ஏழைகளின் வண்டலூர்



சேலத்தின் பெருமை


கேள்வி-1
நீங்கள் தீவிர அஜீத் ரசிகரா?இல்லை வெறித்தனமான விஜய் ரசிகரா?உங்களிடம் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் வசதியுள்ள போன் உள்ளதா?உங்களுக்கு என்று பதிவின் இறுதியில் ஒரு விஷயம் காத்திருக்கிறது.



சந்தேகம்-1
நண்பர்களே!உங்கள கொஞ்சம் டென்சன் ஆக்குற சந்தேகம் இது.என்னோட போட்டோவ பாத்தா,உங்களுக்கு எழுத்தாளன் எஃபக்ட் ஏதாச்சும் தெரியுதா?
சரி வாங்க மேட்டருக்கு போகலாம்.





இன்று காலை ஒரு யுனிவர்சிட்டி வேலை விஷயமாக சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு செல்ல,அண்ணன் ஒருவரை வரசொன்னேன்.வர்ரேன் தம்பினு சொன்னவர், ஏதோ முக்கியமான வேலைவிஷயமாக வெளியில் சென்றிருப்பதாகவும்,அவருடைய வீட்டில் காத்திருக்கவும் கூறினார்.அவருடைய வீடு இருக்கும் இடம் ஏற்காடு மலை அடிவாரத்தைச்சார்ந்த செட்டிச்சாவடி.அவரின் வீட்டின் அருகிலேயே,குருப்பம்பட்டி வனஉயிரியல் பூங்கா என்ற பெயரில்,சேலம் காதலர்கள் பிரத்யோகமாக சல்லாபிக்க கட்டிவிடப்பட்ட கடல் இல்லாத மெரினா பீச் இருப்பதாக ஏற்கனவே தகவல் எனக்கு கிடைத்திருந்தது.சரி நாம வண்டலூர் பூங்காவ தாண்டி மத்த பூங்கா பேரெல்லாம் பொது அறிவு புத்தகத்தில் படித்ததோடு சரி.இவரு வர லேட்டாகும் என்ற எண்ணத்தின் காரணமாக பூங்காவை நோக்கி  கிளம்பினேன்.ஆங்காங்கே வீடுகளும் ஒருசில கடைகளும் ரோட்டை ஒட்டி காணப்பட்டது.நான் மெதுவாக என் வண்டியை உருட்டிக்கொண்டு செல்லும்போது அங்கிருக்கும் ஆண்களும்,பெண்களும் ஒரு மார்க்கப்பார்வையில் பார்த்தவாறே அவர்களின் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.என்னடா இது?நம்மள இப்படி பாக்குறங்கனு மனசு யோசிக்க ஆரம்பிச்சது.சரி இந்த பூங்ஙகாக்கு யாரும் நம்மள மாதிரி டிப்-டாப்பா,கூலர்ஸ்,செட்-வெட் ஜெல்லாம் போட்டுகிட்டு வந்துருக்க மாட்டாங்க,அதான் எல்லாம் இப்படி பாக்குதுங்கனு நினைச்சிகிட்டு வண்டிய என்ட்ரன்ஸ்ல விட்டேன்.என்ட்ரன்ச தொட்டதும் அதுவரைக்கும் வீடு,கடைனு இருந்த ஏரியா அப்படியே சேஞ்ச் ஆகிடுச்சி.எப்படினா நம்ம ஆயிரத்தில் ஒருவன் படத்துல கார்த்தி காடுங்ற ஆபத்து தாண்டுணதும் உடனே பாலைவனம் கிராபிக்ஸ் பண்ணிருப்பாங்களே.அதே மாதிரி,ஆனா இங்க வீடுகள்லாம் உடனே காடுகளா மாறிந்துச்சி.மெதுவா வண்டிய மூவ் பண்ணிகிட்டே போறப்ப,எதிர்ல ஒரு இந்திக்காரன் என்னையவே முறைச்சிப்பாத்துகிட்டு இருந்தான்.ரோட்டுல என்னையும் அவனையும் தவிர மனித ஜீவராசிகளே இல்லை.
இது என்னடா வம்பா போச்சி,னு வேகமா வண்டிய முறுக்கி நேரா பூங்காகிட்ட போனேன்.நல்லா ஒரு திடல் மாதிரியான அமைப்புல இடம் இருந்துச்சி.அதுதான் 2வீலர் மற்றும் கார் பார்க்கிங்.நா நேரா பைக்க பார்க் பண்ணிட்டு டிக்கெட் கொடுக்கறவர்கிட்ட சீன் போடலாம்னு வந்து பார்த்தா அங்க ஒரு வனத்துறையை சார்ந்த ரேஞ்சர் மாதிரி ஒருத்தர் இருந்தாரு.

