Wednesday, 10 September 2014

LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம்
நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை . என்ன செய்வோம் ? அதை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிப்போம் . அல்லது அதை நினைத்து மனதினை போட்டு குழப்பிக்கொள்வோம் . அந்நேரத்தில் , நமக்குள் இருக்கும் பதற்றத்தைப்பற்றி சொல்லிமாளாது . ஆனால் , அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து அதை யோசித்தால் , நமக்கு சிரிக்கத்தான் தோன்றும் . நாம் எப்படியெல்லாம் இந்த சப்ப மேட்டருக்கு பயந்து ஒடுங்கியிருந்திருக்கிறோம்  அல்லது குழம்பித்தவித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது , நமக்கு மெல்லிய புன்முறுவல் பூக்கும் . ஒருவருடம் கழித்து எதற்கு சிரிக்கவேண்டும் ? அதை அப்போதே சிரித்துவிடு ,  என்று அழகாய் சொல்வதே இத்திரைப்படம் . கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை , ஒவ்வொரு நொடியும் , மகிழ்ந்து வாழவேண்டும் . துன்பம் ஏற்பட்டாலும் , அதை தலையில் வைத்து அழியாமல் , அந்நொடியையும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கூறுவதே ‘வாழ்க்கை அழகானது’ எனும் இத்திரைப்படம் .

கதை –

கதை நிகழும் காலம் 1939 . குய்டோ (GUIDO) எனும் சாதாரண இளைஞன் , பிழைப்பிற்காக , இத்தாலியின் , அரிஸோ எனும் நகருக்கு வருகிறான் . அவனைப்பொறுத்தவரை , பிரச்சனைகளை மூளையில் ஏற்றிக்கொள்ளாமல் , ஒவ்வொரு நொடியும் , மகிழ்ச்சியாக வாழ்பவன் . அப்போது , எதேச்சையாக தான் காணும் டோரா எனும் பெண்ணின் மேல் காதல் கொள்கிறான் . அவளை இம்பரஸ் செய்ய பல தகிடுதத்தங்கள் செய்கிறான். அவன்மேல் டோராவும் காதல் கொள்ள , ஒரு கட்டத்தில் அவள் வேறொருவனுக்கு நிச்சயமாகியிருப்பது , குய்டோவுக்கு தெரிய வருகிறது . பின் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள் . அவர்களுக்கு ஜோஸ்வா எனும் மகன் பிறக்கிறான் . அக்காலகட்டத்தில் , ஹிட்லரின் நாஜிப்படை , இத்தாலியை கைப்பற்ற , அங்கிருக்கும் யூதர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு , ஒரு தொழிற்சாலையில் அடைக்கப்பட்டு வேலைவாங்கப்படுகிறார்கள் . யூதனான , குய்டோவும் , அவனது மகனும் அங்கு அடைக்கப்பட , தன் கணவன் வாழும் இடமே தனக்கு சொர்க்கம் என்று டோராவும் அவர்களுடன் கிளம்பிச்செல்கிறாள் . ஆண்களுக்கு தனி அறை , பெண்களுக்கு தனி அறை . நாள் முழுதும் வேலை . அதே நேரம் , தான் எங்கிருக்கிறோம் என்று வினவும் ஜோஸ்வாவிடம்  , தாங்கள் ஒரு விளையாட்டுக்காக இங்கு வந்திருப்பதாகவும் , விளையாட்டில் ஜெயித்தால் , ராணுவ பீரங்கி பரிசாக கிடைக்கும் என்று நம்பவைக்கிறான் . ஜெர்மானியர்களின் கண்ணில் , தன் மகன் அகப்பட்டால் , அவனை கொன்றுவிடுவார்கள் என்று அறிந்து , எப்போதும் மகனை மறைந்திருக்க சொல்கிறான் . ஒரு கட்டத்தில் , போர் முடிவுக்கு வந்து ஜெர்மன் பின்வாங்கும் நேரம்  , அவர்கள் கண்ணில் தன் மகன் படாமல் ஒரு பெட்டியில் ஒளித்துவிட்டு ,  தன் மனைவியைக்காப்பாற்ற  குய்டோ மாறுவேடமிட்டு செல்கிறான் . அச்சமயம் , ஜெர்மானியர்களிடம் சிக்குகிறான் . குய்டோ என்ன ஆனான் ? தன் மனைவியையும் மகனையும் காப்பாற்றினா ? என்பதே மீதிக்கதை .இதைப்படம் என்று சொல்வதற்கு பதில் , வாழ்க்கையை எப்போதும் பாஸிட்டிவாகவும் , ஆனந்தமாகவும் வாழவேண்டும் என்று நினைக்கின்ற ஒருவனின் வாழ்க்கை என்று சொல்லலாம் . ஒரு திரைப்படத்தைப்பார்த்து, ஒருநாளாவது இக்கதாபாத்திரம்போல் வாழவேண்டும் என்று எனக்குள் தோன்றவைத்த முதல்படம் , FORREST GUMP . அதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது . அதற்கடுத்து , என்னுள் இப்படி நினைக்கவைத்த படம் இதுமாத்திரம்தான் .குய்டோவாக ராபர்டோ பெனிக்னி . இவரே தான் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் . படத்தின் டைட்டிலைப்போலவே பல காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும் . டோராவை இம்பரஸ் செய்ய குய்டோ செய்யும் காட்சிகள் அனைத்தும் காமெடி ரகம் . டோராவுக்கும் வேறொருவனும் நடக்கும்  நிச்சயதார்த்தின்போது , அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்கும் டேபிளுக்கு அடியில் , டோராவும் குய்டோவும் தங்கள் காதலை சொல்வதும் , அதன்பின் வரும் காட்சியும் , அழகியல் என்றே கூறலாம் . அதேபோல் , ஜெர்மானியர்களின் பிடியில் இருக்கும்போது , யாருக்கும் தெரியாமல் தன் மகன் ஜோஸ்வாவுடன் , பனிமூட்டத்தின் இடையில் கண்தெரியாமல் சென்றுகொண்டேயிருக்க , எதிரில் ஆயிரக்கணக்கான பிணங்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதையும் பார்த்து ஒரு விநாடி மிரளும் குய்டோ , என அந்த காட்சியையும் அருமையாக எடுத்திருப்பார்கள் . கிளைமேக்ஸ் காட்சியின்போது , இன்னும் ஒருநிமிடத்தில் தான் சாகப்போகிறோம் என்று உணரும் குய்டோ , மறைத்துவைக்கப்பட்ட தன் மகன் , தன்னையே பார்ப்பதை கவனிப்பார் . அந்த நிமிடத்தில் கூட ,கோமாளித்தனமான நடை நடந்து , தன் மகனுக்கு சிரிப்பு காட்டுவார் . இதுபோன்று பல காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்  ஜெர்மானியர்கள் பேசுவதை மொழிபெயர்ப்பு செய்யும் காட்சி , மனைவிக்கு அங்கிருந்து சிக்னல்கொடுக்கும் காட்சி , டாக்டரிடம் கடைசிநேரத்தில் தன்னை வெளிப்படுத்தும் காட்சி , தன்மகன் காணவில்லை என்று ஒருநொடி பதறுவது என , காட்சிக்கு காட்சி அட்டகாசப்படுத்தியுள்ளார் , இயக்குனர் கம் நடிகர் .


இத்தாலிய திரைப்படமான இது (இத்தாலிய மொழியில்  LA VITA E BELLA) , சிறந்த படம் , சிறந்த டைரக்டர் , சிறந்த திரைக்கதை உட்பட 7 பிரிவில் சிபாரிக்கப்பட்டு , சிறந்த நடிகர் , சிறந்த வேற்றுமொழி திரைப்படம் மற்றும் இசை என மூன்று ஆஸ்கார்களை வென்றுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு க்ராண்ட் பிரிக்ஸ் விருதினையும் தட்டிச்சென்றுள்ளது .

இன்னும் ,பதிவில் சொல்லாத ஏராளமான காட்சிகள் படத்தில் இருக்கின்றன. நிறைய பேர் , இப்படம் யூதர்களை அழித்த ஜெர்மானியர்களை பற்றி பேசவில்லை , அப்படி இப்படி என்று படத்தைப்பற்றி கமெண்ட் அடித்தார்களாம் . என்னைப்பொறுத்தவரை , இப்படம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ , நமக்கு இரண்டுமணிநேரம் சிரிக்கவைத்து ,பின் அழகாய் சொல்லிவிட்டு செல்லும் பாடம் . யாராவது தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் , இப்படத்தைப்பார்த்த பின்  , தற்கொலை செய்துகொள்ளுங்கள் , உங்களால் முடிந்தால் . ஆஸ்கார் வாங்கிய படம் என்பதால் , மொக்கையாக இருக்கும் என்று நினைத்து பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் .

டிஸ்கி -
இத்திரைப்படத்தின் இயக்குநர் , ராபர்டோவின் தந்தையின் வாழ்க்கையே இப்படம் , என்று கூறப்படுகிறது . அவர் மூன்றாண்டுகாலம் , நாஜிக்களின்பிடியில் இதேபோல் வாழ்ந்ததாகவும் , அவரின் சொந்த வாழ்க்கையையே திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது .


உங்கள் விருப்பம்

3 comments:

  1. சிறந்த திரைத் திறனாய்வு
    தொடருங்கள்

    ReplyDelete