Sunday, 24 May 2015

டிமான்டி காலனி - சினிமா விமர்சனம்கடந்த ஒருமாதகாலமாக எந்த திரைப்படத்திற்கும் செல்லவில்லை என்பதைவிட பார்க்கவே இல்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். நேரமின்மை மற்றும் தீவிர வாசிப்பில் ஆழ்ந்தகாரணத்தால் எத்திரைப்படத்தையும் பார்க்கமுடியவில்லை . உத்தமவில்லன் , புறம்போக்கு, MAD MAX FURY ROAD என மிஸ் செய்த படங்கள் ஏராளம் . நேற்று வெள்ளிக்கிழமை என்பதைக்கூட மறந்துவிட்டேன் என்றால் பாருங்களே ! எப்படியாவது இந்த திரைப்படத்தையாவது பார்த்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்து சற்றும் அறிமுகமில்லாத ஒரு கிராமத் தியேட்டருக்கு சென்றேன் . அந்த தியேட்டரைப் பார்த்தால் இழுத்துமூடி பலவருடங்களான பாழடைந்த பங்களா போன்ற எஃபெக்டை காட்டியது . திடீரென எக்சலில் வந்த ஒருவர் கேட்டைத் திறந்தார் . பின் வெளியில் நின்றிருந்த என்னையும் என்னைப்போலவே அதைத் தியேட்டர் என நம்பி படம் பார்க்க வந்திருந்த சிலரையும் அழைத்தார் . எதுக்கு கூப்டராங்கனு தெரியாமலே அவரை நோக்கி சென்றால் 50 ரூபாய்பா என்றார் . எதுக்குங்ணே என்றால் டிக்கட் விலை பா என்றார் . சரி என்று அவரிடம் கொடுத்து விட்டு டிக்கெட்டுக்காக நின்றேன் . என்னப்பா ? என்றவரிடம் டிக்கெட் என்றால் அதெல்லாம் வேண்டாம்பா நீ போய் பாரு என்றார் . எனங்கடா இது ? தியேட்டரா இல்ல டூரிங் டாக்கிஸா என்று படத்தைப் பார்க்குமுன்னே பயந்தவாறு உழ்நுழைந்த எனக்கு இன்ப அதிர்ச்சி . வெளியே பார்க்க படுகேவலமாக இருந்த திரையரங்கு , உள்ளே சுத்தமாகவும் ஓரளவு நன்றாகவும் இருந்தது . சிலசமயங்களில் திருவள்ளுவரின் வாக்கைக்கூட நம்மவர்கள் பொய்க்கவைத்து விடுகிறார்கள் என்றவாறே படத்தைப்பார்க்க ஆரம்பித்தேன் . என்ன ஆச்சரியம் ? RDX , AURO 3D போன்ற சவுண்ட் டெக்ன்றாலஜியையெல்லாம் அடித்துத் தூக்கி எறிந்தார்போல் சவுண்ட் எஃபெக்ட் அதகளம் செய்தது . படத்தில் ஒரு இடி இடித்தால்கூட தியேட்டரே வைப்ரேட் மோடுக்கு மாறியது . எனக்கெல்லாம் ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்துவிட்டது .

பொதுவாக பேய்ப்படங்களைத் தியேட்டருக்குச் சென்று ரசிப்பதைவிட , வீட்டில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு FULL VOLUME –ல் தனியாக பார்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும் . தியேட்டருக்குச் சென்றால் பக்கத்தில் வரும் சில பக்கோடா வாயர்கள் , மெனமெனவென்று ஏதாச்சும் அருகிலிருப்பவர்களிடம் கமெண்ட் அடித்துக்கொண்டோ , பாடாவதியான செல்போனில் ‘ஆளான நாள் முதலா ’-வென்று  ரிங்டோன் அடித்துக்கொண்டோ , நம்மை வெறுப்பேத்தும் . இன்றும் என் பக்கத்தில் ஒரு கலூரிமாணவர்கள் கூட்டம் வந்திருந்தார்கள் . படம் ஆரம்பிக்கும் முன்னே ஆதிகால டப்ஸ்மேஷ்களை போட்டு சாவடித்துக்கொண்டிருந்தார்கள் . போச்சுடா ! இன்னைக்கு நாம படத்த பாத்த மாதிரிதான்னு தவித்த எனக்கு படம் ஆரம்பித்ததும் தியேட்டர் சவுண்ட் எஃபெக்டில் அவர்கள் பேயரைந்தவர்களாகினர் .

இந்த தியேட்டர்புராணத்தை ஓரங்கட்டிவிட்டு திரைப்படத்தைப்பற்றி பார்க்கலாம் . நம் தமிழ் சினிமாவில் கடைசியாக வந்த சீரியஸ் பேய் ஹாரர் & த்ரில்லர் எதுவென்று உங்களுக்கு நியாபகமிருக்கா ? கொஞ்சம் கடினமான கேள்விதான் . ஒருநிமிடம் யோசித்துவிட்டு தான் ‘யாவரும் நலம்’ என்று பதில் சொல்லவேண்டியுள்ளது (நடுவில் வந்த ‘ரா’ , ‘ஆ’ எல்லாம் அந்தளவு திருப்தி படுத்தாமல் போன திரைப்படங்கள் . வந்த தடமும் போன சுவடுமில்லாமல் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டன .) . காரணம்  அந்தளவு நம்மை காமெடி பேய்த்திரைப்படங்கள் ஆக்கிரமித்துவிட்டன . வழவழவென நாய்க்குட்டி போடுவதுபோல் தமிழ்சினிமாவில் காமெடிப்பேய்களை உலாவவிட்டுக்கொண்டே இருந்ததால் எனக்கே ஒரு டவுட் வந்துவிட்டது . உண்மையில் பேய்ப்படங்கள் என்றால் இதுதான் என்றவொரு இலக்கணத்தை எனக்குள்ளே எழுதமுற்படும் அளவிற்கு ப்ரைன்வாஷ் செய்துவிட்டார்கள் தமிழ் இயக்குநர்கள் . இனிமேல் தமிழ்சினிமாவில் பேய் என்றாலே காமெடிதான் என்றநிலையை உருவாக்கி வைத்துவிட்டார்கள் .
1408 , DRAG ME TO HELL , HAUNTING IN CONNECTICUT , SHINING , CABIN IN THE WOODS , CONJURING மாதிரியான சீரியஸ்பேய் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான் . இதில் 1408 திரைப்படத்தை மட்டும் நான் திரும்ப பார்க்கவே கூடாது என்று சத்தியம் செய்துவைத்திருக்கிறேன் . காரணம் அந்த படம் பயப்படுத்தாது ; ஆனால் பயங்கரமாக பதட்டப்படவைக்கும் . பேய்ப்படங்களைப் பொறுத்தவரை முதல்முறை ஆஹா ஓஹோவென்று தெரிந்தாலும் மீண்டும் பார்க்கும்போது முதல் 20 நிமிடங்களிலேயே கொட்டாவி வரவைத்துவிடும் . காரணம் பேய்ப்படங்களுக்கு வெறும் ஸ்பெசல் எஃபெக்ட் , சவுண்ட் எஃபெக்டை மட்டும் நம்பி எடுக்கப்படுவதுதான் . ஆனால் SHINING மற்றும் 1408 போன்ற திரைப்படங்கள் அதனின்று தள்ளி நிற்கின்றன . காரணம் ஆடியன்சை , பேயைக்காட்டி பயமுறுத்தாமல் அந்த கதையின் சிச்சுவேசனையும் , கேரக்டர்களின் உணர்வுகளையும் நமக்குள் இறக்கியிருப்பதுதான் . அப்படிப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெகுகுறைவு . சமீபகாலங்களில் அப்படியொருத் திரைப்படமே கடந்த 4 ஆண்டுகளில் வரவில்லையென்றுதான் சொல்லவேண்டும் . இப்படியெல்லாம் என்னைப்போலவே  புலம்பிக்கொண்டிருக்கும் ஹாரர் பிரியர் நீங்களென்றால் தயங்காமல் இத்திரைப்படத்திற்கு செல்லலாம் .

படத்தின் கதைப்படி நான்கு நண்பர்கள் ; அதில் ஒருவன் இயக்குநராக ஆசைப்படுகிறான் . அவனுக்கு டிமான்டி காலனி எனுமிடத்தில் உள்ள ஒரு பங்களாவைப்பற்றிய தகவல்களும் அதன் வரலாற்றுப்பிண்ணனியும் அரசல்புரசலாகத் தெரியவருகிறது . அதைவைத்து ஒரு பேய்த்திரைப்படம் இயக்கமுயற்சிக்கிறான் . ஆனால் வாய்ப்புக் கிடைக்கவில்லை . ஒருமுறை நால்வரும் குடித்துவிட்டு  , எங்கேயாவது செல்லலமா எனக்கேட்க , அப்போது இயக்குநராக விரும்புவபன் டிமான்டி காலனி பேய்பங்களா பற்றி கூறி அங்குசெல்லலாமெனக் கூறுகிறான் . நால்வரில் ஒருநண்பன் பயந்தசுபாவமுள்ளவன் ; அவனையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு பங்களாவிற்கு செல்கிறார்கள் ; பின் திரும்பியும் வந்துவிடுகிறார்கள் . வந்தபின் இயக்குநராக முயற்சிப்பவன் அந்த பங்களாவிற்கு சென்றது அங்குள்ள ஒரு அரியவகைகல்லாலான நகையைத் திருடுவதற்குத்தான் என்றுகூறி நகையை எடுத்துக்காட்டுகிறான் . அதன்பின் ? நகையைத்தேடி டிமான்டி வர , நடிகர்களைக் காட்டிலும் நமக்கு பயம் அதிகமாகிவிடுகிறது . இந்த டிமான்டி யார்? அவன் எதற்காக பேயாகிறான் என்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது . அதெல்லாம் கூறிவிட்டால் த்ரில் போய்விடும் .

வழக்கமாக பேய்வரும் நேரத்தில் மட்டும் காத்தடிப்பது , கதவடிப்பது , மழைபெய்வது என இயற்கையைத் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்த இயக்குநர்கள் மத்தியில் இப்படத்தின் இயக்குநர் அஜய்  மிகச்சரியாக கையாண்டிருப்பதுமுதல்  ஒவ்வொருவரின் சாவைப்பற்றியும் லவாகமாக காட்டியிருப்பது சபாஷ் . கதையில் சிலஇடங்களில் 1408 –ன் மிகச்சிறியசிறிய அளவு தாக்கமிருந்தாலும் 1408 –ன் காப்பி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது . ஒவ்வொருத்தரைப்பற்றியும் சுருக்கமான அறிமுகத்துடன் துவங்கும் திரைப்படத்தில் இந்த சீன் தேவையில்லை , அந்த சீன் தேவையில்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை . காமெடி என்றபெயரில் மொக்கை போட ஆயிரம் இடம் இருந்தாலும் , நீட்டான கதையுடன் அட்டகாசமான திரைக்கதையை வைத்து டெக்னிக்கலாக ஒரு அட்டகாசமான பக்கா ஹாரரைக் கொடுத்திருக்கிறார் அஜய் . அஜய்க்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் அஜய் சிங்கும் இசையமைப்பாளர் கேபா ஜெரமியாவும் செமையாக கைகொடுத்துள்ளார்கள் . கேமரா ஆங்கிள் அட்டகாசம் , ஹாலிவுட் நேர்த்தி ; ஏன் ஹாலிவுட்டில்கூட இந்தளவு அருமையாக கேமரா ஆங்கிள் உபயோகிக்கப்படவில்லை என்றே சொல்லலாம் . முதல்பாடல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பிண்ணனி இசையில் கேபா வெளுத்து வாங்கியிருக்கிறார் .

படத்தில் மைனஸ் என்றால் , வோஜா போர்டு காட்சிகளில் நண்பர்கள் கூப்பிட்டதும் உடனே பேய்வந்துவிடும் என்பதை மட்டும் கொஞ்சம் ஜீரணிக்கமுடியவில்லை . அதேபோல் அருள்நிதியின் லுக் தான் மாறியிருக்கிரதே தவிர நிறைய இடங்களில் வழக்கம்போல திருடிமாட்டியவர்போல முழிக்கின்றார் . இவற்றைத்தவிர இந்த படத்தில் வேறெதுவும் பெரிய மைனசாக தெரியவில்லை .

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து பயப்படவேண்டிய ஒரு MUST WATCH HORROR .  படத்தின் வெற்றியைப்பொறுத்து இதேபோல் பக்கா HORROR –க்கு தமிழ்சினிமா மாற வேண்டும் .
உங்கள் விருப்பம்

3 comments:

 1. ஒருமுறை பயப்படலாம்ன்னு சொல்றீங்க...?

  ReplyDelete
 2. பார்ப்போம்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. வழக்கம் போல அருமையான விமர்சனம் ...
  வாழ்த்துகள்
  தம +

  ReplyDelete