Saturday, 14 March 2015

BIRDMAN – சினிமா விமர்சனம்பொதுவாக சிறந்த திரைப்படமென்று ஆஸ்கார் விழாவில் தேர்ந்தெடுக்கும் பல திரைப்படங்கள் என் பொறுமையை சோதிக்கும் அல்லது என் சிற்றறிவிற்கு எட்டாது . இதனாலே ஆஸ்காரை அதிகமாக கொண்டாட மாட்டேன் . பெஸ்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ் , சிறந்த திரைக்கதை எனும் தலைப்பில் இடம்பெறும் திரைப்படங்களையே பார்ப்பேன் . அதிலும் நாமனேட் ஆகி வெற்றி பெறாத படங்கள் என்றால் கண்டிப்பாக பார்ப்பேன் . காரணம் அது எப்படியும் நமக்குப்புரிந்துவிடும் அல்லது பிடித்துவிடும் . இப்போதெல்லாம் முன்போல் திரைப்படங்களைப்பார்க்க நேரம் கிடைக்காததால் , பல திரைப்படங்களைப்பார்க்கமுடிவதில்லை . எப்படியோ இருந்த கொஞ்ச நேரத்தை வைத்து இத்திரைப்படத்தைப்பார்க்க ஆரம்பித்த எனக்கு அதிசயமாக இருந்தது . என்னடா இது ? இம்மாதிரியான படங்களுக்கும் ஆஸ்கார் கொடுக்கிறார்களா ? வழக்கமாக நமக்கு எவ்வளவு பிடித்து இருந்தாலும் , இந்த ஆஸ்கார் விருதுக்குழுவுக்கு பிடிக்காதே என்று யோசிக்கவைத்த திரைப்படம் இது .  காமெடி , விஷுவல் , நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு , போரே அடிக்காமல் ஒருவித எதிர்பார்ப்பிலேயே நகரவைக்கும் திரைக்கதை என அட்டகாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அலஜான்ட்ரோ .

படத்தின் கதை – ஹீரோ ரிக்கன் ஒரு முன்னாள் திரைப்பட நடிகர் . அவரின் BIRDMAN எனும் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் தாருமாறான வெற்றிபெற்றிருக்கிறது . அதன்பின் காலம் மாற , ஒரு நாடக நடிகராகவும் இயக்குநராகவும் வளர்கிறார் . ஏற்கனவே BIRDMAN எனும் கதாபாத்திரம் மனதளவில் அவரை வாட்டுகிறது . அது அவ்வப்போது தோன்றி ரிக்கனுக்குள் உண்மையிலேயே சூப்பர்ஹீரோ பவர் இருப்பதாக கூறி அவருக்குள் ஒரு மாயையை உருவாக்குகிறது  . தன் நாடகத்திற்கு நல்ல நடிகர் இல்லையே எனத்தத்தளித்துக்கொண்டிருக்கும் ரிக்கனுக்கு , மைக் எனும் ஓரளவு புகழ்பெற்ற நடிகர் கிடைக்கிறார் . ஆனால் அந்த மைக்கோ இன்னொருபுறம் ரிக்கனுக்கு இம்சையளிக்கிறார் . நாடகத்திலும் ரிக்கனுக்கான நடிப்பில் குறுக்கீடு செய்து , தான் தான் இந்நாடகத்தின் சூப்பர்ஸ்டார் என வெளியில் பரவ விடுகிறார் . ஏற்கனவே திரைப்பட நடிப்பிலும் தோற்று , இப்போது நாடக நடிப்பிலும் தோற்ற ரிக்கனுக்கு , BIRD MAN பிரச்சனை ஒருபுறம் , இன்னொருபுறம் அவருக்கு  அஸிஸ்டன்டாக இருக்கும் அவருடைய மகளை மைக் உஷார் செய்துவிடுதல் ஒருபுறம் , உடன் நடிக்கும் சகநடிகைக்கும் அவருக்குமான தொடர்பு என ஒவ்வொரு பக்கமும் பிரச்சனை பொழந்துகட்டுகிறது . இதுபோதாதென்று ஒரு பத்திரிக்கை ஆசிரியை வேறு நீ எப்படி நடித்தாலும் உன்னை கிழிகிழி என்று கிழித்து எழுதி உன்னை நாடகத்தை விட்டே துரத்துகிறேன் எனச்சவால் விட , கடைசியில் என்ன ஆகிறார் என்பதே கதை .


படத்தின் முதல் ப்ளஸ் – கேமரா மேன் எம்மானுயுல் லூபசெகி . மனிதர் ஓடி ஓடி படத்தை எடுத்திருக்கிறார் . ஏற்கனவே ஏழுமுறை அகாடமி விருதுகளுக்கு நாமிநேட் ஆன இவர் , சென்ற ஆண்டில் (2013) வெளியான கிராவிட்டி படத்தில் முதல் விருதினைத்தட்டி சென்றார் . இப்போது தொடர்ச்சியாக இப்படத்திற்கும் விருதை வாங்கிவிட்டார் . ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள் சார் . படத்தின் குவாலிட்டியிலும் DI மற்றும் CG யிலும் அட்டகாசம் . அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் அந்தோனியா சான்ஜஸ்சும் , இப்படத்திற்கு தகுந்தவாறு இசையமைத்திருக்கிறார் . இவரைப்பற்றியும் எழுதநிறைய இருந்தாலும் பத்தியின் நீளத்தின்காரணமாக இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .

மைக்கேல் கீட்டன் – முன்னாள் சூப்பர்ஹீரோவாகவும் , இந்நாள் டைரக்டர் + நடிகராக வரும் ரிக்கன் தாம்சன் வேடத்தில் இவர் வாழ்ந்திருக்கிறார் . படத்தின் 90 சதவிகிதம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதால் இவருடைய நடிப்புத்திறமை எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பது உங்களுக்குத்தானாக புரிந்திருக்கும் . எட்வர்டுடன் சண்டைபோட்டுவிட்டு இந்தபக்கம் மனைவியுடன் பேசுவதும் தொடர்ந்தாற்போல மகளிடம் சண்டையிடுவதும் அதற்கடுத்த காட்சியிலே நாடகத்தில் நடிப்பதுமென மனிதர் எல்லாரையும் தூக்கி நடிப்பில் ஓரம்கட்டிவிட்டார் . டிம் பார்ட்டனின் பேட்மேன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது , பேட்மேன் ரசிகர்கள் அனைவரும் இவர் அதுக்கு சரிப்படமாட்டார் என வரிந்துகட்டி போராட்டம் செய்திருந்தனர் . ஆனால் திரைப்படம் வந்தபின் அந்த எண்ணத்தை மாற்றிக்காட்டினார் . இவர் நடிக்கவந்து 38 ஆண்டுகள் ஆனாலும் , இப்போதுதான் தன் நடிப்பின் முழுமுத்திரையும் பதித்திருக்கிறார் . எனக்கென்னவோ இவரின் சொந்தவாழ்க்கையையே ஸ்கிரிப்ட் ஆக மாற்றிக்கொண்டுவந்ததால் தான்  அலஜான்ட்ரோவின் இப்படத்தில் நடித்திருப்பார் என தோன்றுகிறது . அதிலும் தனக்குள் இருக்கும் BIRDMAN தன்னைத்தூண்டுவதும் , தனக்குள் இருக்கும் டைரக்டர் கம் நடிகர் அதை எதிர்ப்பதுமாக ஒரு காட்சியில் பின்னியெடுத்திருக்கிறார் . கூடையை இல்லை , நடிப்பை . சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் நாமிநேசன் ஆனாலும் கிடைக்கவில்லை எனினும் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் இவருக்கு விருதுகொடுக்க முன்வருவார்கள் என்பது என் சித்தம் .

EDWARD NORTON  இந்த மனிதரின் நடிப்புத்திறமையை இவரின் முதல்படமான PRIMAL FEAR – ன் நாமிநேசன்களை வைத்தே அறிந்துகொள்ளலாம் . அதற்கடுத்த AMERICAN HISTORY X – ல் இவரின் அறிமுகக்காட்சி இன்னமும் எனக்குப்பிடித்த ஆகச்சிறந்த டாப் 10 அறிமுகக்காட்சியில் ஒன்று . மனிதர் 6பேக் உடலுடன் கையில் துப்பாக்கியைப்பிடித்து நீக்ரோக்களை துரத்தி துரத்தி வேட்டையாடிவிட்டு கெத்தாக வரும்போது , சும்மா கிர்ரென்று இருக்கும் . FIGHT CLUP படம் முழுவதும் இவரை மட்டுமே தான் பார்த்துக்கொண்டிருப்போம் . ஆனால் துளிகூட போரடிக்கவிடாமல் முழு ஸ்கிரின்பிரசென்ஸ் கொடுத்து கலக்கியிருப்பார் . ஏற்கனவே இம்மனிதரைப்பற்றி FIGHT CLUP- ல் எழுதாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறென்பது இப்போதுதான் புரிகிறது . சரி , இவரைப்பற்றி THE GRAND BUDAPEST HOTEL படத்தில் எழுதிவிடுகிறேன் . இன்னொருவிஷயம் , இவரின் நடிப்பில் 2014-ல் வெளிவந்த இரு திரைப்படங்களும் தலா 4 விருதுகளை வென்றுள்ளன . இப்படத்தில் மனிதர் என்ன செய்திருக்கிறார் என்றால் , முழுக்க முழுக்க நடிக்காமல் நிஜமானதொரு கேரக்டராகவே மாறியிருப்பார் . நாடகம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் உடன் நடிக்கும் நடிகையிடம் இவர் பாய்வதும் , ஹீரோவிடம் ஏதாவதொன்று தொன தொனவென்று சொல்லிக்கொண்டிருப்பது , ஒரு கட்டத்தில் ஹீரோவிடம் முரட்டு அடி வாங்குவதும் அதைத்தொடர்ந்து ஹீரோவின் பொண்ணையே கரெக்ட் செய்வதுமென பின்னியிருக்கிறார் .

எம்மா ஸ்டோன் – ஹீரோவின் டீனேஜ் மகளாக நடித்திருக்கும் நடிகை . இவரை முதலில் பார்த்ததும் என்னடா நம்ம ஊரு ஜனனி ஐயர் ஹாலிவுட்டுக்கு எப்போ போனாங்க என்று ஒருநிமிடம் யோசிக்கவைத்துவிட்டார் . கிட்டத்தட்ட அவர் அச்சில் , அவர் உடலமைப்பில் இருந்தார் . விக்கியில் பார்த்தபின் தான் குழப்பம் தீர்ந்தது . அழகுதேவதையாகவே வந்திருக்கிறார் . சமீபகாலமாக செல்பி , வீடியோக்களால் ஏற்கனவே பற்றற்று கிடந்த நடிகைகளின் அழகை ரசிக்கும் தன்மை சுத்தமாக போய்விட்டது . இருந்தாலும் வெளிநாட்டு நடிகைகளை மட்டும் ஏன் ரசிக்கமுடிகிறது என்று யோசித்த எனக்கு கிடைத்த விடை , அவர்கள் தப்பென்றால் ஆம் அது நான்தான் என்று உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள் . இங்கோ போட்டோ மார்பிங் , நான் 10000 ஆண்டுகாலத்திற்கு முன் இருந்த பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள் என கடுப்பேற்றுகிறார்கள் . சரி , நம் கதையை இன்னொரு இடத்தில்வைத்துவிட்டு இவரைப்பார்ப்போம் (ஐ மீன் நடிப்பை ) . வெறுமையின் விளிம்பில் இருந்தாலும் ஓவராக சீன்போட்டுக்கொண்டு தன்னைக்கவனிக்காத தந்தையிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பொறுத்தப்போகும் மகள் . எட்வர்ட் ரிகர்சலுக்காக தூணி மாற்றிக்கொண்டிருக்கும் இடத்தில்  , இவரும் சாதாரணமாக நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவரின் திறந்தமனதைப்பாராட்டாமல் இருக்கமுடியவில்லை . மொத்தப்படத்திலும் இவர் தனியாக தெரிவதற்கு , கிளைமேக்ஸில் தந்தையை மருத்துவ அறையில் காணவில்லை என்று இவர் தேடுவதும் , அதைத்தொடர்ந்து ஆச்சரியமாக இவர் பார்க்கும் அந்த பார்வையும் போதும் . ஏற்கனவே இவர் ZOMBIE LAND எனும் திரைப்படத்தில் இன்னொரு பெண்ணுடன் இணைந்து அருமையாக நடித்து என்னைக்கவர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது (அந்தபடத்தில் நடித்தது இவர்தான் என இப்போதுதான் எனக்குத்தெரியும் – நன்றி விக்கி)

இவர்களுக்கு அடுத்து நண்பனாகவும்   தயாரிப்பாளராகவும் வரும் ZACH , முன்னாள் மனைவியாக வரும் எமி ரியான் , தன் முதல் ப்ராட்வே நடிப்பில் அங்கிகாரம் கிடைக்கவேண்டுமென தவிக்கும் நயோமி வாட்ஸ் , ஹீரோவின் காதலியாகவும் நாடக நடிகையாகவும் வரும் ஆன்ட்ரியா என அனைவரும் யாரும் குறைசொல்ல முடியாத வண்ணம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .

இயக்குநர் அலஜான்ட்ரோ கோன்சியேலஸ் இனியேரிட்டு (என்னப்பா பேர் இது ?) மொத்தம் 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார் . அதில் 4 திரைப்படங்கள் ( ஒரு திரைப்படம் 2015 – ல் வெளிவர இருக்கிறது ) ஆஸ்கார் நாமிநேசன்கள் என்றபொழுதே தெரிந்திருக்கும் , மனிதர் எப்படியென்று . படத்தில் ஆங்காங்கே டேரன் அர்வனாஸ்கியின் BLACK SWAN – ன் பாதிப்பு இருந்தாலும் , படத்தை  திறம்பட செதுக்கியிருக்கிறார் .  ஒரேஷாட்டில் வைத்து 90 சதவீத படத்தினை முடிப்பது சாதாரண விஷயமல்ல . ( முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் திகில் திரைப்படம் SILEN HOUSE . அப்படமும் முடிந்தவரை சிறப்பாகவே எடுத்திருப்பார்கள் . நேரமிருப்பின் பாருங்கள் ) . ஒவ்வொருவரின் கேரக்டரைசேசன் முதல் , அவர்களின் கோபதாபங்கள்  , மனப்பிரச்சனைகள் , பாசம் , ஏக்கம் என அனைத்தையும் திறம்பட காட்டியிருப்பது பாராட்டுக்குரியது . இல்லாமலா 4 ஆஸ்காரைத்தூக்கி கொடுத்திருப்பார்கள் . அதேநேரம் , மனிதமனம் , உள்ளார்ந்த சைக்காலஜி விஷயங்களைக் காட்டுகிறேன் என்று  மொக்கை போடாமல் உள்ளுக்குள்ளே காமெடியையும் , கிடைத்த கேப்பில் THE SECRET LIFE OF WALTER MILTY (புகழ்பெற்ற TIME பத்திரிக்கையின் கடைசிகால நிலையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் . கொஞ்சம் போர் தான் ) போல ஆங்காங்கே கிராபிக்ஸ் கலக்கல்களையும் உள்ளே விட்டு நம்மையும் கவர்ந்திருக்கிறார் .  இசை மற்றும் பாடல்களை ஆங்காங்கே மேட்ச் செய்தது , சில இடங்களில் குறியீடுகளின்வழி என்னை ஈர்த்தது போன்றவையெல்லாம் கண்டிப்பாக பாராட்டலாம் .


மொத்தத்தில் , ஆஸ்காருக்காக மட்டுமின்றி சாதாரணமாகவே எல்லாரையும் கவரும்வண்ணம் ஒரு ஜனரஞ்சக சினிமாகவே இருக்கிறது இந்த BIRDMAN . தாராளமாய் பார்க்கலாம் . ஹாலிவுட்டுக்கே உரிய சிலபல அரைகுறை நேக்கட் காட்சிகள் வந்தாலும் பெரும் அபத்தமான காட்சிகள் அவ்வளவாக இல்லை .
உங்கள் விருப்பம்

4 comments:

 1. விமர்சகர் சுப்புடுவையே மிஞ்சி விடுவீர்கள் போலயே விமர்சிப்பதில் அருமையான நடையாக வருகிறது
  த.ம. 1

  ReplyDelete
 2. #EDWARD NORTON இந்த மனிதரின் நடிப்புத்திறமையை இவரின் முதல்படமான PRIMAL FEAR#
  இது வேறயா,எப்படி உங்களால் இப்படிஎல்லாம் ரசிக்க முடிகிறது :)

  ReplyDelete
 3. நீங்கள் பார்க்கலாம் தம்பி...!

  ReplyDelete
 4. நல்ல விரிவான அலசல்.. டவுன்லோட் பண்ணியாச்சு.. பாத்திடவேண்டியதுதான்...

  ReplyDelete