Thursday, 26 February 2015

Mr.PEABODY & SHERMAN – சினிமா விமர்சனம்

டைம் ட்ராவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? நாமும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து  மண்டையைக்குடைந்து கொண்டேதானிருக்கிறோம் . இன்னும் காலப்பயணம் என்பது கனவுப்பயணமாகவே இருக்கிறது . (17-ஆம் நூற்றாண்டு என்பது மேலைநாட்டினவர்க்கு . நமக்கெல்லாம் மஹாபாரதத்திலேயே ஒரு இன்டர்ஸ்டெல்லர் கிளைக்கதை இருக்கிறது .) சரி , அம்மாதிரியான விஷயங்களைத்திரைப்படத்தில் பார்த்து சிலாகிப்பது தான் நம்விதி என்றால் யாரால் மாற்றமுடியும் . இந்த படம் டைம்ட்ராவலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமேஷன் , அட்வெஞ்சர் , பேமிலி ட்ராமா . இது நான் எழுதும் இரண்டாவது அனிமேஷன்  திரைப்படம் என தினைக்கிறேன் .

ஏற்கனவே டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு THE TIME TRAVELER’S WIFE , INTERSTELLAR ஆகிய திரைப்படங்களைப்பார்த்துள்ளோம் . இந்த படத்தில் நம்மை அசத்தும் விஷயம் என்னவென்றால் , படத்தில் காலப்பயணம் செய்யும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும்தான் . அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்கிறீர்களா ? எகிப்திய பாரோ டட்டான்க் ஆமன் , மோனலிசா புகழ் ஓவியர் லியானர்டோ டாவின்ஸி , பிரஞ்சுப்புரட்சியின்போது பிரான்ஸ் அரசியான மேரி அன்டோனன்ட் , மஹாத்மா காந்தி (கேமியோ) , ஷேக்ஸ்பியர் (கேமியோ) , ஜார்ஜ் வாஷிங்டன் , ஐன்ஸ்டைன் , நியூட்டன் , கிரேக்க வரலாற்றின் முக்கியநிகழ்ச்சியான ட்ராய் போர் , ஆபிரஹாம் லிங்கன் (கேமியோ) என கலக்கியெடுத்திருக்கிறார்கள் . இவர்களைப்பற்றி விரவாக பார்த்தால் நான் வரலாற்றுப்பாடம் தான் எடுக்கவேண்டியிருக்கும் . ஏற்கனவே என்னுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் புத்தகம் போடும் அளவிற்கு பெரிதாகிக்கொண்டே வருவதால் , எவ்வளவு முடியுமோ அவ்வளவு சின்னதாகவே இந்த பதிவை எழுதியிருக்கிறேன் .

PEABODY எனும் நாய் ( இந்தபேர தமிழ்ல டப் பண்ண ஒரு மாதிரியா இருக்கறதால , ஆங்கிலத்துலயே மணக்கட்டும் ) பயங்கர புத்திசாலி . நோபல் பரிசெல்லாம் வாங்கியிருக்கும் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா .  ஒருசமயம் வழியில் ஒரு குழந்தை அநாதையாக இருப்பதை பார்க்கின்றது .வழக்கமாக நாயைத்தான் மனிதர்கள் தத்தெடுப்பார்கள் . இங்கோ நாய் மனிதனை தத்தெடுக்கிறது . அந்த குழந்தையைக் கோர்ட்டு அனுமதியுடன் அநாதையான PEABODY , அந்த குழந்தைக்கு ஷெர்மான் எனும் பெயரிட்டு பாசமாக வளர்க்கிறது . ஷெர்மான் எப்படிப்பட்டவன் என்றால் நம் தந்தை , நம்மை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவாரோ அம்மாதிரியே இருக்கிறான் . ஷெர்மானுக்கு , தான் கண்டுபிடித்த WAPAC எனும் டைம்ட்ராவல் மெஷினின்வழியே ஒவ்வொரு நாளும் பயணித்து  உலகின் வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் PEABODY காட்டுகிறது . ஷெர்மானுக்கு 7 வயது ஆகியதும் பள்ளியில் கொண்டு சேர்க்கிறது . பள்ளியில் ஆசிரியை கேள்வி கேட்க , யாரையும் சொல்லவிடாமல் அனைத்துக்கேள்விகளுக்கும்  ஷெர்மானே பதிலளிக்கிறான் . வகுப்பறையில் அவன் உடன்படிக்கும் பென்னி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல , அதை தப்பு என்று கூறுகிறான் . காண்டான பென்னி , அவனைக்கலாய்த்து டீசிங் செய்ய ஒரு கட்டத்தில் ஷெர்மான் அவளைக்கடித்துவிடுகிறான் . பள்ளியில் அப்பெண் கம்ப்ளைன்ட் செய்ய , மனிதஉரிமை மாதிரியான ஆனையத்திலிருந்து ஒரு பெண் விசாரணைக்கு வருகிறாள் . அவள் PEABODY – யின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி ஷெர்மானை , PEABODY-யிடம் இருந்து பிரிக்க  முயற்சி செய்கிறாள். பென்னியையும் ஷெர்மானையும் நட்பாக்க  PEABODY , பென்னியின் பெற்றோர்களை டின்னருக்கு அழைக்கிறது . எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது பென்னியின் வற்புறுத்தலால் , ஷெர்மானும் பென்னியும் டைம்மெஷினில் பயணிக்கிறார்கள் . பழங்கால எகிப்தில் கிங் டட்டை திருமணம் செய்யப்போகிறேன் என்று பென்னி (7வயது!!) கூறிவிட்டுத்திரும்பி வர மறுக்கிறாள் . மீண்டும் ஷெர்மான் மட்டும் நிகழ்காலத்திற்கு வந்து PEABODY – யிடம் கூறி , அவரைக்கூட்டிச்செல்கிறான் . அங்கே இருந்து பென்னியை மீட்டுக்கொண்டு வரும்போது பிரச்சனை ஆக , எல்லோரும் டாவின்சியின் காலத்திற்கு செல்கிறார்கள் . ஏற்கனவே PEABODY – க்கும் டாவின்சிக்கும் அறிமுகமிருக்க , டாவின்சியின் உதவியோடு டைம்மெஷினை சரிசெய்து செல்கிறார்கள் . வழியில் கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு ட்ராய் போரில் மாட்டிக்கொள்கிறார்கள் . அதில் PEABODY இறந்துவிட , அதன்பின் நடக்கும் சம்பவங்களே இத்திரைப்படம் .படத்தின் கதை என்னவோ சுமாராக இருந்தாலும் வரலாற்றின் கதாநாயகர்களை ஸ்பூஃப் செய்யப்பட்டிருக்கும் விதம் அருமையான ரசனை . மோனலிசாவுக்கும் டாவின்சிக்கும் நடக்கும் சண்டையும் , அதன்பின் அவர் எப்படி போஸ் கொடுக்கிறார் என்பதனையும் படத்தின் கதாபாத்திரங்களுடன் லிங்க் செய்திருப்பது அட்டகாசமான விஷயம். நான்காம் அமோனத்தோவ் எனும் கொடுங்கோலன் , ஏடோன் எனும் கடவுளை வணங்கச்சொல்லி கட்டாயப்படுத்தியதும் , அதன்பின் வந்த அவரது மகன் கிங் டட் , அடோனிலிருந்தும் அதோமிற்கு வணங்கச்சொன்ன நிகழ்வை இதில் அட்டகாசமாக லிங்க் செய்திருப்பார்கள் . உணவின் காரணமாக ஏற்பட்ட பிரெஞ்ச் புரட்சி போன்றவற்றையும் ஜாலியாக எடுத்திருப்பார்கள் . விஷுவல் , அனிமேசன் ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக சாதாரணமாக இருந்தாலும் , திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளால் அருமையாக போகிறது . கிளைமேக்ஸ் காட்சியில் ஜார்ஜ் வாஷங்டன்  ஹீரோ குருப்புடன் பேசிக்கொண்டிருக்கும்போது காந்தி ஒருவித புன்னகையுடன் இருப்பது செம . படத்தில் ஸ்பூஃப் செய்யாமல் காந்தியின் இரு பிரேம்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள் .

கிரேக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ட்ராய் போர் பற்றி ,  பார்வையற்ற ஹோமரால் எழுதப்பட்ட கிரேக்க காவியங்கள் லியெட் மற்றும் ஒடிசி ( இவைகளுடன் ஒப்பிடத்தக்க அளவில் தமிழிலும் ஒரு அட்டகாசமான இலக்கியம் உள்ளது . வேறு என்ன ? சீவக சிந்தாமணிதான் ) ஆகியவற்றில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன . இதைவிட கிரேக்க வரலாற்றாசிரியரும் உலகவரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹெரடைடஸை வாசித்தால் எகிப்தின் வரலாறு , கிரேக்க வரலாறு உட்பட பல வரலாற்றுகளை அறிந்துகொள்ளலாம் . மக்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டத்தில் பிரான்ஸின் அரசகுடும்பத்தினர் மக்களைக்கண்டுகொள்ளாமல் , பிரபுக்களின் ஆதிக்கத்தில் விட்டிருந்தனர் . அந்த பிரபுக்களோ மக்களை வாட்டியெடுக்க , அரசகுடும்பத்தினர் சுகபோகத்தில் திளைக்க , வெறுப்பான மக்கள் பிரெஞ்ச் புரட்சியை உண்டாக்கினர் . உலகின் முன்னேற்றத்திற்கு தேவை குடியாட்சியே என்று வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய அப்புரட்சியின் இறுதியில் கில்லட்டில் தலை துண்டிக்கப்பட்டு அரசகுடும்பத்தினர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அச்சோ ! மன்னித்துவிடுங்கள் . பாடம் நடத்த ஆரம்பித்ததற்கு .


இப்படம் 1960-களின் இறுதியில் தொலைக்காட்சி அனிமேஷன் தொடராக வெளிவந்து ஹாலிவுட்டை கலக்கியது . அதன்பின் அதேகான்செப்டை தூசிதட்டி ஏதேதோ பெயர்களில் ஒளிபரப்பாக்கியிருக்கிறார்கள் . பின் 2014-ல் THE LION KING , STUARD LITTLE போன்ற படங்களை இயக்கிய ராப்பின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது . வசூல் ரீதியிலும் ஓரளவு கலக்கிய இத்திரைப்படத்தை , நேரமிருப்பின் ஒருமுறை பாருங்கள் . நல்லதொரு எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் . சயின்ஸ் பிக்சன் ரசிகர்கள் , இயற்பியல் துறைசார் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம் . வழக்கம்போல அனிமேஷன் படங்களில் இருக்கும் கண்ணியமான வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகள் என்பதால் குடும்பத்துடன் பார்க்கலாம் . 


தொடர்புடைய இடுகைகள்

உங்கள் விருப்பம்

10 comments:

 1. சுவாரஸ்யமாக இருக்கிறது... அழகான விமர்சனம்...

  ReplyDelete
 2. நச் பதிவு தோழரே..

  ReplyDelete
 3. பிரமாதமா எழுதியிருக்கீங்க...
  தளம் புதிய மாடல் அருமை
  தமிழ் மணம் எங்கிட்டு குத்துறதுனு தெரியலையே......

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு டெம்ப்ளேட் வேலைகள் தாங்ணா போயிட்டுருக்கு . எல்லாம் முடிய ரெண்டு நாள் ஆகிடும் . அதுனால ரெண்டு நாளைக்கு அரசியல்ல இருந்து ஓய்வு . ஓட்டெல்லாம் ரெண்டு நாளைக்கு அப்றம்ம தான் . ஹா ஹா

   Delete
 4. புதிய டெம்பிளேட் அழகாய் இருக்கிறது !
  த ம 4

  ReplyDelete
 5. ஆகா....புதிய டெம்பிளேட் அழகாய் இருக்கிறது........

  ReplyDelete