Saturday, 30 August 2014

பயணம் @ டைம் மெஷின் - 5

பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம் மெஷின் - 4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
அத்தியாயம் -3

கிமு 2-ம் நூற்றாண்டுபகுதி -3

கலகமும் பயணமும்
கல் தோன்றிய பின்பே , மண் தோன்றும் என்பது நில இயல்பு. நிலங்களுல் குறிஞ்சிநிலமே முதலில் தோன்றிய நிலமாதலால் ,மக்கள் தங்கள் வாழ்க்கையை முதலில் ஆரம்பித்த இடமும் அதுவே . மக்களின் உடலை வளர்த்து  , உயிர்காக்கவல்ல உணவுப்பொருட்களை , அம்மக்களின் உழைப்பை எதிர்நோக்காமல் தரவல்ல ஒரே இடம் குறிஞ்சிநிலமாகும். காயும், கனியும் ,கிழங்கும் , மக்கள் விரும்பி உண்ணும் ‘மா’வினங்கள் என அனைத்தும் வெகு எளிதாக கிடைத்ததால் ‘நாளைத் தேவை’ என்ற சேமித்துண்ணும் தனியுடைமை பொருள் நிலை , அம்மக்களுக்கு இல்லை. ஆனால் , அந்நிலை அம்மக்களுக்கு நீடிக்கவில்லை. வருடங்கள் உருண்டோட , மக்கள் தொகை பெருகிற்று , ‘மா’க்கள் தொகை குறுகிற்று .  உண்ண ஆட்கள் அதிகமானதால் , உணவுப்பற்றாக்குறையும் அதிகரிக்க ஆரம்பித்தது.


இந்நிலையில்தான் மக்கள் , மலைநாட்டிற்கும் , காடு நாட்டிற்கும் இடைப்பட்ட பாலைக்கு பிழைக்கச்சென்றனர் . ஆனால் , பாலையோ வளமின்றி வாடிய இடம் என தெரிந்த மக்களுல் பலர்  அவ்விடத்தை விட்டு முல்லைநிலத்திற்கு புகுந்தனர் . அங்கு குறுங்காடுகளை அழித்து , புன்செய் பொருள்களை விழைவித்தனர் .ஆடு , மாடு , எருமை போன்ற நிரைகளை வளர்த்து , வாழ்ந்தனர். அதனால் குறிஞ்சி போன்ற பொதுவுடைமை நிலை மறந்து , தனக்கு மட்டும் என்ற தனியுடைமை நிலை உருவானது .


இந்நிலையில் , வாழவே வழியற்ற பாலையில் பரிதவித்த மக்கள் ,பழி பாவங்களை எண்ணாது , அப்பாலையை கடந்து செல்வாரை பாடையில் ஏற்றிவிட்டு , அவர்களின் உடைமைகளை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ‘ருசி கண்ட பூனை’ யான பாலைவாழ்மக்கள்  , நிரைகளுடன் வாழும் முல்லை நிலத்தில் அவ்வப்போது புகுந்து முல்லைவாழ்மக்களின் உடைமைகளை களவாடினர் . முல்லை நில ஆடு,மாடுகள் குறிஞ்சிநிலத்தின் மான் , வரையாடு போல் தானாக வளராமல் , அந்நிலத்தின் மக்களால் வளர்க்கப்பட்டதால் ,அம்மக்கள் பாலை நிலத்தவருடன் பெருஞ்சினம் கொண்டு , போராட முடிவெடுத்தனர் . அதுமட்டுமின்றி , முல்லைவாழ்மக்கள் தங்களின் பசு முதலிய நிரைகளை பாதுகாக்கவும்  , பாலைநிலத்தவரின் தொல்லைகளுக்கு எதிராக தங்களை வழிநடத்தவும் , தமக்கொரு தலைவனை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இதே பார்முலாவை பின்பற்றிய பாலை நிலத்தவரும் தமக்கென ஒரு தலைவனை உருவாக்கினர் . தலைவன் அரசனான் . உரிமைப்போராட்டம் , போர் ஆனது . இவ்வாறு காலம் காலமாக , போர்புரிந்து காத்து வரும் அம்முல்லை நிலகுடிகாவலனான , ஆத்திமலர் அணிந்த சோழமாமன்னனின் வீரர்கள் , எதிர்வரும் காட்டுமிராண்டிகளி்ன் குருட்டுப்’போரை’ வரவேற்க தயராக இருந்தனர். 


 அரேபியக்குதிரைகளையே அடக்கி ஓட்டும் குதிரைப்படை வீரர்களோ , எதிர்வரும் காட்டுமிராண்டி கும்பலை ஒழித்துக்கட்டிவிடும் முனைப்புடன் , வாள்களை கையில் கொண்டு பரபரத்துக்கொண்டிருந்தனர் .அம்மதிலின் உச்சத்தில் , இருபுறமும் நின்றிருந்த வில் பயின்ற வீரர்களோ , தங்களின் வில்களில் அம்புகளைப்பொருத்தி ,அதை எதிரியின் நெஞ்சில் இறக்க ,தயாராகியிருந்தனர் .காலாட்படை வீரர்களோ, தங்களின் இரும்புக்கேடையங்களை மார்பு வரை மறைத்து ,கையில் கூரிய வேல்களை கொண்டு , எதிரிகளின் நெஞ்சிற்கு நேராக வரவேற்பளிக்க காத்திருந்தனர் . எப்படியும் முந்நூறு சொச்சம் வீரர்கள் , வீரமரணம் அடைந்தாலும் பரவாயில்லை என்று போர்புரிய ஆவலுடன் காத்திருந்தனர். பிணந்தின்னி கழுகுகள் , வலம் வர ஆரம்பித்தன . இன்று அவைகளுக்கு சரியான வேட்டை தான்


அக்குதிரையில் முதலில் சென்ற வீரன் , சில வீரர்களை அழைத்துவந்தான் .அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்த வீரன் , வேறு யாருமில்லை. பாலாவையும் , சந்துருவையும் வழிமறித்துக்கேட்டனே ,அவனேதான் இப்போர்வீரர்களை வழிநடத்திக்கொண்டிருந்தான் . எதிரிகள் கையில் , கட்டை , கடப்பாறை , கவசம் என , ஆதிகாலத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த அத்துனை பொருட்களையும் வைத்திருந்தனர் .அக்கூட்டத்தை தலைமையேற்று நடத்தி வந்தவன் ஏதோ கத்த , அனைவரும் சோழவீரர்களை நோக்கி ஓடி வந்தனர் .

‘தாக்குங்கள்’ என்ற முதன்மை காவலனின் குரல் கேட்டதும் , அம்புகளை வரிசையாகவும் சரமாரியாகவும் , மதிலிலிருந்து வான்நோக்கி எய்தனர் வில் வீரர்கள் .அடுத்து 3 நொடிகளில் , அவ்வம்புகள் எதிரிகளின் தலையையும் , கண்ணையும் கிழித்துக்கொண்டு தாக்கியபடியே கீழிறங்கியது . இருநூறுக்கும் மேற்பட்ட அக்காட்டுவாசிகளில் , பத்து சதவீதம் பேர் , வில்லுக்கு இறையாயினர். இதற்குமேலும் அம்புகளை பயன்படுத்தினால் , வாள்களும் , வேல்களும் கோவம் கொண்டு துருப்பிடித்து விடும் என்ற காரணத்தால் , காலாட்படை வீரர்கள் , தங்கள் தாயின் தாய்ப்பாலின் சக்தியை காட்டுவதற்காக , எதிரிகளை நோக்கி ஓடினர்  ; அவ்வணிக இளைஞனும் தான் . காலாட்படை வீரர்கள் , எதிரிகளின் கவச நெஞ்சில் தங்களின் கூரிய வேல்களால் இறக்கிய போது ஏற்பட்ட ‘சதக் சதக் சதக்’ என்ற சத்தத்தில் , கானகத்தில் குடியிருந்த அத்தனை பறவைகளும் தங்களின் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்கிருந்து பறந்தன . வாள்வீச்சில் புகழ்பெற்றவீரர்களின் வாள்சுழற்சியினால் , அக்காட்டுமிராண்டிக்கள் உயிரை விட்டுக்கொண்டிருந்தனர் .அந்த இடமே புழுதிக்காடாகவும் , அங்கு புதிதாக உதித்த ஆற்றின் நிறம் குருதி நிறமாகவும் மாறியது .ஒருமணிநேரத்திற்குபின் போர் முடிந்தது . அங்கு இறந்து கிடந்த உடல்களை ஓரிடத்தில் அடுக்கினர் .அதுவே , மதில்சுவரைக்காட்டிலும் , பெரியதாக இருந்தது. வணிகனுக்கு , கையில் சிற்சில காயங்களுடன் பலரை கொண்றெடுத்த வாளுடன் திரும்பி வந்தான் . அங்கே ஒரு சோழவீரன் , புலம்பிக்கொண்டிருந்தான் .

ஐயகோ ! என் முதுகில் காயம் பட்டுவிட்டதே ! இது இழிகுடிப்பிறவிகளின் போர்முறையல்லவா ! என்னை கொன்றுவிடுங்கள் . நான் வாழத்தகுதியற்றவன்

வழிநடத்திய வீரன் அவனிடம் , ‘இது போர் அன்று .இது ஒரு கலகம்’ என்று பலவாறாக கூறி அவனை சமாதானப்படுத்தினான்.

வணிகன் , தன் வாகணத்தின் அருகில் வந்தான் .சில நிமிடங்களுக்கு முன் , வேகவதி ஆற்றின்கண் செல்லும் ஓடையில் கழுவிய முகத்தில் , நீர் மெல்ல வடிந்து கொண்டிருந்தது .பாலாவையும் , சந்துருவையும் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தபடி ,

நாம் , இவ்வழியில் செல்ல இயலாது. எனவே மாற்றுவழியில் சென்று பின் ,சாலையின் ஊடே பயணிக்கலாம்

ம் என்று தலையை ஆட்டிவிட்டு இருவரும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . திடீரென 200, 300 பேர் வராங்க. சண்ட போடுராங்க. ஒருமணிநேரத்துல செத்துபோயிடறாங்க.அப்பப்பா , இந்த ஆளு என்னடானா , அப்பாவி மாதிரி இருந்துகிட்டு , அத்தன பேத்த அசால்டா போட்டுத்தள்ளிட்டானே ! நம்ம காலத்துல , துப்பாக்கி , பீரங்கி , நியூக்ளியர விட, ரொம்ப கொடூரமா இல்ல இருக்கு. துப்பாக்கில சுட்டா உடனே மரணம் , சேதாரமும் கிடையாது. ஆனா, இவங்க , தலையைவே வெட்டியெடுத்துட்டானுங்க ! உண்மையாலும் இவனுங்கதா காட்டுமிராண்டிகளோ ? என்று பலவாறாக மனதினுள் எண்ணத்துவங்கினர். அவர்களுல் இருந்த பல எண்ணங்கள் மாறின . இதுவரை , யாரோ ஒருவன் என்ற ரீதியில் இருந்த , அவணிகன் , இப்போது பாலாவுக்கும் , சந்துருவுக்கும் பயம்கொடுக்கும் மனிதனான்.

என்னங்க சந்து ? எதுவும் பேசமாட்டோம் என்ற முடிவெடுத்துவிட்டீர்களா ?’

இல்லைங்க ! அப்படியெல்லாம் இல்லை

இல்லை ,நம் பயணத்தை ஆரம்பித்து தோராயமாக நண்பகலை நெருங்கிவிட்டோம் . பசிக்கவில்லையா உங்களுக்கு ?

இருவரும் கோரசாக ‘இல்லைங்க’.

சரி .பசித்தால் கூறுங்கள் .அமர்ந்நு அனைவரும் உண்ணலாம்

நீங்க சாப்டலாமே ?’ என்ற சந்துருவின் கேள்விகளுக்கு , சிறுபுன்சிரிப்புடன் ,

இல்லை சந்து . என் சகோதரர்களை தனியே விட்டு நான் மட்டும் எப்படி புசிப்பது ? அது மா’க்கள் கூட செய்யாத செயல் அல்லவா ?

அப்புறம் ஏங்க அத்தன பேர அப்படி கொன்னிங்க ?’

சந்துரு, அவசரப்பட்டு தன் மனதில் இருந்த கேள்விகளை கேட்டுவிட்டான் .அதன்பின் உணர்ந்ததும் அவனுக்கு கிட்டத்தட்ட எமன் உருவத்தில் தெரிந்தான் அவ்விளைஞன் . ஆனால் , இக்கேள்விக்கும் வழக்கம்போலவே சிரித்துக்கொண்டே பதிலளித்தான் , அவ்விளைஞன் .

அது போர்நீதி. போரில் இது சாதாரணம் .எதிர்த்து வருபவனின் தலையை கொய்யவேண்டும் .இல்லையெனில் வீரமரணம் அடைய வேண்டும் .நம் நாடும் தாயும் ஒன்றல்லவா ? தாய் ஈன்றெடுக்கிறாள் . ஆனால் , ஈன்றெடுக்கும் தாய்க்கும் , நமக்கும் வாழ்வளிப்பது , தாய்நாடுதானே ? . அவ்வாறு உள்ள நாட்டிற்கு , ஏதேனும் தீங்கு நேரிட்டால் , அதைக்கண்டு ஒளிந்து கொண்டிருப்பவன் ஒர் ஆண்மகனே இல்லை . சாதாரண குடிமகனாக என் கடமையை , என் நாட்டிற்கு செய்தேன் .அவ்வளவே ! அதற்காக , நீங்கள் இருவரும் என்னை கொலையாளானாகப் பாவித்து பார்ப்பது , என் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போலுள்ளது . அதே , எதிராளிகள் இன்முகத்துடன் என்னை அணுகி , என் சொத்தை  ,யாசகம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன் . ஆனால் , கையல் ஆயுதங்களுடனும் , முகத்தில் வெறியுடனும் என் நாட்டை அபகரிக்க பார்த்ததால் , அவர்களுக்கு சிவலோகப்பதவி அளித்தேன்

அனுடைய பேச்சில் , பாலாவும் சந்துருவும் தெளிவு பெற்றார்கள் .போரில் நடக்கும் கொலைகள் , பாவங்கள் ஆகாது என உணர்ந்தனர். மேலும் அவ்விளைஞனின் வார்த்தைகள் அவர்களை மனமிளக செய்தது . அவ்வளவு நேரம், அவர்களுக்கு பேயாக கண்களுக்கு தெரிந்த அவ்விளைஞன் , ஒருநொடியில் பெருமைக்குரியவனாய் தெரிந்தான் .

சாரிங்க !! நீங்க ஃபைட் பண்ணத பாத்ததும் தப்பா நினச்சிட்டோம் .ப்ளீஸ் ஃபர்கிவ் மீ ’ என்ற இருவரும் , தம் தமிங்கிலிஸை எண்ணி வெட்கமுற்று மீண்டும் , அவர்களுக்கு தெரிந்த தமிழில் வருத்தமுற்று கூறினார்கள் .

பரவாயில்லை .கோவம் கடந்ததா ? உணவருந்தலாமா?

இவ்வார்த்தையை கேட்கும்முன்பில்லாத பசியை , இவ்வார்த்தைக்குப்பின் உணர்ந்தார்கள் . உடனே , ஒரு ஓடையின் அருகினில் பயணித்து , அங்கு மதிய உணவாய் கேப்பைக்கலியை உண்டனர். தங்களை சுமந்து வந்த எருதுகளை , வண்டியிலிருந்து கழட்டிவிட்டு , கயிற்றால் கட்டி , வனத்தில் மேயவிட்டிருந்தனர். பின் மதிய நேர அயர்ச்சியின் காரணமாக , மெல்ல கண்மூடி உறங்கினர்.

இரண்டு மணிநேரத்திற்குப்பின் , அனைவரும் எழுந்து , கைகால் அலம்பி , மாடுகளை வண்டியில் பூட்டி , தங்களின் பயணத்தை தொடங்கினர் . இன்றைய காலை நேர பிரச்சினையில் , இவர்கள் கடந்த தூரத்தைப்பற்றியோ , இடத்தைப்பற்றியோ கூற நேரமில்லாமல் போய்விட்டது.  காலையில் கலகம் முடிந்த போது சூரியன் உதித்து விட்டிருந்தான். அதுவுமின்றி , கொன்று குவித்த உடல்கள் அனைத்தும் , இவர்கள் செல்ல வேண்டிய சாலையிலேயே இருந்ததது. அடக்கம் செய்ய நேரமாகும் என்பதால் , இவர்கள் காட்டின் வழி பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில் , வாணிபம் மிகச்சிறப்புற்றிருந்ததால் ,பற்பல சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு காட்டுவழிச்சாலையை தேர்ந்தெடுத்து பயணித்துக்கொண்டிருந்தனர். வணிகன் மாட்டுவண்டியை செலுத்தும்வேலையை செய்ய , அவனின்பின் கிட்டத்தட்ட பத்து மூட்டைகளில் , வாணிப பொருட்களும் , அதன்மேல் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். இரு எருதுகளும் , தங்களின் திடங்கொண்ட திமிலுடன் , திமிராக இவர்களை சுமந்துகொண்டு பயணித்தது .இரண்டு இஞ்ச் அளவிலான , தேக்கு மற்றும் வேப்பமர கட்டைகள்  , அவர்களின் எடையைத்தாங்கி கொண்டிருந்தன .

ஏங்கணா ! தஞ்சாவூர்ப்போக இன்னும் எவ்ளோ நேரமாகும்’ –பாலா .

இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்

ரெண்டு நாளா ?

என்று வாயைப்பிளந்தான் பாலா .

ஆமா ! காலைல சண்ட போட்டவங்கலாம் எந்த ஊருக்காரங்க ?’ – சந்துரு.

அவர்கள் யார் ? எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது . இதே போல் கூட்டமாக சேர்ந்து தாக்குவார்கள் . எனக்கென்னவோ , உங்களிடம் முன்பு கூறனேனே ! அந்த கோசனின் படை வீரர்கள்தான் என்று தோனுகிறது . அவர்கள் இங்கேயே வனத்தில் தங்கி , இவ்வேலையை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .பாண்டிய தேசத்திலும் இதே போன்றதொரு நிகழ்ச்சியை கண்டிருக்கிறேன் . ’

ஆமா ! அண்ணே . உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா ?

‘புரியவில்லை பாலா

உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா ?

ஆகிவிட்டது பாலா  ! மனைவியும் பிள்ளையும்  சீத்தலையில்தான் இருக்கிறார்கள்

ஓ.கே ணா ! ஓ. சாரி . சரிங்ணா


அவர்களின் பயணம் மெல்ல தொடர்ந்தது. சில்லோடைகளையும் , பசுமைப்பூக்களையும் , வானொடிந்த மரங்களையும் , ஆங்காகங்கே வரும் ஆயர் என்றழைக்கப்படும் மக்கள் வாழும் சில கிராமங்களையும் கடந்து பயணித்தனர் . இரவு நெருங்கியது. காட்டின் நடுவே இருந்த ஒரு குக்கிராமத்தில்  , அன்றைய இரவை கழிக்க முடிவு செய்தனர் . வழிப்போக்கர்களின் மண்டபத்திற்கு சென்று பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு , பின் அவ்வூரில் , ஹோட்டல் எங்குள்ளது எனத்தேடியபடியே விசாரித்தார்கள் . ஒரு பெண்மணி , பொருளுக்காக உணவு பரிமாறுவாள் என்பதனை அறிந்து அவள் வீட்டிற்கு சென்றனர் . கானகத்தின் நடுவே அவள் வீடு இருந்தது. வீட்டின்முன் நின்று

அம்மா !! பசியில் வாடி வந்துள்ளோம் . உணவு வேண்டும் தாயே !’ என்ற வணிகனின் குரலுக்கு , எவ்வித பதில்குரலும் வரவில்லை . மாறாக காட்டின் நடுவில் இருந்து ஒரு பெண்மணியும் , கூடவே கோடாரியுடன் , ஆலமரம் போன்ற தேகத்துடன் ஒருவனும் வந்தான் .

தாயே ! உண்ண வந்துள்ளோம் .’

இருங்க சாமி . மாமா ! நீங்க போய் அந்த கட்டைய வெட்டிட்டு வந்துடுங்க . சாமி .நீங்களாம் கை கழுவிட்டு வந்துடுங்க’

சரி தாயே !
என்ற வணிகன் , பாலாவையும் சந்துருவையும் அழைத்து , அருகில் இருக்கும் பானையில் , தங்களின் கரம் ,சிரமெல்லாம் சிரத்தையுடன் கழுவினர் .பின் மெல்ல , வாசலின் அருகில் வந்து நின்றனர் .

தாயே ! உள்ளே வரலாமா ?

வாங்க சாமி . எல்லாம் தயார் பன்னிட்டேனுங்க . மூவருக்குத்தான் சோறா ?

ஆமாம் தாயே  ! அது மட்டுமின்றி நாங்கள் அனைவரும் வெளியூர் பிரயாணத்தில் இருக்கிறோம் .நாளை காலை மற்றும்  மதியவேளை உணவையும் தயார் செய்து தந்தீர்கள் என்றால் மிகவும் மகிச்சியுடன் செல்வோம்


பன்னிடறேனுங்க சாமி’
என்றவாறே வீட்டினுள் நுழைந்தார்கள் .குடிசை வீடுதான் . ஆனால் , சாணிகொண்டு மொசைக் போல் மெழுகப்பட்டிருந்தது .தேடினாலும் குப்பை கிடைக்கா வண்ணம் சுத்தமாக இருந்தது . கொல்லைப்புற கதவு ஒன்று திறந்திருந்தது .

அவள் கூறி விட்டு , வாழை இலையை போட்டு விருந்து பரிமாற ஆரம்பித்தாள் . அவர்கள் உணவருந்தி முடியும்வரை அவர்கள் அருகிலே இருந்து பரிமாறினாள் .பாலாவுக்கும் சந்துருவுக்கும் , இரண்டு நாட்களாக உண்ணும் உணவினில் , ருசி வித்தியாசமாக இருப்பதை அறிந்துள்ளாகள் ;அதில் இருக்கும் சத்துகளையும் தான் .உணவருந்தியதும் , ஒரு கயிற்றுக்கட்டிலை எடுத்து வெளியே போட்டு அவர்கள் மூவரையும் அமரவைத்துவிட்டு , வீட்டினுள் முரத்தினைக்கொண்டு அரிசியை பதம்பார்த்துக்கொண்டிருந்தாள் .தூரத்தில் , கோடாரியால் வெட்டும் சத்தம் கேட்டது.அவளின் கணவனாகத்தான் இருக்கவேண்டும்ம.இவள் கருப்பாக இருந்தாலும் முகப்பொலிவிலோ , உடல்வாகிலோ , பேரழகியைப்போலதான் இருந்தாள் .ஓ மை காட் அடுத்தவன் பொண்டாட்டிய வர்ணிக்ககூடாது .அதுனால இது போதும் .

இவர்கள் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ,திடீரென அப்பெண் திட்டும் சத்தம் காதில் விழுந்தது .

எத்தன தடவை சொல்லிருக்கேன் . இங்கலாம் வரக்கூடாதுனு .அறிவில்ல ‘என்றபடியே  ‘சொத் சொத்’ என்ற அடிவிழும் சத்தமும் கேட்டது . இவர்கள் வெளியே இருந்து உள்ளே சென்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கச்சென்றார்கள் .திடீரென வீட்டினுள் இருந்து , ஒரு கொழுத்த புலி வெளியே ஓடியது . அதைத்தொடர்ந்து அப்பெண்ணும் , அப்புலியை துரத்திக்கொண்டு வந்தாள் .பாலாவுக்கும் , சந்துருவுக்கும் டர்ராகியது .கண்ணெதிரே , கொழு கொழு என்று ஓடிய புலியை பார்த்ததும் .அவளோ , கையில் முரத்தை எடுத்துக்கொண்டு விளாசியபடியே துரத்தினாள் .
சிறிதுநேரத்திற்குபின் , அவள் மீண்டும் வந்து இவர்களைப்பார்த்து சிறிய சிரிப்பை உதிர்த்துவிட்டு வீட்டினுள் சென்றாள் . ஒரு மணிநேரத்திற்கு பின் , அவள் சமையல் வேலைகளை முடித்துவிட்டி , அவர்களுக்கு , பார்ணல்களை செய்து கொடுத்தாள் .அந்நேரத்தில் , அவளின் கணவனும் வந்தான் . மூவரும் அவர்களிடம் இருந்து விடைபெற்று மண்டபத்தை அடைந்தார்கள் . மண்டபத்தில் அமர்ந்த அவர்கள் , சில கதைகளை பேசியவாறே கண்ணுறங்க ஆரம்பித்தார்கள் .

ஓ! இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் , அந்த காட்டுவாசிகளின் தோற்றமுடைய கூட்டத்தை பற்றி சொல்ல மறந்துவிட்டேன் .அவர்கள் தான் பின்னாளில் , சிறுகசிறுக சேர்ந்து ,மூன்று மாமன்னர்களையும் ஏமாற்றி வீழ்த்தி , சுடர்மிகு தமிழகத்தை , இருட்டிற்கு வார்த்த களப்பிரர்கள் .


இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்துங்கள்


(நண்பர்களே ! இந்த பயணம் தொடர்கதையை முடிந்தவரை வேகமாகவும் சிறப்பாகவும் எழுதலாம் என்றுதான் எழுதிவருகிறேன் . உங்களின் கருத்துகள் எனக்கு மிகவும் அவசியமாகும் .உங்களின் கருத்துகளை மறக்காமல் இட்டு செல்லுங்கள் .மாதம் இரண்டு பதிவுகளாக வெளியிடலாம் என்றுதான் நினைத்து எழுத தொடங்கினேன். நண்பர்கள் சிலரால் , மாதம் மூன்று பதிவுகளை இடலாம் என்று முடிவு செய்துள்ளேன் .தொடர்ந்து ஆதரவளித்துவரும் தோழர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)


உங்கள் விருப்பம்

8 comments:

 1. சிறந்த பகிர்வு

  தொடருங்கள்

  ReplyDelete
 2. nallaa poykittu irukku thodar. ninga varathil oru pakuthi veli ittal thodarai thodarnthu rasiththu thodara mudiyum.

  maathathil 1 allathu 2 mattum veli ittal padippavarkalukku koncham sramamaaka irukkum sir.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே !! மிக்க நன்றி அண்ணே !! நான் முடிந்த வரை ஒவ்வொரு வெள்ளியும் , தொடர்கதைய வெளியிட முயற்சி செய்கிறேன் !!!

   Delete
 3. yenna thala unga yelutha padikka arvama irukku daily yeluthunga

  ReplyDelete
  Replies
  1. அண்ணே !! எனக்கும் ஆசைதான் . ஆனா, மண்டைல இருக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குது. அதுக்கா தோனும்போதுதான் எழுத முடியுது. தப்பா நினைச்சிக்காதிங்கனே !!!

   Delete
 4. மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கதை. இன்னும் இது போன்ற நல்ல கதைகளை உங்களிடம் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய எதிர்பார்பை , முடிந்தவரை பூர்த்தி செய்ய முயல்கிறேன் !! :-)

   Delete