Thursday, 6 November 2014

ராசாத்தி - சிறுகதை - பாகம் - 1
‘உன்னால மட்டும்  இல்ல பங்கு . உன்ன மாதிரி 10 பேர் வந்தாலும் அவள கரக்ட் பண்ண முடியாது’
என்ற மணிகண்டனின் வார்த்தை என்னுள் உறங்கிக்கிடந்த ஈகோவை , சுடுதண்ணீர் ஊற்றி எழுப்பியது என்றே கூறலாம் .சில ஜோதிடசாஸ்திரசிகாமணிகளின் பேச்சிலிருந்து , என் தந்தையின் ஜாதகத்தில் தற்காலிகமாக வாடகைக்கு வந்திருக்கும் ராகுவால் எனக்கும் என் தந்தைக்கும் மூன்றுமாதங்கள் மாபெரும் பிரச்சனைகள் வரும் என்ற வாக்கு கிடைத்தது . வேறுவழியின்றி என் தாய் பிறந்த வீட்டிற்கு மூன்றுமாதம் தற்காலிகமாக இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் . நகரில் கற்பழிக்கப்பட்ட இயற்கைத்தாய் , இங்கு தன் முழுபொழிவையும் புரட்டாசி பனியில் , காண்போர் கண்ணிற்கு வாரி வழங்கியிருந்தாள் .இவ்வமைதியான வனத்திற்கு வந்து இரு மாதங்கள் நெருங்கிவிட்டன . வனவாசம் , இப்போது எனக்கு பழம்வாசமாக மாறிவிட்டது . இவ்வனத்தை தாண்டி அமைந்திருந்த மலைகளில் , பழங்குடியினத்தவர் வர்க்கம் இன்றும் இயற்கைத்தாயின் முடிகளாம் மரங்களை அழித்து தன் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தன . என் தாயின் அண்ணன் மகன் பிரபு ,இம்மலைகளில் வாழும் பழங்குடியினர் பெண்ணை காதல் மணம் புரிந்ததால் அதுவரை ஆதிவாசிகளாய் எங்களுக்கு இருந்தவர்கள் உறவினர் ஆனார்கள் . அவன் மனைவியின் பெரியம்மா மகனே , இந்த மணிகண்டன் .எனக்கு பங்காளி ஆக அவனுக்கு பிடித்தது வெறும் ஒரு வாரம்தான் .

அடிக்கடி அம்மலைகளுக்கு நானும் பிரபுவோடு சென்றுவர அங்கிருக்கும் இளம்புயல்களுடன் எனக்கும் நட்புவட்டாரம் வளர ஆரம்பித்தது . அங்கிருந்த இளம்வட்டங்கள் அனைவரும் வெவ்வேறு கருத்துகளுடன் திரிபட்டாலும் , அவர்கள் அனைவரும் ஒரே கருத்தில் ஒருமித்த குரலில் கூறும் ஒரே வார்த்தை , ராசாத்தி . 16 –ஐத்தாண்டிய மணமான அல்லது மணமாகாத எல்லா ஆடவரும் முயற்சித்து மூக்கருபட்ட சூர்ப்பனகையாய் மாற்றியவள் ராசாத்தி . யார் எவ்வளவு முயற்சித்தாலும் அவளுடன் பேசக்கூட முடியாதாம் .தற்கால கண்ணகி ,பேரழகி , செழிப்பானவள் , திமிர் துளியின்றி இருப்பவள் என்று ஆளாளுக்கு வார்த்தைகளால் என்  வாழ்க்கையை திசைதிருப்ப முயற்சித்தார்கள் .நானும் ஆரம்பத்தில் இவர்களின் பேச்சையோ , ராசாத்தியை பற்றியோ துளிகூட யோசிக்காமல் , என் கடமையை நித்தம் தவறாமல் செய்துகொண்டுதானிருந்தேன் . அப்படி ஒருநாளில்தான் இந்த மணிகண்டன் , மேற்கூறிய வார்த்தையை என்னிடம் கூறினான் . எனக்குள் எழுந்த சிரிப்பினை அடக்கமுடியாமல் தவித்தவண்ணம் ,

‘ஏன்டா பங்கு , என்னால முடியாதா ?’

‘சான்ஸே இல்ல பங்கு’
என்ற அவனின் பதில் இப்போது என்னுள் சிரிப்பை மாற்றி புதுகோவத்தை உண்டாக்கியது .

‘ஓ.கேடா .எண்ணி பதினஞ்சே நாள்ல நா அவள உஷார் பண்ணி காட்றேன் .எவ்ளோ பெட் ?’

என்னுடைய உறுதியான வார்த்தை அவனைத்தாக்கியிருக்க வேண்டும் . மெல்ல யோசித்தவன் ,

‘இல்ல பங்கு , அதெல்லாம் வேண்டாம் . நா அவள கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் . சீக்கிரமா பொண்ணு கேட்க போறேன் . நீ எதுவும் பண்ணிடாத பங்கு ’

என்று  கெஞ்ச ஆரம்பித்தான் .

‘ஓ ! அப்டினா நீயும் அவளும் லவ் பன்றிங்களா பங்கு ?’

‘ஆமா பங்கு ’ – மணி .

‘என்னடா சொல்ற ? இப்பதான யாரும் அவள கரெக்ட் பண்ணமுடியாதுனு சொன்ன ? அதுக்குள்ள நீங்க ரெண்டுபேரும் லவ் பன்றதா சொல்ற ? ’

‘இல்ல பங்கு .நா ட்ரை பன்னேன் .அவளும் ஓ.கே சொல்லிட்டா ’ – மணி .

எனக்கு திடீர் திகைப்பாகவும் ,எப்படி காதலிக்கவைத்திருப்பான் என்ற ஆர்வமிகுதியிலும் , என் அடுத்த கேள்வியை அவனிடம் செலுத்தினேன் .

‘எப்படி பங்கு ப்ரொபோஸ் பண்ண ?’

‘அது பங்கு , மரத்துல என்னோட இனிஷயல எழுதுனேன் . அப்புறமா சாய்ங்காலம் போய் பார்த்தேன் . அவளும் அவளோட இனிசியல என் பக்கத்துல எழுதியிருந்தா .’ என்றான் வெட்கத்துடன் .

என்னுள் எழுந்த சிரிப்பினை அடக்கிக்கொண்டு ,‘சரி பங்கு , ஆல் த பெஸ்ட்’ என்றபடி அவனை வழியனுப்பி வைத்தேன் . அவன் சென்றதும் , அவ்வளவுநேரம் என்னுடன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பிரபு , தாறுமாறாக சிரிக்க ஆரம்பித்தான் . அவன் சிரிப்பின் காரணம் நன்கு எனக்க்த்தெரியும் . என்னுடைய அல்லது எங்களுடைய ஈகோவைத்தூண்டும் எந்த விஷயமாய் இருந்தாலும் , ஒருகை பார்க்காமல் விடமாட்டோம் .

‘டே மாப்ள , இந்த டுபாக்கூர் கத அளக்கிறான்டா . நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது . இன்னும் பத்து நாள்ல , ராசாத்தி உன்ன லவ் பண்ணனும் . புரியுதா ?’ என்ற பிரபுவின் ஆர்டருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல்
‘பார்த்துக்கலாம் மாமா’ என்றேன் .

இரண்டு நாட்களாய் மனம் முழுதும் ராசாத்திதான் . பிரபுவும் நேற்று அவன் மாமனார் வீட்டுக்கு சென்று வரும் வழியில் ராசாத்தியைப்பார்த்ததாகவும் பேசியதாகவும் கூறினான் . சாதாரணமாக கூறியிருந்தால் , நானும் சாதாரணமாக விட்டிருப்பேன் .

‘மாப்ள ! அவ செம பிகர் ஆகிட்டாடா . நானே நம்பள . செம தெரியுமா  ?பேசாம அவள ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுதுடா .’

அதற்குமேலும் என்னால் காத்திருக்கமுடியவில்லை . அப்படி என்ன அவள் அழகு என்று என் மனம் மேலும் என்னை கேள்விகேட்டு துன்புறுத்த ஆரம்பித்தது . எவ்வளவு அழகான பெண்ணாயிருந்தாலும் சுமார் தான் எனக்கூறும் என் மாமனே அவளைப்பற்றி ஆஹாபுராணம் பாடியது , என்னுள் இருந்த காதல் அரக்கனை தூண்டியது .


எப்படியோ, இந்த வாரம் இரண்டுநாள் அங்கு செல்லலாம் என்று நாள் குறித்து , குடும்பமில்லாமல் பெண் பார்க்க கிளம்பினோம் .அரசிடம் 25 லட்சம் டென்டர் கொடுத்து ,வெறும் 2.5 லட்சம் செலவு செய்து போடப்பட்ட அந்த தார்சாலை , மலைகளினூடே எங்களை பயணிக்கவைத்தது .இயற்கையின் நிறம் பச்சைதான் என்று எங்களை அம்மலைத்தாய் நம்பவைத்திருந்தாள் . திடீர் திடீரென பஸ்சில் வரும் செக்கிங் இன்ஸ்பெக்டர்போல் ,ஆங்காங்கே வெண்பனியும் சில்தென்றலும் எங்களை வழிமறித்து பயணச்சீட்டு கேட்பதுபோல் பார்த்தது . வளைவுகளும் சுளிவுகளும் என்னை ஆஹா போடவைத்தது . பச்சை இலைகளும் , மாபெரும் மரங்களும் , உருண்டுவிடுமோ என்று பயப்படவைத்த பல பாறைகளும் , மூங்கில்தோப்புகளும் , அருவிகளும், ஓடைகளும் , பலவித பூக்களுமென பல ‘களும்’ தாண்டி ராசாத்தியைக்காண சென்றுகொண்டிருக்கிறேன் . கிட்டத்தட்ட ஏழுமலைகளைத்தாண்டியது என் பயணம் . இந்த இயற்கை அன்னையின் அழகைவிட அவள் ஒன்றும் பெரிய அழகியாய் இருக்கமுடியாது என்று என் மனம் என்னுள் கூறியது .

அவர்கள் ஊருக்கு வந்தாகிவிட்டது . இளம்வட்டங்களையும் பார்த்தாகிவிட்டது . திடீர் உறவினர்களையும் சமாளித்து அனுப்பியாயிற்று . நண்பர்களுடன் பேசும் சமயங்களில் ராசாத்தியைப்பற்றி விசாரிக்காமல் இருக்கமுடியவில்லை . அவளைக்காணலாம் என்று பிரபுவுடன் கிளம்பி அவள் வீட்டிற்குச்சென்றாலும் பெருத்த ஏமாற்றம் . ஒருநாள் ஆகிவிட்டது . அவ்வூரின் குளிரும் ,பனியும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை , காரணம் என் மனதினுள் ராசாத்தியின் ஏக்கம் என்னைத்தாளித்துக்கொண்டிருந்தது . ஒருவாறாக சமாதானபடுத்திய என் மனதுடன் உறங்கச்சென்ற எனக்கு பிரபு கூறிய ஒரு சொல் இன்கனவுகளை ஏவிவிட ஒரு காரணமாய் அமைந்தது .

‘மாப்ள ! நாளைக்கு அவளுக்கு ஸ்கூலாம் . காலைல 7 மணிக்கே கிளம்பிடுவா . இங்கிருந்து 5 கிலோமீட்டர் , மலையிலயே நடந்து போவா . அதுக்கப்றம் மேல இருக்க ஒரு ஊர்ல பஸ் ஏறி ஸ்கூல் போவாடா . காலையில போறோம் ,அவள கரெக்ட் பன்ற .’

எப்போது பொழுதுவிடியும் என்று ஏங்க ஆரம்பித்தேன் . நமக்குத்தேவ்வையெனும் போது ஒரு டவுன்பஸ்கூட நேரத்திற்கு வராது . இந்த பொழுது மட்டும் சீக்கிரம் வருமா என்ன என்றவாறு கண்ணை மூடி அரைதூக்கத்தில் கிடந்தேன் .

‘டேய் கோவிந்து , எழுந்திரிடா ’

‘என்னணா ? மணி 6.50 ஆகுதுடா . ராசாத்தி எப்போ ஸ்கூலுக்கு போவா ?’

‘இந்நேரம் கிளம்பிருப்பா ணா . இருங்க நா உடனே வரேன் . ரெண்டு பேரும் போகலாம் .’

‘சரிடா . சீக்கிரம்’

எப்படியோ 6.45 க்கே எழுந்துவிட்டேன் . வேகமாக கோவிந்தைக்கிளப்பிக்கொண்டு செல்லவேண்டும் . இன்றும் அவளை பார்க்கமுடியாது என்று தான் என்னுள் தோன்றியது .

‘அண்ணா ! போலாம்ணா ’

என்ற கோவிந்தின் வார்த்தைகளை கேட்டதும் வேகவேகமாய் நடையைக்கிளப்பினேன் .ஒரு ஐந்து நிமிட நடையில் இருபாதை வந்தது .

‘என்னடா கோவிந்து ஆச்சு ?’

‘அண்ணா ! இந்த வழியா தான் வருவா ! அந்த வழியா போவா . நாம அவ வர வரைக்கும் நிக்கலாமா ?’

என்னுள் ஏதோ ஒன்று உறுத்தியது . இங்கு நிற்பது வீண் ஏன என் ஏழாம் அறிவு தெரிவிக்க ஆரம்பித்தது .

‘ கோவிந்து . இங்க வேண்டாம் . நாம அவ ஸ்கூல் போற வழியிலயே நிக்கலாம் .’

என் பேச்சுக்கு மறுபேச்சு கூறாமல் அவன் பாட்டிற்கு என்னை ஒரு மலையடிவாரப்பாதையில் நிறுத்தினான் . பிரபு மனைவியின்  சொந்த தம்பிதான்  கோவிந்தராசன் . ராசாத்தி படிக்கும் பள்ளியிலேயே பத்தாவது படிக்கிறான் .இவனுடைய இன்னொரு அக்கா சரசுவதியும் , என்னவள் ராசாத்தியும் ஒரே வகுப்பு . இன்று என்ன காரணத்தினாலோ சரசு பள்ளிக்கு வரவில்லை . ஆனால் பிரபு ,சரசுவின்வழிஎன்னைப்பற்றிய தகவலை ஏற்கனவே ராசாத்தியிடம் தெரிவித்திருந்தான் .அம்மலையைச்சுற்றிலும் நோட்டமிட ஆரம்பித்திருந்தேன் . ஏற்கனவே இந்த கிராமத்தில் சவுக்குத்தோப்புகளும் , காபிச்செடிகளும் அடிக்கொன்றாய் கண்பட்டன . இப்போது நான் நிற்கும் மலையடிவாரத்தில் சிறிதுதூரம் வனப்பகுதியாகவும் , அதைத்தாண்டிய குன்றுகளில் காபித்தோட்டமும் , சவுக்குத்தோப்புகளும் , ஆரஞ்ச் காடுகளுமாய் காட்சியளித்தன . நேற்று இரவு பெய்திருந்த மலையால் , அம்மலைமண் தன் உறுதியில் சிறிது தள்ளி , கவனமின்றி கால்வைப்பாரை வழுக்கிவிடத்தீர்மானமாய் இருந்தது தெரிந்தது . அம்மலைப்பாதைவழியே சில  இளைஞிகள் தங்களின் குறும்புப்பேச்சோடு பள்ளிக்குசென்றுகொண்டிருந்தனர் . சில ஆண்கள் எஸ்டேட் வேலைகளுக்கும் , காவல் காப்பதற்கும் சென்றுகொண்டிருந்தனர் .

‘அண்ணா ! அவதான் ராசாத்தி ’

என்று கோவிந்தன் கைக்காட்டிய திசையை நோக்கினேன் . அவ்வழியே சென்றுகொண்டிருந்த 10 பேரில் முதலாமாய் சென்று கொண்டிருந்தாள் .மலைநோக்கி ஏறிக்கொண்டிருந்ததால் , அவள் முகம் எனக்குத்தெரியவில்லை . மாற்றாய் அவளின் வாளிப்பான எழில்பொங்கிய மேனி அழகே தரிசனத்திற்கு கிடைத்தது .மஞ்சள்நிற ஸ்வட்டரோடு பள்ளி யுனிபார்மில் செல்லும் அவளை பார்த்தாகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு என்மூளையைத்தள்ளிவிட்டு , மனம் போனபோக்கில் அவளைநோக்கிநடையை ஆரம்பித்தேன் .

‘அண்ணா ! அவ பாக்குறா பாருங்க’ என்று கோவிந்த் இதோடு நான்குமுறை கூறிவிட்டான் .சரியாய் நான் தலைகுனிந்து நடக்கும்போதெல்லாம் அவள் பார்ப்பதுமாய் ,நான் தலைநிமிர்ந்து பார்க்கும்போது அவள் தலைகுனிவதுமாயே பத்துநிமிடம் கடந்தது .இந்த பத்து நிமிடத்தில் , ஆடவர்கள் அனைவரும் ஆங்காங்கே வளைந்து சென்றனர் . மிஞ்சியிருந்தது நானும் கோவிந்தும் , ராசாத்தி மற்றும் அவளுடைய ஊர்த்தோழிகள் 5 பேர் . ஆனால் என்ன காரணத்தினாலோ ராசாத்தி மற்ற பிள்ளைகளிடம் பேசாமல் தனியாய் பயணித்திருந்தாள் .இதன்மேலும் பொறுத்திருந்தால் நடப்பதைத்தாண்டி வேறெதுவும் நடக்காது என்பதால் முன்னேசென்று கொண்டிருந்த பூதகணங்களை கரெக்ட் செய்ய ஆரம்பித்தேன் .அவர்களிடம் பேசிக்கொண்டே மேலே பார்த்தவாறு சென்றுகொண்டிருந்த எனக்கு கிடைத்தது அந்த வெண்தாமரைமுகத்தின் பளீர் தரிசனம் .எல்லோரும் கூறிய அளவிற்கு அவள் என் கண்களுக்குத்தெரியவில்லையெனினும் அவளைப்பார்ப்பவர்களை கட்டாயம் அவள் சுண்டி இழுக்கும் மாயக்காந்தக்காரிதான் .ஆங்காங்கே பருவத்திற்கான பருக்கள் எட்டிப்பார்த்தாலும் ,அவளின் சிவந்த முகத்திற்கு திருஷ்டியாய்தான் தெரிந்தது . அதுவரை அவளைப்பார்த்தால் போதும் என்றெண்ணிய என் மனம் ,அவள்கூடவே பயணித்தால் என்ன என்று என்னுள் கேள்வியை எழுப்பித்தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தது .என்முன்னால் சென்ற மணிமேகலையையும் சசிகலாவையும் தாண்டி வேகவேகமாக பயணித்து ராசாத்தியை அடைந்தேன் .அவள் முன்னழகைக்காணும் நோக்கில் அவளுக்கு முன்னால் பயணித்து திரும்பிப்பார்த்தேன் . வயதுக்குமீறிய வளர்ச்சி அவள் உடலிலும் ,வயதுகுறைந்து காணப்பட்ட அவள்குழந்தைமுகமும் என் கண்களை வேறுபக்கம் திரும்பவிடாமல் செய்தது . என்னைப்பார்த்தவாறே சிறிதுதூரம் பயணித்த அவளுக்கு என்னைப்பிடித்திருக்கவேண்டும் . அருகிலிருந்த கோவிந்தை அழைத்து என்னைப்பற்றிக்கேட்டாள் .

‘இவருதான் ராஜாவா ?’ என்ற அந்த கீச்சுக்குரல் , குயில்களுக்கு சவால்விடும் வண்ணம் தெள்ளத்தெளிவாய் , தென்றலின் சாரலாய் என்னுள் ஒலித்தது .

‘ஆமாக்கா ’

‘நா நம்ப மாட்டேன்’ என்ற ராசாத்தியின் குரலுக்கு மறுமொழியிடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் . நான் பல பெண்களிடம் பேசியிருந்தாலும் , அவளுடன் பேசப்போகிறோம் என்ற நினைப்பே என்னுள் பயத்தை பலவாறாக பெரிதாக்கியது .

‘ஏம்பா ! ஐடி ப்ரூப் எதுனா கொண்டு வரவா ? அப்பவாச்சும் நம்புவியா நாந்தான் ராஜானு ?’

அவளிடம் பதில் எதுவுமில்லை . ஆனால் அதைத்தாண்டி ஒரு குழந்தையின் குறும்புத்தனமான சிரிப்பு வெளிப்பட்டது .

‘இப்போ ட்வெல்த் தான நீ ?’

‘ம் ஆமா !’

‘அப்புறம் , என்ன க்ரூப் எடுத்துருக்க ?’

‘கம்ப்யூட்டர் சயின்ஸ் ’


‘சேம் பிஞ்ச் . நானும் ட்வெல்த் படிக்கும்போது அதே க்ரூப்தான் . அப்புறம் , ஸ்கூல்லாம் எப்படி போகுது ?’

‘நல்லா ஜாலியா தான் போகுது ’

‘எதுவரைக்கும் போறிங்க கோவிந்த் ’ என்ற மெல்லிய கேள்வி எனக்கும் கேட்கும் வண்ணம் கோவிந்திடம் வினவினாள் .
‘அவரோட வண்டிக்கு பெட்ரோல் வாங்க போறோங்கா .’

அந்நேரத்தில் ஒரு அரைக்கிழவன் பீடிகுடித்த வண்ணம் காத்திருந்தான் .ராசாத்தி அவனைப்பார்த்ததும் நின்றுவிட்டாள் . பின் அவனுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தாள் . நான் கோவிந்தைப்பிடித்து அவன் யாரென விசாரிக்க , அவன்தான் இங்கு பள்ளிக்கு வரும் பெண்களுக்கு எஸ்கார்ட் மற்றும் ராசாத்தியின் உறவினன் என தெரிந்தது .

‘’தம்பிய எங்கயும் பார்த்ததில்லையே ! எந்த ஊரு ‘’

‘நா சேலம்ங்க . பிரபு இருக்காப்டில , அவரோட அத்தையூட்டு பையன் .’

‘ஓ !சரி சரி ! என்ன இந்த பக்கம் .?’

‘சும்மாதாங்ணா ,பெட்ரோல் வாங்கிட்டு அங்க ஒரு பையன பார்த்துட்டு வரனும் . அதுக்காகத்தான் .’

‘என்ன பன்றிங்க தம்பி ?’

‘நா சென்னைல வொர்க் பண்ணிட்ருந்தேன் .இப்போ ரிசைன் பண்ணிட்டு கவர்மென்ட் வேலைக்கு வெயிட் பன்றேன் .’

‘சம்பளம் எவ்வளவு தருவாங்க ?’

‘மாசம் 40ஆயிரம் வாங்கிட்ருந்தேன்ணா ’

‘அடேங்கப்பா !நாங்க கஷ்டபட்டு என்னதான் மரத்த தூக்குனாலும் எங்களுக்கு ஒருநாளைக்கு 300 ரூபாக்கு மேல கெடைக்கல .’

சிறிதுதூரம் அவனுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும்போது அவன் ஒருகேள்வியைகேட்டான் .

‘அப்புறம் தம்பி . கல்யாணம் பண்ணிட்டிங்களா ?’

‘இல்லைணா ! வயசு இப்போதான 23 ஆகுது .ஒரு மூனு வருஷம் போகட்டும் .’

‘இங்க நம்ம ஊர்லயே பொண்ணு ஏதும் பாக்கற எண்ணம் இருந்துச்சுனா சொல்லுங்க . முடிச்சு வச்சிடலாம் ’ என்று அவன் என்னையும் ராசாத்தியும் பார்த்தவாறே கூறினான் .அந்நேரத்தில்,  ராசாத்தியிடம் இருந்து வெட்கம் கலந்த ஒருவித சிரிப்பு வெளிப்பட்டது .

‘பண்ணிடலாங்ணா ’ என்றவாறே ராசாத்தியைப்பார்த்தேன் . சிறிதுநேரத்திற்குப்பின் ,அவன் வேகவேகமாய் , என்னை ராசாத்தியின் எஸ்கார்டாக்கிவிட்டு எங்களுக்குமுன் சென்றுவிட்டான் . பின்னால் வந்த மணிமேகலையும், சசிகலா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் பேசும் சப்தம் மட்டும் அந்த காப்பித்தோட்டத்தில் இருந்து வர, ஆட்களைகாணவில்லை .இப்போது , நானும் கோவிந்தும் ராசாத்தியும் மட்டுமே அவ்விடத்தின்வழி பயணித்துக்கொண்டிருந்தோம் .

‘அப்புறம் படிச்சிமுடிச்சிட்டு என்னவாக போறிங்க ?’

‘வேறென்ன , ஹவுஸ்வொய்ப்புதான் . சரியாக்கா ?’ – என்ற கோவிந்தனின் மறுமொழி என்னை காண்டாக்க ,

‘டே கோவிந்தா , ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான ஆம்பிசன் இருக்கும் . அதுக்குள்ள எதுக்குடா கல்யாணம் ?ஒருவேள அதுக்குள்ள கல்யாணமானாலும் , கல்யாணத்துக்குபின்னாடியும் படிக்கவைக்கற நல்ல புருஷன் என்ன மாதிரி அவங்களுக்கு கிடைக்கனும்னு வேண்டிக்கடா .’ – என்றேன் .

மீண்டும் வெட்கச்சிரிப்பு . சிறிதுநேரத்திற்குப்பின் , அவளே என்னைப்பார்த்து கேட்டாள் .

‘உண்மையா சொல்லுங்க ! நீங்க எதுக்கு வந்திருக்கிங்க ?’

‘வேற எதுக்கு ? உன்ன சைட் அடிக்கத்தான் ’

‘பொய் சொல்லாதிங்க .என்னைலாம் யாரு சைட் அடிப்பா ?’

‘அடிப்பாவி! உன்ன சைட் அடிக்காத ஆளுங்கணாஉலகத்துலயே ரெண்டுபேர் தான் இருபாங்க 

‘யார் அந்த ரெண்டு பேரு ?’

‘கண்ணு தெரியாதவனும் ,ஆம்பிளையா இல்லாதவனும்தான் . மத்தபடி பொண்ணுங்களே பாத்து பொறாமப்படவைக்கற அளவுக்கு நல்ல ஃபிகர் தான் நீ’

அப்படியே எங்களின் பேச்சும் தொடர்ந்தது .கடைசியில் முடிவுக்கு வந்த இடம் பேருந்து நிலையம் . அந்த பேருந்து நிலையத்தில் 2 மணிநேரத்திற்கு ஒரு பேருந்து தான் வருமாம் . இவள் மட்டும் 8.30 மணி பஸ்ஸை மிஸ் செய்யக்கூடாதா என்று என் மனம் ஏங்க ஆரம்பித்திருந்தது . அவள் என்னையே பார்த்தவாறு நின்றாள் . நாங்கள் வந்து சேர்ந்தநேரம் ,அடுத்த நிமிடமே பஸ் வந்து தொலைத்தது . என்னைப்பார்த்து சிரித்தவாறே அவள் பை சொன்னாள் .
அதன்பின் நான் கிராமத்திற்குவந்தடைந்தேன் . மாலை 5.30 –க்கு அவள் மீண்டும் பள்ளி விட்டு வருவாள் என்று தெரிந்தபின் என்னாள் சும்மா இருக்கமுடியவில்லை . நொடிகள் நிமிடமாய் உரண்டோடும் விபரித கவிதை வரிகள் எனக்குச்சாதகமாய் உண்மையை உணர்த்தும் நெற்றிப்பொட்டில் அறைந்தது . மாலை மீண்டும் அவளுக்காக அங்கு சென்று பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன் .அவளும் வந்தாள் .மீண்டும் காலையில் சந்தித்த அதே மனிதர்கள் மற்றும் இன்னும் சில புதியவர்கள்.எல்லாரையும் ஓரங்கடிவிட்டு அவளைத்தேடி சென்றேன் . இம்முறை என் மாமன் பிரபுவுடன் என் பைக்கில் சென்று காத்திருந்தேன் . அவனை முன்னால் , அந்த சேறு அடர்ந்த சாலையில் செல்லுமாறு பணித்துவிட்டு பின்னால் நாங்கள் காலையில் வந்திருந்த ஒத்தையடிப்பாதையில் என் பயணத்தைத்துவக்கியிருந்தோம் . என்ன காரணத்தினாலோ அந்த எஸ்கார்ட் ஒரு ஓரமாய் எனக்கு வழிவிட்டு பீடி பற்றவைக்க முயற்சித்திருந்தான் .அவள் முன்னால் சென்றுகொண்டிருக்க , அவள் அருகில் எப்படியாவது சென்றுவிடவேண்டுமென முயற்சித்து ஒவ்வொருவராக சைட் எடுக்க முயற்சித்து தோற்றுகொண்டிருந்தேன் . திடீரென முன்னால் சென்றவள் அருகில் இருந்த ஒரு பாறையில் ஏறி நின்று வருவோர்களை எல்லாம் முன்னால் அனுப்பிவிட்டு நான் வந்ததும் என்னுடன் பயணிக்க ஆரம்பித்தாள் .எனக்குள் எல்லா ஆனந்தங்களும் எல்லையில்லாமல் வந்தது போன்றதொரு உணர்வுடன் அவளை நெருங்கினேன் .

‘அப்றம் , ஸ்கூல் எப்டி போச்சு ?’

‘ம் . சூப்பரா போச்சு . நீங்க என்ன இந்த பக்கம் ?’

‘ச்சும்மா தான் .ஒரு தேவதைய பாக்கலாம்னு வந்தேன் ’

‘ஓ ! தேவதைய பாத்துட்டிங்களா ?’ – என்ற அவளின் குழைவான வார்த்தையும் , அதில் மறைந்திருந்த சிறுதுளிநக்கலும் மேலும் என்னை கிறங்கடித்துக்கொண்டே இருக்க ,

‘ம் . பாத்துட்டேன் ’ – என்றதும் அவளுக்கு ஒருவிநாடி அதிர்ச்சியும் , மறுவிநாடி ஆவலும் மனதினுள் உண்டாகியிருப்பது  அவளின் காந்தக்கண்களின்வழி என்னால் உணரமுடிந்தது .

‘யாரு உங்க தேவதை ?’


‘வீட்டுல கண்ணாடி இருக்கா ?’

‘ம்’

‘வீட்டுக்குப்போனதும் , அந்த கண்ணாடிமுன்னாடி போயிப்பாரு பா . என்னோட தேவதை உனக்கும் தெரிவா .’

ஒருவாறு வெட்கம் கலந்த சிரிப்புடன் ‘அதெல்லாம் தெரியமாட்டா ’ என்றாள் .

‘அப்டினா என்னோட கண்ண பாரு . அவ கண்டிப்பா தெரிவா .’

அடுத்தவிநாடி அவள் என்னை நேருக்குநேர் நோக்கினாள் , இல்லை இல்லை  , தாக்கினாள் . அவள் பார்வையின் பவர் தெரியாமல் பார்க்கச்சொன்னது எவ்வளவு பெரிய பாவம் என்று அப்போது தான் உணர்ந்தேன் . ஆனாலும் அவள் முகத்தைப்பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்று மனம் கெஞ்சுவது அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் .


‘தெரியிறாளா ?’

‘ம்’ – என்றவள் சிறு ‘க்ளுக்’ சிரிப்போடு எனக்கு முன்னால் நடைபோட ஆரம்பித்தாள் .அவ்வப்போது என்னையும் அவளையும் பிரிக்க பெரும் பிரயத்தனத்துடன் , பனிமேகம் இடையிடையே தவழ்ந்துகொண்டே இருந்தது . இதுதான் தக்க சமயம் . இவளிடம் என்போன் நம்பரை கொடுத்துவிடவேண்டும் . அவள் போன் நம்பரை கேட்பது வேஸ்ட் தான் . ஏனெனில் அந்த மலையில் , சிக்னல் கிடைக்காது .

‘என்ன பிடிச்சிருக்கா ராசாத்தி ?’

‘’ – அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை . மீண்டும் கேட்டபோதும் அவள் மௌனமாகவே இருந்தாள் . அதுவரை அமைதியாய் இருந்த என்னுள் புது பயமும் , சிறுகோவமும் உதயமானது .

‘வெளிப்படையா சொல்லுடா .என்ன பிடிச்சாலும் , பிடிக்கலைனாலும் பரவால்ல .’-இரண்டாம் பாகத்தைப்ப‍டிக்க‍  கீழே உள்ள‍ லிங்கை அழுத்துங்கள்.

 http://vimarsanaulagam.blogspot.in/2014/11/2.html


உங்கள் விருப்பம்

2 comments:

 1. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete