பயணம் @ டைம்மெஷின் - 7



திருவாரூரில் ஒரு நாள்

பயணம் @
 டைம் மெஷின்





அத்தியாயம் – 3





பகுதி – 5

7
கி.மு. 2-ம் நூற்றாண்டு

திருவாரூரில் ஒரு நாள்



நாங்க அரண்மனைக்கு போகனுங்க

சரி. நாளை காலை , நானும் புகார் துறைமுகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது . செல்லும் வழியில் உங்களை திருவாரூரில் விட்டுச்செல்கிறேன்’

என்ற வணிகனின் குரல், இருவருக்கும் ஒரு நிம்மதியைக்கொடுத்தது . நாளை அங்கிருந்து தஞ்சைக்கு சென்று , கல்லணை தோண்டுமிடத்துக்குச்செல்லவேண்டும் . அந்த பகுதியில் , பெட்ரோலுகுரிய மூலக்கூறு இருப்பது 21 –ம் நூற்றாண்டில் கண்டுபிடித்திருப்பது உண்மைதான் எனில் , இன்னும் ஒருவாரத்தில் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு சென்றுவிடலாம் . காலை விடிந்ததும் , காவிரியின் கால்வாயில் , குளித்துமுடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தார்கள் . அவ்வணிகனின் மனைவியிடமும் , அச்சிறு பாலகனிடமும் விடைபெற்றுக்கொண்டு மூவரும் கிளம்பினர் .

ஒரு மணிநேரத்திற்குள் , அவர்கள் திரவாரூரை அடைந்தார்கள் . தூரத்தில் இருந்து பார்க்கும்போது  , களிமண்ணாலும் , கருங்கல்லாலும் கட்டப்பட்ட மாளிகைகளும் , அதற்கு நடுநயமாக வீற்றிருக்கும் அரண்மணையுமாக அற்புத தோற்றத்தினை , இருவரின் கண்களுக்கும் வழங்கியது . அந்நகரை அடைய அடைய , புற்றீசலில் இருந்து வெளிவரும் சிற்றெறும்புகளாய் , மனிதர்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க , எருதுகளும் கழுதைகளும் பொதியை சுமந்தபடி இவர்களை கடக்க , இருபுறமும் , நாளங்காடிகள் விழித்திருக்க , ஆடவர்களில் பலர் , நெல்லுக்கு நீர் பாய்ச்சும் வேலையை தூரத்தில் இருந்த வயல்களில்  செய்துகொண்டிருந்தார்கள் . நகரின் ஒவ்வொரு வீதியும் , ஒவ்வொரு வாடையை இவர்கள் நாசித்துவாரத்திற்கு அளித்துக்கொண்டிருந்தன . ஒரு சில இடங்களில் , பச்சரிசியின் வாசமும் , பாலின் வாசமும் , தானியங்களின்  வாசமும் வீசிக்கொண்டிருந்தன . ஆங்காங்கே சிலர் , மரத்தால் உருவான கூண்டுகளில் , சிறுத்தைகளையும் , சிங்கங்களையும் அடைத்துக்கொண்டு எருதில் பூட்டிய வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர் . நகரின் நுழைவாயிலை அடையும்போதே கட்டணமாக அரசுக்கு , அவ்வணிகன் ஏற்கனவே இரு மூட்டை நெல்லை , அளித்துவிட்டிருந்தான் . நகர் முழுவதும் சீருடை அணிந்து காவலர்கள் வலம் வர , சில இடங்களில் , வணிகர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தனர் . ஆங்காங்கே சமணத்துறவிகளும் , பெளத்த பிட்சுக்களும் , இவர்களை கடந்து சென்றவண்ணம் இருந்தனர் . அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் , நாகரீகமான ஆடம்பர உடைகளை அணிந்திருந்தனர் . வீடுகளில் பெரும்பாலானவை , மாளிகைகள் போன்ற தோற்றமுடையவையாகவே காணப்பட்டது. சாலையில் , பல்லக்கில் சிலர் அரண்மனையை நோக்கி சென்றவண்ணம் இருக்க , இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை , இவர்கள் இருவரையும் அதிசயிக்க வைத்துக்கொண்டிருந்தது.


‘சரி , சகோதரர்களே. எனக்கு விடையளியுங்கள் . இங்கு உங்கள் வேலை முடிந்ததும் , எனது வீட்டிற்கு சென்று உண்டு உறங்குங்கள் . நான் ஒரு வாரத்தில் திரும்பிவருகிறேன்’

‘அண்ணா ! ஒரு சின்ன சந்தேகம் . எங்க கூட நீங்க எடுத்துட்டு வந்தது ,வெறும் 8 மூட்ட அரிசி . அத வச்சி எப்படி வியாபாரம் ?’

அவ்வணிகன் , தன் இடுப்பில் முடிந்திருந்த , சிறு பையை எடுத்துப்பிரித்துக்காட்டினான் . அதில் இருந்தவை , அத்தனையும் நவரத்தினங்கள் .

அரிசி ,வெறும் பெயருக்குத்தான் . அதை ஆங்காங்கே விற்று , நவரத்தினங்களை சேகரித்துவிடுவோம் . அதைக்கொண்டு பூம்பட்டினத்தில் விற்பது தான் எங்களுக்கு வருமானம்’

தொழிலைப்புரிந்து கொண்ட பாலாவும் சந்துருவும் அவ்வணிகனிடத்தில் விடைபெற்றுக்கொண்டு , மெல்ல அரண்மனையை நோக்கி சென்றனர் . திடிரென்று , அவர்கள் இருவரும் நடந்து போயிருந்த பாதையின் மறுபுரமிருந்து , இரண்டு அழகிய வெண்குதிரைகளை உடைய தேர் , கட்டுப்பாடு இழந்து இவர்களை கடந்து வளைந்து சென்றது . ஒருநிமிடத்தில் உயிர்பயம் மனதினுள் வந்து போனது. சுதாரித்த இருவரும் , தேரினை நோக்கி தங்களின் பார்வையை செலுத்தினர் . அதனுள் 16 வயதுடைய ஒரு சிறு இளைஞன் , தன் வாலிபத்தோற்றத்தினை எடுத்துக்காட்டும் தோள்களுடன் , வெண் உடையணிந்த மிடுக்குடனும் காணப்பட்டான் . அவன் , அக்குதிரைகளை கட்டுப்படுத்த ஏதேதோ  பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான் .

எப்படி போறான் பாரு . அந்தாகாலத்துலயே இந்த மாதிரி கிராக்குங்க இப்புடித்தான் திரியுதுங்க ‘ என்ற சந்துருவின் வார்த்தைகளுக்கு , பாலாவும் ஆமாம் போட்டான் . இவர்கள் அரண்மனையை நோக்கிய பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்க , தூரத்தில் ‘மா’ என்ற சத்தம் காதைப்பிழந்து வானைத்தொடும் வண்ணம் பிரதிபலித்துக்கொண்டிருந்தது .

மெல்ல அரண்மனையின் அருகே வந்து நின்றார்கள் . பிரமாண்ட மதில்சுவர்களின்வழியே உள்நுழைய , ஒரு மாபெரும் இரும்புக்கதவு வழிவகையாக இருந்தது .

‘அரசர பாக்கனுங்க’

‘யார் நீங்கள் ? எதற்காக பார்க்கவேண்டும் ?’

‘நாங்க ரெண்டுபேரும் வடநாட்டுலர்ந்து வரோம் .ஒரு முக்கியமான விஷயமா அரசன பாக்கனும் ’

‘சமணத்துறவிகளா நீங்களிருவரும் ?’

‘இல்லைங்க. நாங்க சிவனடியார்கள்’
எப்படியோ காஞ்சிபுரத்தில் ,அத்தோணிக்காரன் கூறியது நினைவிற்கு வந்தது .

வாயில்காப்பவனிடம்  பொய் கூறியாயிற்று . அவன் , அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச்செல்ல எத்தனிக்கும்போது ,

‘டங் டங் டங் டங்’

எனும் , மணியோசையின் பெருத்த சத்தம் காதை கிழிக்கும் வண்ணம் எங்கிருந்தோ வெளிப்பட்டது . சத்தம் வந்த திசையை நோக்கி இவர்கள் மூவரும் நடக்க , மதிலை ஒட்டியுள்ள ஒரு மண்டபத்தில் உள்ள மணியின் கயிற்றை பிடித்து ஒரு பசுமாடு இழுத்து சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது . அச்சத்தத்தினை கேட்டு , சுற்றியிலும் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்த மக்கள் அனைவரும்  , அம்மண்டபத்தைச்சுற்றி ,அப்பசுமாட்டை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தனர் .



‘என்னங்கணே . ஒரு மாடு எதுக்கு அந்த மணிய அடிக்குது ?’

‘அதுதான் நீதி மணி . எங்க சோழநாட்டுல , மக்களுக்கு ஏதேனும் குறையிருந்தா  , அதை அடிப்பாங்க . அச்சமயம் பெருமானே வந்து தீர்த்து வைப்பாரு . ’

இதென்ன இப்படியொரு பழக்கமாக இருக்கிறது . இவன்கூறுவதெல்லாம் நம்பினாலும் , இந்த மாட்டிற்கு என்ன பிரச்சனை இருக்கும் ? அதை எப்படி மன்னர் அறிந்து தீர்த்துவைப்பார் ? என்ன ஆனாலும் சரி. இதை வேடிக்கைப்பார்க்காமல் , இங்கிருந்து நகரக்கூடாது என்று முடிவெடுத்தான் சந்துரு .

‘மன்னர் வருகிறார் ! ஒதுங்கி நில்லுங்கள் ‘



என்ற சத்தம் அரண்மனையிலிருந்து வர கூடியிருந்த மக்கள் வழிவிட்டனர் . தூரத்தில் , அலங்காரம் செய்யப்பட்ட மாபெரும் கரிய யானையின்மீது , கம்பீரம் ததும்பி வழியும் முகத்துடன் , கருணை மிக்க கண்களுடன் , சிவனின் பட்டை  , நெற்றியை அலங்கரிக்க , எருதின் திமிரைவிட பலமான தோள்களுடனும் ஒருவர் அமர்ந்துவந்தார் . வளர்ந்த அடர்த்தியான முடியுடனும் , முரட்டு மீசையுடனும் , அலங்கரிக்கப்பட்ட தாடியுடனும் , அவர் வரும் திசை நோக்கி அனைத்து மக்களும் வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் . அவருக்கு முன் , இரண்டு குதிரையில் , முறுக்குமீசையுடன் , விரைப்பாக இருவரும் , மன்னரின் இருபுறத்திலும் , பல்லக்கில் யாரோ வருவதும் , மன்னரின் பின் , 50க்கும் மேற்பட்ட வீரர்களும் அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர் . வந்தவர்கள்  அம்மண்டபத்தின்முன் , அதேவரிசையில் நிற்க , மன்னன் அந்த யானையிலிருந்து  இறங்கினான் . இறங்கி வந்தவன் நேரே பசுமாட்டை பார்த்தான் . அவரின்பின் இருவர் வந்து நின்றனர் . அவர்கள்தான் பல்லக்கில் வந்தவர்கள் .

‘என்ன இது வியப்பு ? எதற்கு அப்பசுமாடு , மணியை ஒலிக்கிறது ?’

மன்னனின் கணீர்குரலை கேட்ட இருவரும் , முழித்துக்கொண்டிருந்தனர் . அப்போது , அக்கூட்டத்தின் நடுவே  , குடியானாவன்போல் காட்சியளித்த ஒருவன் , சிறுதுளி கண்ணீர் கண்களில் வழிந்தோட , அரசன்முன் வந்து குனிந்து நின்று பேசினான் .

