Thursday, 14 August 2014

பயணம் @ டைம் மெஷின்-3

அத்தியாயம்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

அத்தியாயம்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்அத்தியாயம் – 3கி.மு 2-ம் நூற்றாண்டு


பகுதி-1 ,காஞ்சிபுரம்

நாள் – கி.மு 27.03.0210
‘டேய் சந்துரு! நாம வந்துட்டோம்டோ ! ’

‘ஆமாண்டா பாலா !’

பாலாவும், சந்துருவும் அந்த மெஷினிலிருந்து இறங்கி, மீண்டும் அதே வனாந்திரத்தை பார்த்தார்கள். முன்பைவிட அடர்ந்து காணப்பட்டது. அவர்கள் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட காடுகளின் அழிவுகளைக்காட்டிலும், அவர்கள் பயணித்த இரண்டு நூற்றாண்டுகளில் குறைவாக அழிக்கப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்தனர். முதல் வேலையாக அந்த டைம் மெஷினை மறைக்க எத்தனித்தார்கள்.அந்த வனத்தில் காணப்பட்ட புங்கை மரங்களின் தழைகளும் , நெருஞ்சிமரத்தின் இழைகளும் , அந்த டைம் மெஷனை மறைக்க , அவர்களுக்கு உதவியது.

கிளம்பும் முன், அந்த முனிவரின் உபதேசத்தின் பேரில், அவருடைய வீட்டில் இருந்து தானம் பெறப்பட்ட வேட்டிகளை எடுத்து, அவரைப்போலவே மார்பு முதல் முழங்கால் வரை மறைக்க கடும் பிரயத்தனப்பட்டு கட்டி முடித்தார்கள். எப்படியும், தஞ்சாவூரை அடைய ஒரு வாரம் பிரயாணப்பட வேண்டும் என்பதனை, முனிவர் மூலம் முன்கூட்டியே அறிந்திருந்தனர். மேலும், வழிப்பிராயணத்திற்கு ஏற்ப, வாசுகியின் வளமையான கைகளால் சமைக்கப்பட்ட புளிசோறு மூட்டையையும் , குச்சிக்கிழங்கையும் அவர்கள் எடுத்துக்கொள்ள மறக்கவில்லை . அவர்களின் மனதினுள் அம்முனிவர் பற்றி பெரும் அபிப்ராயம் உருவாகி இருந்தது.ஊன்றுகோலிற்காக , ஒரு குச்சியைப்பிடுங்கி ,மெல்ல அங்கிருந்து ,நகர்ந்து சென்றனர்.

ஐந்து நிமிடத்திற்கு முன் அவர்கள் இருந்த  அம்முனிவரின் வீட்டைக் கண்டுபிடிக்க இயலாத அளவிற்கு காடுகள் மண்டிபோயிருந்தன.அங்கிருந்து நகர்ந்து சென்றவர்களை வழிமறித்து, ஆர்ப்பரித்து கொண்டிருந்த அடையாற்றை பார்த்தவர்கள், சிறிது தூரம் அதனுடன் பயணித்து ,  ஆழமில்லாத ஒரு இடத்தின் ஊடே, ஆற்றின் மீது தங்கள் கால்களை பதித்து , மெல்ல ஊர்ந்து மறுகரையை அடைந்தனர்.

அவர்களின் காலகட்டத்தில் இருக்கும் காற்றின் மாசுக்களான, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோஃப்ளோரோ கார்பன்களின் தொல்லையின்றி , தூய ஆக்ஸிஜன் , அவர்களின் நாசித்துவாரத்தில் செல்வதால்,  களைப்பு மறந்து உற்சாகமாக பயணித்தனர்

கதிரவனின் கதிரிடமிருந்து வரும் அடர்ந்த சூட்டினை, காடுகளில் உள்ள மரங்கள் , தத்தம்  இலையின் ஊடே பெற்று , உணவாக மாற்றி , இவர்களையும் வெயிலின் பிடியிலிருந்து காப்பாற்றின . எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடுகள் , சல சல ஓடைகள் , தென்றல் காற்று , பச்சை நிறம் .ஆங்காங்கே நல்லையும் சாரையுமாக பாம்புகள் பின்னி, தங்கள் காம இச்சைகளை தீர்த்துகொண்டும் , குறுக்கே குறுக்கே ஓடிக்கொண்டும் இருந்தன. இவர்களின் காலடித்தடத்தின் ஓசையைக்கேட்டு ஒரே எகிறலில், 20 அடி தாண்டித்திரும்பிப்பார்த்தன மான்கள் . குயில்கள், இவர்களை வரவேற்று , அழகான ஓசைகளை எழுப்பிக்கொண்டிருந்தன. காகங்களுக்கோ, இவர்களின் மீது ஏற்பட்ட ஏதோ ஒரு பகையின் காரணமாக , கரைந்து கொண்டு எங்கோ பறந்தன .முயல்கள் , இவர்கள்முன் வந்து நின்று,’ ஹையா ! முயல்கறி ’ என்பதை அடிக்கடி இவர்களின் மனதினுள் நிலைநிறுத்தி, தங்களின் கொழுத்த தேகத்தை தரிசனம் காட்டி சென்றன. திடீர் திடீர் என்று உருமும் புலியின் உருமலைக்கண்டு பயந்து ஒறிந்து ஒளிந்து சென்றனர். மனிதனுக்கு விலங்குகளைப்போல கோரையான நகங்களும் ,விஷமுள்ள பல்லும் , வலிதட்டும் கொடுக்கும் இல்லையெனினும் , அதைவிட ஆபத்தான மூளை உள்ளது என்பதால் ஒளிந்து கொண்டார்கள் .  

மாலை வரும் வரை வனத்தின் வழியே வந்தவர்களுக்கு, தூரத்தில் ஒரு சிறு நகரத்தின் தோற்றம் கிடைத்தது. அதுவரை , தனிமையின் பிடியில், தங்களின் கடந்த கால இனிய நினைவுகள் , கவலைகள் ,வாசுகியின் அழகு , முனிவரின் உதவி , முதல் முத்தம் , முதல் சிகரெட் , சரக்கின் பயனால் வாந்து எடுத்தது உட்பட அனைத்தையும் பேசி முடித்துவிட்டு, பேச எதுவுமில்லாமல் ‘அப்புறம்’ என்ற வார்த்தையை மட்டும் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு , அந்நகரைப்பார்ப்பது ,ஆறுதலாக இருந்தது . எப்படியோ, மனித நடமாட்டத்தை கண்டறிந்து விட்டோம்  என்ற வெற்றி களிப்பில் , வேகவேகமாக சென்றார்கள்.ஆனால், இயற்கைத்தாய் வடிவில், அங்கு அவர்களுக்கு ஒரு முட்டுக்கட்டை . பால்போன்ற நுரைகள் பொங்கியபடி, ஒரு ஆறு அவர்களை தடுத்து நிறுத்தியது . அந்த ஆறு, அடையாற்றைக்காட்டிலும் பெரியதாய் , பிரம்மாண்டமாய், நான் தான் பெரியவள் என்ற மிதப்பில் ஆர்ப்பரித்துக்கொண்டு சென்றாள். எப்படியாயினும் அதைக்கடந்தால் ஒழிய , அவ்வூரை அடைய முடியாது என்ற எண்ணம் , இருவருள்ளும் ஓடியது. அச்சமயம், ஆற்றின் மறுகரையில், ஒரு வட்ட வடிவ தோணி ஒன்றை , கயிற்றால் கட்டியபடி இருந்த ஒருவன் , எதேச்சையாக பரிதவித்துக்கொண்டிருக்கும் இருவரைப்பார்த்தான்.

உடனே, அவர்களை நோக்கி, தன் படகினை செலுத்தி , அவர்களிடம் வந்தடைந்தான்.

‘சாமி , அசலூருங்களா ?’

‘ஆமாங்க’-இருவரும் கோரசாக .

‘வாங்க சாமி ! நா உங்கள அக்கரையில சேத்திடுறே’

சந்துருவும் , பாலாவும் அந்த தோணியை நோக்கி ஏறினார்கள். அதுவரை , ஒருவனின் எடையை சுமந்து கொண்டிருந்த தோணியின் மீது மேலும் இருவர் ஏறியதால், அவர்களின் எடையை தாங்கும் பொருட்டு, நீரின்மீது தன் சமநிலையை நிலைநாட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது , அந்த தோணி.

ஆறு மாதமாக , மிஸ்டர் சென்னை ஒருவரின் ஜிம்மில் மாதம் ஆயிரம் ரூபாய் பீஸ் கட்டி ,தினம் 2 மணிநேரம் வேர்வை மழையில் A/C ஜிம்மில் , இரும்பின் மறு உருவங்களாய் பிரதிபலிக்கும் தம்பிள்ஸ், ராட் போன்றவற்றை தூக்கி இறக்கி ,2000 ரூபாய்க்கு சத்து மாவு போன்ற பொருட்களை வாங்கி , பாலில் கலந்து ஏறத்தாழ 50 , 60 லிட்டர் முழுங்கியும் தனக்கு வராத ஆர்ம்ஸ், அந்த சாதாரண தோணி ஓட்டுபவனுக்கு எப்படி வந்திருக்கும் , என்று யோசித்தவாறே வந்தான் சந்துரு . பாலாவோ, அந்த ‘கரிகாலன் , கல்லணையை கட்டியிருப்பானா? அங்கு எண்ணெய் கிடைக்குமா? திரும்பி சென்றவுடன் நோபல் பரிசு வாங்கவேண்டும். பின்னர் , நம் முன்காலத்திற்கு சென்று, நம்மை கழட்டி விட்ட கீதாவை எப்படியும் மறுபடியும் காதலிக்க வைக்க வேண்டும் . இல்லை இல்லை, அவளை நிகழ்காலத்திலேயே பார்த்து , அவள் முன் நோபல் பரிசை காட்டி, அவளை எரிச்சலூட்ட செய்யவேண்டும்’ என்றெல்லாம் எண்ணியவாறே வந்தான் .

‘சாமிக்கு வடநாடுங்களா ?’

‘இல்லிங்க ! இங்கதான் . மயிலாப்பூர் ’ - பாலா

‘மைலாப்பூரா? அது எங்க சாமி இருக்கு ?’

‘அதெல்லாம் உனக்கு புரியாது . எங்கள கரையேத்திவிடு  முதல்ல’ –சந்துரு .

‘ சரிங்க சாமி ! ’

‘ஆமா! இந்த ஆத்து பேரு என்ன ?’

‘வேகவதி ஆறுங்க சாமி !’

‘வேகவதியா ?’ என்றவாறே யோசித்தான் பாலா ..

‘யாரு இங்க கிங் ?’ –சந்துரு .

‘கின்னுன்னா என்ன சாமி அர்த்தம் ?

‘ஓ ! சாரி . இங்க மன்னன் யாரு ?’

‘அவரு தொண்டமான் வம்சத்த சேந்தவரு சாமி ! நடுவால , எல்லாம் வடநாட்டுகாரங்க செருவுக்கு வந்தாங்க . அவங்கல எதுக்கற தைரியம் இல்லாம ஓடி ஒழிஞ்சிகிட்டாரு . சென்னி மன்னன் தான் எல்லாம். இவருக்கு பெயர் தான் மன்னன். மத்தபடி எல்லாம் , சென்னி ராசா தான் . ஒருகாலத்துல இளந்தரையர்னு ஒருத்தரு இருந்தாரு. அவருதா , எங்கல எல்லாம் இங்க கொண்டுவந்தாரு . அவர தான் எல்லாரும் புகழுவாங்க ’
அவன் வார்த்தைகளில் ஒரு ஆதங்கம் தெரிந்தது .

‘ஓ ! இந்த நாடு பேரு என்ன ?’

சந்துருவின் இந்த கேள்விக்கு, ஒருநிமிடம் பொறுத்து பதிலளித்தான்,அந்த படகோட்டி.

‘இது கச்சிப்பேடுங்க சாமி ’


இதற்கும் புரியாமல் விழித்தான் பாலா. சந்துரு, வழக்கம்போல ஓ எனக்கேட்டுவிட்டு , அந்த படகோட்டியின் 6 பேக்ஸ்களை பார்த்து பொறாமையின் உச்சிக்கு போயிருந்தான் . அந்த ஊர், காஞ்சிபுரம் என்பதையும் , அவர்கள் பயணித்துகொண்டிருந்த ஆறு , பாலாறு என்றும் கூறியிருந்தால், கண்டிப்பாக சிறிதளவு முகமாற்றமடைந்து தான் இருப்பார்கள்.


‘ஆமா, அந்த சோழராசா பேரு என்னங்க ?’

‘அவர் பேரு  ஏழாரன்  சாமி . ஆனா, எல்லாரும் சென்னிராசானுதான் கூறுவாங்க ’

‘அவருக்கு கரிகாலன்னு ஏதாச்சும் பேரு இருக்கா ?’

‘அப்படியெல்லாம் இல்லிங்க சாமி’

‘அவருக்கு சின்ன வயசுல ஏதாச்சும் ஆக்சிடன்ட் ஆகி கால் ஃபுல்லா பைர் ஆச்சா? ’

புரியாமல் விழித்தவனுக்கு மீண்டும் , தமிழில் டப்பிங்கை செய்தான் , பாலா .

‘அதெல்லாம் எதுவும் இல்லிங்க சாமி. அவரு ஆளு திடகாத்திரமா இருப்பாரு .’

‘அவருக்கு கரிகாலன்னு யாரும் பசங்க இருக்காங்களா ?’

‘இல்லிங்க சாமி . அவுக பையன் பேரு ஏதோ விடாரன்னு சொன்னதா ஞாபகம்’


சரி, இவனுக்கு சரியாய்த்தெரியவில்லை. நாம் தஞ்சாவூர் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று சந்துரு மனதினுள் நினைத்தான் .

ஆற்றின் கரையை ஊர்ந்து அடைந்த பின் , இவர்களிருவரையும் பார்த்து, ஒரு வித கேவல சிரிப்பினை வழங்கினான் , அத்தோணிக்காரன். மடியில் சொருகி வைத்திருந்த பர்சை திறந்து , அதில் உள்ள 500 ரூபாய்த்தாளை நீட்டினான்  சந்துரு.

‘இது என்ன சாமி ?’

பணத்தைக்கூட தெரியாமல் இருக்கிறான். கிறுக்குபயல் என்ற எண்ணம் சந்துருவுக்குள் நினைவிற்கு வந்ததும் , சிரிய புண்சிரிப்பு அவன் முகத்தில் வந்தது. சந்துரு , அவனுக்கு பதில் கூறுவதற்குள், அவன் அதை வாங்கிக்கொண்டு ‘நன்றி’ தெரிவித்துக்கொண்டு, வேகமாக சென்றான்.

‘டேய்! ஏன்டா அவனுக்கு 500 ரூபாய் கொடுக்கற ? 100 கொடுத்தா போதாதா?’

பாலாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் , நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சந்துரு. அப்போது, அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து ஓலைச்சுவடி ஒன்று கிழே விழுந்தது .அதை எடுத்துப்பார்த்தபின் தான் அவர்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது.அந்த தோணிக்காரனின் எதார்த்த பேச்சும், செய்கையும், அவர்களுக்கு 20-ம் நூற்றாண்டை நினைவு படுத்திய காரணத்தால் தான்  ஒன்றுக்கும் உதவாத காகிதத்தை அவன் எடுத்து கொடுத்துள்ளான்.இதில் கிறுக்குப்பயல் என்று அவனை நினைத்தது , உரைத்தது. இதுகூட பரவாயில்லை, பாலா ஒரு படி மேலே சென்று பேசியதை நினைத்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. பாலா , அசடு வழிந்தவாறே, அங்கிருந்து நகர்ந்தான்.

காஞ்சிபுரம் , சாரி , கச்சிப்பேடு நகரம் அவர்களை வரவேற்றது. உள்ளே செல்ல செல்ல , சூரியனும்  பாதாளத்தை நோக்கி உள்ளேச் சென்றுகொண்டிருந்தான் .

பயணம் @ டைம்மெஷின் -4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
உங்கள் விருப்பம்

6 comments:

 1. super thodarungal, thodarkiren sir! nallaa ezuthuringa.

  ReplyDelete
 2. சிறந்த திறனாய்வுப் பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி அண்ணா!!!

   Delete
 3. மேகனேஷ், இது முழுக்க கற்பனைக் கதையா? இல்லை வரலாற்று உண்மைகளோடு கலந்த கற்பனையா? அருமையாக போகிறது.முந்தைய பகுதிகளையையும் சீக்கிரம் படித்து விடுகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா !!! முந்தைய இரண்டு அத்தியாயங்களும் முழுக்க முழுக்க கற்பனை ணா!! இந்த அத்தியாயம்ல இருந்து , வரலாற்று உண்மைகள மிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.

   Delete