Thursday, 6 November 2014

ராசாத்தி – சிறுகதை – பாகம் - 2முதல்  பாகத்தைப்ப‍டிக்க‍  கீழே உள்ள‍ லிங்கை அழுத்துங்கள்.

http://vimarsanaulagam.blogspot.in/2014/11/1.htmlமீண்டும் அமைதியாய் அவள் முன்னேறிக்கொண்டிருந்தாள் . திடீரென நின்றவள் என்னை முன்போகுமாறு கண்ணாலயே பணித்தாள் . எனக்கு உறுதியானது ,அவளுக்கு என்னைப்பிடிக்கவில்லை . வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண் என்னிடம் எதுவும் கூறாமல் போகிறாள் .எனக்கு மேலும் பேச மனம் வரவில்லை . கால்கள் துளிசுரனையற்று தாமாகவே நடக்க ஆரம்பித்தன .இன்றைய தினம் என்னை ஒரேயடியாய் மகிழ்ச்சியில் ஆழ்த்து , துக்கத்தில் தவிக்கவைத்த ஒரு மாபெரும் தினமானது . நான் முன்னாலே சென்றுகொண்டிருக்க ,ராசாத்தி பின்னால் வந்துகொண்டிருந்தாள் .

‘ஐயோ ’ – என்ற திடீர் கூச்சல் வர , ராசாத்தியின் கூச்சலில் என்ன ஆயிற்றோ என்று அவள் அருகில் சென்றேன் .

‘என்ன ஆச்சு ? ஏன் கத்துனிங்க ?’

‘பாம்பு’

‘எங்க ?’

‘அது ஓடிடுச்சு ?’

‘பாத்து வரமாட்டியா பா ?’ – என்ற கேள்வி என்னுள் இருந்து வெளிவந்ததும் , அவள் மீண்டும் ஒரு மந்திரப்புன்னகை  உதிர்த்தாள் .

‘பாம்பு ஓடுனது நான் வரும்போது இல்ல .நீங்க முன்னாடி போகும்போதுதான் அது ஓடுச்சி . அதனால தான் கத்துனேன் .’

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தவித்த வண்ணம் , அவளின் முகத்தைப்பார்த்து சிறு புன்னகை உதிர்த்தவாறே திரும்பி நடந்தேன் . அதுவரை உர்ரென முகத்தைவைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த எனக்கு அதன்பின் காரணமேயில்லாமல் உதட்டின்ஓரம் ‘சீஸ்’ சொல்லாமலே சிறு சிரிப்புடன் நடக்க ஆரம்பித்தேன் .

‘பாம்பு வர்ரதுகூட தெரியாம நடப்பிங்களா ?’ – ராசாத்தி .

‘என்னோட கண்ணு மட்டுமில்ல ,மனசு முழுசும் ஒருத்தி மட்டும்தான் தெரியிறா ’ -  நான் .

அவளின் முகபாவனைகளை பார்க்கமுடியாதபடி முன்னால் சென்றுகொண்டிருந்தேன் .இதோ , இன்னும் சிறிது தூரம்தான் . அதன்பின் அவள்வீடு நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவாள் . இவளிடம் நம் நம்பரை சேர்த்துவிடவேண்டும் .அதற்கு சிறந்த வழி ,கோவிந்தன் தான் .நான் இங்கு ராசாத்தியிடம் பேசிக்கொண்டிருந்த இடைப்பட காலத்தில் மணிமேகலையிடம் படுமொக்கையடித்துவிட்டான் கோவிந்தன் . நான் கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கோவிந்தனை கூப்பிட்டேன் .

‘கோவிந்தா ’

‘என்னாணா ?’

‘அண்ணனுக்கு மறக்காம டெய்லியும் போன் பண்ணுடா .’

‘நம்பர் சொல்லுங்கணா !’

என்னுடைய போன் நம்பரை கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன் . திரும்பி பின்னால் பார்த்தேன் . ராசாத்தி இன்னமும் சிரித்துக்கொண்டே இருந்தாள் . இதோ , அந்த மலையடிவார கிராமத்திற்கு போகும் பெரிய பாதைவந்துவிட்டது . இனிமேல் அவளுடன் பேசினாலோ , வந்தாலோ கிராமத்து ஆட்கள் பார்த்துவிடுவார்கள் .இருந்தாலும் அவளுடன் பேசிக்கொண்டே வந்தேன் . அதுவும் அவள் அருகில் , அவள் கை என் கையுடன் உரசும்வண்ணம் நெருங்கியபடியே வந்தேன் . திடீரென என் பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்க திரும்பிப்பார்த்தால் , பிரபு .

‘ப்பா ! மாப்ள , ரோடாடா இது ? ஒரே இருட்டா இருக்கு . எப்படிடா நீ வந்த ?’

‘அதான் எங்கூட ஒரு பொண்ணு விளக்கு மாதிரி பளிச்சினு வருதே ,அப்றம் நா எதுக்கு மாம்சு பயப்படனும் .’

‘சீக்கிரம் விளக்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாடா .விளக்கேத்தனும் .’

‘நீ கவலப்படாத மாமா ! நம்ம வீட்டு குலவிளக்க பத்திரமா கொண்டுவந்து சேர்க்கறன்டா .’

அவன் பைக்கில் சென்றுகொண்டே பேசியதாலும் ,எனக்குள் இருந்த கெத்து எனும் உணர்வாலும் மேற்கண்டவாறு சென்ற உரையாடலை கூறிமுடித்துவிட்டு ராசாத்தியிடம் என்பார்வையை திருப்பினேன் .கிட்டத்தட்ட காளி கணக்காய் முழுகோவத்துடன் பயங்கர உக்கிரமாக காட்சியளித்தாள் . அதுவரை நடந்துவந்தவள் அங்கயே நின்றுவிட்டாள் . இனி பின்னால் வரும் அந்த பீடிக்கார எஸ்கார்டுடன் தான் வருவேன் என்ற தீர்க்கமான முடிவை எடுத்திருப்பாள் போலும் . ஆட்கள் நடமாட்டம் அங்கு காணப்பட்டது .வேறுவழியில்லாமல் அங்கிருந்து அடிமேல் அடிவைத்து மெல்ல மெல்ல நகர்ந்தேன் .அதோ , அங்குபிரியும் பாதையில் வலப்புறம் நான் செல்லவேண்டும் , இடப்புறம் அவள் செல்வாள் . அந்தப்பாதையில் நாங்கள் பிரிந்தாலும் வாழ்க்கையில் பிரியவேகூடாது என்றுமட்டும் என் மனம் பரிதவித்தது .அங்கு பிரபுவும் வண்டியில் அமர்ந்துகொண்டு எனக்காக காத்திருந்தான் .பின்னாள் ராசாத்தி வந்துகொண்டிருக்கிறாள் என்பதை அவளின் கொலுசு எனக்கு பறைசாற்றியது .நான் பிரபுவிடம் சென்று நின்றுகொண்டிருந்தேன் .அவள் என்னைக்கடந்து அந்த பக்கம் திரும்ப எத்தனித்தாள் .

‘டே கோவிந்தா ! ஐ யம் சாரி டா . நா அப்டி சொல்லிருக்கக்கூடாதுடா . மன்னிச்சிடுடா !கொஞ்சம் சிரிச்சமாதிரியே இருடா , ப்ளீஸ்’ – என்று நான் கத்தியது அவள் காதில் விழுந்திருக்கவேண்டும் . என்னைப்பார்த்து சிரித்தவாறே  ,பின்னாள் வருபவர்களுக்குத்தெரியா வண்ணம் கைக்காட்டினாள் . அந்நேரத்திற்கும் , அவளின் தந்தை வண்டியில் வரவும் சரியாய் இருந்தது . கூடவே மழையும் தான் . அவள் தந்தையுடன் அவள் செல்ல ,மின்னல் வேகத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு நாங்கள் பறக்கவும் மழை எங்களின் மீது விழவும் சரியாய் இருந்தது .எந்தவொரு காரணமும் இன்றி மழை மிக அழகாய் தென்பட்டது எனக்கு .

‘என்னடா மாப்ள ஆச்சு ?’ – பிரபு .

‘ம் .சக்சஸ் மாம்சு.’

அதன்பின் அவளிடம் இருந்து போன் வருமென இரண்டு நாட்கள் காத்திருந்தேன் . ஆனால் , என் பங்காளி தான் வந்தான் . வரும்போது கண்கள் சிவந்து தள்ளாடிக்கொண்டே வந்தான் .

‘என்ன பங்கு , சரக்கடிச்ச மாதிரி வர ?’

‘சரக்குத்தான் பங்கு அடிச்சிருக்கேன் .’

‘ஏன்டா ? என்ன ஆச்சு ?’

‘அப்டியே ஒன்னுமே தெரியாதமாதிரியே பேசுறியே பங்கு .எல்லாத்தையும் அவ எங்கிட்ட சொல்லிட்டா . நீ அவகிட்ட பேசுனது,  போன் நம்பர் கொடுத்ததுனு எல்லாத்தையும் சொல்லிட்டா பங்கு . இப்படி நம்பவச்சி , முதுகுல குத்திட்டியே பங்கு .’

தழுதழுத்த குரலில் ,ஏறத்தாழ அழுகையின் உச்சியில்  அவன் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு , என்னுள் இருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை .கிட்டத்தட்ட ஒரு எட்டப்பனாய் அவன் கண்முன் நான் தோன்றினேன் .என்னுள் மனது , என்னை கொஞ்சம்கொஞ்சமாய் கொல்ல ஆரம்பித்தது .குற்ற உணர்ச்சியின் விளிம்பில் ,நெருப்பில் இட்ட புழுவாய் மனம் துடித்தது .

‘நீ போ பங்கு .நா வீட்டுக்கு நாளைக்கு வரேன் . நா வந்து உங்கிட்ட எல்லாம் சொல்றேன் . மாமன் மேலே ஊர்ல தான் இருக்கான் . நா அங்க வந்துட்டு உனக்கு எல்லாம் தெளியவைக்கிறேன் .’

இப்போதைக்கு அவனை சமாதானப்படுத்தியாயிற்று . ஆனால் , மனம் மாத்திரம் சமாதானத்திற்கு வரவில்லை . அதுவரை மனம் முழுமையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ராசாத்தியின் முகம் , தானாய் மறைந்து மணிகண்டனின் பரிதாபகரமான முகம் என்னை வாட்டியெடுக்க ஆரம்பித்தது . அடுத்த நாள் வீட்டிற்கு வந்த பிரபுவிடம் இதைப்பற்றி பேச ஆரம்பித்தேன் . அவனும் குற்ற உணர்ச்சியில் இருந்திருக்கவேண்டும் .

‘மாப்ள .  அந்த ராசாத்தியெல்லாம் நமக்கு வேண்டாம் . அவள தூரத்தூக்கிப்போடு . ஆயிரந்தானிருந்தாலும் அவள 4 வருஷமா உயிருக்குயிரா அவன் லவ் பண்ணிருக்கான் . அதுமட்டுமில்ல ,அந்த பிள்ளைக்கும் அவனதான் பிடிச்சிருக்குபோல . அத விட்டுடு மாப்ள .’

என் குற்ற உணர்ச்சியை போக்கவேண்டுமெனில் , தியாகத்தால் மட்டும்தான் முடியும் . அவனின் வார்த்தைகளில் இருந்து வந்த ‘விட்டுடு’ என்ற வார்த்தை ,என் காயத்தை பெரிதுபடுத்துவதற்கு பதிலாய் , ஆறுதலளிக்கும் டைக்ளோபினாக் ஜெல்லாக இருந்தது .

‘சரி மாமா .’

இரண்டுநாள் கழிந்தது .ராசாத்தியின் ஞாபகம் அவ்வபோது வந்தாலும் ,மணியைப்பார்த்து மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன் .மூன்றாம் நாள் அவனைப்பார்த்து மன்னிப்பும் கேட்டாகிவிட்டது .அவனும் பெருமனதுடன் அதை ஏற்றுக்கொண்டான் . எல்லாம் ஆல்கஹாலின் மகிமை .

அதன்பின் அன்றைய இரவு நிம்மதியான உறக்கத்தைத்தேடி சென்ற எனக்கு , போன் வடிவில் வந்தது ஒரு இன்பஇதய அதிர்ச்சி .

‘என்ன , ஊருக்கு வந்துட்டு பாக்காமலயே போயிட்டிங்க ?’

என்ற குரலுக்கு சொந்தக்காரி அவளே தான் . என்னை இரண்டு நாட்களாய் கட்டுப்போட்டு இன்பச்சித்திரவதை செய்த அச்சூனியக்காரியே தான் .

‘இல்ல . . . வேண்டாம் விடுங்க . சாப்டிங்களா ?’ – நான் .

‘சாப்டேன் . நீங்க ?’

‘சாப்டேன் .’– நான் .

‘என்மேல கோவமா ?’

‘எதுக்கு ?’– நான் .

‘ஒருவாரம் கழிச்சி போன் பன்றேன்னு , என்மேல கோவமா ?’

‘அப்டிலாம் ஒன்னுமில்ல .’– நான் .

‘அப்றம் என்ன ஒருமாதிரியா பேசுறிங்க ?’

‘இல்ல ,ஒன்னுமில்ல ’– நான் .

‘எங்கிட்ட சொல்லமாட்டிங்களா ?’

‘இல்ல , அப்டி எதுவும் இல்ல . உங்கள இனிமேல் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னுதான் இன்னைக்கு வரல .’– நான் .

‘ஏன் ?’

‘……..என்னதான் இருந்தாலும் நீங்க எம்பங்காளி மணியோட ஆளு . அத’– நான் .

‘என்னது ?யார் சொன்னா ?’ – கோபமான அவளின் குரல் .

‘மணி தான் சொன்னான் .’

‘அவன் அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிட்ருக்கான் .’

‘அப்போ நீங்க யாரையுமே லவ் பண்ணலாயா ?’

‘உங்கள தவிர வேற யாரையும் நா லவ் பண்ணல ’

என்று கூறிவிட்டு துண்டானது அவளது இணைப்பு . என்னுள் வார்த்தைகளால்  அடக்கிவிடமுடியாத நிலையில் இருந்தேன் . ஒருபுறம் மாபெரும் சந்தோஷம் , மறுபுறம் மணியைப்பற்றிய கவலை . நேராக பிரபுவிடம் சென்று , அவள் கூறிய விஷயத்தைக்கூறினேன் . அவன் , உடனே கோவிந்தனுக்கு போன் செய்தான் .கடைசியில் , நானும் ராசாத்தியும் பேசிய விஷயத்தை மணியிடம் தெரிவித்தது கோவிந்தன் தான் என்பது உறுதியானது . அதன்பின் ,ராசாத்தியுடன் தினம் போனிலும் , வாரம் ஒருமுறை நேரிலுமென காதலை பலப்படுத்தினேன் . நடுவே மணியின் முறுக்கல் மற்றும் அதற்கான மற்று மருந்து ஆல்கஹால் என வாங்கிக்கொடுத்து சமாதனப்படுத்தினேன் . பின் ,ஒரு நிரந்தர வேலை கிடைத்து , வீட்டில் சண்ணை போட்டு அவளை திருமணம் செய்து கொண்டேன் .இப்போது , மூன்று வயதில் ஒரு மகன் எனக்கு இருக்கிறான் . இதுதான் என் காதல் கதை .

======================


‘மெக்னேஷ் , கதைய எழுதும்போது விவரிப்புலாம் நல்லா எழுதிடுங்க  . என் அம்மு பேர அப்படியே போட்டுடாதிங்க . பேர மாத்தி எழுதுங்க . அவ படிச்சா அவ்ளோதான் . சரி , ஏதாச்சும் சாப்டறிங்களா ? ‘ என்றார் ராஜா .

‘சாப்டறேன் சார் .’ என்றேன் . எழுத்தாளனாக வேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்த எனக்கு கிடைத்த இந்த ஒரிஜினல் கதையை பக்காவாக எழுதி பேர் வாங்கியாகவேண்டும் என்ற ஆசை , சுனாமியாய் உருவெடுத்துக்கொண்டிருந்தது . என் உறவினர் ஒருவரான ராஜாவின் கதை ஓரளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறியதனால் வந்து கதையை கேட்டாகிவிட்டது  . கதை கேட்டுமுடியும் வரை இல்லாத பசி , அவர் கேட்ட ஒருவார்த்தையால் வந்து விட்டது .

‘மெக்னேஷ் ,இங்க கொஞ்சம் வாங்க ’ – என்று அவரின் குரல் கிச்சனில் இருந்து வெளிப்பட உள்ளே நுழைந்தேன் .

‘என்ன சார் ’

‘ஒன்னுமில்ல ,இந்த வெங்காயத்த நறுக்குங்க .நா போயி மேகி வாங்கிட்டு வந்துடறேன் ’ என்றார் ராஜா .

‘இல்ல சார் பரவால்ல விடுங்க . நா வீட்டுக்கு போய் சாப்டுக்கறேன் .’


‘ஓ .சாரி தப்பா நினச்சிக்காதிங்க  . டெய்லியும் எனக்கும் அவளுக்கும் மட்டும்தான் சமைப்பேன் . இன்னைக்கு நீங்க திடீர்னு வந்ததால , சாப்பாடு தீந்து போயிடுச்சு . மன்னிச்சிடுங்க .’

‘சார் பரவால்ல விடுங்க . ஆமா , சமையல் யாரு செய்வாங்கனு சொன்னிங்க ?’

‘நாந்தான் மெக்னேஷ் .அவளுக்கு சமைக்கத்தெரியாது . அவ்வளவா வீட்டுவேலையும் செய்யமாட்டா . இது கொஞ்சம் கிராமமா இருக்கறதால வேலைக்காரி யாரும் கிடைக்கல . அதான் வேறவழியே இல்லாம நானே எல்லாம் செஞ்சிட்ருக்கேன் . சீக்கிரமா சிட்டி பக்கமா பாத்து வீடு வாடகைக்கு எடுக்கனும் மெக்னேஷ் .’ என்றார் ராஜா . 

தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டு என்னையும் வெறுப்பேற்றியது .

'அம்மாடி ! இதுதான் காதலா !!!?'
உங்கள் விருப்பம்

5 comments:

 1. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete