THE PIANIST - ஒரு பார்வை




SCHINDLER’S LIST , LIFE IS BEUTYFULL , The Boy In The Striped Pyjamas  போன்ற படங்களைப்போல் இரண்டாம் உலகப்போரின்போது , ஹிட்லரின் நாஜிப்படைகளின் தாக்குதலுக்குள்ளான போலாந்து நாட்டின் வார்ஷா எனும் பகுதியில் வாழ்ந்த ஸ்பில்மன் எனும் இசைக்கலைஞரின் வாழ்க்கையை அழகாய் , தத்ரூபமாய் படம்பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி .


இப்படத்தின் கதையைச்சொல்வதைக்காட்டிலும் எனக்குப்பிடித்த சில காட்சிகளை எழுதியிருக்கிறேன் .



ஒரு ரேடியோ ஸ்டேசன் . நம் செவியில் தேன் பாய்வதுபோல இனிமையான பியானோ இசை ஒலிக்கிறது . அந்த பியானோவை வாசிப்பவன் ஸ்பில்மன் தான் . இசையில்மூழ்கி அவன் வாசித்துக்கொண்டிருக்கும்போது , அந்த ரேடியோ ஸ்டேசன் அதிகாரிகள் திடீர் பரபரப்புக்குள்ளாகின்றனர் . அவர்கள் , ஸ்பில்மேனைப்பார்த்து கிளம்புமாறு சைகை அளிக்கின்றனர் . என்னவென்று யோசிப்பதற்குள் பீரங்கிக்குண்டுகள் அந்த ரேடியோ ஸ்டேசனைத்தாக்குகின்றன . அதையும்தாண்டி , ஸ்பில்மேன் இசைக்கும் காட்சி தான் , படத்தின் முதல் காட்சி .



கெட்டோ (போலந்தின்  வார்ஷா மாகணத்தில் உள்ள யூதர்களை , அவர்கள் கொடிய நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என ஜெர்மனி சப்பைக்கட்டு கட்டி , அவர்கள் நாட்டிலே இரண்டாகப் பிரித்து தங்கவைத்திருக்கும் இடம்தான் , கெட்டோ .) எனும் யூத இனவதைக் காலணியில் , ஸ்பில்மேனின் குடும்பம் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்ட பின் , அனைவரும் டின்னர் அருந்த உட்கார்ந்திருக்கிறார்கள் . அப்போது ஸ்பில்மேனின் தாய் , தயவு செய்து இன்றைக்காவது கெட்டசெய்திகள் பற்றி பேசவேண்டாம் என்றுகூறிவிட்டு அனைவருக்கும் கஞ்சியை ஊற்றுகிறாள் . திடீரென ஜெர்மன் ராணுவ வண்டி ஒன்று வருவதைப்பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி , விளக்குகளை அனைக்கிறார்கள் . நாஜிப்படை , இவர்களின் எதிர் அபார்ட்மென்டுக்குள் புகுந்து , அங்கே உணவருந்திக்கொண்டிருக்கும் , ஒரு யூதக் குடும்பத்தை எழுந்து நிற்கச்சொல்லுகிறார்கள் . ஒரு வயதான பெரியவர் வீல்சேரில் உட்கார்ந்திருக்கிறார். அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை . அவரைத்தூக்கி வீசுமாறு ஒரு அதிகாரி கட்டளையிடுகிறான் . அடுத்த நொடியே வீல்சேருடன் கிட்டத்தட்ட மூன்றாவது மாடியிலிருந்து அவரைக்கீழே தள்ளுகின்றனர் . பின் மீதமிருப்பவர்களை , தெருவில் ஓடச் சொல்லி  சுட்டுக்கொல்கின்றனர் . இதையெல்லாம் பார்த்து மிரளுவது ஸ்பில்மேனின் குடும்பம் மட்டுமல்ல , நாமும்தான் .


தங்களுக்குத்தேவையான ஆயுத உற்பத்தி போன்றவைகளுக்காக , ஜெர்மன் தனது ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகளில் உள்ள யூதர்களை கெட்டோவின் தொழிலாளர்வதை முகாம்களில் அடைத்துவைப்பார்கள் . கடுமையான வேலையும் , சொற்பமான உணவும் கொடுத்து அவர்களை அடிமையை விட கேவலமாக நடத்துவார்கள் . யாராவது வேலையின்போது இம்மிபிசகினால்கூட மரணம்தான் .ஒருவனால் வேலையை சரிவர செய்யமுடியவில்லையெனில் , அவர்களை மொத்தமாக கொண்டுசென்று , கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட தொழிற்சாலையில் , கும்பல் கும்பலாய் ஒரு அறையில் அடைத்து , விஷவாயு செலுத்திக்கொல்வார்கள்.  மேலும் நூற்றுக்கணக்கான யூதத்தொழிலாளர்கள் ஒரே அறையில் தான் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் .

கெட்டோவின் முகாமை நமக்கு காட்டுகிறது கேமரா . ஸ்பில்மேனின் குடும்பம் பேசிக்கொண்டிருக்கிறது . திடீரென உள்ளே ஒரு ராணுவ அதிகாரி நுழைந்து , அனைவரையும் வெளிவர சொல்கிறான் . அவர்களில் சிலரைத் தனியாக நிற்கச்சொல்லி , நாளை நீங்களெல்லாம் கிளம்பவேண்டும் என்று சொல்கிறான் . ‘எங்கு கிளம்பவேண்டும்’ என்று ஒருத்தி ,பயத்துடன் கேட்கிறாள் . ‘படீர்’ , அடுத்த நொடி அவள் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்கிறது .


ஸ்பில்மேனின் குடும்பம் உட்பட , அம்முகாமிலிருந்த மற்ற குடும்பங்கள் , அதாவது வேலைக்காகாதவர்கள் என ஒதுக்கிவைக்கப்பட்ட யூதர்கள் அனைவரும் ஒரு புகைவண்டிக்காக காத்திருக்கிறார்கள் . ஒருத்தி தன்கையில் தன்னுடைய குழந்தையை ஏந்திக்கொண்டு ஒவ்வொருவரிடம் தன் குழந்தை தாகத்தால் சாகிறது என்றும் தண்ணீர் இருந்தால் தருமாறும் பிச்சைக்கேட்கிறாள் . இன்னொருத்தியோ ‘நா ஏன் அதை செய்தேன்’-னு சொல்லி சொல்லி அழுதுகொண்டிருக்கிறாள் . ஸ்பில்மேன் குடும்பமோ இருக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து, ஒரு மிட்டாயை வாங்கி 6 பங்காய் சின்னச்சின்னதாய் வெட்டி சாப்பிடுகிறார்கள் . திரும்ப திரும்ப அவள் புலம்பிக்கொண்டிருக்க , அதற்கான காரணத்தை  விளக்குகிறார்கள் . ஜெர்மானியர்களுக்கு பயந்து , தன் குழந்தையை மறைக்க முயற்சித்திருக்கிறாள் அவள் . ஆனால் குழந்தை சத்தம்போட , வேறுவழியில்லாமல் வாயைப்பொத்தியுள்ளாள் . மூச்சுத்திணறி ,  குழந்தை மரணம் அடைந்துவிடுகிறது .


அந்த புகைவண்டியில் ஏறாமல் விதவசத்தால் ஸ்பில்மேன் தப்பிக்கிறான். ஆனால் அவன் குடும்பம் மாட்டிக்கொள்கிறது . தப்பித்தவன் தான் வாழ்ந்த யூதக்குடியிருப்புக்கு செல்கிறான் . ரோடெங்கும் பெட்டிகள் , பொருட்கள் . அதைக்காட்டிலும் அழுகிய நிலையில் பிணங்கள் . வேறு வழியில்லாமல் தன்னுடைய நண்பன் ஒருவன் வீட்டிற்கு செல்கிறான் . அவன் வீட்டு வாசலிலேயே அவனது நண்பன் , நண்பனின் மனைவி மற்றும் அவனின் சின்னஞ்சிறு குழந்தைகள் என அனைவரும் ஈவிறக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் .


புதிய முகாமில் தனது வயதான நண்பரோடு இருக்கும் ஸ்பில்மேன் , வேலையமுடித்துவிட்டு கூட்டத்துடன் செல்கிறார் . அப்போது ஒரு அதிகாரி , அக்கூட்டத்தில் இருக்கும் வயதானவர்களை முன்னால் வரவைத்து படுக்கும்படி கட்டளையிடுகிறான் . அவர்களும் படுக்க , ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுகொல்கிறான் . கடைசியாய் இருக்கும் மனிதனை சுடும்போது குண்டு தீர்ந்துவிடுகிறது . அந்நேரத்தில் கீழே படுத்திருப்பவனது நிலையையும்  , அவனது முகத்தில் காணும் மரணமிரழ்ச்சியையும் , பார்க்கத்தனித் திராணி வேண்டும் .

பசியின் கொடுமை , இன்னொருபுறம் கண்ணெதிரே பலரை்ககொன்று எரிக்கும் காட்சி , இவைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு , மனதை ஒருநிலைப்படுத்தி மனதாலேயே ஸ்பில்மேன் பியனோ வாசிக்கும் காட்சியும் அற்புதம் .

கடைசியில் ஹோசன்பீல்ட் எனும் ஜெர்மன் ராணுவ அதிகாரியை சந்திக்கும் காட்சியிலும் , அந்த ராணுவ அதிகாரியின் குணத்தை மேஜைமீது இருக்கும் அவரது குடும்ப போட்டவைக் காட்டும்போதும் அழகான சினிமா மின்னுகிறது .

ரஷ்யப்படையினரிடம் ஹோசன்பீல்ட் மற்றும் அவரது படைகள் மாட்டிக்கொள்ளும்போது , ஒரு யூதன் ஜெர்மானியர்களை திட்டிக்கொண்டே செல்வார் . அதைக்கடைசியில் அவர் ஞாயப்படுத்தும் காட்சியும் அழகு.

இன்னும் ஏராளமான காட்சிகள் இருக்கின்றன . படத்தின் கதை ஒன்றும் பெரியதாய் இல்லை . அக்காலக்கட்டத்தில் யூதர்கள் அனுபவித்த வலியை நமக்கும் உணரவைத்திருக்கிறர் ரோமன் போலன்ஸ்கி . ஸ்பில்மேன் எனும் பியனோ இசைக்கலைஞன் , ஜெர்மன் நாஜிப்படையினரிடம் இருந்து 5 ஆண்டுகள் மறைந்து , வாழ்ந்து , தப்பிப்பதே இப்படத்தின் கதை  . ஆனால் , காட்சியோட்டங்களால் இத்திரைப்படம் ஒரு காவியமாய் இருக்கும் . ஒரு இனம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது என்பதனை அழகாய் , நம் மனதில் வலியுடன் விளக்கியிருப்பார் .இப்படத்தின் மூலக்கரு மனிதநேயம் தான் . பல காட்சிகள் வலியைக்கொடுத்தாலும் , சில காட்சிகள் அவ்வலிக்கு மருந்தாக அமைகின்றன . இப்படம் பார்ப்பதற்கு முன் SCHINDLER’S LIST பாருங்கள் . இன்னும் பல புரியாத விஷயங்களை அதில் விளக்கியிருப்பார் ஸ்பில்பெர்க் . இப்படத்தினைப்பார்த்தபின் எனக்குள் தோன்றியது , இதைவிட அதிக கொடூரங்கள் நிறைந்த  ஈழப்படுகொலையைப் பற்றிய படம் எதுவும் வரவில்லையே என்பதுதான் . கண்டிப்பாக தமிழில் இம்மாதிரியான படங்கள் எடுத்தால் , தயாரிப்பாளர் பிச்சையெடுக்கவேண்டி இருக்கும் .  கமல் மாதிரியான இயக்குநர் கைவைத்து ஹாலிவுட்டில் எடுத்தால் , கண்டிப்பாய் ஆஸ்கார் தான் . ஆஸ்காரைக்காட்டிலும் , ஈழப்பிரச்சனை என்னவென்று இன்னும் அறியாத பல பதர்களுக்கு  உரைக்கும்படியாய் இருக்கும் .


(இவர்தான் உண்மையான பியானிஸ்ட் – ஸ்பில்மேன் .)

இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி பற்றி சொல்லத்தேவையில்லை . ஏற்கனவே ஜாக் நிக்ல்சன் நடிப்பில் வெளிவந்த சைனா டவுன் படத்தின் மூலம் உலகமெங்கும் உலகத்திரைப்பட ரசிகர்களைத் தன்வயப்படுத்தியிருக்கிறார் . படத்தின் ஹீரோ ப்ரோடி , மனிதர் வாழ்ந்து இருக்கிறார் . ஒவ்வொரு காட்சியிலும் இவரது நடிப்பு , தனித்துவமாய் மின்னுகறது . இசையமைப்பாளர் கிலார் , இப்படத்திற்கு ஒரு உயிரைக்கொடுத்துள்ளார் . ஒரு தனியறையில் ஹீரோ வாசிக்கும் அந்த பியானோ இசையே அதற்கு சாட்சி . ஒளிப்பதிவும் மிக அருமையாக இருக்கிறது . லைட்டிங் , சிஜி , கேஸ்டிங் , ஆர்ட் டைரக்சன் , காஸ்ட்யும் என அனைத்துமே பர்ஃபெக்ட் தேர்வு . எக்கச்சக்கமான அவார்டுகளை அள்ளியுள்ள இத்திரைப்படத்தின் இயக்குநர் , நிஜத்தில் ஒரு போலந்து யூதர் . அவரும் தனது இளமைக்கால  வாழ்க்கையை நாஜிப்படைகளிடம் மாட்டி , துன்பத்திலும் துயரத்திலும்தான் கடந்தார் . மேலும்  இது ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாய் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் .



இந்த படத்திலே எனக்குப்பிடித்த கேரக்டர் எதுவென்றால் ஹோசன்பீல்ட் கேரக்டர் தான் . தன் நாடு எதிரியாய் நினைக்கும் ஒரு யூதனை , அவனது திறமைக்காக ஏற்று , அவனுக்கு அடைக்கலம் கொடுத்து , அவனைக்காப்பாற்றும் எண்ணம் யாருக்குமே வராது . நிஜத்தில் அந்த மனிதர் ரஷ்யப்படைகளின் முகாம்களில் வதைக்கப்பட்டு இறந்தார் என்பதனை அறியும்போது , மனதின் ஓரத்தில் ஏதோவொரு வலி . ஆனாலும் 2009 ஆம் ஆண்டு , அவரைப்பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு  , அவரது மனிதநேயத்திற்காக ஒரு விருது அளித்து கவுரவப்படுத்தியுள்ளனர் .


மொத்தத்தில் , இது ஒரு அற்புதமான திரைப்படம் என்பதில் துளி சந்தேகமுமில்லை . ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தைக்காட்டிலும் அழுத்தமான காட்சியமைப்புகளும் , தொழில்நுட்பமும் இப்படத்தினை வேறொரு தளத்திற்கு எடுத்தச்செல்கின்றது . இருந்தாலும் ஷின்ட்லர் போல் ஒரு ஹீரோவாக இல்லாமல் , நம்மைப்போன்ற சாதாரணமானவனாக ஸ்பில்மேன் இருப்பதால் எனக்கு பர்சனலாக ஷின்ட்லரை மிகவும் பிடித்திருந்தது . அதாவது , ஒரு மனிதராக ஷின்ட்லரை பிடித்திருந்தது . ப(பா)டமாக இந்த பியானிஸ்டை பிடித்திருந்தது . மாற்று சினிமா , உலக சினிமா , வித்தியாசமான சினிமா , கலை சினிமா என்று எல்லா கேட்டகரிக்கும் இந்த திரைப்படம் பொருந்தும் என்பதில் துளி சந்தேகமில்லை . 




தொடர்புடைய இடுகைகள்









Comments

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. இன்னும் பார்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் பாருங்கள் அண்ணா ! அழகான திரைப்படம்

      Delete
  3. nalla padam.. intha padam ennul pala athichikala yeepadithiyathu.

    ReplyDelete
    Replies
    1. என்னுள்ளும் அதேமாதிரி பலவித தாக்கங்கள் ஏற்படுத்திய திரைப்படம் . வருகைக்கு நன்றிங்க

      Delete
  4. First i seen the movie the pianist. Atleast for 3 days this movie effects on me...after one or two month i seen schindlers list..i was almost cried in the climax scenes. Both movies are excellent. Somewhat oskar schindler reminds me the Pennycuick.

    ReplyDelete
    Replies
    1. ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் 'ல கிளைமேக்ஸ் காட்சிகள்ல அழுகை வரலைனா , அவங்களாம் மனிதர்களே இல்லைனு தான் சொல்லனும் ஜீ ! அந்த படத்தைப்பார்த்த பின் , இந்தமாதிரி ஒரு மனிதராக நானும் வாழவேண்டும்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன் !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

FIGHT CLUB – சினிமா விமர்சனம்