Tuesday, 22 July 2014

கெட்டவார்த்தை-சிறுகதைபள்ளி விட்ட நேரத்தில் குதுகலத்துடன்,கேட்டைத்தாண்டி வெளியேறும் எல்.கே.ஜி பையனின் மனநிலையுடன், அந்த உயிரியல் பூங்காவைக் காத்துக்கொண்டிருந்த கேட்டின் வழியாக உள்நுழைந்தேன்.என் பத்துரூபாய்த்தாள்,கணிணியால் அச்சிடப்பட்ட வெள்ளைக்காகிதமாக மாற்றம் அடைந்து நுழைவுச்சீட்டாக ,என்னை உள்நுழைய வழிசெய்துகொடுத்தது.இவ்வியற்கைக்காட்சிகளைத்தவறவிட்ட நாட்களை நினைத்து,சிறுவயதில் அதிசயமாய்ப்பார்க்கும் வானத்து விமானங்களைப் பார்ப்பதை போல,என் கண்களை அகல விரித்து,அந்த வனாந்திர உயிரியல் பூங்காவைப்பார்த்தேன்.பச்சைக்கலரை இயற்கைக்கு அள்ளிக்கொடுத்த கடவுள்,மனிதனுக்கு மாத்திரம் கருப்பு,வெள்ளை என பலவிதமாய் கொடுத்தது ஏனோ?அந்த நிறங்களினால் ஒரு காலத்தில் எவ்வளவு சண்டைகள்,பிரச்சினைகள்.பழங்கதைகளை நினைத்து பாழாய்ப்போக வேண்டாம் என முடிவு செய்து,மெதுவாக என் பாத யாத்திரையை அந்த பூங்காவினுள் தொடங்கினேன்.அருகம்புல்லை அழித்து செயற்கையாக விதைத்து உருவாக்கிய புற்களைச்சுற்றி,கட்டப்பட்ட ஒரு அடி பாதுகாப்புச்சசுவர்களினுல்,புற்களின் மீது விதவிதமான டைனோசர்களும்,நடுநடுவே நடந்து போக பாதைகளும் இருந்தன. அந்த இடத்தைப்புறக்கணித்துவிட்டு மெதுவாக சென்றேன்.எப்படியும் அங்கு சென்றால்,என்னுள் இருக்கும் சிறுகுழந்தை முழித்து,அப்புற்களின் ஊடே தடம்பதிக்க விரும்புவான்.


மனம்,கடந்த காலத்தை அசைபோடத்தூண்டியது.இதே போல் என் ஜானகியுடன்,வண்டலூர்ப்பூங்காவில் கடைசியாக நடந்தது,அவள் பேசிக்கொண்டே தன் தலைக்கு உரித்தான இடமான என் மார்பில் சாய்த்துக்கொண்டு,அவளின் அண்டவெளிக்கண்களை என் முகத்தை நோக்கி  பார்த்து என்னைத்திணறடித்தது.அவளிடம்,மூன்று மாதத்திற்கு முன் சரக்கடித்து விட்டு சொன்ன பொய்யை,அது பொய் என உண்மைக்கூறி,அவள் பொய்யாக கோவித்துக்கொண்டது,அதன்பின் அவளிடம் நிறைய கொஞ்சி,சிறிது கெஞ்சி சமாளித்து,அங்கிருந்து மீண்டும் திரும்பியது என என்று எல்லாமே அகக்கண்கள் வழியே எனக்குத்தெரிந்தது.


‘க்ஹீ க்ஹீ க்ஹீ’ என்ற ஒரு கேவலமான சத்தம்,என் நினைவுகளை மீண்டும் வண்டலூரிலிருந்து சேலத்தின்,அப்பூங்காவை நோக்கி ஒரே நொடியில் கொண்டுவந்தது.என் மனம் சிறிது கோவப்பட்டாலும்,சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல பிரயத்தனப்பட்டது.இது போன்றதொரு கேவலமான சத்தத்தை,சினிமாப் பாடல்களில் மட்டுமே கேட்டுள்ளேன்.அந்த ஆர்வத்தின் காரணமாக,என் கால்களுக்கு முடிந்தவரை வேலைகொடுத்து அந்த இடத்தை அடைந்தேன்.

அங்கு சில வெள்ளைக்கார மயில்களும்,கருப்பின மயில்களும் ஒரு பெரிய கூண்டை,உலகம் என எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தன.அம்மயில்களைக்கண்டதும்,எப்போதோ படித்த ‘சத்திய சோதனை’, மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தது.கடவுள் உத்தமர்களை உருவாக்கவே மனிதர்ளுக்கு ஒவ்வொரு நிறம் கொடுத்துள்ளார்.மக்கள் அனைவரும் ஒரே நிறத்தில் இருந்திருந்தால்,தென்னாப்ரிக்கா ரெயிலில் நம் காந்திக்கு அவமானம் கிடைத்திருக்காது.அவர்,இன்னேரம் இங்கிலாந்தில் ஏதோ ஒரு வீட்டில் போட்டோவாக தொங்கி கொண்டிருந்திருப்பார்.அப்போது,முனிவரின் தவத்தைக்கலைக்க வரும் அத்தேவ மகளிரைப்போல்,என் சிந்தையை கலைத்தது,முன்பு கேட்ட அதே குரல்.அப்போதுதான் கவனித்தேன்,அங்கிருந்த ஒரு வெள்ளைமயில் தன் இன பெண்ணை மயக்க,தன்னிடம் இருக்கும் தோகையை விரித்து சீன் போட்டுக்கொண்டிருந்தது.அதைக்கண்டும் காணாத பெண்மயில்கள்,வழக்கம்போல் தன்பின்புறத்தை நளினமாக ஆட்டியபடி செல்ல,கோவமடைந்த அந்த ஆண்மயில் தான் அங்கு போட்டுக்கொண்டிருக்கும் சீனை நிலைநிறுத்தும்பொருட்டு,தன் குரல்வளத்தை,என் காதை கிழித்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

நான் ரேவதியை முதன்முதலில் பார்த்தபோது,செய்த செயல்களை அந்த ஆண்மயில்,எனக்கு நினைவூட்டியது.ஜானகியின் தங்கை ரேவதி.எனக்கும் ஜானகிக்கும் காதல் அரும்பியபோது,வெறும் சேமித்துவைக்கப்பட்ட செல்நம்பராக என் மனதிலும் மொபைலிலும் இருந்தாள்.பின்,ஜானகியுடனான என் வண்டலூர்ப்பயணத்தை,ஏதோ ஒரு சொந்தக்கார ஜேம்ஸ்பாண்டு மூலம் அறிந்த அவளது தந்தையின் கட்டுப்பாட்டின் காரணமாக,என் அடுத்த மாத போன்பில்லில்,முதலிடம் பெற்று என் மாத வருமானத்தின் 10 சதவீதத்தை,போன் கம்பனிகளுக்குத் தானம் வழங்க ,காரணமானவள்.அதன்பின் இரண்டு மாதம் மீண்டும் சேமிக்கப்பட்ட நம்பராக இருந்து,டார்லிங் எனும் பெயருக்கு என் போனில் பதவி உயர்வு பெற்றவள்.ஆனால் இருவருமே இப்போது தம் பணிகளை செவ்வனே செய்துவருகிறார்கள்;போன் நம்பரையும்,என்னையும் மாற்றி .அதன் காரணமாக என்னுள் சிறு கோவம்.அதைக்காட்ட,சரியானபடி இம்மயில்கள் இருந்தன.’மனிதர்கள்தான்,பெண்கள் பெண்கள் என தன்னிடமுள்ள அனைத்தையும் பகட்டாக காட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் என்றால்,நீங்களுமா?ஏன் இப்படி பெண்பித்து பிடித்து வாழ்க்கையை உயிரினங்கள் அனைத்தும் வீணடிக்கின்றனவோ?பேசாமல் மூடிக்கொண்டு வேலையைப்பாருடா’என்று அம்மயிலை நோக்கி மனதினுள் சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தேன்.


சிறிது தூரம் நடந்தபின்,என் எதிரே இரண்டு பையன்கள்,ஒரு பெண் என நடந்து வந்துகொண்டிருந்தனர்.என்னைக்கடக்கும் வரை அவர்களின் நடத்தைகளை கவனிக்கும்போது,ஒரு பையன் அப்பெண்ணை விரும்புவதும்,அவள் அதற்கு இன்னும் உடன்படவில்லையென்றும் தெரிந்தது.அந்த ஒருதலைக்காதலனுக்கு உதவி செய்ய,நண்பன் இருப்பதையும் அறிய முடிந்தது.இவர்கள் என்னைக்கடப்பதற்குள்,நான் நிகழ்காலத்தை கடந்து,இறந்த காலத்திற்கு சென்றேன்.


வெங்கடேஷ்,என் ரூம் மேட்.ஹோட்டலுக்கு சென்றால்,உணவில் மட்டுமின்றி பில்லிலும் பகிர்ந்து கொள்வான்.தியேட்டருக்கு சென்றால்,அவனால் முடிந்தவரை 3D கண்ணாடிக்குன்டான பணத்தையாவது கொடுப்பான்.இதுமட்டுமின்றி சரக்கு விஷயத்திலும் இவனின் நேர்மையான பகிர்ந்தளிக்கும் குணம்,இவனுடன் என்னைப்பழக வைத்தது.ஏன்?எப்படி?எதற்கு?எங்கே?எப்போது?என்ன? போன்ற கேள்விகளை இவனிடம்,நாமே நினைத்தாலும் எதிர்பார்க்கமுடியாது.முதன்முதலில்,ஜானகியை நான் பார்த்தபோது,என்னுடன் இருந்தவன்.அவளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து,என்னிடம் கொடுத்து என் காதல் வளர உதவியவன்.அதே போல் சந்துரு.ஜானகியின் பிரிவால் துடித்துக்கொண்டிருந்த எனக்கு,ரேவதியின் காதலைப்பற்றி எடுத்துக்கூறி,என் காதல் வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தினை தொடங்கிவைத்தவன்.

அட்டைப்புழுவைப்போல் ஊர்ந்து,பாம்பு பண்ணையை அடைந்தேன்.யாரும் கவனிக்காத காரணத்தால்,இரு பாம்புகள்,பின்னிபினைந்து கொண்டு மேலெழும்ப முயற்சித்துக்கொண்டிருந்தன.அச்சமயம்,அப்பாம்புகளுக்கிடையே வந்த ஒரு பாம்பு,ஏதோ அவர்கள் பாஷையில் சொல்லிய உடன் பின்னிக்கொண்டிருந்த பாம்புகளில் ஒன்றான சாரை,தன் இணையை உதறித்தள்ளிவிட்டு தனியாக சென்றது.அதுபோகும் திசையைப்பார்த்துக்கொண்டே,அதன் இணைப்பாம்பு மெல்ல நகர்ந்தது.அதன்பின் தொடர்ந்து சென்று அதன் கூட்டை அடைந்தது.ஆனால்,அந்த சாரைப்பாம்பு அதனிடம் சீறி தன் கோவத்தைக்காட்டி சுருண்டு படுத்துவிட்டது.அங்கிருந்து மெல்ல,அந்த இணைப்பாம்பு ஊர்ந்து தன் புற்றை அடைந்தது.அந்த சாரைப்பாம்பின் புற்றிலிருந்து,இன்னோரு சாரைப்பாம்பு வெளியில் வந்து,அந்த இணைப்பாம்பை அடைந்தது.


நான் அதற்கு மேல், என்னைக்காண இயலாமல் வேகமாக முன்னோக்கிச்சென்றேன்.என் உடலும் மனமும் வெவ்வேறாக இருந்தது.உடல்,தானாக எங்கோ சென்றுகொண்டிருந்தது.மனம் மட்டும் பழைய விஷயங்களை குதறிக்கொண்டிருந்தது.எனக்கும் ஜானகிக்கும் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையில்,அவளுக்கு ஆறுதல் கூறி,நடந்த பிரச்சினைகளை தெளியவைப்பதாக கூறினான் என் நண்பன் வெங்கடேஷ்.அவன் எவ்வளவு முயன்றும்,அவள் சமாதானமாகவில்லை.நான்,அன்று இரவு முழுக்க குடித்துவிட்டு படுத்துவிட்டு,நடு இரவில் அறைகுறை போதையில் பார்த்தேன்.வெங்கடேஷ் இன்னும் ஆறுதல் சொல்லிக்கொண்டுதான் இருந்தான்.ஆனால்,முன் போல் இல்லம்மா,தங்கச்சி போன்ற வார்த்தைகளுக்குப்பதில் ’செல்லம்,தங்கம்’ போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுகொண்டிருந்தன.காலையில் எழுந்ததும்,ஏழு வருட சென்னை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து,சேலம் கிளம்ப ஆயுத்தமாகி,என் கம்பனியில் சொல்லி இடமாற்றம் பெற்று உடனடியாக கிளம்பினேன்.கிளம்பும்போது,ஜானகியிடம் ஒரு வார்த்தை கூறுவதற்காக போன் செய்தேன்.அப்போது,வெங்கடேஷ் வேலைக்கே செல்லாமல்,என்னை பார்த்தவுடன் குறுகி போனை எடுத்துக்கொண்டு மாடிக்குச்சென்றான்.ஜானகியின் நம்பரில் குரல் கேட்க,வேகமாக என் போனை காதில் வைத்தேன்.ஒரு அழகான குரல் ’அனைத்துவைக்கப்பட்டுள்ளது’ எனக்கூறியது.கோயம்பேட்டிற்கு சென்று மீண்டும் முயற்சிக்க,சிரமம் பார்க்காத அந்த அழகான குரல் மீண்டும் இருமொழிகளில் எனக்கு தெரிவித்தது ’அணைத்து வைக்கப்பட்டுள்ளது’ என்று.ஒரு தடவை வெங்கடேஷிடம் சொல்லிவிடலாம் என்று அவனுக்கு போன் செய்யும்போது,இன்னொரு அழகிய குரல் ‘நீங்கள் அழைத்த நம்பர்,வேறோரு இணைப்பில் பிஸியாக உள்ளது’.என் போனை பாக்கெட்டினுள் வைத்து,பஸ்ஸில் ஏறி என் சொந்த ஊரை அடைந்தேன்.


நடந்து கொண்டே சென்ற எனக்கு,எதிரில் இருந்து ஒருவிதமான நாற்றம் அடிப்பதைக்கண்டு,என் அகக்கண்களை மூடிவிட்டு,புறக்கண்களை திறந்து பார்த்தேன்.அந்த பாதை , ஒரு கழிவறையுடன் முற்றுபெற்றிருந்தது.திரும்பி வந்த வழியேச்செல்ல ஆரம்பித்தேன்.வரும் வழியில் நான் கண்ட பாம்பு பண்ணையில் ஒரு நொடி என் பார்வையை செலுத்தினேன்.அந்த இணைப்பாம்பு அருகில் அந்த இரண்டாம் சாரைப்பாம்பும்,புதிதாக ஒரு பாம்பும் இருந்தன.

ஜானகியைப்பிரிந்து வந்த ஆரம்ப நாட்கள் கொடுமையாகவும்,வெறுப்பாகவும் இருந்தன.அந்த நாட்களில் தான் வேகமாக,பயமில்லாமல் பைக் ஓட்டுவது,நீண்ட நேரம் நீருக்குள் மூச்சுப்பிடிப்பது,ஆஃப் பாட்டல் சரக்கை அநாயசமாக குடிப்பது போன்ற செயல்களில் தேர்ச்சியடைந்து கொண்டிருந்தேன்.பின் ரேவதியின் மெசேஜ்.அவளுடைய மிஸ்டுகால்கள் எல்லாம் அவளுக்கு என்னை போன் செய்யத்தூண்டின.குடிபோதையில் நான் பிதற்றிய என் காதல் அனுபவங்களை அவளிடம் உளறியதை,காவியமாக நினைத்து என்மேல் அனுதாபம் கொண்டாள்.பின் அவள் காதலை என்னிடம் கூறினாள்.அவளைத்திட்டிப்பேசிய போது,சந்துரு தான் எனக்கும் அவளுக்கும் பாலமாக இருந்தான்.என்னுள் காதல் விதையை மறுபடியும் விதைத்து அவளிடம் பேச பரிந்துரைத்தான்.மீண்டும் அவளிடம் பேசிய போது,அவள் சந்துருவை விரும்புவதாக என்னிடம் கூறினாள்.சந்துரு மீது தப்பிருக்காது எனத்தெரியும்.இவளின் மீதும் தப்பில்லை.எல்லாம் டீன்-ஏஜில் சகஜம் என மனதைத்தேற்றினேன்.

நடந்து மீண்டும் அந்த மயில் கூண்டருகே வந்தேன்.அங்கிருந்த வெள்ளை மயிலுடன்,ஒரு கருப்பு ஆண்மயிலும் கூட்டணி வைத்து தோகை விரித்தாடிக்கொண்டிருந்தது.எனக்கு சடாரென்று கோவம் தலைக்கேறியது. கோவம் தலைக்கேறிய நான்.அந்த வெள்ளை மயிலைப்பார்த்து ‘நீ கெட்டு சீரழிஞ்சதும் இல்லாம,இன்னொருத்துன வேற கெடுத்திட்டியா?நீலாம் நல்லாவே இருக்க மாட்ட!உனக்கு பறவைக்காய்ச்சல் வர!நாசமா போவ’னு கொஞ்சம் உரக்க கத்தியே விட்டேன்.மேலே கூறிய வசனத்துடன் சில கெட்ட வார்த்தைகளையும் இடையில் உபயோகித்து திட்டிவிட்டு நகர்ந்தேன்.

ராம்குமார் அண்ணன்.காலேஜில் என்னுடைய சீனியர்,என் ஹாஸ்டல் ,ரூமிலும் தான்.அவர் பழக இனிமையானவர்.அவர் காலேஜ் காலத்திலே பல காதல்களை செய்து வெற்றிக்கனி பறித்தவர்.’நீ ஏன்டா ஒருத்தியையும் காதலிக்க மாட்டேங்ற’ னு அவ்வபோது கடுப்பேத்துவதைத்தவிர்த்து பார்த்தால்,அவர் சிறந்த வழிகாட்டி.காலேஜ் முடிந்த பின் ஒரு நாள் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் பேசிய வார்த்தைகள்தான்,என்னை ஜானகியை காதல் புரிய ஊன்றுகோளாக இருந்தது.’நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்ட தம்பி.அண்ணன பாரு,இன்னைக்கு கூட ஒரு பொண்ணுகூட டேட்டிங் போய்ட்டு தான் வந்தேன்.அதுக்கெல்லாம் திறமை வேணும்பா’என்ற வார்த்தைகள் என் மூளையில் வந்து போனது.


அந்த மயில்கூண்டிற்கு எதிரே இருந்த சிறுவர் பூங்காவை நோக்கி சென்ற எனக்கு,எதிரில் கண்ணில் பட்டாள் ,தேவி.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னை விட மூன்று வயது சிறியவள்.இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் தனியே பூங்காவிற்கு வருவது பாவம், என்ற பூங்காவிற்கென்று இருக்கும் விதியினை என்னைப்போலவே உடைத்து தனிமையில் இருந்தாள்.சிறுவயதில் அவள் என்னை சைட் அடிக்க,நான் பஸ்ஸில் புட்போர்டு அடிக்க என பல அடிக்கல்கள் ஞாபகம் வந்தது.என்னைக்கண்டதும் அவளின் வெள்ளைத்தாமரை முகம்,பளிரென்று மலர்ந்தது.அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவளின் காதலன் அவளை மனதால் ஏமாற்றியது தெரிந்து வருத்தப்பட்ட அவளை ஆறுதல் மற்றும் நகைச்சுவை வார்த்தைகளால் சிறிது நேரம் விடுதலை அளித்தேன்.பின் அவளின் மொபைல் நம்பரை என் போனில் ஸ்டோர் செய்துவைத்துவிட்டு,அவளுக்கு விடையளித்தேன்.அப்போது என் ஜூனியர் மாணவன்,ரூபேஸ் போன் வந்தது.

‘அண்ணா எப்படி இருக்கிங்க?என்ன செய்றிங்க?’

‘நல்லா இருக்கேன்டா.நீ?’

‘நல்லா இருக்கேன்ணா.ஜானகி அக்கா எப்படி இருக்காங்க?’

‘என்ன கேட்டா எப்படி டா?அவள கேளு’

‘ஏன்ணா?என்னாச்சு?’

‘அவள எப்பவோ கழட்டி விட்டுட்டேன்டா’

‘அச்சோ!இப்போ என்ன செய்றிங்கணா?’

‘இன்னைக்குத்தான் புதுசா ஒரு பிகர உஷார் பன்னேன்.பேரு தேவி’

‘எப்படிணா?உங்களால மட்டும் முடியுது?’

‘அதுக்கெல்லாம் தனி திறமை வேனும்டா.’னு சொல்லும்போதே,மீண்டும் ’ஹ்கீ ஹ்கீ ஹ்கீ’ என்ற சத்தம்.எனவென்று கவனித்தால் அந்த வெள்ளை மயில் என்னை நோக்கி கத்திக்கொண்டிருக்கிறது.வேகமாக அவனுடைய இணைப்பைத்துண்டித்துவிட்டு,வெளியே செல்ல கேட்டை நோக்கி விரைந்தேன்.இன்னும் அந்த மயிலின் சத்தம் வந்துகொண்டே இருந்தது.

நல்லவேளை,மயிலின் கெட்டவார்த்தை எனக்குத்தெரியாது என்று எண்ணியவாறே கிளம்பினேன்.உங்கள் விருப்பம்

8 comments:

 1. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா!!!

   Delete
 2. நல்லதொரு ஆய்வுதான்...

  ReplyDelete
 3. Sema மெக்னேஷ் திருமுருகன்

  ReplyDelete