வதந்திகள் – சிறுகதை


அவனா ? கண்டிப்பா சான்ஸே இல்ல ’ என்றேன் அழுத்தத்துடன் .

அவனே தான் . நா என்னட ரெண்டு கண்ணால பாத்தேன் . ரெண்டு காதாலயும் கேட்டேன் .

என்னால் நம்பமுடியவில்லை .அவன் மிகவும் நல்லவன் . அவனுக்கு அவனுடைய தந்தையை அவ்வளவாகப் பிடிக்காது என்பது உண்மை தான் . அவனுக்கு மட்டுமல்ல , யாருக்கும் அவனுடைய தந்தையின் உண்மையான முகத்தைக் கண்டால் பிடிக்காது . வீட்டிலேப் புலி , ஊருக்குப் பசு என இரட்டை வேடக்கபடதாரி . அவரைப் பொறுத்தவரை , அவருடைய வீட்டில் அவர்தான் எல்லாம் தெரிந்தவர் . அவர் பேச்சைக்கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான் . திட்டித்திட்டியே சாகடிப்பார் . நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் , அவராக ஒன்றை கற்பனை செய்து , அதை அவரே ஏற்றுக்கொண்டு ஊரெல்லாம் பரப்பி விடுவார் . பலமுறை அவருக்கும் பிரபுவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டதை நானே பார்த்துள்ளேன் . ஆனால் இம்முறை பிரபு தன் தந்தையை அடித்துவிட்டான் என்ற செய்தியை நம்பமுடியவில்லை .

‘சும்மா அரகுரயாப் பாத்துட்டு உளராத பிரியா .’

பிரியா . என் தங்கை . +2 முடித்து இரண்டுவருடமாய் வீட்டில் இருப்பவள் . சுத்தஜாதகமாய் பிறந்து தொலைத்ததால் , இன்னும் வரன்பார்க்கும் படலத்திலேயே இருப்பவள் . அவளுக்கு மூன்று விஷயம் மிகவும் பிடிக்கும் . ஒன்று அரட்டை அடிப்பது , இரண்டு ஒட்டுக்கேட்பது , மூன்று புறம்பேசுவது . சோளக்காட்டில் லுங்கியும் நைட்டியுமாக மாட்டிய ராமன் , சந்தியா கதையிலிருந்து , ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் 2014 – ஆம் ஆண்டிற்கான வார்த்தையான ‘VAPE’ வரை அப்-டு-டேட்டாக இருப்பவள் .

‘யாரு ஒளரது ?  நானா ? அவன் யாருனு உனக்குத்தெரியுந்தான ? காலேஜ் படிக்கும்போது போலிஸ் ஸ்டேசன் வாசல்லயே வச்சி , கூட படிக்கற பையன அடிச்சவன் .’

அவள் கூறுவதும்  உண்மைதான் . இதுமட்டுமல்ல , அவனைப்பற்றிய எண்ணற்ற வதந்திகள் அவ்வப்போது வரும் . அவன் பள்ளியில் படிக்கும்போதே , அருகிலுள்ள மகளிர் பள்ளிக்கு பைக்கில் சென்று கேட்டை உடைத்து , கிளாஸ் ரூமில் புகுந்து டீச்சரை மிரட்டி , ஓரு பெண்ணிடம் சண்டை போட்டான் . அதன்பின் தன் பள்ளியிலேயே இருந்த மணமாகாத கம்ப்யூட்டர் டீச்சரிடம் ஏதோ சில்மிஷம் செய்து , பின் அவள் அதை வெளியில் சொல்லவேண்டாம் என்று இவன் காலில் விழுந்து அழுதாள் . அதேநேரம் பள்ளியில் இருக்கும் ஒரு பி.டி வாத்தியாரை மிரட்டி , அந்த மனிதரை வேலையை விட்டே ஓடச்செய்தவன் . இவன் அட்டகாசம் தாங்கமுடியாமல்  , இவனை சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்த்தனர் . அங்கு சென்ற முதல்நாளே , குடித்துவிட்டு  வார்டனுடன்  சண்டை , இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் ஹாஸ்டலில் மோதல் , இவ்வளவு ஏன் , சென்னை சட்டக்கல்லூரியில்  நடைபெற்ற ஜாதிச்சண்டையில் கூட இவனுக்குத்தொடர்பு இருக்கிறது  போன்ற எண்ணற்ற செய்திகள் என் காதுக்கு வந்தது . இது பற்றி அவன் லீவில் ஊருக்கும் வரும்போதெல்லாம் கேட்பேன் . அவன் ஆமாம் என்றும் சொல்லமாட்டான் ,  இல்லை என்று மறுக்கவும் மாட்டான் . சிறு புன்னகையை அளித்துவிட்டு நகர்வான் . இப்போது படிப்பை முடித்துவிட்டு , வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான் .


‘அவன் அவங்க அப்பாவ அடிச்சிருப்பான்னு என்னால நம்பமுடியல ப்ரி .  ’

நம்பித்தான் ஆகனும் . இனிமேல் அவன்கூடல்லாம் சேர்ந்துகிட்டு டூட் ,கீட்னுகிட்டு ஊர சுத்திட்டு இருக்காத .’

அவன் என் மிகச்சிறந்த நண்பன் . எனக்கு பல நேரத்தில் பற்பல உதவிகள் செய்துள்ளான் .  எனக்கென்றால் கிட்டத்தட்ட உயிரையும் கொடுக்கும் உண்மையான நண்பன் . அவன் ஒருவேளை அவன் தந்தையை அடித்தது உண்மைதானா ? எனக்கு பலவிதமான குழப்பம் ஏறிட்டது . இனியும் நம்மண்டைக்குள் இவ்விஷயத்தைப்போட்டு குழப்புவதற்கு பதில் அவனிடம் நேரிலேயே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அவனுடைய வீட்டை நோக்கி நடந்தேன் .

அவனுடைய வீடு என்றுமில்லாமல் மயான அமைதியாய் இருந்தது . பக்கத்து வீட்டின் இயந்தரத் தறி , யாருக்கோ மானத்தைக்காப்பாற்றும் பொருட்டு சேலையை உற்பத்திச் செய்துகொண்டிருந்தது . அவனுடைய தந்தைக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தார் . அருகில் அவன் தாய் , அவருக்கு  ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்பூனின் வழியாக , சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் .  அவனுடைய தந்தையின் முகத்திலும் கையிலும் , புதிதாகப் போடப்பட்ட  காட்டன் கட்டுகள் தங்களின் வெண்மையைத் தின்மையாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன . ஆங்காங்கே மஞ்சள் நிற ஃபெர்ராக்ரைலம் , அந்தவெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வண்ணம் , வட்டவட்டமாய் காயங்களைச்சுற்றி இருந்தது . அவனுடைய தந்தை அடிபட்டது உண்மை தான் . எங்கள் ஊரின் விக்கிப்பிரியா சொன்னது உண்மைதானோ ? அந்நேரத்திற்குள் பிரபுவின் தாய் என்னருகே வந்து தனியாக வருமாறு சைகை செய்தாள் .

‘எங்கம்மா பிரபு ?’

பக்கத்து ரூம்ல இருக்காம்பா  . அவனோட அப்பா வேற அவன கிளம்ப சொல்லிட்டாருப்பா . அவனும் கோபத்துல கிளம்பறேன்னு துணியெல்லாம் எடுத்துவச்சிகிட்டு இருக்காம்பா . நீதான் அவங்கிட்ட பேசி போகவேண்டாம்னு சொல்லனும் . ஏற்கனவே , அவன் வீட்டப்பிரிஞ்சி 4 வருஷம் அநாத மாதிரி இருந்தது போதும்பா . ’ என்றாள் கம்மிய குரலில் . அவளின் குரலில் உண்மையான தாயன்பும் , மகனைப்பிரியும் வலியும் இருந்ததை என்னால் உணரமுடிந்தது . ராமனைப்பிரியும் நேரத்தில் தசரதன் எப்படியிருந்தாரோ , அந்நிலையில் அவள் இருந்தாள் . ஆனால்  இவன் ராமனாயில்லையே . தந்தையையே அடித்த மாபாதக ராவணனாக அல்லவா இருக்கிறான் .

‘நா பாத்துக்கிறன்மா’  என்று அவளிடம் கூறிவிட்டு அவனது அறையை நோக்கி நகர்ந்தேன் . உள்ளே அவன் பேக்கிங் வேலைகளில் பிஸியாய் இருந்தான் .

‘டூட்’ என்ற எனதுக்குரலைக்கேட்டதும் திரும்பினான் .

வா டூட் . சென்னைக்குப்போலாம்னு இருக்கேன் . அதான் ரெடியாயிட்டு இருந்தேன் . ரெடியாயிட்டு உனக்கு கால் பண்ணலாம்னு நினச்சேன் . அதுக்குள்ள நீயே வந்துட்ட .’

இவனிடம் முதலில் நம் சந்தேகங்களையெல்லாம் கேட்டுத்தெளிவாகிவிட வேண்டும் . அதன்பின் அவன் தந்தைக்கும் அவனுக்கும் நடந்ததைத் தெரிந்துகொள்ளவேண்டும் . எதற்குப் பழைய சந்தேகங்களை கேட்க வேண்டும் . நேராய் நேற்று நடந்ததைப்பற்றியே கேட்கலாமே ? வேண்டாம் . அதுதான் தெரிந்துவிட்டதே ! இவன்தான் செய்தான் என்று . எனக்குள் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது .

டூட் . எங்கூட வா . உங்கிட்ட கொஞ்சம் பேசனும் .

அவன் ஏன் ? என்ன ? எதற்கு என்று ஒரு கேள்வியும் என்னிடம் கேட்காமல் என்னுடன் வந்தான் . வழக்கமாக நான் தம்மடிக்கும் சின்னு டீக்கடையை நோக்கி நடந்தோம் . இரண்டு சிகரெட்டை வாங்கி , ஒன்றை அவனிடம் தந்தேன் . ‘மூட் இல்ல டூட்’ என்ற வழக்கமான பதில் அவனிடமிருந்து வந்தது .

‘டூட் . எனக்கு ரொம்பநாளா குழப்பிக்கிட்ருந்த மேட்டர உங்கிட்ட கேட்கப்போறேன் . நீ ஒழுங்கா உண்மைய சொல்லனும் . இது என்மேல ப்ராமிஸ் . நீ பொய் சொன்னா நா செத்துடுவேன் .’

‘லூசு . இதுக்கெதுக்குடா ப்ராமிஸ் ? உனக்கென்ன குழப்பம் ?’

‘உன்னப்பத்தி வந்த ரூமர்ஸ் எல்லாம் உண்மையா ?’

‘என்ன ரூமர்ஸ் டூட் ?’

‘நீ ஸ்கூல் படிக்கும்போது , கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்ல பைக்ல போயி கலாட்டா பண்ணது , கம்ப்யூட்டர் மிஸ்ஸுக்கும் உனக்கும் நடந்த விஷயம் , அந்த பி.டி வாத்தியார மிரட்டி ஸ்கூல்ல விட்டு ஓடவிட்டது , காலேஜ்ல ஹாஸ்டல் வார்டன அடிச்சது , போலிஸ் ஸ்டேசன் முன்னாடியே வச்சி ஒரு பையன அடிச்சது , லா-காலேஜ்ல வந்த பிரச்சனைக்கும் உனக்கும் இருக்க ரிலேஷன் னு இதப்பத்தி எல்லாம் எங்கிட்ட நீ சொல்லியாகனும் .

‘மச்சி ! இதெல்லாம்  ஒரு விஷயமாடா .  வா . லேட்டாகுது . ஊருக்கு வேற போகனும் .’

‘நீ எதுக்கு ஊரவிட்டுப்போறேன்னு எனக்குத்தெரியும் . போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ .’

‘மச்சி’

‘இனிமே மலுப்ப முடியாது டூட் . நீ சொல்லிட்டு எங்கவேணா போ .’
ஒருநிமிடம் யோசித்தவன் ஒருவாறு தீர்க்கமான முடிவெடுத்தவனாய் என்னை நோக்கி அவன் வாயைத்திறந்தான்  .

ஓ.கே டூட் .  என் பிரண்டு மணிய உனக்குத்தெரியும் .ஸ்கூல் படிக்கும்போது , அவன் ஒரு பொன்ன சின்சியரா லவ் பண்ணான் . ஆனா அந்த பொண்ணு ஒத்துக்கல . அன்னைக்குனு பாத்து நா எங்க மாமாவோட பைக்க எடுத்துட்டு வந்திருந்தேன் . அப்போலாம் எனக்கு கியர் வண்டி ஓட்டி அவ்வளவா பழக்கமில்ல . இவனோ , அந்தபொண்ணு சொன்னத நினச்சி அன்னைக்கே சரக்கப்போட்டு மத்தியானம் வண்டிய எடுக்கச்சொன்னான் . நானும் சரி எங்கயாவது கட் அடிச்சிட்டு போலாம்னு நினச்சி அவனையும் தியாகுவையும் உக்காரவச்சிகிட்டு போனேன் . கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் வந்தப்போ , மணி வண்டி ஸ்டேரிங்க பிடிச்சித் திருப்ப , அந்தநேரம் வாட்ச்மேன் கேட்ட திறக்க , கிட்டத்தட்ட கேட்ட ஒடச்சிகிட்டு வண்டியோட உள்ளப்போய் மூனுபேரும் விழுந்தோம் . மணி உடனே அந்த பொண்ணு படிக்கிற கிளாஸ்க்கு போய் சத்தம்போட , அவன நா சமாதானப்படுத்த , கடைசில அந்த பழி எம்மேல விழுந்திடுச்சி . ’

 ‘சரி கம்ப்யூட்டர் டீச்சர் மேட்டரு ?’

அதுவும் கிட்டத்தனட்ட இதேமாதிரி தான் .என்னோட பர்த்டேக்கு வீட்ல சண்டபோட்டு புதுசா கேமரா மொபைல் வாங்கிட்டு ஸ்கூல்லுக்கு போயிருந்தேன் . அங்க பசங்க கிட்டலாம் கெத்தா காட்டுனேன் . கம்ப்யூட்டர் பீரியட் வந்துச்சி . அன்னைக்குனு பாத்து நா , அந்த பீரியட கட் அடிச்சிட்டு க்ரௌண்ட்ல விளையாடிட்டு இருந்தேன் . தியாகு என்னோட ஃபோன கேட்டான் . அவன நம்பிக்கொடுத்தேன் .  கரெக்டா இன்டர்வல் வந்ததும் அவங்கிட்ட இருந்து என்னோட போன வாங்குனேன் . கடைசி பீரியட்ல திடீர்னு மொபைல் இன்ஸ்பெக்சன் வந்து என்னோட மொபைல சீஸ் பண்ணணிட்டு போய்ட்டாங்க . அன்னைக்குனு பாத்து ஸ்கூல்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுனு சட்டம் போட்டுட்டாங்க . எதுக்காக என்னோட மொபைல சீஸ் பண்ணாங்கனு கேட்டதுக்கப்றம்தான்  எனக்கே உண்மைத்தெரிஞ்சது . இந்த தியாகு , கம்ப்யூட்டர் டீச்சர் பாடம் எடுக்கறப்போ , அவங்கள போட்டோ எடுத்துருக்கான் . அத கிளாஸ்ல இருந்த எல்லாப்பசங்கக் கிட்டயும் காட்டிருக்கான் . ஆனா ஒரு பையன்கிட்ட காட்டல . அவன் கோவத்துல போயி , ஓரு ரூபா காய்ன்பாக்ஸ்ல இருந்து எச்.எம்க்கு போன் பண்ணி சொல்லிட்டான் . சொன்னவன் என்னோட போன்னு சொல்ல , நா மாட்டிக்கிட்டேன் . தியாகு என்னோட கால்ல விழுந்து கெஞ்சுனான் . வேறவழி இல்லாம , நானே பழிய ஏத்துக்கிட்டேன் . அந்த நேரத்துல கம்ப்யூட்டர் டீச்சர் , நா அவங்களோட சீக்ரெட் போட்டோஸ் எடுத்ததா நினச்சி , என்ன தனியா கூப்ட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க . எனக்கு மனசெல்லாம் கஷ்டமாகிடுச்சி . ஆனா , யார்கிட்டயும் தியாகுவப்பத்தி சொல்லல .  இன்னைக்கு நினச்சாலும் அந்த மிஸ்ஸோட முகம் எனக்கு ஞாபகமிருக்கு டூட் . சம்டைம்ஸ் , அவங்க அழுகறது என்னோட கனவுல வரும் . ரொம்ப கஷ்டமாயிருக்கும் . ’

‘சரி ! அப்போ ஹாஸ்டல் மேட்டரு ?’

‘காலேஜ் சேந்தப்போ , முதல்நாளே நம்ம ஊர்க்கார சீனியர் பசங்க எல்லாம் ட்ரீட் வைக்க சொன்னாங்க . அப்போ என்னையும் சரக்கடிக்க சொன்னாங்க . எனக்கு அதெல்லாம் ஒடம்புக்கு ஒத்துக்காது டூட் . அவங்க கம்பல் பண்ணி குடிக்க வச்சிட்டாங்க . அதுனால வாமிட் வந்துடுச்சி . வசரத்துல நா வார்டன் ரூம்முன்னாடி வாமிட் பண்ணிட்டேன் .  அதுல இருந்து அவரு என்ன டெரர்ரா பாக்க ஆரம்பிச்சிட்டாரு .’

அவன் கூறுவதும் கிட்டத்தட்ட உண்மைதான் . இதுவரை என்னுடனோ , எங்கள் ஊரின் பிற நண்பர்களுடனோ என்றும் அவன் குடித்ததில்லை . பிராண்ட் சரியில்லை , வீட்டுல மாட்டிப்பேன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துவிடுவான் . அதன்பின் ஒவ்வொன்றாய் அவன் என்னிடம் விளக்கி சொன்னான் . போலிஸ் ஸ்டேசன் வளாகத்தில் நடந்த பிரச்சனையில் கூட இவன் ஒரு விட்னஸ் தான் . இன்னும் சொல்லப்போனால்  , எவனோ சண்டையிட்டு இவன் பேரில் பழி விழுந்துள்ளது . லா காலேஜ் பிரச்சனை கூட , மற்றொருவருக்காக இவன் லா காலேஜ் ஹாஸ்டல்  செல்ல , அங்கே சின்னப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது . இவன் சூதானமாய் அதிலிருந்துத் தப்பித்து வர  , அடுத்த நாளே அந்த ஜாதிக்கலவரம் ஏற்பட்டிருக்கிறது . அதில் இவன் பேரும் அடிபட்டுள்ளது . இவன் கூறுதிலிருந்து நேற்று நடந்ததற்கும்  , இவனுக்கும் கூட எந்தச்சம்பந்தமுமில்லை என்று என் மனம் நம்பத்துவங்கியது .

‘சரி ! நேத்து நைட் என்ன நடந்துச்சி ?’

‘ஒன்னும் நடக்கலயே டூட் . ஆல்ரெடி டைம் ஆகுது டூட் . ட்ரெய்ன் வேற 11.30 க்கு . இப்பவே 10.40 ஆகிடுச்சி .

‘நீ சொல்லிடுப்போ டூட் .  ’ என்றேன் ஆவலாய் .


எதுவுமே ஆகல டூட் .’


டேய் சும்மா கத அளக்காத  . அப்றம் எப்டிடா உங்கப்பா அங்க அடிபட்டு கிடக்கிறார் .’ என்றேன் காட்டமாய் .

மச்சி !  அத ஏன்டா கேட்கற ?  யாரோ  இவர் ஃப்ரண்டோட பையனுக்கு வேலை கிடச்சிடுச்சாம் . அத எங்கிட்ட சொல்லி , நீ தண்டம் எதுக்குமே லாயக்கில்ல . உருப்படவே மாட்டானு கத்திக்கிட்டிருந்தாரு .  எனக்கு செம கோவம் வந்து நாளைக்கே வேலைக்குப்போறேன்னு கத்திட்டு வந்து , ரிலாக்ஸ் ஆகறதுக்காக ஒரு ஹாலிவுட் படத்த , வூஃபர் போட்டுப் பாத்துட்டு இருந்தேன் . இவரு என்னத்திட்டிகிட்டே  கிச்சனுக்கு போயிருக்காரு . அப்போ பூரிக்கட்டைய மிதிச்சி , ஓடிட்ருந்த கிரைண்டர் மேல வுழுந்துட்டாரு . அப்பறம் இவரு அலற ஆரம்பிச்சதும் , நா கத்திகிட்டே ஓடி அவர எழுப்பிக் கொண்டுவந்து படுக்கவச்சேன் . அவ்வளவு தான் மச்சி . இப்போ வேலைக்காக தான் சென்னை கிளம்பிட்ருக்கேன் ’ என்று கூறிமுடித்ததும் என்னையே நான் நொந்துகொண்டேன் .  அதேநேரம் என் தங்கை இதை எவ்வாறு புரிந்துகொண்டாள் என்பதை நினைத்துக்கடுப்பும் வந்தது .

‘அப்போ . நீ உங்கப்பாவ அடிக்கலயா ?’

‘அடப்பாவி . நா எதுக்குடா எங்கப்பாவ அடிக்கப்போறேன் ?’

அதன்பின் என் தங்கை என்னிடம் கூறியதை அவனிடம் ஒப்பித்தேன் . சின்ன வருத்தமுற்றவன்  , பரவாயில்லை விடுடா என்றவாறு கிளம்பினான் . அவன் தாயிடம் சமாதானம் சொல்லிவிட்டு , அவனை ரயிலில் ஏற்றி விடச்சென்றேன் . கடைசியாய் ஒரு சந்தேகம் .

‘எதுக்கு மச்சி நீ செய்யாத தப்புக்கு பழிய ஏத்துக்கிட்ட ?’

இந்த மாதிரி விஷயங்கள் வரும்போது ,எல்லாரும் என்ன கெத்தா பாக்க ஆரம்பிச்சிகிட்டாங்க டூட் . அந்த கெத்துக்கோசரம் தான்   .’

ஒருவாறு தெளிந்த மனதுடன் அவனை வழியனுப்பிவிட்டு  வீட்டிற்கு வந்தேன் . முதலில் பிரியாவிடம் உண்மையைச்சொல்லி விளக்கவேண்டும் என்று அவளைத்தேடினேன் .

‘மேட்டர் தெரியுமா ? உன்னோட ஆருயிர்த்தோழர் திரு.பிரபுவ , அவங்க வீட்ட விட்டுத்துரத்திட்டாங்கலாம் . நம்ம அப்பாவா இருந்தா , அவன் செஞ்ச காரியத்துக்குக் கொன்னே போட்ருப்பாரு . இவன்லாம் உன் பிரண்டு’ –என்றாள் நக்கலாக .







தொடர்புடைய சிறுகதைகள்














Comments

  1. கதை நன்றாக இருக்கிறது .தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல !!!

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை