Monday, 1 September 2014

ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்
கேங்க்ஸ்டர் பிண்ணனியில் ,  தந்தை – மகன் உறவை அழகான காட்சியமைப்புடன் , அற்புதமான இசையும் கலந்து படைத்திருக்கும் கலவையே , Road To Perdition .  

கதை –


படம் நடக்கும் காலகட்டம் 1931 . ஜான் ரூனி எனும் கிழவர் , ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் . அவரின் மகன் , கான்னர் ரூனி . அநாதையான மைக்கேல் என்பவனை , சிறுவயதிலிருந்து  ஆதரித்து , தன்னுடனே வளர்த்தி  , எதுவுமற்ற அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் ஜான் . கிட்டத்தட்ட மைக்கேலை , தன் மகன் போலவே நடத்தும் ஜான் , எது சொன்னாலும் உடனே செய்துவிடுவார் மைக்கேல் . மைக்கேலுக்கு அழகான குடும்பம், இரண்டு ஆண்பிள்ளைகள் . தான் விழுந்த இந்நரகத்தில் , தன் மகன்களும் விழுந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் வாழ்ந்துவருகிறார் . துரதிருஷ்டவசமாக , மைக்கேலும் கான்னரும் சேர்ந்து செய்யும் கொலையை கண்கூடாக பார்க்கிறான் மூத்தமகன் . கான்னர் , தன்னைவிட தன் தந்தை , மைக்கேலுக்கு அதிக இடம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு , மைக்கேலை கொல்ல ஆள் செட் செய்கிறார் . அதே நேரத்தில் , மைக்கேலின் குடும்பத்தை அழிக்கவும் முனைந்து , இளைய மகனையும் , மனைவியையும் கொன்றுவிடுகிறார். மைக்கேல் , கான்னரின் சூழ்ச்சியிலிருந்து தப்பி வீட்டிற்கு வந்தால் , மனைவியும் இளைய மகனும் இறந்துகிடப்பதை பார்த்து , மூத்தமகனை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு செல்கிறார் . கான்னரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மைக்கேலின் மனதில் ஆழ்ந்து பதிகிறது .அதே நேரம் , மூத்தமகன் கண்முன்னே நடந்த இந்நிகழ்ச்சியால் , அவனும் தன்னைப்போன்று நரகத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணமும் அவனை வாட்டியெடுக்க , ஒருவனிடம் உதவிகேட்டு செல்கிறான் . அவனோ , ஜானை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று கூறிவிட , அங்கிருந்து வெளியேறி தன் மனைவியின் சகோதரி இருக்கும் Perdition என்ற பகுதிக்கு செல்கிறான் . மைக்கேல் உதவிகேட்டு வந்ததை அறிந்த ஜான் , மைக்கேலை கொன்றால்தான் , தன் சொந்த மகனை காப்பாற்ற முடியும் என்பதால் , வேறுவழியின்றி மைக்கேலை கொல்ல , ஒருவனை செட் செய்கிறார் . ஜானை எதிர்த்து தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று அறிந்த மைக்கேல் , ஜான் பணத்தை பதுக்கியிருக்கும் வங்கிகளுக்கு சென்று , ஜானின் பணத்தை , தன் மகனின் உதவியோடு , கொள்ளையடிக்கிறான் . ஒரு கட்டத்தில் , ஜான் செட் செய்திருந்த அடியாளுடன் ஏற்படும்துப்பாக்கி சண்டையில் , மைக்கேலின் கையில் புல்லட் பாய்ந்துவிட , அங்கிருந்து தப்பி , ஒரு கிராமத்தின் பண்ணைவீட்டில் தங்குகிறார்கள் .மைக்கேலுக்கு குணமானதும் , ஜானிடம் பேசுகிறான் .ஜானோ , தான் இறந்தபின் தன் மகன் என்ன ஆனாலும் பரவாயில்லை , ஆனால் உயிருடன் இருக்கும்வரை மகனை எதுவும் செய்யமுடியாது எனக்கூற , மைக்கேல் ஜானை கொன்றுவிட்டு , அவனது மகனையும் பழிவாங்குகிறான் . பின் , தன் மனைவியின் சகோதரி வீட்டுக்கு , மகனுடன் செல்லும் மைக்கேல் , அங்கு மறைந்திருக்கும் , அடியாளின் மூலம் சுடப்படுகிறான் .அந்நேரத்தில் , அங்கு துப்பாக்கியுடன் வரும் மைக்கேலின் மகன் , அந்த அடியாளை சுடுவதற்கு முயல , அந்நேரத்தில் அறைகுறை உயிருடன் இருக்கும் மைக்கேல் , தன் மகனும் தன்வழியே பயணித்து , நரகத்தில் மாட்டிக்கொள்வானோ என்று வருந்த , அந்த அடியாளோ , மகனின் அருகில் செல்ல ஒரு கனத்த சோகத்துடனும் , மெல்லிய புன்னகையுடனும் முடிகிறது படம் .  

சிறப்புஇப்படத்தில் , முதலில் பாராட்டவேண்டியவர் தாமஸ் நியூமேன் எனும் இசையமைப்பாளர் .மனுஷன் பிச்சியெடுத்திருக்கிறார் . எனக்கு இசைஞானம் இல்லையெனினும் , ரசிப்புத்தன்மை அதிகம் . அவ்வகையில் , இப்படத்தில் என்னை பெரிதும் கவர்ந்தது , படத்தின் பிண்ணனி இசை  ! ஐரிஷ் நாட்டு இசையை , அவர் ஒலிக்கும்போதெல்லாம் மனதில் ஒரு புது உற்சாகமே வந்தது. இப்படத்தில் இறுதிக்காட்சியில் , மைக்கேல் , மழைபொழியும் ஒரு பொது இடத்தில் ஜானின் அடியாட்களை சுட்டுக்கொன்றுவிட்டு , ஜானையும் கொல்ல வருவார் . அந்த காட்சியில் , மெல்லிய மெலோடியுடன் இசையை கோர்த்து , அந்த காட்சியை அற்புதமாக மாற்றியிருப்பார் .இதே போன்றதொருகாட்சிதான் ‘ஆரண்ய காண்டம்’ படத்திலும் வரும் . சண்டைக்காட்சியின் நடுவே அற்புத மெலோடியை யுவன் வழங்கியிருப்பார் .  இப்படத்தின் இசையமைப்பாளர் தாமஸ் தான் , WALL-E , SKYFALL போன்ற படங்களுக்கும் இசை . எனக்கு மட்டும் இசைப்பற்றிய அறிவிருந்திருந்தால் , இப்படத்தின் பிண்ணனி இசையை , 20 தொடர்பதிவுகளாகவே வெளியிட்டு , உங்களை வாட்டியெடுத்திருப்பேன் .


(இந்த காட்சியில்தான் நான் மேலே கூரிய இசை வரும்)


மைக்கேல் சுல்லிவனாக , டாம் ஹேங்க்ஸ் . இவரை ஒரு கேங்க்ஸ்டர் பாத்திரத்தில் , நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. பால் வடியும் முகத்துடன் அம்மாஞ்சி போலிருக்கும் மனிதர் , இப்படத்தில் காட்டியெடுத்திருக்கிறார் . இந்த கேங்க்ஸ்டர் படத்தில் , வன்முறை இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் என்றால் , அது டாம் ஹேங்ஸின் வேண்டுகோளுக்காக மாத்திரமே . தன் மனைவி , குழந்தையை இழந்து கதறும்போதும் , கிளைமேக்ஸ் முந்தைய காட்சியில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை போன்ற ஜானை , சுடும் இடத்திலும் , இவரின் நடிப்பு , அற்புதம் .கிளைமேக்சில் தன் மகன் எங்கே அந்த கொலைகாரனை சுட்டுவிடுவானோ , என்று பதறும் இடத்தில் , அழகான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் .


அடுத்து , ஜான் ரூனியாக வரும் பால் நியூமேன் . டாம் ஹேங்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் , அவரது நடிப்பின்முன் அனைவரையும் மறக்கடித்துவிடுவார் . அவர் மாத்திரமே தனியே தெரிவார் .ஆனால் , இப்படத்தில் டாம் ஹேங்சை , தூக்கி சாப்பிட்டுவிட்டார் இந்த கிழவர் . டாமை கொல்ல சொல்லும்போது , இவரின் கண்களில் வருத்தமும் , கவலையும் ஒருசேர கோர்த்தவாறு ஒருவித குழப்ப ரியாக்சன் தரும்போது , அவ்வளவு அருமையாக இருக்கும் . டாமை மாத்திரமே கொல்லவேண்டும் , அவன் மகனின்மேல் சிறுதுரும்பும் படக்கூடாது என கொப்பளிக்கும்போது , அவ்வளவு அருமையான மேனரிசங்களை காட்டுவார் . கடைசிக்காட்சியில் , தன்னை டாம் கொல்லவரும்போது  , தன் வளர்ப்பு மகனான மைக்கேலே தன்னை கொல்லவருகிறான் என்பதை அறியும் காட்சியும் , அதன்பின் அவரது அழகான நடிப்பும் சொல்லிமாளாது .மனுஷன் ஏற்கனவே மார்ட்டின் ஸ்கார்சோசியின் படத்தில் ஹீரோவாக நடித்து ஆஸ்காரை அள்ளியவராம் . சரி 50 ஆண்டு நடிப்பு அனுபவம் ஆயிற்றே !!!


கான்னராக , இன்றைய ஜேம்ஸ் பான்டு , டேனியல் க்ரேய்க். ஆர்வக்கோளாறான மனிதராக இப்படித்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் .

பிற நடிகர்கள் தேர்வு , நடிப்பு , ஒளிப்பதிவு , எடிட்டிங் உட்பட அனைத்தும் சிறப்பாக கையாண்டு , ஒரு திருப்திகரமான படத்தினை வழங்கியுள்ளார்  சாம் மென்டஸ் . இவர்தான் SKYFALL படத்தின் இயக்குனர் . படத்தின் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருப்பினும் , இது ஒரு தரமான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . PERDITION என்பதற்கு நரகம் என்ற பொருளாம் .நரகம் போன்ற கேங்க்ஸ்டர் வாழ்க்கையில் , தன் மகன் பயணிக்கூடாது என்று விரும்பும் தந்தை என்ற குறியீடு தான் , டைட்டில் .

மொத்தத்தில் ,


FEEL GOOD வகையறா படங்கள் , சென்டிமென்ட் படங்கள் , எதார்த்த படங்கள் பார்ப்பவர்கள் , தவறவிடக்கூடாத படம் . இசை ரசிகர்கள் , கேமரா விரும்பிகளும் கண்டிப்பாக பார்க்கலாம் . மெல்ல நகரும் படம் .ஆனால் , டாம்ஹேங்சின் மற்ற படங்களை காட்டிலும் இது கொஞ்சம் வேகம் அதிகம் என எனக்கு தோன்றுகிறது . குடும்பத்துடன் கானும்படியான நேர்த்தியான படைப்பு .உங்கள் விருப்பம்

11 comments:

 1. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 2. //மைக்கேல் ஜானை கொன்றுவிட்டு , அவனது மகனையும் பழிவாங்குகிறான் . பின் , தன் மனைவியின் சகோதரி வீட்டுக்கு , மகனுடன் செல்லும் ஜான் , அங்கு மறைந்திருக்கும் , அடியாளின் மூலம் சுடப்படுகிறான் .அந்நேரத்தில் , அங்கு துப்பாக்கியுடன் வரும் மைக்கேலின் மகன் , அந்த அடியாளை சுடுவதற்கு முயல , அந்நேரத்தில் அறைகுறை உயிருடன் இருக்கும் ஜான் //
  இறந்தது ஜானா அல்லது மைக்கேலா என்று குழப்பமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. // மகனுடன் செல்லும் ஜான் , // மன்னிச்சிடுங்கண்ணே !! அது ஜான் இல்ல . மைக்கேல் . :-(

   Delete
 3. //மகனுடன் செல்லும் ஜான் , // மன்னிச்சிடுங்கண்ணே !! அது ஜான் இல்ல . மைக்கேல் . :-(//
  எண்ணன்னே இதுக்கு போயி மன்னிப்பு அது இதுன்னுட்டு
  மொதல்ல பதிவுல சரி பண்ணுங்க.அதுதான் எல்லோருக்கும் புரியும் விதமா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சரி பண்ணிட்டேங்ணா !!! நன்றிணா ! சுட்டிக்காட்டியமைக்கு !!

   Delete
 4. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

  ReplyDelete
 5. எனது மனசுக்குப் பிடித்த படம் ...
  நானும் எழுதுவேன்

  ReplyDelete
  Replies
  1. உங்களோட REVIEW-காக வெயிட்டிங் ணா !!!

   Delete
 6. ஆனால் நீங்க ஜோரா எழுதீட்டீங்க

  ReplyDelete