Saturday, 13 June 2015

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்


ஒரு திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்ததுமே , இந்த படத்துக்கு கண்டிப்பாக போகனும் எனும் எண்ணத்தை சமீபகாலமாக எந்த திரைப்படத்தின் ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் வந்ததுமே கண்டிப்பாக போயாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் பார்க்கவேண்டும் .

படத்தின் கதையை , தினத்தந்தி பேப்பர் விளம்பரங்களிலேயே போட்டுவிட்டார்கள் . முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார் . இதைவைத்துக்கொண்டு மிக எளிமையாக , போரடிக்காத திரைக்கதையினால் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன் . 

ஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை  . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்களுடன் இருக்கும் கார்த்திக்கைப் பார்த்து பணக்காரன் என்று நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் ; அவனையும் காதலிக்க வைக்க முயற்சி்ககிறாள் . ஹீரோயினின் குறும்புத்தனங்களைப் பார்த்து ஒருகட்டத்தில் ஹீரோவும் காதலில் விழுந்துவிடுகிறார் . லவ் ஸ்டார்ட் . வழக்கம்போல ஊர் சுற்றல் , அன்பைப் பரிமாறல் என்று செல்லும் காதலில் , ஒருநாள் பிரிவு ஏற்படுகிறது . காரணம் தனியாக நான் வேறு சொல்லவேண்டுமா ? ஹீரோ பணக்காரர் இல்லை என்பது தெரிந்து ஹீரோயின் கழன்டுகொள்ள பார்க்கிறார் . ஹீரோவோ நீ தான் உலகம் என்று சொல்ல , அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் . சிலமாதங்களுக்குப்பின் ஹீரோயினுக்கு ஒரு பெரும்பணக்காரருடன் நிச்சயதார்த்தம் ஆகிறது . ஹீரோ மீண்டும் அவளிடம் வந்து , தனக்கும் ஒரு பெண்ணை செட் செய்து தரவேண்டும் , இல்லையெனில் நாம்  காதலித்தது , கிஸ்ஸடித்தது எல்லாவற்றையும் ஆவனத்துடன் உன் வருங்கால கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டுகிறார் . அதன்பின் ஹீரோவுக்கு ஒரு பெண்ணை செய்துகொடுக்கிறாள் ஹீரோயின் . அதன்பின் நடந்ததையெல்லாம் சொன்னால் படமே முடிந்துவிடும் . அதனால் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

படத்தில் ஜெயம்ரவி பல இடங்களில் கலக்கியிருக்கிறார் . மேன் ஆஃப் ஜெம் என்பது போல் ஆள்ள செம ஹான்ட்சம் . இவருக்குனு எப்படித்தான் லவ்ஸ்டோரிஸ்லாம் கரெக்டா கிளிக் ஆகுதோ !  ஹன்சிகாவுக்குள் இம்புட்டு திறமையா (குளியலறைக் காட்சி ஓடினால் நான் பொறுப்பல்ல) என்பது போல் ஓரளவு நடித்திருக்கிறார் .  விடிவி கணேஷ் , நடிகராகவே வந்து பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் . பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் அழகு  . மூன்று பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவுள்ளது . எடிட்டர் ஆன்டனியும் , ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜனும் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள் .

படம் துவங்கிய முதல் ஐந்துநிமிடங்களுக்குள் , ஹீரோ இப்படி , ஹீரோயின் இப்படி என அறிவித்துவிட்டு நேராக படத்தினுள் நுழைவது முதல் , காதலிக்கிறார்கள் என்பதை ஒரே பாடலில் சொல்லிமுடித்துவிட்டு நேராக பிரிவுக்கு செல்வதென முடிந்தவரை நீட்டாக படத்தை நகர்த்தியிருக்கிறது திரைக்கதை . இயக்குநர் இன்னும் மின்னலே படத்தின் கிளைமேக்ஸை பார்க்கவில்லையா ? படம் நன்றாகவே சென்றாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது . இருந்தாலும் படம் ஒ.கே . டைம்பாசுக்கு வொர்த் . 

Friday, 12 June 2015

JURRASIC WORLD - சினிமா விமர்சனம்இப்படம் நான் சென்று பார்க்க முதல்காரணம் எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த 11 வயது சிறுவனின் நினைவலைகள் தான் .  சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படம் ஜுராசிக் பார்க் . டைனோசர் என்ற பெயரை மட்டுமே அப்போது கேள்விபட்டிருக்கிறேன் . அப்போதெல்லாம் அதன் புகைப்படத்தைப் பார்க்ககூட வாய்ப்பில்லை . ஏதாவது பேப்பரில் டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு என்ற செய்தியில் நாய் நக்கிவைத்த ஆட்டு எலும்புபோல் ஏதோவொன்றை போட்டிருப்பார்கள் . அக்கால ( 15 வருடங்களுக்கு முன் ) கேபுள் கனெக்சன்களிலும் சன் டிவி , ராஜ் டிவியைத்தாண்டி வேறு எந்த சேனலும் எங்கள் ஊரில் எடுக்காது . அப்போதுதான் தமிழ்நாட்டில் திருட்டி விசிடி கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது . அப்போதைய காலகட்டத்தில் எந்த புதுப்படம் வந்தாலும் கேபுள் டிவியிலும் உள்ளூர் சேனல்களிலும் விளம்பரஇடைவெளியின்றி போட்டுவிட ஆரம்பித்துவிடுவார்கள் . ஒரு சிலநேரங்களில் படம் ரிலிசாவதற்குமுன் கேபுளில் போட்ட கூத்துகளும் அறங்கேறியுள்ளது . அப்போதைய கட்டத்தில் தான் நான் முதல் ஹாலிவுட் திரைபடத்தைப் பார்த்தேன் (ஆர்மர் ஆஃப் காட் போன்ற பழைய ஜாக்கி திரைபடங்கள் ஹாலிவுட்டில் வராது என நினைக்கிறேன் ) . முதல் படமே படுபயங்கர பேய் படம் . ஆமாம் , அக்காலகட்டத்தில் சிலரின் உயிரை பயத்தால் நடுநடுங்கி சாகவைத்த திரைப்படம் அது ; வேறென்ன ? ஈவில் டெட் தான்   . பார்த்து என் தம்பிகளுடன் சேர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலில் விழுந்ததெல்லாம் தனிக்கதை . ஆனால் அதன்பின் ஹாலிவுட் படங்கள் எல்லாம் சர்வசாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டேன் . ஒரு கட்டத்தில் ஆங்கிலப்படங்களின் மீது மோகம் குறைய ஆரம்பித்தது . இன்னும் சொல்லப்போனால் வெறுத்தே விட்டேன் . முக்கிய காரணம் – எனக்கு அப்போது இங்க்லிஷ் என்பதைத்தாண்டி வேறெந்த ஆங்கில வார்த்தையும் தெரியாது . Oh GOD Beutyful மனப்பாட பாடலைக்கூட தமிழில் எழுதிதான் மனப்பாடம் செய்தேன் . 


அப்படியொருசூழலில் தான் ஒரு நாள் இத்திரைப்படத்தை சேனலில் ( அப்போலாம் திருட்டு விசிடி போடரதுக்குனே ஒரு சேனல் ஒதுக்கி வச்சிருந்தாங்க) பார்த்தேன் . அன்று பார்த்த அதே உணர்வு , மூன்றுநாட்களுக்கு முன்பும் நான் உணர்ந்தேன் . காரணம் ஸ்பில்பெர்க் எனும் திரைவித்தகர் . புத்திசுவாதீனமுள்ள 80 வயது கிழவரும் ஸ்பில்பெர்க்கின் கமர்ஷியல் டைப்  திரைப்படங்களைப் பார்க்கும்போது  தன் 8 வயது நினைவுகளில் சிக்கிக்கொள்வார் என்பதில் துளிசந்தேகமுமில்லை . சரி ,விடுங்க , முதல்ல பார்த்த கதைய சொல்லிமுடிச்சிடறேன் . படத்தினைப் பார்க்கும்போது தோன்றியது இதுதான் ; நான் நாய்க்கம்பட்டியில் இல்லை ; டைனோசர்கள் வசிக்கும் ஜுராசிக் பார்க்கில் , கேரக்டர்களில் ஒருவனாக 1.40 மணிநேரம் வாழ்ந்தேன் . முதல் 20 நிமிடம் டைனோசரைக் காட்டமாட்டார்கள்  . தாவர உண்ணி டைனோசர் ஒன்றினை முதன்முதலில் காட்டும்போது ஹீரோவும் ஹீரோயினும் வாயைப்பிழந்து பார்ப்பார்கள் . அப்போது நானும் அதேமாதிரிதான் இருந்தேன் . அதன்பின் இரண்டாம் பாகம் சுமாராகவும் , மூன்றாம்பாகம் படுசுமாராகவும் இருந்தது தனிக்கதை . ஆனால் , முதல் மூன்றுபாகங்களில் முதல்பாகம் எட்டிய உயரத்தில் பாதிகூட மற்ற இருபாகங்களாலும் எட்ட இயலவில்லை . அதன்பின் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது ஜுராசிக் பார்க்கின் முதல் பாகத்தை பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தேன்  .

AGE OF ULTRON திரைப்படத்திற்கு போகும்போது தான் மீண்டும் ஜுராசிக் பார்க் வரப்போகிறது என்று ட்ரைலர் மூலம் அறிந்துகொண்டேன் . என்ன அதிசயம் ! என்னை அந்த ட்ரைலர் பரவசப்படுத்தவில்லை . மாறாக வேற வேலையே இல்லையா இவனுங்களுக்கு என்று திட்டத்தான் தோன்றியது . யுனிவர்சலிடம் FAST சீரிசைத் தவிர வேறுஉ வெற்றிகரமான தொடர்திரைப்படங்கள் இப்போது கையிலில்லை என்பதே இப்படத்திற்கு காரணம் என்று என் உள்மனம் கூறியது . படத்தைப்பார்க்க கூடாது என்று அப்போதே முடிவு செய்தேன் . நம் மனதில் என்றென்றும் அழியா வகையில் இருக்கும் ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுத்து , முதல்பாகத்தையே நம் மனதில் இருந்து தூக்கியெறியும் அளவிற்கு அது சூரமொக்கையாக இருந்ததற்கு பல சாட்சிகள் ஹாலிவுட்டில் கிடக்கிறது . ஜுராசிக் பார்க்கும் அதே வகை தான் . கிட்டத்தட்ட  இரண்டாம் பாகத்தோடு சங்கு ஊதி மூடிவிடுவதை விட்டு விட்டு பேரைக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் தான் இந்த வெறுப்பிற்கு காரணம் .

ஆனால் , இரு நாட்களுக்கு முன்னால் நெட்டில் தேடியபோதுதான் சில விஷயங்களை அறிந்துகொண்டேன் . ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக இத்திரைப்படம் உருவாக்க பல்வேறு வேலைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பலநூறுமுறை மாற்றம் செய்யப்பட்டு வரப்போகதாகவும் தகவல் வந்தது . அப்போதே புரிந்துவிட்டது . இது ஸ்பில்பெர்க் இயக்கவில்லையெனினும் , அவரின் மேற்பார்வையில் புழியப்பட்டு வரப்போவதால் BACK TO THE FUTURE போல் என்டர்டெய்ன்மென்ட் கேரன்டி ; ஆனால் , முதல் பாகத்தை மிஞ்சிவிடமுடியாது என்ற உறுதி மனதில் இருந்தது  .

படத்தின் கதை என்னவெனில் , வழக்கம்போல பார்க் திறக்கப்படுகிறது ; வேறொருவர் நடத்துகிறார்  ; அங்கு பல புதிய வகை டைனோசர்கள் உள்ளன ; வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக மரபணுமாற்றம் செய்யப்பட்ட புதுப்புதுவகையான டைனோசர்கள் உருவாக்கப்படுகின்றன . அப்படி ஒரு படுபயங்கர டைனோசரை உருவாக்குகிறார்கள் . சாதாரணமாகவே டைனோசர்கள் புத்திசாலிகள் ; இந்த புதிய டைனோசரோ படுபயங்கர புத்திசாலியாக இருக்கும் . தப்பிக்கிறது ; தாக்குகிறது . 

ஹாலிவுட்டில் ஒரு விதி உள்ளது . அழிவுசார்ந்த படங்களில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தாலும் முக்கிய கேரக்டர்களாக இருக்கும் குழந்தைகள் சாகமாட்டார்கள் . அதேபோல் அந்த பார்க்கின் இன்சார்ஜ் ஆக இருக்கும் கிளாராவின் அக்கா பையன்கள் இருவர் வருகிறார்கள் ; பார்க்கில் டைனோசரிடம் மாட்டிக்கொள்கிறார்கள் ; அவர்களைக்காப்பாற்ற கிளாராவும் அவளுடைய காதலன் ஓவெனும் கிளம்புகிறார்கள் .

இந்த ஓவென் , என்னவேலை செய்கிறார் என்றால் முதல்பாகத்தில் வரும் புத்திசாலி டைனோசர்களான வெலசிராப்டர்களை பழக்குவது . ஆனால் அந்த டைனோசர்களை வைத்து , ராணுவத்திற்கு பயன்படுத்தலாம் என ஹாஸ்கின்ஸ் என்பவர் வற்புறுத்திக்கொண்டிருக்கிறார் .

இப்போது , பார்க்கில் 20000 மக்கள் உள்ளார்கள் . டைனோசர் தப்பிக்கிறது . தப்பிக்கும் டைனோசர் வெளியுலகையே பார்க்காமல் வளர்ந்ததால் , பயத்தில் கொலை செய்ய ஆரம்பித்து , போகப்போக கொலைசெய்வதை ஹாபியாக வைத்துக்கொண்டு திரிகிறது . காட்டில் மாட்டிக்கொள்ளும் இரு சிறுவர்கள் , அவர்களைத்தேடிவரும் ஹீரோ, ஹீரோயின் ; காப்பாற்றப் போகும் முதலாளி மண்டையைப் போட்டுவிடுவது ; அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக ஏதேதோ நடக்கிறது .

நான் துளியும் எதிர்பார்க்காமல் சென்றபோது இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை . படம் அப்படியே ஸ்பில்பெர்க்கே இயக்கியது போலிருந்தது . முதல்பாகத்தைப் பார்த்தபோது தோன்றிய அதே உணர்வு . படம் முழுக்க த்ரில்லராகவும் ஆங்காங்கே காமெடி வசனங்கள் , பெற்றோர்களின் டைவர்ஸ் பற்றிய குழந்தைகளின்  பரிதவிப்பு , தீ வைப்பவனுக்கு முடிவு தீயால் தான்  என பல இடங்களில் ஸ்பில்பெர்க்கின் தாக்கத்தை உணரமுடிந்தது . அதிலும் இக்கட்டானதொரு தருணத்தில் , கூட வேலைசெய்யும் பெண்ணிடம் முத்தம் கொடுக்கும் அரதப்பழசான ஹாலிவுட் மசாலாவை அப்படியே ஓட்டுவதும் , இப்போ பாருங்கடா என் சிங்கக்குட்டிகள என  பில்டப்புடன் கிளம்பி  , அந்த பெரிய டைனோசருடன் சேர்ந்து அவைகள் திரும்பி பார்ப்பதும் , அதிபுத்திசாலியான வில்லன் டைனோசரை உருவாக்கியிருப்பதும் , அதை அழிக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் என அத்தனையும் அட்டகாசம் . முதல்பாகத்தில் வரும் அதே இசையை    (ADVENTURE – MISTERY MUSIC ) இதிலும் கேட்கும்போது உடல் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது . பல காட்சிகளில் நகம் கடித்துக்கொண்டே பார்க்கவேண்டியதாயிருந்தது . 

3D , சி.ஜி , ஒளிப்பதிவு , எடிட்டிங்  , கலை என அனைத்தும் அட்டகாசம் . பிரம்மாண்டமாக காட்டுவதாக ஆரம்பத்தில் பார்க்கைக் காட்டும்போது மட்டும் அட்டைப்பெட்டியில் அடுக்கிவைத்த  செட் போன்ற உணர்வு . படத்தில் குறையே இல்லையா எனக் கேட்கலாம் . எனக்கு குறைகளைக் கவனிக்க நேரமில்லை ; தமிழில் வசனங்கள் சூப்பர் . மிகமுக்கியமாக மடத்தின் முதல் 2 நிமிடங்களை மிஸ் செய்துவிடாதீர்கள் . பெரியதாக எதுவுமில்லையெனினும் , அக்காட்சி உங்களை சிலிர்க்கவைக்கும் என்பதில் துளிசந்தேகமுமில்லை .

பல இடங்களில் வில்லன் டைனோசர் கொலை செய்திருந்தாலும் , அதையெல்லாம் ஸ்பில்பெர்குக்கே உரியவகையில் காட்சிப்படுத்தியிருப்பது அசத்தல் . குழந்தைகளுடனும் தாராளமாக சென்று பார்க்கலாம் . ஜுராசிக் பார்க்கின் ரசிகர்கள் தவறவிட்டுவிடாதிர்கள் ; மற்றவர்களும் கண்டிப்பாக என்ஜாய் செய்யும் வண்ணம் சிறப்பாக உள்ளது . முதல் பாகத்திற்கு சரிசமமாகவும் , லேட்டஸ்டாக ரிலிசான டைனோசர் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது சூப்பராகவும் உள்ளது .

Thursday, 11 June 2015

காக்கா முட்டை - ஒரு பார்வை அப்பாடா ! ஒருவழியாக தமிழின் அரியதொரு படத்தினை இன்று பார்த்தாயிற்று . சென்றவாரத்திலிருந்து செல்லலாம்  , செல்லலாம் என்று  முயன்றும் இன்றுதான் நிறைவேறியது . யாரைக்கேட்டாலும் படம் சூப்பர் ! தாருமாறு ! பாக்காட்டி விட்டா பாவம் ! என்று அடுக்கிக்கொண்டே போனதுகூட என் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் . ஒரு படத்தினை உயர்த்தி பேசுவதற்காக அடுத்தவர் ரசனையை மட்டப்படுத்துகிறார்களோ ? அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்பதற்காகாவே சென்றேன் . ஒரு முக்கிய விஷயம் , மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன் . அதை காக்கமுட்டை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . இருங்க! இருங்க ! திட்ரதுக்கு கமென்ட் பாக்ஸ நோக்கி ஓடாதிங்க . முழுசா படிச்சிட்டு போங்க .

பொதுவாக ஆஹா ! ஓஹோ என்று எல்லாரும் புகழும்போது நம்மிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும் . நாம் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படத்துடன் நம் மனது அப்படத்தை கம்பேர் செய்ய ஆரம்பிக்கும் . அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அந்த திரைப்படத்தை பார்க்கும்போது இம்மி பிசகினாலும் பிடிக்காமல் போய்விடும் . ஏனென்றால் நமக்குப்பிடித்தமான படத்தை விட இது என்ன பெரியது ? என்ற எண்ணத்துடன்தான் திரையரங்கில் அமருவோம் . அப்படம் சிறப்பானதாக இருந்தாலும் , நம் மனது அதை சிறப்பான படமாக ஏற்காது . நம் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் , இல்லல ! இது சுமார் தான் என்று வெளியே சொல்லவைத்துவிடும் . இப்போது நான் திரையரங்கில் அமர்ந்தபோது என் எதிர்பார்ப்பானது மஜித் மஜிதி , பொலன்ஸ்கி , அர்வனாஸ்கி , குரசேவா , சத்யஜித்ரே , பாலு மகேந்திரா  என்று எல்லாருடைய படங்களையும் மனதில் ஓட்டியபடியே அமர்ந்தேன் . ஆனால் படம்முடியும்போது தோன்றியது இதுதான் . இது எதிர்பார்ப்பினைத்தாண்டிய ஒரு கவிதை .

ஒவ்வொரு காட்சியும் ரசித்து , ரசித்து பார்த்தேன் . கவிதைகளின்மேல் இருந்த காதல் இப்போது என்னைத்தாண்டிச் சென்றமையால் , சமீபகாலங்களில் கவிதையின்மேல் ஈர்ப்பில்லாமல் போய்விட்டது . ஆனால் இப்படம் ஒரு அழகிய கவிதை . நான் பார்த்தேன் என்பதை விட மெய்மறந்து திரையுனுள் ஐக்கியமாகிவிட்டேன் . சென்னையில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் வாழ்க்கையில் பெரும்பகுதி வடசென்னையையும் , அங்கிருக்கும் குப்பத்தும்ககளையுமே பார்த்து வளர்ந்தேன் . ஆரம்பத்தில் , ஒருவித முரட்டுத்தனமான பேச்சு , மதிப்பு கொடுக்கத்தெரியாத ஆட்கள் , டீசன்ட் என்றால் என்னவென்று கேட்பதுபோல் பார்ப்பவர்களாக எனக்கு கண்ணுக்குத் தெரிந்தார்கள் . ஆனால் போகப்போக அவர்களின் பழக்கவழக்கங்கள் பிடிக்க ஆரம்பித்தது . அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக ஒன்றினைந்து பார்க்கமுடிந்தது . சென்னையின் குடிசைவாழ் மக்களின் பழக்கவழக்கங்களுக்கு புதிதானவர்களும் , ‘த்தா! மூடிட்டு போ’ என்று அம்மக்களில் ஒரு மூடனிடம் திட்டு வாங்கி ஆற்றாமையால் இருப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு படமாகத் தெரியும் .

படத்தின் கதை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினார்கள் ; பிட்சா சாப்பிட ஆசைப்படும் சிறுவர்கள் , அது இதுவென்று ஏதேதோ சொன்னார்கள் .  ஆனால் எனக்கு திரையில் தெரிந்தது , அம்மக்களின் வாழ்க்கையை , இரு சிறுவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து வடித்துக்கொடுத்துள்ளார் இயக்குநர் என்பதே  . இதுதான் அவர்களின் வாழ்க்கை ; இப்படியொரு சூழலில்தான் வாழ்கிறார்கள் ; அவர்களைப்பார்த்தாலே பொறுக்கி ,ரவுடி , மோசடித்தனமானவர்கள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது . ஆனால் ஏன் அப்படி என்று சிந்திக்க நமக்கு நேரமில்லை . நம்மள பத்தி சிந்திக்கவே நேரமில்லை , இதுல எங்க அடுத்தவன பத்தி சிந்திக்கிறது என்பது உங்களின் பதிலாக இருந்தால் , சமூகத்தைப்பற்றி நீங்கள் பேசுவதற்கு அருகதையற்றவர் என்பது அர்த்தம் ( நா சொல்லலைங்கோ ! ஒரு புக்குல போட்ருந்துச்சி  ) . அதன் வெளிப்பாடு தான் இத்திரைப்படம் .

ஏற்கனவே ஒரு பதிவில் , நம்மிடைய உலகளவில் பாராட்டுபெறும் அடிப்படையிலான திரைப்படங்கள் வராததற்கு காரணம் இரண்டு விஷயங்களை சொன்னேன் . இலக்கியப்புலமையின்மை , நம் சமூகத்தின்  உண்மைநிலையை அறிந்துகொள்ள முயலாத தன்மை . இதில் இரண்டாம்வகை முறியடிக்க எப்போதாவது , ஏதாவது ஒரு படம் வரும் . அது இப்போது காக்கமுட்டை எனும் பேரில் வந்துள்ளது .படத்தின் கதை என்று கூறினால் குடிசைவாழ்ம்ககளின் வாழ்க்கை என்றே கூறலாம் . அவர்களின் சிரிப்பு , துக்கம் , ஏக்கம் , கவலை , ஆதங்கம் , ஏமாற்றம் , அவமானம் , அழுகை , பாசம் , காதல் என அனைத்தையும் கலந்துகட்டி , ரசிக்கும்படியான திறமையான படத்தினைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன் . இப்படத்தில் பிண்ணனி இசையும் பாடல்களும் மிகச்சுமார் என்றே சொல்லுவேன் . ஜீ.வி.பிரகாஷ் கொஞ்சம் கவனம் செலுத்தியருக்கலாம் . சிறுவர்கள் விக்னேஷ் , ரமேஷ் இருவரும் நடித்தார்கள் என்றால் அது அபத்தம் . அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம் . இரண்டு ஆண்டு உழைப்பும் நேர்த்தியும் ஒவ்வொரு நொடியும் உணரமுடிந்தது . இதையடுத்து குறிப்பிட்டு இந்த நடிகர் சுறப்பாக செய்தார் , அவர் கலக்கினார் என்று யாரையும் குறிப்பிடமுடியாது . ஏனெனில் அனைவரும் மிகச்சிறப்பாக  நடித்துள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும் .

ஒருசில படங்களை , தியேட்டரில் மிஸ் செதுவிட்டோமே என்று காலாகாலத்துக்கும் ஏங்கவைக்கும் . அம்மாதிரி நிறைய படங்களை மிஸ் செய்துவிட்டிருக்கிறேன் . லேப்டாப்பிலோ , டி.வியிலோ 100 முறை பார்த்தாலும் , நமக்கு மிஸ் செய்த உணர்வு தான் மிஞ்சும் . அதேபோல் இப்படமும் . மொத்ததில் சினிமாவை நேசிப்பவர் நீங்களென்றால் கண்டிப்பாகவும் , ரசிகர் என்றால் தாராளமாகவும் பார்க்கவேண்டிய திரைப்படம் . ஒருவேளை இப்போது மிஸ்செய்துவிட்டு பின்னாளில் பார்க்கும்போது , அடச்சே விட்டுட்டோமே என்று என்மாதிரியே புலம்பிக்கொண்டிருக்கவேண்டாம் .

Friday, 5 June 2015

12 ANGRY MAN - சினிமா விமர்சனம்ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை , அதன் கதை முதலில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் ; அடுத்து அதன் திரைக்கதை பரபரப்பாகவும் , புதிதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் . மூன்றாவது , அதிமுக்கியமானது , அப்படத்தின் இயக்குநரின் பெயரை படம் முடிந்தாலும் தெரிந்துகொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்குநரின் திறமை முழுதாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் , இந்த திரைப்படம் மேற்கூறிய விதிகளில் கடைசிவிதியைத் தவிற மற்ற எதுவும் பொருந்தவே பொருந்தாது . பெரிய கதை ஒன்றுமில்லை ; பரபரப்பான திரைக்கதை கிடையாது , பெரிய டெக்னீஷியன்கள் கிடையாது , ஆனால் இத்திரைப்படம் நம்மை பார்வையளாராக திரைக்கு வெளியில் இருக்கவைக்காமல் , நம்மையும் ஒரு கேரக்டராக மாத்திவிடும் . காரணம் , விவாதம் .

ஒரு இயக்குநரின் திரைப்படங்கள் மொத்தமும் சேர்ந்து 44 ஆஸ்காருக்கு வெவ்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? அக்கால சூப்பர்ஸ்டார்கள் மர்லன் ப்ரான்டோ , சீன் கானரி , ரிச்சர்ட் சீர் , பால் ந்யூமேன் , மைக்கேல் கெய்ன் போன்றோர்களெல்லாம் விரும்பி விரும்பி நடிக்க நினைத்த இயக்குநரைப்பற்றி தெரியுமா? 1957 –ல் துவங்கிய திரைப்பயணத்தில் 2007 வரை ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம் திரைத்துறையில் நீடித்து , நிழைத்து சாதனை புரிந்த இயக்குநரைப்பற்றி தெரியுமா ? வேறு யார் ? இப்படத்தின் இயக்குநர் சிட்னி லும்மேட் தான் . 

இப்படிப்பட்ட இயக்குநரைப்பற்றி தமிழில்சரிவர யாரும் எழுதவில்லை என்ற ஆதங்கம் இன்றும் உள்ளது . இவரின் NETWORK திரைப்படம் 10 ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதினை வென்றது .  ஃபோர்ட் கொப்பல்லோ , ஸ்கார்சேசே  , ஹிட்ஜ்ஹாக் , குப்ரிக் , ஸ்பில்பெர்க் எனக்கொண்டாடிக்கொண்டிருக்கும் பல இயக்குநர்களுக்கு மத்தியில் இவரையும் கண்டிப்பாக கொண்டாட வேண்டியது அவசியம் . ஆனால் ஏனோ தமிழ் பதிவர் சமூகம் இவரை சரிவர கவனிக்கவில்லை என நினைக்கிறேன் .

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த பின் தன் 15 வது வயதில் ஒரு திரைப்படத்தில் டீனேஜ் மாணவனாக நடித்தார் . இரண்டாம் உலகப்போரில் கட்டாய பணிபுரிந்தபின் , இந்தியாவில் ரேடார் ஸ்டேசன் ரிப்பேர்மேனாக பணியில் இருந்தார் . பின் டெலிவிசன்களை நோக்கி தன் பார்வையை திருப்பிய லும்மேட்  1950 –லிருந்து சின்னத்திரை இயக்குநராக ஜொலிக்க ஆரம்பித்தார் . 1957 ல் தன் நண்பரும் திரைக்கதை ஆசிரியருமான ரெஜினால்ட் ரோஸின் கதை , திரைக்கதையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . ஏற்கனவே ஹென்றி ஃபோன்டாவைச் சந்தித்து தன் திரைக்கதையைக் கொடுத்து புக் செய்த பின் , இயக்குவதற்கு ஆள் தேடியபோது மாட்டியவர்தான் லும்மேட் . தயாரிப்பாளர் யாருமில்லாமல் போக ரோசும் , ஹீரோ ஹென்றியும் இணைந்து படத்தினைத் தயாரித்தார்கள் .

படத்தின் கதை ? ஏற்கனவே பல விமர்சனங்களில் கதையை நீங்கள் படித்திருக்கலாம் . படிக்காதவர்கள் தொடரவும் . ஏனென்றால் எல்லோரும் கதை என்று எதை எழுதினார்களோ அதையே தான் நானும் எழுதப்போகிறேன் .  அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில்  ஒரு கொலைவழக்கு சம்பந்தமான விசாரனை நடைபெறுகிறது . அதில் சேரியைச் சார்ந்த ஒரு 18 வயது பையன் மேல் தந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுகிறது . அவனுக்கு ஆதரவாக வாதாட அரசு நிர்ணயித்த வழக்குரைஞர் எதுவும் வாதாடவில்லை . குற்றத்தின் சாரல் அந்த பையனை நோக்கியே வீசுகிறது . நிற்க , இங்கு குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் குற்றம் நிருபணமானால் உடனே நீதிபதி அடுத்தவாரம் தீர்ப்பு என்று தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது . வழக்குக்கு சம்பந்தமில்லாத அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களில் 12 பேருக்கு கடிதம்  அனுப்பி , அவர்களை கோர்ட் விசாரணையை  மேற்பார்வையிடச் செய்து , அக்குற்றம் சுமத்தப்பட்டவன் தவறு செய்திருப்பானா ? இல்லையா ? என 12 பேரும் கூடி விவாதித்து ஒருமித்தமாக இறுதி அறிவிப்பை நீதிபதியிடம் அனுப்பியபின்னர் தான் நீதிபதி தீர்ப்பளிக்க முடியும் . இச்சட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளதா எனத் தெரியவில்லை .ஒருவேளை இருக்கும் பட்சத்தில நம்  அரசியலமைப்பு வரைவுக்குழு இப்படி ஒரு அட்டகாசமான சட்டத்தை கவ்விக்கொண்டு வராதது கண்டிக்கத்தக்கது . அடிப்படை உரிமைகள் , நீதிமன்றம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை இந்தியாவிற்கு நடைமுறைப்படுத்திய போது  இதனையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் .

சரி , 1949 விஷயத்தை ஓரங்கட்டிவிட்டு 1957 –க்கு வருவோம் . புரியலையா ? இப்படம் வெளியான ஆண்டு 1957 . இப்போது மேலே கூறனேன் அல்லவா ? நீதிமன்றம் , குற்றவாளி , 12 பேர் , வழக்கு விசாரனை என்றெல்லாம் , அவையனைத்தும் மூன்று நிமிடங்களுல் படத்தில் காட்டப்பட்டு விடுகின்றது . மீதி ? எல்லாம் அந்த பன்னிருவரின் ஆவேசமான , மதிகூர்ந்த விவாதங்கள் தான் .