Friday, 8 May 2015

BACK TO THE FUTURE – 1 ஒரு பார்வை
ராபர்ட் செமெக்கிஸ் தலைவரைப்பற்றி எளிமையாக சொல்லவேண்டுமெனில் இவர் ஒரு ஹாலிவுட் கே.எஸ்.ரவிக்குமார் . 1978 – ல் சினிமாவினுள் நுழைந்து இன்றுவரை உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் , தனி பாக்ஸ் ஆபிசையும் வைத்திருப்பவர் . இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கியவர் . வெறும் பணத்திற்காக மட்டுமில்லாமல் ஆங்காங்கே மக்களிடையே சமூக விழிப்புணர்வைப்பற்றியும் ஏற்படுத்தும் அதிசய இயக்குநர் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த FLIGHT திரைப்படத்தில்கூட குடிக்கெதிரான தனது கருத்தை ஆணித்தரமாக பதிந்திருப்பார் . சுமாரான திரைப்படமான FLIGHT  பாக்ஸ் ஆபிசில் முதலைக்காட்டிலும் ஐந்து மடங்கு லாபத்தை சம்பாதித்து என்றால் அதற்கு காரணம் செமெக்கிஸ் தான் . இவரது அடுத்த படமான THE WALK , பிலிப் பெடிட் என்பவர் , விமான தாக்குதலில் தகர்க்கப்பட்ட இரட்டைக்கோபுரத்திற்கிடையே கயிறு கட்டி நடந்து சாதனை படைத்ததை வைத்து அவரது வாழ்க்கையைப்பற்றிய சுயசரிதமாக எடுக்கப்படுகிறது . ஆனால் செமெக்கிஸின் வாழ்க்கையையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் .

திரைப்படக்கலை பற்றிய கல்லூரிப்படிப்பை  முடித்தபின் செமெக்கிஸ் ஒரு டி.வி. சேனலில் எடிட்டிங் துறையில் பணியாற்றினார் . கல்லூரியில் படிக்கும்போதே தன்னைப்போன்ற ஒத்த சிந்தனையுடன் இருந்த  BOB GALE என்பருடன் தன் நட்பினை வலுப்படுத்திக்கொண்டார் . திரைப்படக்கல்லூரியில்  நடந்த குறும்படத்தேர்வில் செமெக்கிஸின் A Field of Honor குறும்படம் ,  விழாவிற்கு வருகைதந்திருந்த ஸ்பில்பெர்க்கை வெகுவாக கவர்ந்தது . கல்லூரி முடிந்தபின் தடுமாறிக்கொண்டிருந்த செமெக்கிஸும் பாப்பும் ஸ்பில்பெர்க்கிடம் சரணாகதி அடைந்தனர் . ஸ்பில்பெர்க்கும் இருவரிடமிருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் செமெக்கிஸின் முதல்திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார் . பாப் கேல் மற்றும் செமெக்கிஸ் இருவரும் இணைந்து எழுதி , செமெக்கிஸ் இயக்கத்தில் 1978 – ல் I WANNA HOLD YOUR HAND வெளிவந்தது . முதல்படம் தோல்வி என்பதைக்காட்டிலும் படுதோல்வி என்றே சொல்லலாம் . செமெக்கிஸ் கூட மனம் தளர்ந்திருக்கலாம் . ஆனால் ஸ்பில்பெர்க் , செமெக்கிஸின் திறமையை உலகிற்கு அடையாளப்படுத்துவதில் மும்முரமாகவே இருந்தார் . மீண்டும் செமெக்கிசை அழைத்த ஸ்பில்பெர்க் , இம்முறை அவருக்கு வழங்கியது எழுத்துப்பணி . செமெக்கிஸ் மற்றும் பாப்கேல் கதை , திரைக்கதை எழுத ஸ்பில்பெர்க் அத்திரைப்படத்தை இயக்கினார் . 1979 – ல் வெளிவந்த 1941 என்ற திரைப்படமே அது . அதில் திரைக்கதைக்காக செமெக்கிசும் பாப்கேலும் பாரட்டப்பட்டனர் . இம்முறை மீண்டும் செமெக்கிசுக்கு இயக்குநர் வாய்ப்பை வழங்கினார் ஸ்பில்பெர்க் . 1980 – ல் செமெக்கிஸின் இரண்டாவது திரைப்படம் HAND  வெளிவந்தது . அதுவும் அட்டர்ப்ளாப் . இம்முறை நான்காண்டுகள் காத்திருந்த செமெக்கிஸ் மீண்டும் திரைப்படம் இயக்க வந்தார் . மறுபடியும் ஸ்பில்பெர்க் தயாரிப்பில் பாப் மற்றும் செமெக்கிஸின் கதை, திரைக்கதையில் 1984 – ல் ROMANCING THE STONE திரைப்படம் வெளிவந்தது . ஏற்கனவே இருமுறை தோல்வியின் விரக்தியிலிருந்த செமெக்கிசிற்கு இத்திரைப்படம் ஒரு ஆறுதல் வெற்றி எனலாம் .

ஆனால் அதற்குமுன்பே பாப்கேலின் கதை ஒன்று செமெக்கிஸிற்கு பிடித்துப்போக பலரிடம் அதைக்கூறினார் . ஆனால் யாரும் தயாரிக்க முன்வராததால் விழிபிதுங்கியபடி நின்ற செமெக்கிஸிற்கு ம்முறையும் கைகொடுத்தவர் ஸ்பில்பெர்க் தான் .  கதையைக்கேட்டதும் உடனே ஒப்புதல் வழங்கி படத்தினை ஆரம்பிக்கச்சொன்னார் ஸ்பில்பெர்க் . ஆனால் ஸ்டுடியோக்கள் யாரும் தயாரிக்க முன்வரவில்லை . அந்நிலையில் தான் ஸ்பில்பெர்க் உதவியுடன் எடுக்கப்பட்ட ROMANCING THE STONE வெற்றி பெற்றதால் அதன்பின் மீண்டும் அவருடைய கதை படமாக்க சம்மதிக்கப்பட்டது . அக்கதைதான் BACK TO THE FUTURE . திரைக்கதையை பாப்கேலுடன் இணைந்து எழுதினார் செமெக்கிஸ் . திரைக்கதையை முடித்தபின் காஸ்டிங் பிரச்சனை உதயமானது . மார்ட்டி வேடத்தில் நடிப்பதற்காக செமெக்கிஸ் முதலில் சென்றது மைக்கேல் . ஜெ . பாக்ஸ் . ஆனால் அக்காலகட்டத்தில் தொலைக்காட்சித்தொடர்களில் பிஸியாக இருந்த மைக்கேலால் இத்திரைப்படத்தில் நடிக்கமுடியவில்லை. இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டுடியோக்கள் தான் . எங்கே  சினிமாவில் நடித்து பெரியாளானால் சம்பளத்தை ஏற்றிவிடுவாரோ என்று பயந்து அவரை நடிக்கவிடாமல் ஸ்டுடியோ தடுத்தது . பின் ஸ்பில்பெர்க்குடன் ஆலோசித்த செமெக்கிஸ் மூன்றுபேரை மனதில் வைத்திருந்து கடைசியாக எரிக் ஸ்டால்ட்ஸ் என்பவரை நடிக்கவைத்தார் . ஒருமாத ஷூட்டிங் முடித்தபின் ஸ்பில்பெர்க்கிடம் செமெக்கிஸ் தன் திரைப்படத்தைப்போட்டுக் காண்பிக்க , எரிக்கின் பர்பாமென்ஸ் திருப்தியளிக்காததால் மீண்டும் ஷூட்டிங்கை நிறுத்தவேண்டியதாயிற்று . பின் அடித்துப்பிடித்து மீண்டும் மைக்கேலையே செமெக்கிஸ் அணுகினார் . இம்முறை ஸ்டுடியோக்காரர்களிடம் கேட்டு , டி.வி.தொடர் விடுமுறை கேப்பில் அவரைவைத்து படம்பிடித்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர் . ஒருவேளை இப்படத்தின் ஷூட்டிங்கில் மைக்கேல் நடித்துக்கொண்டிருந்தாலும் , டி.வி.காரர்கள் கூப்பிட்டால் உடனே விட்டுவிட்டு ஓடிவிடவேண்டியிருக்கும் அளவிற்கு ஒரு கன்டிசனோடு அனுப்பிவைத்தார்கள் . அடுத்து படத்தின் பிரதான வேடமான DOC கேரக்டரில் நடிக்க செமெக்கிஸ் அனுகியது ஜான் லித்கோ எனும் நடிகர் . ஆனால் அவருடைய கால்ஷிட் அப்போது கிடைக்கவில்லை . அதன்பின் டாக்டர்.எம்மட் ப்ரௌன் வேடத்தில் நடிக்க க்றிஸ்டோபர் ஃப்ளாய்டை செமெக்கிஸின் திரையுலக நண்பரும் அந்நேரத்தில் ஃப்ளாய்டை வைத்து THE ADVENTURES OF BUCKAROO BANZAI எனும் திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருந்த  நீல் , பரிந்துரைத்தார் . இது மட்டுமல்லாமல் படத்தின் முக்கிய வேடங்களான ஜார்ஜ் மெக்ஃப்ளை , பிஃப் டேனன் என பாதி வேடங்களுக்கு தேடிச்சென்ற ஆட்கள் வேறு ; ஆனால் நடிக்க கிடைத்தவர்கள் வேறு . இந்த காஸ்டிங் பிரச்சனையை சமாளிப்பதற்குள் செமெக்கிஸிற்கு தாவு தீர்ந்துவிட்டது . எப்படியோ எல்லாம் சரிவர படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்களுல் முடித்துவிட்டார்.  இப்படத்தில் வரும் ஹில்வாலி எனும் குறுநகரத்திற்காக யுனிவர்சல் நிறுவனத்தின் ஒரு நகரையே உருவாக்கிக்கொடுத்தது . படம் முடிந்தபின் பலமுறை ப்ரிவியூ பார்த்தபின்னே ஸ்பில்பெர்க் படத்தை வெளியிட அனுமதித்தார் . காரணம் செமெக்கிஸிற்கென்று இருக்கும் ராசி அப்படி . எல்லாம் ரெடியாகி படம் ரிலிசாகும்போது யுனிவர்சல்நிறுவனம் இத்திரைப்படத்தை ஒரு இன்செஸ்ட் படம் போன்று விளம்பரப்படுத்தியது . கடுப்பான செமெக்கிஸும் பாப் கேலும் என்ன செய்வதென்று புரியாமல் விழிபிதுங்கி நின்றனர் . செமெக்கிஸ் மனதில் இத்திரைப்படம் ப்ளாப் ஆகிவிடும் என்ற எண்ணமே இருந்தது . படம் என்னுடைய பிறந்த தேதியான ஜூலை 3 ல் வெளிவந்தது . யாரும் எதிர்பார்க்காத அளவில் படம் வசூலை அள்ளியது . முதல்வாரத்தைக்காட்டிலும் அடுத்தவாரம் அதிக வசூல் . போகப்போக திரையரங்குகளில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது . செமெக்கிஸின் வாழ்வில் முதல் மெஹா ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக மட்டும் இல்லாமல் செமெக்கிஸை அடுத்த ஃப்ராங்க் கப்ரா என்றழைக்கப்படும் அளவிற்கு பேரும்புகழும் அடைந்தார் . இதன்பின் டாம் ஹேங்ஸுடன் இணைந்து FORREST GUMP , CAST AWAY , THE POLAR EXPRESS என கலக்கியது தனிக்கதை .

மைக்கேல் இத்திரைப்படத்தினால் தினம் தன் தூக்கத்தை இழந்தார் . படம் வெளியாகுமா ? ஆகாதா ? என்று செமெக்கிஸ் ஒருபுறம் பதறிக்கொண்டிருந்தார் . ஆனால் கடினஉழைப்பிற்கு கண்டிப்பாக பலன் உண்டு என்பதற்கு இத்திரைப்படத்தின் வெற்றி ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு . இதுவரை வெளிவந்த செமெக்கிஸின் திரைப்படங்களில் டாப் – 5 ல் இன்னும் இத்திரைப்படம் நிலைத்து நிற்கிறது . பலவிதமான விருதுகள்  , உலகளவில் சிறந்த படங்களுக்கான அங்கிகாரங்கள் என பேரும்புகழும் செமெக்கிஸிற்கு இத்திரைப்படத்தில்தான் முதலில் கிடைத்தது . படத்தின் அதிதீவிர விசிறியான அக்கால அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனை , டாக் கேரக்டர் கலாய்ப்பதாக இருக்கும் . அதிபர் முதல்முறை பார்க்கும்போது அக்காட்சி வந்ததும் மீண்டும் போட்டுக்காட்ட சொன்னாராம் . பதறிய குழவினார் ‘போச்சுடா ! செமெக்கிஸ்க்கு சனி பிடிச்சிகிச்சி’ என்றபடியே போட்டுக்காட்டினார்களாம் . ஆனால் அதை மீண்டும் ரசித்துப்பார்த்தாராம் ரீகன் .

படத்தின் கதை என்னவென்றால் மார்ட்டி மெக்ஃப்ளை எனும் டீனேஜர் தன் குடும்பம் , காதலி என ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் . அவனின் உற்ற நண்பராக ஒரு ஆராய்ச்சியாளர் இருக்கிறார் . அவர்தான் டாக்டர் எம்மெட் ப்ரௌன் . ஒருமுறை இரவுநேரத்தில் தன்னைச்சந்திக்க வரும்படி டாக் ஆழைக்க அங்கு செல்கிறான் மார்ட்டி . அங்கே ஒரு காரைக்காட்டி தான் உருவாக்கிய டைம்மெஷின் என்று டாக் கூறுகிறார் . அந்த காரை இயக்க 1.21 ஜீகா ஹெர்ட்ஸ் மின்சக்தி தேவைப்பட்டதால் , லிபியத்தீவிரவாதிகளிடம் பாம் செய்து தருவதாகக் கூறி ப்ளுட்டோனியம் வாங்கியதாக டாக் கூறுகிறார் . அச்சமயம் லிபியத்தீவிரவாதிகள் டாக்கைச்சுட்டு விட , மார்ட்டி அக்காரில் ஏறித் தப்பிக்க முயல்கிறான் . அக்காரைக்கொண்டு 88 மைல் வேகத்தில் பயணிக்கும்போது டைம்ட்ராவல் பயணம் சாத்தியமாகும் . மார்ட்டி , தீவிரவாதிகளிடிமிருந்து தப்பிக்க வேகமாக காரைச்செலுத்த , அது டைம் ட்ராவல் ஆகி 1955 ஆம் வருடத்திற்குச்செல்கிறது . அதாவது மார்ட்டி இருக்கும் காலத்திலிருந்து முப்பது வருடம் பின்னோக்கிச்செல்கிறது (பின்னோக்கியா ? முன்னோக்கியா ?). அங்கு செல்லும் அவன் தன் தாய் , தந்தையின் இளம்பிராயத்தினைப்பார்க்கிறான் .

இப்போது மேட்டர் என்னவென்றால் தன் தாயும் , தந்தையும் சந்தித்து காதல் மலருவது ஒரு விபத்தில் . ஆனால் அந்த விபத்து நடக்கும்போது மார்ட்டி தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக , தான் மாட்டிக்கொள்கிறான். இப்போது எதிர்காலம் மாறத்துவங்குகிறது . அவன் தாய் , மார்ட்டியின் மேல் காதல் கொள்கிறாள் . இதை அறியாத மார்ட்டி , அப்போது இருக்கும் டாக்கைச்சென்று பார்த்து அவரிடம் உண்மையைச்சொல்கிறான் . 1.21 ஜீகா ஹெர்ட்ஸ் மின்சக்தி வேண்டுமெனில் மின்னலிடமிருந்து தான் கிடைக்கும் என்கிறார் . ஹில்வாலியில் அடுத்த வாரத்தில் ஒருநாள் ஒரு சுவற்றில் இருக்கும் கடிகாரத்தின்மீது மின்னல் தாக்கப்போவது ஏற்கனவே வருங்காலத்தில் இருக்கும் மார்ட்டிக்கு நியாபகம் வர அதை பயன்படுத்தித் தப்பிக்க முயற்சிக்கிறான் . ஆனால் , இங்கு தன் தாயும் தந்தையும் இன்னும் காதலில் விழாததால் எதிர்காலம் மாறுகிறது  . இவர்களிருவரையும் சேர்த்துவைக்க மார்ட்டி முயற்சிக்கிறான் . இம்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் எனபடும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் தன் தந்தையை , கல்லூரி காலத்திலேயே பிஃப் டேனன் , ஒரு அடிமை போல நடத்துவதைக்கண்டு வெகுண்டெழும் மார்ட்டி அவனிடம் பிரச்சனை செய்கிறான் . அதேநேரம் மார்ட்டியின் தாய் , மார்ட்டியையே காதலிக்க அவள் மனதையும் மாற்றி , தன் தந்தையையும் தாயையும் சேர்த்துவைத்து எப்படி அங்கிருந்து நிகழ்காலத்திற்கு வருகிறான் ? நிகழ்கால டாக் என்ன ஆனார் ? அவனுடைய எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ? என்பதையெல்லாம் நகைச்சுவையுடனும் ரசிக்கும்படியும் பரபரப்பாக கொடுத்திருப்பார் செமெக்கிஸ் .

இன்றளவும் டைம்ட்ராவல் சயின்ஸ்-பேன்டசி பிக்ஷன் ஜானர்களில் தேடினால் முதலில் வரும் இத்திரைப்படம் டைம்ட்ராவல் மற்றும் பேன்டசி ரசிகர்கள் எப்போதும் மிஸ் செய்யக்கூடாத திரைப்படம் . நடிகர்களின் அற்புதமான நடிப்பு  , ட்ராமாட்டிகல் இசை , அக்காலகட்டத்தில் சி.ஜியில் நடத்தியிருக்கும் சாகசகங்கள் என அனைத்துமே அட்டகாசமாக இருக்கும் . படத்தில் எனக்கு மிகமிக பிடித்த கேரக்டர் என்றால் பால்யவயதில் ஜார்ஜ் மெக்ஃப்ளையாக வரும் கிறிஸ்பின் க்ளோவர் தான் . மனிதர் ஒருமாதிரி இம்பீரியாரிட்டி காம்பளக்சுடனும்  , ஒரு அரைவேக்காட்டு பேக்காகவும் வாழ்ந்திருப்பார் . இதற்கடுத்து டாக்காக வரும் கிறிஸ்டோபர் லாய்டு . “GREAT SCOTT” என ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட்டு இவர் உச்சரிக்கும்போது நாமும் ஆச்சரியப்பட்டு நிற்போம் . மார்ட்டி மெக்ஃப்ளை வேடத்தினை பொறுத்தவரை திறமையைக்காட்ட போதிய இடமில்லை . அவருக்கு சாகசம் செய்யவே நேரம் சரியாக இருக்கும் . இருந்தாலும் ஒரு டீனேஜ் மாணவனை கண்முன் நிறுத்தியிருப்பார் . படத்தின் பெரிய ப்ளஸ்ஸாக  நான் கருதுவது படத்தினைப் பார்ப்பவர்களையும் அப்படியே டைம்ட்ராவல் செய்யவைத்தது போன்ற ஒரு ஃபீலிங்கை உருவாக்கியதுதான் . இதன்பின் இரு பாகங்கள் வெளிவந்தாலும் இம்முதல்பாகத்தின் அளவிற்கு பெரும் வரவேற்பினை பெறவில்லை . ஆனால் அத்திரைப்படங்களும் கண்டிப்பாக என்ஜாய்மென்டிற்கு குறைவில்லாத திரைப்படங்கள் என்பதில் துளி ஐயமுமில்லை . இன்னும் பல இன்ட்ரஸ்டிங்கான தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம் .


உங்கள் விருப்பம்

6 comments:


 1. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 2. வாழ்க
  தொடர்கிறேன் ..
  கமெண்ட்டை திறந்ததற்கு நன்றி
  தம +

  ReplyDelete
 3. கொசுறுத் தகவல்களும் நன்று....ஆ... கமெண்ட் வேலைசெய்கின்றது.....

  ReplyDelete