திட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள் . அவனைக்காணும் திராணியின்றி தன் படுக்கையை நோக்கி ஓடினாள் .

அன்றைய இரவு  சந்துரு , பாலாவுக்கு நீண்டதொரு இரவாக முடிந்தது . உறக்கம் வராமல் தவித்த அவர்களைக்காட்டிலும் , விடிய விடிய அழுந்து கன்னம் வீங்கி கண்கள் சிவந்து பூங்குழலி காணப்பட்டாள் . விடிந்தபின் அரண்மனைக்குக்கூட்டிச்செல்வார்கள் என இருவரும் காத்திருந்தார்கள் . அவர்கள் இருவரையும் தஞ்சையின் அரண்மனைக்கு பின்புறமிருந்த சிறைச்சாலையில் அடைத்திருந்தார்கள் . விடிந்தவுடன் இருவரையும் சிறைச்சாலையை விட்டு நகரின் ஓரத்திற்கு அருகில் இருந்த ஒரு திடலுக்கு கூட்டிச்சென்றார் . இவர்கள் இருவருக்குமுன் அழைத்துச்செல்லப்பட்ட ஒரு கைதியை அங்கு கழுவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது . அதைக்கண்டதும் தான் உணர்ந்தார்கள் . தங்களுக்கு வாதாட வாய்ப்பில்லை , நேரடி தீர்ப்புதான் .  மன்னன் வந்து விசாரித்துதான் தீர்ப்பு வழங்குவான் என்பதை படித்தும் பார்த்தும் இருக்கும் அவர்களுக்கு , இங்கு நடக்கும் விஷயங்கள் பிடிபடவில்லை . அப்போதுதான் அவர்களிருவரும் முந்தைய நாளன்று ஒலித்த மன்னர் தேவை என்ற விளம்பரம் ஞாபகத்திற்கு வந்தது . சாகக்கிடந்த ஒருவனை காப்பாற்றுவது எந்தவகையில் தவறாய் இருக்கமுடியும் என்று யோசித்தான் சந்துரு . சரி தப்பித்து ஓடலாம் என்று முடிவு செய்து , அந்த திடலை சுற்றி நோக்கினான் . அந்த திடலைச் சுற்றி எப்படியும் ஒரு 30 வீரர்கள் இருப்பார்கள் . திடலின் வலப்பக்கத்தில் ஒரு சிறிய ஓடை  இருந்தது .அதைத்தாண்டி அடர்ந்த வனம் ஆக்கிரமித்திருந்தது .மறுபுறமோ காவிரி ஆறும் , மற்றொரு புறம் நகருக்குச்செல்லும் வழியும் இருந்தன . அந்த திடலிலிருந்து  தப்பிக்க வேண்டுமெனில்  , அரைகிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த ஓடையைக்கடந்துதான் தப்பிக்கமுடியும் . அங்கு ஓடுவதற்குள் வில்லேந்திய இரண்டு வீரர்களின் அம்புமழையால் உடல் பொத்தலாவது உறுதியாகிவிடும் . மொத்தத்தில் தங்களிருவருக்கும் மிகுந்த வலியுடன் கூடிய மரணம் உறுதி என்று எண்ணும் வேளையில் , அந்த வனத்தில் இருந்து ஒருவித சத்தம் வெளிப்பட்டது . வீரர்கள் அனைவரும் சத்தம் வரும் திசையைநோக்கியவண்ணம் இருக்க , அந்த காலடி சத்தம் அருகில் வருவது தெரிந்தது .

-    தொடரும்


பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -3
உயிரும் உணர்வும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com
Monday, 10 November 2014

பயணம் @ டைம்மெஷின் - 10
காதலும் குழப்பமும்தொடர்புடைய இடுகைகள்‘டும் டும் டும் டும் . ஊரார் அனைவரும் கவனிக்க . நாட்டில் மன்னன் இல்லாதபடியால் , அடுத்த மன்னனைத்தெரிவு செய்யும்பொருட்டு , அரண்மனையார் அனைவரும் பட்டத்துயானையை ஊர்வலம் வரச்செய்துள்ளார்கள் . பட்டத்துயானை இங்கு நாளை வருவதால் , அதையே எல்லரும் கவனிக்கும்படி  வேண்டப்படுகிறார்கள் . யானை யாரின் கழுத்தில் மாலையிடுகிறதோ அவரே நாட்டின் மன்னராக அரியணை அமர்த்தப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ’ என்று தூரத்தில் பறை அடித்துக்கொண்டு அரண்மனை செய்தியை தண்டோரா போட்டு தெரிவித்துக்கொண்டிருந்தான் ஒருவன் .

‘டேய் பாலா ! அந்த பொண்ண பாத்தியா ?’

‘யாருடா ?’

‘அதான்டா , நா தண்ணி வாங்க போனனே . அந்த வீட்டுல இருந்த பொண்ணுதான் மச்சி ’

‘இல்ல மச்சி . ஏன்டா கேட்கற ?’

‘இல்லடா ! சும்மாதான்

சந்துருவுக்கும் அந்த காதல் பித்தம் வந்தது ஆச்சரியப்படுவதற்கில்லை . அவளின் வசீகரக்குரலும் , செந்தளிர்க்கையும் , அக்கையைத்தொடும்போது வந்த இன்னதென்று அறுதியிடமுடியாத உணர்வும் சந்துருவை ஏதேதோ செய்தது . இந்த இளைஞன் உடல்நிலை அறிந்ததும் , நேராக அவள் வீட்டிற்கு மறுபடியும் சென்று அவளை பார்த்தேயாக வேண்டும் என்று முடிவு செய்தான் . அவள் மனதின் ஒருபுறமிருக்க , தான் காப்பாற்றிய அவ்விளைஞனைப் பற்றி எண்ணலானான் . 18 வயதுதானிருக்கவேண்டும் . மாநிறமாய் இருப்பினும் கம்பீரம் குறையாத கலையான முகம் அவனுடையது . இந்த வயதில் என்ன நோய் அவனை மயக்கமுறச்செய்துவிடமுடியும் என்று குழம்பினான் . மறுபுறம் பாலாவிற்கோ சந்துருவின் நடவடிக்கைக்கள் சிறிது ஆச்சரியமளித்தன . சாதாரணமாக தனக்குப்பிரச்சனை என்றாலும் தான் செய்யநினைத்ததை செய்யாமல் விடமாட்டான் சந்துரு என்பதை பாலா நன்கறிவான் . இருப்பினும் தனக்குத்தேவையில்லாத விஷயங்களைப்பற்றி அதிகமாய் கவலைப்படுபவனும் கிடையாது . ஆனால் , திருவாரூரிலும் சரி , இங்கும் சரி , சந்துரு சிறிது உணர்ச்சிமிக்கவனாய் காணப்படுவதுதான் பாலாவிற்கு ஆச்சரியமளித்தது . இங்கிருந்து சென்றபின் அதைப்பற்றிக்கேட்டேயாகவேண்டும் என்று பாலா முடிவெடுத்தான் . இவர்களின் நினைவுகளை சிதறடிக்கும் வண்ணம் ஒரு குரல் வர , குரல் வந்த திசையை நோக்கினால் தங்களுடன் வந்த அந்த இளம்துறவி அவர்களிடம் அவ்விளைஞனின் நோயைக்கண்டுபிடித்துவிட்டதாக கூறினான் .

‘என்ன நோய்ங்க ?’

‘அவர் ஒருவாரமாக ஆகாரம் எதுவும் உண்ணவில்லை . ஆதலாலே பசிமயக்கம் வந்துள்ளது . அவருக்கும் உங்களுக்கும் சேர்த்து தின்னுவதற்கான ஆகாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது . தயைசெய்து காத்திருக்கவும் .’ என்றான் அவன் .

‘சரிங்க ’ என்றவாறு ஓரிடத்தில் இருந்த முக்காலியில் இருவரும் அமர்ந்தனர் . சிறிதுநேரத்திற்குப்பின் உணவு தயாராகிவிட , மயங்கிக்கிடந்த இளைஞனுக்கு அரிசிக்கஞ்சியும் , இவர்களுக்கு அரிசி சாதமும் பனங்கிழங்கும் உணவாய் தரப்பட்டது . சாப்பிட்டு முடித்தபின் அங்கிருந்து விடைபெறுவதாக கூறினான் சந்துரு . ஆனால் , அவ்விளைஞனை விட்டு செல்லுவதற்கு அவனுக்கு மிக்கஷ்டமாய் இருந்தது . காரணம் அவனின் பேச்சுகள் . பிச்சையெடுத்து உண்ணும் உணவு தனக்குவேண்டாம் என்று அவன் அந்த துறவிகளிடம் கெஞ்சுவதைக்கேட்டு அதிசயப்பட்டார்கள் . சரி அவனையும் தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவெடுத்து அவனிடம் வந்து நின்றார்கள் .

‘தம்பி ! எங்களுக்கு துணையா எங்ககூட வருவிங்களா ?’

‘யார் நீங்கள் ? எதற்கு நானுங்களுடன் வரவேண்டும் ?’

‘நீ எங்களின் தம்பி ’ என்றான் சந்துரு . அதன்பின் கணநேரம் யோசித்த அவ்விளைஞன் உடன் வருவதாய் கூறினான் . பின் மூவரும் சேர்ந்து அங்கிருந்து விசாரித்து , தங்குவதற்கு ஏற்றமண்டபம் ஒன்றை கண்டுபிடித்தனர் .பின் மூவருக்கும் சேர்த்து வேட்டிசட்டைகள் ஒரு அங்காடியில் வாங்கினர் . அங்கு தாங்கள் கொடுத்த நாணயத்தை திருப்பிதிருப்பிப்பார்த்தான் கடைக்காரன் . பின், இரவு உணவை உண்ணும்பொருட்டு அங்கிருந்து ஒரு வீட்டிற்குச்சென்றனர் . அது என்னவோ தெரியவில்லை , அக்காலகட்டத்தில் ஹோட்டல்கள் என்றாலே என் கற்பனைக்கு வருவது ஒரு குடிசை . குடிசையினுள் ஒரு பாட்டி . அன்பும் இரக்கமும் ஒருசேர கருணை பொங்கும் முகம் . அதன் கையால் சமைக்கப்பட்ட அற்புத உணவு . வாழைஇலையில் விருந்து . சாப்பிட்டபின் முடிந்தவரை அவருக்கு சில காசுகள் . இவை மாத்திரமே அக்கால ஹோட்டல்களாக என் மனதில் பதிவாயிருக்கிறது . ஆனால் , இது சாதாரண கிராமத்திற்கு பொருந்தும் . பிற்காலங்களில் ஒரு மாபெரும் மண்டலமாய் உருவெடு்கக இருக்கும் தஞ்சைக்கு மேற்கூரியவை  பொருத்தமில்லாதது . இம்முறை தஞ்சையில் மூவரும் உணவருந்த சென்ற இடம் ஒரு பெரிய சாப்பாட்டுக்கடை . பரிமாறுவதற்கு இரு ஆண்களும் , உள்ளே சமையல் செய்ய இருபெண்களும் , கடையை நிர்வாகம் செய்ய  ஒருவர் என இக்காலகட்டத்தில் செயல்படும் ஹோட்டல்களுக்கு அக்காலத்திலே அடித்தளமிடும் வண்ணம் இருந்தது அந்த கடை  . நிச்சயதார்த்தம் ஆன சந்துரு அசைவம் சாப்பிடக்கூடாது என்ற விதியின் காரணமாய் , கிட்டத்தட்ட ஒன்றரைமாதகாலம் அசைவம் சாப்பிடாமல் இருந்தான் . இப்போது தன்னுடைய கல்யாணத்தை மறந்ததன் காரணமாய் அசைவம் சாப்பிடவேண்டுமென மதி ஆனையிட்டது . சாப்பிட்டு முடித்தபின் , திருவாரூரில் தன் முருகன் டாலர் செயினைக்கொண்டு வாங்கிய நாணயங்களை அக்கடைக்காரரிடம் கொடுத்தான் . மேலும் கீழுமாய் பார்த்த அக்கடைக்காரன் , அந்நாணயம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு ஏற்றதொரு பொய்யைக்கூறி தப்பித்தான் . தங்கமாய் இருந்த காரணத்தினால் , அந்நாணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது .மனித நாகரிகத்தின் தொடக்கக்காலத்தில் உலகத்தின் அனைத்துப்பகுதிகளிலும்  ஒரு பொருளை வாங்குவதற்கும் , விற்பதற்கும் பண்டமாற்றுமுறைதான் இருந்துவந்தது . இம்முறையில் , ஒருவர் தன்னிடமிருக்கும் நெல்லை கொடுத்துவிட்டு பால் , தயிர்  போன்றவற்றை பிறரிடமிருந்து வாங்கினர் . இம்முறையில் , மிகுதியான பொருட்களையோ , விலை அடர்ந்த பொருட்களையோ பண்டமாற்றம் செய்யும்போது இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் ஒரு பொருளை மையமாக வைத்துக்கொள்ளலாம்  என திட்டமிட்டனர் . தொடக்கத்தில் மாட்டினை மையப்பொருளாக கொண்டு பண்டமாற்றம் செய்தனர் . மாடு , மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது . குறைந்த அளவில் வாங்குவதில் மீண்டும் இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் , சோழிகளை மையப்பொருளாக பின்னாளில் பயன்படுத்தினர் . சோழிகளைக்கொண்டு குறைந்த அளவில் பொருட்கள் வாங்குவது எளிதாக இருந்தது . ஆனால் , விலைமிகு பொருட்களை வாங்கவேண்டுமெனில் மூட்டைமூட்டையாக சோழிகளை தருதல் வேண்டும் . அதுமட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்துவிடும் . இச்சமயத்தில் தான் உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது .  அதன்பின் உலோகத்தகடுகளை மையப்பொருளாக கொண்டு வணிகத்தை கையாளத்தொடங்கினர் . பின் அவ்வுலோகத்திலிருந்து செம்பு மற்றும் தங்கத்தை பயன்படுத்த துவங்கினர் . இரண்டுமே கடின பொருட்கள் ஆதலால்  , வியாபாரத்திற்கு நன்கு பயன்பட்டன . செப்புத்தகட்டைக்கொண்டு சாதாரண பொருட்கள் வாங்குவதற்கும் , தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அரிய பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தினர் . தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவத்திலும் நெல்லிக்கனி வடிவத்திலும் இருந்தன . இவையனைத்தும் , மக்கள் ஒன்றாய் முடியாட்சியின் கீழ் வராதபோது நடைபெற்ற முறைகள் . பிறகு தனித்தனி குழுக்களாக பிரிந்து , தங்களுக்கென தனி அரசன் மற்றும் குலச்சின்னத்தை ஏற்படுத்திய காலகட்டங்களில் தங்களின் சின்னத்தை முத்திரையாக மாற்றி நாணயங்களில் வெளியிட்டனர் . மன்னர் ஏழாரன் காலத்தில் இருந்த தங்கக்காசுகளின் சின்னம் மற்றும் முத்திரை இப்போது பழமையாகிவிட்டது என்பதால் தான் அக்கடைக்காரன் சந்துருவிடம் சில கேள்விகளை கேட்டிருந்தான் .  

எப்படியோ அவனிடம் சமாளித்து வந்து மண்டபத்தில் உறக்கம்கொள்ள ஆரம்பித்தனர் . அன்றைய இரவு யாரும் யாருடனும் பேசவில்லை . சந்துரு மாத்திரம் உறக்கமின்றி அவளை நினைத்தவாறே விழித்திருந்தான் . அவளின் நினைவுகள் அவனுக்கு தூக்கத்தைக்காட்டிலும் சுகமானதொரு உணர்வினை விதைத்தது . அவளை எப்படியாவது நாளைப்பார்த்து பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் . அந்த கதவிடுக்கின்வழியே , அவள் கண்சிமிட்டிய அந்த நொடி ,  மின்னலை வெட்டியெடுத்து மனதில் இறக்கியதுபோலிருந்தது அவனுக்கு . அவளின் ஞாபகம் அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது . தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருந்தான் சந்துரு . அதே நேரத்தில் இன்னொருவனும் தூக்கமில்லாமல் விழித்து பரணைப்பார்த்துக்கொண்டிருந்தான் . அவன் கண்களில் ஒரு வேட்கை தெரிந்தது . பரணில் ஒரு பூச்சியைப்பிடிக்க காத்திருக்கும் பல்லியைப்பார்த்துக்கொண்டிருந்தான் .சரியாக பல்லி பூச்சியைப்பிடிக்கும் நேரத்திற்கும் , அவன் சபாஷ் என சத்தமிடுவதற்கும் நேரம் சரியாய் இருந்தது .

‘என்ன ஆச்சு ?’ - சந்துரு

‘ஒன்றுமில்லை . ஒரு சின்ன விளையாட்டு .’

‘ஓ ! சரி தம்பி . படுத்து தூங்கு .’

‘ம் .’ என்ற அவ்விளைஞன் சிறிது நேரம் கழித்து

உங்களின் வசனஉச்சரிப்பு ஏன் எங்களைப்போல் இல்லை ?’ – என்றான் .


‘நாங்க வேற இடத்துல இருந்து வரோம் . உங்கிட்ட சொன்னாலும் புரியாது . ஆமா , உம்பேரன்ன ?’

‘திருமாவளவன் . தங்களின் பெயர் ?’

‘என் பேரு சந்துரு . இவன் பாலா . என்னோட நண்பன் . ஒருவாராம ஏன் சாப்டல ?’

‘அது ஒரு பெரிய கதை . வழியில் செல்லும் அனைவரும் கண்டும்காணமல் போகும்போது தாங்கள் மட்டும் ஏன் எனக்கு உதவினீர்கள் ?’

‘உன்னப்பாக்கரப்போ என்னோட தம்பிய பாக்கர மாதிரயே இருந்துச்சி ’

‘தங்களின் தம்பி என்ன செய்கிறார் ?’

‘செத்துட்டான் .’

‘எப்படி ?’

‘அது ஒரு பைக் ஆக்சிடன்ட் . ’ என்று தன்னுடைய நினைவலைகளுக்குள் சென்றான் . சந்துருவின் தம்பி மிஸரா . தன்னுடைய 19 –வது பிறந்தநாளன்று , சந்துருவின் புதுபைக்கில்  நண்பர்களுடன்  வெளியே சென்றான் . நண்பர்கள் அனைவரும் பைக்கில் செல்லும் வேகத்தைக்காணும்போது தானும் அவர்களுடன் போட்டிபோட்டு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தான் . அவனுடைய இழப்பை மறக்க கிட்டத்தட்ட மூன்றுவருடம் தேவைப்பட்டது . அவன் தம்பியினால் தான் , திருவாரூரில் இன்னொரு தம்பி இறக்கக்கூடாது என முயற்சி செய்தான் . அதே இரக்ககுணம் தான் இவ்விளைஞனைக்காப்பாற்றவும் உதவியது . அவனது நினைவுகளை கலைக்கும் வண்ணம் வளவனின் குரல் கேட்டது .


‘அப்படியென்றால் ?’

‘அது ஒரு விபத்து .’

‘நான் இதுவரை யாரிடமும் நன்றி சொன்னது கிடையாது . ஆனால் உங்களிடம் மட்டும் கேட்க வேண்டுமென தோன்றுகிறது .’

‘பரவால்ல . விடுப்பா . தூங்கலயா ?’

‘இல்லை . தூக்கம் வரவில்லை .’

‘சரி . எதுக்கு உன்ன காப்பாத்துனா அரசதண்டனைன்னு சொன்னாங்க ?’

‘அது’ என்று வளவன் வாயெடுக்கம்நேரம் , தங்கியிருந்த மண்டபத்தினுள் பல்வேறு காலடிச்சத்தங்கள் கேட்டது . திடிரென கையில் வேல் மற்றும் வாளுடன் பல காவல் வீரர்கள் அங்கே வந்து இவர்களைச்சுற்றி நின்றனர் . பாலா திடுதிப்பென விழித்து , திருதிருவென முழித்தான் . சந்துருவும் ஒன்றும் புரியாமல் அவர்களையே பார்த்தான் . அவர்கள் மூவரின் கழுத்தைச்சுற்றியும் பத்துக்கும்மேற்பட்ட வேல்கள் இருந்தன . சிறிது அசைந்தாலும் அவை தொண்டையைக்கிழித்துக்கொண்டு சென்றுவிடும் என புரிந்துகொண்டார்கள் .  அக்காவல் கூட்டத்தை கிழித்துக்கொண்டு ஒருவன் உள்ளே வந்தான் . அவன் வந்த தோரணையைக்கானும்போது, அவன் கண்டிப்பாய் தலைமைக்காவலனாய்த்தானிருப்பான் .

‘அரண்மனையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனை அண்டவிட்டதால் உங்கள் இருவரையும் கழுவேற்றக்கூறி ஆணை . உடனே கிளம்புங்கள் அரண்மனை சிறைக்கு .’ என்றான் .

பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -2
காதலும் குழப்பமும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.comSunday, 9 November 2014

CN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்


இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் வரும்  முன்னே ,நோலனின் அனைத்துப்படங்களை பற்றியும் எழுதிவிடலாம் என்றிருந்தேன் .ஆனால் ,சிலகாரணங்களால் முடியாமல் போய்விட்டது .எனவே இப்பதிவில் INTERSTELLAR திரைப்படத்தின் சினிமாவிமர்சனத்தைப் பற்றி  காணலாம் .  பின்னாளில்  எழுதும்போது இத்திரைப்படத்தைப் பற்றிய விரிவான  அலசலைக் காணலாம் .


கூப்பர்(COOPER) எனும் ஓய்வுபெற்ற  நாசா பைலட், தன் பத்து வயது மகள்  மர்பி ( MURPY )  ,பதினைந்து வயது மகன் டாம் மற்றும் தன் இறந்த மனைவியின் தந்தையுடன் வசித்துவருகிறான் .விவசாயத்தின்மீது  அதீதபிரியம் கொண்டகூப்பர், தன்பண்ணையில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறான் .அச்சூழ்நிலையில் பூமிஎங்கும் புழுதிப்புயல் தாக்கிகொண்டிருக்கிறது .மழையும் இல்லாமல் போய்விடுகிறது .உலகமே உணவுபற்றாக்குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது .கூப்பரின் மகள் மர்பி,விண்வெளி  ஆராய்ச்சியின்மீது அதிக அக்கறைகாட்ட , அவள் படிக்கும் பள்ளியிலோ அதை மறுக்கிறார்கள். 

கூப்பரின்                 புத்தகஅலமாரியில் இருந்து விநோதமான விஷயங்கள் நடைபெறுவதாய்  மர்பி கூற,அதை  பேய் என கூப்பர் நம்பவைக்கிறான் .ஒருகட்டத்தில் தற்செயலாக கிடைக்கும் பைனரிகோட்களால் ஓரிடத்திற்கு செல்கிறான் . அங்கு நாசாவின் மீதியிருக்கும் விஞ்ஞானிகள் ரகசியமாக ஒருமிஷனை ஆரம்பித்திருப்பது அங்கு இருக்கும் விஞ்ஞானி பிராண்ட் மூலம் கூப்பர் அறிகிறான் .அதாவது சனிகிரகத்திற்கு அருகேWORMHOLE  என்றும்  BLACKHOLE     என்றும் அறியப்படும் கருந்துளைகள் உருவாகியிருப்பதைப் பற்றி பிராண்ட் ,கூப்பரிடம் தெரிவிக்கிறார் .அதாவது ,பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் சூரியகுடும்பம்போல் எண்ணிலடங்கா பலகோள்கள் இருக்கின்றன . நமது சூரியக்குடும்பத்தில் பூமி தவிற மற்றகிரகங்களில் உயிர்வாழ்வெதென்பது சாத்தியமில்லாதது . மற்ற சூரியகுடும்பங்களுக்குச் செல்லவேண்டுமெனில் சிலநூற்றாண்டுகள் ஆகலாம் .அப்படி செல்வதற்கு பதில்  , இக்கருந்துளைகளின் வழியே பயணிக்கும் போது சிலநாட்களில் அக்கிரகங்களை அடையலாம்.    கருந்துளைகள் பற்றி மேலும் விவரங்கள் தெரியவேண்டுமெனில் ஐன்ஸ்டைனின் வார்ம்ஹோல்தியரி அல்லது நமது நாட்டைச்சார்ந்த சந்திரசேகர்விளைவு ஆகிய தியரிகளை படித்தால் தெரியும் . மிகஎளிமையாக தெரியவேண்டுமெனில் தயங்காமல் இப்படத்தினை காணுங்கள்  . 


சரி ,படத்தின் கதைப்படி பிராண்ட் ,  ஏற்கனவே அக்கருந்துளைகளின் வழியே ஒருகுழு பயணித்து சில கிரகங்களைக் கண்டிருப்பதாகவும் ,  அதில் மனிதர்கள் வாழ ஏற்றதாக மூன்றுகிரகங்கள் உள்ளதெனவும் கூப்பரிடம் தெரிவிக்கிறார் . அங்கு சென்று மனிதஇனத்தை காப்பாற்ற தன்னிடம் இரண்டு ப்ளான்கள் இருப்பதாகவும், இதில் இருக்கும் முக்கியபிரச்சனையான ஈர்ப்புவிசைக்கான ரகசியத்தை , கூப்பர் பயணத்தை முடித்துவருவதற்குள் கண்டுபிடித்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார் . நம்முடைய பூமியோ கிட்டத்தட்ட புழுதிகள் மற்றும் நைட்ரஜன் நிறைந்து   , ஆக்ஸிஜன் குறைந்து காணப்படுவதால்,  பூமி இன்னும் சிலஆண்டுகளில் மனிதர்கள் வாழ லாயக்கற்றதாகிவிடும் என்பதையும் பிராண்ட் மூலம் அறியும் கூப்பர் ,  வேறுவழியின்றி இன்டர்ஸ்டல்லர் எனும் காலபயணத்தை செய்ய ஒப்புக் கொள்கிறான்  . இதை தனது பத்துவயது மகளிடம் தெரிவிக்க முயற்சிசெய்து தோல்வியுற்று, அவளைவிட்டு பிரிந்து விண்வெளிக்குச் செல்கிறான் . அவனுடன் ,பிராண்ட் – டின் மகள் பிராண்ட் (ஹீரோயின் பெயரும் பிராண்ட்தான்)  மற்றும் இன்னும் இருவிண்வெளிவீரர்கள் மற்றும் TARS  எனப்படும் ஆட்டோமேடிக் ரோபோவுடன் இரண்டு வருடம் பயணித்து சனிகிரகத்தை அடைகிறான் . கருந்துளைகளின் வழி பயணத்தைத் தொடர்ந்து ஒருபுதிய சூரியகுடும்பத்தை அடைகிறார்கள் . பிராண்ட் தெரிவித்த இரண்டுப்ளான்களில் முதல்ப்ளானான ஸ்பேஸ்ஸ்டேசன் ஒன்றையும் கூடவே கொண்டு செல்லும் கூப்பர் , விண்வெளியின் ஓரிடத்தில் அதை நிறுத்திவிட்டு பிராண்ட் மற்றும் மற்றொரு விண்வெளிவீரருடன் ஒரு கிரகத்திற்கு செல்கிறான் . அந்தகிரகம் முழுதும் நீரால்இருக்க, அங்கு ஒருவர் இறந்துவிட உடனே திரும்பி ஸ்பேஸ்ஸ்டேசனுக்குத் திரும்புகிறார்கள் . அங்குவரும் பிராண்டும் கூப்பரும் அப்போதுதான் உணருகிறார்கள் . அதாவது அவர்கள் சென்றுதிரும்பியது ஒருநாளிற்குள் நடந்ததுதான் எனினும், ஈர்ப்புவிசையின் (GRAVITY APPARENT TO TIME) காரணாமாக , 23 வருடங்கள் பூமியில் கடந்துவிட்டது என்பதை அறிகிறார்கள் . மேன் எனும் ஆய்வாளர் சென்றகிரகத்திற்கு சென்று அவரை சந்திக்கிறார்கள் . அங்கு மனிதர்கள் வாழமுடியும் என மேன் சொல்ல ,அதைநம்பி கூப்பர் அவனுடன் செல்கிறார் .   அங்கு மேன் கூப்பரை கொல்லமுயற்சிக்கிறான் . காரணம் , அந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழமுடியாது.  சிலகாரணங்களால் மேன் பொய் சொல்லியிருக்கிறான் . இன்னொருபுறம் ,மர்பி பெரியவளாகி விடுகிறாள் . அவளும் விண்வெளிஆராய்ச்சி மற்றும் இயற்பியல்துறையில் இருக்கிறாள் . அவளின் அண்ணன் டாம்  , திருமணம் முடிந்து தந்தையின் விவசாயத்தில் ஈடுபடுகிறான் . பூமியில் புழுதிப்புயல் அதிகரிக்கிறது .புரபோசர் பிராண்ட் , இறக்கும் தருவாயில் மர்பியிடம் ஒரு உண்மையைக் கூறுகிறார் . அதாவது இன்டர்ஸ்டெல்லர் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் மர்பியின் தந்தை கூப்பர் மீண்டும் பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லாதது என்றும் தான் கண்டுபிடித்ததாக கூறிய அனைத்து டெபினிசன்களும் இன்னும் முழுமையடையவில்லை என்றும் , அதனால் எந்தபயனும் இல்லை என்றும் கூறிவிட்டு இறக்கிறார் . இதன்பின் இவ்வுலகம் என்ன ஆனது  ‘? பூமிக்கு கூப்பர் திரும்பினாரா ? விண்வெளியில் இருக்கும் ஹீரோயின் என்ன ஆனாள் ? என பலகுழப்பங்களுக்கு கடைசி 15 நிமிடத்தில் அட்டகாசமானதொரு கிளைமேக்ஸ் வைத்து நோலன் அதிசயிக்கவைத்துள்ளார் .

முதலில் இப்படத்தின் திரைக்கதை எழுதியதில் பெரும்பங்கு வகித்த ஜொனதனுக்கே பெரும் கிரெடிட் கொடுக்கவேண்டும் . கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் பயின்ற கிறிஸ்டோபர் நோலனுக்கு , இயற்பயில் பட்டம் பெற்ற நோலன் பக்கபலமாய் இருந்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை எழுத உதவியுள்ளார் என்றே கூறவேண்டும் . நோலனின் படங்கள் அப்படி இப்படி என்று கிளைமேக்ஸ் வரை மெல்ல நகர்ந்து கடைசியில் கிடைக்கும் கிளைமேக்ஸ் அதிர்ச்சிகள் இப்படத்தில் எக்கச்சக்கம் எனலாம் . எனக்கு , இன்செப்ஷனைக் காட்டிலும் இத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது .
 
நோலன் தன் அபிமான திரைப்படமான குப்ரிக்கின் 2001 A SPACE ODYSSEY –க்கு இணையான ஒரு படத்தை படைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாய்த் தானிருக்கும் . அத்திரைப்படம் டெக்னிக்கலாய் பல சாதனைகளை செய்திருந்தாலும் , இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாய் அதன் உச்சத்திற்கு சரிசமமாய் நிற்கிறது எனலாம் . வெறும் விஷூவல் மற்றும் சுமாரான திரைக்கதையால் கொண்டாடப்பட்ட GRAVITY ,  CLOSE ENCOUNTERS OF THE THIRD KIND ஆகிய படங்களை ஓரங்கட்டிவிடக்கூடிய அளவிற்கு, திரைக்கதை மாயாஜாலம் செய்துள்ளார் . வழக்கத்தைக்காட்டிலும் முதல் இரண்டுமணிநேரம் கொஞ்சம்  மெல்லநகர்வது போல தோன்றினாலும் கிளைமேக்ஸ் , படத்தை இன்னும் மூன்றுமுறை பார்க்கத்தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .படம் 2 மணிநேரம்  45  நிமிடம் என்பது தியேட்டரைவிட்டு வெளியேவந்து வாட்சைபார்க்கும் போதுதான் தெரிந்தது . பெரும்பாலும் சிஜியை விரும்பாத நோலன் , அந்த BLACKHOLE வழி பயணிக்கும் காட்சியை அமைத்திருக்கும் விதம் அடடா போட வைத்திருந்தது . அதேபோல் ஐன்ஸ்டைன் தியரியை ஐந்துவருடம் படித்தாலும் புரியாதவர்களுக்கு ,வெறும் ஐந்தே நொடிகளுல் , குழந்தைக்குக் கூட புரியும் வண்ணம் சொல்லியிருப்பதும் அருமை . இன்னும் ஈர்ப்புவிசை , காலம் , பைனரிகோடு என எக்கச்சக்க விஷயங்கள் வைத்து இருக்கிறார் . நோலனிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று எள்ளாடல் செய்தவர்களை,  வாயடைக்கச்செய்யும்வண்ணம் படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார் .


முதல் கிரகத்திற்கு சென்று பின் ஸ்பேஸ்ஸ்டேசன் திரும்பியதும் , 23 வருடங்கள் கடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதும் , தன் மகனுக்கு இன்னொரு மகன் இருப்பதை வீடியோமெசேஜில் பார்த்து கண்கலங்குவதுமென கூப்பராக நடித்த மேத்யூ நடிப்பில் கலக்கி இருக்கிறார் .   ஆள் ஒருசாயலில் பார்க்க நம்ம கிறிஸ்டின்பேல் போலவே இருக்கிறார் . அன்னா ஹேத்வே ஹீரோயினாகவும் தன்அழகானநடிப்பில் பார்ப்பவர்களை சுண்டிஇழுக்கிறார் . என்னங்க நோலன் ,அந்த பொண்ணு எப்பேர்பட்ட பிகரு , அதுக்குப்போய் ஹேர்கட் பண்ணிவிட்டு நடிக்கவச்சிருக்கிங்க . தி  டார்க் நைட் ரைசஸ்- சில் நான் அதிகமாய் சைட்அடித்த ஹீரோயின் . புரொபசர் பிராண்ட் ஆகவும் ,ஹீரோயினின் தந்தையாகவும் மைக்கேல் கெய்ன் . நோலனின் ஆஸ்தான நடிகர் இவர் என்று தாராளமாக சொல்லளாம் . மர்பி , டாம் என எல்லோரும் மனதில் நிற்கிறார்கள் .HANS ZIMMER –ன் இசை , பலஇடங்களில் மனதோடு இசைந்தும் சிலஇடங்களில் டெம்போ ஏற்றுவதாகவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது .

மொத்ததில் ,நோலன் ரசிகர்கள் மட்டுமின்றி, சயின்ஸ்பிக்சன் ரசிகர்கள் , குடும்பக் கதையை ரசிப்பவர்கள் மற்றும் சாதாரணரசிகர்கள் என அனைவருக்கும் புரியும் வண்ணம்,  தன் மாயாஜால திரைக்கதை மற்றும் அழகியவிஷூவல்களுடன் கூடிய சிறந்த திரைப்படமாக நோலன் உருவாக்கியிருக்கிறார் .பணிபுரிந்தவர்கள்
Directed by Christopher Nolan.Screenplay, Jonathan Nolan, Christopher Nolan. Camera (Fotokem color and prints, partial widescreen, 35mm/70mm Imax), Hoyte Van Hoytema; editor, Lee Smith; music Hans Zimmer; production designer, Nathan Crowley; supervising art director, Dean Wolcott; art directors, Joshua Lusby, Eric David Sundahl; set decorator, Gary Fettis; set designers, Noelle King, Sally Thornton, Andrew Birdzell, Mark Hitchler, Martha Johnston, Paul Sonski, Robert Woodruff; costume designer, Mary Zophres; sound (Datasat/Dolby Digital), Mark Weingarten; sound designer/supervising sound editor, Richard King; re-recording mixers, Gary A. Rizzo, Gregg Landaker; visual effects supervisor, Paul Franklin; visual effects producer, Kevin Elam; visual effects, Double Negative, New Deal Studios; special effects supervisor, Scott Fisher; stunt coordinator, George Cottle; assistant director, Nilo Otero; casting, John Papsidera.நடிகர்கள்

Matthew McConaughey, Anne Hathaway, Jessica Chastain, Ellen Burstyn, John Lithgow, Michael Caine, Casey Affleck, Wes Bentley, Bill Irwin, Mackenzie Foy, Topher Grace, David Gyasi, TimotheeChalamet, David Oyelowo, William Devane, Matt Damon.


தயாரிப்பு

A Paramount (in North America)/Warner Bros. (international) release and presentation in association with Legendary Pictures of a Syncopy/Lynda Obst Prods.production. Produced by Emma Thomas, Christopher Nolan, Obst. Executive producers, Jordan Goldberg, Jake Myers, Kip Thorne, Thomas Tull.

Saturday, 8 November 2014

CN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்

நோலன் ஏற்கனவே இரு படங்கள் எடுத்து நல்ல டைரக்டர் என்று பெயரெடுத்திருந்தாலும் , அவருக்கென்று சரியானதொரு வாய்ப்பு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும் . மெமென்டோ-வின் ரிலிஸிற்கு பின் , நோலனுக்கு அடித்தது ஜாக்பட் என்றால் தவறாகிவிடும் . நோலனால் , வார்னர் கம்பனிக்கு அடித்தது ஜாக்பட் எனலாம் .
Following படத்திற்கு முன் , நோலன் இதே வார்னர் பிரதர்சில் படம் இயக்க ஏறி இறங்கினாராம் . சில காரணங்களால் அவர் இயக்குநராக முடியாமல் போனது . ஒரு கட்டத்தில் , WB – ல் இருந்து வந்த ஒரு அழைப்பின் பேரில்  சென்றார் . அங்கு அவருக்கு திரைக்கதை ஆசிரியர் பணி கிடைத்தது . அது , நார்வே நாட்டில் வெளியாகி ‘ஹிட்’டடித்த ஒரு படத்தின் ரீமேக் . அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக நோலன் அமர்த்தப்பட , ஹிலாரி என்பவர் படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டார் . வழக்கம்போல் நோலனின் நேரமோ என்னவோ , அந்த ப்ராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டார் அல்லது வெளியேற்றப்பட்டார் . அதன்பின் FOLLOWING எடுக்க லண்டனில் அலைந்தது எடுத்து , சான்பிரான்சிஸ்கோவில் அலைந்தது  , மெமென்டோ  ப்ராஜக்ட் என தன் திறமையை அமெரிக்கா மற்றும் லண்டனில் பரப்பவிட்டிருந்தார் நோலன் . என்னதான் இருந்தாலும் , இவரின் திறமையை வெளிக்கொணரும் பெரிய அளவிலான படங்கள் தயாரிக்க யாருமில்லை என்றே கூறலாம் . அப்போது  தன்னுடைய தயாரிப்பில் இருக்கும் படத்தினை இயக்கித்தருமாறு வந்தது WB . அந்த படம் வேறெதுவுமில்லை , நோலன் முதலில் திரைக்கதை ஆசிரியராக அமர்த்தபட்ட படமான அதே ‘நார்வே’ ரீமேக் தான் . அந்த படம்தான் INSOMNIA . இப்போது ஒரு சிறு மாற்றம் . படத்தின் இயக்குநர் நோலன் என்று முடிவானதுபோல் , ஹிலாரி  இப்படத்திற்காக உருவாக்கியிருந்த திரைக்கதையையே பயன்படுத்தியாகவேண்டும் என்று கட்டாயத்தில் நோலன் இருந்தார் .பின் அந்த திரைக்கதையை படித்துமுடித்து , ஒ.கே சொல்லிவிட்டு லொகேசன் பார்க்க கிளம்பிவிட்டார் .INSOMNIA படத்தின் கதை
ஒரு மாணவி கொலை வழக்கின் காரணமாக , தன் உதவியாளர் ஒருவருடன் அலாஸ்கா மாகாணம் வருகிறார் அல்பாசினோ .அவருக்கு , கடந்தகால மோசமான நினைவுகள் காரணமாக  குழப்பங்கள் மனதின் ஓரத்தில் தேங்கி கிடக்கின்றன . அது போதாதென்று , அலாஸ்கா மாகாணத்தின் வானிலை வேறு வாட்டியெடுக்கிறது . காரணம் , கிட்டத்தட்ட நாம் பொது அறிவு புத்தகத்தில் படித்திருப்போமே , 6 மாதம் இரவு 6 மாதம் பகல் மட்டும் இருக்கும் நாடு. அதன் LANGTITUDE மற்றும் LAPTITUDE  , சூரியனிடமிருந்து அமைந்திருக்கும் இட அமைப்பு போன்றவற்றின் காரணமாக துருவப்பகுதிகளில் , இம்மாதிரியான காலநிலைகள் நிலவும் . பூமி தன் அச்சில் இருந்து 23 ½ டிகிரி சாய்வாக சுற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . அதேபோல் தான் ஏறத்தாழ அலாஸ்கா மாகாணத்திலும் . அல் பாசினோ சென்ற நேரத்தில் , அங்கு 24 மணிநேரமும் பகலே இருக்கிறது . எனக்கெல்லாம்  கும்மிருட்டில் தூங்கினால் தான் தூக்கமே வரும் . ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்தால் கூட தூக்கம் டன்டனாக்கா ஆகிவிடும் .என்னைமாதிரியே கிட்டத்தட்ட அல்பாசினோவும் போல .நாள் முழுதும் பகலாக இருப்பதால் , அவருக்கு சரியானபடி தூக்கம் அமைவதில்லை . இது ஒருபுறமிருக்க , அந்த மாணவியைக்கொன்றவனை தேடிச்செல்லும்போது ஏற்படும் குழப்பத்தில் தன்னுடன் வந்த சக அதிகாரியைத்தவறுதலாக சுட்டுவிடுகிறார் அல்ப்பாசினோ . சிலகாரணங்களால் , தான் சுட்டதை மறைத்து அந்த கொலைகாரன்மேலே பழியைப்போடுகிறார் .ஏற்கனவே வானிலை வாட்டியெடுக்க , மறுபுறம் ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப , தான் செய்த கொலையின் காரணமாக மனது போட்டு வருத்த , மனிதர் தன் தூக்கத்தை இழந்து துக்கத்திற்கு இடமளிக்கறார் . இதுபோதாதென்று , ஒருவன் போன் செய்து , அல்பாசினோ சகஅதிகாரியை சுட்டதை தான் பார்த்ததாக கூற மனிதர் நிம்மதியின்றி தவிக்கிறார் . அந்த விட்னசைக்காண சென்றால் , அவர்தான் அந்த மாணவியைக்கொலை செய்தவர் என்று தெரிகிறது . அந்த கொலைகாரன் வேறு யாருமில்லை . மறைந்த முன்னாள் நடிகர் ராபின் வில்லியம்ஸ் . தன்னைக்காட்டி குடுக்காமல் இருந்தால் , தானும் காட்டிகொடுக்கமாட்டேன் என்று அல்பாசினோவிடம்  ராபின் வில்லியம்ஸ் மிரட்ட , ஏதும் செய்ய இயலாமல்  அல்பாசினோ தவிக்கிறார் . முழுதூக்கத்தையும் இழந்து தத்தளிக்கும் அல்பாசினோ என்ன செய்தார் ? ராபின் எதற்காக மாணவியைக்கொலை செய்தார் ? கடைசியில் ராபின் என்ன ஆனார் ? என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

இந்த படத்தில் மிக முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு . நாம் ஒளிப்பதிவாளர் WALLEY பற்றி சென்ற மெமென்டோ பதிவில் பார்த்தோம் . இப்படத்தில் , WALLEY தன் திறமை முழுமையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் . முதல் காட்சியில் வரும் ப்ளைட் பறப்பகும் காட்சியும் , கீழே அவ்விடத்தின் இட அமைப்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சி அதிஅற்புதமாக எடுத்திருப்பார் . ராபினைத்துரத்தி அல்பாசினோ செல்லும்போது , அந்த ஆற்றின் மரக்குவியல்களும் , ஆற்றின் வேகமும் காட்சிப்படுத்தியிருக்கும் அழகு என படத்தில் பட்டாசு கிளப்பியிருப்பார் .

அடுத்து நடிகர் தேர்வு . நோலன் , முந்தைய இருபடங்களிலும் தேர்ந்தெடுத்த நடிகர்களை பயன்படுத்தவில்லை . காரணம் பட்ஜெட் மற்றும் கால்ஷிட் பிரச்சனைகள் . நோலனுக்கு , மாபெரும் நடிகர்களுடன் பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் . ஆனால் அதற்கான வாய்ப்பு இன்சோம்னியா படத்தில் மாத்திரமே சாத்தியமாயிற்று . மெமன்டோ படத்தில் கூட CARRIE ANNE MOSE –தவிர மற்ற அனைவரும் டிவி நடிகர்களே ! இப்படத்தின் நடிகர் தேர்வுகளைப்பொறுத்தவரை  , நோலன் மனதில் அல்பாசினோவும் , ராபின் வில்லியம்சும் உடனுக்குடனே திரை்ககதையைப்படிக்கும்போதே வந்தனராம் . அடித்துபிடித்து கால்ஷிட் வாங்கி ஷூட்டிங்கை நடத்தினார் நோலன் .

மெமன்டோ படத்தின் பட்ஜெட் என்றால் 5 மில்லியன் மாத்திரமே ! ஆனால் இன்சோம்னியா படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 50 மில்லியன் .அதில் கிட்டத்தட்ட பாதிக்குமேல் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றது . காரணம் , நோலன் ஒரு படத்தினை எடுக்கும்போது எந்தளவு மிச்சப்படுத்தமுடியுமோ அந்த அளவு பணத்தை மிச்சப்படுத்த தான் பார்ப்பார் . தேவையில்லாத விஷுவல் எபெக்ட் , CG போன்றவையெல்லாம் தவிர்த்துவிடுவார் நோலன் . மேலும் , நோலன் முதல்முதலாக SECOND UNIT வைத்து படமாக்கிய படம் இதுதான் . இபடத்திற்குமுன் இயக்கிய இரண்டு படங்களிலும் , SECOND UNIT இல்லாமலே இயக்கியிருப்பார் .


இப்படத்தின்மீது வைக்கப்படும் அதிமுக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் திரைக்கதை . இப்படத்தின் திரைக்கதையை நோலனே எழுதியிருந்தால் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்று பரவலான கருத்து உள்ளது . ஒரு நிமிடம் யோசித்தால் , அந்த கருத்து தவறு என்று புரியும் .இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லர் வகையறாவாக இருந்தாலும் , பரபரவென்று நகரும்படியாக இருக்காது . மெமென்டோ படத்தில் , நோலன் என்ன செய்தாரோ அதையே இப்படத்திலும் செய்திருப்பார் . மெமென்டோவில் 10 நிமிடத்தில் மறக்கும் ஹீரோவின் மனநிலையை நமக்குக்காட்ட நான்-லீனியர் தேவைப்பட்டது . ஆனால் இங்கோ , தூக்கமின்றி மனப்பிரச்சனைகளால் தவிக்கும் ஒருவனின் மனநிலையை காட்டியாகவேண்டிய கட்டாயத்தில் நோலன் இருக்கிறார் .  ஒருவேளை நோலனின் ஸ்பெசலான நான் – லீனியரில் எடுத்திருந்தால் , சத்தியமாக இப்படம் போட்டபணத்தில் பாதியைக்கூட எடுத்திருக்கமுடியாது என்பதே உண்மை . காரணம் என்னவெனில் , இதன் கான்செப்ட் முழுக்க முழுக்க ஒருவனின் மனதினுள் எழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளால் தூக்கமின்மை நோய் ஏற்பட்டு எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே ! இந்த கான்செப்டில் , கொத்துபரோட்டோ போல் நான் – லீனியர் திரைக்கதை எழுதியிருந்தால் கண்டிப்பாக இப்படம் பார்வையாளர்களுக்கு விளங்கியிருக்காது .

அடுத்து இப்படத்தின்மூலம் நோலனிடம் திரைக்கதை மாத்திரமே ஸ்பெசல் , அரைகுறையான டைரக்சன் கற்றுக்கொண்டு திரைக்கதையால் காலத்தைத்தள்ளிக்கொண்டிருக்கிறார் என்று கூறுபவர்களின் செவுனியைசேர்த்து அடித்தாற்போல் விளக்கியிருப்பார் நோலன் . நோலனுடைய மற்ற படங்களில் திரைக்கதை மாபெரும் கட்டுமானமாக இருக்கும்பட்சத்தில் , டைரக்சன் திறமை முழுமையாக வெளிக்கொணரமுடியாத நிலையில் இருக்கும் .ஆனால் , இப்படத்தில் சாதாரண திரைக்கதையையும் கொண்டு , மிகச்சிறப்பான டைரக்சனை நோலன் வெளிப்படுத்தியிருப்பார் .நோலன் படங்களை உற்று நோக்கினால் , படத்தில் வரும் பாத்திரம் யாரையாவது பற்றி கூறினால் , அவர்களின்  காட்சி ஓரிரு நொடிகள் வந்து செல்லும் . எடுத்துக்காட்டாக , மெமென்டோ படத்தில் , தன் மனைவியைப்பற்றி GUY PIERCE சொல்லுமிடங்கள் , TEDDY யாக வருபவர் LENNY பற்றி கூறும் காட்சிகளை உற்றுநோக்கினால் தெரியும் . அதே போன்று இப்படத்திலும் நோலன் டச் , அமைத்திருப்பார் .


இப்படம் முடிந்தபின் நோலன் , பேட்மேன் பாகங்களை எடுக்க ஆரம்பித்தார் . அந்நேரத்தில் ஒரு பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்த ராபின் வில்லியம்ஸ் , நோலனிடம் பேட்மேன் படங்களில் நடிக்க வாய்ப்புத்தாருங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் . இத்தனைக்கும் ஏற்கனவே இருமுறை பேட்மேன் படங்களில் (நோலனுக்கு முன் இயக்கியவர்களின் படங்களில்) ஜோக்கராகவும் ,ரிட்டிலராகவும் வாய்ப்பு வந்தபோது மறுத்தவர் , நோலனின் இயக்கத்திற்காக தானே வேண்டிகேட்டார் .

இன்சோம்னியா – தூக்கமின்மையால் வரும் நோய் . இது எதனால் வருகிறது , என்னென்ன பிரச்சனைகள் இதனால் வரும் , இந்நோய் வந்தவன் என்ன ஆவான் என்பதை முடிந்தவரை சிறப்பாக நோலன் காட்சிபடுத்தியிருப்பார் . இதேபோல் , இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டவராக , என் அபிமான நடிகர் கிறிஷ்டின் பேலின் THE MACHINIST படத்தையும் கூறலாம் . அப்படத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் எனினும் , அதைக்காட்டிலும் நோலனின் இன்சோம்னியா சிறப்பாக இருக்கும் .நோலனின் நான் – லீனியர் திரைக்கதை  இல்லாவிட்டாலும்  ஒளிப்பதிவு , இசை , லொகேசன் , அல்பாசினோ மற்றும் ராபின் வில்லியம்சின் அட்டகாசமான நடிப்பிற்காக  இன்சோம்னியா திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் .

இன்சோம்னியா படம்தான் நோலனின் திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றி , ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் வட்டத்திற்கு இழுத்துச்சென்றது . இதன்பின் WB உடன் இணைந்து நோலன் இயக்கிய படங்கள் அனைத்தும் , உலகளவில் மாபெரும் ஹிட் படங்கள்தான் . அடுத்தபதிவில்  , BATMAN BEGINS படத்துடன் உங்களைச்சசந்திக்கிறேன் .
தொடர்புடைய பதிவுகள் 

நோலன்;s - Memento - Part 2


நோலன்'S - Memento -Part 1

நோலன்'s - Following


பயணம் @ டைம்மெஷின் - 9

கனிவும் காதலும்
தொடர்புடைய இடுகைகள்

இடம் – தஞ்சாவூர்

காலம் – கி.மு. 35

தமிழகம் அக்காலத்தில் பனிரெண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது . அந்நாடுகளை வைத்தே சேர , சோழ , பாண்டியர்கள் மற்றும் வேளிர் எனும் குறுநிலமன்னர்கள் ஆகியோர் தங்களின் ஆட்சியை செலுத்தினர் . சந்துருவும் , பாலாவும் அந்நாளில் புனல் நாடு என்றழைக்கப்பட்ட தஞ்சை நகரின் ஓரத்தில் இருந்த அவ்வனத்திலிருந்து வெளிப்பட்டனர் . 175 ஆண்டுகளில் சிறிது நேரத்திற்குமுன் பார்த்திருந்த தஞ்சைக்கும் , தற்போது அவர்கள் இருவரும் பார்க்கும் தஞ்சைக்கும் மாபெரும் மாற்றங்கள் உருவாகியிருந்தன . இனி நேரே சென்று கல்லணையைப்பார்த்து அங்கு வேலைசெய்பவர்களுடன் சேர்ந்து வேலையாள் வேடமிட்டு , சுரங்கம் தோண்டி , பெட்ரோலை கைப்பற்றுவது மட்டும்தான் தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் . பெட்ரோலைக்கண்டுபிடிப்பதைக்காட்டிலும் , மேலும் தங்களின் வாழ்நாளில் நடக்கப்போகும் ஆச்சரியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமே மிகுதியாயிருந்தது . சிறுவயதில் வரலாற்றுப்பாடங்களில் படித்த அத்தனையும் நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு , அவர்களை ஒரு புதுஅனுபவத்திற்கு உட்படுத்தியது எனலாம் . கையில் இருக்கும் தங்கக்காசுகளை வைத்து முதலில் சாப்பிடவேண்டும் பின் இரண்டு வேட்டி சட்டைகள் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்தனர் . மெல்ல தஞ்சை நகரை நோக்கி தங்களின்  பயணத்தை ஆரம்பித்தனர் . அந்நகரை அடையும்போதுதான் அதைக்கவனித்தனர் . சென்றநூற்றாண்டு வரை திறந்தவெளி மைதானமாயிருந்த நகரம் , ஒரு மாபெரும் கோட்டைக்குள் மிகுந்த சத்தத்துடன் உறங்கிக்கொண்டிருப்பது விளங்கியது . ஒரு மாபெரும் மதில் சுவர் ஒற்றைப்பனமர உயரத்தில் கருங்கற்கலாலும் , அதைச்சுற்றியபடியே ஒரு மீட்டர் அளவிற்கு ஒரு பெரிய அகழியும் வெட்டப்பட்டு இருந்தது . அந்த அகழியில் நன்னீர்நில முதலைகள் தங்களின் அகோரப்பசிக்கு யாரேனும் சிக்கமாட்டார்களா ? என்ற எண்ணத்தில் அவ்வகழியை , மரபாலத்தின்வழி கடந்துபோகும் மனிதர்களை உற்றுநோக்கிக்கொண்டிருந்தன . செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் கருங்கற்கல் கோட்டையைக்குடைந்து செய்தார்போல் ஒரு மாபெரும் தேக்குமரக்கதவும் , அதைப்பாதுகாக்க கூரிய வேலேந்திய இருவலுபுஜ வீரர்களும் இருந்தனர் . தஞ்சை பாதுகாப்பிற்காக , கோட்டை மற்றும் கொத்தளங்கள் புதிதாக அந்நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருந்தன . அதற்கான காரணம் சேரனும் பாண்டியர்களும்தான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை . அம்மதில் சுவர் திறந்திருந்தது . அச்சுவரை உற்றுநோக்கும்போது  , உள்ளே மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது . மதியநேரமாதலால் , கோட்டையைத்தாண்டியிருக்கும் வயல்களில் வேலைசெய்ய ஆடவரும் மகளிரும் சென்றிருக்கலாம் . தைத்திருவிழா முடிந்து இருமாதங்கள் ஆகிவிட்டதால் அடுத்த விழாவுக்குத்தேவையான விளைச்சலை , விளைவிக்கச்சென்றிருந்தனர் . ஆங்காங்கே நாளங்காடிகள்  ஓரிரு வாடிக்கையாளர்களைக்கொண்டு தங்களின் வியாபாரத்தை ஒப்பேற்றிக்கொண்டிருந்தன .  மாடமாளிகைகள் திறந்தவண்ணம் இருப்பினும் , மகளிரின் கொலுசுசத்தம் இல்லாமல் அமைதியாயிருந்தன . ஒரு நிமிடம் பகலா இரவா என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் நகரே அமைதியாயிருந்தது . காவலர்களின் சீருடைகளில் சில மாற்றங்களும் , காணப்பட்ட சில மக்களின் உடை மற்றும் பாவனைகள் புதுவகையாகவும் தென்பட்டன . எல்லாம் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம் . ஒருவகையாக மதிலைத்தாண்டி பயந்தவண்ணம் நுழைந்த இருவரையும் எந்தகாவலரும் தடுக்கவில்லை .  நகர்வலப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காவலன் மாத்திரம் இவர்களிருவரையும் முறைத்துப்பார்த்த வண்ணம் சென்றான் . மற்றபடி பிரச்சனை எதுவும் வரவில்லை . நகரினுள் நுழைந்ததும் , ஒருவீட்டின் திண்ணையின்மேல் கால்போட்டு படுத்திருந்த ஒரு வயதான ஆளைப்பார்த்து , சாப்பிட எங்கு செல்லவேண்டும் என்று கேட்டார்கள் .  அவன் கூறிய விலாசத்தை நோக்கி செல்லும்போது எதிரில் ஒரு புஜபலபராக்கிரமசாலியைப்போன்ற ஒரு வாலிபன் தென்பட்டான் . அவனது கூர்மையான பார்வை , இவர்களிருவரையும் பார்த்த வண்ணம் இருந்தது . அதைக்கண்ட இருவருக்கும் ஒருவித பயம் பற்றிக்கொண்டது .

‘அவன பாத்தியா பாலா ?’

‘ம் . நானும் அவன தான் பார்க்கறேன் . நம்மளயே ஒரு மாதிரியா பாக்கறான் மச்சி .’

‘யாரா இருக்கும் ?’

‘எனக்கு மட்டும் எப்டி மச்சி தெரியும் ?’

பாலா சொல்வதும் வாஸ்தவம்தானே . அவனும் சந்துருவுடன் தானே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறான் . எதிரில் வரு அவ்விளைஞன் நெருங்க நெருங்க அவனது பார்வை ஒரு வித ஏக்கங்கலந்த பார்வையாய் மாறி எந்நேரமும் தன் சக்தியை இழந்துவிடும் வண்ணம் இருந்தது . அவர்கள்முன் வந்த அவ்விளைஞன் திடிரென மயங்கிவிழுந்தான் . அவனது அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருந்த பாலாவும் சந்துருவும் அவனைக்குடிகாரென்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்கள் .

‘டேய் சந்துரு . என்னாச்சுனு பாக்கலாம் வாடா ’

‘வேணாம் மச்சி . நமக்கெதுக்கு வம்புடா ? யார்னே தெரில .கம்முனு வாடா ’

சந்துருவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு பாலாவும் வந்தான் . கீழே விழுந்த அவ்விளைஞனை சீண்டுவார் யாருமில்லை. அனைவரும் கருணை கலந்த முகத்துடன் அவனைப்பார்த்தவாறே ‘உச்’ கொட்டி பயணித்தனர் . சிறிது தூரம் சென்ற சந்துரு ,

‘மச்சி . வா எதுக்கும் அவன போய் பாக்கலாம் . குடிச்சிருந்தா விட்டுட்டு வந்துடலாம் .’ என்றான் .

மீண்டும் சந்துருவுன் வார்தைகளுக்கு கட்டுண்டு அங்கிருந்து சந்துருவுடன் திரும்பி நடந்தான் .கீழே விழுந்துகிடந்த அவ்விளைஞனைப்புரட்டினர் . அவனிடமிருந்து எவ்வித வாடையும் அடிக்கவில்லை. அவன் குடிக்கவில்லை , ஆனால் எதற்காக மயக்கமாகி விழுந்திருப்பான் என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது . பக்கத்து வீட்டின் கதவருகே சென்று தண்ணீருக்காக கதவைத்தட்டினான் சந்துரு . கதவு மட்டும் திறந்தது . உள்ளே இருந்து யாரும் வெளிவரவில்லை .

‘ஹலோ ! யாராச்சும் இருக்கிங்களா ?’ என்ற சந்துருவின் கேள்விக்கு பதில் வரவில்லை .

‘இங்க ஒருத்தர் மயக்கமாகி விழுந்துட்டாரு .அவர எழுப்பனும் . ப்ளீஸ் , கொஞ்சம் தண்ணீ தாங்க .’ மீண்டும் சந்துரு சத்தமாக கூப்பாடிட்டான் .

‘என்ன ஆயிற்று அவருக்கு ?’ என்று மெல்லிய குரல் குயிலோசையுடன் ஒப்பிடும் வண்ணம் கீச்சுக்குரலில் கதவின் பின்னாள் இருந்து ஒலித்தது . அக்குரல் கண்டிப்பாய் ஒரு பேரழியின் குரலாய்தானிருக்கவேண்டும் . சந்துருவுக்கு அதைப்பற்றிக்கவலைப்படும் நேரமாய் அது இல்லை .

‘தெரியலைங்க . மயங்கி விழுந்துட்டாரு . ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீ தாங்க ’

அவன் வேண்டுதலைத்தொடர்ந்து , கதவின் பின்னால் ஒரு கால்கொலுசின் சத்தம் வீட்டினுள் நுழைவதும் பின் மீண்டும் கதவினருகே வருவதும் கேட்டது .‘இந்தாருங்கள் ’ என்ற சத்தமும் அதைத்தொடர்ந்நு அச்சின்ன கதவிடுக்கின்வழியே சந்தனநிறத்தில் ஒரு அழகிய செந்நிறக்கை , ஒரு வெண்கலசொம்பைத்தாங்கிய வண்ணம் வெளிப்பட்டது . சந்துரு இருந்த அவசரத்திலும் , அக்கையை காணமல் இல்லை . ஒருநொடியில்  , அவ்வழகிய கையை கண்டவன் அதற்குரியாளின் முகத்தினை காணமாட்டோமா என்ற ஏக்கத்துடன் கதவினுள் எட்டிப்பார்த்தவண்ணம் சொம்பை வாங்கினான் . அவன் வாங்கும்நேரம் தவறுதலாய் அவன் கை , அவளின் கைமீது பட்டுவிடவும் , அவள் சிலிர்த்துக்கொண்டு கையை உள்ளே இழுக்கவும் , கதவின்வழி சந்தில் அவளின் முகத்தை அரைகுறையாய் காணவும் என சிலநொடிகளுல் அனைத்தும் நடந்துமுடிந்தன . பிறைநிலவாய் அவனின் கண்களில் சிக்கிய அவளின் ஒரு அழகிய நாணக்கண்ணும் , செதுக்கியெடுத்த மூக்கும் , சிவந்த இளம் உதடும் அரைகுறையாய் அவன் கண்களில் தெரிந்துவிட , சந்துரு ஒருநொடி ஸ்தம்பித்தான் . பின் பாலாவின் குரல் கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பி அவளிடம் நன்றி சொல்லிவிட்டு , வேகவேகமாய் அவ்விளைஞனை நோக்கி ஓடினான் . சொம்பை வாங்கி பாலா அவ்விளைஞன் மேல் நீரைத்தெளிக்க , சிறுகசிறுக கண்களைத்திறந்து பார்த்தான் . வழக்கம்போல் சுற்றிநின்று சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் .

‘யார் தம்பி நீ ? ’ என் சந்துருவுன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவ்விளைஞன் இல்லை .

‘மச்சி , ஹீ நீட் சம் மெடிக்கல் அஸிஸ்டன்ஸ் ’ என்றான் பாலா .

‘ஐயா ! இங்க ஏதாச்சும் ஹாஸ்பிடல் இருக்கா ?’ என்று சுற்றி நின்று வேடிக்கைப்பார்க்கும் ஆட்களைப்பார்த்து வினவினான் சந்துரு . யாருக்கும் ஒன்றும் புரியாமல் விழித்தனர் . ஆங்கிலம் தன்னையும்மீறி அவசரத்தில் வெளிப்படுவது ஏன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் நிலையில் அவனில்லை .

‘ஏங்க , இங்க ஏதாவது மருத்துவமனை இருக்கா ?’ என்றான் மீண்டும் .

‘வைத்தியர பாக்கனும்னா அரண்மனைக்குத்தான் போகனுங்க . ’ என்று கூட்டத்திலிருந்து ஒரு பெரியவரின் குரல் கேட்டது .


‘தம்பி ! அவர அப்படியே விட்டுட்டு கிளம்புங்க . இங்க இருக்க காவலாளிகள் பார்த்தார்கள் என்றால் அரசதண்டனை உங்களுக்கு கிட்டுவது திண்ணமாகிவிடும் ’ என்றது இன்னொரு குரல் .

‘ஏங்க , யாராச்சும் சொல்லுங்களே , அரண்மனைக்கு எப்படி போகனும் ’ என்று பாலாவின் குரல் சிறிது அதட்டலாகவே ஒலித்தது .

அப்போது கூட்டத்தின் நடுவில் , மக்களை ஒதுக்கியவாறே இரு வெண்ணிற ஆடை அணிந்த துறவிகள் வெளிப்பட்டனர் . அதில் ஒருவன் இளம்துறவியாய் இருக்க , மற்றொருவரோ தேஜஸ் வெளிப்படும் முகத்துடன் , கருணையின் மறுவடிவாய் தெரிந்தார் .  அவர்கள் இருவரும் உடனே வந்து மயங்கிக்கிடந்த இளைஞனின் நாடியைப்பிடித்துப்பார்க்க ஆரம்பித்தனர் .

‘இவரை உடனே தூக்கிக்கொண்டு எங்களுடன் வாருங்கள் ’ என்று  அந்த துறவிகளில் மூத்தவர் தெரிவிக்க , பாலாவும் சந்துருவும் ஒன்றாய் சேர்ந்து அவ்விளைஞனைத்தூக்கிக்கொண்டு அத்துறவிகளை பின்தொடர்ந்தனர் .

சிறிது நேரத்திற்குப்பின்  ஒரு அழகிய கட்டட கலைபாட்டுடன் கூடிய ஒரு மாளிகையும் , அதனுள் இருந்து சில வெந்நிற ஆடைத்துறவிகளும் தெரிந்தனர் . மூத்தத்துறவி முன்னே செல்ல , பின்னே பாலாவும் சந்துருவும் அவ்விளந்துறவியும் சென்றனர் . அங்கிருந்த அனைவரும் முன்னே சென்ற துறவிக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்க , அத்துறவியோ வேகவேகமாய் மாளிகையின்  ஒருமூளைக்குள் இருந்த ஒரு படுக்கைக்குச்சென்று , அவ்விளைஞனை படுக்கவைக்குமாறு இருவரிடமும் கூறினார் . இளைஞனை இறக்கிவைத்துவிட்டு , அத்துறவியின் கட்டளைக்கேற்ப அந்த அறையிலிருந்து வெளியே வந்து மண்டபத்தில் இருந்தனர் . அது பெரிய மண்டபமாகவும் , மேலும் அங்கே தங்குவதற்கென்று பல அறைகளும் காணப்பட்டன . அம்மண்டபத்தின் நடுவே மஹாவீரரின் உருவச்சிலை ஒன்று அமைதிக்கு விளக்கம் தரும் வண்ணம் நடுநயமாய் வீற்றிருந்தது .


வரலாற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு அதிசயமும் ஒவ்வொரு காரணமும் , ஒரு குழப்பமும் இருப்பதைக்காணலாம் . சந்திரகுப்த மௌரியன் என்ற பேரரசன் ஆதரித்த சமணமதம் , ஒரு கட்டத்தில் இரண்டாய் பிரிந்தது . அதற்கான காரணம் , அந்நாளில் நிகழ்ந்த மாபெரும் வறட்சி . இதன்காரணமாய் , சந்திரகுப்த மௌரியன் , தன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு பத்திரபாகு எனும் துறவியுடன் இன்றைய கர்நாடகத்தின் வனப்பகுதிக்கு சென்று வடக்கிருந்து உயிரைவிட்டான் .அந்த கர்நாடக கோஷ்டியினர்  திகம்பரர் என்றழைக்கப்பட்டனர் . இவர்கள் முற்றும்துறந்த துறவிகள் என்பதை ஆடை உடுத்தாமலே இவ்வுலகினருக்கு தெரிவித்தனர் . ஆனால் தமிழகத்தைப்பொறுத்தவரை , ஆடையிழந்தவர் எனில் ஒருவகையில் உயிரை இழந்ததற்குச்சமமாய் கருதினர் . ஆதலால் , திகம்பர சமணத்துறவிகள் , தமிழகத்தில் தங்களின்நிலையை நாட்டமுடியாமல் போய்விட்டனர் . மேலும் வடக்கிலிருந்த மற்றொரு பிரிவினரான ஸ்வேதம்பரர்கள் , வெந்நிற ஆடை அணிந்து வாழ்ந்தனர் . பின் பல சமண மாநாடுகள் மற்றும் துறவிகளின் வருகை ஆகையால் அக்காலகட்டத்தில் சமணமதம் ஒரு நிலையான வளர்ச்சியுடனும் புகழுடனும் இருந்தது . மேலும் சமண மற்றும் பௌத்த மதங்களை தமிழக அரசர்கள் பெரிதும் எதிர்க்கவுமில்லை . மாறாய் , பல அரசர்கள் ஆதரவளித்தனர் .  மேலும் சமணசமயத்துறவிகள் வெறுமனே தங்களின் மதக்கருத்துகளை மட்டும் போதிக்காமல் , மக்களுக்குத்தேவையான மருத்துவ உதவிகள் , ஆதரவற்றோர் தங்குவதற்கு என பல உதவிகள் செய்ததால் , சமணத்துறவிகள் மீது அதீத மதிப்பு மக்களிடையே ஏற்பட்டது .

சமணர்களைப்பற்றி நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் , ஒரு மாளிகை வீட்டில்  ஒரு இளம்பெண் தன் முதல்காதலை எண்ணி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் . ஆம் , அவளே தான் . சந்துரு தண்ணீர் கேட்டவுடன் வந்து தந்தவளே தான் . வீட்டில் யாருமில்லாததால் மாளிகையின் ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்த அம்மங்கைக்கு தென்பட்டவன் தான் சந்துரு . அவனைப்பார்த்தவுடனே அவளுக்குள் பல்வேறு ரசாயன மாற்றங்கள் எழுந்ததை அவள் உணர்ந்திருந்தாள் . என்ன காரணத்தினால் அவனை தனக்குப்பிடித்தது என்று இன்னமும் தெரியவில்லை அவளுக்கு . அவன் தன்வீட்டுக்கதவை நோக்கி வருகிறான் என்பதை அறிந்ததும் வேகவேகமாய் கதவின் அருகில் வந்து நின்றாள் .அவன் குரலைக்கேட்டதும் அவளுக்கேற்பட்ட இன்பமும் அதைத்தொடர்ந்த வெட்கமும் அவளை ஏதுமே செய்யவிடாமல் ஸ்தம்பிக்கவைத்தது . நீச்சல் தெரியாதவன் கடலில் சிக்கினால் என்ன ஆகும் ?. ஒவ்வொருமுறை முழுகும்போதும் உயிர் போகுமல்லவா ? திடீரென மேலெழும்போது இழந்த உயிர் மீண்டு வருவதுபோல் இருக்கும் . அதேபோல் தான் சந்துருவுன் கை படும்போது அவளும் இருந்தாள் . அப்படியே அவனின் ஸ்பரிசம் அவள் கையில் இருந்துகொண்டே இருக்காதா என்று மனம் எண்ணினாலும் , அச்சோ ஆடவனின் கையாயிற்றே என்று மூளை சொல்வதைக்கேட்டு கையை இழுத்துக்கொண்டோமே என்று ஏங்க ஆரம்பித்தாள் . காதல்கடலில் அவள் முழுகிவிட்டாள் என்று சொல்லமுடியாது . ஆனால் , தத்தளித்துக்கொண்டிருக்கிறாள் . கரையேற்ற வருவானா சந்துரு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .


(சில இடர்பாடுகளால் இக்கதையை இரண்டுமாதம் கழித்து இப்போதுதான் எழுதமுடிந்தது . தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் கண்டிப்பாய் என்மீது கோவமாய் தான் இருப்பார்கள் . ஒரு படத்திற்கு இடைவேளை வருவதுபோல் , கதைக்கும் விட்டதற்கு நண்பர்கள் மன்னிக்கவேண்டும் . மேலும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு நண்பர்களைக்கேட்டுக்கொள்கிறேன் .)   பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -1
கனிவும் காதலும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com