பாஸ்போர்ட்-சிறுகதை



‘நாளைக்கு எத்தனை மணிக்குடா அப்பாயிண்ட்மென்ட்’

‘காலைல 9.15 க்கு ணா’

எல்லா டாகுமென்ட்ஸ்சும் எடுத்து வச்சிட்டியா ?

‘வச்சிட்டேன் ணா ’

அண்ணனின் கேள்விக்கு விடையளித்தவாறே ,தன் பிறப்பு முதல் படிப்பு வரை அத்தனை சான்றிதழ்களையும் தயார் செய்து கொண்டிருந்தான் , ருபேஷ் .

டேய் ருபேசு , நாம காலைல 5 மணிக்குலாம் சேலம் பஸ் ஸ்டான்ட்ல இருந்தா தான் , கோயமுத்தூருக்கு, கரெக்டா போய்  சேர முடியும்

‘சரி ணா ’

‘என்னடா ! எல்லாம் ரெடி பண்ணிட்டிங்கலா ?’

அம்மாவின் குரலை கேட்டு இருவரும் திரும்பினர் .

‘எடுத்து வச்சிட்டேன் மா’ என்றான் ரூபேஸ் , அலட்சியமாக .

‘சரி, சரி நானும் அப்பாவும் உங்க பெரியப்பா பையன் கல்யாணத்துக்கு கிளம்பறோம் . காலைல வர 8 மணி ஆகிடும் .சாப்பாடு செஞ்சு வச்சிட்டே. ஒழுங்கா சாப்டு கிளம்புங்க . நீங்க கிளம்பனதும் எனக்கு போன் பன்னுங்க ’ என்றபடியே கிளம்பினாள் அவர்களின் தாய் .

‘ சரிம்மா ’

‘ச்சே ! இந்த சனியம்புடிச்ச பாஸ் போர்ட்  இன்டர்வியூ நாளைக்கா வைக்கனும் ? ஏண்ணா , கல்யாணத்துல செம செமயா சாப்பாடு போடுவாங்கள்ள?’

அடப்பாவி ! சாப்பாடுலாம் அப்புறம் . ஹம் . நம்ம வேலு மாமா பொண்ணுங்கலாம் வருவாளுங்க . எப்படியாச்சும் பேசி  பெரியவள கரெக்ட் பண்ணிருப்பேன் . எல்லாம் உன்னால தாண்டா , ஏன்டா இன்டர்வியூ டேட்ட மாத்தி தொலைச்சிருக்கலாம்ல ?

‘இல்ல ணா . அந்த ப்ரோக்கர் 2 நாளா போன சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எங்கேயோ போய் தொலஞ்சிட்டான் . நாதாரி’

‘சரி விடு . எல்லாம் ரெடி பண்ணிட்டியா ?’

‘பண்ணிட்டேன் ’

சரி . நீ வீட்லயே இரு. நா போய் ஊதுவத்தியும் வாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வந்தறேன்

‘ம்’ என்றவாறு  தன் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்தான் , அந்த 22 வயது இன்ஜினியரிங் முடித்த முன்னாள் மாணவன். அவனுக்கு நன்றாக தெரியும் , வாட்டர் என்றால் குவாட்டர் , பத்தி என்றால் சிகரெட் . அம்மா, அப்பா வீட்டில் இல்லையேல் ரமேசின் கச்சேரி கலை கட்டி விடும் . ஆனால் , ரூபேஷ் அதை பற்றி அலட்டிக்கொள்ளவும் மாட்டான் ; அம்மாவிடம் போட்டுக்கொடுக்கவும் மாட்டான் .

வாங்கிய பாட்டிலையும் ,சிகரெட் பாக்கெட்டையும் பத்திரமாக பாக்கெட்டில் இருந்து, கீழே இறக்கிவைத்துவிட்டு பெருமூச்சு விட்ட அண்ணனையே பார்த்துகொண்டிருந்தான்’

‘ அண்ணா சீக்கரமா முடிச்சுட்டு , எல்லாத்தையும் தூக்கிப்போட்ரு. அப்படியே சாப்ட்டு தூங்க வா . நா அலாரம் வச்சிட்றேன்’

‘ சரி ருபேசு. குட் நைட் ’


ஒரு புத்துப்பட டீசர் ட்ரைலரின் ரிங்டோன் , சாம்சங் ஆன்ட்ராய்டு போனின் ரிங்கர் உதவியால் கதறிக்கொண்டிருந்தது. மெல்ல எழுந்த ருபேஷ் , அதனை அணைத்துவிட்டு , ரமேசை எழுப்பினான்  . ரமேஷ் , இரவின் ஓல்ட் சீக்ரெட்டின் போதையிலிருந்து விடுபட முயற்சித்து கொண்டே எழுந்தான் .

‘என்னடா ?

‘டைம் ஆயிடுச்சு ணா . நா குளிச்சிட்டு வரேன் . நீயும் எழுந்து ப்ரஷ் பண்ணிடு ’

சொல்லிவிட்டு குளிக்க சென்றான் , ருபேஷ் . அந்நேரத்தில் மீண்டும் ரிங்டோன் அடிக்க , அதன் டிஸ்ப்ளே தரிசனம் பார்க்கமாலே அணைத்துவிட்டு , போர்வையை அணைத்து உறங்கினான், ரமேஷ் . குளித்துவிட்டு வந்த ருபேஷ் , அண்ணனை எழுப்பி , குளிக்க செல்ல நிர்பந்தித்தான். இரவில் , அயர்ன் செய்து மடிக்கப்பட்ட துணியை உடுத்திக்கொண்டு செல்லை எடுத்தவனுக்கு , பேரதிர்ச்சி. மணி 6 எனக்காட்டியது .அண்ணனின் செல்போனையும் எடுத்துப்பார்த்தால் அதிலும் 6 . மேலும் 4 மிஸ்டுகால்களும் அம்மாவின் நம்பரிலிருந்து வந்திருந்தது.  குளித்து முடித்து, ஏறத்தாழ அரைபோதையிலிருந்து உற்சாகத்துடன் வந்த ரமேசிடம் , அதிர்ச்சியாக

‘அண்ணா ! மணி 6 ஆச்சு ’

‘என்னடா சொல்ற ? 6 மணியா ?

‘ஆமான்ணா ’

‘எத்தன மணிக்கு  அலாரம் வச்ச ?’

‘ 3 மணிக்கு ’

‘ அப்புறம் ஏன்டா எழுந்திரிக்கல ’

‘ நைட்டு தூங்கறதுக்கு லேட் ஆச்சு . அதான் அலாரம பாக்கல’

‘டேய் . அப்படி தூங்காம என்னடா பண்ண ?’

‘படம் பாத்துட்டு இருந்தேண்ணா’

‘ அடப்பாவி . இப்ப என்னடா பன்றது ? அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாரு’

இருவரும் கொஞ்சம் பதற்றம் , நிறைய பயத்துடன் தங்களின் கற்பனைக்குதிரையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள் .

‘வேற வழியே இல்லடா . பேசாம நாம பைக்லயே கோயம்புத்தூர் போயிடலாம் . ’

‘அண்ணா . எப்படினா ?’



‘டேய் . என் பைக்ல ராமேஸ்வரமே போயிருக்கேன் . இது என்ன , சப்ப மேட்டரு. நீ சீக்கிரமா ரெடி ஆகு. அம்மா கேட்டா , வழக்கம்போல பைக்க ஸ்டாண்ட்ல போட்டு பஸ்ல போனதா சொல்லிடலாம்’

‘சரி ணா’

மின்னல் வேகத்தில் , கிளம்பி , வண்டியை எடுத்தார்கள் .டயரில் உள்ள காற்றின் அளவை , அதன்மீது ஏறிப்பார்த்து கணக்கிட்டு பின் செல்ல ஆரம்பித்தார்கள் .

‘டேய் . அம்மா கேட்டா , தப்பித்தவறி கூட சொல்லிடாத

‘ம்’

வண்டி வேகமாக செல்ல ஆரம்பித்தது . அரைமணிநேரப்பயணத்தின் பின்பு ஹைவேசை அடைந்ததும் ‘தானே’ புயலுக்கு போட்டி போடும் வேகத்தை எட்டியது . ரமேசின் கண்களில் இருந்து ,கண்ணீர்த்துளி சிதறியது .

‘அண்ணா , எத்தன மணிக்கு போய் சேருவோம் ?’

‘இதே ஸ்பீடுல போனா, இன்னும் 2 மணிநேரத்துல ரீச் ஆகிடுவோம் டா .கவலப்படாத . உனக்கு பாஸ்போர்ட் கண்டிப்பா வாங்கிடலாம்’

‘அண்ணா !  அவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டதான?’

‘எல்லாம் கன்பார்ம்டா . நீ பாஸ்போட் எடுத்ததும் விசா வாங்கிட்டு சிங்கப்பூர் கிளம்பறது தான் பாக்கி . அடுத்த மாசம் இந்நேரம்லாம் சிங்கப்பூர்ல இருப்ப . அப்படியே அவள பாத்தா, நா ரொம்ப மிஸ் பன்றேன்னு சொல்லுடா’

‘ம் . ஓ.கே’




ஒரு மணிநேர பயணம் கடந்தது. இன்னும் ஒரு மணிநேரம் தான் .வண்டி , திருப்பூரை நோக்கி விரைந்து சென்றது .



ஸ்க்ர்…. டம்ம்ம்ம் …… படார்ர்ர்ர் .. ’அய்யோ’

ரமேசும் ருபேசும் கீழே இருந்து மெல்ல எழுந்தார்கள் . ஒரு நிமிடம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டது . மெல்ல யோசித்தபின் தான் இருவருக்கும் விளங்கிற்று . ரமேசின் வலதுபுறத்திலிருந்து ஹைவேசுடன் இணையும் ,ஒரு இணைப்புச்சாலை வந்ததையும் , அதில் ஒரு தள்ளாத கிழவர் வண்டி ஓட்டிக்கொண்டு வருதையும் இருவரும் கவனிக்கவில்லை .

அதற்குள் அப்பக்கமாக வந்த ஓரிரு ஓட்டுனர்களும் , அருகில் இருந்த 4 கிராமத்து ஆட்களும் அக்கிழவரைச்சூழ்ந்துகொண்டு நின்றனர் .ரமேஷ் வேகமாக எழுந்து பார்த்தான் . நல்லவேளையாக இருவருக்கும் அடிபடவில்லை . வேகமாக வந்து கூட்டத்தினுள் புக முயன்றான். அங்கே கிழவர் , தன் சுண்டிய ரத்தத்தை ரோட்டில் இறைத்து, வாயைப்பிளந்தபடி கிடந்தார் . அருகில் இருப்பவர்கள் ‘இச்’ கொட்டிக்கொண்டிருந்தனர் .எல்லோரும் கிழவரைத்தான் கவனத்தில் வைத்திருந்தார்கள் . தங்களை இல்லை என்பதை நினைவில் கொண்டு , வேகவேகமாக அவ்விடத்தை விட்டு விலகினான் .ருபேசிற்கு தன் கையைக்கொண்டு தூக்கி , அவர்கள் வண்டியை நோக்கி விரைந்தனர் .நல்லவேளை , வண்டிக்கும் அவர்களைப்போலவே அடி படவில்லை . வேகமாகவண்டியை எடுத்து , யாரும் பார்ப்பதற்குள் யூடர்ன் அடித்து, இடத்தை காலி செய்து வீட்டினை நோக்கி பயணித்தார்கள் .


மணி ஒன்பதைத்தாண்டி சுழன்றது.அடுத்த 2 மணிநேரத்தில் வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தினார்கள் .அந்த கிழவன் இறந்துவிட்டான், அது உறுதி . ஆனால் யாரும் தனது வண்டி நம்பரை பார்த்திருக்க கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டியபடி , பைக்கை ஆராய்ந்தான் .ஒரு கீரலும் இல்லை . அவனால் நம்பமுடியவில்லை . எல்லாம் ஏழுமலையானின் கருணையாக தெரிந்தது. ருபேஷ் இன்னும் கலக்கத்தில் இருந்தான் .அவனை தைரியப்படுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் .அம்மா இன்னும் வரவில்லை .

‘என்னடா ருபேசு . அம்மா இன்னும் வரல ’

தெரிலயே ! போச்சு , அம்மா வந்தா என்ன சொல்ல ?’

நீ ஒன்னும் சொல்லாத ! நா பாத்துக்கறேன் . கேட்டா, நாம போன பஸ் ஆக்சிடென்ட் ஆச்சுனு சொல்லிக்கலாம் ’

எப்படியும் இந்த சப்பைக்கட்டு அவர்களிடம் எடுபடும்.நேரம் ஆகிக்கொண்டே சென்றது. இன்னும் அம்மாவை காணவில்லை. இன்னும் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் வீடுகளிலும் யாரும் வரவில்லை. நேரத்தின் காரமாக அவர்களுல் இருந்த பதற்றமும் பயமும் ஒருவாரே முடிவுக்கு வந்தது.

‘ருபேசு. அம்மா வர லேட்டாகும்போல இருக்கு. வா , நாம போய் பேப்பர் பாத்துட்டு வந்தடலாம் ’

அண்ணனின் வார்த்தைக்கு மறுபேச்சு இல்லாமல , டீக்கடையை நோக்கி ரமேசுடன் சென்றான் .வயதான பாட்டி மாத்திரமே கடையில் இருந்த டிவியில் சேனல் மாற்ற இயலாமல் , ஏதோ ஒரு செய்தி சேனலை விழுங்க விழுங்க பார்த்துக்கொண்டிருந்தாள். தினத்தந்தியை வரித்து , சினிமா செய்திகள் பக்கத்தை முதலில்  படிக்க ஆரம்பித்தான் ரமேஷ் .

‘ஏன்டா எவ்ளவு நேரம் பண்ணுவாங்க ? கல்யாணத்துக்குப்போன இப்படித்தானா ?’

‘அடப்போ ணா !! நானே பாஸ்போர்ட் போச்சேனு வருத்தத்துல இருக்கேன் ’

அந்நேரம் தொலைக்காட்சியில்

திருப்பூர் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் , சேலத்தை சார்ந்த அண்ணன்-தம்பி உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலி .



‘ டே ருபேசு !! யாருடா சொன்னா உனக்கு பாஸ்போர்ட் கிடைக்கலைனு , உன்கூட வந்ததால எனக்கும்  பாஸ்போர்ட் மட்டுமில்லாம விசாவும் சேத்தி கிடைச்சிடுச்சுடா ’  அதிர்ச்சியுடன் .

Comments

  1. க்ளைமாக்ஸ் திருப்பமாக பாஸ்போர்ட்டோடு சேர்த்து விசாவும் கிடைத்து விட்டது என்கிற முடிவு நன்று. உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. எல்லாம் சரிதான்.... லேபிள்ல நகைச்சுவைன்னு கொடுத்திருக்கியே... எங்க எங்கன்னு தேடி சலிச்சுப் போய்ட்டேன். அது அடுத்த கதைல வருமாய்யா...?

    ReplyDelete
  2. கதை கொண்டு போன விதம் நல்லா இருந்துச்சு.. ஆனா முழுக்க முழுக்க உரையாடலாவே போகுது.. வர்ணனைகள், எழுத்தாளரின் பார்வை என்று கதையை வளர்த்தால் வாசகர்கள் கதையுடன் எளிதில் ஒன்றிப் போக முடியும்..

    ReplyDelete
    Replies
    1. அண்ணா !! இந்த சிறுகதையவே நா எழுதி முடிச்சப்போ , 21 பக்கம் வந்துச்சினா . பாலகணேஷ் சாரோட அட்வைஸ்படி எடிட்டிங் லாம் பண்ணதால , இது சிறுகதையா மாறிடுச்சி. அடுத்த முயற்சில இத சரி பண்ணடறேன் ணா!

      Delete
  3. ஹஹஹா நல்ல முயற்சி தம்பி..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா!!!

      Delete
  4. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை