Saturday, 24 January 2015

தாயகம் – சினிமா விமர்சனம்சிறுவயதில் நான் கேப்டனின் பரமரசிகன் . அவர் எதிரகளை பேக் கிக்கில் அடித்துத்துவைக்கும் சண்டைக்காட்சிகளைப்பார்த்து அதேமாதிரி பிராக்டிஸ் செய்த ஆள் நான் . வல்லரசு படத்திற்கு தியேட்டரில் சென்று பார்க்கும்போது எனக்கு 7 வயது இருக்கும் . அந்த படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியைப்பார்த்து , உணர்ச்சிவெள்ளத்தில் எனக்குமுன்னால் அமர்ந்திருந்தவரை எட்டி உதைத்ததெல்லாம் இப்போது கூட நினைவிற்கு வருகிறது . ஆனால் அதன்பின் அவர் ஓவர்மாஸ் என்கிற பெயரில் குப்பையாய் படங்களை எடுக்க , நானோ அர்ஜூனின் ரசிகனாய் மாறிவிட்டேன் . நரசிம்மா படம் கூட வந்த புதிதில் பார்க்கும்போது பவராக இருந்தது . இப்போதெல்லாம் பார்த்தால் பவர்ஸ்டாரே விழுந்து சிரிக்கும் வண்ணம் இருக்கும் . ஆனால் எது எப்படியாயினும் கேப்டனின் விருதகிரி வரை பார்த்துவிட்டேன் . இந்த தாயகம் திரைப்படத்தை பார்க்காமல்விட்டிருந்ததால் இப்போது டவுன்லோடிப் பார்த்தேன் . உண்மையைச்சொல்லவேண்டுமெனில் நான் பார்த்த விஜயகாந்த் திரைப்படங்களிலே பெஸ்ட் இதுதான் என்பேன் . இன்னும் பத்து வருடங்கள் கழித்துப்பார்த்தாலும் இந்த படம் சூப்பராகத்தான் இருக்கும் .

முதல்காட்சியிலேயே மூன்று கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள் . அவர்கள் தப்பிக்க உதவுபவன் கான் . அவன் அந்த மூன்றுபேருக்கும் ஒரு வேலையை ஒப்படைக்கிறான் . ஒரு ஆராய்ச்சியாளரை கடத்தவேண்டும் என்பதே . அந்த ஆராய்ச்சியாளர் ப்ளட் க்ளாட்டிங் எனும் ரத்தப்போக்கைக்கட்டுப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடிக்கிறார் . அவரின் வளர்ப்பு மகள் தான் வீடியோ புகழ் ரஞ்சிதா . ஆராய்ச்சியாளருக்கு ஒரு மீனவ நண்பன் . அவர் தான் விஜயகாந்த் . ஒருமுளை அந்த ஆராய்ச்சியாளர் , ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு விமானத்தில் செல்ல ,  விமானத்தை ஹைஜாக் செய்யமுயற்சிக்கிறார்கள் அந்த மூன்று கைதிகளும் . அப்போது நடக்கும் மோதலில் , பைலட்டான நெப்போலியன் காஷ்மீரின் பனி அடிர்ந்த ஒருபகுதியில் விமானத்தைத்தரையிறக்குகிறார் . விமானம் இறங்கிய  பகுதியில் இருக்கும் பனிக்கரடி (மன்சூர் அலிகான்) எனும் தீவிரவாதிக்கு விஷயம் தெரிந்து அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்கிறான் . அவனுக்கு அந்த கைதிகளின்மூலம் அந்த பயணிகளிடையே இருக்கும் ஆராய்ச்சியாளரின் மருந்து பற்றி தெரிகிறது . அந்த மருந்தின் பார்மூலா தனக்கு வேண்டும் என அங்கிருப்பவர்களை மிரட்டுகிறான் . இன்னொரு பக்கம் ஆராய்ச்சியாளரின் நண்பரான விஜயகாந்தின் தந்தை , தன் நண்பரை மீட்டுவரவேண்டும் என்று விஜயகாந்திற்கு கட்டளையிட , ரஞ்சிதாவைக்கூட்டிக்கொண்டு காஷ்மீர் கிளம்புகிறார் விஜயகாந்த் . அது ஏன் விஜயகாந்தே தான் போகனுமா ? ராணுவம் என்ன தூங்கிக்கொண்டிருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம் . ராணுவத்திற்கு பனிக்கரடி மிரட்டல் விட்டதாலும் அங்கு என்ன நடக்கிறது என அறியமுடியாமல் ராணுவம் தன் நடவடிக்கையை கைவிட்டிருக்கும் . சரி , ப்ளட் க்ளோட்டிங் மருந்தை ஆராய்ச்சியாளர் , பனிக்கரடியிடம் கொடுத்துவிட்டு வந்துவிடலாமே ?  என்ற கேள்வி உங்களைப்போலவே எனக்கும் எழுந்தது . அவனிடம் கொடுத்தால் அவன் பாகிஸ்தானிடம் விற்றுவிடுவான் . அவர்கள் மேட் இன் பாகிஸ்தான் என போட்டு உலகமெங்கும் விற்றுவிடுவார்கள் .  சரி ,மீனவரான கேப்டன் காஷ்மீர் போனதும் டமால் டுமில் என சுட்டுவிட்டு எல்லாரையும் காப்பாற்றிவிடுவார் என நினைக்காதிர்கள் . இங்கிருந்து கிளம்பும்போதே தலைவர் துப்பாக்கி முதல் அனைத்து ஆயுதங்களையும் சுட்டு பயிற்சி எடுத்துவிட்டுத்தான் செல்வார் . அங்கே போனதும் சும்மா சடசடவென்று எல்லாரையும் ஆயுதத்தால் கொல்லாமல் அறிவால் தீர்த்துக்கட்டி வெற்றிபெறுவார் .

 மீனவனாகவும் கோவக்கார இளைஞனாகவும் கேப்டன் . வில்லன் பனிக்கரடியாக மன்சூர் . பாக்சர் பயில்வானாக அருண்பாண்டியன் . பைலட்டாக நெப்போலியன் .பேசஞ்சர்களில் விவேக் , தியாகு போன்றோர் .ஏர்ஹோஸ்டசாக மோகினி . ஆராய்ச்சியாளரின் தந்தையாகவும் , கேப்டனை ஒருதலையாக காதலிப்பவராகவும் ரஞ்சிதா என அத்துனைப்பேரும் தங்களின் கதாபாத்திரங்களைச்சிறப்பாக செய்துள்ளனர் .நான் நிச்சயமாய் இப்படி ஒரு படத்தினை எதிர்பார்க்கவேயில்லை . ஒருசில மைனர் மிஸ்டேக்குகள் இருந்தாலும்  , இது ஒரு சிறந்த படம் என்பதில்துளி சந்தேகமுமில்லை . திரைக்கதை பெட்ரோலைப்போல் வேகவேகமாய் பற்றிக்கொண்டு எரிகிறது . படத்தின் நீளம் 2.38 மணிநேரம் என்றதும் தயங்கியபடியே பார்த்தேன் . முதல் 10 நிமிடங்களிலேயே இப்படம் கவர்ந்தது . என்னடா அதுக்குள்ள முடிஞ்சிடுச்சினு தான் தோண்றியது . இன்னொரு முக்கிய விஷயம் , இப்படத்தை அப்படியே THE DARK KNIGHT படத்தின் திரைக்கதையோடு கம்பேர் செய்யலாம் . காரணம் படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும் . நம்பினால் நம்புங்கள் , இப்படத்தில் கேப்டன் 45 நிமிடங்கள் கடந்தபின்னே இன்ட்ரோ ஆகிறார் . பொதுவாக தமிழ்சினிமாவில் கதை , திரைக்கதை , வசனம், இயக்கம் அனைத்துத்துறைகளையும் ஒருத்தரேதான் கவனித்துக்கொள்வார்கள் . இதில் டி.ஆர் போன்றோர் லைட்டிங் பிடிப்பவது வரை தாங்களே செய்துகொள்வார்கள் . ஆனால் இத்திரைப்படமோ கதை , ஒருவர் , திரைக்கதை ஒருவர் , இயக்கம் ஒருவர் என ஹாலிவுட் பாணியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது .

படத்தில் பெரும் ப்ளஸ்பாய்ன்ட் மன்சூர் அலிகான் தான் . மனிதர் பனிக்கரடி எனும் தீவிரவாதி கேரக்டரில் அதகளம் செய்கிறார் .டார்க்நைட்டில் ஜோக்கர் செய்யும் சேட்டைகளைப்போலவே , சாரி இவர் செய்யும் சேஷ்டைகளைப்போலவே டார்க் நைட்டில் ஜோக்கரின் கேரக்டரும் அமைந்திருக்கும் . என்ன , அதில் ஜோக்கர் அதிபுத்திசாலி , இதில் சுமாரான புத்திசாலி .  வசனங்கள் எல்வாம் செம ஷார்ப் . மன்சூரும் கேப்டனும் பேசிக்கொள்ளும் இடத்தில் வரும் வசனங்கள் அட்டகாசம் .

ஒரு காட்சியில் மன்சூர் அலிகான் 70 பேரையும் வரிசையாய் நிற்கவைத்து சீட்டு எடுக்கச்சொல்லுவார் . யாருக்கு 1-ம் நம்பர் சீட்டு வருகிறதோ அவரைக்கொன்றுவிடுவதாய் தெரிவிப்பார் . அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நெப்போலியன் வாதிடுவார் .

‘நீ யாரு மேன் ஒத்துக்கறதுக்கு ?’ என மன்சூர் கேட்க ,

‘இங்க இருக்க பேசன்சர் எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு ’ என்று நெப்போலியன் கூற
‘நீயே என் பொறுப்புல இருக்க. நீ இவங்களுக்கு பொறுப்பா ? பெரிய பருப்பு மாதிரி பேசாத மேன் ’ என்றுசொல்வார் .

சண்டைக்காட்சிகளை படமாக்கியவிதம் அருமை . அக்கால ஹாலிவுட் உலகிற்கே சவால்விடும் அளவிற்கு சண்டைக்காட்சிகளையும் சேசிங் காட்சிகளையும் படமாக்கியுள்ளார்கள் . பொதுவாக கார் சேசிங் காட்சிகள் என்றாலே , ஹீரோவின் கார் இடித்ததும் ஸ்டன்ட் மேன்கள் ஓட்டிவரும் பைக்கோ , காரோ பறக்கும் . இதில் அந்தமாதிரியில்லாமல் , அவர்கள் கல்லின்மேல் மோதியோ , அல்லது எங்கேனும் இடித்தோதான் பறப்பது போல் காட்டியுள்ளார்கள் . அதேபோல் வண்டி எங்கயாவது இடித்தாலே பனைமரம் உயரத்திற்கு வெடித்துப்பறப்பதைப்பார்த்திருப்போம் . இதில் பெட்ரோல் லீக் ஆகி வெடிப்பது போல் காட்டியிருப்பார்கள்.நான் பார்த்த பெஸ்ட் கார் சேசிங் காட்சிகளில் இப்படத்தின் காட்சிகளும் ஒன்று . விஜயகாந்த் , கவிழ்ந்த காரினுள் மாட்டிக்கொள்ள , அதை வில்லனின் வண்டி இடித்துக்கொண்டே இழுத்துச்செல்லும் காட்சிகள் மிரட்டியிருக்கிறார்கள் . ஆனால் முதலில் தீவிரவாதிகளிடமிருந்து நெப்போலியன் மற்றும் அருண்பாண்டியன் , அங்கிருப்பவர்களைக்கூட்டிக்கொண்டு தப்பிச்செல்லும் காட்சி மட்டும் கொஞ்சம் திருஷ்டியாய் இருக்கும் . அதில் ஒருவாறு சமாதானம் செய்துகொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறோம் . சரியாய் குறிபார்த்துக்கூட சுடத்தெரியாத தீவிரவாதிகளா என எண்ணத்தோன்றும்படியாய் இருக்கும் . ஆனால் நரசிம்மா போன்ற படங்களுடன் கம்பேர் செய்யும்போது , இது ஒரு சாதாரணம் தான் .

விஷ்வரூபத்தில் ஒமர் , தான் மதுரையில் தமிழ் கற்றதாக தெரிவிக்கும்போது கூப்பாடு போட்டவர்கள் இப்படத்தினைக்கவனிக்காமல் விட்டது ஏனோ தெரியவில்லை . இதில் மன்சூர் அலிகான் , தான் சென்னையில் தமிழ் கற்றதாகத்தெரிவிப்பார் . மேலும் தாங்கள் ஜிகாதிகள் என்றும் கூறுவார் . காஷ்மீர்த்தீவிரவாதிகள் வெள்ளி மதியம் 1.30 மணிக்குத்தொழுகை நடத்துவதை வேறு காண்பிப்பார்கள் . விஷ்வரூபத்தில் எந்தெந்த காட்சிகளுக்கெல்லாம் பிரச்சனை செய்தார்களோ , அதைவிட அதிகமாய் காட்சிகள் இருக்கின்றன . இப்படத்திற்கு பிரச்சனை செய்தார்களா என்றுதான் தெரியவில்லை .

ஒருவகையில் ராம்போ போல் கதை இருந்தாலும் , இது அதுவல்ல . இப்படம் ஹாலிவுட் காபியா என்று தெரியாது . ஆனால் கண்டிப்பாய் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம் . படத்தில் ஒரு காட்சியாவது ட்ரான்ஸ்பார்மை வெடிக்க வைப்பார் , அல்லது சண்டைக்காட்சிகளில் ஏதேனும் மாஸாய் செய்வதாய் நினைத்து நம்மை சிரிக்கவைப்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருந்தேன் . ஆனால் அதற்கெல்லாம் துளிகூட சான்ஸ் கொடுக்காமல் நேர்த்தியான ஒரு ஆக்சன் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் இயக்குநர் . அதிவேக திரைக்கதை மற்றும் பிரம்மாண்ட லொகேசன்கள் , சண்டைக்காட்சிகள் , அடுத்தது என்ன என்ற ஆர்வம் , எதிர்பாராத ட்விஸ்டுகள் என துளிகூட சோர்வடையாமல் செல்லும் படம் . ஆக்சன் விரும்பிகள் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது .


யூட்யூப்பில் இத்திரைப்படத்தைப்பார்க்கதொடர்புடைய இடுகைகள்


உங்கள் விருப்பம்

12 comments:

 1. அட...! ரசனைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வாரிசே நடிக்க வந்த பிறகு கேப்டன் படத்திற்கு விமர்சனமா :)மறக்க முடியலியா ?
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. அந்தளவுகுபடம் சூப்பரா இருக்கும்ணா ! வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா !!!

   Delete
 3. விஜயகாந்த்- என் அம்மாவிற்கு பிடித்த hero:) இவ்ளோ பழைய படத்துக்கு விமர்சனம் எழுதலாமா!! இந்த ஐடியா புதுசா இருக்கு சகோ! விஜயகாந்த் நிறைய நல்ல கதையம்சமுள்ள படங்களில் முன்பு நடித்திருக்கிறார். அவர் ராதா, ராதிகா காலத்தில் நடித்த படங்கள் பல அருமையான கிளாசிக் வகை. என் அத்தைகளில் விருப்பபாடல்கள் பல அவரது படங்களில் இருக்கும்.
  **காட்சியாவது ட்ரான்ஸ்பார்மை வெடிக்க வைப்பார் , அல்லது சண்டைக்காட்சிகளில் ஏதேனும் மாஸாய் செய்வதாய் நினைத்து நம்மை சிரிக்கவைப்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருந்தேன் . ஆனால் அதற்கெல்லாம் துளிகூட சான்ஸ் கொடுக்காமல் நேர்த்தியான ஒரு ஆக்சன் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் இயக்குநர் ** அப்போ கண்டிப்பா இந்த படம் பாக்கணுமே:)

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலப்படங்களில் இதைவிட அதரப்பழசான படங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கிறேன் அக்கா ! எப்போ வந்தா என்ன ? நல்லா இருந்தா எழுதிட வேண்டியதுதான் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா

   Delete
 4. அழகான படம். நான் பார்க்கல இப்போ பார்க்க போகிறேன். பரவாயில்லை, இப்போ இப்படி ஒரு விமர்சம் விஜயகாந்த்க்கு

  ReplyDelete
 5. ஆஹா ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஅக்கா !! பாருங்க , படம் நல்லா இருக்கும்

  ReplyDelete
 6. நண்பரே இந்த சினிமாக்காரங்களே நான் 2 ½ வயதிலேயே வெறுக்க ஆரம்பித்து விட்டேன் முக்கிய காரணம் தரையில கால் படாமல் 10 பேரை அடிக்கிறாங்கே... இதனாலதான் எனக்கு இவங்களை கண்டாலே அலர்ஜி அதுவும் இப்போ என்னடானா சர்வ சாதாரணமா 100 பேரை பந்து போல எத்தி விடுறாங்கே....
  சரி அது கிடக்கட்டும் ஒரு விமர்சகர் என்ற முறையில் தாங்கள் எழுதிய விதத்தை நன்றாகவே ரசித்தேன் அதுவும் ...
  வீடியோ புகழ் ரஞ்சிதா
  இதை மிகவும் ரசித்தேன் ஹி ஹி ஹி
  அது சரி எப்படி நண்பரே முழு படத்தையுமே காணொளி இறக்கி இருக்கிறீர்கள் எனக்கு 10 நிமிடத்துக்கு மேல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே எனது கணினி அதன் விபரம் கொஞ்சம் மெயில் அனுப்பவும்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி அண்ணா ! உங்களுக்கு மட்டுமல்ல , கால் படாமல் 10 பேரை பந்தாடும் ஹீரோக்களைக்கண்டால் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன் . நல்லவேளையாய் அம்மாதிரியான படங்களை முடிந்தமட்டிலும் தவிர்த்துவிடுவேன் .சினிமா என்பது கனவு ஊடகம் தானே அண்ணா . நிஜத்தில் மனிதனால் செய்யமுடியாத விஷயத்தை திரையில் தன்னைப்போன்ற சகமனிதன் செய்யும்போது , அது பொய் என்றாலும் ஏற்றுக்கொண்டு பார்க்கும் மனபக்குவம் பலருக்கு இருக்கிறது . ஆனால் நமக்கு இல்லை .

  https://www.youtube.com/watch?v=tOZAmi5EvU0

  இந்த லிங்க் உபயோகித்துப்பாருங்கள் அண்ணா ! இந்த படத்தில் ஒவ்வொரு பத்துநிமிடத்திற்கு ஒருமுறை யூட்யுப் குழுவினரால் விளம்பரம் ஏதாவது காண்பிக்கப்படும் . அவ்வாறான சமயத்தில் இம்மாதிரியான கோளாறுகள் ஏற்படும் .

  வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா

  ReplyDelete