Friday, 12 June 2015

JURRASIC WORLD - சினிமா விமர்சனம்இப்படம் நான் சென்று பார்க்க முதல்காரணம் எனக்குள் ஒளிந்துகொண்டிருந்த 11 வயது சிறுவனின் நினைவலைகள் தான் .  சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படம் ஜுராசிக் பார்க் . டைனோசர் என்ற பெயரை மட்டுமே அப்போது கேள்விபட்டிருக்கிறேன் . அப்போதெல்லாம் அதன் புகைப்படத்தைப் பார்க்ககூட வாய்ப்பில்லை . ஏதாவது பேப்பரில் டைனோசரின் எலும்பு கண்டுபிடிப்பு என்ற செய்தியில் நாய் நக்கிவைத்த ஆட்டு எலும்புபோல் ஏதோவொன்றை போட்டிருப்பார்கள் . அக்கால ( 15 வருடங்களுக்கு முன் ) கேபுள் கனெக்சன்களிலும் சன் டிவி , ராஜ் டிவியைத்தாண்டி வேறு எந்த சேனலும் எங்கள் ஊரில் எடுக்காது . அப்போதுதான் தமிழ்நாட்டில் திருட்டி விசிடி கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது . அப்போதைய காலகட்டத்தில் எந்த புதுப்படம் வந்தாலும் கேபுள் டிவியிலும் உள்ளூர் சேனல்களிலும் விளம்பரஇடைவெளியின்றி போட்டுவிட ஆரம்பித்துவிடுவார்கள் . ஒரு சிலநேரங்களில் படம் ரிலிசாவதற்குமுன் கேபுளில் போட்ட கூத்துகளும் அறங்கேறியுள்ளது . அப்போதைய கட்டத்தில் தான் நான் முதல் ஹாலிவுட் திரைபடத்தைப் பார்த்தேன் (ஆர்மர் ஆஃப் காட் போன்ற பழைய ஜாக்கி திரைபடங்கள் ஹாலிவுட்டில் வராது என நினைக்கிறேன் ) . முதல் படமே படுபயங்கர பேய் படம் . ஆமாம் , அக்காலகட்டத்தில் சிலரின் உயிரை பயத்தால் நடுநடுங்கி சாகவைத்த திரைப்படம் அது ; வேறென்ன ? ஈவில் டெட் தான்   . பார்த்து என் தம்பிகளுடன் சேர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலில் விழுந்ததெல்லாம் தனிக்கதை . ஆனால் அதன்பின் ஹாலிவுட் படங்கள் எல்லாம் சர்வசாதாரணமாக பார்க்க ஆரம்பித்துவிட்டேன் . ஒரு கட்டத்தில் ஆங்கிலப்படங்களின் மீது மோகம் குறைய ஆரம்பித்தது . இன்னும் சொல்லப்போனால் வெறுத்தே விட்டேன் . முக்கிய காரணம் – எனக்கு அப்போது இங்க்லிஷ் என்பதைத்தாண்டி வேறெந்த ஆங்கில வார்த்தையும் தெரியாது . Oh GOD Beutyful மனப்பாட பாடலைக்கூட தமிழில் எழுதிதான் மனப்பாடம் செய்தேன் . 


அப்படியொருசூழலில் தான் ஒரு நாள் இத்திரைப்படத்தை சேனலில் ( அப்போலாம் திருட்டு விசிடி போடரதுக்குனே ஒரு சேனல் ஒதுக்கி வச்சிருந்தாங்க) பார்த்தேன் . அன்று பார்த்த அதே உணர்வு , மூன்றுநாட்களுக்கு முன்பும் நான் உணர்ந்தேன் . காரணம் ஸ்பில்பெர்க் எனும் திரைவித்தகர் . புத்திசுவாதீனமுள்ள 80 வயது கிழவரும் ஸ்பில்பெர்க்கின் கமர்ஷியல் டைப்  திரைப்படங்களைப் பார்க்கும்போது  தன் 8 வயது நினைவுகளில் சிக்கிக்கொள்வார் என்பதில் துளிசந்தேகமுமில்லை . சரி ,விடுங்க , முதல்ல பார்த்த கதைய சொல்லிமுடிச்சிடறேன் . படத்தினைப் பார்க்கும்போது தோன்றியது இதுதான் ; நான் நாய்க்கம்பட்டியில் இல்லை ; டைனோசர்கள் வசிக்கும் ஜுராசிக் பார்க்கில் , கேரக்டர்களில் ஒருவனாக 1.40 மணிநேரம் வாழ்ந்தேன் . முதல் 20 நிமிடம் டைனோசரைக் காட்டமாட்டார்கள்  . தாவர உண்ணி டைனோசர் ஒன்றினை முதன்முதலில் காட்டும்போது ஹீரோவும் ஹீரோயினும் வாயைப்பிழந்து பார்ப்பார்கள் . அப்போது நானும் அதேமாதிரிதான் இருந்தேன் . அதன்பின் இரண்டாம் பாகம் சுமாராகவும் , மூன்றாம்பாகம் படுசுமாராகவும் இருந்தது தனிக்கதை . ஆனால் , முதல் மூன்றுபாகங்களில் முதல்பாகம் எட்டிய உயரத்தில் பாதிகூட மற்ற இருபாகங்களாலும் எட்ட இயலவில்லை . அதன்பின் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது ஜுராசிக் பார்க்கின் முதல் பாகத்தை பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தேன்  .

AGE OF ULTRON திரைப்படத்திற்கு போகும்போது தான் மீண்டும் ஜுராசிக் பார்க் வரப்போகிறது என்று ட்ரைலர் மூலம் அறிந்துகொண்டேன் . என்ன அதிசயம் ! என்னை அந்த ட்ரைலர் பரவசப்படுத்தவில்லை . மாறாக வேற வேலையே இல்லையா இவனுங்களுக்கு என்று திட்டத்தான் தோன்றியது . யுனிவர்சலிடம் FAST சீரிசைத் தவிர வேறுஉ வெற்றிகரமான தொடர்திரைப்படங்கள் இப்போது கையிலில்லை என்பதே இப்படத்திற்கு காரணம் என்று என் உள்மனம் கூறியது . படத்தைப்பார்க்க கூடாது என்று அப்போதே முடிவு செய்தேன் . நம் மனதில் என்றென்றும் அழியா வகையில் இருக்கும் ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுத்து , முதல்பாகத்தையே நம் மனதில் இருந்து தூக்கியெறியும் அளவிற்கு அது சூரமொக்கையாக இருந்ததற்கு பல சாட்சிகள் ஹாலிவுட்டில் கிடக்கிறது . ஜுராசிக் பார்க்கும் அதே வகை தான் . கிட்டத்தட்ட  இரண்டாம் பாகத்தோடு சங்கு ஊதி மூடிவிடுவதை விட்டு விட்டு பேரைக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் தான் இந்த வெறுப்பிற்கு காரணம் .

ஆனால் , இரு நாட்களுக்கு முன்னால் நெட்டில் தேடியபோதுதான் சில விஷயங்களை அறிந்துகொண்டேன் . ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு மேலாக இத்திரைப்படம் உருவாக்க பல்வேறு வேலைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பலநூறுமுறை மாற்றம் செய்யப்பட்டு வரப்போகதாகவும் தகவல் வந்தது . அப்போதே புரிந்துவிட்டது . இது ஸ்பில்பெர்க் இயக்கவில்லையெனினும் , அவரின் மேற்பார்வையில் புழியப்பட்டு வரப்போவதால் BACK TO THE FUTURE போல் என்டர்டெய்ன்மென்ட் கேரன்டி ; ஆனால் , முதல் பாகத்தை மிஞ்சிவிடமுடியாது என்ற உறுதி மனதில் இருந்தது  .

படத்தின் கதை என்னவெனில் , வழக்கம்போல பார்க் திறக்கப்படுகிறது ; வேறொருவர் நடத்துகிறார்  ; அங்கு பல புதிய வகை டைனோசர்கள் உள்ளன ; வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக மரபணுமாற்றம் செய்யப்பட்ட புதுப்புதுவகையான டைனோசர்கள் உருவாக்கப்படுகின்றன . அப்படி ஒரு படுபயங்கர டைனோசரை உருவாக்குகிறார்கள் . சாதாரணமாகவே டைனோசர்கள் புத்திசாலிகள் ; இந்த புதிய டைனோசரோ படுபயங்கர புத்திசாலியாக இருக்கும் . தப்பிக்கிறது ; தாக்குகிறது . 

ஹாலிவுட்டில் ஒரு விதி உள்ளது . அழிவுசார்ந்த படங்களில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தாலும் முக்கிய கேரக்டர்களாக இருக்கும் குழந்தைகள் சாகமாட்டார்கள் . அதேபோல் அந்த பார்க்கின் இன்சார்ஜ் ஆக இருக்கும் கிளாராவின் அக்கா பையன்கள் இருவர் வருகிறார்கள் ; பார்க்கில் டைனோசரிடம் மாட்டிக்கொள்கிறார்கள் ; அவர்களைக்காப்பாற்ற கிளாராவும் அவளுடைய காதலன் ஓவெனும் கிளம்புகிறார்கள் .

இந்த ஓவென் , என்னவேலை செய்கிறார் என்றால் முதல்பாகத்தில் வரும் புத்திசாலி டைனோசர்களான வெலசிராப்டர்களை பழக்குவது . ஆனால் அந்த டைனோசர்களை வைத்து , ராணுவத்திற்கு பயன்படுத்தலாம் என ஹாஸ்கின்ஸ் என்பவர் வற்புறுத்திக்கொண்டிருக்கிறார் .

இப்போது , பார்க்கில் 20000 மக்கள் உள்ளார்கள் . டைனோசர் தப்பிக்கிறது . தப்பிக்கும் டைனோசர் வெளியுலகையே பார்க்காமல் வளர்ந்ததால் , பயத்தில் கொலை செய்ய ஆரம்பித்து , போகப்போக கொலைசெய்வதை ஹாபியாக வைத்துக்கொண்டு திரிகிறது . காட்டில் மாட்டிக்கொள்ளும் இரு சிறுவர்கள் , அவர்களைத்தேடிவரும் ஹீரோ, ஹீரோயின் ; காப்பாற்றப் போகும் முதலாளி மண்டையைப் போட்டுவிடுவது ; அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக ஏதேதோ நடக்கிறது .

நான் துளியும் எதிர்பார்க்காமல் சென்றபோது இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை . படம் அப்படியே ஸ்பில்பெர்க்கே இயக்கியது போலிருந்தது . முதல்பாகத்தைப் பார்த்தபோது தோன்றிய அதே உணர்வு . படம் முழுக்க த்ரில்லராகவும் ஆங்காங்கே காமெடி வசனங்கள் , பெற்றோர்களின் டைவர்ஸ் பற்றிய குழந்தைகளின்  பரிதவிப்பு , தீ வைப்பவனுக்கு முடிவு தீயால் தான்  என பல இடங்களில் ஸ்பில்பெர்க்கின் தாக்கத்தை உணரமுடிந்தது . அதிலும் இக்கட்டானதொரு தருணத்தில் , கூட வேலைசெய்யும் பெண்ணிடம் முத்தம் கொடுக்கும் அரதப்பழசான ஹாலிவுட் மசாலாவை அப்படியே ஓட்டுவதும் , இப்போ பாருங்கடா என் சிங்கக்குட்டிகள என  பில்டப்புடன் கிளம்பி  , அந்த பெரிய டைனோசருடன் சேர்ந்து அவைகள் திரும்பி பார்ப்பதும் , அதிபுத்திசாலியான வில்லன் டைனோசரை உருவாக்கியிருப்பதும் , அதை அழிக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் என அத்தனையும் அட்டகாசம் . முதல்பாகத்தில் வரும் அதே இசையை    (ADVENTURE – MISTERY MUSIC ) இதிலும் கேட்கும்போது உடல் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது . பல காட்சிகளில் நகம் கடித்துக்கொண்டே பார்க்கவேண்டியதாயிருந்தது . 

3D , சி.ஜி , ஒளிப்பதிவு , எடிட்டிங்  , கலை என அனைத்தும் அட்டகாசம் . பிரம்மாண்டமாக காட்டுவதாக ஆரம்பத்தில் பார்க்கைக் காட்டும்போது மட்டும் அட்டைப்பெட்டியில் அடுக்கிவைத்த  செட் போன்ற உணர்வு . படத்தில் குறையே இல்லையா எனக் கேட்கலாம் . எனக்கு குறைகளைக் கவனிக்க நேரமில்லை ; தமிழில் வசனங்கள் சூப்பர் . மிகமுக்கியமாக மடத்தின் முதல் 2 நிமிடங்களை மிஸ் செய்துவிடாதீர்கள் . பெரியதாக எதுவுமில்லையெனினும் , அக்காட்சி உங்களை சிலிர்க்கவைக்கும் என்பதில் துளிசந்தேகமுமில்லை .

பல இடங்களில் வில்லன் டைனோசர் கொலை செய்திருந்தாலும் , அதையெல்லாம் ஸ்பில்பெர்குக்கே உரியவகையில் காட்சிப்படுத்தியிருப்பது அசத்தல் . குழந்தைகளுடனும் தாராளமாக சென்று பார்க்கலாம் . ஜுராசிக் பார்க்கின் ரசிகர்கள் தவறவிட்டுவிடாதிர்கள் ; மற்றவர்களும் கண்டிப்பாக என்ஜாய் செய்யும் வண்ணம் சிறப்பாக உள்ளது . முதல் பாகத்திற்கு சரிசமமாகவும் , லேட்டஸ்டாக ரிலிசான டைனோசர் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது சூப்பராகவும் உள்ளது .
உங்கள் விருப்பம்

6 comments:

 1. இங்கு வரவில்லை... வந்தவுடன் செல்ல வேண்டும்...

  ReplyDelete
 2. பார்க்கிறேன்
  தம 2

  ReplyDelete
 3. பிரியத்திற்குரிய மெக்
  வழக்கம்போல முத்திரை பதிக்கும் விமர்சனம்.
  வாழ்த்துக்கள்.
  தம +

  ReplyDelete
 4. ஜுராசிக் பார்க்கின் தீவிர ரசிகனான எனக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது.. :)

  ReplyDelete
 5. இன்னும் பாக்கல இனிமேதான் போய் பாக்கணும்...

  ReplyDelete