Saturday, 8 November 2014

CN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்

நோலன் ஏற்கனவே இரு படங்கள் எடுத்து நல்ல டைரக்டர் என்று பெயரெடுத்திருந்தாலும் , அவருக்கென்று சரியானதொரு வாய்ப்பு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும் . மெமென்டோ-வின் ரிலிஸிற்கு பின் , நோலனுக்கு அடித்தது ஜாக்பட் என்றால் தவறாகிவிடும் . நோலனால் , வார்னர் கம்பனிக்கு அடித்தது ஜாக்பட் எனலாம் .
Following படத்திற்கு முன் , நோலன் இதே வார்னர் பிரதர்சில் படம் இயக்க ஏறி இறங்கினாராம் . சில காரணங்களால் அவர் இயக்குநராக முடியாமல் போனது . ஒரு கட்டத்தில் , WB – ல் இருந்து வந்த ஒரு அழைப்பின் பேரில்  சென்றார் . அங்கு அவருக்கு திரைக்கதை ஆசிரியர் பணி கிடைத்தது . அது , நார்வே நாட்டில் வெளியாகி ‘ஹிட்’டடித்த ஒரு படத்தின் ரீமேக் . அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக நோலன் அமர்த்தப்பட , ஹிலாரி என்பவர் படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டார் . வழக்கம்போல் நோலனின் நேரமோ என்னவோ , அந்த ப்ராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டார் அல்லது வெளியேற்றப்பட்டார் . அதன்பின் FOLLOWING எடுக்க லண்டனில் அலைந்தது எடுத்து , சான்பிரான்சிஸ்கோவில் அலைந்தது  , மெமென்டோ  ப்ராஜக்ட் என தன் திறமையை அமெரிக்கா மற்றும் லண்டனில் பரப்பவிட்டிருந்தார் நோலன் . என்னதான் இருந்தாலும் , இவரின் திறமையை வெளிக்கொணரும் பெரிய அளவிலான படங்கள் தயாரிக்க யாருமில்லை என்றே கூறலாம் . அப்போது  தன்னுடைய தயாரிப்பில் இருக்கும் படத்தினை இயக்கித்தருமாறு வந்தது WB . அந்த படம் வேறெதுவுமில்லை , நோலன் முதலில் திரைக்கதை ஆசிரியராக அமர்த்தபட்ட படமான அதே ‘நார்வே’ ரீமேக் தான் . அந்த படம்தான் INSOMNIA . இப்போது ஒரு சிறு மாற்றம் . படத்தின் இயக்குநர் நோலன் என்று முடிவானதுபோல் , ஹிலாரி  இப்படத்திற்காக உருவாக்கியிருந்த திரைக்கதையையே பயன்படுத்தியாகவேண்டும் என்று கட்டாயத்தில் நோலன் இருந்தார் .பின் அந்த திரைக்கதையை படித்துமுடித்து , ஒ.கே சொல்லிவிட்டு லொகேசன் பார்க்க கிளம்பிவிட்டார் .INSOMNIA படத்தின் கதை
ஒரு மாணவி கொலை வழக்கின் காரணமாக , தன் உதவியாளர் ஒருவருடன் அலாஸ்கா மாகாணம் வருகிறார் அல்பாசினோ .அவருக்கு , கடந்தகால மோசமான நினைவுகள் காரணமாக  குழப்பங்கள் மனதின் ஓரத்தில் தேங்கி கிடக்கின்றன . அது போதாதென்று , அலாஸ்கா மாகாணத்தின் வானிலை வேறு வாட்டியெடுக்கிறது . காரணம் , கிட்டத்தட்ட நாம் பொது அறிவு புத்தகத்தில் படித்திருப்போமே , 6 மாதம் இரவு 6 மாதம் பகல் மட்டும் இருக்கும் நாடு. அதன் LANGTITUDE மற்றும் LAPTITUDE  , சூரியனிடமிருந்து அமைந்திருக்கும் இட அமைப்பு போன்றவற்றின் காரணமாக துருவப்பகுதிகளில் , இம்மாதிரியான காலநிலைகள் நிலவும் . பூமி தன் அச்சில் இருந்து 23 ½ டிகிரி சாய்வாக சுற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . அதேபோல் தான் ஏறத்தாழ அலாஸ்கா மாகாணத்திலும் . அல் பாசினோ சென்ற நேரத்தில் , அங்கு 24 மணிநேரமும் பகலே இருக்கிறது . எனக்கெல்லாம்  கும்மிருட்டில் தூங்கினால் தான் தூக்கமே வரும் . ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்தால் கூட தூக்கம் டன்டனாக்கா ஆகிவிடும் .என்னைமாதிரியே கிட்டத்தட்ட அல்பாசினோவும் போல .நாள் முழுதும் பகலாக இருப்பதால் , அவருக்கு சரியானபடி தூக்கம் அமைவதில்லை . இது ஒருபுறமிருக்க , அந்த மாணவியைக்கொன்றவனை தேடிச்செல்லும்போது ஏற்படும் குழப்பத்தில் தன்னுடன் வந்த சக அதிகாரியைத்தவறுதலாக சுட்டுவிடுகிறார் அல்ப்பாசினோ . சிலகாரணங்களால் , தான் சுட்டதை மறைத்து அந்த கொலைகாரன்மேலே பழியைப்போடுகிறார் .ஏற்கனவே வானிலை வாட்டியெடுக்க , மறுபுறம் ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப , தான் செய்த கொலையின் காரணமாக மனது போட்டு வருத்த , மனிதர் தன் தூக்கத்தை இழந்து துக்கத்திற்கு இடமளிக்கறார் . இதுபோதாதென்று , ஒருவன் போன் செய்து , அல்பாசினோ சகஅதிகாரியை சுட்டதை தான் பார்த்ததாக கூற மனிதர் நிம்மதியின்றி தவிக்கிறார் . அந்த விட்னசைக்காண சென்றால் , அவர்தான் அந்த மாணவியைக்கொலை செய்தவர் என்று தெரிகிறது . அந்த கொலைகாரன் வேறு யாருமில்லை . மறைந்த முன்னாள் நடிகர் ராபின் வில்லியம்ஸ் . தன்னைக்காட்டி குடுக்காமல் இருந்தால் , தானும் காட்டிகொடுக்கமாட்டேன் என்று அல்பாசினோவிடம்  ராபின் வில்லியம்ஸ் மிரட்ட , ஏதும் செய்ய இயலாமல்  அல்பாசினோ தவிக்கிறார் . முழுதூக்கத்தையும் இழந்து தத்தளிக்கும் அல்பாசினோ என்ன செய்தார் ? ராபின் எதற்காக மாணவியைக்கொலை செய்தார் ? கடைசியில் ராபின் என்ன ஆனார் ? என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

இந்த படத்தில் மிக முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு . நாம் ஒளிப்பதிவாளர் WALLEY பற்றி சென்ற மெமென்டோ பதிவில் பார்த்தோம் . இப்படத்தில் , WALLEY தன் திறமை முழுமையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் . முதல் காட்சியில் வரும் ப்ளைட் பறப்பகும் காட்சியும் , கீழே அவ்விடத்தின் இட அமைப்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சி அதிஅற்புதமாக எடுத்திருப்பார் . ராபினைத்துரத்தி அல்பாசினோ செல்லும்போது , அந்த ஆற்றின் மரக்குவியல்களும் , ஆற்றின் வேகமும் காட்சிப்படுத்தியிருக்கும் அழகு என படத்தில் பட்டாசு கிளப்பியிருப்பார் .

அடுத்து நடிகர் தேர்வு . நோலன் , முந்தைய இருபடங்களிலும் தேர்ந்தெடுத்த நடிகர்களை பயன்படுத்தவில்லை . காரணம் பட்ஜெட் மற்றும் கால்ஷிட் பிரச்சனைகள் . நோலனுக்கு , மாபெரும் நடிகர்களுடன் பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் . ஆனால் அதற்கான வாய்ப்பு இன்சோம்னியா படத்தில் மாத்திரமே சாத்தியமாயிற்று . மெமன்டோ படத்தில் கூட CARRIE ANNE MOSE –தவிர மற்ற அனைவரும் டிவி நடிகர்களே ! இப்படத்தின் நடிகர் தேர்வுகளைப்பொறுத்தவரை  , நோலன் மனதில் அல்பாசினோவும் , ராபின் வில்லியம்சும் உடனுக்குடனே திரை்ககதையைப்படிக்கும்போதே வந்தனராம் . அடித்துபிடித்து கால்ஷிட் வாங்கி ஷூட்டிங்கை நடத்தினார் நோலன் .

மெமன்டோ படத்தின் பட்ஜெட் என்றால் 5 மில்லியன் மாத்திரமே ! ஆனால் இன்சோம்னியா படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 50 மில்லியன் .அதில் கிட்டத்தட்ட பாதிக்குமேல் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றது . காரணம் , நோலன் ஒரு படத்தினை எடுக்கும்போது எந்தளவு மிச்சப்படுத்தமுடியுமோ அந்த அளவு பணத்தை மிச்சப்படுத்த தான் பார்ப்பார் . தேவையில்லாத விஷுவல் எபெக்ட் , CG போன்றவையெல்லாம் தவிர்த்துவிடுவார் நோலன் . மேலும் , நோலன் முதல்முதலாக SECOND UNIT வைத்து படமாக்கிய படம் இதுதான் . இபடத்திற்குமுன் இயக்கிய இரண்டு படங்களிலும் , SECOND UNIT இல்லாமலே இயக்கியிருப்பார் .


இப்படத்தின்மீது வைக்கப்படும் அதிமுக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் திரைக்கதை . இப்படத்தின் திரைக்கதையை நோலனே எழுதியிருந்தால் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்று பரவலான கருத்து உள்ளது . ஒரு நிமிடம் யோசித்தால் , அந்த கருத்து தவறு என்று புரியும் .இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லர் வகையறாவாக இருந்தாலும் , பரபரவென்று நகரும்படியாக இருக்காது . மெமென்டோ படத்தில் , நோலன் என்ன செய்தாரோ அதையே இப்படத்திலும் செய்திருப்பார் . மெமென்டோவில் 10 நிமிடத்தில் மறக்கும் ஹீரோவின் மனநிலையை நமக்குக்காட்ட நான்-லீனியர் தேவைப்பட்டது . ஆனால் இங்கோ , தூக்கமின்றி மனப்பிரச்சனைகளால் தவிக்கும் ஒருவனின் மனநிலையை காட்டியாகவேண்டிய கட்டாயத்தில் நோலன் இருக்கிறார் .  ஒருவேளை நோலனின் ஸ்பெசலான நான் – லீனியரில் எடுத்திருந்தால் , சத்தியமாக இப்படம் போட்டபணத்தில் பாதியைக்கூட எடுத்திருக்கமுடியாது என்பதே உண்மை . காரணம் என்னவெனில் , இதன் கான்செப்ட் முழுக்க முழுக்க ஒருவனின் மனதினுள் எழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளால் தூக்கமின்மை நோய் ஏற்பட்டு எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே ! இந்த கான்செப்டில் , கொத்துபரோட்டோ போல் நான் – லீனியர் திரைக்கதை எழுதியிருந்தால் கண்டிப்பாக இப்படம் பார்வையாளர்களுக்கு விளங்கியிருக்காது .

