அங்கிள் ஆக்கிய ஆன்ட்டி



நேற்று ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்காக , சேலம் வட்டார ஆட்சியர் அலுவலகத்திற்குச்சென்று வீடு திரும்புவதற்காக 3 ரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன் . என் நேரமோ என்னவோ , வழக்கம்போல ஒருமணிநேரம் ஆகியும் பஸ் வரவில்லை . கடுப்புடன் நின்றுகொண்டிருந்த நேரம் , என் அருகில் ஒரு பெண்மணி வந்தார் . அவர் கையைப்பிடித்தவாறே ஒரு ஐந்துவயது பெண்குழந்தையும் , ‘ம்மா ச்சாக்கி மா’ என்றவாறு அவளின் இடுப்பில் 3 வயது பெண்குழந்தையும் இருந்தன . நின்று கொண்டிருந்த குழந்தையோ ‘மா ஐஸ்கிரீம் வாங்கித்தா மா’ என்று கெஞ்ச , இந்த பெண்மணியோ அடித்துவிடுவேன் , அப்பாவிடம் சொல்லிவிடுவேன் , சளி பிடித்துக்கொள்ளும் என்று ஏதேதோக் கூறி அக்குழந்தைகளின் ஆசைக்குத்தடை போட்டார் . எப்போதும் பெண்குழந்தைகளின் மழலை மொழிகளை உன்னிப்புடன் கவனிக்கும் எனக்கு , அக்குழந்தைகளின் வாடியமுகத்தைப்பார்த்தபோது பேசாமல் நாமே ஐஸ்கிரிம் வாங்கிக்கொடுக்கலாமா என தோன்றியது . அச்சோ அப்படி ஏதாவது நாம் செய்து அந்த பெண்மணி திட்டிவிட்டால் என்னசெய்வது என்று பயந்தவாறே நான் என் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு நின்றுகொண்டிருந்தேன் . அப்போதுதான் நான் ஒன்றை கவனித்தேன் . நான் அவ்வளவு நேரம் அக்குழந்தைகளை கவனித்துக்கொண்டிருந்ததுபோல்  அப்பெண்மணியும் அவ்வப்போது என்னை பார்த்துகொண்டிருந்தார் . என்னடா இது வம்பா போச்சு ? நம்மள தப்பா நினச்சிட்டாங்களோ என்று மனதுக்குள் நினைத்தவாறே அவ்விடத்தை விட்டு சிறிதுதூரம் தள்ளி நின்றேன் . அதன்பின்னும் அந்த பெண்மணி என்னையே பார்த்தவாறே ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார் . சரி , சனியன் மடியில ஏறப்பாக்குது ! பஸ் வந்தா எஸ் ஆகிடவேண்டியதுதானென்று நான் படபடப்பாக ஆரம்பித்தேன் . அதேநேரம் உள்ளுக்குள் ஒரு பெருமிதம் . ஆஹா , நம்மை ஒருத்தி சைட் அடிக்கறாளே !

சில நிமிடங்களுக்குப்பின் அவள் யாருக்கோ போன் செய்தாள் . அவளின் பேச்சுகளை  கேட்க நான் பெரிய பிரயத்தனம் செய்ய இயலவில்லை . ஆனால் அவளின் கணீர் குரல் , அங்கிருக்கும் எல்லாருக்கும் கேட்டிருக்கவேண்டும் . அவள் பேசியதில் இருந்து , அவளது கணவனை இங்கு வா என்று அவள் கட்டளையிட்டது நன்றாக தெரிந்தது . பெரிய பஜாரியாகத்தான் இருப்பாள் போல என்று என்னுடைய மொபைலை எடுத்து , அக்னி-6 ஏவுகனைக் கணக்காய் மெனுவுக்குள் மிக வேகமாக சென்றேன் . அப்போது என் செவியை நோக்கி ‘நீ மெக்னேஷ் தான ’ என்ற குரல் வந்தது .

குரல் வந்த திசையைப்பார்த்தபோது , அந்த பெண்மணி என்னருகில் நின்றிருந்தாள் . என்னடா இது ? நம்மபேரு இவங்களுக்கு எப்படித்தெரியும் ? ஒருவேள நம்மோட பதிவுகள்லாம் ரசிச்சு படிக்கற (!?) பெண் ரசிகையா இருப்பாங்களோ (!!!) என்ற அபத்தமான சிந்தனையும் வந்தது . மங்கையர் மனதைத்தொடும் படியான படைப்புகளை இதுவரை நாம் எழுதியதே இல்லையே என்று யோசிக்கும் போதே  , என் யோசனையைக்கலைக்கும் வண்ணம் அவளின் கணீர் குரல் மீண்டும் என் காதில் ஒலித்தது .

‘ஆமாங்க ! நீங்க ?’

‘ஹேய் . என்ன அடையாளம் தெரியலையாடா ? நான்தான் ***** . நாம ரெண்டுபேரும் ஒண்ணாவதுல இருந்து ஐஞ்சாவது வரைக்கும் ஒன்னா படிச்சமோ ! மறந்துட்டியா ?’ என்றாள் .

ம்க்கும் . என்னுடன் காலேஜ் படித்த நண்பர்களையே குத்துமதிப்பாய்த்தான் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன் . இன்னமும் மகேஷ் என்ற பெயரில் இருக்கும் மூன்று நண்பர்களின் போன் கால்களை ஒருமுறைக்கூட சரியாய் அடையாளம் கண்டுபிடித்து கிடையாது. இவளோ கி.முவில் ஒன்றாய்ப்படித்தோம் என்கிறாளே ! யாராயிருக்கும் இவள் என்று நினைக்கும்போதே அவளின் கன்னத்தில் இருந்த தழும்பைப்பார்த்தேன் . ஆம் அது நான் உருவாக்கியதே தான் ( உடனே தப்பா நினைச்சுடாதிங்க) . அவளுடன் நான் படிக்கும்போது , ஒருமுறை  புள்ளுக்குச்சி விளையாடி அவளின் கன்னத்தில் ஓட்டையைப்போட்டுவிட்டேன் . ஆம் அந்த எலும்பும்தோளுமாய் , கைசூப்பிக்கொண்டு , ஜவ்வுமிட்டாய் உதட்டில் வழிந்தோட சாப்பிட்ட அவளே தான் இன்று இருகுழந்தைகளின் தாயாய் என்முன்னே காட்சியளிக்கிறாள் . ஐந்தாவது முடித்தவுடன் நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு படிக்கச் (?) சென்றதால் , அதன்பின் என் பால்யகால காதலிகளை காணமுடியாமல் போய்விட்டது . அதில் ஒருத்திதான் இவள் .

‘ எப்படி இருக்க ***** ? ‘

‘ம் நல்லா இருக்கேன் . நீ என்ன செய்ற ’ என்று அவள் கேட்க , அவள் ‘ஓ’ என்று சொல்லவேண்டும் என்று என்னுடைய நிலைமையைக்கொஞ்சம் அதீதப்படுத்திக்கூறினேன் . பரஸ்பர பேச்சுகள் முடிந்த நிலையில் நான் கண்டுபிடித்தது எட்டு வருடங்களுக்குமுன் அவளுக்குத்திருமணம் நடந்திருக்கிறது . அந்நேரங்களில் நான் ஜெட்டிக்ஸ் சேனலில் பஸ் லைட்யர் கார்ட்டுன் பார்த்துக்கொண்டிருந்தேன் . அவளது கணவன் , சொந்தமாக வெள்ளிப்பட்டறை வைத்திருக்கிறான் .

அதன்பின் அவளின் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் , சாக்லேட் எல்லாம் வாங்கிக்கொடுத்தேன் . அப்போது அக்குழந்தைகள் அவளிடம் நான் யாரென்று கேட்க ,

‘இவரு உங்க சித்தப்பா மா’ என்றாள் .  இருகுழந்தைகளைப்பெற்றெடுத்த அவள் ஆண்டியானால் பரவாயில்லை . இன்னும் கல்யாணமே ஆகாத நான் அங்கிள் ஆகிவிட்டேனே L ! அக்குழந்தைகளின் மாமா என்று கூறியிருந்தால் கூட சந்தோஷமாய் இருந்திருப்பேன் . அதன்பின் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு என் வீட்டிற்கு வந்ததும் முதல் தீர்மானமாய் ஒன்றை மனதில் எடுத்தேன் . இனிமேல் எங்கு சிறுவயது திருமணங்கள் நடந்தாலும் , அதை கவர்மென்ட்டில் போட்டுக்கொடுத்துத் தடுத்துவிடவேண்டும் .


Comments

  1. Mama or chithappa whts the difference ?? both r uncle only right ?

    ReplyDelete
    Replies
    1. Ya ! in Eng its not prob ! But I feel uneasy to hear that i am Chitthappa !!

      Delete
  2. கன்னத்தில் வாங்கிய அந்த பெண்ணுக்கு அது நினைவுக்கு வந்திருக்கணுமே?

    ReplyDelete
    Replies
    1. அந்த பொண்ணுக்குலாம் நல்ல ஞாபக சக்திணா ! எனக்குத்தான் கொஞ்சம் வீக் !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை