Thursday, 11 June 2015

காக்கா முட்டை - ஒரு பார்வை அப்பாடா ! ஒருவழியாக தமிழின் அரியதொரு படத்தினை இன்று பார்த்தாயிற்று . சென்றவாரத்திலிருந்து செல்லலாம்  , செல்லலாம் என்று  முயன்றும் இன்றுதான் நிறைவேறியது . யாரைக்கேட்டாலும் படம் சூப்பர் ! தாருமாறு ! பாக்காட்டி விட்டா பாவம் ! என்று அடுக்கிக்கொண்டே போனதுகூட என் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் . ஒரு படத்தினை உயர்த்தி பேசுவதற்காக அடுத்தவர் ரசனையை மட்டப்படுத்துகிறார்களோ ? அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்பதற்காகாவே சென்றேன் . ஒரு முக்கிய விஷயம் , மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன் . அதை காக்கமுட்டை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . இருங்க! இருங்க ! திட்ரதுக்கு கமென்ட் பாக்ஸ நோக்கி ஓடாதிங்க . முழுசா படிச்சிட்டு போங்க .

பொதுவாக ஆஹா ! ஓஹோ என்று எல்லாரும் புகழும்போது நம்மிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும் . நாம் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படத்துடன் நம் மனது அப்படத்தை கம்பேர் செய்ய ஆரம்பிக்கும் . அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அந்த திரைப்படத்தை பார்க்கும்போது இம்மி பிசகினாலும் பிடிக்காமல் போய்விடும் . ஏனென்றால் நமக்குப்பிடித்தமான படத்தை விட இது என்ன பெரியது ? என்ற எண்ணத்துடன்தான் திரையரங்கில் அமருவோம் . அப்படம் சிறப்பானதாக இருந்தாலும் , நம் மனது அதை சிறப்பான படமாக ஏற்காது . நம் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் , இல்லல ! இது சுமார் தான் என்று வெளியே சொல்லவைத்துவிடும் . இப்போது நான் திரையரங்கில் அமர்ந்தபோது என் எதிர்பார்ப்பானது மஜித் மஜிதி , பொலன்ஸ்கி , அர்வனாஸ்கி , குரசேவா , சத்யஜித்ரே , பாலு மகேந்திரா  என்று எல்லாருடைய படங்களையும் மனதில் ஓட்டியபடியே அமர்ந்தேன் . ஆனால் படம்முடியும்போது தோன்றியது இதுதான் . இது எதிர்பார்ப்பினைத்தாண்டிய ஒரு கவிதை .

ஒவ்வொரு காட்சியும் ரசித்து , ரசித்து பார்த்தேன் . கவிதைகளின்மேல் இருந்த காதல் இப்போது என்னைத்தாண்டிச் சென்றமையால் , சமீபகாலங்களில் கவிதையின்மேல் ஈர்ப்பில்லாமல் போய்விட்டது . ஆனால் இப்படம் ஒரு அழகிய கவிதை . நான் பார்த்தேன் என்பதை விட மெய்மறந்து திரையுனுள் ஐக்கியமாகிவிட்டேன் . சென்னையில் ஏறத்தாழ 5 ஆண்டுகள் வாழ்க்கையில் பெரும்பகுதி வடசென்னையையும் , அங்கிருக்கும் குப்பத்தும்ககளையுமே பார்த்து வளர்ந்தேன் . ஆரம்பத்தில் , ஒருவித முரட்டுத்தனமான பேச்சு , மதிப்பு கொடுக்கத்தெரியாத ஆட்கள் , டீசன்ட் என்றால் என்னவென்று கேட்பதுபோல் பார்ப்பவர்களாக எனக்கு கண்ணுக்குத் தெரிந்தார்கள் . ஆனால் போகப்போக அவர்களின் பழக்கவழக்கங்கள் பிடிக்க ஆரம்பித்தது . அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக ஒன்றினைந்து பார்க்கமுடிந்தது . சென்னையின் குடிசைவாழ் மக்களின் பழக்கவழக்கங்களுக்கு புதிதானவர்களும் , ‘த்தா! மூடிட்டு போ’ என்று அம்மக்களில் ஒரு மூடனிடம் திட்டு வாங்கி ஆற்றாமையால் இருப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு படமாகத் தெரியும் .

படத்தின் கதை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினார்கள் ; பிட்சா சாப்பிட ஆசைப்படும் சிறுவர்கள் , அது இதுவென்று ஏதேதோ சொன்னார்கள் .  ஆனால் எனக்கு திரையில் தெரிந்தது , அம்மக்களின் வாழ்க்கையை , இரு சிறுவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து வடித்துக்கொடுத்துள்ளார் இயக்குநர் என்பதே  . இதுதான் அவர்களின் வாழ்க்கை ; இப்படியொரு சூழலில்தான் வாழ்கிறார்கள் ; அவர்களைப்பார்த்தாலே பொறுக்கி ,ரவுடி , மோசடித்தனமானவர்கள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது . ஆனால் ஏன் அப்படி என்று சிந்திக்க நமக்கு நேரமில்லை . நம்மள பத்தி சிந்திக்கவே நேரமில்லை , இதுல எங்க அடுத்தவன பத்தி சிந்திக்கிறது என்பது உங்களின் பதிலாக இருந்தால் , சமூகத்தைப்பற்றி நீங்கள் பேசுவதற்கு அருகதையற்றவர் என்பது அர்த்தம் ( நா சொல்லலைங்கோ ! ஒரு புக்குல போட்ருந்துச்சி  ) . அதன் வெளிப்பாடு தான் இத்திரைப்படம் .

ஏற்கனவே ஒரு பதிவில் , நம்மிடைய உலகளவில் பாராட்டுபெறும் அடிப்படையிலான திரைப்படங்கள் வராததற்கு காரணம் இரண்டு விஷயங்களை சொன்னேன் . இலக்கியப்புலமையின்மை , நம் சமூகத்தின்  உண்மைநிலையை அறிந்துகொள்ள முயலாத தன்மை . இதில் இரண்டாம்வகை முறியடிக்க எப்போதாவது , ஏதாவது ஒரு படம் வரும் . அது இப்போது காக்கமுட்டை எனும் பேரில் வந்துள்ளது .படத்தின் கதை என்று கூறினால் குடிசைவாழ்ம்ககளின் வாழ்க்கை என்றே கூறலாம் . அவர்களின் சிரிப்பு , துக்கம் , ஏக்கம் , கவலை , ஆதங்கம் , ஏமாற்றம் , அவமானம் , அழுகை , பாசம் , காதல் என அனைத்தையும் கலந்துகட்டி , ரசிக்கும்படியான திறமையான படத்தினைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன் . இப்படத்தில் பிண்ணனி இசையும் பாடல்களும் மிகச்சுமார் என்றே சொல்லுவேன் . ஜீ.வி.பிரகாஷ் கொஞ்சம் கவனம் செலுத்தியருக்கலாம் . சிறுவர்கள் விக்னேஷ் , ரமேஷ் இருவரும் நடித்தார்கள் என்றால் அது அபத்தம் . அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம் . இரண்டு ஆண்டு உழைப்பும் நேர்த்தியும் ஒவ்வொரு நொடியும் உணரமுடிந்தது . இதையடுத்து குறிப்பிட்டு இந்த நடிகர் சுறப்பாக செய்தார் , அவர் கலக்கினார் என்று யாரையும் குறிப்பிடமுடியாது . ஏனெனில் அனைவரும் மிகச்சிறப்பாக  நடித்துள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும் .

ஒருசில படங்களை , தியேட்டரில் மிஸ் செதுவிட்டோமே என்று காலாகாலத்துக்கும் ஏங்கவைக்கும் . அம்மாதிரி நிறைய படங்களை மிஸ் செய்துவிட்டிருக்கிறேன் . லேப்டாப்பிலோ , டி.வியிலோ 100 முறை பார்த்தாலும் , நமக்கு மிஸ் செய்த உணர்வு தான் மிஞ்சும் . அதேபோல் இப்படமும் . மொத்ததில் சினிமாவை நேசிப்பவர் நீங்களென்றால் கண்டிப்பாகவும் , ரசிகர் என்றால் தாராளமாகவும் பார்க்கவேண்டிய திரைப்படம் . ஒருவேளை இப்போது மிஸ்செய்துவிட்டு பின்னாளில் பார்க்கும்போது , அடச்சே விட்டுட்டோமே என்று என்மாதிரியே புலம்பிக்கொண்டிருக்கவேண்டாம் .
உங்கள் விருப்பம்

5 comments:

 1. நல்ல முட்டை என்றால் சரிதான்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பார்த்துதான் ஆகணும் போலிருக்கே :)

  ReplyDelete
 3. I am waiting to see may be on Tuesday eve..
  nice review
  TM+

  ReplyDelete
 4. பார்த்து ரசித்து விட்டேன்...

  ReplyDelete
 5. கண்டிப்பாக பார்கத்தான் வேணும்போல..

  ReplyDelete