Wednesday, 3 December 2014

CN's - BATMAN BEGINES - ஒரு அலசல்

THE LEGEND BEGINESஉலகில் எத்தனையோ சூப்பர்ஹீரோ  கதைகள் இருக்கின்றன . பல சூப்பர் ஹீரோ படங்கள் வெளிவந்துள்ளன . சூப்பர்ஹீரோ என்றாலே , முதலில் ஞாபகத்திற்கு வருவது சூப்பர்மேன் தான் . சூப்பர்மேன் படங்களைப்பார்த்தால்  நாமும் சூப்பர்மேன் ஆக இருந்தால் என்னசெய்வோம் என்று மனத்திரையில் படங்கள் ஓட்டிக்கொண்டிருப்போம் . சூப்பர்மேனுக்கென்று தனி சக்தி இருக்கிறது . அவரால் எதையும் தூக்கியெறிய முடியும் , பறக்கமுடியும் , இன்னும் என்னவெல்லாமோ செய்யமுடியும் . அடுத்து , அயர்ன்மேன் . இவர் உருவாக்கிய கவசத்திற்குள்  புகுந்துகொண்டால் கிட்டத்தட்ட ஒரு மினி ராணுவமே ஆகிவிடலாம் . அணுகுண்டிலுருந்து  பசூகா வரை அனைத்தும் கவசத்தில் இருக்கும் . அதுமட்டுமின்றி GPRS லிருந்து GPS வரை இந்த கவசத்தில் இல்லாத தொழில்நுட்பமே இல்லை எனுமளவிற்கு அத்தனை தொழில்நுட்பங்களையும் இந்த கவசம் கொண்டிருக்கும் . கடைசியாக வந்த 3 – ம் பாகத்தில் அந்த கவசமே  , மனிதனில்லாமல் AUTO PILOT போல் தானாகவே சண்டைபோடுகிறது . இந்த கவசமனிதனை ஸ்கிப்செய்தால் , சிலந்திமனிதன் . அதாங்க நம்ம ஸ்பைடர்மேன் . முதன்முதலில் நான் பார்த்த ஸ்பைடர்மேன் படத்தில் , ஒரு சிலந்தி பிடிச்சி கடித்ததால் ஸ்பைடர்மேனாகி  3 பாகம் பட்டாசு கிளப்பிக்கொண்டிருந்தார் . பின் என்ன காரணத்தினாலோ , தெலுங்கு படங்கள் போல் அதே கதையை வேறு ஆளைப்போட்டு அமேசிங் ஸ்பைடர்மேன் என்று பட்டி , டிங்கரிங் எல்லாம் செய்து விட்டிருந்தார்கள் . சிலந்தியைத்தாண்டி வந்தால் பச்சைமனிதன் வேறு பயமுறுத்தும் வண்ணம் என் மூளையில் குதித்து வருகிறார் .  சிறுவயதில் ஏற்பட்ட காமா கதிர்களின் தாக்குதல் மற்றும் தந்தையின் ஆராய்ச்சியின் காரணமாக கோபம் வந்தால் மனிதர் ஜிம்முக்கு செல்லாமலே கட்டுமஸ்தாகி விடுவார் . இவருக்கு அந்த ஊர் நாட்டாமையின் மகள்மீது காதல் ஏற்பட , அவரோ ஹெலிகாப்டர் எடுத்துக்கொண்டு , விரட்டி இவரை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க  என்று கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து அடித்துக்கொண்டிருப்பார் ஹல்க் . இவர்களெல்லாம் பத்தாதென்று அஸ்கானிலிருந்து வேறு , ஒருவர் வந்திரங்கினார் . இன்று ஆங்கிலத்தில் THURSDAY என்று அழைக்க காரணமாக இருக்கும் , கடவுள்  தோரை வேறு சூப்பர்ஹீரோவாக்கி இரண்டு பாகம் எடுத்துவிட்டார்கள் . அப்புறம் காலம்கடந்த ரோஜர்ஸ் , கேப்டன் அமெரிக்காவாகிவிட என பல சூப்பர்ஹீரோக்கள் கிராபிக்ஸ் சாகசம் செய்து கொண்டிருக்கிறார்கள் .

எனக்கு காமிக்ஸ் படித்த அனுபவம் கிடையாது . நான் படித்த காமிக்ஸ் கதைகள் என்றால் மாயாவி தான் . அதுவும் இப்போது ஞாபகமில்லை . எனவே நான் பார்த்த சூப்பர்ஹீரோ படங்களை கொண்டுதான் இப்பதிவினை  எழுதுகிறேன் . சரி , இப்போது மேட்டருக்கு வருவோம் . மேலே பார்த்த ஹீரோக்கள் யாரும் சாதாரணமானவர்கள் கிடையாது . அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு , பூச்சி கடித்தோ , ஊசிபோட்டோ , இல்லை கிரிப்டானிலிருந்து வந்ததாலோ தான் சக்தி கிடைக்கறது . இந்த ஹீரோக்கள் பெரும்பாலும் தங்களின் காதலிகளை காப்பாற்றவோ , தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டவோ தான் உலகினை காப்பாற்ற செய்கிறார்கள் . உலகினை காப்பாற்றுவதாக கூறி , வில்லனை விட அதிக பொருளாதார அழிவினை உண்டாக்குபவர்கள் இந்த ஹீரோக்களாக தான் இருப்பார்கள் . சண்டைனா சட்டை கிழியத்தானச்செய்யும் என்று சொன்னால் , சண்டை போடுபவன் சட்டைக்கிழிந்தால் பரவாயில்லை. வேடிக்கை பார்ப்பவனின் சட்டை எதுக்குயா கிழிக்கிறிங்க . நான் பார்த்த சூப்பர்மேன் படங்கள் எல்லாம் எனக்கு கற்றுத்தந்தது ஒன்றே ஒன்று தான் . சூப்பர்மேன் ஒரு நானோ புல்டோசர் . அவரைக்கொண்டு எப்பேர்பட்ட கட்டிடத்தையும் அசால்டாக இடிக்கலாம் . அடுத்து ஹல்க் எல்லாம் சூப்பர்ஹீரோ வட்டத்துக்குள்ளே கொண்டுவரமுடியாது . அவர் ஒரு சூப்பர் வில்லன் . அயர்ன்மேனுக்கு மூளை இருக்குமளவிற்கு போராட்டகுணமோ , பொறுமையோ கிடையவே கிடையாது . அவருக்குத்தேவை பாராட்டு , புகழ் . அதற்காக அவர் என்னவேண்டுமானாலும் செய்வார் என்பதைத்தான் அயர்ன்மேன் படம் கூறுகிறதோ என தோன்றுகிறது . ஸ்பைடர்மேன் படங்களில் பெறும்பாலும் வில்லனின் வேலை ஹீரோயினைத்தூக்குவது , ஹீரோவின் வேலை முக்கி முக்கி வில்லனை அழிப்பது . தோர் ஒரு கடவுள் . அவரின் தொழிலே , பிரபஞ்சங்களில் உள்ள உயிரினங்களைக்காப்பது .


இதில் , தப்பிப்பிழைத்த சூப்பர் ஹீரோக்கள் இரண்டே இரண்டு பேர் தான் . ஒருவர் கேப்டன் அமெரிக்கா , மற்றொருவர் பேட்மேன் . இதில் , கேப்டன் அமெரிக்கா நாட்டிற்காக உண்மையாக உழைக்க நினைத்தாலும் , அவருக்கு இருக்கும் சக்தி ஒரு மருந்து குப்பியில் இருந்துதான் வந்திருக்கிறது . எனவே அவருடைய சக்தி இயற்கைக்கு எதிராக கிடைக்கப்பட்டது எனலாம் . ஆனால் , பேட்மேனோ அப்படி கிடையாது . அவன் ஒரு சாதரண மனிதன் . ஒரு மாபெரும் தொழில்சாம்ராஜ்யத்தின் வாரிசு . கோதம் எனும் நகரத்தில் வாழும் அவன் அந்நகரின் இளவரசன் போன்றவன் . அப்பேர்பட்டவன் எதற்காக தன் நகரை கிரிமினல்களிடம் இருந்து காப்பாற்றப்பாடுபடுகிறான் என்பதை விளக்கும் படமே பேட்மேன் பிகின்ஸ் .இதுவரை நான் பார்த்த சூப்பர்ஹீரோ திரைப்படங்களிலே , சிறந்த படம் எதுவென்றால் அது கண்டிப்பாக நோலனின் பேட்மேன் படங்கள் தான் .


WB நிறுவனம் பேட்மேன் ரீபூட் சீரிஸ்காக , இன்சோம்னியா படத்தைமுடித்த பின் நோலனிடம் அனுகியது. ஏற்கனவே பல இயக்குநர்களிடம் கேட்டு வேறு வழியில்லாமல் வந்து நின்றது . சில இயக்குநர்கள் இயக்கமுன்வந்தாலும் , அவர்களின் ஸ்கிரப்டை படித்துவிட்டு WB கண்ணீர்விடாத குறைக்கு தள்ளப்பட்டது . காரணம் , அதற்குமுன் வந்த பேட்மேன் படங்கள் . ஒவ்வொரு படங்களும் இப்போது பார்த்தால் செம காமெடியாக இருக்கும் . பேட்மேனைக்கொண்டு , SCARY MOVIE மாதிரியான ஸ்பூஃப் படங்கள் தான் எடுக்கப்பட்டிருக்கிறதா எனும் சந்தேகம் வரும் அளவிற்கு எடுத்திருப்பார்கள் . பெங்குயின் படையைக்கொண்டு , கோதம் சிட்டியை அழிக்கவரும் வில்லன் ,  ஐஸ் கன்னைக்கொண்டு, நகரையே ஐசாக்கும் வில்லன் , 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு பாதாளக்கிணறு தோண்டி அதில் ஒவ்வொருவராக தள்ளிக்கொல்லும் வில்லன் என தமிழ்சினிமாவே அஞ்சி நடுங்கும் பல காட்சிகளை கூச்சமே இல்லாமல் வைத்து எடுத்திருப்பார்கள் . டிம் பார்டன் இயக்கத்தில் வெளிவந்த பேட்மேன் மாத்திரம் உயிர்பிழைத்தது போலிருக்கும் . இத்தனைக்கும் , இத்திரைப்படங்களில் வில்லனாக ஜிம் கேரி முதல் அர்னால்டு வரை அத்தனை பேமஸ் ஹீரோக்களும் , பேட்மேனாக பல சூப்பர்டூப்பர் ஹீரோக்களும் நடித்திருப்பார்கள் . அதுவும் கடைசியாக வெளிவந்து பேட்மேன் படத்தில் , அர்னால்டு வில்லனாக நடித்திருக்கும் படத்தினை சிரிக்காமல் பார்த்தால் அதிசயம்தான் எனுமளவிற்கு இருக்கும் . இப்போதும் , வாரத்திற்கு ஒருமுறை சன் டி.வியிலோ , அல்லது கே . டிவியிலோ அந்த படத்தைப்போட்டு , பேட்மேனை நாரடித்துக்கொண்டிருக்கிறார்கள் . வரிசையாக பேட்மேன் படங்கள் எல்லாம் அட்டர்பிளாப்  ஆன காரணத்தினால் , நோலனிடம் வந்து நின்றது WB .நோலன் எப்போதுமே தன் கதாபாத்திரங்களை உளவியல்ரீதியாகத்தான் திரையில் உளவவிட்டிருப்பார்  என்பதை முந்தைய பதிவுகளின்வழியே தெரிந்துகொள்ளலாம் . அதே பார்முலாவைப்பயன்படுத்தி தான் , பேட்மேன் படத்தையும் அனுகியிருப்பார் . அதுதான் , இப்படத்தின் வெற்றி எனலாம் .
பேட்மேன் பிகின்ஸ் படத்தின் கதை

ப்ரூஸ் வெய்ன் – கோதம் நகரின் மாபெரும் தொழில்வாரிசு . அவரின் குடும்பம் பாரம்பரியமிக்க ஒரு தொழில்குடும்பம் . அன்பான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்கறார் ப்ரூஸ் . சிறுவயதில் ஒரு கிணற்றில் தவறிவிழுந்த ப்ரூஸ் வெய்னுக்கு அங்கிருக்கும் வௌவால்களைக்கண்டு பயம் வருகிறது . ஒருமுறை , ட்ராமா ஒன்றிற்கு செல்லும் ப்ரூஸ்க்கு , அந்த ட்ராமாவில் வரும் வௌவால் வேடமிட்டவர்களைக்கண்டு பயம்முற்ற , அங்கிருந்து கிளம்புகின்றனர் . வெளியே வரும்போது ஒரு திருடன்  , ப்ரூஸின் தாயையும் தந்தையும் சுட்டுக்கொன்றுவிட்டு  அவர்களிடமிருக்கும் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்துவிட்டுச்செல்கிறான் . அநாதையான ப்ரூசுக்கு பழிவாங்கவேண்டும் என்ற உணர்ச்சி பீரிடுகிறது . வளர்ந்து டீனேஜரான ப்ரூஸ் , அந்த திருடனைச்சுட்டுக்கொல்வதற்காக கோர்ட்டில் காத்திருக்கிறான் . அப்போது வேறொருவர் வந்து அந்த திருடனைச்சுட்டுக்கொல்ல ,ப்ரூஸ் தன் பால்ய சிநேகிதியான ரேச்சலுடன் வெளியே வருகிறான் . தன்பழிவாங்கும் உணர்ச்சி பற்றி ரேச்சலிடம் தெரிவிக்கும்போது , ரேச்சல் ப்ரூசை திட்டுவதுடன் பழிவாங்கல் வேறு , தண்டிப்பது வேறு என்று அவனிடம் கூறிவிட்டு கோதம் நகரில் பெருகிவரும் குற்றங்களுக்கு முக்கிய காரணமான மார்க்கோனி என்பவனைப்பற்றி கூறுகிறாள் . மார்க்கோனியை சந்திக்கும் ப்ரூசை , மார்க்கோனி மிரட்ட , கிரிமினல்கள் எப்படி இருப்பார்கள் , அவர்களின் நடவடிக்கை பற்றியெல்லாம் அறிந்துகொள்ள பல்வேறு நாடுகளுக்குச்சென்று கிரிமினலாக வாழ்கிறான் . அப்படி ஒருமுறை சீனாவில் மாட்டிக்கொள்ள , ஜெயிலில் தள்ளப்படுகிறான் . அங்கு ஒருவரை சந்திக்கிறான் . அவர் தன் பெயர் மெர்லி எனவும், ராஸ் – அல் – குல் எனும் தலைவருக்காக ப்ரூசை சந்திக்க வந்திருப்பதாகவும் , குற்றங்களை களைய காலம்காலமாக இருந்துவரும் லீக் – ஆஃப் – ஷேடோஸ் எனும் தங்களின் அமைப்பில் சேருமாறு வேண்டுகிறார் . ப்ரூசும்  LEAGUE OF SHADOWS அமைப்பில் சேர்ந்து , நிஞ்சா சண்டைமுறைகள் மற்றும் தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்கிறான் . அவனது ட்ரெய்னிங் முடிந்தபின்  , அவன் அக்குழுவில் முழுமையாக இணையவேண்டுமெனில் , தவறுசெய்த ஒருவனை கொல்லுமாறு ராஸ் – அல் – குல் பணிக்கிறார் . கொல்லுவது சரியான நீதி கிடையாது , அது தண்டனை என கொல்ல மறுக்கும் ப்ரூஸ் , ராஸ் – அல் –குல்லை கொன்றுவிட்டு , அவ்விடத்தில் இருந்து தனக்கு பயிற்சியளித்த மெர்லியுடன் தப்பிக்கிறார் . மெர்லியை ஓரிடத்தில் விட்டுவிட்டு தன் கோதம் நகருக்கு மீண்டும் செல்கிறார் . தன் நகரில் பெருகி வரும் குற்றங்களைக்களைய வேண்டுமெனில் ப்ரூசாக முடியாது என்பதை உணர்ந்த  ப்ரூஸ் , பேட்மேனாக உருவாகிறார் . அவருக்குத்தேவையான ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை , தன் நிறுவனத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட பாதுகாப்புத்துறையைச்சார்ந்த FOX – ஐ சந்தித்து உதவிகோருகிறார் . ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டு , அதை வெளியிடாமல் வைத்திருக்கும் வண்டிகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு தனக்குத்தேவையானவற்றை மாற்றி உபயோகிக்க ஆரம்பிக்கிறார் ப்ரூஸ் . இப்படியாக உருவானவன் தான் பேட்மேன் .

பேட்மேன் பிகின்ஸ் படத்தைப்பொறுத்தவரை , பேட்மேனுக்கு இரண்டு முக்கிய வில்லன்கள் . ஒருவன் , காமிக்ஸ்களில் வரும் SCARECROW , இன்னொருவன் ராஸ் – அல் – குல் . SCARE CROW , தன்னிடம் இருக்கும் ஒரு விஷவாயுவை செலுத்தி மற்றவர்களை பயத்தின் உச்சிக்குக்கொண்டு சென்று கிட்டத்தட்ட பைத்தியக்காரனாக்கிவிடுவான் . இறந்துவிட்டதாக நினைத்த ராஸ் –அல் – குல்லோ , மீண்டும் வந்து கோதம் நகரில் பெருகிவரும் குற்றங்களின் காரணமாய் அந்நகரை அழிக்கப்போவதாய் கூறிவிட்டு , அதற்கான காரியங்களை செய்ய ஆரம்பித்துவிடுவான் . இவர்கள் இருவரையும் சமாளித்து , எப்படி கோதம் நகரை காப்பாற்றப்போகிறான் என்பதே பிகின்ஸ் படத்தின் கதை . இதற்காக பேட்மேனுக்கு , ரேச்சலும் , கோர்டன் எனப்படும் போலிஸ் அதிகாரி மற்றும் ப்ரூசின் தொழிற்கூடத்தில் இருக்கும் விஞ்ஞானி ஃபாக்ஸ் உறுதுணையாய் இருப்பார்கள் . பேட்மேனுக்கு தேவையான ஆயுதங்களை உருவாக்கித்தருபவர் தான் இந்த பாக்ஸ் .


பேட்மேனிடம் இருக்கும் ஆயுதங்களைக்கொண்டு , அவனால் அழகாய் எல்லா வில்லன்களையும் போட்டுத்தள்ளிவிடமுடியும் . ஆனால் , மற்றவர்களைக்கொல்லுவதென்பது நீதியாகமுடியாது , நீதி என்பது வேறு பழிவாங்கல் என்பது வேறு என்பதே பேட்மேன் கொள்கை . அவனுக்குத்தேவை , தன் தந்தை உயிராய் நினைத்த கோதம் நகரம் அமைதியாய் வாழவேண்டும் . குற்றங்கள் இல்லாமல் , மக்கள் நிம்மதியாய் இருக்கவேண்டும் . தன்னுடைய நடத்தையைக்கொண்டு , யாரேனும் தான் பேட்மேன் என்பதைக்கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தின்காரணமாய் பகலில் பலபெண்களுடன் குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் ஒரு பகட்டான பணக்கார இளைஞன் ப்ரூஸாகவும் வேடமிட்டுக்கொண்டிருப்பான் . சிறுயதிலிருந்தே காதலித்துவரும் ரேச்சலிடம்கூட இதைக்கூறமுடியாமல் தவிப்பது , மற்றவர்கள்  முன்னிலையில் திமிராக திரிந்து கெட்டபெயர் வாங்கிக்கொண்டு வீட்டில் தன் பட்லரான  ஆல்பரட்-டிடம் புலம்புவது  , பேட்மேனாக இரவு சென்று வாங்கிய காயங்களைக்காலையில் ஆல்பிரட்டுடன் அமர்ந்து , ஹாஸ்பெடல்கூட செல்லமுடியாமல் தனக்குத்தானே தையலிட்டுக்கொண்டிருக்கும் ப்ரூசை பார்க்கும் போது நமக்குத்தோன்றுவது ஒன்றே ஒன்றுதான் . பேட்மேன் ஒரு சூப்பர்ஹீரோ கிடையாது , அவன் ஒரு சூப்பர்மனிதன் .  

இப்படத்தில் ப்ரூஸ் வெய்னாக , என் அபிமான நடிகர் கிறிஸ்டியன் பேல் . இந்த ஆளைப்பற்றிக்கூற வேண்டுமெனில் பத்து பதிவுகள் தாராளமாக எழுதலாம் .நடிப்பிற்காக என்னவேண்டுமானாலும் செய்வார் . அமெரிக்கன் சைக்கோ , தி மெஷினிஷ்ட் , RESCUE DAWN , போன்ற படங்களைப்பார்த்தால் இவரின் நடிப்பார்வத்தை தானாகத்தெரிந்து கொள்ளலாம் . மனிதர் இப்படத்தில் ப்ரூஸ் வெய்னாய் வாழ்ந்திருப்பார் . ஒரு காட்சியில் கூட நடித்திருக்கிறார் என்று யாராலும் சொல்லமுடியாத அளவு அந்த கேரக்டருடன் ஒன்றிணைந்து இருக்கிறார் .இப்படத்திற்காக MTV அவார்ட் ஒன்றையும் தட்டிக்கொண்டு சென்றார் .  ராஸ் - அல் - குல்லாக TAKEN படங்களில் நடித்து தூள் கிளப்பிய NIAM LEESON . பாக்சாக GARY OLDMAN . ப்ரூசின் விஸ்வாசியான ALFRED ஆக மைக்கேல் கெய்ன் . இவர் முதன்முதலில் நோலனிடம் மாட்டியது இப்படத்தில்தான் . இதன்பின் வந்த அனைத்து நோலன் படங்களிலும் இவர் கண்டிப்பாய் இருப்பார் . இவரின் மிகச்சரியான பிரிட்டிஷ் இங்கிலிஷ் வசனஉச்சரிப்பிற்காகவே எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது.

அடுத்து ஒளிப்பதிவாளர் வாலி ப்ளிஸ்டர் பற்றி ஏற்கனவே மெமென்டோ பதிவில் பார்த்தாகிய காரணத்தால்  , அவரைப்பற்றி கூறுவதைவிடவும் படத்தின் ஒளிப்பதிவு அமைப்பைப்பற்றி ஒரு வார்த்தை காணலாம் . இப்படம் ஒருவகையான டார்க் தீமில் எடுக்கப்பட்டிருக்கும் . ஒருவித பழுப்பு வண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவு வழக்கம்போல் அட்டகாசம்தான் . 78வது ஆஸ்கார் விழாவில் இப்படத்தின் ஒளிப்பதிவிற்காக தலைவர் நாமினேட் ஆனதில் ஆச்சரியமில்லை .


இப்படத்தில் பாராட்டியே ஆகவேண்டிய மற்றொரு ஆள் , இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் . பேட்மேன் வரும் காட்சிகளில் வரும் இசையாகட்டும் ,  கிளைமேக்ஸ் காட்சியில் வரும் இசையாகட்டும் , மனிதர் கிழித்து எடுத்திருப்பார் . அழகான , அதே நேரம் பக்காவன டெம்போவுடன் கூடிய விறுவிறு இசையால் படத்தை அழகாக்கியிருப்பார் .

இப்படம் , நோலனின் நான் – லீனியர் திரைக்கதையில் மிகத்தெளிவாய் எடுக்கப்பட்டிருக்கும் . மேலும் பக்காவான வசனங்கள் , படத்திற்கு மாபெரும் பலம் . நோலன் படங்களை உற்றுநோக்கினால் , அரைநிர்வாண காட்சிகள் , மேட்டர் காட்சிகள் போன்றவை அறவே கிடையாது (THE DARK KNIGHT RISE – படத்தில்கூட அந்த படுக்கையறைக்காட்சி , தமிழ்ப்படங்களில் வரும் படுக்கயறைக்காட்சி அளவிற்கு இருக்கும் .) எனலாம் . இப்படத்திலும் அப்படித்தான் . அதைவிட சிறப்பு , மார்ட்டின் ஸ்கார்சேசி , டோரன்டினோ படங்களைபோல் நிமிடத்திற்கு ஒரு முறை FUCK என்ற வார்த்தை வராமல் இருப்பது . அதனால் தான் என்னவோ , சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுத்திருக்கிறான் இந்த பேட்மேன் . வழக்கம்போல் கிராபிக்ஸ் அதகளம் எல்லாம் பண்ணாமல் , ஒரு சாதாரண ஹீரோவால் என்னசெய்யமுடியுமோ அதை அப்படியே காட்டியிருப்பார் .அதனால் தான் 2005-ல் , அமெரிக்காவில் ரிலிசான படங்களின் வசூல் பட்டியலில் 8 - ம் இடத்தில் இந்த படம் இருந்தது . படத்திற்கான நாமினேட் மற்றும் விருதுகளைப்பற்றி அறிய விக்கியை தொடர்பு கொண்டால் இன்னும் எக்கச்சக்கமாய் மாட்டும் . மொத்தத்தில் , பேட்மேனை ரீபூட் செய்து , அதில் மாபெரும் வெற்றியும் பெற்றிருப்பார் . அதுவும் படத்தின் இறுதியில் ஜோக்கரின் கார்டை காட்டும்போது அடுத்தபாகத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் உயர்ந்தது என்றே கூறலாம் .இன்னும் இப்படத்தைப்பற்றி நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம் என்று தோண்றினாலும் , அடுத்த இரண்டு பேட்மேன் பாகங்களைப்பற்றி பார்க்கும்போது எழுதுகிறேன் . அடுத்த பதிவில் , எனக்கு மிகமிக பிடித்த THE PRESTIGE படத்துடன் உங்களைச்சந்திக்க வருகிறேன் .


உங்கள் விருப்பம்

0 கருத்துகள்:

Post a Comment