‘பெருமானே ! சின்ன ராசாவின் தேரில் நசுங்கி , இப்பசுவோட கன்று கழுத்தொடிஞ்சுடுச்சுங்க . இறந்த , கன்ற பார்த்த இப்பசுவும் இங்க வந்துடுச்சுங்க . என்ன மன்னிச்சுடுங்க . நா இத பிடிச்சுட்டு போகையில , என்ன தள்ளிவிட்டு ஓடியாந்துடுச்சிங்க’
என்றவாறே , மன்னனின் காலில் விழுந்தான் .மன்னின் முகத்தில் குழப்பரேகை படர்ந்தவண்ணம் ,

‘வீதிவிடங்கன் எங்கே ?என்றார் .

வேந்தே ! இளவரசர் நகர்கோலம் செல்வதற்காக , புதிதாய் வந்திறங்கிய அரேபியக்குதிரைகளை பூட்டிக்கொண்டு தேரில் புறப்பட்டார் . அக்குதிரைகள் முரண்டுபிடித்து இச்சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கலாம் . ஆகையால் , , ,‘

‘அமைச்சனே ! எங்கே வீதிவிடங்கன் ?’

உடனே , சில காவலாளிகள் , அங்கிருந்து வேகமாக சென்றனர் . கூட்டத்தில் ஒவ்வொருவரும் , ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் . அந்த பையனுக்கு நல்லா வேணும் , எப்படி வண்டி ஓட்டிகிட்டு போறான் என்று சந்துருவும் மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான் . மன்னனோ , முகத்தில் கோவமும் , கருணையும் , பாசமும் ஒன்றுசேர தலைதாழ்ந்து நின்றிருந்தான் . தூரத்தில் , சிறிது நேரத்திற்குமுன் பாலாவையும் சந்துருவையும் கடந்துசென்ற , அக்குதிரைவண்டியை , குதிரையின் கடிவாளத்தைப்பற்றியவாறே காவலர்கள் இழுத்துக்கொண்டுவந்தனர் .  அச்சிறு இளைஞன் , தலையை தாழ்த்திக்கொண்டு  , அங்கு வந்தான் . என்ன நடக்கப்போகிறது என்று அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .

‘அப்பசுவின் , கன்றை கொன்றாயா ?’ என்ற மன்னரின் குரலுக்கு பதில் பேசாமல் , தலையை மட்டும் ஆமாம் என்பது போல் அவ்விளைஞன் தலையாட்டினான் . மன்னன் ஒருவாறு தெளிவு பிறந்தவனாய் ,

‘சாலையின் நடுவில் படு  ’ என்றான் . மகனும் எதுவும் பேசாமல் , அங்கிருந்த சாலையின் நடுவில் படுத்தான் .

அந்த தேரை கொண்டுவாருங்கள் . அக்கன்று இறந்தது போன்றே , இக்குற்றவாளியையும் ஏற்றிக்கொள்ளுங்கள் ’
மன்னனின் , இத்தீர்ப்பைக்கேட்டு மக்கள் அனைவரும் திடுக்கிட்டனர் . சந்துருவும் , பாலாவும் தான் .தேரைப் பிடித்துவந்த காவளாளிகள் , ஒருநிமிடம்  , திகைப்புற்று , அப்படியே நின்றனர் .

‘கொண்டு வாருங்கள்’

என்ற மன்னனின் , சிங்க கர்ஜனையைக்கு பயந்த , காவலர்கள் , அத்தேரை அப்பக்கம் கொண்டுவந்தார்கள் .

‘பசுவினை அத்தேருக்குள் ஏற்றுங்கள் ’

காவலர்கள் , தயங்கியபடியே பசுவினை , அத்தேர்வண்டியில் ஏற்றினார்கள் . குதிரைகள் இரண்டும் மிரட்சிப்பார்வையில் அரண்டு போயிருந்தன .

தேரை ஏற்றி ,  கொல்லுங்கள் ’



மன்னன் , இவ்வார்த்தையை சொல்லும்போது தழுதழுத்த குரலும் , கலங்கிய கண்களையும் , சந்துரு உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான் . அவனின் இவ்வார்த்தைகளை கேட்ட பசுவும் கூட பரிதாபத்தால் ,அ வனைப்பார்ப்பது போலிருந்தது . படுத்திருந்த பையனோ , எதுவும் பேசாமல் அமைதியாய் கீழே கிடந்தான் . அதுவரை அவனுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி மறைந்து , தான் செய்த தவறுக்கு கிடைக்கப்போகும் தண்டணையை மனமுவந்து ஏற்பவன்போல் அவன் முகம் காட்சியளித்தது .

‘ம் . ஏற்றுங்கள் .’ என்ற மன்னனின் குரல் கேட்டு காவலர்கள் தடுமாறினார்கள் . என்னதான் இருந்தாலும் , அவர்கள் கொல்லப்போவது தனது வருங்கால அரசன் ஆயிற்றே .அரசனைக்கொன்ற பாவத்தை எப்படி போக்குவது ? அது தன் குடும்பத்தையே சூழ்ந்து கொல்லுமே என்ற பயம் அக்காவலர்கள் முகத்தில் தெரிந்தது .அந்நேரத்தில் ,

நிறுத்துங்கள் ’ என்ற குரல் கூட்டத்தின் நடுவினில் இருந்து ஒலித்தது .

எல்லோரும் , அக்குரல்வந்த இடத்தினை பார்த்தார்கள் .பாலா மாத்திரம் சந்துருவை பார்த்துக்கொண்டிருந்தான் . சிறிது நேரத்தில் , அனைவரின் கண்களும் சந்துருவின் முகத்தையே உற்றுநோக்கின . ஆம் , அவ்வாறு கூறியது சந்துருவே தான் .

அவன் , இதுமாதிரியான விஷயங்களில் எப்போதும் பயப்பாடமாட்டான் . ஆயினும் , இந்நேரத்தில் , ஒரு அரசனை எதிர்த்து பேசுமளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது அவனுக்கு என்பது , அவனுக்கே புரியாத ஆச்சரியம்தான் .

‘குதிரை செய்த தப்பிற்கு , எப்படி சிறுவனை பலியாக்கலாம் ?’

‘யார் நீ ?’ என்ற சேனாதிபதியின் குரல் ஒலிக்க ,

‘நான் ஒரு தமிழன் ’

என்று மறுமொழியளித்தான் சந்துரு .

‘நானும்தான் அக்காட்சியை பார்த்தேன் . குதிரைகள் இரண்டும் தாருமாறாக ஓடியது . அதை கன்ட்ரோல், சாரி , கட்டுப்படுத்த , அந்த பையனும் முயற்சி பன்னான் . ஆனா , அது முடியாம , அந்த பசுமாட்டோட குட்டிமேல ஏத்திட்டான் . இது ஒரு தப்புனு எப்புடி நீங்க அந்த பையன கொல்லளாம் ?’

தனக்கு வந்த தைரியத்தின் காரணமாக , எப்படியோ எதிர்த்து பேசிவிட்டான் .

‘அவ்விளைஞன் கூறுவதும் சரிதானே மன்னரே ! குதிரை செய்த தவற்றிற்கு , நம் இளவரசரை எப்படி பொறுப்பாக்குவது ?’

‘நிறுத்தும் அமைச்சரே ! மனிதனினும் குதிரை , அறிவில் குறைந்தது . அதைக்கட்டுப்படுத்த தெரியாதவன் , கையாண்டிருக்கக்கூடாது . என்மகனின் அறிவிலித்தனமே , அப்பசுவின் இழப்பிற்கு காரணம் . இப்போது நான் தவறுசெய்தவனை விடுவித்தால் , சிபி வழிவந்த என் சோழகுடி , இழிபிறப்பின் நிலை அடையும் .

‘சரிங்க .அதுக்குனு , ஒரு மாட்டுக்காக , ஒரு மனுஷன கொல்லுவிங்களா ?’

‘இளைஞனே ! என்குலவழித்தோன்றல்களைப்பற்றி அறிந்திருந்தால் , இப்படியெல்லாம் பேசமாட்டாய் . ஒரு புறாவிற்காக , தன் இதயச்சதையை அறுத்தெடுத்து கொடுத்தவன் , என் முப்பாட்டன் . அவன்வழிவந்த எனக்கு நீதி தான் முக்கியம் . பசுவாயினும் , எறும்பாயினும் நீதி என்பது உயிர்களுக்குப்பொதுவே . காவலாளிகளே ! தண்டணையை நிறைவேற்றுங்கள் ’

சந்துருவின் கேள்விக்கு , அம்மன்னன் அளித்த பதில்  , அவன் வாயை மூடச்செய்துவிட்டது . அவன் கண்ணெதிரிலே இன்னும் சிலநிமிடத்தில் , ஒரு பாலகன் கொல்லப்பட போகிறான் . நீதி என்பது சரி தான் . ஆனால் , இச்சின்ன விஷயத்துக்கு , பெற்ற மகனையே கொல்ல சொல்வதா ? என்று அதிசயித்திருந்தான் . பாலாவால் , அங்கு அதற்குமேல் நிற்கமுடியவில்லை . கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டான் . அதேநேரத்தில் ,அரண்மனையிலிருந்து பெண்மணி ஒருவர் ஓடிவருவதும் , அவள் கையில் ஒரு அழகிய குழந்தையும்  தெரிந்தது . அவள் வந்து ஏதேதோ கெஞ்சிக்கொண்டிருந்தாள் . மன்னனோ , கண்ணில் வரும் கண்ணீரை அடக்கத்தெரியாது முயற்சித்துக்கொண்டிருந்தான் . சந்துருவாலோ , அந்த 16 வயது பையனின் சாவை காண தெம்பில்லாமல் வெளியே வந்தான் . கூட்டத்திலிருக்கும் சிலரோ , வேண்டாம் வேண்டாம் என்று கத்திக்கொண்டிருந்தார்கள் . நீதிக்காக மகனையே முறை செய்யும் மன்னனா ! என்று அதிசயித்துக்கொண்டிருந்தார்கள் . மெல்ல பாலாவுடன் சேர்ந்து , கூட்டத்திலிருந்து விடுபட்டு இருவரும் எங்கு செல்வதென்று தெரியாமல் , மனதில் கனத்த பாரத்துடன் சென்றுகொண்டிருந்தனர் .

‘சடக்’ என்ற சத்தமும்  , அதனைத்தொடர்ந்து ‘ஐயகோ ‘ என்ற பெண்மணியின் கதறலும் , ‘ம்ச் .அந்தோ பாவம்’ என்று கூட்டத்திலிருந்து வரும் சத்தமும் , இவர்கள் காதுகை எட்டின . சந்துருவின் கண்ணில் ஒருதுளி கண்ணீர் உருண்டோடியது . இதுவரை , அவன் சினிமாவைத்தாண்டி , பேப்பரில் மட்டுமே கொலைகளை பார்த்திருந்தான் . நேரில் பார்த்தாலும் இப்படி ஒரு நேருக்குநேராக சந்தித்ததில்லை . அதுவும் , பசுவிற்காக , தன் மகனையே கொல்ல துணிந்த தகப்பனும் , அவரின் வார்த்தைக்கு ஒடுங்கி , எவ்வித பயமும் இல்லாமல் , தேர்ச்சக்கரத்தின் அடியில் படுத்த அந்த பாலகனும் அவன் நினைவில் நின்றனர் .
இருவரும் சென்றுகொண்டேயிருக்க , அவர்களை ஒரு கை வழிமறித்தது . யாரென்று பார்த்தவர்கள் , சிறிது ஸ்தம்பித்துதான் போனார்கள் .

-தொடரும்

தொடர்புடைய இடுகைகள்




Comments

  1. manoonithi cholan thalai nagar thiruvarur thane athum thavaru agivettatha tholare

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சிடுங்க தல ! திரூவாரூர்னு போடுறதுக்கு பதிலா , உறையூர்னு போட்டுட்டேன் ! சில பல கன்ஃபுயூசன்ஸ் !! சுட்டிக்காட்டியமைக்கு நன்றிணா !!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை