Wednesday, 17 September 2014

CN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்

கிறிஸ்டோபர் நோலன் . நீங்கள் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களை பார்த்திருப்பீர்கள் என்றால் , இப்பெயரை கேள்விப்படாமல் இருக்கமுடியாது . மனுஷர் , ஒவ்வொரு படமும் , ஒவ்வொரு விதமாக எடுப்பார் .இதுவரை எடுத்த படங்களின் கதைச்சூழல் , ஒவ்வொன்றிலும் வெவ்வேறாகதான் இருக்கும் . முதல் படமான FOLLOWING முதல் , கடைசியில் வெளிவந்த THE DARK KNIGHT RISES வரை , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் .இவர் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படமான INTERSTELLER திரைப்படம் , நவம்பரில் வெளியாக உள்ளது. எப்படியும் அந்த படம் ரிலிசானவுடன் ,வலைப்பதிவு உலகத்தில் ,ஹாலிவுட் விமர்சகர்களால் குறைந்தது ஒரு மாதத்திற்காவாது உச்சரிக்கப்படும் பெயர் ,இவருடையதாகதான் இருக்கும் . அதனால் , அவரின் ஒவ்வொரு படங்களையும் , ஒரு சின்ன தொடர்பதிவாக , இப்போதே எழுதி தள்ளவிடலாம் என்றிருக்கிறேன் .

பொதுவாக , ரேட்டிங் எனப்படும் தரவரிசையில் சாதிக்கும் படங்கள் , வசூலில் கவிழ்ந்துவிடும் . ஆனால் , வசூலிலும் கலக்கிவிட்டு , ரேட்டிங்கிலும் இடம்பெறும் வகையறா படங்கள் தான் நோலனின் படங்கள் . இவரின் ஒவ்வொரு படமும் , ஒரு இலக்கியம் போன்றதுதான். ஒவ்வொரு படைப்பும் ஒருவித அனுபவத்தை கொடுக்கும் . ஒரு படம் , நமக்குள் என்ன செய்யும் ? பெரும்பாலும் நம் மூளையை உறங்கச்செய்துவிட்டு , உணர்ச்சியுடன்விளையாடும் . ஆனால் , இவரின் படங்களோ , உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு , மூளையை கசக்கிப்பிழிந்து வேலைவாங்கும் . நம்ப முடியாத விஷயங்களை கூட , அழகாக நம்மை நம்பவைத்து , ஏமாற்றி , நம் மூளையுடன் இரண்டு மணிநேரம் , மென்மையாக விளையாடுவதுதான் ,நோலனின் தனித்துவம் . திகில் படங்களிலோ , க்ரைம் படங்களிலோ , வில்லன் யாரென்று கண்டுபிடிக்கத்தான் நம் மனம் , அலைபாயும் .ஆனால் இவரின் படங்களில் ,  கதை என்ன என்று தேடவைக்கும் .சரி, FOLLOWING கதைக்கு வரலாம் .
மற்றவர்களை பின்தொடர்வதே எனது வேலை என்று ஒருவன் போலிசிடம் சொல்வதாக , படம் ஆரம்பிக்கும் . எழுத்தாளனாக வேண்டும் என்பதை , லட்சியமாக கொண்டுள்ள ஒரு இளைஞன் . அதற்காக , மற்றவர்களை பின்தொடர்ந்து , அவர்களின் வாழ்க்கைச்சூழலை அறிந்து கொள்ள முயற்சிக்கிறான் . அதிலிருந்து , தனக்கு தேவைப்படும் கதை கிட்டலாம் என்பதே அவனது எண்ணம் . அவனுக்கென்று சில விதிகளை , அவனே உருவாக்கிக்கொள்கிறான் . யாரையும் அதிக காலம் பின்தொடரக்கூடாது . பெண்களை பின்தொடர்தல் கூடாது. அதேபோல் , தான் பின்தொடரும் மனிதர்களின் வசிப்பிடத்தைத்தெரிந்து கொண்டால் , அப்போதே அவர்களை மறந்துவிட்டு வெளியேறிவிடவேண்டும் .  ஒருவனை பின்தொடர்ந்துசென்றால் , மீண்டும் அவனைபின்தொடரல் கூடாது. இது போன்ற சில விதிகளை உருவாக்கிக்கொள்கிறான் . அந்நேரத்தில் ஒருவனை தொடரும்போது , அவனிடம்  மாட்டிக்கொள்கிறான் . அவனிடம் , உண்மையைக்கூறிவிடுகிறான் . அவனோ , தன் பெயர் காப் எனவும் ,அவனுடன் வந்தால் , சில இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை காட்டுவதாகவும் கூறி ஒரு வீட்டிற்கு அழைத்துச்செல்கிறான் . யாருடையவீடு என்பது அறியாமலே ஹீரோ, அவனை பின்தொடர்கிறான் . அங்கு சென்ற காப்  ,  ஹீரோவிடம் அந்த வீட்டில் வாழ்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை , அவ்வீட்டின் சூழலை வைத்தே விளக்குகிறான் . ‘காப்’ உடன் பழகும் நாட்களில் , அடுத்தவர் வீட்டின் சுற்றுச்சூழலைக்கொண்டே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் , மற்றவர் இடங்களில் எவ்வாறு நுழைவது என்பதையும்  , அரையும்குறையுமாக  ஹீரோ அறிந்து வைத்திருப்பார் . அதேநேரத்தில்  ஹீரோ , ஒரு பாரில் அழகான பெண்ணைப்பார்க்கிறார் . அவள் முகத்தில் ஏதோ ஒருவிதமான கஷ்டங்கள் தெரியவர , அவளையும் பின்தொடர்கிறான் . அவளிடம் பேசும்போது , தன்னை அந்த பாரின் ஓனர் கடத்தி வைத்து சித்தரவதைப்படுத்துவதாகவும் , அவன் ஒரு கேங்ஸ்டர் எனவும் கூறுகிறாள் . அவளுடன் பழக பழக , ஹீரோ அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார் . அவளை அங்கிருந்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்கிறான் . அதற்கு அவளோ , தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் அந்த ரவுடியிடம் இருப்பதாகவும் , தான் எங்காவது வெளியேறினால் , அதை வெளியிட்டுவிடுவதாகவும் கூறுகிறாள் . அவளை காப்பாற்ற  ஹீரோ , ‘காப்’பிடம் உதவி கேட்கிறார் . ‘காப்’போ , தன்னைப்பற்றிய உண்மைகளை அவளிடம் எதற்காக கூறினாய் என்று , ஹீரோவை நாலு சாத்து சாத்துகிறார் . அதன்பின் , ‘காப்’பிற்கு பணம் தருவதாக கூறி, ஹீரோ  அவனிடம் வேண்டுகிறார்.’காப்’பும் அங்கு நுழைய ஐடியா கொடுக்கிறார் . ஹீரோவிற்கு தேவையானது , அந்த பாரில் , ரகசிய இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிப்பதாக கூறிய ஹீரோயினின் , அந்த மாதிரியான படங்கள் . அங்கு சென்று பார்த்தால் , அம்மாதிரியான படங்கள் எதுவுமில்லை . சரி ,காப்பிற்கு கொடுக்கவேண்டிய பணத்தை , அந்த பாரில் இருந்து கொள்ளையடித்துவிட்டு வெளியே தப்பிக்கமுயலும்போது , பாரில் வேலைசெய்யும் ஒருவன் , ஹீரோவை பார்த்துவிட , அவனை  அடித்துவிட்டு , ஹீரோ வந்துவிடுவார்  .ஹீரோயின் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்த ஹீரோ , இவையனைத்தும் காப்பின் திட்டங்கள் என்று கண்டுபிடித்து ,  போலிசிடம் சென்று நடந்த உண்மைகளை கூறுவான் . அதன்பின்  , முடிவு யாரும் எதிர்பாராதது . ஏன், அந்த படத்தில் ஹீரோவுக்கே , முடிவு எதிர்பாராதது தான் . அவ்வளவு நேரம் நாம் ஒருவனை ஹீரோவாக நினைத்துக்கொண்டிருக்கும்போது , ‘செல்லக்குட்டி ! அவரு ஹீரோனு யார் சொன்னா ? இவருதான் ஹீரோ’னு நோலன் , ‘நச்’சென்று ஒரு ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்திருப்பார் .இதே கதையை , எங்கோ பார்த்தது போலோ , கேட்டது போலோ இருந்தால் , உங்கள் ஞாபகத்திறன் அதிகம் என்றுதான் அர்த்தம் . ஜெய் எனும் ஆஸ்கார்விருது வாங்கப்போகும் நாயகர் ஒருவர் நடித்து ‘வாமனன்’ எனும் பெயரில் , இப்படத்தினை ‘உல்டா’வாக்கியிருப்பார்கள் . ஆனால் , இப்படம் இமயமலை உயரம் எனில் , அந்தப்படம் பரங்கிமலை உயரம்கூட வராது . இதே படத்தை அப்படியே காப்பியடித்து எடுத்திருக்கலாம் . நோலன் , என்ன இங்கவந்து பாக்கவா போறாரு ?மேலே நான் கூறியவாறு படத்தை எடுத்திருந்தால் , இது ஒரு சுமாரான படமாகமுடிந்திருக்கும் . ஆனால் , இப்படத்தின் திரைக்கதை அமைப்பை , நான்-லீனியர் அமைப்பில் எழுதி இருப்பதால் , இது ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கின்றது . பொதுவாக திரைக்கதையில் பலவிதம் உண்டு. அதை ரசிகர்களின் முன்னிலையில் எடுத்துச்சொல்லும் விதத்தைப்பொறுத்து , லீனியர் , நான்- லீனியர் என்று பிரிக்கலாம் .1,2,3,4,5,6,7,8,9 என்று வழக்கமான பாணியில் எண்களை சொன்னால் , அது லீனியர் . அதுவே 3,6,1,5,8,2,4 என்று மாற்றி மாற்றி கூறிவிட்டு , கடைசியில் நமக்கு அனைத்து எண்களையும் புரியவைக்கும் பாணியே , நான்-லீனியர். இதில் , இரண்டாம் வகைசார்ந்தவர் தான் நோலன் . இப்போதெல்லாம் ,ப்ளாக்பஸ்டர் வட்டத்தில் சிக்கிக்கொண்டதால் , முன்போல் நான் – லீனியர் வகையறா படங்களை எடுப்பதில்லை .

இவரிடம்  ஒரு பேட்டியில் , நான்- லீனியர் பற்றிய ஒரு கேள்வி கேட்கப்பட , அதற்கு நோலன் ‘முதலில் ஒரு காட்சியினை காண்பித்துவிட்டு , பின் வேறுகாலகட்டங்களில் நிகழும் காட்சியை காண்பிக்கிறேன் . பின் மீண்டும் முதல் காட்சியின் தொடர்ச்சியினை காட்டப்படும்போது , பார்வையாளர்களுக்கு , அக்காட்சியின் தொடர்ச்சி , சரிவர பினைந்திருக்கவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது .ஏனெனில் , அவர்களின் மனதினுள் , அக்காட்சியினை ஏற்கனவே தொடர்பு படுத்தியிருப்பார்கள்’ என்றார் . கிட்டத்தட்ட , இவரின் படங்களில் , THE DARK KNIGHT TRIOLOGY மற்றும் INCEPTION தவிர , மற்ற அனைத்தும் இம்மாதிரியான ரகங்களே !
நோலனின் படைப்புகளுக்கு , மாபெரும் தூண் என்றால் , அது திரைக்கதை . நோலன் படம் என்றாலே , அதில் திரைக்கதைதான் முக்கிய பங்கு வகிக்கும் ..இவரும் , இவருடைய சகோதரர் , ஜொனதன் நோலனும் சேர்ந்து திரைக்கதை எழுதுகிறார்கள் என்றால் , நமக்கு குறைந்தது 3 தடவையாவது பார்க்கும்படியான , ஒரு அற்புத திரைப்படம் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் . இன்றும் உலகளவில் சிறந்த திரைக்கதை அம்சங்கள் உடைய 3 படங்களில் ‘MEMENTO’வும் ஒன்று . நோலன் படைக்கும் பாத்திரங்களை பெரும்பாலும் உளவியல் , மனோதத்துவ ரீதியாக அணுகி , நம் கண்களின்முன் உலாவிட்டிருப்பார் . இதுவரை இவர் படைத்த பாத்திரங்களான  ‘COPP’ முதல் ‘BRUCE WAYNE’ வரை அத்தனை கேரக்டர்களையும்  ,மேற்கண்டவாறே அணுகியிருப்பார் .


இந்த படம் எடுப்பதற்கு , நோலனுக்கு இரண்டு விஷயங்கள் , உந்துதலாக இருந்ததாம் . ஒன்று, அவர் வாழ்ந்த கூட்ட நெரிசல்மிக்க லண்டன் மாநகரம் . மற்றொன்று , அவருடைய அபார்ட்மென்டில் நடந்த ஒரு திருட்டுச்சம்பவம் . இதை இரண்டையும் கொண்டு அவர் யோசிக்கும்போது சிக்கியதே , FOLLOWING படத்தின் கதை . படத்தின் நீளம் 1 மணிநேரம் 10 நிமிடம் .  இப்படத்தை பார்க்கும்போது , இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கிறது . எப்படி படத்தை முடிப்பார்கள் ? ஒன்றுமே புரியவில்லையே என்று மண்டையை குழப்பிக்கொண்டிருக்கும்போது , கடைசி இரண்டு நிமிடங்களில் , அந்த ஒரு மணிநேர குழப்பங்களையும் , அசால்டாக நோலன் முடித்துவைத்திருப்பார் .


இப்படம் எடுக்க ,தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறுவதைவிட , இல்லை என்றே சொல்லலாம் . இப்படத்தின் தயாரிப்பாளர்கள் யாரென்று பார்த்தால் நோலனின் காதலியான எம்மா தாமஸ் , மற்றும் நோலன் , அடுத்து இப்படத்தில் ஹீரோவாக வரும் நோலனின் நண்பர் ஜெர்மி  ஆகியோர் தான் . இவ்வளவுதான் பட்ஜெட் என்று அறுதியிட்டு எடுக்கப்படாத திரைப்படம் . பணம் கையிலிருந்தால் 16 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு , வார இறுதியில் படம்பிடிக்க கிளம்பிவிடுவார்களாம் . இந்த கேமராவில் எடுக்கப்படும் படம் , தியேட்டரில் திரையிடமுடியாது. நம் பள்ளிகளில் , ஏதேனும் காட்சிகளை ப்ரஜெக்டரில் காட்டுவார்கள் அல்லவா ? அந்த திரைக்குத்தான் உகந்தது .(பின்னாளில் , இத்திரைப்படம் 35 MMக்கு மாற்றப்பட்டு , ரிலிஸானது என்பது தனிக்கதை .) ஷூட்டிங் ஸ்பாட் , லொகேஷன் என்று எதற்கும் அலையவில்லை . நோலனின் அபார்ட்மென்ட் மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளைச்சுற்றியே , இப்படத்தை எடுத்துமுடித்தார்களாம் . படத்தில் வரும் ரெஸ்டாரன்ட் மற்றும் பார்காட்சிகள் கூட ,நோலனின் நண்பர்களுடைய இடங்களில் எடுக்கப்பட்டது . நம்மிடம் பணம் இல்லையெனில் , கலரில் ஒருபடத்தை ஸ்டைலிஷாக எடுப்பது முடியாத காரியம் . அப்படி எடுத்தாலும் , அது படுகேவலமான லுக்கையே தரும் . அதற்குபதில் , ஸ்டைலிஷாக கருப்பு-வெள்ளையலே எடுத்துவிட்டு செல்லலாம் என்பது நோலனின் முடிவு . அது , படம் பார்க்கும்போது , பார்ப்பவர்களுக்கு  நன்றாக உணர்த்தியிருப்பார் . இப்படத்தில் , ஹீரோயினாக நடித்தவரைத்தவிர அத்தனைபேரும் , நோலனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாத்திரமே ! குடும்ப படம் என்று முடிவு செய்துவிடாதீர்கள் . மற்றவர்களை நடிக்க அழைத்தால் , அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்ற காரணத்தினால் தான் . ஹீரோயின் மாத்திரம் ஒரு தொழில்நடிகை . படம் எடுக்கப்படுவதற்குமுன் , ஆறுமாத காலம் , வெறும் ஒத்திகை மாத்திரமே பார்த்தாராம் . ஒரு பைசாகூட வீணாகிவிடக்கூடாது என்பதில் முழுகுறியாயிருந்த நோலன்  , இப்படத்தின் ஷூட்டிங்கின்போது  , பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்கில் ஓ.கே ஆக்கிவிட்டாராம் .சில காட்சிகள் மட்டும் , இரண்டாவது டேக் . ஆனால் , இரண்டு டேக்குகளுக்க மேல் எக்காட்சியும் எடுக்கப்படவில்லை. இந்த படத்தின் பட்ஜெட் , மொத்தம் 6000 டாலர் . உலகின் அடிமட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படங்களில் , இதுவும் ஒன்றாய் திகழ்கிறது . இந்த பட்ஜெட்டைக்கொண்டு , 1998 களில் கூட , எந்த தமிழ்ப்படமும் எடுத்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் .


அடுத்து , இந்த படத்தின் டெக்னிசியன்கள் என்று பார்த்தால், எல்லாமே நோலன்தான் . கேமராமேனும் அவர்தான், எடிட்டரும் அவர்தான் . இசைமாத்திரமே வேறொருவர் . T.R கணக்காய் , கதை , திரைக்கதை, வசனம் , ஒளிப்பதிவு , எடிட்டிங் , இயக்கம் , தயாரிப்பு என எல்லா வேலைகளையும் நோலனே சிறப்பாக செய்துள்ளார் .

கிட்டத்தட்ட , இந்தியமதிப்பில் இரண்டு லட்சம் ரூபாயில் (1998 ல் , அமெரிக்க டாலர் , இந்திய மதிப்பில் 40 ரூபாய்க்கும் குறைவு என நினைக்கிறேன் .) எடுக்கப்பட்ட இத்திரைப்படம் , இன்று 100 கோடியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தராத அனுபவத்தை , நமக்கு கொடுக்கும் வகையில் உள்ளது . இந்த படத்திற்கு பின்னர்தான் , மெமெண்டோ எனும் மாபெரும் திரைக்குழப்பத்தை உருவாக்கினார் ! மெமென்டோவைப்பற்றி , அடுத்த பதிவில் காணலாம் .


இதன் தொடர்ச்சிப்பதிவான , மெமென்டோவைப்பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
உங்கள் விருப்பம்

8 comments:

 1. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

   Delete
 2. வாமன அவதாரம் கூட உல்டாதானா ?

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட நம்ம கஜினில முருகதாஸ் என்ன செஞ்சாரோ , அதையே தாங்ணா வாமனன்லயும் பண்ணிருப்பாங்க . இந்த கான்செப்ட வச்சி, காதல் , காமெடினு என்னன்னவோ தூவி விட்ருப்பாய்ங்க !

   Delete