அடுத்து இப்படத்தின்மூலம் நோலனிடம் திரைக்கதை மாத்திரமே ஸ்பெசல் , அரைகுறையான டைரக்சன் கற்றுக்கொண்டு திரைக்கதையால் காலத்தைத்தள்ளிக்கொண்டிருக்கிறார் என்று கூறுபவர்களின் செவுனியைசேர்த்து அடித்தாற்போல் விளக்கியிருப்பார் நோலன் . நோலனுடைய மற்ற படங்களில் திரைக்கதை மாபெரும் கட்டுமானமாக இருக்கும்பட்சத்தில் , டைரக்சன் திறமை முழுமையாக வெளிக்கொணரமுடியாத நிலையில் இருக்கும் .ஆனால் , இப்படத்தில் சாதாரண திரைக்கதையையும் கொண்டு , மிகச்சிறப்பான டைரக்சனை நோலன் வெளிப்படுத்தியிருப்பார் .நோலன் படங்களை உற்று நோக்கினால் , படத்தில் வரும் பாத்திரம் யாரையாவது பற்றி கூறினால் , அவர்களின்  காட்சி ஓரிரு நொடிகள் வந்து செல்லும் . எடுத்துக்காட்டாக , மெமென்டோ படத்தில் , தன் மனைவியைப்பற்றி GUY PIERCE சொல்லுமிடங்கள் , TEDDY யாக வருபவர் LENNY பற்றி கூறும் காட்சிகளை உற்றுநோக்கினால் தெரியும் . அதே போன்று இப்படத்திலும் நோலன் டச் , அமைத்திருப்பார் .


இப்படம் முடிந்தபின் நோலன் , பேட்மேன் பாகங்களை எடுக்க ஆரம்பித்தார் . அந்நேரத்தில் ஒரு பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்த ராபின் வில்லியம்ஸ் , நோலனிடம் பேட்மேன் படங்களில் நடிக்க வாய்ப்புத்தாருங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் . இத்தனைக்கும் ஏற்கனவே இருமுறை பேட்மேன் படங்களில் (நோலனுக்கு முன் இயக்கியவர்களின் படங்களில்) ஜோக்கராகவும் ,ரிட்டிலராகவும் வாய்ப்பு வந்தபோது மறுத்தவர் , நோலனின் இயக்கத்திற்காக தானே வேண்டிகேட்டார் .

இன்சோம்னியா – தூக்கமின்மையால் வரும் நோய் . இது எதனால் வருகிறது , என்னென்ன பிரச்சனைகள் இதனால் வரும் , இந்நோய் வந்தவன் என்ன ஆவான் என்பதை முடிந்தவரை சிறப்பாக நோலன் காட்சிபடுத்தியிருப்பார் . இதேபோல் , இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டவராக , என் அபிமான நடிகர் கிறிஷ்டின் பேலின் THE MACHINIST படத்தையும் கூறலாம் . அப்படத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் எனினும் , அதைக்காட்டிலும் நோலனின் இன்சோம்னியா சிறப்பாக இருக்கும் .நோலனின் நான் – லீனியர் திரைக்கதை  இல்லாவிட்டாலும்  ஒளிப்பதிவு , இசை , லொகேசன் , அல்பாசினோ மற்றும் ராபின் வில்லியம்சின் அட்டகாசமான நடிப்பிற்காக  இன்சோம்னியா திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் .

இன்சோம்னியா படம்தான் நோலனின் திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றி , ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் வட்டத்திற்கு இழுத்துச்சென்றது . இதன்பின் WB உடன் இணைந்து நோலன் இயக்கிய படங்கள் அனைத்தும் , உலகளவில் மாபெரும் ஹிட் படங்கள்தான் . அடுத்தபதிவில்  , BATMAN BEGINS படத்துடன் உங்களைச்சசந்திக்கிறேன் .
தொடர்புடைய பதிவுகள் 

நோலன்;s - Memento - Part 2


நோலன்'S - Memento -Part 1

நோலன்'s - Following


உங்கள் விருப்பம்

4 comments:

 1. திருமுருகன்,

  கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை இழந்து தவிக்கும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பை துல்லியமாக தனது அனுபவம் வாய்ந்த நடிப்பாற்றிலில் அல் பசினோ அனாசயமாகக் கொண்டுவந்திருப்பார். அசத்தலான நடிப்பு.

  நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete

 2. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete