Thursday, 18 December 2014

BONISM - சிறுகதை

‘இப்படிலாம் கண்டிப்பா பண்ணனுமா ?’


‘ஆமா ! நாம யாருனு அவங்களுக்கு கண்டிப்பா காட்டனும்’


‘அவங்கள்லாம்  பாவம் . நம்மள நம்பித்தான் அவங்க இனமே இருக்கு ! ’


‘யாரு பாவம் ?  இதுநாள் வரைக்கும் அவங்க நமக்காக என்ன செஞ்சிருக்காங்க ? அவங்களால இறந்த நம்ம முன்னோர்கள் , உறவினர்கள்  இவங்களையெல்லாம் மறந்துட்டியா ? நாம கஷ்டப்பட்டு சேமிக்கிற சாப்பாட்ட , நம்ம அனுமதியில்லாம திங்கறது மட்டுமில்லாம , நம்மள எப்படியெல்லாம் அழிச்சாங்க ! கடவுள் நம்மள அவங்களுக்கு உதவ சொல்லி தான் அனுப்பி வச்சாரு . ஆனா அத மனிதர்கள் புரிஞ்சிக்கல. அவங்களோட சொகுசுக்காக நம்மள கொன்னு அழிச்சிப் பயன்படுத்த நினைச்சாங்கலே தவிர வேற என்ன நமக்கு செஞ்சாங்க ?’


‘..’


‘நாம எதுக்காக இந்த உலகத்துல இருக்கோங்கிறதையே மறந்துட்டு , அவங்களோட அடிமைகள் மாதிரி தான நம்மள நடத்தனாங்க ? நம்ம இனம் வளர அவங்க செஞ்ச உருப்படியான விஷயம் எதுவும் இருக்கா ?


‘சரி ! இருந்தாலும் நாம  கிளம்பறதால , ஒரு பாவமும் அறியாத மத்த இனங்களும் அழிஞ்சிடுமே !’‘இல்ல ! விலங்குகள் , பறவைகள்-னு மத்த உயிரனங்களும் நம்மோடதான் வராங்க ! மனிதர்கள் மட்டும்  இல்லாத புதுகிரகத்துல நம்மள குடிவைக்கிறதா கடவுள் வாக்குக் கொடுத்திருக்காரு .’


‘எப்படி எல்லோரும் கிளம்பறதுணா ? புரியலையே !’


‘கடவுள் ,  இங்கருந்து நம்ம உயிர மட்டும் எடுத்து , மனிதர்கள் கண்டுபிடிக்கமுடியாத ஒரு கிரகத்துல கொண்டுபோய் விடப்போறார் . அங்க மறுபடியும்  செடியா நம்ம வாழ்க்கைய தொடங்கப்போறோம் . அதாவது நம்மோட ஆரம்பகால வாழ்க்கை . ஆனா இதுல  ஒரு பிரச்சனை இருக்கு .


‘என்ன பிரச்சனை ?’


‘நாம அந்த கிரகத்துல போனதும் இங்க இருந்த நம்மோட நினைவுகள் எல்லாம் அழிஞ்சிடும் .’


‘ஓ ! எப்போ நாம கிளம்பறோம் ?’


‘நாளைக்கு !’


என்ற லோபாவிடம் அதற்குமேல் பேச , கோஷாவிற்கு மனம் வரவில்லை . சென்ற நூற்றாண்டில் தொடங்கியது இந்த போராட்டம் . மனிதர்களை விட்டு நமக்கான கிரகத்துக்கு சென்று அமைதியான வாழவேண்டுமென்று , தாவரங்கள் அனைத்தும் வனதேவதையிடம் முறையிட ஆரம்பித்தன. வனதேவதையும் மனிதர்கள் தங்களை அழிக்கும் முறைகளை அறிந்து கவலையுற்று கடவுளிடம் சென்று பேசினாள் . கடைசியில் கடவுள் ஒரு ஒப்பந்தத்தின்பேரில் கோரிக்கைகளை ஒப்புக்கொண்டார் . இந்த செய்தி இன்று தான் இருவருக்கும் தெரிந்தது . ‘லோபா’விற்கு எப்போதும் மனிதர்களைப்பிடிக்காது . அதற்கான காரணமும் அவளிடம் இருக்கிறது . ஆனால் ‘கோஷா’விற்கு மனிதர்கள் மீது கொள்ளை பிரியம் . காரணம் , கிட்டத்தட்ட மனிதர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவது அவளுக்குப்பிடித்திருந்தது .மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் , கண்ணுக்குத்தெரியாத பாக்டிரியங்களில் இருந்து உயிருடைய அனைத்து உயிரிகளுக்கும் உதவுவது அவளுக்குப் பெருமையாய் இருந்தது . ஒரு மரமாய் பிறந்ததை எண்ணி தினமும் சந்தோஷப்படுவாள் . அதிலும் தன் கிளையினுக்கடியில் இருக்கும் குடும்பத்திலுள்ள ஏழுவயது குழந்தைமீது அதீத பாசம் . பெரும்பாலும் கோஷாவின் நிழலுக்கடியில்தான் அவள் விளையாடுவாள் . கிட்டத்தட்ட கோஷாவின் நெருங்கிய தோழி . அவள் வரும்போதெல்லாம், கோஷா தன் இலைகளை அசைத்து , தென்றலை வரவழைத்து அவளிடம் தன் பாசத்தைக்காட்டுவாள் . தினசரி கோஷாவின் மீது அவளின் பூக்கரம் படவில்லையெனில் பெரும் கஷ்டமாக இருக்கும் . இத்தனைக்கும் கோஷாவுக்கு அவள் எதுவும் செய்தது கிடையாது . ஒருபொட்டு தண்ணீர்கூட விட்டதில்லை .


நாளையிலிருந்து தான் நேசிக்கும் மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாய் அழியப்போவதை நினைத்து பெருந்துயரத்தில் கோஷா ஆழ்ந்தாள் . லோபாவோ மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக்கொண்டிருந்தாள் . தன் கிளையினையும் இலையினையும் ஆட்டி அசைத்து தென்றலைத்தாண்டி , புயலை உருவாக்கும் நிலையில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தாள் . கிட்டத்தட்ட எல்லா தாவரங்களும் மகிழ்ச்சியில்தான் மிதந்துகொண்டிருந்தன . பறவைகளும் , கடைசியாக தாங்கள் வாழ்ந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து , தங்களின் நினைவலைகளை அசைபோட்டுக்கொண்டிருந்தன . விலங்குகளுக்கு இந்த இடமாற்றத்தினால் பெரும் ஆர்வம் கூடவில்லையெனினும் , புதுஉலகை நோக்கிய தங்களின் பயணத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தன . தனக்கான உணவினை உற்பத்தி செய்யக்கூட மறந்து , துக்கத்தில் இருந்தாள் . கடவுளின் வாக்கு என்பதால் மீறமுடியாது என்பதால் என்ன செய்வது என்று அவளுக்குப்புரியவில்லை . அவளுக்குத் தற்போதையத் தேவை , ஆறுதல் .  ஐஷ்வர்யா எனும் அந்த 7 வயது சிறுமியின் வருகைக்காக காத்திருந்தாள் . அக்குழந்தைதான் அவளுக்கு ஆறுதல் , பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் , திடிரென பார்க்கவேண்டாம் என்றும் கோஷாவிற்கு தோன்றியது . அவளைப்பார்த்தால் , பின் இந்த உலகினினை விட்டு செல்வது அவளுக்கு முடியாத காரியமாகிவிடும் . அப்பிஞ்சு குழந்தையின் சிரிப்பில் , மனம் மாறி கடவுளை எதிர்க்ககூட ஆரம்பித்துவிடுவாள் . எப்போதும் 5 மணிக்கு வந்துவிடும் அவள் இன்னும் வரவில்லை .  அக்குழந்தையின் வீட்டை பார்த்தவாறே இருந்தாள் கோஷா . அக்குழந்தையின் வீட்டில் பலவிதமான பரபரப்பும் , அக்குழந்தையின் தாய் திடிரென கதறுவதும் கோஷாவிற்கு புதியதொரு பயத்தினை உண்டாக்கியது . இரவு முழுக்க அவ்வீட்டில் மனிதர்கள் வந்தவண்ணம் இருந்தனர் . ஐஷுவின் தாய் விடிய விடிய அழுதுகொண்டிருந்தாள் . இன்னொருபுறம் கோஷாவும் நடப்பதுபுரியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள் .


காலை விடிந்தது . இன்னும் சிறிதுநேரத்தில் இடமாற்றம் தொடங்கிவிடும் . ஐஷுவை இன்னும் காணவில்லை . தூரத்தில் ஊளையிட்டவாறே ஒரு வாகனம் ஐஷுவின் வீட்டின்முன் வந்து நின்றது . அதிலிருந்து ஐஷுவை இறக்கினார்கள் .  ஓடியாடவேண்டிய  அச்சிறுங்குழந்தை பிணமாக கிடந்தாள் . கோஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை . உயிரிழந்த அச்சிறுமலரின் தாய் , அக்குழந்தையின் முகத்தினைப்பார்த்து கதறியவாறு  கூறியதைக்கேட்டதும் கோஷா ஒருகணம் நிலைகுலைந்தாள் . மனிதர்களில் மாபாதகர்களும் உண்டு என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டாள் . இனியும் இப்புவியில் தானிருக்கக்கூடாதென்று எண்ணும் வேளையில் புதுகிரகம் நோக்கிய அவளின் பயணம் தொடங்கியது . உலகின் அழிவுப்பயணமும் தொடங்கியது .

‘SAVE THE TREES’
பத்து ஆண்டுகளுக்குப்பிறகு , கோஷா போன்ற தாவரங்கள் மற்றும் விலங்குகளை இழந்த உலகின் கடைசி மனிதன் , இறக்கும் போது கூறியது.


கோஷா பயணித்த புதுகிரகத்தில் , 500 கோடி ஆண்டுகளுக்குப்பின்

‘இப்படிலாம் கண்டிப்பா பண்ணனுமா ?’

‘ஆமா ! நாம யாருனு அவங்களுக்கு கண்டிப்பா காட்டனும்’

‘அவங்கள்லாம்  பாவம் . நம்மள நம்பித்தான் அவங்க இனமே இருக்கு ! ’

தொடர்புடைய சிறுகதைகள்


உங்கள் விருப்பம்

5 comments:

 1. அருமையான கதையாக இருக்கிறது..
  நல்லா செதுக்கி இருக்கிறீர்கள்..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !

   Delete
 2. எழுத்துப் பிழைகளைக் காணோம்... எழுத்து நடையிலும் நல்ல முன்னேற்றம். கீப் இப் அப் ப்ரோ... நல்ல சிறுகதை படைத்திருக்கிறாய்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! எனக்கு புஷ்கர் கிடைத்துவிட்டது !!! நன்றி அண்ணா !

   Delete
 3. அருமையான தகவல் சகோ ......

  மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

  ReplyDelete