Saturday, 8 November 2014

பயணம் @ டைம்மெஷின் - 9

கனிவும் காதலும்
தொடர்புடைய இடுகைகள்

இடம் – தஞ்சாவூர்

காலம் – கி.மு. 35

தமிழகம் அக்காலத்தில் பனிரெண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது . அந்நாடுகளை வைத்தே சேர , சோழ , பாண்டியர்கள் மற்றும் வேளிர் எனும் குறுநிலமன்னர்கள் ஆகியோர் தங்களின் ஆட்சியை செலுத்தினர் . சந்துருவும் , பாலாவும் அந்நாளில் புனல் நாடு என்றழைக்கப்பட்ட தஞ்சை நகரின் ஓரத்தில் இருந்த அவ்வனத்திலிருந்து வெளிப்பட்டனர் . 175 ஆண்டுகளில் சிறிது நேரத்திற்குமுன் பார்த்திருந்த தஞ்சைக்கும் , தற்போது அவர்கள் இருவரும் பார்க்கும் தஞ்சைக்கும் மாபெரும் மாற்றங்கள் உருவாகியிருந்தன . இனி நேரே சென்று கல்லணையைப்பார்த்து அங்கு வேலைசெய்பவர்களுடன் சேர்ந்து வேலையாள் வேடமிட்டு , சுரங்கம் தோண்டி , பெட்ரோலை கைப்பற்றுவது மட்டும்தான் தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் . பெட்ரோலைக்கண்டுபிடிப்பதைக்காட்டிலும் , மேலும் தங்களின் வாழ்நாளில் நடக்கப்போகும் ஆச்சரியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமே மிகுதியாயிருந்தது . சிறுவயதில் வரலாற்றுப்பாடங்களில் படித்த அத்தனையும் நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு , அவர்களை ஒரு புதுஅனுபவத்திற்கு உட்படுத்தியது எனலாம் . கையில் இருக்கும் தங்கக்காசுகளை வைத்து முதலில் சாப்பிடவேண்டும் பின் இரண்டு வேட்டி சட்டைகள் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்தனர் . மெல்ல தஞ்சை நகரை நோக்கி தங்களின்  பயணத்தை ஆரம்பித்தனர் . அந்நகரை அடையும்போதுதான் அதைக்கவனித்தனர் . சென்றநூற்றாண்டு வரை திறந்தவெளி மைதானமாயிருந்த நகரம் , ஒரு மாபெரும் கோட்டைக்குள் மிகுந்த சத்தத்துடன் உறங்கிக்கொண்டிருப்பது விளங்கியது . ஒரு மாபெரும் மதில் சுவர் ஒற்றைப்பனமர உயரத்தில் கருங்கற்கலாலும் , அதைச்சுற்றியபடியே ஒரு மீட்டர் அளவிற்கு ஒரு பெரிய அகழியும் வெட்டப்பட்டு இருந்தது . அந்த அகழியில் நன்னீர்நில முதலைகள் தங்களின் அகோரப்பசிக்கு யாரேனும் சிக்கமாட்டார்களா ? என்ற எண்ணத்தில் அவ்வகழியை , மரபாலத்தின்வழி கடந்துபோகும் மனிதர்களை உற்றுநோக்கிக்கொண்டிருந்தன . செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் கருங்கற்கல் கோட்டையைக்குடைந்து செய்தார்போல் ஒரு மாபெரும் தேக்குமரக்கதவும் , அதைப்பாதுகாக்க கூரிய வேலேந்திய இருவலுபுஜ வீரர்களும் இருந்தனர் . தஞ்சை பாதுகாப்பிற்காக , கோட்டை மற்றும் கொத்தளங்கள் புதிதாக அந்நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருந்தன . அதற்கான காரணம் சேரனும் பாண்டியர்களும்தான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை . அம்மதில் சுவர் திறந்திருந்தது . அச்சுவரை உற்றுநோக்கும்போது  , உள்ளே மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது . மதியநேரமாதலால் , கோட்டையைத்தாண்டியிருக்கும் வயல்களில் வேலைசெய்ய ஆடவரும் மகளிரும் சென்றிருக்கலாம் . தைத்திருவிழா முடிந்து இருமாதங்கள் ஆகிவிட்டதால் அடுத்த விழாவுக்குத்தேவையான விளைச்சலை , விளைவிக்கச்சென்றிருந்தனர் . ஆங்காங்கே நாளங்காடிகள்  ஓரிரு வாடிக்கையாளர்களைக்கொண்டு தங்களின் வியாபாரத்தை ஒப்பேற்றிக்கொண்டிருந்தன .  மாடமாளிகைகள் திறந்தவண்ணம் இருப்பினும் , மகளிரின் கொலுசுசத்தம் இல்லாமல் அமைதியாயிருந்தன . ஒரு நிமிடம் பகலா இரவா என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் நகரே அமைதியாயிருந்தது . காவலர்களின் சீருடைகளில் சில மாற்றங்களும் , காணப்பட்ட சில மக்களின் உடை மற்றும் பாவனைகள் புதுவகையாகவும் தென்பட்டன . எல்லாம் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம் . ஒருவகையாக மதிலைத்தாண்டி பயந்தவண்ணம் நுழைந்த இருவரையும் எந்தகாவலரும் தடுக்கவில்லை .  நகர்வலப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காவலன் மாத்திரம் இவர்களிருவரையும் முறைத்துப்பார்த்த வண்ணம் சென்றான் . மற்றபடி பிரச்சனை எதுவும் வரவில்லை . நகரினுள் நுழைந்ததும் , ஒருவீட்டின் திண்ணையின்மேல் கால்போட்டு படுத்திருந்த ஒரு வயதான ஆளைப்பார்த்து , சாப்பிட எங்கு செல்லவேண்டும் என்று கேட்டார்கள் .  அவன் கூறிய விலாசத்தை நோக்கி செல்லும்போது எதிரில் ஒரு புஜபலபராக்கிரமசாலியைப்போன்ற ஒரு வாலிபன் தென்பட்டான் . அவனது கூர்மையான பார்வை , இவர்களிருவரையும் பார்த்த வண்ணம் இருந்தது . அதைக்கண்ட இருவருக்கும் ஒருவித பயம் பற்றிக்கொண்டது .

‘அவன பாத்தியா பாலா ?’

‘ம் . நானும் அவன தான் பார்க்கறேன் . நம்மளயே ஒரு மாதிரியா பாக்கறான் மச்சி .’

‘யாரா இருக்கும் ?’

‘எனக்கு மட்டும் எப்டி மச்சி தெரியும் ?’

பாலா சொல்வதும் வாஸ்தவம்தானே . அவனும் சந்துருவுடன் தானே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறான் . எதிரில் வரு அவ்விளைஞன் நெருங்க நெருங்க அவனது பார்வை ஒரு வித ஏக்கங்கலந்த பார்வையாய் மாறி எந்நேரமும் தன் சக்தியை இழந்துவிடும் வண்ணம் இருந்தது . அவர்கள்முன் வந்த அவ்விளைஞன் திடிரென மயங்கிவிழுந்தான் . அவனது அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருந்த பாலாவும் சந்துருவும் அவனைக்குடிகாரென்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்கள் .

‘டேய் சந்துரு . என்னாச்சுனு பாக்கலாம் வாடா ’

‘வேணாம் மச்சி . நமக்கெதுக்கு வம்புடா ? யார்னே தெரில .கம்முனு வாடா ’

சந்துருவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு பாலாவும் வந்தான் . கீழே விழுந்த அவ்விளைஞனை சீண்டுவார் யாருமில்லை. அனைவரும் கருணை கலந்த முகத்துடன் அவனைப்பார்த்தவாறே ‘உச்’ கொட்டி பயணித்தனர் . சிறிது தூரம் சென்ற சந்துரு ,

‘மச்சி . வா எதுக்கும் அவன போய் பாக்கலாம் . குடிச்சிருந்தா விட்டுட்டு வந்துடலாம் .’ என்றான் .

மீண்டும் சந்துருவுன் வார்தைகளுக்கு கட்டுண்டு அங்கிருந்து சந்துருவுடன் திரும்பி நடந்தான் .கீழே விழுந்துகிடந்த அவ்விளைஞனைப்புரட்டினர் . அவனிடமிருந்து எவ்வித வாடையும் அடிக்கவில்லை. அவன் குடிக்கவில்லை , ஆனால் எதற்காக மயக்கமாகி விழுந்திருப்பான் என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது . பக்கத்து வீட்டின் கதவருகே சென்று தண்ணீருக்காக கதவைத்தட்டினான் சந்துரு . கதவு மட்டும் திறந்தது . உள்ளே இருந்து யாரும் வெளிவரவில்லை .

‘ஹலோ ! யாராச்சும் இருக்கிங்களா ?’ என்ற சந்துருவின் கேள்விக்கு பதில் வரவில்லை .

‘இங்க ஒருத்தர் மயக்கமாகி விழுந்துட்டாரு .அவர எழுப்பனும் . ப்ளீஸ் , கொஞ்சம் தண்ணீ தாங்க .’ மீண்டும் சந்துரு சத்தமாக கூப்பாடிட்டான் .

‘என்ன ஆயிற்று அவருக்கு ?’ என்று மெல்லிய குரல் குயிலோசையுடன் ஒப்பிடும் வண்ணம் கீச்சுக்குரலில் கதவின் பின்னாள் இருந்து ஒலித்தது . அக்குரல் கண்டிப்பாய் ஒரு பேரழியின் குரலாய்தானிருக்கவேண்டும் . சந்துருவுக்கு அதைப்பற்றிக்கவலைப்படும் நேரமாய் அது இல்லை .

‘தெரியலைங்க . மயங்கி விழுந்துட்டாரு . ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீ தாங்க ’

அவன் வேண்டுதலைத்தொடர்ந்து , கதவின் பின்னால் ஒரு கால்கொலுசின் சத்தம் வீட்டினுள் நுழைவதும் பின் மீண்டும் கதவினருகே வருவதும் கேட்டது .‘இந்தாருங்கள் ’ என்ற சத்தமும் அதைத்தொடர்ந்நு அச்சின்ன கதவிடுக்கின்வழியே சந்தனநிறத்தில் ஒரு அழகிய செந்நிறக்கை , ஒரு வெண்கலசொம்பைத்தாங்கிய வண்ணம் வெளிப்பட்டது . சந்துரு இருந்த அவசரத்திலும் , அக்கையை காணமல் இல்லை . ஒருநொடியில்  , அவ்வழகிய கையை கண்டவன் அதற்குரியாளின் முகத்தினை காணமாட்டோமா என்ற ஏக்கத்துடன் கதவினுள் எட்டிப்பார்த்தவண்ணம் சொம்பை வாங்கினான் . அவன் வாங்கும்நேரம் தவறுதலாய் அவன் கை , அவளின் கைமீது பட்டுவிடவும் , அவள் சிலிர்த்துக்கொண்டு கையை உள்ளே இழுக்கவும் , கதவின்வழி சந்தில் அவளின் முகத்தை அரைகுறையாய் காணவும் என சிலநொடிகளுல் அனைத்தும் நடந்துமுடிந்தன . பிறைநிலவாய் அவனின் கண்களில் சிக்கிய அவளின் ஒரு அழகிய நாணக்கண்ணும் , செதுக்கியெடுத்த மூக்கும் , சிவந்த இளம் உதடும் அரைகுறையாய் அவன் கண்களில் தெரிந்துவிட , சந்துரு ஒருநொடி ஸ்தம்பித்தான் . பின் பாலாவின் குரல் கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பி அவளிடம் நன்றி சொல்லிவிட்டு , வேகவேகமாய் அவ்விளைஞனை நோக்கி ஓடினான் . சொம்பை வாங்கி பாலா அவ்விளைஞன் மேல் நீரைத்தெளிக்க , சிறுகசிறுக கண்களைத்திறந்து பார்த்தான் . வழக்கம்போல் சுற்றிநின்று சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் .

‘யார் தம்பி நீ ? ’ என் சந்துருவுன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவ்விளைஞன் இல்லை .

‘மச்சி , ஹீ நீட் சம் மெடிக்கல் அஸிஸ்டன்ஸ் ’ என்றான் பாலா .

‘ஐயா ! இங்க ஏதாச்சும் ஹாஸ்பிடல் இருக்கா ?’ என்று சுற்றி நின்று வேடிக்கைப்பார்க்கும் ஆட்களைப்பார்த்து வினவினான் சந்துரு . யாருக்கும் ஒன்றும் புரியாமல் விழித்தனர் . ஆங்கிலம் தன்னையும்மீறி அவசரத்தில் வெளிப்படுவது ஏன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் நிலையில் அவனில்லை .

‘ஏங்க , இங்க ஏதாவது மருத்துவமனை இருக்கா ?’ என்றான் மீண்டும் .

‘வைத்தியர பாக்கனும்னா அரண்மனைக்குத்தான் போகனுங்க . ’ என்று கூட்டத்திலிருந்து ஒரு பெரியவரின் குரல் கேட்டது .


‘தம்பி ! அவர அப்படியே விட்டுட்டு கிளம்புங்க . இங்க இருக்க காவலாளிகள் பார்த்தார்கள் என்றால் அரசதண்டனை உங்களுக்கு கிட்டுவது திண்ணமாகிவிடும் ’ என்றது இன்னொரு குரல் .

‘ஏங்க , யாராச்சும் சொல்லுங்களே , அரண்மனைக்கு எப்படி போகனும் ’ என்று பாலாவின் குரல் சிறிது அதட்டலாகவே ஒலித்தது .

அப்போது கூட்டத்தின் நடுவில் , மக்களை ஒதுக்கியவாறே இரு வெண்ணிற ஆடை அணிந்த துறவிகள் வெளிப்பட்டனர் . அதில் ஒருவன் இளம்துறவியாய் இருக்க , மற்றொருவரோ தேஜஸ் வெளிப்படும் முகத்துடன் , கருணையின் மறுவடிவாய் தெரிந்தார் .  அவர்கள் இருவரும் உடனே வந்து மயங்கிக்கிடந்த இளைஞனின் நாடியைப்பிடித்துப்பார்க்க ஆரம்பித்தனர் .

‘இவரை உடனே தூக்கிக்கொண்டு எங்களுடன் வாருங்கள் ’ என்று  அந்த துறவிகளில் மூத்தவர் தெரிவிக்க , பாலாவும் சந்துருவும் ஒன்றாய் சேர்ந்து அவ்விளைஞனைத்தூக்கிக்கொண்டு அத்துறவிகளை பின்தொடர்ந்தனர் .

சிறிது நேரத்திற்குப்பின்  ஒரு அழகிய கட்டட கலைபாட்டுடன் கூடிய ஒரு மாளிகையும் , அதனுள் இருந்து சில வெந்நிற ஆடைத்துறவிகளும் தெரிந்தனர் . மூத்தத்துறவி முன்னே செல்ல , பின்னே பாலாவும் சந்துருவும் அவ்விளந்துறவியும் சென்றனர் . அங்கிருந்த அனைவரும் முன்னே சென்ற துறவிக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்க , அத்துறவியோ வேகவேகமாய் மாளிகையின்  ஒருமூளைக்குள் இருந்த ஒரு படுக்கைக்குச்சென்று , அவ்விளைஞனை படுக்கவைக்குமாறு இருவரிடமும் கூறினார் . இளைஞனை இறக்கிவைத்துவிட்டு , அத்துறவியின் கட்டளைக்கேற்ப அந்த அறையிலிருந்து வெளியே வந்து மண்டபத்தில் இருந்தனர் . அது பெரிய மண்டபமாகவும் , மேலும் அங்கே தங்குவதற்கென்று பல அறைகளும் காணப்பட்டன . அம்மண்டபத்தின் நடுவே மஹாவீரரின் உருவச்சிலை ஒன்று அமைதிக்கு விளக்கம் தரும் வண்ணம் நடுநயமாய் வீற்றிருந்தது .


வரலாற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு அதிசயமும் ஒவ்வொரு காரணமும் , ஒரு குழப்பமும் இருப்பதைக்காணலாம் . சந்திரகுப்த மௌரியன் என்ற பேரரசன் ஆதரித்த சமணமதம் , ஒரு கட்டத்தில் இரண்டாய் பிரிந்தது . அதற்கான காரணம் , அந்நாளில் நிகழ்ந்த மாபெரும் வறட்சி . இதன்காரணமாய் , சந்திரகுப்த மௌரியன் , தன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு பத்திரபாகு எனும் துறவியுடன் இன்றைய கர்நாடகத்தின் வனப்பகுதிக்கு சென்று வடக்கிருந்து உயிரைவிட்டான் .அந்த கர்நாடக கோஷ்டியினர்  திகம்பரர் என்றழைக்கப்பட்டனர் . இவர்கள் முற்றும்துறந்த துறவிகள் என்பதை ஆடை உடுத்தாமலே இவ்வுலகினருக்கு தெரிவித்தனர் . ஆனால் தமிழகத்தைப்பொறுத்தவரை , ஆடையிழந்தவர் எனில் ஒருவகையில் உயிரை இழந்ததற்குச்சமமாய் கருதினர் . ஆதலால் , திகம்பர சமணத்துறவிகள் , தமிழகத்தில் தங்களின்நிலையை நாட்டமுடியாமல் போய்விட்டனர் . மேலும் வடக்கிலிருந்த மற்றொரு பிரிவினரான ஸ்வேதம்பரர்கள் , வெந்நிற ஆடை அணிந்து வாழ்ந்தனர் . பின் பல சமண மாநாடுகள் மற்றும் துறவிகளின் வருகை ஆகையால் அக்காலகட்டத்தில் சமணமதம் ஒரு நிலையான வளர்ச்சியுடனும் புகழுடனும் இருந்தது . மேலும் சமண மற்றும் பௌத்த மதங்களை தமிழக அரசர்கள் பெரிதும் எதிர்க்கவுமில்லை . மாறாய் , பல அரசர்கள் ஆதரவளித்தனர் .  மேலும் சமணசமயத்துறவிகள் வெறுமனே தங்களின் மதக்கருத்துகளை மட்டும் போதிக்காமல் , மக்களுக்குத்தேவையான மருத்துவ உதவிகள் , ஆதரவற்றோர் தங்குவதற்கு என பல உதவிகள் செய்ததால் , சமணத்துறவிகள் மீது அதீத மதிப்பு மக்களிடையே ஏற்பட்டது .

சமணர்களைப்பற்றி நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் , ஒரு மாளிகை வீட்டில்  ஒரு இளம்பெண் தன் முதல்காதலை எண்ணி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் . ஆம் , அவளே தான் . சந்துரு தண்ணீர் கேட்டவுடன் வந்து தந்தவளே தான் . வீட்டில் யாருமில்லாததால் மாளிகையின் ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்த அம்மங்கைக்கு தென்பட்டவன் தான் சந்துரு . அவனைப்பார்த்தவுடனே அவளுக்குள் பல்வேறு ரசாயன மாற்றங்கள் எழுந்ததை அவள் உணர்ந்திருந்தாள் . என்ன காரணத்தினால் அவனை தனக்குப்பிடித்தது என்று இன்னமும் தெரியவில்லை அவளுக்கு . அவன் தன்வீட்டுக்கதவை நோக்கி வருகிறான் என்பதை அறிந்ததும் வேகவேகமாய் கதவின் அருகில் வந்து நின்றாள் .அவன் குரலைக்கேட்டதும் அவளுக்கேற்பட்ட இன்பமும் அதைத்தொடர்ந்த வெட்கமும் அவளை ஏதுமே செய்யவிடாமல் ஸ்தம்பிக்கவைத்தது . நீச்சல் தெரியாதவன் கடலில் சிக்கினால் என்ன ஆகும் ?. ஒவ்வொருமுறை முழுகும்போதும் உயிர் போகுமல்லவா ? திடீரென மேலெழும்போது இழந்த உயிர் மீண்டு வருவதுபோல் இருக்கும் . அதேபோல் தான் சந்துருவுன் கை படும்போது அவளும் இருந்தாள் . அப்படியே அவனின் ஸ்பரிசம் அவள் கையில் இருந்துகொண்டே இருக்காதா என்று மனம் எண்ணினாலும் , அச்சோ ஆடவனின் கையாயிற்றே என்று மூளை சொல்வதைக்கேட்டு கையை இழுத்துக்கொண்டோமே என்று ஏங்க ஆரம்பித்தாள் . காதல்கடலில் அவள் முழுகிவிட்டாள் என்று சொல்லமுடியாது . ஆனால் , தத்தளித்துக்கொண்டிருக்கிறாள் . கரையேற்ற வருவானா சந்துரு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .


(சில இடர்பாடுகளால் இக்கதையை இரண்டுமாதம் கழித்து இப்போதுதான் எழுதமுடிந்தது . தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் கண்டிப்பாய் என்மீது கோவமாய் தான் இருப்பார்கள் . ஒரு படத்திற்கு இடைவேளை வருவதுபோல் , கதைக்கும் விட்டதற்கு நண்பர்கள் மன்னிக்கவேண்டும் . மேலும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு நண்பர்களைக்கேட்டுக்கொள்கிறேன் .)   பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -1
கனிவும் காதலும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com

உங்கள் விருப்பம்

2 comments:

 1. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete