Wednesday, 11 March 2015

எனக்குள் ஒருவன் – சினிமா விமர்சனம்



எனக்கென்று ஒரு நேரமுண்டு . நான் அதிகம் எதிர்பார்த்து முதல்நாள் முதல் ஷோவே போகலாம் என்று தீர்மானித்து வைத்திருக்கும் திரைப்படங்களை , இதுநாள்வரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை ( விஜய் , அஜித் படங்களைத்தவிர்த்து ) . இப்படி நான் மிஸ் செய்த திரைப்படங்கள் ஏராளம் . சமீபத்தில் மெட்ராஸ் , அனேகன் , தொட்டால் தொடரும் போன்ற படங்கள் உட்பட . இத்திரைப்படத்திற்கும் முதல்நாள் முதல்காட்சியே பார்த்துவிடவேண்டும் என்று முந்தைய நாள் இரவு தூங்கச்செல்லும்போதே முடிவெடுத்தேன் . அதற்கு முழுமுதற்காரணம் சந்தோஷ் நாரயணன் . என்ன காரணத்தினாலோ அவரின் ஆர்ப்பாட்டமில்லாத இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இசைக்கு மட்டும் நான் படத்திற்குச்சென்றது கடைசியாக நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திற்குத்தான் . சரி , இப்படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று ரிலிசான முதல்நாள் தினத்தந்தியைத் திருப்பினால் சேலம் சிட்டியில் உள்ள A1 தியேட்டர்களில் மட்டுமே படம் ரிலிஸ் . படம்பார்க்க சேலத்திற்குச்சென்றால் கண்டிப்பாக ஒருநாள் ஆகிவிடும் என்பதாலும் வேலைப்பளுவாலும் பார்க்க இயலவில்லை . ஆனால் முந்தாநாள் ஊரின் அருகில் உள்ள ஒரு தியேட்டரில் எனக்குள் ஒருவன் ரிலிஸ் ஆகி ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது . சாதாரணமாக மார்க்கெட்டிங்கில் கில்லாடியான குமார் , எப்படி திரையரங்குகளின் பெயரை பேப்பரில் சரியாக வராமல் சொதப்பினார் என்பது புரியாமல் நேற்று படத்திற்குச்சென்றேன் . ஆனால் நான் போன நேரம் அன்றைக்கு இப்படத்தை எடுத்துவிட்டு வெள்ளைக்காரதுரை எனும் புத்தம்புதிய சூப்பர்ஹிட் திரைப்படத்தை அத்திரையரங்கில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள் . இதேபோல் மெட்ராஸ் படத்திற்குச்சென்று அரண்மனை எனும் சூரகாவியத்தைப்பார்த்த துர்நிகழ்வுகளும் என்வாழ்க்கையில் நடந்தேறி இருப்பதால் மீண்டும் வீட்டிற்கு ரிட்டர்ன் . என்ன ஆனாலும் சரியென்று இன்று சேலத்திற்கேச்சென்று விட்டேன் .

நான் திரையரங்கை நெருங்கியநேரம் மணி 2.20 . படம் எத்தனை மணிக்கு என்று கேட்டால் 2.30 – க்கு என்று பதில் . தியேட்டர் முகப்பிலோ ஒருத்தர்கூட இல்லை . டிக்கெட்டை வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தால் மொத்தமாக என்னுடன் வந்த இருவரையும் சேர்த்து 20 பேர் . படம் போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் கூட்டம் இல்லாத படியால் கண்டிப்பாக இப்படம் நன்றாக இருக்கும்  என்று உள்மனது சொன்னது . அதன்படி படமும் நன்றாகவே இருந்தது .

சரி படத்தின் கதைக்கு வாப்பா என்று அலுத்துக்கொள்வது தெரிகிறது . இப்படத்தின் கதையை சொன்னால் பின் படத்தைப்பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால்தான் அக்கதைக்குப் பதிலாக படம்பார்க்க சென்ற கதையைத்தெரிவித்தேன் . இருந்தாலும் படத்தின் நிறைகுறைகளை பற்றிமட்டும் கூறிவிடுகிறேன் . முன்குறிப்பு – நான் கன்னடத்தில் வெளியான லூசியாவைக் காணவில்லை .

படத்தில் இருவேறு சூழலில் ஏறத்தாழ ஒரேமாதிரியான  இருகதைகள் நடைபெறுகிறது . ஒன்று நிஜத்தில் மற்றொன்று கனவில் . எது நிஜம் ? எது கனவு ? என்பதே திரைப்படம் . இப்படத்தைப்பார்க்கும்முன் இன்செப்ஷன் பார்த்திருந்தால் சில காட்சிகள் குழப்பமில்லாமல் புரியும் . எகா – சித்தார்த் லிம்போ எனும் மாயக்கனவுலகில் மாட்டிக்கொள்ளும் காட்சி , கனவில் இருந்து அவர் வெளியே வரும் காட்சி .


சித்தார்த்துக்கு இப்படம் கொஞ்சம் ஸ்பெஷல் தான் . இதுவரை ஒருவிதமான சாக்லேட் பாய் , சப்பை போன்ற கேரக்டரில் வலம் வந்தவருக்கு முதன்முறையாக நடிக்க வாய்ப்பு இப்படத்தில்தான் அமைந்திருக்கிறது . சித்தார்த்தைத்தவிர்த்து எவர் நடித்திருந்தாலும் இதே நடிப்பையும் உழைப்பையும் வழங்கியிருப்பார்கள் என்றாலும் , இதுவரை காணாத சித்தார்த்தின் நடிப்பை இப்படத்தில் பார்த்தபோது கொஞ்சம் ஸ்பெஷல் தான் . சித்தார்த்தின் அட்டக்கருப்புநிறமான  ஒரு வேடத்தைப்பலர் தவறாக சித்தரித்திருந்தனர் . கருப்பு என்றால்தான் அருவெறுப்பானவனா ? கருப்பு நிறத்தானைத்தான் யாருக்கும் பிடிக்காதா ? எதற்கு அப்படியொரு வேடத்தைக்கொடுக்கவேண்டும் ? கன்னடத்தில் இது எடுத்தாழப்பட்டிருக்கும் விதம்தான் சரி என்றெல்லாம் கூறியிருந்தார்கள் . ஆனால் என்னைப்பொறுத்தவரை அந்த வேடம் அட்டக்கருப்பாக , அசிங்கமாக எடுக்கப்பட்டது மிகமிகச்சரியே . அதற்கான காரணத்தையும் போகிறபோக்கில் சொல்லியிருப்பார் இயக்குநர் . அதைச்சரியாக கவனித்தால் அவ்வேடத்தின் அர்த்தம் புரியும் . ஆனால் எதற்கெடுத்தாலும் செல்போனை நோண்டியபடியே சித்தார்த் வருவதுதான் ஏனென்று தெரியவில்லை .


படத்தின் பெரிய குறை ஹீரோயின்தான் . சாதாரண நடுத்தர பெண் கேரக்டர் க்ளிக் ஆனாலும் மாடர்ன் ட்ரஸ்ஸில் பார்க்கும்போது படுகேவலமாக இருக்கிறார் . அதற்கு மேகா படத்தின் ஹீரோயின் தான் சரியான தேர்வாய் இருந்திருக்கவேண்டும் . என்ன காரணம் ? யார் செய்த தாமதம் என்றுதான் புரியவில்லை . மேகா படத்தின் ஹீரோயின் , டார்லிங் படத்தில் ஐட்டமாக வருகிறார் என்பதற்காக இதிலும் ஐட்டமாக பயன்படுத்தியிருப்பது தவறு என்றே தோன்றுகிறது .

திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது . படம் கிளைமேக்ஸ் வரை ஆர்வமாகவும் செல்லவில்லை , அதேநேரம் வெறுப்பேற்றவும் இல்லை . அதுபாட்டிற்கு மெல்ல மெல்ல நகருகிறது . இன்னும் பரபர திரைக்கதையாய் அமைத்திருந்தால் எல்லா சென்டரிலும் வசூலை வாரியிருக்கலாம் . அதுவும் ஒரு ட்ராபேக்காக அமைந்துவிட்டது .


கேமரா கோணங்கள் மிகச்சரியாகவே அமைக்கப்பட்டிருந்தது . சந்தோஷ் நாரயணனின் பாடல்கள் மிகச்சரியாகவும் நேர்த்தியாகவும் தேவைக்கேற்ற இடத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள் . ITS NOT HIS MASTERPIECE , BUT ONE OF THE BEST எனும் ரீதியிலான இசை .  எடிட்டிங்கும் மிகநேர்த்தியானது . இயக்குநரும் தன் பங்கிற்கு தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கியிருக்கிறார் . இப்படத்தின் வெற்றிக்கு பெரும்பங்கு திரைக்கதை என்பதாலும் , மேலும் பவன்குமாரின் திரைக்கதையின் 70 சதவீதத்துக்கும் மேல் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாலும் முதல் கிரெடிட் பவனுக்குத்தான் . எப்படிப்பார்ப்பினும் இது ஒரு புது முயற்சி என்பதில் சந்தேகமில்லை . இன்ஷெப்சன் படத்தினைத் தமிழில் புரியும்படி  ஒருவர் இயக்கினால்  இப்படித்தான் இருந்திருக்கும் . ரீமேக்காக இருந்தாலும் கண்டிப்பாக வரவேற்கதக்க முயற்சியே . எப்படியும் வரும் வெள்ளிக்கிழமை 11 திரைப்படங்கள் ரிலிசாவதாலும் , ஏற்கனவே இப்படத்தின் திரையரங்குகள் காற்றுவாங்குவதாலும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமையன்று எடுத்துவிடுவார்கள் . எனவே தயவு செய்து இத்திரைப்படத்தையாவது தியேட்டருக்குச்சென்று பாருங்கள் . இப்படிப்பட்ட படங்களை வரவேற்காத பட்சத்தில் தமிழில் ஏதும் புதுமுயற்சிகளே இல்லை , மலையாளத்தைப்பாருங்கள் , கடலாழத்தைப்பாருங்கள் என்று கடைசிவரை புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் .




உங்கள் விருப்பம்

4 comments:

 1. கதைக்குதான் பஞ்சம் என்றால் தலைப்புக்குமா பஞ்சம் ?என்ன கொடுமைடா சரவணா :)
  த ம 3

  ReplyDelete
 2. படத்தை வைத்து
  நன்றாக அலசி உள்ளீர்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 3. கடலாழத்தைப் பாருங்கள்... அட...! எங்கேயோ போயிட்டீங்க...!

  ReplyDelete
 4. ஒரே தலைப்பில் எத்தனைப்படங்கள்.... இன்னும் வருமோ..???????????????

  ReplyDelete