CN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்

நோலன் ஏற்கனவே இரு படங்கள் எடுத்து நல்ல டைரக்டர் என்று பெயரெடுத்திருந்தாலும் , அவருக்கென்று சரியானதொரு வாய்ப்பு வரவில்லை என்று தான் சொல்லவேண்டும் . மெமென்டோ-வின் ரிலிஸிற்கு பின் , நோலனுக்கு அடித்தது ஜாக்பட் என்றால் தவறாகிவிடும் . நோலனால் , வார்னர் கம்பனிக்கு அடித்தது ஜாக்பட் எனலாம் .




Following படத்திற்கு முன் , நோலன் இதே வார்னர் பிரதர்சில் படம் இயக்க ஏறி இறங்கினாராம் . சில காரணங்களால் அவர் இயக்குநராக முடியாமல் போனது . ஒரு கட்டத்தில் , WB – ல் இருந்து வந்த ஒரு அழைப்பின் பேரில்  சென்றார் . அங்கு அவருக்கு திரைக்கதை ஆசிரியர் பணி கிடைத்தது . அது , நார்வே நாட்டில் வெளியாகி ‘ஹிட்’டடித்த ஒரு படத்தின் ரீமேக் . அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியராக நோலன் அமர்த்தப்பட , ஹிலாரி என்பவர் படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டார் . வழக்கம்போல் நோலனின் நேரமோ என்னவோ , அந்த ப்ராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டார் அல்லது வெளியேற்றப்பட்டார் . அதன்பின் FOLLOWING எடுக்க லண்டனில் அலைந்தது எடுத்து , சான்பிரான்சிஸ்கோவில் அலைந்தது  , மெமென்டோ  ப்ராஜக்ட் என தன் திறமையை அமெரிக்கா மற்றும் லண்டனில் பரப்பவிட்டிருந்தார் நோலன் . என்னதான் இருந்தாலும் , இவரின் திறமையை வெளிக்கொணரும் பெரிய அளவிலான படங்கள் தயாரிக்க யாருமில்லை என்றே கூறலாம் . அப்போது  தன்னுடைய தயாரிப்பில் இருக்கும் படத்தினை இயக்கித்தருமாறு வந்தது WB . அந்த படம் வேறெதுவுமில்லை , நோலன் முதலில் திரைக்கதை ஆசிரியராக அமர்த்தபட்ட படமான அதே ‘நார்வே’ ரீமேக் தான் . அந்த படம்தான் INSOMNIA . இப்போது ஒரு சிறு மாற்றம் . படத்தின் இயக்குநர் நோலன் என்று முடிவானதுபோல் , ஹிலாரி  இப்படத்திற்காக உருவாக்கியிருந்த திரைக்கதையையே பயன்படுத்தியாகவேண்டும் என்று கட்டாயத்தில் நோலன் இருந்தார் .பின் அந்த திரைக்கதையை படித்துமுடித்து , ஒ.கே சொல்லிவிட்டு லொகேசன் பார்க்க கிளம்பிவிட்டார் .



INSOMNIA படத்தின் கதை




ஒரு மாணவி கொலை வழக்கின் காரணமாக , தன் உதவியாளர் ஒருவருடன் அலாஸ்கா மாகாணம் வருகிறார் அல்பாசினோ .அவருக்கு , கடந்தகால மோசமான நினைவுகள் காரணமாக  குழப்பங்கள் மனதின் ஓரத்தில் தேங்கி கிடக்கின்றன . அது போதாதென்று , அலாஸ்கா மாகாணத்தின் வானிலை வேறு வாட்டியெடுக்கிறது . காரணம் , கிட்டத்தட்ட நாம் பொது அறிவு புத்தகத்தில் படித்திருப்போமே , 6 மாதம் இரவு 6 மாதம் பகல் மட்டும் இருக்கும் நாடு. அதன் LANGTITUDE மற்றும் LAPTITUDE  , சூரியனிடமிருந்து அமைந்திருக்கும் இட அமைப்பு போன்றவற்றின் காரணமாக துருவப்பகுதிகளில் , இம்மாதிரியான காலநிலைகள் நிலவும் . பூமி தன் அச்சில் இருந்து 23 ½ டிகிரி சாய்வாக சுற்றுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . அதேபோல் தான் ஏறத்தாழ அலாஸ்கா மாகாணத்திலும் . அல் பாசினோ சென்ற நேரத்தில் , அங்கு 24 மணிநேரமும் பகலே இருக்கிறது . எனக்கெல்லாம்  கும்மிருட்டில் தூங்கினால் தான் தூக்கமே வரும் . ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்தால் கூட தூக்கம் டன்டனாக்கா ஆகிவிடும் .என்னைமாதிரியே கிட்டத்தட்ட அல்பாசினோவும் போல .நாள் முழுதும் பகலாக இருப்பதால் , அவருக்கு சரியானபடி தூக்கம் அமைவதில்லை . இது ஒருபுறமிருக்க , அந்த மாணவியைக்கொன்றவனை தேடிச்செல்லும்போது ஏற்படும் குழப்பத்தில் தன்னுடன் வந்த சக அதிகாரியைத்தவறுதலாக சுட்டுவிடுகிறார் அல்ப்பாசினோ . சிலகாரணங்களால் , தான் சுட்டதை மறைத்து அந்த கொலைகாரன்மேலே பழியைப்போடுகிறார் .ஏற்கனவே வானிலை வாட்டியெடுக்க , மறுபுறம் ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப , தான் செய்த கொலையின் காரணமாக மனது போட்டு வருத்த , மனிதர் தன் தூக்கத்தை இழந்து துக்கத்திற்கு இடமளிக்கறார் . இதுபோதாதென்று , ஒருவன் போன் செய்து , அல்பாசினோ சகஅதிகாரியை சுட்டதை தான் பார்த்ததாக கூற மனிதர் நிம்மதியின்றி தவிக்கிறார் . அந்த விட்னசைக்காண சென்றால் , அவர்தான் அந்த மாணவியைக்கொலை செய்தவர் என்று தெரிகிறது . அந்த கொலைகாரன் வேறு யாருமில்லை . மறைந்த முன்னாள் நடிகர் ராபின் வில்லியம்ஸ் . தன்னைக்காட்டி குடுக்காமல் இருந்தால் , தானும் காட்டிகொடுக்கமாட்டேன் என்று அல்பாசினோவிடம்  ராபின் வில்லியம்ஸ் மிரட்ட , ஏதும் செய்ய இயலாமல்  அல்பாசினோ தவிக்கிறார் . முழுதூக்கத்தையும் இழந்து தத்தளிக்கும் அல்பாசினோ என்ன செய்தார் ? ராபின் எதற்காக மாணவியைக்கொலை செய்தார் ? கடைசியில் ராபின் என்ன ஆனார் ? என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

இந்த படத்தில் மிக முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு . நாம் ஒளிப்பதிவாளர் WALLEY பற்றி சென்ற மெமென்டோ பதிவில் பார்த்தோம் . இப்படத்தில் , WALLEY தன் திறமை முழுமையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் . முதல் காட்சியில் வரும் ப்ளைட் பறப்பகும் காட்சியும் , கீழே அவ்விடத்தின் இட அமைப்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சி அதிஅற்புதமாக எடுத்திருப்பார் . ராபினைத்துரத்தி அல்பாசினோ செல்லும்போது , அந்த ஆற்றின் மரக்குவியல்களும் , ஆற்றின் வேகமும் காட்சிப்படுத்தியிருக்கும் அழகு என படத்தில் பட்டாசு கிளப்பியிருப்பார் .

அடுத்து நடிகர் தேர்வு . நோலன் , முந்தைய இருபடங்களிலும் தேர்ந்தெடுத்த நடிகர்களை பயன்படுத்தவில்லை . காரணம் பட்ஜெட் மற்றும் கால்ஷிட் பிரச்சனைகள் . நோலனுக்கு , மாபெரும் நடிகர்களுடன் பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் . ஆனால் அதற்கான வாய்ப்பு இன்சோம்னியா படத்தில் மாத்திரமே சாத்தியமாயிற்று . மெமன்டோ படத்தில் கூட CARRIE ANNE MOSE –தவிர மற்ற அனைவரும் டிவி நடிகர்களே ! இப்படத்தின் நடிகர் தேர்வுகளைப்பொறுத்தவரை  , நோலன் மனதில் அல்பாசினோவும் , ராபின் வில்லியம்சும் உடனுக்குடனே திரை்ககதையைப்படிக்கும்போதே வந்தனராம் . அடித்துபிடித்து கால்ஷிட் வாங்கி ஷூட்டிங்கை நடத்தினார் நோலன் .

மெமன்டோ படத்தின் பட்ஜெட் என்றால் 5 மில்லியன் மாத்திரமே ! ஆனால் இன்சோம்னியா படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 50 மில்லியன் .அதில் கிட்டத்தட்ட பாதிக்குமேல் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றது . காரணம் , நோலன் ஒரு படத்தினை எடுக்கும்போது எந்தளவு மிச்சப்படுத்தமுடியுமோ அந்த அளவு பணத்தை மிச்சப்படுத்த தான் பார்ப்பார் . தேவையில்லாத விஷுவல் எபெக்ட் , CG போன்றவையெல்லாம் தவிர்த்துவிடுவார் நோலன் . மேலும் , நோலன் முதல்முதலாக SECOND UNIT வைத்து படமாக்கிய படம் இதுதான் . இபடத்திற்குமுன் இயக்கிய இரண்டு படங்களிலும் , SECOND UNIT இல்லாமலே இயக்கியிருப்பார் .


இப்படத்தின்மீது வைக்கப்படும் அதிமுக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் திரைக்கதை . இப்படத்தின் திரைக்கதையை நோலனே எழுதியிருந்தால் படம் அட்டகாசமாக இருந்திருக்கும் என்று பரவலான கருத்து உள்ளது . ஒரு நிமிடம் யோசித்தால் , அந்த கருத்து தவறு என்று புரியும் .இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லர் வகையறாவாக இருந்தாலும் , பரபரவென்று நகரும்படியாக இருக்காது . மெமென்டோ படத்தில் , நோலன் என்ன செய்தாரோ அதையே இப்படத்திலும் செய்திருப்பார் . மெமென்டோவில் 10 நிமிடத்தில் மறக்கும் ஹீரோவின் மனநிலையை நமக்குக்காட்ட நான்-லீனியர் தேவைப்பட்டது . ஆனால் இங்கோ , தூக்கமின்றி மனப்பிரச்சனைகளால் தவிக்கும் ஒருவனின் மனநிலையை காட்டியாகவேண்டிய கட்டாயத்தில் நோலன் இருக்கிறார் .  ஒருவேளை நோலனின் ஸ்பெசலான நான் – லீனியரில் எடுத்திருந்தால் , சத்தியமாக இப்படம் போட்டபணத்தில் பாதியைக்கூட எடுத்திருக்கமுடியாது என்பதே உண்மை . காரணம் என்னவெனில் , இதன் கான்செப்ட் முழுக்க முழுக்க ஒருவனின் மனதினுள் எழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளால் தூக்கமின்மை நோய் ஏற்பட்டு எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே ! இந்த கான்செப்டில் , கொத்துபரோட்டோ போல் நான் – லீனியர் திரைக்கதை எழுதியிருந்தால் கண்டிப்பாக இப்படம் பார்வையாளர்களுக்கு விளங்கியிருக்காது .

அடுத்து இப்படத்தின்மூலம் நோலனிடம் திரைக்கதை மாத்திரமே ஸ்பெசல் , அரைகுறையான டைரக்சன் கற்றுக்கொண்டு திரைக்கதையால் காலத்தைத்தள்ளிக்கொண்டிருக்கிறார் என்று கூறுபவர்களின் செவுனியைசேர்த்து அடித்தாற்போல் விளக்கியிருப்பார் நோலன் . நோலனுடைய மற்ற படங்களில் திரைக்கதை மாபெரும் கட்டுமானமாக இருக்கும்பட்சத்தில் , டைரக்சன் திறமை முழுமையாக வெளிக்கொணரமுடியாத நிலையில் இருக்கும் .ஆனால் , இப்படத்தில் சாதாரண திரைக்கதையையும் கொண்டு , மிகச்சிறப்பான டைரக்சனை நோலன் வெளிப்படுத்தியிருப்பார் .நோலன் படங்களை உற்று நோக்கினால் , படத்தில் வரும் பாத்திரம் யாரையாவது பற்றி கூறினால் , அவர்களின்  காட்சி ஓரிரு நொடிகள் வந்து செல்லும் . எடுத்துக்காட்டாக , மெமென்டோ படத்தில் , தன் மனைவியைப்பற்றி GUY PIERCE சொல்லுமிடங்கள் , TEDDY யாக வருபவர் LENNY பற்றி கூறும் காட்சிகளை உற்றுநோக்கினால் தெரியும் . அதே போன்று இப்படத்திலும் நோலன் டச் , அமைத்திருப்பார் .


இப்படம் முடிந்தபின் நோலன் , பேட்மேன் பாகங்களை எடுக்க ஆரம்பித்தார் . அந்நேரத்தில் ஒரு பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்த ராபின் வில்லியம்ஸ் , நோலனிடம் பேட்மேன் படங்களில் நடிக்க வாய்ப்புத்தாருங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் . இத்தனைக்கும் ஏற்கனவே இருமுறை பேட்மேன் படங்களில் (நோலனுக்கு முன் இயக்கியவர்களின் படங்களில்) ஜோக்கராகவும் ,ரிட்டிலராகவும் வாய்ப்பு வந்தபோது மறுத்தவர் , நோலனின் இயக்கத்திற்காக தானே வேண்டிகேட்டார் .

இன்சோம்னியா – தூக்கமின்மையால் வரும் நோய் . இது எதனால் வருகிறது , என்னென்ன பிரச்சனைகள் இதனால் வரும் , இந்நோய் வந்தவன் என்ன ஆவான் என்பதை முடிந்தவரை சிறப்பாக நோலன் காட்சிபடுத்தியிருப்பார் . இதேபோல் , இன்சோம்னியா நோயால் பாதிக்கப்பட்டவராக , என் அபிமான நடிகர் கிறிஷ்டின் பேலின் THE MACHINIST படத்தையும் கூறலாம் . அப்படத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் எனினும் , அதைக்காட்டிலும் நோலனின் இன்சோம்னியா சிறப்பாக இருக்கும் .நோலனின் நான் – லீனியர் திரைக்கதை  இல்லாவிட்டாலும்  ஒளிப்பதிவு , இசை , லொகேசன் , அல்பாசினோ மற்றும் ராபின் வில்லியம்சின் அட்டகாசமான நடிப்பிற்காக  இன்சோம்னியா திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் .

இன்சோம்னியா படம்தான் நோலனின் திரைப்பயணத்தை முற்றிலும் மாற்றி , ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் வட்டத்திற்கு இழுத்துச்சென்றது . இதன்பின் WB உடன் இணைந்து நோலன் இயக்கிய படங்கள் அனைத்தும் , உலகளவில் மாபெரும் ஹிட் படங்கள்தான் . அடுத்தபதிவில்  , BATMAN BEGINS படத்துடன் உங்களைச்சசந்திக்கிறேன் .




தொடர்புடைய பதிவுகள் 

நோலன்;s - Memento - Part 2


நோலன்'S - Memento -Part 1

நோலன்'s - Following






Comments

  1. திருமுருகன்,

    கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை இழந்து தவிக்கும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பை துல்லியமாக தனது அனுபவம் வாய்ந்த நடிப்பாற்றிலில் அல் பசினோ அனாசயமாகக் கொண்டுவந்திருப்பார். அசத்தலான நடிப்பு.

    நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete

  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை