Wednesday, 9 December 2015

78 ரூபாய் – சிறுகதை
‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’


அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது.


‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான்.


‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே இருந்தார். அவரின் அனுபவங்கள் அனைத்தும் டாம் ஹேங்ஸின் ஃபீல்குட் படங்களை ஒத்திருந்தாலும் சிலவற்றை நம்பமுடியவில்லை. அப்போதுதான் அவரை நான் உற்றுகவனித்தேன்.வாட்டசாட்டமாக, பத்துநிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு கிங்ஸ் சிகரெட், கழுத்தில் 2 பவுன் தங்கச்சங்கிலி, மின்னுவதைப் பார்த்தால் எடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் இருக்கலாம்; கையில் ஒரு மோதிரம். அவரது சட்டைப் பையில் பணக்காகிதங்கள் நிறைந்திருந்தன. நடுவே ஒரு பழங்கால ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ மொபைல்.


‘நமக்கு லஞ்சம் வாங்குர பழக்கமெல்லாம் கிடையாது தம்பி. யாருகிட்டயும் ஒருபைசா வாங்கமாட்டேன். ஒத்தரூவாவ கொடுத்துபுட்டு ஏழாயிரம் சாபத்த விடுவாங்க. அந்த சாபமெல்லாம் நமக்கெதுக்கு?’


இவ்வார்த்தையைக் கூறியதும் என்னவோ அவரின் பேச்சுகளைக் கவனிக்கவேண்டும் என்று என் உள் மனது என்னை பணித்தது. என்னைப்போலவே வீட்டு உரிமையாளனுக்கும் இருந்திருக்கவேண்டும்.  மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்.


‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒத்த லைட்டுனு கவர்மென்ட்ல ஒரு ஸ்கீமு வந்துச்சி. ’

‘ஆமா சார். இப்போ நாயக்கம்பட்டில கூட ஒரு வீட்டுல தான் இருக்குனு நினைக்கிறேன்.’

‘அந்த ஸ்கீமுலாம் இப்போ இல்ல பா. எடுத்துட்டாங்க. எங்கயாச்சும் ஒன்னு, ரெண்டு இருக்கலாம். அதான் எல்லாரும் வீட்டு சர்வீஸே எடுத்துக்கிறாங்களே’

வீட்டு உரிமையாளனின் நினைவாற்றல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ ஒரு முனைப்பான விஷயத்தை அவர் கூற முற்படும்போது பேச்சை திசைத்திருப்பும் தோணியிலேயே இவன் பேசுகிறானே என்ற எரிச்சல் வேறு எனக்குள்.

‘அப்போ புதுரோட்டுல நா கம்பம் ஏறுர வேல பாத்துகிட்டு இருந்தேன். இந்த ஸ்கீம் வந்தபின்னாடி ஒரு ஏரியாவுக்கு நானும் என்னோட சீனியரும் போனோம். அந்த ஸ்கீம்படி வூட்டுக்கு ஒரு லைட்டு கவர்மென்ட் காசுல போட்டுக்கொடுக்கும். அதுக்கு கரண்ட்பில்லுலாம் வராது.’

அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறே தொடர்ந்தார்.

‘எங்கூட வந்த சீனியரு , இவங்கலாம் இனிமே கரண்ட்பில்லுதான் கட்டப்போறதில்லையே! அதுனால வூட்டுக்கு 100ரூபா வாங்கிகிட்டு கனெக்சன கொடுத்துடலாம்னு சொன்னாரு. எனக்கு காசப் பத்தி கவலையே இல்ல. எங்களுக்கு என்ன வேலைனா வூட்டுக்கு ஒரு கம்பத்த வச்சி, அதுல ஒரு லைட்ட போட்டு கனென்கசன் கொடுக்கனும். அப்படியே கொடுத்துகிட்டு வந்தோம். அவரும் நூறுநூறா வசூல் பண்ணிக்கிட்டே வந்தாரு.’

திடீரென அவருக்கு ஒரு போன் வர, அதை எடுத்து காதில் வைத்து சத்தமாகவே பேசினார். அவரின் அந்த போன் பேச்சு வழக்கமான மழை விசாரணைகளும் , குடும்ப விசாரனைகளுமாக கடந்தது. அப்பேச்சில் உருப்படியானதொரு விஷயமும் இல்லாவிடினும் அது அவரின் குடும்பத்திற்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் சிறு நூலாக அவரைப் பொறுத்தவரை இருந்திருக்கும்.

‘என்னோட அத்தமவ. பவானில இருக்கா. ரெண்டாந்தாரமா ஒருத்தருக்கு கட்டிக் கொடுத்துட்டுங்க. அவங்க வூட்ல வசதி கெடயாது. அதுனால எனக்குக் கட்டிக்கொடுக்கல. அவ புருசனும் நல்ல மனுசன்தான்; ஆனா வயசானவரு. சீக்கிரமா இறந்துபோய்ட்டாரு. பாவம், ஒத்தையா நின்னு ரொம்ப கஷ்டப்படுரா ’

அப்போது அவரின் முகத்தில் ஒரு தோற்றுப்போனவரின் சாயல் மின்னியதை என்னால் உணரமுடிந்தது. அதன்பின் இரண்டு நிமிடங்கள் இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தார்.

‘ஒவ்வொரு வூட்டுக்கும் நூறு ரூபா அவரு வாங்கிப்பாரு. நா கம்பத்துல ஏறி கனெக்சன் கொடுத்துட்டு இருந்தேன். மதியானத்துக்குள்ள 30, 35 வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டோம். அப்போ சேரிக்குப் பக்கத்துல ஒரு வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டு இருந்தோம். நா கம்பத்துல ஏறி கனக்சனு கொடுத்துட்டு இருந்தேன். அப்போ கீழயே நின்னுகிட்டு ஒரு அம்மா பாத்துக்கிட்டு இருந்துச்சி. எப்படியும் அதுக்கு ஒரு 70 வயசு இருக்கும். என்னோட சீனியருகிட்ட அது வந்துச்சி.’

‘யெய்யா மவராசா!னு அது கூப்ட, என்னோட சீனியரும் அத பாத்தாரு. அவருக்கு தெரிஞ்சிடுச்சி. அந்தம்மா சேரிக்கார அம்மானு.’

‘என்னா?னு வேகமா கோவமா கேட்டாரு. அந்தம்மா கொஞ்சம் பயந்துபோச்சு.’

‘அது கையில கசங்கி, நைஞ்சு போன காச வச்சிருந்துச்சி. ஐயா சாமி! எங்கிட்ட 78 ரூவாதாம்யா இருக்கு. எங்கூட்டுக்கு ஒரு விளக்கப் போடுயா! உனக்குப் புண்ணியமா போவும். அந்த அம்மா தலகுனிஞ்சிகிட்டு கெஞ்சுற மாதிரி கேட்டுச்சி. அத்து கண்ணுலாம் கலங்கி கிடந்துச்சி. அதோட குரலு இன்னமும் என்னோட காதுலயே இருக்கு. ஒருமாதிரி பாவத்தோட அழுகை. ஏழப்பட்டவங்களோட கெஞ்சல். எனக்கு மனசு ஒருமாதிரி ஆயிருச்சி.’

‘ந்தா! நூற கொடுத்தா கொடு. இல்லாட்டி ச்சும்மா போய் கெட. சாவுர வயசுல உனக்கு என்னாத்துக்கு லைட்டு? அப்படினு கத்திட்டாரு’

‘அவரு பேச்சக் கேட்டதும் கலங்கிப்போன கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சி. அழுதுகிட்டே அந்தம்மா பொலம்ப ஆரம்பிச்சிடுச்சி. ஐயோ மவராசா! எம்பன்னாடி வேற சந்தைக்கு போய்ட்டாரே. அவரு வந்ததும் கொடுத்துப்புடரேயா. ’

‘ஹங். உம்பன்னாடி வந்து மிச்சத்த அவுத்து வச்சிட்டுதா மறுவேலை பாப்பாப்படி. போ! போ! உங்களப்பத்தில்லாம் தெரியாதா எங்களுக்குனு அந்த சீனியரு மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசிப்பிட்டாரு.’

‘யெய்யாச் சாமீ. எல்லா வூட்டுலயும் ராத்திரிலகூட சூரியனாட்டும் மின்னுதே! எங்கூட்டுல இல்லையே. இருட்டுல இந்த ரெண்டுச்செவமும் செத்தாக்கூட யாருக்கும் கண்ணுத்தெரியாதே. யெய்யா கொஞ்சம் கருண காட்டுயா. உம் வம்சமே நோய்நொடியில்லாம நல்லா இருக்கும்யா. கம்பத்து மேல இருக்க யெய்யா! கொஞ்ச இந்தச் சாமிகிட்டச் சொல்லி கருணக்காட்டச் சொல்லுயா. உனக்குப் புண்ணியமா போவட்டும் னு அந்தம்மா என்ன பாத்து கெஞ்சுது.’

‘எஞ் சீனியரோ அத கண்டுக்கடல. என்னாலயும் எதுவும் பண்ணமுடில. புதுசா வேலைக்குச் சேந்துருக்க எனக்கு என்னாப் பண்றதுனு தெரில. அது பொலம்பிகிட்டே அதோட குடிசைக்குப் போயி ஒரு செம்பு அண்டாவ எடுத்துகிட்டு பக்கத்துல ஒரு குடியான வூட்டு வாசலுக்கு போச்சு.’

‘யம்மா மவராசி! எம்பண்ணையக்காரம்மானு அது கூப்டதும் உள்ளயிருந்து ஒரு பொம்பள வந்துச்சி. தாயி! இந்தண்டாவ வச்சிகிட்டு 25ரூவா கந்தா குடு தாயி. நா வாரவாரம் கட்டிப்புட்ரனு அது சொன்னுச்சி. அந்த வூட்டுக்காரம்மாவும் ஒரு பொம்பள தான. சரி அண்டாவ கொண்டுபோய் பொறத்தால வச்சிட்டு வானு அது சொன்னதும் இந்தம்மாவும் அண்டாவ கொண்டுபோய் கொல்லைல வச்சிட்டு வந்துச்சி. ஏன்னா அவுங்க பொருள வூட்டுக்குள்ள குடியானவங்க பொழங்கமாட்டாங்கள்ல  ’

‘ஆம்’ என்பதுபோல் நானும் வீட்டின் உரிமையாளனும் தலையை ஆட்டினோம். பிறகு என்ன என்பதை எங்கள் பார்வையாலயே அவரிடம் கேட்டோம். அவரும் புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

‘அந்த பண்ணையக்காரிச்சிக்கிட்ட காச வாங்கிட்டு வந்து எண்ணிக்கூட பாக்கமா எஞ் சீனியர்கிட்ட கொடுத்துச்சி. எப்படியோ அதோட வூட்டுக்கும் லைட்டு வரப்போவுதுங்ற சந்தோஷம் அது மூஞ்சில. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அந்த வையுவஞ்ச சீனியருகிட்டியே வந்து இந்தா சாமீனு அது சிரிச்சிகிட்டே கொடுத்துச்சி. ’

‘என்னோட சீனியரும் அந்த காச வாங்கிக்கிட்டு மிச்சக்காச எடுத்தாரு. அந்தம்மா மடிய விரிச்சி நின்னுச்சி. பிச்சப்போட்ர மாதிரி அது மடியில மிச்ச 3ரூவாய போட்டாரு. எனக்கு மனசே கனத்துப்போச்சு. அதுல இருந்து யாருகிட்டயும் நா காசு வாங்குரதில்ல.’

அவருக்கு மட்டுமல்ல! எனக்கும் மனம் கனத்தது. வெளியில் தூறிய மழை இப்போது எனக்குள்ளும் தூற ஆரம்பித்தது. என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு வித அவமான உணர்ச்சி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதற்குமேல் அவர் கூறியதைக் கேட்க மனம் விரும்பவில்லை. என்னை நானே மறைத்தாக வேண்டும்.

‘சரிங்ணா! நா கிளம்புறேன்’ என்றவாறு அவரிடமிருந்து எப்பதிலையும் எதிர்பார்க்காமல் மழையில் நனைந்தவாறே நடக்க ஆரம்பித்தேன்.

‘தம்பி மழையில ஏன்யா போற? இருயா மழ விட்டதும் நானே கொண்டு போய் வுடறேன்’ என்று அவர் கூறியது கேட்டது. வெளியில் பெய்யும் மழை மட்டுமே அவருக்குத் தெரியும்; என் கண்ணிலும் மனதிலும் பெய்யும் மழை, அம்மழைக்கு மட்டும்தான் தெரியும்.


Friday, 2 October 2015

புலி – சினிமா விமர்சனம்எச்சரிக்கை – இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டசி என்பதால் , இதற்கான என் விமர்சனமும் ஃபேன்டசியாகவே இருக்கும்.

அங்கே, இங்கே என்று சுற்றிவளைத்து , உங்களின் நேரத்தை வீணடித்து, உங்களை ரணமாக்காமல் நேராக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். பொதுவாக நான் விஜய் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. காரணம், என்னை நான் அஜித் ரசிகன் என்று பொதுவெளியில் பிரகடனப்படுத்தியபின்பு , விஜய் திரைப்படங்களுக்கு எழுதப்படும் விமர்சனம் கண்டிப்பாக நடுவுநிலையில் இருக்காது என்று மற்றவர்களால் கூறப்படும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்படும் நிலை உள்ளது. ஒருவேளை படம் நன்றாக இல்லை என்பதனை அப்படியே எழுதினால் , ‘நீ ஒரு அஜித் ரசிகன்; அதனால் தான் எங்கள் தளபதி படத்தைத் தரக்குறைவாக எழுதுகிறாய் ’ என்ற கம்ப்ளைன்ட் வரும். இங்கே நான் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் நான் அஜித் ரசிகன்; ஆனால் விஜய் ஹேட்டர் கிடையாது. காவலன் திரைப்படத்திலிருந்து அனைத்து விஜய் திரைபடங்களையும் முதல்நாள் முதல்ஷோ என்ற ரேஞ்சில் (ஜில்லா தவிர) பார்த்துவருகிறேன். சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் தன்னை அஜித் ரசிகன் என்று கொக்கரித்துவிட்டு, எப்போது பார்த்தாலும் விஜயை ஓட்டுவதையே பிழைப்பாக கொண்டிருப்பார்கள்; காரணம் தங்களை ஒரு விஜய் ஹேட்டர் என்று வெளிப்படையாக கூறாமல் , அதற்கென ஒரு காரணத்தைக் கற்பிக்கும் பொருட்டு அஜித் ரசிகன் என்ற சாயத்தைப் பூசிக்கொண்டு இப்படியெல்லாம் செய்துவருகிறார்கள். இதே எதிர்வினை அஜித்திற்கும் உண்டு.

சுற்றிவளைக்காமல் மேட்டருக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இவ்வளவு சுற்றி வந்து உங்களைக் கடுப்பாக்குவதற்கு காரணம் நான் விஜய் ஹேட்டர் இல்லை என்பதை உங்களுக்கு விளக்கவே! இவ்வளவு நாள் விஜய் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதாமல் இப்போது மட்டும் என்ன கூந்தலுக்கு எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. என்ன செய்ய ? இது ஒரு நார்மல் திரைப்படமாக இருந்திருந்தால் நான் எழுதியிருக்கமாட்டேன். இது ஒரு ஃபேன்டசி அட்வெஞ்சர் திரைப்படமாயிற்றே ! இதற்கு நான் விமர்சனம் எழுதவில்லை என்றால் ஆத்தா ஃபேன்டசி காளியத்தாள் என் கனவில் வந்து என் கண்ணைக் குத்திவிடுவாள்.

பொதுவாக ஃபேன்டசி படங்களுக்கு அவ்வளவாக தமிழகத்தில் வரவேற்பில்லை என்பது என் ஆதங்கம்; இத்தனைக்கும் தமிழ்சினிமாவின் ஆரம்பகாலகட்டங்கள் பேன்டசி எனும் மாயவலையத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. அன்று வந்த பல ஃபேன்டசி திரைப்படங்களை இப்போது ஹாலிவுட்டில் பட்டி, டிங்கரிங் செய்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் , பேன்டசியில் தாயான நம் தமிழ்சினிமா , அப்படியே அதைமறந்து விட்டு வேறெங்கெங்கோ பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஏன் என்றால் நம்மவர்கள் ஃபேன்டசி கதைகளைக் குழந்தைகளுக்கானது என்று எண்ணத்துவங்கியது தான். நாமும் ஒரு காலத்தில் குழந்தையாகத் தானே இருந்தோம்?

கிட்டத்தட்ட சாவுமணியடித்து ஃபேன்டசி எனும் பெயரே தமிழ்நாட்டில் மறையத்துவங்கும் வேளையில் ஒரு பக்கா ஃபேன்டசியைக் கொடுத்து திரையுலகில் ஒரு புரட்சி செய்தார் இயக்குநர் சிம்புதேவன். இம்சை அரசன் திரைப்படத்தை இன்றளவும் என் லேப்டாப்பில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்றால் பாருங்கள். அவரின் வரவுக்குப் பின் பேன்டசி சித்திரங்கள் மறுபடியும் கொஞ்சம் உயிர்பெற்றது எனலாம். தொடர்ந்தாற்போல் சில பேன்டசி திரைப்படங்களாக எடுத்து சிம்புதேவன் தன்னை ஃபேன்டசி இயக்குநராகவே காட்ட ஆசைப்பட்டார். அதன் வெளிப்பாடு அறை எண் 305-ல் கடவுள்,  இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என வரிசையாக ஃபேன்டசி திரைப்படங்களைக் கொடுத்தார். 

இன்னொருபுறம் நான்கு ஆண்டுகளுக்குமுன் வாங்கிய சறுக்கலில் இருந்து பரிபூரணமாக வெளிப்படும் பொருட்டு இளையதளபதி தனக்கேற்ற கதைகளாக தேடித்தேடி நடித்தார் . ஜில்லா கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. சுறாவிற்கு பின் மரணமொக்கைத் திரைப்படங்களைத் தவிர்த்து வந்த இளையதளபதிக்கு வேறொரு வடிவில் பிரச்சனை வந்தது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ! ஒவ்வொரு படமும் ரிலிசாகுமா ? ஆகாதா ? என்று பணம்போட்ட ப்ரொடியூசர்களை விட , பர்ஸ்ட்ஷோக்கு டிக்கெட் எடுத்து , ரீஃபண்ட் பண்ணுவானுங்களா ? மாட்டாங்களா ? என்று அதீத புலம்பலில் தவித்தவர்கள் நிறையபேர். ஆனாலும் அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குமிடையே படம் ஹிட் ஆனது தனிக்கதை.

வரிசையாக ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்துவந்த இளையதளபதிக்கு கொஞ்சம் போர் அடித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பகவதியில் ஆரம்பித்து (இடையில் காவலன், நண்பன் தவிர்த்து) கடைசியாக வந்த கத்தி வரை தளபதி முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படங்களிலேயே தான் நடித்துவருகிறார். இந்த காரணங்களால் வெரைட்டி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தளபதியிடம் சிம்புதேவன் தன் கற்பனையை முன்வைக்க , இம்ப்ரஸ் ஆன விஜய் ஓ.கே செய்து உருவானது தான் புலி.

பொதுவாக ஃபேன்டசி திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி இலக்கணம் கிடையாது என்பதே இலக்கணம். கதை எப்படி வேண்டுமானாலும் போகலாம், கற்பனை எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் ; ஆனால் திரைக்கதை பக்காவாக இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து எப்படியும் ஃபேன்டசி திரைப்படங்களை குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்க்கும்படியாகத் தான் இருக்கும். இந்த ஆவலில் சேலத்தில் என்னுடைய இன்ப்ளூயன்ஸை (?) வைத்து எப்படியோ 15 டிக்கெட்களை வாங்கிக்கொண்டு முதல்காட்சிக்கு நண்பர்கள் படைசூழ கிளம்பினோம். அங்கேபோனால் ஸ்பெஷல்ஷோ ரத்து என்றும் , எங்களுடைய 11 மணி ஷோவை ஸ்பெஷல் ஷோவாகவும், எங்களின் ஷோ டைமை 2.30 மணிக்கு என்றும் மாற்றிவிட்டார்கள். காலை 7 மணிக்கு ரசிகர்ஷோவிற்கு வந்த ரசிகர்களால் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டர் வாசலெங்கும் பிய்ந்துபோன செருப்புகளாகவே இருந்தது. கடனே என்று 2 மணிவரை காத்திருந்த நாங்கள் , ஸ்பெஷல் காட்சி முடித்துவிட்டு வந்திருந்த ரசிகர்களிடம் ச்சும்மானாச்சுக்கும் படம் எப்படி இருக்கு பாஸ் என்று கேட்க , அவர்களோ முகத்தில் சக்தியே இல்லாமல் எங்கோ பார்ரத்தபடி நல்லா இருக்கு பாஸ் என்று கூறிவிட்டுபறந்துவிட்டார். உடனே என் நண்பன், ‘இவனுங்க நல்லா இருக்குனு சொன்னா , சுமாரா இருக்குனு அர்த்தம்’ என்றுசொல்ல , நானோ வாயைவைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ‘இவனுங்களுக்கு ஃபேன்டசி படத்தையெல்லாம் ரசிக்கத் தெரியாது டூட். ஆளாளப்பட்ட செல்வாவோட படங்களையே ப்ளாப் ஆக்கி, போங்கடா நீங்களும் உங்க ஃபேன்டசியும் என செல்வாவையே பித்துபிடிக்க வச்ச ஆளுங்க டூட் இவனுங்க’ என்றேன். எப்படியோ அடித்துப்பிடித்து போய் அமர்ந்தோம். இளையதளபதியின் ரசிகர்கள் தயவு செய்து அப்படியே கடைசி நான்கு பேராவிற்கு சென்று படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழே உள்ள பத்தி உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல; என் மனதில் புண்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ள .

படத்தின் கதை என்னவென்று சிம்புதேவனிடம் தான் கேட்க வேண்டும் . ஏதோ அப்படி, இப்படியென்று ஒட்டவைத்து , பூதக்கண்ணாடி , மைக்ராஸ்கோப், டெலஸ்கோப் என்று வைத்து நான் கண்டுபிடித்த கதை என்னவெனில் வேதாளக்கோட்டை எனும் ராஜ்ஜியம்; அதன் கொடூர ஆட்சியின்பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்கள்; அந்த கிராமங்களில் ஏதோ ஒரு கிராமத்தில் , ஐ மீன்  ஹீரோவின் கிராமம்; அக்கிராமத்தின் பெரியவர் பிரபு . ‘உங்கள் ஆட்கள் இப்படியெல்லாம் அநியாயம் செய்கிறார்கள் ’ என்று ராணி ஶ்ரீதேவியிடம் கோர்த்துவிடச்செல்லும் பிரபுவின் ஒருகையை வெட்டி அனுப்பிவிடுகிறார் படுபாதக கொடூர தளபதி சுதீப். அப்போதே நமக்கெல்லாம் சுதீப்பின் வெறித்தனங்களைப் பார்த்து அதீத பயத்தினால் சீட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறோம். பிரபுவின் கிராமத்தில் ஒருமுறை வேதாளங்கள் வந்து ராவடி செய்ய , கடுப்பான ஒரு சிறுவன் கல்லை எடுத்து எறிந்துவிடுகிறான். அவர்தான் நம் ஹீரோ என்று யாருக்கும் அப்போது தெரியாது. வேதாளங்கள் டென்சனாகி யாரென்று கேட்க , அச்சிறுவனின் அக்கா நான் தான் எறிந்தேன் என்று சொல்ல அச்சிறுமியையும் கொன்றுவிடுகிறார்கள். இப்போது அந்த கிராமத்தைக் காட்க யாருமே இல்லையே என்று தவிக்கும்  அக்கிராம மக்களுடன் நாமும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தவிக்கிறோம்.

அதன்பின் வருடங்கள் உருண்டோட சிறுவன் வளருகிறார்; அவ்வப்போது அட்டூழியம் செய்யலாம் என்று ஆசையோடு வரும் வேதாளங்களை , தன் ராஜதந்திரத்தால் தலைத்தெறித்தோடச் செய்கிறார் ஹீரோ. உடனே நமக்கெல்லாம் உடல், சட்டை, செருப்பு என எல்லா இடத்திலும் புல்லரிக்கச் செய்யும் டி.எஸ்.பியின் புலி, புலி , புலி பாடல் வருகிறது. பாடல்முடிந்ததும் தமிழ்சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு அறிய விஷயத்தை ஊடாலே புகுத்தி நம்மை குப்புறப்படுத்து கும்பிடவைத்திருக்கிறார் இயக்குநர்; ஆம் இதுவரை யாருமே கண்டிராத வகையில் ஹீரோயினின் இன்ட்ர’டொக்’சனை வைத்து நம் மனதை அள்ளிவிடுகிறார். இப்போது என்ன செய்யவேண்டும் ? ஹீரோவையும் காட்டியாகிவிட்டது, ஹீரோயினையும் காட்டியாகிவிட்டது ; அடுத்து , டூயட் என்று நாமெல்லாம் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் போது இமயமலை அளவிற்கு ஒரு பெரும் ட்விஸ்டை நம் தலையில் வைத்து சீட்டோடு நம்மை அமுக்கிவிடுகிறார் இயக்குநர் ; வச்சோஸ்கி சகோதரர்கள் மேட்ரிக்ஸ் எனும் படத்தில் வைத்த சண்டைக் காட்சிகளையெல்லாம் அள்ளித்தூக்கி மென்று ஏப்பம் விடும் அளவிற்கு அந்த முரட்டு சண்டை காட்சி இருக்கிறது.  ஐயகோ! அவசரப்பட்டு தளபதி வேதாளங்களை அடித்துவிட்டாரே ? இனிமேல் வேதாளங்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டுமென நாம் இரக்கமழை பொழிந்துகொண்டிருக்க , திடீரென தளபதி பாடிய பாடலைப் போட்டு நம் இரக்கமனதைக் காதல் ரசம், காம சாம்பார் என்று எல்லாம் பிழிந்தோட செய்துவிட்டார்கள். அப்பாடல் காட்சியில் ஸ்ருதிஹாசனின் தொப்பையைப் பார்த்து தியேட்டரில் இருந்தவர்களும் ஏன்டி , ஏன்டி எங்கள கொல்லுற? என்று பாடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அடுத்த காட்சியில் ஸ்ருதிஹாசனின் சேவை இப்போதைக்கு போதுமென்று அவரை வேதாளக்கேட்டைக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்கள் வேதாளங்கள். அதைத்தடுக்க போன பிரபுவை இரக்கம் சிறிதுமின்றி வயிற்றில் கத்தியை இறக்கிவிடுகிறார்கள். ஹீரோ வரும்வரை தன் உயிரை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்திருந்து , ஹீரோ வந்ததும் தான் செய்த சாகசங்களை அவரிடம் சொல்லிவிட்டு செத்துப்போகிறார் பிரபு. அங்கிருந்தவர்களைக் காட்டிலும் தியேட்டரில் இருந்தவர்கள் பிரபுவின் இழப்பைத் தாங்க முடியாமல் நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு , தியேட்டரின் கீழே காலை வைக்கமுடியாத அளவிற்கு கண்ணீர் ஆற்றினை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நல்லவேளையாக தியேட்டருக்கு வெளியே லைப்ஜாக்கெட்டை முன்னேற்பாடாக கொடுத்திருந்ததால் அதைப்போட்டு அந்த ஆற்றினுள் இருந்து தப்பித்தோம். அதன்பின் நடப்பது நம் கற்பனைக்கு அப்பால் , தொலைதூரத்தில், ரொம்ப தூரத்தில் நடக்கும் விஷயங்கள். இடையிடையே உங்களிடம் சொல்லமறந்துவிட்டேனே!  படத்திற்கு போகும்முன் ஜெலுசில் மாத்திரை மூன்று, வயிற்றுவலி மாத்திரை மூன்று  ஆகியவற்றை முன்னேற்பாடாக எடுத்துக்கொண்டு செல்லுங்கள் . தம்பிராமையாவும் , சத்யனும் சேர்ந்து செய்யும் காமெடியால் பக்கத்து வரிசையில் இருந்த பலர் வயிற்று வலி அதிகரித்து , வாயில் ரத்தவாந்தி எடுத்துவிட்டனர். இதைப்பார்த்த தியேட்டர் நிர்வாகம் உடனே அருகில் இருந்த பச்சிலை மருத்துவர் பச்சிலைக் கண்ணனை தியேட்டரில் வயிற்றுவலி எடுப்பவர்களுக்கு மருத்துவம் பார்க்க நிரந்தரமாக நியமித்துவிட்டது. படம் முடியும் முன்பே பச்சிலைக் கண்ணன் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலை விலைக்கு வாங்கிவிட்டார் என்ற வாய், செவி, கண்வழி செய்திகள் வெளிவந்தன. எனக்கோ பெருத்த சந்தேகம்; ‘ஏங்க ? அல்லோபதி டாக்டர கூட்டிட்டுவராம இவர எதுக்குங்க கூட்டிட்டு வந்திங்க?’ என்று வினவ , தியேட்டர் நிர்வாகமோ ‘தம்பி ! இந்த படத்துல எங்கனாச்சும் அந்தமாதிரி டாக்டர் வராங்களா? இல்லல! அதனால முள்ள முள்ளால தான் எடுக்கனும்’ எனும் அரியமொழியினை உதிர்த்துவிட்டு என்னிடமிருந்து அவரும் உதிர்ந்தார். நல்லவேளையாக நான் காமெடிக்காட்சிகளில் காதைப்பொத்திக்கொண்டதால் என் வயிற்றையும் கொண்டு போன சில்லரையையும் காப்பாற்றிக்கொண்டு வந்தேன்.

சத்யன், தம்பிராமையாவின் காமெடியால் கதிகலங்கி, நிலை ஸ்தம்பித்து போன பார்வையாளருக்கு , உலகசினிமா வரலாற்றிலேயே யாரும் கண்டிராத ஒரு பெரிய விஷயத்தைப் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்திற்குப்பின் தன் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். நாம் யாருமே மனக்கண், அகக்கண், பூனைக்கண், யானைக்கண் என்று எந்த கண்ணிலும் கண்டிராத சித்திரக்குள்ளர்களை திரையில் உலவவிட்டு நம்மை டர்ராக்கிவிட்டார்கள். சித்திக்குள்ளர்களைக் கண்டதும் பக்கத்தில் இருந்த எழுபது வயது பெரியவர் , திடீரென சிறுகுழந்தையாக மாறி பக்கத்தில் இருந்த தன் சகாவிடம் ‘மாமா ! பிஸ்கோத்து’ என்று கேட்ட அதிசயமும் அப்போது அங்கே நடந்தேறியது.

பெரியவர்தான் சிறுகுழந்தையாக மாறினார் என்றால் , ஹீரோவோ சித்திரக்குள்ளனாகவே மாறி ஒரு முரட்டுக் குத்து சாங்கிற்கு ஆடியேவிட்டார். அந்த பாடலைக் கண்ட ரசிகர்கள் தியேட்டர் திரையின் அருகே சென்று ஆட, ஒருகட்டத்தில் வேதாளங்களைப் போன்று சக்திபெற்ற ஆட்டக்காரர்கள் தியேட்டரின் சீலிங்கில் ஏறி தலைகீழாக ஆட ஆரம்பித்துவிட்டார்கள். தலைகீழாக ஆடுபவர்களுக்கு வசதியாக தியேட்டர் ஆபரேட்டர் , பாடலை தலைகீழாக ஒளிபரப்பி அந்த ரசிகர்களின் குஷயை பன்மடங்கு பெரிதாக்கிவிட்டிருந்தார். பாடல் முடிந்ததும் சித்திரக்குள்ளர்களின் தலைவர் வழிகாட்டுதலின்படி , ஒரு மாபெரும் ஆமையைச் சந்திக்கிறார்கள்.  தமிழ்மொழி வரலாற்றிலேயே யாரும் கண்டறியமுடியாத பல புதிர்களை கவிதைகளாக கோர்த்துத் தருகிறது அந்த ஆமை ஐயா. அந்த புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க சில ரசிகர்கள் எழுந்து சென்று தமிழ்மொழியின் புதிர்களும் விடுகதைகளும் போன்ற புத்தகங்களை மணிக்கணக்காக திருப்பித்திருப்பி படித்தார்கள். ஒருசிலர் அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கி விட்டதாக இன்றைய செய்தித்தாள்களில் செய்திவெளியானது. ஆனால் டாக்டர் பட்டம் வாங்கியவர்களாலும் அந்த விடுகதைக்கான விடையை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது தான் சரித்திரசோகம்.

அதன்பின் ஹீரோ, அவருடன் வந்த ஒரு  பேசும் பறவை மற்றும் தன் இரு காமெடி சகாக்கள், 3 சித்தரக்குள்ளர்கள், சட்டையில் ஒட்டியிருந்த நான்கு பாக்டிரியாக்கள், ஷூவினுள் சாரி பாதணியில் இருந்த ஐந்து வைரஸ்கள் போன்றவற்றுடன் தன் சாகசப்பயணத்தைத் தொடர்கிறார். சாகசம் என்றால் சாகசம் ; அப்படி ஒரு சாகஸம்.  சிந்துபாத் சாகஸம், ஹாத்தீம் தாய் சாகஸம் எல்லாவற்றையும் கமட்டையில் மென்று துப்பினாலும் புலிசாகஸத்திற்கு ஈடாகாது. இந்த சாகஸ காட்சிகளைப் பார்த்து ஆவி சிலிர்த்து குப்ரிக், ஹிட்ச்காக், விட்டலாச்சார்யா போன்றோர் மேலோகத்தில் இப்படிப்பட்ட சாகஸத்திரைப்படத்தை எடுக்கவில்லையே என்று இந்திரனிடம் புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இடைவேளை விட , தியேட்டரை விட்டு நகரவே மனமில்லாத ரசிகர்கள் ஆவலோடு இடைவேளையின் அந்த 20 நிமிடத்தை மிக ரணமாக ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின்தான் அகிலவேதாள உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ராணி ஶ்ரீதேவியின் இன்ட்ரோ. அவரின் கெட்டப்பைப் பார்த்து வாயைப் பிளந்த சிலரின் வாயில் ஈ, எறும்பு எல்லாம் தாண்டி அருகிலிருக்கும் குருவம்பட்டியில் இருந்து தப்பிவந்த ஒரு கரடியும், ஐந்து மான்களும் புகுந்துவிட்டன. அதை எப்படி வெளியில் எடுப்பது என்று வனத்துறை அலுவர்களும், மருத்துவர்களும் தங்களின் மண்டை, சட்டை, பக்கத்தில் நின்றிருக்கும் ஆட்களின் சட்டை என எல்லாவற்றையும் பிடித்து கிழித்துப் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.  கடைசியில் வேறு வழியே இல்லாமல் மீண்டும் ராணியின் இன்ட்ரோ காட்சியைப் போட்டு , மறுபடியும் அவர்களின் வாயைப்பிழக்கவைத்து , உள்ளே இருந்த விலங்குகளை பத்திரமாக மீட்டார்கள்.

அதன்பின் மயிர், தலை, உடம்பு, கத்தி, சுத்தி, தரை, வானம், தண்ணீர் என எல்லாவற்றியும் கூச்சரியச்செய்யும் காட்சிகளை பலத்த, கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை , இடியென தாக்கியது அந்த காட்சி. திடீரென யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்தது அது ; அவர் தான் புலி. அவர் தான் ஹீரோவின் தந்தை என்றும் தெரிந்தது. தியேட்டரில் இருந்த பலரும் புலியாக நடித்தவர் யாரென்று தெரியாமல் முழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். பலர் பக்கத்திலிருக்கும் போலிஸ் ஸ்டேசன், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, , ஷெர்லாக் ஹோம்ஸ், ஐ.எம்.எஃப் போன்ற உளவுத்துறை அமைப்புகள் மற்றும் ஏஜென்ட்களிடம் புலியாக நடித்திருந்தவர் யாரென கண்டுபிடித்துத் தருமாறு பெட்டிசன் போட்டார்கள். இவர்களெல்லாம் கைவிரிக்க வேறுவழியே இன்றி ஜேம்ஸ்பாண்டை அனுக , அவரும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று சோகங்கலந்து குரலில் கண்ணீருடன் சொன்னார். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அகதா கிறிஸ்டியின் நாவல்களில் வரும் மாபெரும் துப்பறிவாளர் பொய்ரெட் தன் குள்ள உடலையும் பெருத்த தொப்பையும் உருட்டிக்கொண்டு தியேட்டருக்கு வந்து அந்த ரகசியத்தைக் கூறினார்; அப்பா வேடத்தில் நடித்ததும் விஜய் என்று தெரிந்ததும் தியேட்டரில் சோ-வென கூச்சலிட்டார்கள். மாறுவேடத்தில் ஏற்கனவே வந்த கெட்டப்பைக் கண்டுபிடிக்கத் தடுமாறிய ரசிகர்களை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்திவிட்டது தந்தையின் கெட்டப்.

இந்த சந்தோஷம் அதிகநேரம் நீடிக்கவில்லை; ஒருகட்டத்தில் அந்த துக்ககரமான விஷயம் நடந்தது. பிரபுவின்  இறப்புக்கே கண்ணீரை காலி செய்திருந்ததால் , கண்ணீர் ஆறு அங்கு ஓடவில்லை என்பதே ஆறுதல். ஆனால் ஐ.சி.யூ-வில் சேர்க்கப்படும் நிலைக்குப் பலர் ஆளாகிவிட்டார்கள் . இதற்குமேல் கதையைச் சொல்லிவிட்டால் படம் முடிந்துவிடும்.  அதனால் இதுவே போதும். இதுவரை படத்தில் ஃபேன்டசி என்ற வஸ்து சரிவர இல்லாததால் என் விமர்சனத்தில் அதைக் கொஞ்சம் தூக்கலாக்கிவிட்டேன். இனி கொஞ்சம் சீரியஸாக பார்க்கலாம்.

விஜய் எனும் மாஸ் ஹீரோவை வைத்து கோலிகுண்டு விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம். எல்லோரும் விஷுவல் ட்ரீட், விஷூவல் ட்ரீட் என்று சொல்லும்போது எனக்கு இன்னும் செம காண்டுதான் வருகிறது. மயக்கம் என்ன திரைப்படம் விஷுவல் ட்ரீட். இந்த படத்தில் காட்டப்படும் காடுகள் எல்லாம் ‘நட்புக்காக’ படத்தில் வயதான சரத்குமார் இன்ட்ரோ ஆகி சண்டைப்போடும் காடுகள் போலுள்ளது . இதில் விஷுவல் ட்ரீட் எங்கிருக்கிறது? முந்தைய விஜயின் படங்களை  எடுத்துப் பார்த்தால் அழகிய தமிழ்மகன் சினிமாட்டோகிராபி சுமாராகத்தான் இருக்கும்; இந்த படம் அதைவிட செம சுமார் ஒளிப்பதிவு. ஆயிரத்தில் ஒருவன் அட்வென்சர்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேசன்களைப் பார்த்தவர்கள் இதைப் பார்த்தால் வாய்விட்டு சிரிப்பார்கள். இது என்ன புதுஹீரோ நடிப்பில் வெளியாகும் படமா? இருக்கின்ற பணத்தை வைத்து எடுக்க? 100 கோடி ரூபாய் பிஸினஸ் நடத்தும் விஜய்யின் படத்திற்கான தரம் என்பதும் அதிகமாகத்தான் இருக்கவேண்டும். 2 கோடி, 3 கோடியில் திரைப்படம் எடுப்பவர்களே விஷுவலில் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மிகச்சுமாரான விஷுவலை காமித்துவிட்டு , இது விஷுவல் ட்ரீட் என்றால் செம காண்டுதான் வருகிறது. நட்டுவுக்கு என்ன கோவமோ தெரியவில்லை. இந்தி சினிமாக்களில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் தமிழில் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. காட்சிகளில் ஏதோ கடமைக்கு ஆங்காங்கே ரிச் லுக் கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு ஹீரோயின்கள் எதற்கு என்று கேட்க தோன்றினாலும் படத்தில் விஜயைத்தவிர்த்து வேறு எந்த கேரக்டருமே தேவையில்லை  என்பதைப் போல் தான் உள்ளது. சரி, காதலி கேர்கடர் கடத்தப்படுகிறாள், படத்திற்கு அவசியமென்றால் , இளவரசி ஹன்ஸிகா கேரக்டர் எதற்கு? அவளின்மூலம் அரண்மனையில் நுழைவதற்கா? அப்படியெனில் இந்த சின்ன கேரக்டரைசேசனுக்கு எதற்கு ஹன்ஸிகா ? தேவையில்லாத செலவு . எதற்கு செய்யவேண்டுமோ அதற்கு செய்யவேண்டும். இன்னும் படத்தில் பல கேரக்டர்கள் எதற்கு என்று தெரியாமலேயே வருகிறார்கள். விஜயகுமார் கட்டப்பாவாக வரும்போது செம செட்டப்பா இருக்கிறது.  

இவ்வளவு மொன்னையான வசனங்களை நான் எந்தவொரு படத்திலும் பார்த்ததோ , கேட்டதோ இல்லை. நேற்று ப்ளாக் தொடங்கி , சிறுகதை எழுதுபவர்களின் வசனங்கள் இதைவிட பிரமாதமாக இருக்கும். இசை ஒன்றும் பெரிதும் எடுபடவில்லை என்றாலும் பிண்ணனியில் முடிந்தளவு ஏதேதோ போட்டிருக்கிறார் டி.எஸ்.பி. ஶ்ரீதேவி கேரக்டர் பற்றியும் பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சுதீப் ? பாவம் அந்த ஆள். நல்ல நடிகரை வைத்து மொக்கையடித்து விட்டார்கள். பிரபுவுக்கு வழக்கம்போல துளிகூட வேலையில்லாத ஒரு கேரக்டர். கிராபிக்ஸ் ஒற்றைக்கண்ணன் எதற்கு ? தண்டச்செலவு. கேஸ்டிங் செலவைக் குறைத்திருந்தாலே படத்தின் தரத்தை அதிகரித்திருக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான கதையை செலக்ட் செய்து பெரியவர்களை ரசிக்கவைக்கும் திரைக்கதையை எழுதி , நல்ல டெக்னீசியன்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தால் இந்த புலி கொண்டாடப்பட்டிருக்கும்;  கதை செலக்ட் செய்தவிதத்தை , திரைக்கதை எழுதுவதிலும் காட்டியிருக்கவேண்டும். அதைவிட தன் திரைப்படத்தின் அவுட்புட் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை ஒரு இயக்குநர்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கோ படுமட்டமான கிராபிக்ஸ் காட்சிகளையும், அபத்தப்போக்கிலான விஷுவலையும் பார்க்கும்போது இது விஜய் படமா என்று கேட்கத்தோன்றுகிறது. இத்தனைக்கும் படத்தின் கிராபிக்ஸ் நல்லாயில்லை என்று விஜய் கூறி , மீண்டும் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தார்களாம். எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் பிடிக்கும் என்பதற்கு இது யாரோ நடித்த திரைப்படம் இல்ல! மாஸ் ஹீரோக்களின் திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பில்லாமல் எப்படி பார்க்கமுடியும்?


தனக்குக் கிடைத்தப் ‘புலி’யங்கொம்பை கோட்டைவிட்டுவிட்டார் சிம்புதேவன். முழுத்தவறும் இயக்குநரின் பேரில்தான் சுமத்தமுடியும். அவ்வளவு கேர்லெஸ் விஷயங்கள் படத்தில் நிறைந்திருக்கின்றன.  கதையைக்கேட்டு ஒப்புக்கொள்வதை எல்லா மாஸ் ஹீரோகளும் நிறுத்திவிட்டு ஹாலிவுட்டைப்போல் திரைக்கதை முழுமையும் படித்துப் பின் நடிக்க ஆரம்பிக்கவேண்டும்  என்பதைத்தான் புலி வலியுறுத்துகிறது. குழந்தைகள் கூட ரசிப்பது கடினம் தான். இதைவிட சிறந்த அட்வெஞ்சர்களையும் பேன்டசிகளையும் சோட்டாபீமில் தினசரி பார்க்கும் குழந்தைகளுக்கு பிடிப்பது கடினம். மற்றபடி ஏதோ போலாம் என்றால் போலாம். 

Friday, 4 September 2015

தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம்

உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சிறிய ஆச்சரியாமாவது  கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல் விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் சனாதனன்.

ஏற்கனவே சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1 சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்றிலிருந்து அறுவடைச் செய்யத் தயாராகிவிட்டேன்.

நான் ஒரு அதிதீவிர குறும்பட ரசிகன்; எந்தளவிற்கு என்றால் ஓ.சியில் யாராவது டவுன்லோட் பண்ணிக்கொடுத்தால் 1000 படங்களென்றாலும் அசராது பார்ப்பேன். என்னுடைய மாபெரும் பிரச்சனையே  நெட் தான். எங்கள் ஊருக்கு ப்ராட்பேன்ட் வசதியில்லாமையால் டேட்டா கார்ட் வாங்கி, மாதாமாதம் அதற்கு சாபத்துடன் தண்டம் கட்டி, கண்ணீர் வராத குறையாக தலையைச் சுற்றித் தூக்கி எறிந்ததால் வந்த வினை. சரியான நெட் வசதியில்லாததாலே குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பும் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்தது எனலாம். என்னது மொபைலா? என்னவோ நான் ஒருவன் தான் இந்த சேலத்திலேயே மொபைல் உபயோகிக்கிறேன் என்றும், எனக்காகவே ஊரெல்லாம் டவர் கட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் உபயோகிக்கும் செல்போன் நிறுவனம் நினைத்திருக்கும் போல. பாவம், அவர்களின் வறுமையைத் தீர்த்துக்கொள்ள நெட் பேக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த நெட்பேக்கை வைத்துக்கொண்டுதான் மாதமாதம் அந்த வறுமையான  கம்பனியின் முதலாளி சோறு தின்பார் என நினைக்கிறேன். நானோ பரமகஞ்சன்.  60 kbக்கு மேலிருந்தால் போட்டோவையே டவுன்லோட் செய்யமாட்டேன். பொத்தி பொத்தி உபயோகித்தாலே மாதம் 200 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. இந்த லட்சணத்தில் யூட்யூப் சென்று குறும்படம் பார்க்க என் குறுமனது சம்மதிக்குமா?

நேற்றிரவு சனாதனன் அவர்களுடன்  முகநூலில் உரையாடிக் கொண்டிருக்கும்போதுதான் லிங்கை அனுப்பி, என்னோட குறும்படம் ப்ரோ! எப்படி இருக்குனு கொஞ்சம் கமெண்ட்ஸ் கொடுங்க என்று கேட்டார். ஆளே இல்லாத இடத்தில், ஆலமரத்தடியில் துண்டைப் போட்டு ‘செல்லாது செல்லாது’ என பஞ்சாயத்து செய்யும் நம்மிடம், ஜூரி பொறுப்பை ஒருவர் ஒப்படைத்திருக்கிறாரே! ச்சும்மா விட்ருவமோ! கொள்கைக்கு பத்துநிமிடம் பைபை சொல்லி விட்டு டவுன்லோடி பார்த்தேன். உண்மையாகவே ஒரு குறும்பட இயக்குநராக வலம்வர வேண்டிய  அத்துனை திறமைகளையும் தன்னகத்தில் பதுக்கிவைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இத்திரைப்படத்தில் அவ்வளவு வித்தைகளையும் இறக்காமல் விட்டுவிட்டாரோ என்றெண்ணவும் வைத்து விட்டார்.

படத்தின் கதை என்னவென்றால் , ஒரு ஆர்வக்கோளாறான இளைஞன்; எழுத்தாளனாக ஆசைப்படுகிறான் (கிட்டத்தட்ட என்ன மாதிரினு வச்சுக்கோங்களே). ஒருமுறை அவன் தனக்கு விருப்பமான எழுத்தாளரை எதேச்சையாக சந்திக்கும்போது தன் ஆசையை அவரிடத்தில் வெளிப்படுத்துகிறான். தானும் ஒரு பெரிய கதாசிரியராகவேண்டும்; அதற்கு தங்களின் ஆதரவும் உதவியும் வேண்டும் என்று கேட்கும் அவனுக்கு, மனதைத் தொடும்படியான ஒரு கதையை எழுதி வா! உனக்கு உதவுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் அந்த எழுத்தாளர். அதைத்தொடர்ந்து நடக்கும் விஷயங்களை நானே சொல்லிவிட்டால், சனாதனன் காண்டாகக்கூடும். எனவே அந்த ஆர்வக்கோளாறு இளைஞன் என்ன செய்தான் என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தின் சப்ஜெக்ட் மற்றும் கான்செப்ட் ரீதியாக வலுவான ஒரு பிண்ணனியை உடையது.; அதற்கான டெக்னிக்கல் டிபார்ட்மென்டும், ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட்டும் அருமையாக அமைந்துள்ளது ; அட , இவ்வளவு ஏங்க? திரைக்கதை மற்றும் வசனங்களும் சரியானபடி பொருந்தத்தக்கதாக அமைந்துள்ளது.  ஆனால், படத்தின் முடிவானது சப்ஜெக்டைத் தாண்டி வேறெங்கோ சென்று முடிந்ததாகவே எனக்குள் தோன்றியது. அழுத்தமான கிளைமேக்ஸ் வரவேண்டிய இடத்தில், ஜாலியானபடி முடித்துவிட்டாரோ என்று தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை, இது படத்தின் பெரிய குறையாக நான் உணர்ந்தேன்.

மற்றபடி படத்தின் ப்ளஸ் என்றால், கேமரா ஆங்கிள், இசை (கிளைமேக்ஸில் வரும் லோக்கல் பீட் தவிர)  மற்றும் நேர்த்தியான எடிட்டிங் என இவரது டீம் இவருக்கு பெரிதும் கைக்கொடுத்திருக்கிறது. கதைநடக்கும் சூழல் மற்றும் லொகேசன், கேமராவினுள் உலாவரும் பாத்திரங்களை முடிந்தவரை தத்ரூபமாக கையாண்டிருப்பது, நடிகர்கள் தேர்வு என அத்தனையும் கனகச்சிதமாகவே செய்திருக்கிறார் இயக்குநர். நடிகர்களும், குறிப்பாக செருப்புத் தைக்கும் சிறுவனாக வரும் அந்த பையனின் ஏக்கமான பார்வை மிகச்சிறப்பாக வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது; ஆனால் அவ்விடத்தில் மீண்டும் மீண்டும் அதேபோல அவன் பார்க்கிறான் என்பது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இயக்குநருக்குத் தெரியாததொன்றுமில்லை! எப்போதுமே ஒருபவர்புல் காட்சியென்பது ஒருமுறை வந்தால் தான் ஆடியன்ஸ் மனதில் பதியும். எடுத்துக்காட்டாக ஒரு ஹீரோயின் படம் முழுக்க கண்டங்கி சேலைக் கட்டிக்கொண்டு வந்து, ஒரே ஒரு சீனில் மாத்திரம் கிளிவேஜ் தெரிய பத்து செகன்ட் வந்து போனால், ஆடியன்ஸுக்கு அந்த கிளிவேஜ் மேட்டர் பெருசாக தெரியும்; ஆனால், படம் முழுக்க அப்படியே வந்தால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கேத் தெரியும்.  மற்ற நடிகர்களும் தத்தம் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிளைமேக்ஸில் வரும் நடிகையின் மூவ்மென்ட் மற்றும் டயலாக் டெலிவரி மட்டும் கொஞ்சம் ட்ராமேடிக்காக இருக்கிறது.

மொத்தத்தில் பெரிய அளவில் ரீச் ஆக வேண்டிய குறும்படம் சில மிஸ்ஸிங்குகளால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஆனால் கண்டிப்பாக நமது ஒன்பது நிமிடங்களை வேஸ்ட் செய்யாது. தாராளமாக பார்க்கவேண்டிய குறும்படம் தான் இந்த தெருவில் ஒரு சிறுவன். என்னைப் போலவே 2G-யில் காலம் தள்ளுபவர்கள் en.savefrom.net சைட்டில் சென்று இத்திரைப்படத்தை உங்களுக்கேற்ற அளவில் டவின்லோட் செய்து பாருங்கள்.

குறும்படத்தின் யூட்யூப் லிங்க் .படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும் .

அடுத்து இந்த மெகா சீரியல்களை ஒளிபரப்பி என் மனநிம்மதியைக் கொன்றெடுத்து, ரத்தவெறிபிடித்த சைக்கோவாக மாற்றிக்கொண்டிருக்கும் டி.வி சேனல்களே! மனிதநேயமென்று ஒன்று உங்களிடமிருந்தால் தயவு செய்து என்போன்ற இளைஞர்களை பி.பி.யின் கோரப்பிடியிலிருந்தும், மனச்சிதைவுப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காகவாது அந்த இழவெடுத்த மெகாசீரியல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களால் மாலை ஆறு மணியிலிருந்து 11.30 மணி வரை, ரெஸ்டே இல்லாமல் டென்சனில் தவித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மெகா சீரியல்களாவது பரவாயில்லை! இந்த இந்தி சீரியல்கள் இருக்கிறதே! நான் பார்த்த மகா கழிசடையான நாடகங்கள் என்றால் இந்த தமிழ் டப்பிங் நாடகங்கள் தான். அதுவும் மூன்று முடிச்சி என்று ஒரு உலகமகா காவியம் பாலிமரில் ஓடுகிறது. அந்த கருமத்தைப் பார்த்து எனக்கு வரும் ஆத்திரத்தின் அளவினைக் கணக்கிடவே தனி மெஷின் கண்டுபிடிக்கவேண்டும். அது போன்றதொரு குப்பையினை என்வாழ்நாளிலேயே எங்கும் பார்த்ததில்லை; அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு பதில் சுறா, அசல், அலை, சுள்ளான் போன்ற படங்களையே பார்த்துத் தொலைக்கலாம் என்பது போல் இருக்கின்றது. இங்கே நான் மற்றவர்களின் ரசனையை குறைத்து மதிப்பிட வரவில்லை. என்போன்றே ஆத்திரத்துடன் அந்த நாடகத்தைப் பார்த்தவர்களெல்லாம் தங்களின் ஆத்திரத்தை ஓரங்கட்டிவிட்டு, அந்நாடகமெனும் கொடுமைக்குள் மூழ்கி ஒன்றிணைந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு மனவலிமையைக் குறைக்கும் சைக்கலாஜிக்கல் பிரச்சனையாகவே நான் கருதுகிறேன் .


இப்போது நான் கூற விளைந்தது என்னவென்றால், இதுபோன்ற குப்பைகளுக்கு இடையில் ஒரு அரைமணிநேரம் ஒவ்வொரு டி.வி.சேனலும் குறும்படங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழங்கலாம்; அதான் நாளைய இயக்குநர் மாதிரியான ப்ரோகிராம் இருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ப்ரோகிராம் வைத்து எதற்கு பணத்தை வேஸ்ட் செய்துகொண்டு? யூட்யூப்பில் பார்த்து சிறந்த மூன்று திரைப்படங்களை, அப்படத்தின் இயக்குநரிடம் ஒரு மெயில் போட்டுவிட்டு ஒளிபரப்பட்டும். இதற்கு எந்த குறும்பட இயக்குநராவது மறுப்பு தெரிவிக்கப் போகிறாரா என்ன? அவ்வாறு செய்யும்போது சேனல்களும் ஒருபைசா செலவில்லாமல் சம்பாத்திக்கொள்ளலாம்; அதேநேரம் ஒரு குறும்பட இயக்குநருக்குண்டான க்ரெடிட்டும், அதன்மூலம் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சிலபல வாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உண்டாகும். இப்படிச் செய்தால் டி.வி. என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடும் என்போன்றோரும் அவ்வப்போது டி.வி.யைப் பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால் நல்லதைச் செய்ய நம் சேனல்களுக்கு வழி தெரியாது என்ற காரணத்தினால் இது மாதிரியான விஷயங்களை மனதிலேயே வைத்துப் பூட்டிவைக்கவேண்டியுள்ளது. 

Thursday, 3 September 2015

தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

ஒரு பக்கா ஆக்சன் - திரில்லருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்குமுன் ஒரு குட்டி ப்ளாஷ்பேக் . நானும் என் நண்பனும் தினமும் மாலை வேளையில் ஜிம்மிற்கு செல்வோம். வியாழன் மாலை அப்படிச்செல்லும் போது வழயில் தனி ஒருவன் போஸ்டரைப் பார்த்தோம். ‘ரவி  வரிசையா படம் நடிச்சே தள்ளிட்ருப்பாரு போல இருக்கே’ என்றவாறு;பாரேன்! ரவி கூட வரிசையா படமா நடிச்சி தள்ளுறாரு. இவரு அண்ணன் வேலாயுதத்தோட போனவரு! இன்னும் ஆள காணோம்’ என்றவாறு பரிதாபப்பட்டுக்கொண்டே வந்துவிட்டோம். எப்போதும் டி.வியே பார்க்காத நான் எதேச்சையாக அன்றிரவு டி.வி பார்க்கும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டு, மனதுக்குள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் தனிஒருவன் ட்ரைலரைப் பார்த்தேன். ட்ரைலர் செம ஸ்டைலாக இருக்கிறதே! படமும் நன்றாக இருக்குமோ? என்றவாறே நினைத்துக் கொண்டு என் நண்பனிடம் அன்றிரவே கூறினேன். அவன், ‘யாரு டூட் டைரக்டர்?’ என்று கேட்க, தெரியவில்லை என்று கூறிவிட்டால், நீயெல்லாம் ஒரு சினிமா அனலைசர் என்று காறித்துப்பி விட்டால் என்ன செய்வதென்பதற்காக, புதுடைரக்டர் போல இருக்குடா என்று கூறினேன். ரிசல்ட் வரட்டும் டூட்! பாக்கலாம் என்று அவன்  கூற அத்துடன் நிறுத்திக்கொண்டேன் .

அடுத்த நாள் படத்தின் ரிவியூக்களை ஒன்றுதிரட்டி படித்தபோது , படம் சூப்பராக இருக்கிறது என்பதைவிட, படத்தின் இயக்குனர் ஜெயம் இயக்கிய ராஜா என்பதை படித்தபோது தான் பேரதிர்ச்சிக்குள்ளானேன். அடப்பாவிகளா! பேர மாத்துனா, சொல்லவேண்டியதுதான? இது என்ன ஹாலிவுட்டா? அப்படி இப்படியென்று மனதுக்குள் கேள்வியெழுந்தாலும், சரி நாம நியூஸ் படிக்கறதுமில்ல, பாக்கறதுமில்ல! அப்பறம் எங்க இதெல்லாம் தெரியப்போகுது என்றவாறு அமைதியாகிவிட்டேன். படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் இது ரீமேக் இல்லை, சொந்த சரக்கு என்ற ராஜாவின் பேட்டி.
அப்படி என்ன சரக்க உள்ள வச்சிருக்காருனு திரையரங்கில் சென்று அமர்ந்தால், ஒரு பக்காவான ஸ்கிரிப்டோடு அதகளம் செய்திருக்கிறார் . பொதுவாக ஆக்சன் த்ரில்லரைப் பொறுத்தவரை பெரும்பான்மையான படங்கள், ஆடியன்ஸை வில்லனின் கண்ணோட்டத்திலிருந்தோ  அல்லது ஹீரோவின் கண்ணோட்டத்திலோ ஒன்ற வைத்து பார்க்கவைக்கும்படியாக இருக்கும். ஆனால் இது அம்மாதிரியல்ல. ஆடியன்ஸான நாம், ஆடியன்ஸாகவே இருப்போம் . நம்முடைய வேலை, திரையில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பது மட்டுமே! அந்தளவிற்கு நம்மை படத்துடன் கட்டிப்போட்டு, பரபரவென்று திரைக்கதையால் நகர்த்திக்கொண்டே போகிறார் இயக்குநர் .


படத்தின் கதையை எல்லாரும் எழுதிவிட்டாலும் மனதுகேட்காத காரணத்தினால், நானும் என் பார்வையில் எழுதிவிடுகிறேன் . புத்திசாலி ஹீரோவுக்கும், அதிபுத்திசாலி வில்லனுக்குமான விளையாட்டே இத்திரைப்படம். கிட்டத்தட்ட டார்க் நைட்டின் நியாபகம் உங்களுக்கு வந்திருக்கலாம். அதேபோல் தான் இத்திரைப்படமும். வில்லனை எந்தளவு பவர்ஃபுல்லாக காட்டவேண்டுமோ, அந்தளவு பவர்ஃபுல்; சயின்டிஸ்ட், பெரும் கோடிஸ்வரர், தொழிலதிபர், அமைச்சரின் மகன் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ வில்லனுக்குரிய அடையாளங்களாக இருக்கும்; ஆனால் இத்திரைப்படத்திலோ மேற்கண்ட அத்தனை அம்சங்களையும்  ஒன்றிணைந்த வில்லனாக அரவிந்த் சாமி. பத்மஶ்ரீ விருதெல்லாம் வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்; எந்தளவுக்கு அறிவை கெட்டவழியில் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தும் அதிபுத்திசாலி. அவரின் உண்மைமுகத்தை உறித்துக்காட்டுவதாக சபதமிடும் போலிஸ் அதிகாரி ஜெயம் ரவி. அவருடன் ட்ரைனிங்கில் கலந்துகொண்டு நண்பர்களாகும் சில போலிஸ் நண்பர்கள் + நயன்தாரா . இவர்கள் தான் படம் நெடு்கிலும் .

ஹாலிவுட்டில் பெரும்பாலான பக்கா வில்லன்களை உடைய திரைப்படங்களில், ஆரம்பிக்கும் காட்சியே வில்லனிடமிருந்து ஆரம்பிப்பார்கள். அதேபோல, இப்படத்திலும் வில்லன் ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, ஹீரோ இன்ட்ரடக்சனிலேயே ஹீரோவின் கேரக்டரை தெளிவாக விளக்கி, பின் செம சைலன்டாக வில்லனை அறிமுகப்படுத்தி, அவர்களிருவருக்கும் ஒரு  தொடர்பை உருவாக்கி, அதனையொட்டித் தொடரும் விளையாட்டுகள் என பக்காவாக படத்தை நகர்த்தியிருக்கிறார் ராஜா.

அது என்னவோ தெரியவில்லை! நிஜவாழ்வில் நம்மால் முடியாத காரியத்தை ஸ்டைலாக செய்துபார்ப்பவனைத் தாம் நாம் ரசிக்கிறோம் . அதேபோல, இத்திரைப்படத்திலும் வில்லத்தனங்களைச் செய்யும் அரவிந்த் சாமியையே நம் கண்கள் தேடி ஓடுகின்றன. ஜெயம் ரவி உயிரைக் கொடுத்து நடித்தாலும் , அந்த ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எனும் விஷயத்தில் ஜெம்மாக சுழன்று நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார் .

ஜெயம் ரவி, தன் பாத்திரத்தின் திறனேற்று சிறப்பாக நடித்திருக்கிறார் . நயன்தாராவின் முகத்தில் எண்ணெய் வடிவதுபோன்றுதான் மேக்கப் போடுவாங்களா? அல்லது முகமே அப்படித்தானா? நானும் வில்லு படத்திலிருந்து பார்க்கிறேன் . எண்ணெய் வடிவது போன்றே இருக்கிறது அவரது முகம். என் கண்ணில் குறைபாடா ? அல்லது அவரின் கன்னத்தில் குறைபாடா என்றே தெரியவில்லை. வம்சி கிருஷ்ணாவிற்கு பெரிய வேலையொன்றுமில்லை . ஹீரோவின் நண்பர்களாக வரும் கனேஷ் வெங்கட்ராம், ஶ்ரீசரண் போன்றோர்களின் தேர்வும், நடிப்பும் சரியான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறது. தம்பி ராமையா அப்பாவி மினிஸ்டராக ஆங்காங்கே வந்து சிரிக்கவைக்கிறார். நாசருக்கு பெரிய காட்சிகள் தரப்படவில்லை .  

ஒருசில காட்சிகள் நாம் கெஸ் செய்துவிட்டாலும் பல காட்சிகளில் நம்மையும் திணறடிக்கின்றன . சின்ன சின்ன கேம்மாக காட்டப்படும் காட்சிகள்  ஆங்காங்கே சலிப்படையச் செய்தாலும் படத்திற்கு பெரிய தடையாக இல்லை. படத்தில் லாஜிக் மிஸ்டேக் எண்ணிலடங்காதவைகள் இருந்தபொழுதினும் அவையெல்லாம் பெரிய குறையாக தெரியவில்லை என்பதே உண்மை .

படத்தின் ப்ளஸ்களைக் கணக்கிட்டால் ராம்ஜியின் அட்டகாசமான ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் தமிழாவின் பிண்ணனி இசை. ஹிப் ஹாப் தமிழா, பிண்ணனி நன்றாக போட்டிருந்தாலும் பாடல்களில் இரைச்சலை ஏற்றி, காதை அறுப்பது எதனால் என்று புரியவில்லை; அனிரூத்திடம் இருந்து வந்த பழக்கமோ என்னவோ? ஆங்! சொல்லமறந்துவிட்டேனே! படத்தில் டைட்டில் சாங தவிர ஒரே ஒரு மெலடி மட்டும் தான். அதனால் தம்மடிப்பவர்களுக்கான  வாய்ப்புகள் மிகமிகக் குறைவே !

இது ஒரு பக்கா ஆக்சன்-த்ரில்லர் என்னறு சொல்லிவிட முடியாது. குறைகள், பிழைகள் காணப்படும் திரைப்படம் தான். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் இன்டெலிஜென்ஸ் சினிமாக்களுக்கு ஒரு முன்னோடியாக இத்திரைப்படம் வென்றுவிட்டது என்று கூறலாம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படங்களின் வரிசையில் இதையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் .

பின்குறிப்பு – படத்தில் காட்டப்படும் ஸ்லைடுகள் படபடவென்று காட்டப்பட்டுவிடுவதால் , சில இடங்களில் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது . கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் மட்டுமே ஸ்லைடுகள் வி

Friday, 7 August 2015

MISSION IMPOSSIBLE 5 – சினிமா விமர்சனம்                              ROUGH NATION

முதலில் ஒரு மன்னிப்பு ! வெறித்தனமாக ப்ளாக்கில் இயங்கிவந்த நான் சிலகாலமாக ப்ளாக்கில் எழுதுவதையே மிகமிக குறைத்துவிட்டேன் . காரணம் பெரிதொன்றுமில்லை ; ஒருபக்கம் பர்சனலாக பற்பல பக்கங்களுக்கு எழுதிக்கொண்டிருப்பதாலும் , வலைச்சரத்தில் தொடர்ச்சியாக இருவாரங்கள் எழுதிவந்தமையாலும் ஏற்பட்ட சோர்வே ! இனிவரும் காலங்களில் தொடர்ந்தாற்போல் எழுத உங்களின் ஊக்கம் தேவையென்பதை வேண்டிக்கேட்டுக் கொண்டு இத்திரைப்படத்தினைப் பற்றிப் பார்க்கலாம் .

என் சோம்பேறித்தனத்தின் உச்சப்பட்சம் எதுவென்றால் இன்றைய மாதம் தான் . தொடர்ந்தாற்போல் நான்கு மிஷன் இம்பாஸிபிள் சீரிஸையும் , ஜேம்ஸ் பாண்ட் சீரிசையும் தொடர்பதிவாக எழுத மூன்று மாதங்களுக்கு முன்பே ப்ளான் பண்ணியிருந்தாலும் எழுதமுடியாமல் போய்விட்டது . மிக முக்கியமாக நான் விரும்பும் சீரிஸ்களில் மிஷன் இம்பாஸிபளுக்கு என்றும் தனியிடம் உண்டு . என்ன காரணமென்று யோசித்தால் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை ; நம்மை ஆச்சரியப் படுத்தவைக்கும் கதையோ , திரைக்கதையோ இதுவரை வந்த எம்.ஐ சீரிஸ் படங்களில் இல்லை . அதிலும் குறிப்பாக லாஜிக் என்ற வஸ்துவை நீங்கள் கண்டறிந்தால் நோபல் பரிசே அளிக்கலாம் . இவ்வளவு ஓட்டையிருப்பினும் எம்.ஐ சீரிஸ் எனக்குப் பிடித்ததற்கு காரணமென்றால் டாம் க்ரூஸ் மற்றும் நம்பவே முடியாத விஷயங்களை 2 மணிநேரம் நம்பவைத்து நம்மை ஏமாற்றும் வித்தை . அதற்காக இந்த சீரிஸின் அனைத்துப் படங்களும் எனக்கு மிகமிக பிடிக்கும் . குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் என்றால் உயிர் எனக்கு . இரண்டாம் பாகத்தை ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ்களில் பெஸ்ட்டாக நான் நினைக்கும் டை அனதர் டேயுடன் ஒப்பிடும் அளவுக்கு எனக்கு பிடிக்கும் . இப்படிப்பட்ட படத்தினைப் பற்றி தொடர்பதிவு எழுதாமல் போனால் நானெல்லாம் ஹாலிவுட் திரை விமர்சகன் (?) என்று சொல்வதே கேவலம் . ஆனால்  ஒரே ஒரு ஆறுதல் , மிஷன் சீரிஸுக்கும் , ஜேம்ஸ் பாண்ட் சீரிஸுக்கும் தொடர்பதிவு எழுதி விளக்கவேண்டிய அவசியமில்லை என்பதே ! 

இந்த MI சீரிஸின் எல்லா பாகங்களையும் கவனித்துப் பார்த்தவர்களுக்கு ஒன்று கண்டிப்பாக விளங்கும் ; அது துரோகம் . ஏற்கனவே ஏஜென்டாக இருப்பவர்கள் அரசின் நடவடிக்கையின்மேல் ஏற்படும் வெறுப்பு காரணமாகவோ , அல்லது பணத்தாசை காரணமாகவோ தங்கள் ஏஜென்ட் திறமையைத் தவறான வழிகளில் ஈடுபடுத்துவார்கள் . அதை நம் ஈதன் ஹன்ட் (டாம் க்ரூஸ்) அட்டகாசமான விட்ஜெட் மற்றும் கேட்ஜெட்களைக்கொண்டு கண்டுபிடிப்பதே திரைப்படம் . இதில் மிகமுக்கியமான விஷயமென்னவெனில் தலைவர் சார்ந்திருக்கும் இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ் (IMF) பெரும்பாலும் ஹீரோவையே குற்றவாளியாக எண்ணி , வில்லன்களை விட்டுவிட்டு ஹீரோவை வேட்டையாடத் துரத்தும் . கடைசியில் ஹீரோ நல்லவர் என்று சான்றிதழ் கொடுத்து மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொண்டு அடுத்த பாகத்தினில் மீண்டும் ஹீரோவை வில்லனாக்கி அழகு பார்க்கும் . ஹீரோவோ வழக்கம்போல ஐ.எம்.எஃப்க்கு டிமிக்கி கொடுத்துவிட்டி ரியல் வில்லனைக் கண்டுபிடிப்பார் .

ROUGH NATION-ஐ பார்க்கும்முன் முந்தைய MI சீரிஸ்களை ஒருநோட்டம் விட்டு வந்துவிடலாம் . ஏன்டா இப்படி எங்கள சாவடிக்கற என்று புலம்புபவர்கள் , படத்தின் கதையைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த பாராவையும் இதற்கடுத்த பாராவையும் ஸ்கிப்பிவிட்டுச் செல்லுங்கள் . முதல்பாகத்தில் தமக்கு கமேன்ட் ஆபிசராக இருப்பவரே வில்லனாகிவிட , அவரைச் சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் , ஹெலிகாப்டரில் பறதுகொண்டு முறியடிக்க , படமோ மெகாப்ளாக் பஸ்டர் ஹிட்டைப் பெற்றது . அதுவரை ஜேம்ஸ்பான்ட் சீரிஸில் மட்டும் வந்த ஸ்பை கம் ஆக்சன் வகையறாவை பக்காவாக உள்வாங்கி முதல்பாகத்தில் வெற்றிக்கொடியை நாட்டினார் ப்ரைன் டீ பால்மா . பெரும்பாலும் முதல்பாகத்தில் மாபெரும்  வெற்றிபெறும் திரைப்படங்கள்  , இரண்டாம் பாகத்தில் மரண அடி வாங்கிவிடும் . எடுத்துக்காட்டாக ஃபென்டாஸ்டிக் போர் , ஹல்க் , ஆரம்பகால பேட்மேன் திரைப்படங்கள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம் . ஆனால் முதல்பாகத்திற்கு இணையாக , ஏன் அதைவிடச் சிறப்பாக எடுக்கப்பட்டது இந்த சீரிஸின் இரண்டாம் திரைப்படம் . ராபர்ட் டௌன் திரைக்கதையை , செம ஸ்டைலிஷாக , பரபர ஆக்சனுடன் இயக்கி மற்றொரு ப்ளாக்பஸ்டரைக் கொடுத்து , எம்.ஐ சீரிஸை கிளர்ந்தெழச் செய்தார் ஜான் வூ . அதன்பின் வந்த மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களில் என்னதான் டாம்க்ரூஸின் அட்டகாசமான சண்டைக்காட்சிகள் இருப்பினும் , இரு திரைப்படங்களும் முதலிரண்டு பாகங்கள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை . நான்காம் பாகத்தில் மெய்சிலிர்க்கவைக்கும் புர்ஜ் ஹோட்டல் ஸ்டன்ட் நம்மைப் பரவசப்படுத்திய அளவுக்கு , அத்திரைப்படம் பரவசப்படுத்தியதா என்றால் இல்லை . டாம் க்ரூஸ் தன்னை நிருபித்தாகவேண்டிய கட்டாயம் அதிகமாயிருந்ததாலோ என்னவோ , எனக்கு இத்திரைப்படம் ஒருபெரும் எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் ஒன்று

இப்படி எம்.ஐ சீரிஸுக்கு சாவு மணி அடிக்க இருக்கும் நேரத்தில் வந்த திரைப்படம்தான் ROUGH NATION  ( டைட்டில் தமிழில் எவன் ட்ரான்ஸ்லேட் பண்ணினானோ , அவன் மண்டையைப் பிழக்கவேண்டுமென்று தோன்றுகிறது எனக்கு . முரட்டு தேசம் ! எப்படி டைட்டில் ? இவர்களின் தமிழார்வத்துக்கு ஒரு வரைமுறையே இல்லை ) . படத்தை பக்காவாக எடுக்கவேண்டும் என்ற முழுமூச்சுடன் டாம் க்ரூஸ் இம்முறை வாய்ப்பளித்தது  ஏற்கனவே நடித்த ஜாக் ரீச்சர் திரைப்படத்தின் இயக்குநர் க்றிஸ்டோபர் மெக்கோரே . இவரைப்பற்றியும் சாதாரணமாக சொல்லிவிடமுடியாது ; ஹிட்லர் காலத்திய பிக்சனான VALKYRIE , செத்து செத்து விளையாடிய EDGE OF TOMMORROW , ப்ரைன் சிங்கருக்கு வாழ்வளித்த USUAL SUSPECTS , செவ்வாயில் நடத்திய அட்வெஞ்சர் திரைப்படமான ஜாக் த ஜெய்ன்ட் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் . ஆனால் இயக்கிய திரைப்படங்கள் கைகொடுக்கவில்லை என்பது வேறு .

ஏதேதோ எழுதிவிட்டு படத்தின் கதையை எழுதாமல் விட்டுவிட்டேனே ! சின்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பு இருப்பதாக டாம்க்ரூஸ் கண்டறிகிறார். ஆனால் அப்படிஒரு அமைப்பே இல்லையென்றும் ஐ.எம்.எஃப்-ன் மோசமான நடத்தையினால் தான் ரஷ்யாவில் க்ரெம்ளின் (சென்ற பாகம்) மாளிகை வெடிக்கப்பட்டது என்றெல்லாம் கூறி , சி.ஐ.ஏ-வுடன் ஐ.எம்.எஃப் இணைக்கப்படுகிறது . ஈதன் ஹன்ட் குற்றவாளியாகிறார் . அவர் எப்படி சின்டிகேட் இருப்பதை அம்பலப்படுத்தி , ஐ.ம்.எஃபை மீண்டும் மீட்கிறார் என்பதே கதை . ஆனால் அதை எடுத்தவிதம் , நிச்சயமாக இம்பாஸிபிள் தான் . முதல்காட்சியில் ப்ளைட்டில் பறந்துகொண்டு டாம் க்ரூஸ் இன்னும் தனக்கு 52 வயதாகவில்லை என்பதை கெத்தாக நிருபித்திருக்கிறார் . ச்சும்மா இல்லை ! இருமுறை  இந்த ஷாட் 5000 அடியில் பறந்துகொண்டு எடுக்கப்பட்டது . தண்ணீருக்குள் சிப் இன்செர்ட் செய்யப்போகும் காட்சிகள் , பைக் ஸ்டன்ட் , கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் கிளாஸ் . ஆங்காங்கே ஹுயுமரும் நம்மைப் பரவசப்படுத்துகிறது . 

ஒரு படத்தில் வில்லன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு , இப்படம் சிறந்த உதாரணம் . இத்தனைக்கும் , வில்லன் ஒருகொலைகூட செய்யமாட்டார் . ஆனால் அவரைப் பார்த்தால் நமக்கும் ஒரிஜினல் வில்லனைப் பார்ப்பது போலிருக்கும் . ஹீரோயினை மிகச்சிறப்பாக உபயோகித்த சில படங்களில் இதுவும் ஒன்று . ஜேம்ஸ் பான்ட் படங்களில் வரும் அழகிகளைப் போல் ஆண்களை அங்கடித்து வீழ்த்தாமல் , ரியலாகவே சண்டை போட்டு நம்மை பரவசப்படுத்துகிறார் ரிபாக்கா.  அதுவும் அவரின் அழகிருக்கிரதே !என்ன காரணத்தாலோ பாகுபலியில் தமன்னாவின் ஆடைஅவிழ்ப்பு காட்டப்பட்டதைப் போன்றே இப்படத்திலும் ஒரு காட்சி வருகிறது ; அதைப்பார்த்தால் நமக்கு ஏக்கப்பெருமூச்சு தான் வரும் . பெஞ்சாக வரும் சைமனுக்கு இப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு ; கிட்டத்தட்ட செகன்ட் ஹீரோவே இவர்தான் . ஹுயுமர் எட்டிப்பார்ப்பதும் இவர்பேசும் வசனங்களில்தான் . முதல் பாகத்தில் லூதராக வந்த விங்க் ரேம்ஸ் , இப்படத்திலும் வருகிறார். இருப்பினும் அவரது மூப்பு ஆங்காங்கே எட்டிப்பார்க்கினது.  வில்லன் லேனாக சீன் ஹாரிஸ் . போன் டாக்டர் என்றவொரு அல்லக்கை ஆங்காங்கே வருகிறது  . அவனுடன் டாம் க்ரூஸ் போடும் சண்டைக்காட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அல்வாகொடுத்துவிடுகிறார்கள் .

ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலங்களில் ஒன்று. ஸ்டன்ட் காட்சிகளைத் தத்ரூபமாகவும் , சிஜிக்கு ஏற்றவாறும் எடுத்திருப்பதில் இவரது பங்கு தெரிகிறது .ஜோ க்ரீமரின் பிண்ணனி இசை படத்திற்கு கூடுதல் பலம் . டைட்டில் போடும்போதே ஒலிக்கும் இசையும் , அதைத்தொடர்ந்து டாம் க்ரூஸ்  ஊசரவல்லி என்.டி.ஆர் போல் ஓடி வந்து இன்ட்ரோ கொடுக்கும் இடமும் அதகளம் . அதைத்தொடர்ந்தாற்போல் , உங்களுக்கு ஒரு மிஷன் என்று ஐ.எம்.எஃப் சொல்வதுபோன்றதொரு டிஸ்க்கில் வில்லன் பேசும்போது டாம் க்ரூஸினைப் போன்றே நாமும் அதிர்ச்சியாகிறோம் . பைக் ஜேசிங் காட்சியில் டாம் க்ரூஸின் ஸ்டைலிருக்கிறதே ! இதுதான் டாம் க்ரூஸ் . ரேபான் கிளாஸினை மாட்டிக்கொண்டு ,  சூப்பரான ஒரு பாரின் பைக்கில் ஏறி படுத்துக்கொண்டு , படுவேகமாக ஓட்டிக்கொண்டு வரும்போது முடிபறக்கும் பாருங்கள் ; அதுதான் க்ரூஸ் . இரண்டாம் பாகத்தில் இதேபோன்றதொரு  பைக் ஸ்டன்டில் பங்க் விட்டுக்கொண்டு வரும் டாம் க்ரூஸைப் பார்த்து ஜொள்ளுவிட்ட பெண்களை விட ஆண்கள் அதிகம் . அதைவிடச்சிறப்பான பைக் சேசிங் ; ஆனால் பங்க் மட்டும் மிஸ்ஸிங் . இருந்தாலும் அந்த ஸ்டைல் துளிகூட குறையவில்லை . அந்த ஸ்டன்டைப் பார்த்ததும் எனக்கு படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் தான் நியாபகம் வந்தது .கூடுதல் செய்தி – அந்த ஸ்டன்டில் ஏற்பட்ட விபத்தில் தலைவர் , தன் முட்டிகளை உடைத்துக்கொண்டார் .

எப்படி இருப்பினும் எம்.ஐ சீரிஸின் மற்றொரு எழுச்சியாக இத்திரைப்படம் எனக்குத் தோன்றுகிறது  கடந்த இருபாகங்களில் கைவிட்டதை இம்முறை டாம் க்ரூஸ் பிடித்துவிட்டார் .  முதல் பாகத்தை விஞ்சி இருந்தாலும்  இரண்டாம் பாகத்தை மிஞ்ச முடியாது என்பது வேறு கதை  . எம்.ஐ-யின் ரசிகர்களுக்கு இது ஒரு அட்டகாசமான ஆக்சன் திரைப்படம் . டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஆக்சன் விருந்து . சாதாரண ரசிகர்களுக்கு இது ஒருமுறை பார்க்கக்கூடிய , பரவசப்படுத்தக்கூடிய ஆக்சன் திரைப்படம் . தமிழ் டப்பிங் சுமார் தான் . இன்னொருமுறை ஆங்கிலத்தில் படத்தினைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலிருந்தாலும் சேலத்தில் ஆங்கிலத்தில் ரிலிசாகவில்லை .முடிந்தவரை ஆங்கிலத்தில் பார்க்கமுயலுங்கள் . நல்ல சப்-டைட்டில் திரையரங்கு என்றால் உத்தமம் .

Tuesday, 21 July 2015

TERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்
ஒரு பேட்டியில் கேமரூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதாகப்பட்டது நீங்க ஏன் தலீவரே ரெண்டு பார்ட்டோட டெர்மினேட்டர் சீரிச நிறுத்திட்டிங்க என்பதே அக்கேள்வி . அதற்கு அவரும் எளிமையானதொரு பதிலைத் தந்தார் . எவ்விதமான முன்யோசனையுமில்லாமல் எடுக்கப்படும்  ஒரு திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பதே பெரிய விஷயம்; காரணம் பார்வையாளர்கள் முதல் பாகத்தினை மனதில் பலவாறாக கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் .  அதே கற்பனையுடன் வரும்போது இரண்டாம் பாகம் என்னதான் நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் . இரண்டாம் பாகத்திற்கே இந்நிலை என்றால் மூன்றாம் பாகத்தினைப்பற்றி சொல்லவேண்டுமா ? அவர்கள் மனதில் நிலைக்கும்படியான இரு படங்களை நான் தந்துவிட்டேன் . அது போதும் எனக்கு  என்றார் கேமரூன் . 

கிட்டத்தட்ட யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே புரிந்துகொள்ளக் கூடிய விசயம்தான் இது . ஆரம்பத்தில் நம் காதலியின் சிறுபிள்ளைத்தனமான போக்கு நமக்குப்பிடித்திருக்கும் ; ஆனால் போகப் போக அதுவே நமக்கு எரிச்சலைத் தரும் .காரணம் அவளை மிக மிகப் பிடித்திருப்பது தான் . சரி விடுங்க ! சிக்மன்ட்  பற்றியும் ஆண் , பெண் சார்ந்த அவரின் மனோதத்துவக் கொள்கையெல்லாம் விளக்கி கழுத்தை அறுக்கமாட்டேன் . உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் மேட்டர் அதுதான் .மக்கள் தாங்களாக கற்பனை செய்யப்பட்ட ஒரு விசயத்தின் அடுத்தகட்டம் , கொஞ்சம் சறுக்கினாலும் அனைத்தும் தவறாக முடிந்துவிடும் . எடுத்துக்காட்டாக டெர்மினேட்டரின் மூன்றாம் பாகத்தையே கூறலாம் . RISE OF THE MACHINE திரைப்படம் சரியாக JUDGEMENT DAY வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து வந்தது . பயங்கர எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் முதல் வாரத்தில் செம கலக்கு கலக்கிவிட்டு , அடுத்த வாரத்திலிருந்து தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்டது . காரணம் முதல் வாரம் கேமரூனின் முதலிரண்டு பாகங்களின் தாக்கத்தினால் வந்த கூட்டம் ; அதன்பின் மீண்டும் 6 வருடங்களுக்குப் பிறகு SALVATION ரிலிசானது . மூன்றாம் பாகத்தைப் பார்த்து டெர்மினேட்டரை வெறுத்த எனக்கு சால்வேசன் ஓரளவு ஆறுதலாக இருந்தது ; நான்காம் பாகத்தில் அர்னால்ட் இல்லை என்ற குறையே தெரியாத அளவிற்கு படுஸ்பீடாக இருந்தது.  ஆனால் சால்வேசன் மரண அடி என்பது தான் ஜீரணிக்க முடியவில்லை .. சரி , ஐந்தாம் பாகம் வேறுவிதமாக இருக்கும் ; கண்டிப்பாக அர்னால்டு இருப்பார் . படம் பட்டாசாக இருக்கப்போகிறது ; அதுவும் ட்ரைலர் வேறு மிரட்டி எடுத்திருந்தது . இவ்வளவு நம்பிக்கையுடன் தியேட்டரருக்குச் சென்ற எனக்கு , டார்க் நைட் ரைசஸில் பெய்ன்  , பேட்மேனைப்போட்டு பொரட்டி பொரட்டி அடிப்பதைப் போல்  முரட்டு அடியாக கொடுத்தனுப்பி இருக்கார் இயக்குநர் டெய்லர் . 

வழக்கம்போல ஒவ்வொரு டெர்மினேட்டரிலும் சொல்லக்கூடிய மிகமுக்கியமான விஷயங்கள் ஸ்கைநெட் , சாரா கார்னர் , ஜான் ஓ கார்னர் , கைல் ரீஸ் , T – 800 , T – 1000  . இதில் அவ்வப்போது வெவ்வேறு புது கேரக்டர்களும் வருவார்கள் போவார்கள் ; ஆனால் மேட்டர் என்னவோ சாராவையும் , ஜான் கார்னரையும் சுற்றியே நடக்கும் . முதல் பாகத்தில் சாரா , இரண்டாம் பாகத்தில் சிறுவயது ஜான் , மூன்றாம் பாகத்தில் ஜான் மற்றும் அவன் காதலி  என ஜல்லியிடித்துக்கொண்டிருந்த டெர்மினேட்டரை சிறிது மாற்றியவர் MCG .  SALVATION திரைப்படத்தை முழுக்க முழுக்க நிகழ்காலத்தில் நடப்பதாகவே  எடுத்திருப்பார் .சரி  டெர்மினேட்டர் கதை இப்போதுதான் சூடுபிடிக்கப் போகிறது என்று ஆசையுடன் காத்திருந்த எனக்கு ,  டேய் ! நாங்க மட்டும் என்ன கதைய வச்சிகிட்டா வஞ்சனை பன்றோம் ? சத்தியமா தெரியாததால தான்டா மறுபடியும் மறுபடியும் கேமரூன் எடுத்ததையே  அரைச்சிகிட்டு இருக்கோம் என்று நிருபித்துள்ளார் டெய்லர். 

படத்தின் கதை என்னவெனில் ஜட்ஜ்மென்ட் டே இப்போதும் தள்ளிப்போகிறது . காரணம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முதல் மூன்று பாகங்களைப் பாருங்கள் புரியும் . ஒவ்வொருமுறை முந்தைய பாகத்தில் நடக்கும் விஷயங்களால் ஜட்ஜ்மென்ட் டே  இம்முறை 2017 – ல் நடக்கிறது .ஓ! ஜட்ஜ்மென்ட் டே ? மனிதர்கள் வருங்காலத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஸ்கைநெட் எனும் ஆர்ட்டிபிஷியில் ப்ரோகிராமினை உருவாக்குகிறார்கள் .  ஸ்கைநெட்டோ , தங்களின் அழிவுக்கு மனிதர்களால் ஆபத்து வரும் என்று பயந்து  ,கணினியுடன் இணைகப்பட்ட மெஷின்களை எல்லாம் கன்ட்ரோல் செய்து உலகம் முழுக்க அணு ஆயுதங்களை ஏவி 300 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கிறது . மீதம் இருப்பவர்களை  சிறை பிடிக்கிறது . அதற்கு உதவியாக செயல்பட டெர்மினேட்டர்கள் எனும் ரோபோட் மெஷின்கள் உருவாக்கப்படுகிறது .  இப்போது சிறிது காலத்திற்குபின் இந்த ஸ்கைநெட்டை அழிக்கிறான் அல்லது கைப்பற்றுகிறான் ஜான்  கார்னர் என்பவன் . இவனைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளும் ஸ்கைநெட் , தன்னிடம் இருக்கும் மனித உருகொண்ட டெர்மினேட்டரை  , கடந்த காலத்திற்கு அனுப்பி  ஜானின் தாயை கொல்ல முயற்சிக்கும் .  இருங்க இருங்க ! இதுதான் முதல்பாகமாச்சே னு நீங்க கேட்க வரது எனக்குப் புரியுது . ஆனா , ஒரு சீன் மாறாம அப்படியே இதையே எடுத்து வச்சிருக்காய்ங்க இந்த படத்துல .  இப்போது மேட்டர் என்னவெனில் , சால்வேசன் திரைப்படத்தில் கைல் ரீஸ் எனும் இளைஞன் இறந்தகாலத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என அப்போதைய சால்வேசனின் ஜான் கார்னரின் வயதான தாயார் கூறியது நினைவிருக்கலாம் . இப்போது அதே தான் நடக்கிறது . கைல் , இறந்தகாலத்திற்கு அனுப்பபடுகிறான் சாராவைக் காப்பாற்ற . அங்கே ஆல்ரெடி வதிருக்கும் T -1000 டெர்மினேட்டரான அர்னால்ட் , சாராவோடு இருக்கிறார் . அதன்பின் மூவரும் சிறிதுகாலம் 1984 –ல் உலாத்திய பின் , ஜட்ஜ்மென்ட் டேயை நிப்பாட்டலாம் என 2017 –க்கு செல்கின்றனர் . அங்கு பெருத்த ஆச்சரியம் , ஜான் கார்னர் அங்கே இருக்கிறார் . இம்முறை மிகப்பெரிய விஞ்ஞானி போல் . ஸ்கைநெட் ப்ரோகிராமை அதிதீவிரமாக செயல்படுத்தும் ஜெனிசிஸ்-ன் முக்கிய புள்ளியாக இருக்கும்  ஜான் கார்னர் , சாராவையும் தன் தந்தையான கைல் ரீசையும் கொல்ல எடுக்கும் முயற்சிகளும் அதிலிருந்து எப்படி இவர்கள் தப்பித்து ஜெனிசிஸை அழித்து , ஜட்ஜ்மென்ட் டேவை நிகழாமல் காப்பாற்றினார்கள் என்பதையும் நம்மைக் குறட்டை விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் .

அர்னால்டைப் பார்ங்ககும்போது பரிதாபம் தான் மிஞ்சுகிறது . டெர்மினேட்டர் , கமென்டோ , ட்ரூ லைஸில் கலக்கிய அர்னால்டா இது என மனம் ஏற்றுக்கொள்ளவே மறுத்துவிட்டது  . பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க செல்வது நலம் . அதைக்காட்டிலும் படத்தில் விட்டார்கள் பாருங்கள் ஒரு புருடா! மிஷின் பழசாகும் . அது கரெக்ட் தான் . ஆனால் மனிதத்திசுக்களைப்ப பயன்படுத்தி செய்யப்பட்ட டெர்மினேட்டர் என்பதால் முகத்தில் சுருக்கம் வந்து மனிதர்களைப்போலவே நரைத்தும் போகுமாம் . ரத்தமே பாயாத சின்தடிக் தோலுக்கும் , ஸ்டெம்செல்லுக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டைங்களா பார்வையாளரை நினைச்சிட்டாங்க போல . சரி , இதாவது பரவாயில்லை என்றால் இன்னும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குக்கள் . சாராவும் கைலும் ஸ்கைநெட் ப்ரோகிராமர்களை அழிக்கச் சொல்வதாக்கூறிவிட்டு ஜட்ஜ்மென்ட் டேக்குபோய் சண்டை போடுவதைக் காட்டிலும் நீட்டாக இன்னும் கொஞ்சம் முன்னர் சென்று உருவாக்கப் போகிறவர்களைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் . சரி , ஜட்ஜ்மென்ட் டே இம்முறையும் தடுக்கப்பட்டது . கார்னரின் மரணம் உறுதியாகிவிட்டது . ஒருவேளை எதிர்காலத்தில் அம்மரணமும் தடுக்கப்படலாம் . ஆனால் கைல் ரீஸ் ?  

இந்த இயக்குநர் ஆல்ரெடி தி டார்க் வேர்ல்ட் திரைப்படத்தினை இயக்கியவர் . இருட்டில் படம்பிடிப்பதில் இவருக்கு என்ன அலாதியான ஈடுபாடோ ! படம் முழுக்க முழுக்க இருட்டிலேயே எடுத்துவிட்டு கிளைமேக்ஸிற்கு முந்தைய லாஸ் ஏஞ்சலஸ் பாலத்தில் நடக்கும் சண்டையை மட்டும் பகலில் எடுத்துவிட்டார் . பாதி படம் மயமயவென்று தான் தெரிந்தது . கேட்டால் நியோ நார் , டார்க் தீம் என்று ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லுவார்கள் . தியேட்டரை விட திரை  தான் அதீத இருட்டாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .  திரைக்கதை ? அப்படியொரு வஸ்து படத்தில் இருந்ததா என்று நானும் தேடித் தேடிப் பார்த்தேன் . ஆனாலும் கிடைக்கவில்லை .  இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் அர்னால்ட் I am Back என்பதையே சொல்லி ஒப்பேற்றி வருவார் என பார்க்கலாம் என்றிருந்தேன் ; நல்லவேளையாக இதில் I will be back என்று கூறிவிட்டார் . படத்தில் மிகமிக போராடிய ஜீவன் இசையமைப்பாளர் தான் . எப்படியாவது படத்தினை ரசிக்கைவைக்கும்படியாக ஏதாவது செய்துவிடவேன்டுமென்று , கூல் பேன்ட் போடுமிடத்தில் கூட பாட்ஷா , சாரி சாரி டெர்மினேட்டர் தீமை அலறவிடுகிறார் . டப்ஷ்மேஷ் என நினைக்கிறேன் .  எடிட்டர் மட்டும் கொஞ்சம் எடிட்டிங் ரூமில்  தூங்காமல் முழித்திருந்தால் , சிறிதளவாவது நம்மை தூங்கவிடாமல் செய்திருக்கலாம் . 

டெர்மினேட்டர் ப்ரான்சீஸில் வெளிவந்த பெரும் மொக்கைப் படமாக இதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன் . சி.ஜியும் 3டியும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை . காஞ்சனா 3யில் ராகவா லாரன்ஸ் செய்த சி.ஜியை ஹாலிவுட்டிற்கு ஏற்றமாதிரி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது . நடிகர்களும் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை . நான் இத்திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புடன் சென்றேன் . செல்லும்முன் முந்தைய நான்கு பாகங்களையும் பார்த்துவிட்டு சென்றேன் . அதனாலோ என்னவோ சூரமொக்கையாக படம் தெரிந்தது .சில காட்சிகளில் நிஜமாகவே தூங்கிவிட்டேன் . நான் தியேட்டருக்குச் சென்று  பாதி படத்தில் எழுந்து ஓடிவந்த திரைப்படங்கள் இரண்டு . ஆனால் எந்நிலையிலும் தியேட்டருக்குள் தூங்கமாட்டேன் . ஒரே நாளில் ஐந்து காட்சிகளும் பார்த்தபோது கூட தூங்கியதில்லை . ரிட்டிக்-ன் இரண்டாம் பாகம் முதல்முறையாக என்னைத் தாலாட்டுப் பாடி தூங்கவைத்தது . இது ரிட்டிக் அளவு பெரும் மொக்கையாக இல்லையெனினும் தூங்கவைத்துவிட்ட திரைப்படங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுவிட்டது . இனிமேல் டெர்மினேட்டர் சீரிஸே எனக்கு வேண்டாம் என்ற மனநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது இத்திரைப்படம் .


Friday, 17 July 2015

மாரி – சினிமா விமர்சனம்
   


     வழக்கமாக தனுஷ் திரைப்படங்களைப் பொறுத்த வரை  , இந்த படத்திற்கு
செல்லலாம் , நம்மை ஏமாற்றாது என்று உள்மனது கூறும்  படங்களுக்கு மட்டுமே செல்வேன் . அந்த முடிவுடன் சென்று பார்த்த புதுப்பேட்டை , வேலையில்லா பட்டாதாரி, ஆடுகளம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அனைத்தும் பிடித்திருந்தன. அனேகன்  மட்டும் தியேட்டருக்குச்  செல்லலாம் என்று முடிவு செய்து, கடைசியில் போகமுடியாமல் முடிவை கைவிடவேண்டியதாயிற்று. மாரி பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லை என்றே கூறலாம் . காலையில் டைப்பிங் கிளாஸ் முடித்துவிட்டு , மிகப்பொறுமையாக வீட்டிற்கு வந்தால் , பஸ் ஸ்டாப்பில் என் வயதுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தார்கள் . ’ஹே டூட் ! வாட்ஸ்அப் மேன்?’ என்று பீட்டர் விட்டுக்கொண்டே அவர்களிடம் கேட்டபோது,  படத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாக கூறினார்கள் . அடப்பாவிகளா ! என்னைய விட்டுட்டே ப்ளான் போட்டுட்டிங்களே டா என்று மனதுக்குள் நினைத்தவாறே
அடுத்த பத்து நிமிடத்தில் திரையரங்கிற்குச் சென்றுவிட்டேன் . சாதாரணமாக
ரெடி ஆகி, தியேட்டருக்குச் செல்ல அரைமணிநேரத்திற்கு மேலாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது .

 பாலாஜி  திரைப்படங்களில் (எடுத்ததே 2 தான்னு சொல்றிங்களா! எனக்கு காதலில் சொதப்புவது எப்படி? யைக் காட்டிலும் வாயை மூடிப் பேசவும் மிகமிக பிடித்திருந்தது . ஆனால் மாரி ட்ரைலர் வந்தபோது கொஞ்சம் அசந்துவிட்டேன். என்னடா? இவரு சாஃப்டான  ஆள் ஆச்சே!  எப்படி லோக்கல்
டான் கான்செப்ட் படம் ? என்ற யோசனையிடன் திரையரங்கில் அமர்ந்தேன் . ஆனால்  உள்ளே பாலாஜி காட்டிய படம் இருக்கிறதே ! அப்பப்பா !!!

தனுஷுக்கு என்றே யோசித்து யோசித்து எழுதி, இயக்கியிருக்கிறார். பேசாமல் இந்த படத்திற்கு மாஸ் என்ற டைட்டில் வைத்திருக்கலாம்  ச்சும்மா தெறிக்குது. இன்ட்ரோ ஆகுமிடத்தில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, மாஸ் ! மாஸ்! மாஸ்!.  அப்படி என்ன கதை ?

  கெட்டவனுக்கும் , ரொம்பகெட்டவனுக்குமிடையே நடக்கும் பிரச்சனைகளும், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் திரைப்படம் . மாரி , ஏரியாவில் பெரிய டான் ; புறா ரேஸில் பல வருடங்களாக ஜெயித்து வருபவர்; புறாவின்மீது காட்டும் பாசத்தைக் கூட ஏரியா ஆட்களிடம் காட்டமாட்டார்; மாமூல் வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து என எல்லாவற்றையும் கன்ட்ரோலில்
வைத்திருப்பவர். மாரியைப் போன்றே இன்னொரு ரவுடியான பேர்ட் ரவி , புறாப் பந்தயத்தில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்றிருப்பவர் .  இவர்கள்
இருவருக்கும் மேலே பெரிய கையாக வேலு .  பொய்மான் கரடு எனும் கல்கியின் நாவலில், கொலையைச்ச சுற்றிய சம்பவங்களே கதை என்று முன்னுரை எழுதியிருப்பார். ஆனால் நடக்காத கொலையைச்சுற்றிய கதை . அதேபோல் சில வருடங்களுக்கு முன் ஒருவரை மாரி போட்டதால் , பெரிய டானாகி விட்டார் எனபதை அறிந்துகொள்கிறார் ஏரியாவில் புதிதாக வரும் எஸ்.ஐ. அந்த கேஸுக்கான சரியான ஆதாரம் இல்லாமல் , மாரியை எப்படியாவது ஜெயிலில் போட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறார் . இந்த மாதிரியான நேரத்தில் தான் காஜல் இன்ட்ரோ. 1970-களில் இருந்து தமிழ் சினிமாவில் பின்பற்றி வரும் பழக்கமான மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் என்றே அதே டெக்னிக்  இங்கேயும் பின்பற்றபடுகிறது; ஆனால் கொஞ்சம் சுவாரஸயமாக. ஒரு கட்டத்தில் மாரியிடம் ‘உண்மையில் நீ என்ன செய்து ரவுடி ஆனாய்?’ என கேட்குமிடத்தில், பழைய கொலைக் கேஸைப்பற்றி , போதையில் மாரி சொல்லிவிட , அதை மொபைலில் ரெகார்ட்
செய்து போலிஸில் போட்டுகொடுக்கிறார். அதைத்தொடர்ந்து 7 மாதம் ஜெயில் தண்டனை. வெயிட் , வெயிட்! அதாவது ஹீரோ கொலை செய்ய முயற்சித்தார்
என்பதனால் தான் 7 மாதம் . உண்மையில் ஹீரோ குத்திய இரண்டு நாட்களுக்குப்பின் வேறொருவரால் கொலை நடத்தப்பட்டிருக்கிறது .

ஏழு மாதங்களுக்குப் பின் ரிலிசாகும் மாரியிடம், ஏரியாவில் நடைபெற்ற நிகழ்வுகளை அவர்களின் சகாக்கள் எடுத்துரைக்கிறார்கள் . மாரி ஜெயிலுக்குப்
போன பின், பேர்ட் ரவியை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்ளும் எஸ். ஐ . அர்ஜுன் (or அஜித்) , ஏரியாவில் அதிக மாமூல் வசூலிப்பது , பொய்கூறி ஏரியாவிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு சந்தனமரம் கடத்தி, அம்மக்களையே காட்டிக்கொடுத்து ஜெயிலில் அடைப்பது, மாரியைக் காப்பாற்ற வந்த வேலுவை போடுவது என அனைத்துவித குற்றங்களையும் சரமாரியாக செய்கிறார். இதையெல்லாம் கேட்டதும் பொங்கி எழுந்து எல்லோரையும் அடுத்துத் தூள் கிளப்பாமல், தன்னை ஜெயில் போட்டவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை ஏரியாவை  விட்டு கிளம்ப முடிவெடுக்கிறார் . அப்போது பேர்ட் ரவியின் ஆட்களுடன் ஒரு சண்டை. அதன்பின் , மாரி தனது ஏரியாவை எப்படி மீண்டும் கைப்பற்றுகிறான் என்பதையும் , போலிசையும், பேர்ட் ரவியையும் எப்படி முடித்தான் என்பதையும் ஜாலியாக , செம மாஸ்ஸாக கொடுத்திருக்கிறார் பாலாஜி
.
 நடிகர்களின் நடிப்பைப் பற்றியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை  . வழக்கம்போல தனுஷ் தூள் கிளப்பியிருக்கிறார் . காஜல் அகர்வால் ஆங்காங்கே வருகிறார் . ரோபோ சங்கர் , தனுஷின் நண்பராக வந்து கிச்சுகிச்சுமூட்டுகிறார் . வில்லனாக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ் சரியான தேர்வு . மற்றொரு வில்லனாக வரும் கோபி ஓ.கே ரகம். காளி வெங்கட்டும் தன் பங்கினைச் சிறப்பாக செய்துள்ளார் .

 மாரி இன்ட்ரோடக்சனில் வரும் பிண்ணனி இசையும் , முதல் பாடலு்ககு
தனுஷ் ஆடும் நடனத்தில் ஆரம்பிக்கும் வேகம், படம் முடியும் வரை அப்படியே இருக்கிறது . படத்தில் செம ரிச்சான ஒளிப்பதிவிற்கு ஓம் பிரகாஷ் தான் காரணம் . ஒளிப்பதிவும் , கலரைசேசனும் செம . அனிரூத் இணையில் பாடல்கள் படமாக்கிய விதம் அட்டகாசம். டானு டானு  டானு , மாரி போன்ற பாடல்கள்தான் அனிரூத் இசையில் எனக்குப் பிடித்திருந்தன. மற்ற பாடல்களெல்லாம் திரையில் பார்க்கும் நன்றாக இருந்தாலும் கேட்க பிடிக்கவில்லை . பிண்ணனி இசை பல இடங்களில் பலம் என்றாலும் பல இடங்களில் நம் காதுக்கு ரணம் . கிட்டாரை வைத்து சொய்ங்ங்ங்ங்ங்ங் என்று நாலு இழுப்பு இழுத்து , பிண்ணனியில் அடிவயிற்றில் ஆய் போக முக்குவது போல் மாரிஇஇஇஇஇ என்று குரல் கொடுக்கும் சில இடங்களில் என் காதிலிருந்து ரத்தம் மட்டும் தான் வரவில்லை .  சண்டைக் காட்சிகள் எல்லாம் செம கிளாஸ் . உண்மையில் தனுஷின் வெறித்தனமான ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புல்மீல்ஸ் .  மற்றவர்களுக்கு ஜாலியான ஒரு மசாலா திரைப்படம் .

Friday, 10 July 2015

பாகுபலி – சினிமா விமர்சனம்

வெல் , ராஜமௌலியைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை . ட்ரைலர் வந்த நாள்முதல் எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் ராஜமௌலியும் அவரின் பாகுபலியும் தான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தன . அவரின் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் முதல்  நான் ஈ வரை அனைத்துப்படங்களைப் பற்றியும் ஒரு சிறிய தொடர்பதிவு எழுதிவிடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தும் எழுதமுடியாமல் போய்விட்டது . இருக்கட்டும் ; இன்னும் பாகுபலியின் இரண்டாம் பாகம் வேறு அடுத்த ஆண்டு வெளிவரப்போகிறது . அச்சமயத்தில் மொத்தமாக எழுதிவிடுகிறேன் .

நான் முதன்முதலில் பார்த்த தெலுங்கு படம் ராஜமௌலியின் விக்ரமார்க்குடு தான் .  படம் பார்த்து முடித்ததும் தோன்றிய விஷயம் , ரவிதேஜா பின்னிருக்காரு என்பதுதான் . பரவாயில்லையே ! ஆந்திரவாலாக்கள் கூட கிராபிக்ஸ் எல்லாம் பட்டைத்தீட்டி எடுத்திருக்கிறார்களே என்று சிறிது ஆச்சரியமடைந்த திரைப்படம் . ஏனெனில் அதற்குமுன் வரை பாலகிருஷ்ணாவின் சில படங்களையும் , சிரஞ்சீவியின் சில  படங்களையும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் தமிழ் டப்பிங்கில் பார்த்ததோடு சரி . அதன்பின் ஒரு ஆந்திரப்பெண்ணைக் காதலித்து , அவளுக்குத் தமிழ் தெரியாமல் போய்விட , எனக்குத் தமிழைத்தவிர எதுவும் தெரியாமல் போய்விட , அரைகுறை ஆங்கிலத்தில் நடந்த இஸ், பிஸ் பேச்சுவார்த்தைகள் சரிவராத காரணத்தால் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன் . அதனைத் தொடர்ந்து பாரிஸ் கார்னரில் ஒரே தெலுங்கு படமாக வாங்கித்தள்ளினேன் . ஒரு கட்டத்தில் சப்டைட்டில் இல்லாமலே தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தது . அச்சமயத்தில் தான் விக்ரமார்க்குடு திரைப்படத்தை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரின்  வேண்டுகோளுக்கிணங்க மரியாத ராமண்ணா  திரைப்படத்திற்கு சென்றேன் . அப்படத்தின் ஹீரோ சுனில் , சப்பை சப்பையான வேடத்தில் , பல படங்களில் நான் பார்த்திருந்ததாலும் , படத்தின் போஸ்டர்கள் என்னைக் கவர்ந்திழுக்கும்படியாக இல்லாததாலும் ச்சும்மா உள்ளே சென்று அமர்ந்தேன். ஆனால் அன்றைக்கு காசினோவில் செம  கூட்டம் . உத்யோகம் ஓடிப்போயிந்தி பாடல் வந்ததும் தியேட்டரில் இருந்த பாதி பேர் திரையில் ஏறி ஆட்டம் ஆடிகொண்டிருந்தனர் . அருகில் என்னை அழைத்துவந்தவரிடம் கேட்டேன் .

‘ஏன்ணா ! இந்த ஹீரோவுக்கு இவ்ளோ மாஸ்சா ? இவரு காமெடி ஆக்டர் தான ?’

‘மாஸ் , ஹீரோவுக்கு இல்ல தம்பி . டைரக்டருக்கு’ என்று அவர் கூறிய பின் தான் ராஜமௌலி எனக்கு அறிமுகம் . அதைத்தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன் லிருந்து மகதீரா வரை அனைத்துப்படங்களையும் ஒவ்வொரு கடையாக தேடிப்பிடித்து வாங்கிப் பார்த்தெல்லாம் தனிக்கதை . இதுவரை ஒரு ப்ளாப்  , ஏன் ஆவரேஜ் என்ற ரீதியில்  கூட கொடுக்காமல் எல்லாம் சூப்பர்ஹிட் கொடுத்த ஒரே இயக்குநர் ராஜமௌலி தான் . எப்படியாவது சினிமாவில் வென்றுவிடவேண்டும் என்று தவித்த ராஜமௌலிக்கு என்.டி.ஆர் கைகொடுக்க , என்.டி.ஆருக்கு மூன்று மெகா ப்ளாக்பஸ்டர்களை பரிசாக கொடுத்தவர் . மகதீரா , ஆந்திராவின் சென்சேஷனல் ஹிட் படங்களின் வரிசையில் முதலிடம் . ஈகா தெலுங்கு மாத்திரமல்லாமல் தமிழ் , கன்னடம் ஏன் ஹிந்தியில் கூட கலெக்சனை தந்தத் திரைப்படம் . ஒரு பழுத்த வேலைநாளில் எங்கள் ஊரிலுள்ள தியேட்டரில் மதியக்காட்சிக்கு ஹவுஸ்புல் ஆகி நான் பார்த்த முதல் திரைப்படம் நான் ஈ தான் .

பாகுபலி , கிட்டத்தட்ட ராஜமௌலியின் கனவுத் திரைப்படம் என்றே சொல்லலாம் . மரியாத ராமண்ணா திரைப்படத்தைத் தயாரித்த அர்கா நிறுவனம் , பாகுபலி தயாரிப்பில் மும்முரம் காட்டியது ஆச்சரியப்படத் தேவையில்லாத விஷயங்களில் ஒன்று . இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் . முதல்முறையாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இருபாகங்களைக் கொண்ட திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் . மூன்று ஆண்டுகால உழைப்பு . ஜிம் பயிற்சியாளரிலிருந்து VFX வரை மிகப்பெரும் ஆளுமைகள் பணிபுரிந்துள்ள திரைப்படம் . எப்படி இருக்கும் ?

நான் இத்திரைப்படத்திற்கு செல்லும் முன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றேன் ; அப்படிச்சொல்வதைக் காட்டிலும் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு சென்றேன் . ட்ரைலரைப் பார்க்கும் போது BC 10000 , கோச்சடையான் , கிளாடியேட்டர் , EXODUS , LOTR , 300 என்று நான் பார்த்திருந்த அத்தனை பேன்டசி , ஹிஸ்டரிக்கல் படங்களும் மனதில் ஓடின. எங்கே இவரும் அந்த படங்களைப் போல எடுத்துவைத்து இருப்பாரோ என்ற பயமல்ல ; இத்தனை நாட்கள் கட்டிக்காப்பாற்றிய பெயரை , முகநூலில் போட்டு நாரடித்துவிடுவார்களே என்று தான் பயம் . அதுமட்டுமின்றி , இது முதல் பாகம் என்பதால் , என் எதிர்பார்ப்பு எல்லாம் இரண்டாம் பாகத்தை நோக்கியே இருந்தது எனலாம் .

சரி , படத்தின் கதைக்கு வருவோம் . துவக்க காட்சியில் ரம்யாகிருஷ்ணன் ஒரு குழந்தையை கையிலேந்தியபடியே , ட்ரைலரில் அந்த மிகப்பெரும் நீர்வீழ்ச்சியினடியில் வருகிறார் . அவரைக் கொல்ல இரு வீரர்கள் வருகின்றார்கள் . அவர்களைக் கொன்று விட்டு நதியில் குழந்தையுடன் விழுந்துவிடுகிறார் . ஆற்றில் குழந்தையை கையில் தூக்கிப்பிடித்த படியே செல்லும் அவரைக் காப்பாற்ற அங்கு வாழும் மலைவாசிகள் முயல்கின்றனர். ஆனால் குழந்தையை அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்நீர்வீழ்ச்சி விழும் மலையின் திசையினை கைகாட்டிவிட்டு ஆற்றோடு போய்விடுகிறார் . அக்குழந்தையை அம்மலைவாசிகளின் தலைவி போன்றொருத்தி எடுத்து வளர்க்கின்றாள் . அக்குழந்தைக்கு வளர வளர அந்நீர்வீழ்ச்சிக்கு அந்தபக்கம் என்ன இருக்கும் என்று காண ஆசை . அதற்காக அந்நீர்வீழ்ச்சியில் ஏற பலமுறை முயற்சிக்கிறான் . ஆனால் முடியவில்லை  . ஒருமுறை ஒரு பெண்ணின் முகமுடி நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகிறது . அந்த முகமுடியைப் பார்த்ததும் காந்தர்வ காதல் கொள்ளும் ஹீரோ , அவளைப் பார்ப்பதற்காக முயற்சித்து அந்நீர்வீழ்ச்சியை ஏறி கடக்கிறார் . அங்கு அவளைச் சந்திக்கிறார். ஆனால் அவள் (தமன்னா) ஒரு புரட்சிப்படையில் மறைமுகமாக இருப்பதை அறிகின்றான் . அதன்பின் அவளை அப்படி இப்படி என்று கரெக்ட் செய்துவிடுகிறார் . அவள் இருக்கும் புரட்சிப்படையில் அவளுக்கு ஒரு கட்டளைக் கிடைக்கிறது . அதாவது மகிழ்பதி எனும் பேரரசில் , 25 வருடங்களாக கொடுமைப் படுத்தப்பட்டு வரும் தேவசேனா (அனுஷ்கா) என்பவரைக் காப்பாற்ற வேண்டும் . ஹீரோ , தமன்னாவிற்கு பதில் தானே மீட்டு வருவதாக அங்கு செல்கிறார் . அந்நாட்டின் அரசன் பல்வாள்தேவன் (ரானா டகுபாட்டி) , அவன் தந்தை பெல்லால தேவன் (நாசர்) போன்றோர் நாட்டு மக்களை படுபயங்கரமாக கொடுமைப் படுத்துகிறார்கள் . அங்கிருந்து தேவசேனாவைக் காப்பாற்றி வருவதற்குள் ஹீரோவைப் பார்ப்பவர்கெல்லாம் பாகுபலி என்று கூறி ஆச்சரியப்பட , ஒரு கட்டத்தில் ராணா வின் மகனைப் போட்டுத்தள்ளுகிறார் ஹீரோ . அப்போது அதைத் தடுக்கவரும் ராணாவின் அடிமையும் மாவீரனும் ஆன சத்யராஜும் பிரபாசைக் கண்டு மிரள்கிறார் . அதன்பின் சத்யராஜ் சொல்ல ப்ளாஷ்பேக் ஆரம்பமாகிறது . எச்சரிக்கை – இது முதல் பாகம் என்பதால் பாதி ப்ளாஷ்பேக் தான் வரும் . இதற்குமேல் எழுதினால் ராஜ்மௌலி என் சட்டையைப் பிடித்து மண்டையில் கொட்டுவார் . அவருக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியுமாம் .

பிரபாஸ் – ராஜமௌலி எதுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் இவரை ஹீரோவாக போடனும் ? பேசாம இந்தில ஷாருக் மாதிரியான ஆட்களிடம் கால்ஷீட் வாங்கி எடுத்திருந்தால் இன்னும் பெரிய பிஸ்னஸ் ஆகியிருக்கும் என்று என் நண்பர் வருத்தப்பட்டார் . படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு செல்லும் அந்த காட்சி சொல்லும் எதற்காக என்று ! மனிதர் உழைப்பை  தாறுமாறாக போட்டுள்ளார் என்பது அவர் வரும் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது . அப்பாவியான சிவாவாகவும் , அமரேந்திர பாகுபலியாகவும் இருவேறு பரிமாணங்களையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார் .

ராணா – யப்பா ! மனுஷனா இவன் . இது நான் சொல்லலைங்க . என் பக்கத்துல படம் பாத்துட்ருந்த ரெண்டு பேர் ராணாவோட இன்ட்ரோ வரும்போது சொன்னது . இரண்டாம் பாதியில் பிட்டாக வரும் ராணாவையும் முதல் பாதியில் வயதான பல்வாள்தேவனாக வரும் ராணாவையும் பார்த்து ஆச்சரியாமாக இருக்கிறது . படுபயங்கர உழைப்பு . இப்படத்தின் பெஸ்ட் இன்ட்ரோ சீன் என்றால் அது இவருடையது தான் . தாக்க வரும் காட்டெருமையை போட்டு பந்தாடிக்கொண்டே இன்ட்ரோ ஆகிறார் .

சத்யராஜ் – கட்டப்பனாக வரும் சத்யராஜைப் பற்றி மேலே குறிப்பிடாததற்கு ஒரு காரணம் உள்ளது . பாகுபலி திரைப்படத்தில் எனக்கு மிக மிக பிடித்த கேரக்டர் என்றால் அது கட்டப்பன் தான் . கட்டப்பனாக சத்யராஜ் வெளுத்து வாங்கியுள்ளார் . வெள்ளைத்தாடியைத் தவிர்த்து ஒவ்வொரு காட்சியிலும் மனிதர் இன்றைய ஹீரோக்களுக்கு சவால் விடுமளவுக்கு சண்டையில் சுழட்டி அடித்துள்ளார் . சீனியர் – ஜூனியர் வித்தியாசம் பார்க்காமல் ப்ரபாஸின் காலை , தன் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் இடமெல்லாம் ஆச்சரியம் தான் . கடைசியில் இவர் வைத்த ஒரு ட்விஸ்டான வசனம் அடுத்த பாகத்திற்கான ஹைப்பை ஏற்றிவிட்டு , நம்முடைய கற்பனைக் குதிரைகளையும் அவிழ்த்துவிட்டது எனலாம் . கலக்கிட்டாரு .

தமன்னா – வெகு நாட்களுக்குப் பின் தமன்னாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கிய திரைப்படம் . பழிவாங்கும் உணர்ச்சியும் , காதல் பரிதவிப்புமென நன்றாக செய்துள்ளார் . பச்சைத் தீ பாடலில் வரும் டாப்லெஸ் உண்மையா ?

அனுஷ்கா – முதல்பாகத்தில் பெரிய ஸ்கோப் இல்லை . முழுக்க முழுக்க அனுஷ்காவின் சாகசமெல்லாம் இரண்டாம் பாகத்தில் தான் . ஒரே ஒரு இடத்தில் அனுஷ்கா நடிப்பில் செம ஸ்கோப் செய்துள்ளார் . கட்டப்பன் , தேவசேனாவிடம்  வந்து விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கெஞ்சும்போது திரும்பி அனுஷ்கா பேசும் வசனங்கள் செம.

ரம்யா கிருஷ்ணன் – நீலாம்பரி வேடத்திற்குப்பின் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த மற்றொரு அரிய வேடம் இப்படத்தின் சிவகாமி தான் . கெத்தான பெண்ணாக அறிமுகமாகி , அந்த கெத்தினை கடைசி வரை கெத்தாகவே மெய்ன்டெய்ன் செய்திருக்கிறார் . இருள் கொண்ட வானில் பாடலும் , அப்போது வரும் காட்சிகளும் அட்டகாசம் . தன்னைக் கொல்ல வருபவனை , கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சட்டென்று போட்டுத்தள்ளும் போது நமக்கே ஒரு நிமிடம் ஆச்சரியம் வருகிறது . அப்படியே ஒரு வீரப்பெண்மணியைக் காட்டியுள்ளார் ரம்யா .

நாசர் – பிங்காலத்தேவனாக நாசர் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்துள்ளார் . ராணாவை மன்னனாக்க இவர் செய்யும் தகிடுதத்தங்களும் போர்காட்சியின்போது இவரின் முகபாவமும் செம .

இவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே சில பல ஆந்திர நடிகர்கள் வந்து போகிறார்கள் . மரகதமணி இசையில் ஏற்கனவே எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்திருந்தன . குறிப்பாக சிவாய போற்றி , மனோகரி , இருள்கொண்ட வானில்  போன்ற பாடல்கள் வழக்கம்போல அவரின் கிளாஸிக் . தீரனே பாடலும் , பச்சைத் தீ , மகிழ்நதி பாடலும் சுமார் தான் என்றாலும் விஷுவலோடு பார்க்கும் போது அட்டகாசம் . பிண்ணனி இசையில் முதல்பாதி சுமாராக இருந்தாலும் , இரண்டாம்பாதியில் கலக்கி எடுத்திருக்கிறார் . ஆமாம் , இவருடைய பெயர் தெலுங்கில் MM கீரவாணி தானே ! தமிழுக்கென்று மரகதமணி என்று வருகிறதா ? ஒன்றும் புரியவில்லை .

செந்தில்குமாரின் ரிச்சான ஒளிப்பதிவு அட்டகாசமாக , நம் கண்களை உறுத்தாத வகையில் , சரியான கலரைசேசனுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது . ஹேட்ஸ் ஆஃப் செந்தில்ஜீ . எடிட்டிங் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் . ஒரு காட்சி கூட தேவையில்லை என்று சொல்லமுடியாது ; அந்தளவு சரிவிகிதமாய் கத்திரியைப் போட்டுள்ளார் . சாபுசிரிலின் ஆர்ட் டைரக்சில் பல காட்சிகளில் எது கிராபிக்ஸ் , எது செட் , எது ரியல் என்று கண்டுபிடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்க  வேண்டியுள்ளது . சி.ஜியெல்லாம் மிரட்டி உள்ளார்கள் . ஆங்காங்கே மகதீராவின் தாக்கம் இருப்பது மட்டும் மைனஸ் . பனிச்சரிவு காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றியது . ஆனால் கடைசி போர்க்காட்சிகளெல்லாம் அட்டகாசம் .மொத்தத்தில் இது இந்தியாவின் 300 , LORD OF THE RINGS  எனலாம் . ஏன் , திரைக்கதையில் மேற்கூறிய ஆங்கிலப்படங்களை விஞ்சி ஒரு படி மேலே நிற்கிறது . இது அக்மார்க் ராஜமௌலி திரைப்படம் . தான் எப்போதும் திரைக்கதையில் செம ஸ்ட்ராங்க் என்பதை இம்முறையும் சீல் அடித்துச் சொல்லிவிட்டார் .