Monday, 13 June 2016

THE CONJURING 2 – சினிமா விமர்சனம்பேய் திரைப்படம் என்றாலே உடனே நினைவுக்கு வரும் ஆள் ஜேம்ஸ் வான். ஆள் பார்க்க பாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் கிளறும் வட இந்திய பையன்போல் இருந்துகொண்டு ஹாரர் ஜானரில் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக பேய் திரைப்படங்களில் ஜேம்ஸ் வான் செய்த சாதனைகளை மறக்கவே முடியாது. DEATH SILENCE, THE CONJURING, INSIDIOUS இரண்டு பாகங்கள் இயக்கியதோடு ANNABELLE , INSIDIOUS 3, வெளிவர இருக்கும் LIGHTS OUT ஆகிய பேய்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இது போதாதென்று SAW திரைப்படங்களைத் துவக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் 6 பாகங்களை தொடர்ந்தார்போல் தயாரித்துள்ளார். என்னால் இன்னும் நம்பமுடியாத விசயம் FAST AND FURIOUS 7 திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது என்பதுதான். 

THE WARREN FILES எனப்பெயரிடப்பட்டு இன்ஷிடியஸ் முதல் சாப்டரை முடித்த கையோடு ஜேம்ஸ் வான் இயக்க ஆரம்பித்த திரைப்படம் தான் கான்ஜுரிங். வெறும் 20 மில்லியன் பட்ஜெட்டில் உருவான அத்திரைப்படம் அடித்த கலெக்ஷனைப் பார்த்து ஹாலிவுட்டே ஸ்தம்பித்தது எனலாம். கிட்டத்தட்ட 320 மில்லியன் டாலர் வசூல்வேட்டை நடத்திய அமிட்டிவில்லி பேயைப் பார்த்து உலகமே நடுநடுங்கியது (இந்த அமிட்டிவில்லியானது ஹாலிவுட் பேய்த்திரைப்பட இயக்குநர்களுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட இடம்போன்றது. எப்போது பார்த்தாலும் அமிட்டிவில்லியிலேயே பேய் உள்ளது என எக்கச்சக்கமாக அடித்து துவைத்துள்ளார்கள். இரண்டாவது பேவரைட் ஸ்பாட் கனெக்டிக்கட்). ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் ஹிட் ஆனாலே சீக்குவல்ஸ் அல்லது ப்ரீக்குவல்ஸ் எடுத்து கல்லா கட்டாமல் விடமாட்டார்கள். சூப்பர்ஹிட் அடித்தால் சும்மா விடுவார்களா ???

எட்வர்ட் வார்ரன் மற்றும் லோரைன் வார்ரன் தம்பதியினர் பேய் ஓட்டுவதில் வல்லவர்கள் என சென்ற பாகத்திலேயே பார்த்துவிட்டோம். சென்ற பாகமான அமிட்டிவில்லி கொலைகளைப் பற்றிய ஆய்வு செய்யும்போது லோரைன் தன் கணவரும் பார்ட்னருமான எட்வர்ட் கொடூரமாக கொல்லப்படுவதையும், ஒரு கன்னியாஸ்திரி பேய் (கன்னியாஸ்திரினா ஏதோ மோகினிப் பிசாசு போல சின்ன வயசு பேயா இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அதற்கு 60-க்கும் மேல் இருக்கும் வயது.) தன்னை எச்சரிப்பதையும் உணருகிறாள். இனிமேல் பெண்டிங்கில் இருக்கும் கேஸ்களை முடித்துவிட்டு இத்தொழிலை விட்டொழித்துவிடலாம் என லோரைன் முடிவெடுக்கிறாள். அதேசமயம் இங்கிலாந்தில் கணவரைப் பிரிந்து தன் 4 குழந்தைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்துவருகிறாள் பெக்கி ஹாட்க்சன். அவளுடைய குழந்தைகளில் ஒருத்தியான ஜானெட்டிற்கு அமானுஷ்ய குரலும் தொடர்ந்தாற்போல் அமானுஷ்ய விசயங்களும் நடக்கிறது. ஒருகட்டத்தில் அவளை வழக்கம்போல பேய் கடித்துவிட, அதைத்தொடர்ந்து காவலர்கள் வர, அவர்களும் வீட்டில் நிகழும் அமானுஷ்யங்களை கண்டு கதிகலங்க, இவ்விஷயமெல்லாம் டி.வி மற்றும் பேப்பரில் வர, இதைக் காணும் சர்ச் ஆட்கள் அமெரிக்காவிலிருக்கு வார்ரன் தம்பதியினருக்கு போன் போட்டு அங்கு வரசொல்லுகிறார்கள்.

அங்கு வேண்டா வெறுப்பாக செல்லும் லோரைனால் அங்கு இருக்கும் ஆவியுடன் பேசமுடியவில்லை. ஆனால் அங்கு அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்பதை உணருகின்றனர். வழக்கம்போல திடீர் திடீர் என டி.டி.எஸ் சவுண்டோடு பேய் வந்து அலப்பறை செய்ய அதைப் படமெடுத்து சர்ச்சுக்கு அணுப்பலாம் என முடவெடுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இம்மாதிரியெல்லாம் ஜானெட்டே செய்து நடிக்கிறாள் என்பது வீடியோ ஆதாரத்தில் தெரியவர , அவர்கள் அவ்வீட்டை விட்டு கிளம்பும்படியாக ஆகிறது. அதன்பின் ஜானெட் என்ன ஆனாள், அவர்களைப் பாடாய் படுத்தும் ஆவி எது, வார்ரன் தம்பதியினரின் நிலை, லோரைன் கண்ட காட்சிகள் போன்றவற்றிற்கெல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் எனக்கு படத்தின் முதல்பாதி சுத்தமாக பிடிக்கவில்லை (முதல்பாதி என்றால் நம்ம ஊர் ஆட்கள் அவர்களாக இஷ்டப்பட்டு இடைவேளை விடும் நேரம் வரை) . ஒரு கட்டத்தில் கொட்டாவி மேல் கொட்டாவியாக விட்டு தூங்கும் அளவிற்கே சென்று விட்டேன். ஏனென்ற காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். பேய் திரைப்படங்கள் என்றாலே ஃபுல் சவுண்டில் தன்னந்தனியாக பார்த்து பார்த்து பழகியவன் நான். அதுவும் லேப்டாப்பில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சரியாக இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல்தான் எந்தவொரு பேய்த்திரைப்படத்தையும் பார்ப்பேன். எனக்கு அப்படிப் பார்ப்பதில்தான் பிரியம். அந்த அனுபவங்களாலோ என்னவோ தான் என்னை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாமல் இயக்குநர்கள் திணறுவார்கள். என்னால் நன்றாகவே உணரமுடியும்; இந்திந்த இடங்களில் சவுண்ட் எஃபெக்ட், இங்கெல்லாம் கோரக்காட்சிகள் என முன்னதாகவே என் மனதையும் உடலையும் தயார் செய்துவிடுவேன். அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் எனக்குள் எந்தவித படபடப்பும் இருக்காது. நான் தனியாக பார்த்த பல பேய்த்திரைப்படங்களை என் நண்பர்கள் பார்த்து விட்டு அடிவயிறு கலங்கியெல்லாம் வந்துள்ளார்கள். அதற்காக என்னைப் பெரிய தைரியசாலி என்றெல்லாம் சொல்லவில்லை; நிறைய படங்களைப் பார்த்த அனுபவத்தால் அந்த படபடப்பைக் கையாள பழகிக்கொண்டேன். போதாக்குறைக்கு நாங்கள் 12 பேர் தியேட்டருக்கு காலைக் காட்சி சென்றோம். தியேட்டரில் பீதியிலிருந்த பலர் பேய் வரும்போதெல்லாம் சிரித்துக் கொண்டும், தான் பயப்படவில்லை என காண்பிப்பதற்காக பேசிக்கொண்டும் இருந்ததெல்லாம் எனக்கு  எரிச்சலைத் தான் வரச்செய்தது. அதிக பயத்தில் இருந்தவர்கள் தான் பயப்படுவதை மறைக்க  கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் என்பது தான் உளவியல் உண்மை.

ஆனால் இரண்டாம்பாதியில் வழக்கம்போல கொட்டாவி விட வாயைத் தொறந்த எனக்கு வைத்தார் பாருங்கள் ஷாக். சாமி; உடம்பே தூக்கிப்போட்டுவிட்டது. முதல்பாதியில் மெதுவாக நகர்த்திக்கொண்டு சென்ற படத்தை இரண்டாம்பாதியில் திடுக் திடுக் சவுண்ட் எபக்டோடு அட்டகாசமாக சென்று முடித்தார்.  என் நண்பர்களெல்லாம் முதல் பாதியிலேயே அடிவயிறு கலங்கிவிட்டது; எழுந்து ஓடிவிடலாம் போலிருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் என்னை நன்றாகவே ஏமாற்றி திடுக்கிட வைத்துவிட்டார் ஜேம்ஸ் வான். இத்தனைக்கும் படத்தில் முதல் காட்சி மட்டுமே கொடூரமாக இருக்கும். மற்றபடி டீசன்டாகவே செல்லும்.

படத்தில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், லொகேசன் எல்லாம் பிரம்மாதம். சோர்ஸ்  கோட் மற்றும் ஆர்பன் புகழ் வெரா பார்மிகா அருமையாக நடித்துள்ளார். பேய் பிடித்து திரியும் ஜேனட்டாக வரும் மேடிசன் நடிப்பு அட்டகாசம். படத்தில் ஓஜா போர்டு காட்சிகளும் தொடர்ந்தாற் போல் பேய் பற்றிய காட்சிகளும் பார்க்கும்போது எனக்குள் ஆச்சரியம். சென்ற வாரம் நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஓஜா போர்ட் விளையாடினேன். ஆனால் பேயெல்லாம் வரவில்லை. நாங்கள் பேயை வரவைக்க பேசிய பல வசனங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. ஓஜா போர்ட் விளையாடும்போது வராத பேய், அதன்பின் வரும். அதேபோல் நாம எத்தன பேய உசுப்பிவிட்டமோ தெரியலையேனு யோசிக்கும்போதே ‘நல்லவேளை. நாம் பேயிற்கு குட்பை சொல்லிவிட்டுதான் ஓஜா போர்டை அழித்தோம்’ என்றான் நண்பன். 

மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்கலாம். இதயம் பலவீனமானவர்கள் தவிர்ப்பது நலம். இம்மாதிரியான திரைப்படங்களால் ஸ்ட்ரோக் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்னது? சாகற அளவுக்கு வொர்த்தா என்று ஆச்சரியப்படாதீர்கள். 3 காட்சிகள் நம் நெஞ்சை அடைத்துக்கொள்ளும் வண்ணம் சவுண்ட் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது. மற்றபடி முதல் பாகத்தின் ரெக்கார்டை அடித்துத் துவைத்துவிடும் இந்த லண்டன் பேய். எனக்கே பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
உங்கள் விருப்பம்

2 comments:

  1. mothala kammiya ezthunga boss unga ella vimasanamum etho research article padikara mathiri boringa irurka. Short and sweeta sollunga

    ReplyDelete
    Replies
    1. பாஸ். என்னோட எழுத்து எல்லாரையும் திருப்திபடுத்திடாதுனு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க குறைனு சொல்ர அதே விசயத்த பலர் இன்னும் நிறைய எழுதுங்கனு சொல்ராங்க. நா எத கணக்குல எடுத்துக்க முடியும்? என்னால முடிஞ்ச வரைக்கும் நா கம்மியாதான் எழுத முயற்சி பண்றேன். பட் முடில. நீண்ட பதிவுகள் கண்டிப்பா அயற்சியா தரும். ஆனா என்ன மாதிரியான சிலருக்கு நீண்ட பதிவுகள்தான் பிடிக்கும்

      Delete