‘சார்! ஒரு டிக்கெட்,ஒரு பைக் பார்க்கிங்’
‘இருப்பா பஸ் வரட்டும்’

என்னடா இது டிக்கெட் கேட்டா பஸ் வரட்டும்னு சொல்றாருனு புரியாம ஒரு ஓரமா நின்னுட்டு இருந்தேன்.அவர் சொன்னமாதிரியே தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் தொடங்கிய போது அரசுவாங்கிவிட்ட ஒரு பஸ் வந்து நின்றது.சேலம் போக்குவரத்துக்கழகத்தினர்,இந்த பூங்காவிற்கு என ஒரு நாளைக்கு 5ட்ரிப்னு கணக்குபோட்டு பஸ் விட்ராங்க.அது எப்போனு பாத்தா,காலைல 8 மணி(என்ஜினியரிங் கல்லூரி காதலர்களுக்காக),9.15 மணி(கலைக்கல்லூரி காதலர்களுக்காக),மதியம் 2 மணி(காலைலயே வந்து வேலைய முடிச்சிட்டு போற காதலர்கள் ரிட்டன் ஆக)அப்புறம் மாலை 4 மணி மற்றும் 6 மணி.9.15 பஸ்,வழக்கம்போல 9.40க்கு லேட்டா வந்ததும் 2 ஜோடி இளம் காதலர்கள் இறங்குனாங்க.பொண்ணுங்க தூரமா பஸ் பக்கத்துலயே நின்னுட்டு வழக்கம்போல பசங்கள டிக்கெட் எடுத்துவர அனுப்பிட்டாங்க.பசங்களும் டிக்கெட் எடுத்துட்டு கூட்டிட்டு உள்ள போயிட்டாங்க.சரி நாம இப்ப முயற்சி பண்ணலாம்னு மறுபடியும் டிக்கெட் கவுண்டர்கிட்ட போய்  மூன்று இலக்க மதிப்புள்ள தேசப்பிதா நோட்ட நீட்டுனேன்.

‘இங்கலாம் சில்லரை இல்லப்பா’
‘சரி எங்க கிடைக்கும்’
‘இதுக்கு நா என்ன சொல்றது?’
‘நா புதுசுங்க.எனக்கு இங்க கடை எங்க இருக்குனு தெரியாது.அதான் கேட்டேன்’
‘வெளில தான் போயி வாங்கிட்டு வரனும்’


சரி,இவரு காதலர்கள மட்டும் உள்ள விட்ர ஆள் போலனு நினைச்சிகிட்டு நேரா சில்லறைய மாத்திகிட்டு வந்தேன்.பார்க்கிங் 10 ரூ,நுழைவு கட்டணம் 10 ரூனு சொன்னரு.பரவால்லயே,இது ஏழைகளின் வண்டலூரா இருக்கேனு உள்ள நுழைஞ்சேன்.உள்ள இன்னோரு வனத்துறை அதிகாரி டேபுள்ள அன்றைய தந்தி முதல் கதிர் வரை எல்லாத்தையும் போட்டு மேஞ்சிகிட்டு இருந்தாரு.என்ன ஏற,இறங்க பாத்திட்டு

‘ஆள் யாரும் வர்றாங்கலப்பா’-னு கேட்டார்.
‘இல்லைங்க.நா தனிதான்ன.நம்ம பூங்காவ பத்தி ஒரு கட்டுரை எழுத வந்திருக்கேன்’
இப்படி நா சொன்னதும் உடனே மனுசர் பாசத்த காட்ட ஆரம்பிச்சிட்டாப்ல.
‘வாங்க சார்.இங்க பாத்திங்கணா,மயில்,முதலை அது இதுனு நிறைய இருக்கு.இந்த பக்கம் போனா அது,அந்தபக்கம் போனா இது’னு அவரு பாட்டுக்கு திடீர்னு கைட் ஆகிட்டாரு.
‘இல்ல சார்.நானே பாத்துக்கறேன்.உங்களுக்கு எதுக்கு சிரமம்’னு சொல்லிட்டு உள்ள போனேன்.
உள்ள,ஆங்காங்கே சில பணியாளர்கள் உதிர்ந்த இலைகளையும்,குப்பைகளையும் கூட்டி அள்ளிகிட்டு இருந்தாங்க.ஓ!மெயின்டனன்ட்ஸ்னு மனசுல நெனச்சிகிட்டு ஒரு மேப் பக்கத்துல போயி நின்னேன்.மேப்ப பாத்திட்டு அப்படியே பூங்காவ ஒரு நோட்டம் விட்டேன்.நல்லா க்ளீனா,நீட்டா இருந்துச்சி.பாக்கவே அழகா இருந்துச்சி.அந்த டைம்ல ஒரு கேவலமான சவுண்ட் திடீர்னு பயங்கரமா வர ஆரம்பிச்சது.யாருடா இங்க ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட போட்டதுனு திரும்பி பார்த்தா அங்க ஒரு கூண்டுல சில மயில்கள்.சரி நம்மள வரவேற்று கூப்பிடுதுங்கனு சொல்லிட்டு அந்த கூண்ட நோக்கி போனேன்.நா போனநேரம் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் காணப்பட்டது.நல்ல ஜில் கிளைமேட்.
குளிருனா மனுஷங்களே குஜால் ஆகிடுவாங்க.மயிலுங்க சொல்லவா வேனும்?ஒரு வெள்ளை ஆண்மயில்,எப்படியாச்சும் ஒரு பெண்மயில கரெக்ட் பண்ணியே ஆகனும்னு தோகைய விரிச்சு,சீன் போட்டுகிட்டு இருந்துச்சி.அந்த வெள்ளைமயில பாத்ததும்,மனசுல ’மனுசங்க தான் பொன்னு பொன்னுன்னு தங்கிட்ட இருக்கற எல்லாத்தையும் பகட்டா காமிச்சிக்க விரும்பி மண்ண கவ்வுறாங்கனா,நீங்களுமாடா?திருந்தவே மாட்டிங்கடா.உங்கள மாதிரி சில ஆண்களாலதான் என்னமாதிரி ஆண்வர்க்கத்தைச்சார்ந்த சில அப்பாவிகளுக்கும் சீன் பார்ட்டி,பீட்டர்,அப்பிடி இப்பிடனு கெட்ட பெயர்’-னு நினைச்சிகிட்டு ஒரு போட்டோ கிளிக் பண்ணிட்டு பார்த்தேன்.
அந்த பக்கத்த சுத்தியும் மூங்கில்காடு.அதுல ஒரு பாதை போட்டு முதலை,பாம்பு மற்றும் பறவைகள் கூண்டிற்கு செல்லும் வழினு போர்டு இருந்துச்சி.அடுத்த இலக்க நோக்கி  நடக்க ஆரம்பிச்சேன்.
அதுவரைக்கும் பூங்கா மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்ச இடம்,நடக்க நடக்க அப்படியே வனாந்திரமா மாறிடுச்சி.எனக்கு செயற்கையான நீரூற்றுகளை காண்பதைவிட இயற்கையான ஓடைகளைப்பார்ப்பது,அலாதியான எண்ணத்தைத்தரும்.அதே போல்,இங்கும் அதுவரை இருந்த செயற்கைத்தன்மை மாறி அப்படியே இயற்கை எழில்பொங்கும் இடமாக தோண்றியது.அடர்த்தியான வனம்,வனத்திலிருந்து கிடைக்கும் சில் காற்று,எங்கு பார்த்தாலும் பச்சைக்கலர்,நம் மனதில்,இயற்கையின்மீது இச்சை ஏற்படுத்தும் விதமாக அருமையாக இருந்தது.பல்சர்களும்,அப்பாச்சிகளும் உருமவதும்,மாருதியும் டாடாவும் பொறுமுவதும்,தறி சத்தம் காதைப்பிளப்பதுமா்கவே இருந்த எனக்கு,குயில்களின் ஓசையும்,வண்டுகளின் ரிங்காரமும் புது உவகை கொள்ளச்செய்தன.பறவைகள் வெட்டவெளியில் அநாயசமாக,நம் தலைமீது பட்டும் படாமலும் பறந்து சென்றதபோது கிடைத்த திரில் எஃபக்ட்,ஹிட்ச்காக் படங்களில்கூட  கிடைக்காது.மேலும் நாம் செல்லும் அந்தப்பாதையில்,நம் தனிமையை போக்க,ஒரு ஓடையும் நம்முடனே வருகிறது.ஆனால்,அதற்கு உரியவளான நீரின்றி,அம்மணமாக.அந்த ஓடை நிரம்புவதற்காகவாவது மழை பெய்யவேண்டும்



இயற்கையை ரசித்துக்கொண்டே சென்ற எனக்கு,தூரத்தில் ஏதோ ஒரு பாறாங்கல் உருள்வது போன்ற தோற்றம் சிக்கியது.மரங்கள் அடர்ந்து இருந்ததால் சரிவர காணமுடியவில்லை.இருந்தாலும் விடாமல் சின்னவயதில் ஏரிய புளியமர அனுபவத்தைக்கொண்டு ஒரு குட்டி மரத்தில் ஏறிப்பார்த்தேன்.அங்கே ஒரு யானைக்குட்டி(கிட்டத்தட்ட),அது பாட்டுக்கு சோளத்தட்டை,தும்பிக்கையில் இருக்கி,வளைத்து வாயினுள் ஓட்டி,மென்று கொண்டிருந்தது.என்னடா இவனுங்க?ஒரு யானைய அப்படியே விட்டுட்டு போயிட்டானுங்க!திடீர்னு மதம்பிடிச்சா என்ன ஆகிறதுனு மனசுல நினைச்சுகிட்டு,மரத்தவிட்டு கீழ இறங்கி மறுபடியும் நடக்க ஆரம்பிச்சேன்.


இங்கு ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது.நான் பிறந்து,3 ½ வயது வரை வாழ்ந்தது,இந்த பூங்காவை ஒட்டி சிறிது தூரத்தில் உள்ள டேனிஷ்பேட்டை என்ற அடர்ந்த வனம்.சிறுவயதில்,மலைப்பாம்புகளின் திடீர் விசிட்டையும், மலை போன்ற காட்டெருமைகளின் சொரணையற்ற அசைவயும்,தேவாங்குகளின் மிரட்டல்களையும்,மான்களின் ஓட்டத்தையும்,மீன்களின் துடிப்பையும் பார்த்தே வளர்ந்தவன்.என் சிறுவயது முழுக்க,என் அம்மாவின் அம்மா,மடியிலேயே கழிந்தது.இன்றும்கூட அங்கு செல்வது என்றால்,அவ்வளவு பிரியம் வரும்.தமிழர்கள் தற்போது டிவிக்களின் வாயிலாக,கொண்டாடிவரும் பொங்கல் பண்டிகையை,இன்றும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.போகி அன்று காப்புக்காட்டு,மறுநாள் இனிப்பு பொங்கல்,அடுத்த நாள் மாடுகளுக்காக,ஒருநாள் முழுக்க விரதம் இருந்து மாட்டுப்பொங்கல்,அடுத்தநாள் கிடா வெட்டி கறிநாள் மற்றும் ஜல்லிக்கட்டு என சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதைப்பற்றி போட்டால்,இது பெரிய பதிவாகி விடும்.ஏற்கனவே,’என்னதாண்டா சொல்லவர நீ?’-னு நீங்க எல்லாம் காண்டாகறது தெரியுது.
மரத்தைவிட்டு,கீழே இறங்கி செல்லும்போது,பாழடைந்த குடில் ஒன்று கண்ணில் சிக்கியது.என்னவென்று பார்த்தால் அதுதான் பாம்புகள் சரணாலயமாம்.ஒரே ஒரு சாரை மட்டும் அண்ணன் கேபிள் சங்கரை போல் படம் எடுத்தே ஆகவேண்டும் என்று முயன்று கொண்டிருந்தது.’நீ என்னதான் முயன்று முக்கினாலும்,சாரை,கேபிளாகாது’என்று மனதில் நினைத்தேன்.மற்ற பாம்புகள் தங்களின் இருப்பிடத்தில்,அம்மாவைக்கண்ட மந்திரிகளைப்போல் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தன.பாவம்,யாரும் காண வரததால் அந்த பாம்புகள்,சோகத்தில் சுருண்டுகிடப்பதை பார்த்ததும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.


பின் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து,முயல் மற்றும் ஆமைகளை காணச்சென்றேன்.வழியில் ஆங்காங்கே குட்டி குட்டி மரப்பாலங்கள் நன்றாக இருந்தது.
கூண்டுகளை அடைந்ததும்,முதலில் இரு கலர் எலிகள்(முயல்போலவே இருக்குமே!அதான்),என்னைப்பார்த்தபடி ரசித்து காலை உணவு தின்றுகொண்டிருந்தது.பின்சோத்தைப்பிடுங்க வந்துட்டான்டா ஒருத்தன்னு நினைச்சதோ என்னவோ,அப்படியே யூடர்ன் போட்டு திரும்பிநின்று சாப்பிட ஆரம்பித்தது.
மானம்,மண் ரோட்டை கடப்பதற்குள்,ஸ்பாட்டை காலி செய்துவிட்டு அடுத்த கூண்டில் இருந்த முயல்களைக்காண சென்றேன்.இரண்டில் ஒரு முயல் மாத்திரமே என்னைப்பார்த்தபடி பரிதாபமாக நின்றது.அதன் பரிதாபத்திற்கு காரணம்,அந்த முயல்,காட்டில் இருந்துபிடித்துகொண்டு வந்திருப்பது மட்டுமின்றி,பிடித்து வரும்போது அதன் காலில் ஏற்பட்டிருந்த பெரிய காயம்.ஒரு கால்,உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது.கமலின்குயில பிடிச்சி கூண்டில் அடைச்சுபாடலின் வலி எனக்கு அப்போது விளங்கிற்று.
வலியுடன் அடுத்த கூண்டிற்கு சென்றால்,தாயும் பிள்ளையுமாக ஒரு கூட்டு ஆமைகள் இருந்தன.அவர்களின் காலை உணவு,கேரட் துருவல்.அந்த தாய் ஆமை,தன் தலையை நீட்டி,ஒரு பருக்கை கேரட்டை வாயில் எடுத்தது.அது எப்படி சாப்பிடப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் நின்ற எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது.அந்த ஒரு பருக்கை கேரட்டை எடுத்து,மேலும் தன் தலையை நீட்டி,அதன் அருகில் அமைதியாக,என்னைப்பார்த்துக்கொண்டிருந்த அதன் பிள்ளையின் வாயின் அருகில் சென்று,வாயில் இருந்த கேரட்டை,பிள்ளையின் வாயில் திணிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது.அந்த பிள்ளையோ,என் சிறுவயதில்,என் தாய் சோறு ஊட்ட முயன்றபோது மறுத்த என்னை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது.மனதில் ஒரு இனம்புரியாத,வலி மற்றும் சந்தோசத்துடன்,அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
பின்,அப்படியே அந்த இடத்தில் இருந்த பிற பறவைகள் கூண்டில் சிக்கித்தவித்த,கிளி,புறா,மைனா,போன்ற பறவைகள் மற்றும் வகைகளைப்பார்த்தபடி,முதலையின் இருப்பிடத்தை அடைந்தேன்.இரண்டு தொட்டியில் இரண்டு முதலைகள் இருந்தன.ஒரு தொட்டியில் மட்டும் இரண்டிற்கு மேற்பட்ட முதலைகள் இருந்தன.அனைத்தும் சிறு குட்டிகள்.ஒரு தொட்டியில் ஒரு முதலையும் இரண்டு ஆமைகளும் இருந்தன.எனக்கு சிறிது அதிசயமாக இருந்தது.முதலை,ஆமைய எதுவும் பண்ணாதா?


அங்கிருந்து மெல்ல நகர்ந்து,வேறொரு இடத்திற்கு சென்றேன்.நான் மரம் ஏறிப்பார்த்த யானை,அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்தது.அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் போன்ற கட்டிடம் இருந்தது.விசாரித்ததில்,அது ஒரு வனவிலங்குகளின் ஆஸ்பத்திரியாம்.யானைக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அங்கு கட்டப்பட்டு இருக்கிறதாம்.உள்ளே சென்று டாக்டரிடம்,முயல் பற்றி முறையிட சென்றால்,வழக்கம்போல் டாக்டர் தன் சொந்த கிளினிக் சென்று விட்டாராம்.சரி என்று மீண்டும் வழிதிரும்பி,மயில்கள் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன்.

முன்பு தோகையை விரித்து ஆடிய வெள்ளைமயில் ,இன்னும் ஆடிக்கொண்டே இருந்தது.அது ஆடுவதைப்பார்த்து இன்னொரு சாதா மயிலும் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணி இருந்தது.’நீ கெட்டதும் இல்லாம,இன்னொருத்தன வேற கெடுத்திட்டியாடா மண்டையா’-னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.’மனிதப்பெண்களை விட மயில்பெண்கள் செம உஷார்,இவ்வளவு சீன் போட்டும் பருப்பு வேகலையே அதுங்ககிட்ட’ என்று நினைத்துக்கொண்டு  ,வாத்து மற்றும் நாரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.



அங்கு ஒரு நீண்ண்ட அலகுடைய நாரை ஒன்று ஒரு மீனை விழுங்க முயற்சித்துக்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 15 நிமிடம் போராடி ஒரு குட்டிமீனை விழுங்கியது.நல்லவேளை,நமக்கு அவ்வளவு நீளமான வாய் இல்லை,நன்றி இறைவா னு சொல்லிட்டு,நம் முன்னோர்கள் இருந்த கூண்டுக்கு போய்ட்டு அப்படியே மான் கூண்டுக்கும் போனேன்.இங்கு கொம்பில்லாத மான்களுக்கென்று பெரிய கூண்டும்,புள்ளிமான்களுக்கு தனி கூண்டும்,பெரிய பரப்பில் வைத்திருந்தார்கள்.


அதையெல்லாம் பார்த்தவாறே,சென்று கொண்டிருக்கும்போது ஒரு புதரின் அடியில் சத்தம்.சரி காதல்ஜோடிங்க,காலேஜ் பாடத்த டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பாங்க-னு நினைச்சிட்டு அப்படியே நடந்தேன்.திடீர்னு புதர்ல இருந்து ஒரு பையன் தலை தெரிஞ்சது.கூடவே ஒரு பொண்ணு.பையன பாத்ததும் என்னால நம்பவே முடில.அந்த பையன்,என்னோட ஸ்கூல் ஜூனியர்.ஸ்கூல் படிக்கும்போது அம்பியா இருந்தவன்,இப்போ ரேம்போர்ட் ரெமோ-வா மாறி இருந்தான்.அவனும் என்னப்பாத்திட்டு,ரொம்ப நல்ல பையன் மாதிரி மூஞ்ச வச்சிகிட்டான்.அவன் முகத்தாலேயே ’ரொம்ப நல்லவன்’-னு சொன்னமாதிரி இருந்துச்சி.’நல்லவனுக்கு,புதர்ல என்னடா வேலை’னு நா மூஞ்சாலேயே பேச,பையன் தலைய குனிஞ்சிகிட்டான்.
சரி,என்னமோ பண்ணுடா-னு,நா அந்த இடத்த விட்டு கிளம்பி,லேக் வியூ(Lake view)-னு போட்ருந்த ஒரு கட்டிடத்துக்கு வந்தேன்.அந்த கட்டிடத்துல ஏறிப்பார்த்தா,ஒரு அழகான,கிட்டத்தட்ட வற்றிய நிலையில் ஒரு ஏரி,அதன்பின்புறம் சேர்வராயன் மலை.அதாங்க,ஏற்காடு.நல்ல வியூ.(பின்,நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றி பேசியபோது அவர் சொன்ன அதிர்ச்சித்தகவல் இதுதான்.இந்த ஏரியின் கரையைதாண்டி மறுபக்கம் சென்றுதான் பலபேர்,தரங்கெட்ட பல செயல்களை செய்கிறார்களாம்.இதற்கு,அங்கு பணிபுரியும் வாட்ச்மேன் உதவுவதற்கு முதல் மூன்று இலக்க காந்தி தாத்தா நோட்டு தேவையாம்).



அங்கே ஒரு மரத்தில் கண்ட காட்சி இது.எங்கள் ஊர் இளைஞர்களின் கைவண்ணம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?    



பின் அங்கிருந்து,அப்படியே நகர்ந்து,சிறுவர் விளையாட்டுத்திடலை அடைந்தேன்.சிறுவர்கள் விளையாட,ஊஞ்சல்,சறுக்குப்பலகை எனப்பல பொருட்கள் இருந்தன.அவற்றில் சில,உடைந்து காணப்பட்டது.என் சிறுவயது ஞாபகம் பெருக்கெடுக்க,அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆரம்பித்தேன்.அப்போது,அங்கு ஒரு க்ரூப் வந்தது.மூன்று பையன்கள்,இரண்டு பெண்கள்.அனைவருக்கும் மிஞ்சி மிஞ்சிப்போனால் 18 வயது கூட இருக்காது.எல்லாம் கல்லூரி முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டுகளில் படிப்பவர்கள்.கல்லூரி மட்டுமல்ல,காதலுக்கும் சிறிது புதியவர்களாகவே தெரிந்தனர்.அவர்கள்,நான் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சத்தமாக பேசியபடியே இருந்தனர்.அவர்கள் பேச்சிலிருந்து,ஏற்கனவே இங்கு வந்திருப்பது தெரிந்தது.அவர்கள் அனைவரும் தனியே வந்த என்னை,ஏதோ ஒரு வேற்றுகிரகவாசிபோல பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தனர்.


‘டேய்!இது என்ன காதலர்க்கு மட்டும் பார்க்காடா?இல்ல,தனியா யாருமே வரக்கூடாதா?ஏன்டா என்ன இப்படி பாக்குறிங்க?நானும் மனுஷந்தான்டா.நா எப்படி அதிசயமா விலங்குகள பாத்துட்டு இருந்தனோ,அந்த மாதிரி நீங்க ஏன்டா பாக்குறிங்க?’-னு கத்தனும்போல இருந்துச்சி.அப்போ தான் உரைத்தது.முதல்காட்சியில்,நான் வண்டியில் வரும்போது ஏன்,ஊர்மக்கள் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள் என்று.

ஆனால் அந்த குரூப்,வெறும் பேச்சுக்காக மட்டுமே அங்கு வந்திருந்தார்கள் என்று என் மனதில் பட்டது.சரி என்ன இழவோ என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி வெளியே செல்ல முடிவெடுத்தேன்.அப்போது என்ன மாதிரியே பேச்சிலர்ஸாக இரண்டு பெண்கள் மட்டும் தனியே வந்தார்கள்.அவர்களின் நவரச நாயகர்கள் பின்னாடி வருகிறார்களா என்று எட்டிப்பார்த்தேன்.யாரும் இல்லை.அவ்வளவு நேரம் பூங்காவில்,அநாதையாக திரிந்த எனக்கு,திடீர் சந்தோசம் பரவிற்று.என் நண்பனிடம் இருந்து பிடுங்கி கொண்டு வந்திருந்த கோவா ரேமண்ட்ஸ் கண்ணாடியை,நெஞ்சில் சொருகிக்கொண்டு,செட்வெட் ஜெல்லால் காய்ந்து போன என் தலைமுடியை மீண்டும் சரிசெய்து,முகத்தை கொஞ்சம் ரொமாண்டி்க லுக்கிற்கு மாற்றிக்கொண்டு,தோளை அசைத்து,அவர்கள் முன் கொஞ்சம் ப்ரஷ்ஷாக நடந்து சென்றேன்.அதில்,ஒருத்தி என்னையே சைட் அடிக்க,இன்றுடன் மூன்று பேர்(ஆண்டிகளைத்தவர்த்து) நம்மை சைட் அடித்துவிட்டார்கள் என்ற சிற்றின்பத்தில் மிதந்து கொண்டே சென்றேன்.எதிரில்,தோகையை விரித்தாடிக்கொண்டிருந்த வெள்ளை மயில்,என்னையே முறைத்துக்கொண்டு இருந்தது.திடீரென்று மீண்டும் என்னைப்பார்த்து கத்த ஆரம்பித்தது.அதில் பல கெட்டவார்த்தைகள் இருக்கும் என புரிந்தது.நல்லவேளை,மயில்களின் கெட்டவார்த்தைகளெல்லாம் எனக்கு தெரியாது.உடனே அங்கிருந்து வேக வேகமாக சென்றேன் என் பைக்கை நோக்கி.தண்ணீர் தாகம் எடுக்க,குடிநீர் டேங்கை நோக்கி சென்றேன்.எங்கள் சேலத்தில் நிலத்தடி நீர் எப்போதும் சுத்தமாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும்.எங்கள் வீட்டில் இன்றும் குடிப்பதற்கு,நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.உண்மை என்னவெனில்,எங்கள் ஊரில் கனிமவளங்கள் அதிகம்,அதனால்,நிலத்தடி நீரும் கொஞ்சம் சக்தி வாய்ந்தாதாகவே இருக்கும்.குடித்து முடித்துவிட்டு,பைக்கை நோக்கி சென்றேன்.





.



          

திடீரென்று ‘தம்பி’ என்ற குரல் கேட்டது.திரும்பிப்பார்த்தால் அந்த அதிகாரி.
‘என்ன தம்பி!சுத்திப்பாத்திங்களா?’
‘பாத்தேன் சார்.எல்லாம் நல்லா இருந்துச்சி’
‘மெயின்டெனன்ட்ஸ்லாம் ஓ,கே வா?’
‘எல்லாம் அருமை சார்’
‘கொஞ்சம் நல்லபடியா பத்திரிக்கைல எழுதுங்க’
‘நா பத்திரிக்கை எழுத்தாளன் இல்லிங்க!வலைப்பதிவு எழுத்தாளன்’
‘அப்படிங்களா!ரொம்ப நல்லதாப்போச்சு.பாத்து எழுதுங்க தம்பி.இந்த காதலர்கள் பத்தியோ,குறைகளையோ அதிகமா போடாதிங்க.ஏற்கனவே வந்த பத்திரிக்கைக்காரங்க எல்லாம் அது அப்படி,இது இப்படினு மோசமா எழுதி டோஸ் வாங்க வச்சிட்டாங்க’
‘கவலைப்படாதிங்க சார்!!நா பாத்த விஷயத்த அப்படியே எழுதுவேன்’
‘ரொம்ப நன்றிங்க தம்பி’
‘சரிங்க சார்.வரேன்’
இப்போ மேலே உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்ருப்பேன்.என்னப்பாத்தா நிஜமா எழுத்தாளன் மாதிரி தெரியுதா?கொஞ்சம் கமெண்ட் பண்ணிட்டு போங்க.
சரிங்க இப்ப விஷயத்துக்கு வர்ரேன்.
இங்க சுத்திப்பாக்க நிறைய விஷயம் இருந்துச்சி.ஆனா நானும் ஒரு நாயும் இன்னொரு மயிலும்தான் சுத்திப்பத்துட்டு இருந்தோம்.மத்தவங்க எல்லாம் ஒரு இடத்துல உக்காந்து மொக்கஜோக் அடிச்சிகிட்டு சிரிச்சிகிட்டு இருந்தாங்க.இந்த பார்க்,ஒரு சிறந்த அனுபவம்.சேலத்துல இருந்து மாசமாசம் 300 ரூ சீட்டு போட்டு வருசத்துக்கு ஒரு தடவ,சென்னை வண்டலூர் பார்க் போயி பணத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா,இயற்கையாவே அமைஞ்ச இந்த பார்க் போயி சுத்திப்பாத்துட்டு வர்றது தான் என்னைப்பொறுத்தவரைக்கும் பெஸ்ட்.என்ன காரணத்தாலோ,இந்த பார்க்க அரசாங்கம் கண்டுக்காம இருக்கு.ஏற்காடுல மலர் கண்காட்சி நடத்துற மாதிரி,வன உயிரிகள் தினம் மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துனா,கண்டிப்பா பேமஸ் ஆகிடும்.இப்போதை்ககு காதல் ஜோடிங்க அதிகமா வர காரணம்,நம்மள மாதிரி மக்கள்,குடும்பம்லாம் இங்க அதிகமா வராததால தான்.குடும்பம் மற்றும் குழந்தைகளின் படையெடுப்பு அதிகரிச்சா,கண்டிப்பா காதலர்கள் எண்ணிக்கை குறையும்.அதுவுமில்லாம,சேலம் காதலர்களுக்கு,சென்னை மெரினா பீச்,அண்ணா டவர் காதலர்கள் மாதிரியான தைரியம்லாம் அதிகம் இல்லை.அதுனால,அதிகம் எல்லைமீறல்கள் இல்லை என்பதே உண்மை.கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது என்பதில் துளியும் சந்தேகமில்லை.சிறுவர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள்.நாமும் கொஞ்ச நேரம் சிறுவயது ஞாபகங்களில் விழுந்து,சந்தோசமாக அனுபவிக்கலாம்.ஆனால் குழந்தைகளை சிறிது ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.அடர்ந்த வனமாக இருப்பதால்,பூச்சிகள் தொல்லை இருக்கலாம்.கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் எல்லாம் தரமாகவே இருக்கிறது.வெளியூர் நண்பர்கள்,சேலத்திற்கு வந்தாலும் கண்டிப்பாக சென்று பாருங்கள்.சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் 6 ரூபாய்தான் பஸ்டிக்கட்.பஸ் அடிக்கடி இல்லையெனினும்,குருவம்பட்டி உயிரியல் பூங்கா என்ற பெயரிலே பேருந்துகள் வருகின்றன.

அப்புறம்,உங்க கிட்ட மேல ஒரு கேள்வி கேட்டனே!அது எதுக்குனா,போனவாரம் ஆனந்தவிகடன்ல படிச்சிட்டு இருக்கும்போது ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் கேம் பத்தி கேள்விபட்டு அத டவுன்லோட்பண்ணேன்.கேம் பேரு,விழுப்புரம் ரன்.ஆமாங்க,அதே தான்.நம்ம தளபதிய கலாய்ச்சி,தல பேன்ஸ் ரிலிஸ் பண்ணிருக்காங்க.கேம் உண்மையாலும்,சூப்பரப்பு ரகம்.டெம்புள் ரன் கேம்,கோடிங்ஸ காபி அடிச்சி பண்ணிருக்காங்க.ஆனா செமயா இருக்கு.


சிறப்பம்சங்கள்-


1.கேமின் வில்லன்கள்-முதல் ரவுண்டில் அருவா வைத்த டி.ஆர் மற்றும் பவர்ஸ்டார்.
2.விஜயின் பவர் பெயர் சுறா சுவிங் மற்றும் குருவி ஃப்ளை
3.இரண்டாவது ரவுண்டில் மெயின்வில்லனாக பவர்ஸ்டார் அட்டூழியம் செய்துள்ளார்.
4.நடுநடுவே வடிவேலுவின் டயலாக்ஸ்கலான தாவுடா தாவு,வட போச்சா?போன்றவைகள் வந்து கிச்சிகிச்சி மூட்டும்.
5.ஹைலைட்டான விஷயம்,விஜய் ஒரு பவர் பிடிக்கும்போது ஒரு வாய்ஸ் வரும்.அதைக்கேட்டுவிட்டு சிரிக்காதவர்கள் கண்டிப்பாக தீவிர விஜய் ரசிகர்கள் என அவார்டே கொடுக்கலாம்.
6.இந்த கேம் என்னதான் தல ரசிகர்கள் செய்திருந்தாலும்,இதில் தளபதியை அசிங்கப்படுத்துவதைக்காட்டிலும்,அவர்களின் ரசிகர்களை அசிங்கப்படுத்தவே உருவாக்கினார்களாம்.
7.தல பிறந்த நாள் அன்று சில விஜய் ரசிகர்கள்,தல-யை கலாய்த்து  மொக்கையாக ஒரு கேமை விட்டார்களாம்.அதுமட்டுமின்றி ,விஜயை தவறாக ட்விட்டரில் பேசிய ஒரு ரசிகரின் வீட்டுக்கு பஸ் பிடித்து போய் அடித்ததாலும் காண்டாகி தான் இந்த கேம் வெளியிட்டார்களாம்.
8.இந்த கேமைஉருவாக்கியது ஒரு கல்லூரி பெண்ணாம்.அவருடைய தோழர்கள் நால்வருடன் சேர்ந்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
9.விஜய் ரசிகர்களும் ரசித்து விளையாடும் வண்ணமே இருக்கு.
10.Google PLAY STORE-ல் சென்று,GAMES செக்சனில் நுழைந்து VILUPPURAM RUN அல்லது VIJAY என்று டைப் செய்து SEARCH செய்தாலே கிடைக்கிறது.டவுன்லோட் இலவசம்

-------------- அம்புட்டுத்தான்--------------------

Comments

  1. Replies
    1. அண்ணே!!தங்களின் வருகை மற்றும் கமெண்டிற்கு நன்றி எனும் வார்த்தையையன்றி,நன்றிக்கு வேறு வார்த்தை அறியாத,இந்த சிறுபிள்ளையின் நன்றியை ஏத்துக்குங்கணா!!!

      Delete
  2. super nanba.keep write like this article...........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை