Sunday, 29 March 2015

FAST & FURIOUS சீரிஸ் – ஒரு பார்வை - 1
பார்ட்டி , சரக்கு , கலர் கலர் கார்கள் , விதவிதமாக உருமும் என்ஜின் சவுண்டுகள் , ஒரு வார்த்தையுமே புரியாத ஹிப்ஹாப் பாடல்கள் , பிறந்தபோது போட்டிருந்த துணியுடன் உலாவரும் மங்கைகள் என்பதெல்லாம் இப்படத்தின் டைட்டிலைப்பார்க்கும் எவருக்கும் நினைவுக்கு வரும் . பொதுவாக கார் வைத்திருக்கும் நபர்களில் இப்படத்தைப்பார்த்தவர்கள் , ஒருமுறையாவது ட்ரிப்ட் அல்லது ரேஸ் ஓட்டிவிடவேண்டும் என எண்ணவைத்துவிடும் திரைப்படம் . அதிலும் வெளிநாட்டுக்காரர்களின் கிறுக்குத்தனத்தையெல்லாம் ஒரு தனி பதிவே எழுதலாம் எனுமளவிற்கு இருக்கும் . ‘இப்போ அடிக்கிறேன் பாரு மாப்ள “DRIFT”U ’ என்று பூலோகத்திலிருந்து மேலோகத்திற்கு SHIFT ஆன கோஷ்டியினர் எக்கச்சக்கம் . எனக்கு கார் ஓட்டத்தெரியாது அதேநேரம் காரின்மேல் அதீத ஈடுபாடும் கிடையாது . என் கவனம் அனைத்துமே பைக்மீதுதான் . ஆனால் இந்த FAST AND FURIOUS திரைப்படங்களைப்பார்க்கும் போது மட்டும் யகோ ! நாம இன்னும் கத்துக்காம இருக்கோமேனு ஏங்கவைத்துவிடும் . அப்படியொரு கலக்கலான கார்ரேஸ்திரைப்படங்கள் இந்த சீரிஸ் மாத்திரம் தான் . NFS கம்ப்யூட்டர் கேம்களால் கவரப்பட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் . ஆனால் அந்த கேமை , திரைப்படமாக மாற்றியபின் பார்க்கும்போது படுகேவலமாக இருக்கும் . அந்த படம்கூட இந்த சீரிஸ்களுக்கு போட்டியாக எடுக்கப்பட்டதுதான் என்றாலும் வரிப்புலியைப்பார்த்து , பூனை போட்ட சூடாய் NFS இருந்தது .  FAST AND FURIOUS – ன் ஏழாவது பாகம் ஏப்ரல் – 2 ல் ரிலிசாகவுள்ளது . அது வெளிவருவதற்குள் இதுவரை வந்த ஆறு பாகங்களையும் எழுதிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு . ஒருவேளை புதிதாக பார்க்கச்செல்பவர்கள் அல்லது இடையிலே சில பாகங்களைப்பார்க்காதவர்களுக்கு இப்பதிவு உதவினாலும் உதவும் என்ற உள்ளார்ந்த சிந்தனையில் எழுதுகிறேன் . படத்தைப்பற்றி பெரியதாக நோலன் சீரிஸ் போல் வழவழவென்றெல்லாம் எழுதமாட்டேன் . படத்தின் கதையோடு எனக்குப்பிடித்த காட்சிகளை பற்றி மட்டும் எழுதுகிறேன் .

இப்படங்களின் ஆதாரம் ஸ்ட்ரீட் ரேசிங் என்று தெருக்களில் நடக்கும் கார் பந்தயங்கள் . எனக்குத்தெரிந்தவரை வடசென்னையில் மகாராணி தியேட்டர் , ராயபுரம் போன்ற இடங்களில் இரவுநேரங்களில் பைக்ரேஸ் நடைபெறும் . அதேபோல அமெரிக்காவில் நடக்கும் ஸ்ட்ரீட் ரேஸ்களின் இன்ஸ்பிரேசனில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது . இந்த ஸ்ட்ரீட் ரேஸ்கள் அங்கிகரிக்கப்படாதவை . இதில் பார்வையாளர்கள் என்று பொதுஜனங்கள் யாரும் இருக்கமாட்டார்கள் . ரேசில் கலந்துகொள்பவர்களே பந்தயத்தைக்கட்டி , அப்பணத்தைக்கொண்டு ரேஸ் நடக்கும் . படத்தைப்பற்றி பார்க்கும் முன் ஒவ்வொரு கேரக்டர்களையும் முதலிலேயே ஒழுங்குபடுத்திக்கொன்டால் உங்களுக்கு எளிதாகப்புரியும் . இந்த சமையல் பதிவுகளில் சொல்வார்களே , தேவையான பொருட்கள் மட்டன் 200 கிராம் , உப்பு தேவையான அளவு என்று , அதேபோல் தான் .

பிரெய்ன் கானர் (பால் வாக்கர் - 1,2,4,5,6 ) இந்த சீரிஸின் வெளிப்படையான ஹீரோ.  இதுவரை வந்த ஆறு பாகங்களில் 5 பாகங்களில் வரும் கேரக்டர் . கார் ரேஸ் மீது அதீத ஈடுபாட்டுடன் திரியும் போலிஸ்காரர் . ஆள் பார்க்க சென்ற காலேஜை கட் அடித்த ஆள்போலவே இருப்பார் . ஆனால் காரை எடுத்துவிட்டால் ஒரே பரபரபர தான் .

டாமினிக் டோரெட்டோ (வின் டீசல் 1,4,5,6 ) நமது ராம்ராஜ் நிறுவனம் உலகளவிலான மார்க்கெட்டில் கால் பதித்தால் , தன் பனியனுக்கு விளம்பர மாடல் தேடி அழையவே வேண்டியதில்லை . நேராக வின் டீசலின் வீட்டிற்குச்சென்று அக்ரிமென்ட் போட்டுக்கொண்டு திரும்பிவிடலாம் . இல்லையேல் கமுக்கமாக யுனிவர்சல் நிறுவனத்திடம் கொஞ்சம் அமௌன்டைத்தள்ளிவிட்டு வின் டீசலின் காஸ்ட்யூமிற்கு தங்களுடைய பனியனையே உள்ளேநுழைத்துவிடலாம் . ஏனென்றால் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வெள்ளைப்பனியனுடனே வருகிறார் . சரி , அவருடைய உள்ளாடையை விட்டு வெளியே வந்து பார்த்தால் தலைவர் தான் F&F சீரியஸின் உண்மையான ஹீரோ . இவரின் கேரக்டரை ராபின்ஹூட் என்றும் சொல்லிவிடமுடியாது . மங்காத்தா விநாயக் என்றும் சொல்லிவிடமுடியாது . கார் ரேஸில் கெட்டிக்காரர் . கொள்ளையடித்தல் இவரது தொழில் .

மியா டொரேட்டோ ( ஜோர்டானா -1,4,5,6 ) – டாமினிக்கின் தங்கை . மிக மிக அமைதியான பெண் . குடும்ப வாழ்வில் படு அக்கறை காட்டுபவள் . தன் குடும்பத்தினர் யாரும் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று இருப்பவள் . வடிவேலு மாதிரி சொல்லவேண்டுமெனில் , சூப்பர் பிகர் .

லெட்டி ஆர்டிஸ் (மிச்சிலி ரோட்ரிக்யுஸ் - 1,4,6 ) இந்தம்மா சிறுவயது முதலே டாமினிக்கின் கார்பட்டறையிலேயே வளர்ந்தது . லெட்டியும் டாமும் படுதீவிர காதலர்கள் . டாமிடம் இருக்கும் முக்கிய திறமைசாலிகளில் ஒருத்தி .

ரோமன் பியர்ஸ் (தைரிஸ் கிப்சன் – 2,5,6 ) – இவர் திடீர் இடைச்செறுவலாக இரண்டாம் பாகத்தில் வந்தவர் . தொனதொனவென்று நான் எப்படி எழுதிக்கொல்கிறேனோ அப்படி ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவர் .பிரெய்னின் நண்பர் .

தெஜ் பார்க்கர் (க்ரிஸ் பிரிட்ஜஸ் – 2,5,6 ) இவரும் பிரெய்னின் நண்பர்தான் . இவரின் அறிமுகமும் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்தது . தொழில்துட்பத்தைக் கையாளுவதில் கில்லாடி .

ஹேன் சியோல் (சுங் காங் – 3,4,5,6 ) இவர் டாமினிக்கின் ஜப்பானிய நண்பர். இவரால் தான் இப்போது ஏழாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது . என்னப்பா ப்ரடியூசரானு கேட்டுடாதிங்க . இந்தாளு பொத்துனாப்ல இருந்திருந்தா டோமினிக்கின் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையுமில்லாமல் போயிருக்கும் . ட்ரிஃப்ட் கற்றுக்கொடுக்கிறேன் என்று ஒருத்தனைவைத்து , இன்னொருவனைப்பகைத்து கடைசியில் டோக்கியோவில் பாடையில் போய்விடுவார் . அவரை போட்டுத்தள்ளிவிட்டு பாத்ரூமிற்கு அவசரமாக போவதுபோல தலஜேசன் ஸ்டாதம் இன்ட்ரோவை 7- ம் பாகத்தில் பார்த்து ஆர்ப்பரித்த கூட்டத்தில் நானும் ஒருவன் .

ஜிஸ்லி யாசர் ( கேல் கடோட்- 4,5,6 ) – 4வது பாகத்தில் வரும் வில்லனிடம் வேலையாளாக இருக்கும் ஜிஸ்லி , ஒரு கட்டத்தில் டாமினிக்குடன் இணைந்துகொள்வாள் . அதைத்தொடர்ந்து வரிசையாக 5 – ம் பாகத்தில் நடிக்கவைத்து , சம்பளத்தாகராறோ என்னவோ 6- ம் பாகத்தில் போட்டுத்தள்ளிவிடுவார்கள் .

லூக் ஹாப்ஸ் (ராக் ட்வைன் ஜான்சன் – 5,6 ) மேலே பார்த்த அனைத்து கம்மனாட்டிகளையும் போட்டுத்தள்ளவோ  அல்லது பிடித்துப்போகவோ 5-வது பாகத்தில் வரும் ஒரு ஆபிசர் . கடைசியில் மேலே உள்ளவர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களைத்தன்னோடு இணைத்து நியாயத்துக்காக போராடவைக்கிறார் .

இன்னும் கேரக்டர்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் எழுதி உங்களின் மனதை நோகடிக்கவிருப்பமில்லாத காரணத்தால் நேராக ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று விடலாம் . மூன்றாவது பாகமான TOKYA DRIFT படத்தைக்கடைசியாக பார்க்கலாம் . ஏனெனில் அப்போதுதான் வரப்போகும் 7 – வது பாகம் புரியும் .

THE FAST AND FURIOUS – 2001


நம்ம நெடுஞ்சாலை படத்தில் வருவதுபோல , சரக்குகளை ஏற்றிச்செல்லும் ட்ரக்குகளை சிலர் கொள்ளையடிக்கிறார்கள் .அந்த கொள்ளைகள் தொடர்ந்தவண்ணம் இருக்க , காவல்துறையிலிருந்து அதைக்கண்டுபிடிக்க கார்ரேசில் ஆர்வமுள்ள பிரெய்ன் எனும் போலிஸ்காரர் அன்டர்கவர் ஏஜென்டாக அனுப்பப்படுகிறார் . ஸ்ட்ரீட் ரேஸ்களில் கெத்துக்காட்டும் டாமினிக்கிடம் பிரெய்ன் மெல்ல மெல்ல பழகுகிறான் . இந்த டாமினிக் , தன் சக ரேசர்களை ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களைப்போல நடத்துகிறான் . காதலி லெட்டி , தங்கை மியா  நண்பர்களான வின்ஸ்  மற்றும் ஜெஸ்ஸி   ஆகியோருடன் இருக்கும் டாமினிக்குடன் இனைகிறான் பிரெய்ன் . டாமினிக்கின் தங்கை மியாவும் பிரெய்னும் ஒரு பக்கம் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் . இந்த ட்ரக் கொள்ளையில் ஈடுபடுவது டாமினிக்கின் குடும்ப உறுப்பினர்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் பிரெய்ன் . ஒரு கட்டத்தில் இவர்களெல்லாம் ஜானி என்பவனுக்காக வேலைசெய்கிறார்கள் என்பதனையும் அறிந்துகொள்கிறான் . அந்த ஜானியை போலிஸ் அர்ரஸ்ட் செய்துவிட , அவன் ஜாமினில் வெளிய வந்துவிடுகிறான்    ஒருமுறை ரேசுக்குச்செல்லும் போது ஜானியிடம் பெட் கட்டி தோற்றுப்போகிறான் ஜெஸ்ஸி . தோற்ற வேகத்தில் ஆள் ஓடி ஒளிய , அதற்கான தார்மீகப்பொறுப்பை நீதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று டாமினிக்கிடம் ஜானி சொல்கிறான் . அதற்கான பணத்தை சம்பாதிக்க மீண்டும் தன் டீமுடன் கொள்ளையில் இறங்குகிறான் . அந்த கொள்ளையின்போது ட்ரக்கின் ட்ரைவர் உஷாராக இருந்து டாமினிக்கின் டீமுக்கு ஆப்பு அடித்துவிடுகிறான் . அந்த கொள்ளையடிக்கும் காட்சியில் வின்ஸுக்கு பலத்த அடிபட , அந்நேரத்தில் பிரெய்ன் வந்துகாப்பாற்றுகிறான் . அதேநேரம் அவன் ஒரு போலிஸ் என்கிற உண்மை டாமினிக்கிற்கு தெரிந்துவிடுகிறது . ஆனால் ஜானியோ , ஜெஸ்ஸி ஏமாற்றிய கடுப்பில் அடுத்தநாள் வந்து எல்லோரையும் கண்ணை மூடிச்சுட்டுத்தள்ளுகிறான் . அதில் ஜெஸ்ஸி இறந்துவிடுகிறான் . ஜெஸ்ஸியைக் கொன்றவர்களைப் பழிவாங்க டாமினிகுகம் பிரெய்னும் கிளம்புகிறார்கள் . வில்லன்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள் . டாமினிக்கை கைது செய்யவரும் போலிசாரிடமிருந்து டாமினிக்கைக் காப்பாற்றி அனுப்புகிறான் ப்ரெய்ன் .

இதுதான் முதல்பாகத்தின் மேலோட்டமான கதை . இப்படத்தில் வின் டீசலின் தங்கை வேடத்தில் வரும் ஜோர்டானாவை சைட் அடிக்காமல் இருக்கவே முடியாது . அவ்வளவு அழகாக இருப்பார் . படத்தின் ஆரம்பதில் வரும் ட்ரக் கொள்ளை , வின் டீசலுடன் போட்டிப்போடச்செல்லும் ப்ரெய்ன் மற்றும் அதுசம்பந்தப்பட்ட ரேஸ் காட்சிகள் , கிளைமேக்ஸுக்கு முன் வரும் ட்ரக் கொள்ளைக்காட்சிகள் எல்லாம் அசரவைக்கும்வண்ணம் இருக்கும் . ப்ரெய்னாக வரும் பால்வாக்கர் தான் படத்தின் ஹீரோ . வின் டீசல் செகன்ட் ஹீரோ தான் . கார் ரேசை மையமாக கொண்டு , ரேசைப்போலதொரு வேகமான திரைக்கதையால் இப்படத்தை அட்டகாசமாக கொண்டுசென்றிருப்பார் இயக்குநர் ராப்

2 FAST 2 FURIOUS - 2003


நம்மூரில் ஊர்த்திருவிழாவிற்கு மாமன் , மச்சான் , அங்காளி , பங்காளி , மாமன் மகள் , அக்கா மகள் என்று எல்லோரும் வந்து  சாராயம் , இன்னொருபுறம் பங்காளிச்சண்டை , சைட் அடித்தல் போன்றவைற்றையெல்லாம் அமெரிக்கர்கள் எப்படி அனுபவிப்பார்கள் என்று நிறைய முறை யோசித்துள்ளேன் . அதற்கு விடையாய் இப்படத்தின் அறிமுகக்காட்சிகளை சொல்லலாம் . அந்தளவு ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பிக்கும் . ஆனால் என்ன , முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் டல்லான திரைப்படம் தான்  . முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால் யுனிவர்சல் நிறுவனம் இருமடங்கு முதலீடு செய்து முடிந்தவரை பிரம்மாண்டாக எடுத்தது என்றே சொல்லலாம் . ஆனால் படத்தின் மிகப்பெரும் பிரச்சனை என்னவென்றால் FAST SERIES –களுக்கே உண்டான வின் டீசல் குடும்பத்தார் இத்திரைப்படத்தில் இல்லை . ஒரு பரபரப்புடன் தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்கு , வேறொரு விதமான திரைப்படத்தை வழங்கியிருப்பார் இயக்குநர் ஜான் . அதனால் தான் என்னவோ அதன்பின் வந்த அனைத்துப்படங்களையும் இயக்கும் வாய்ப்பு ஜஸ்டின் லீனுக்குப்போய்விட்டதோ என்னவோ .

சென்ற பாகத்தில் வின் டீசலை நமது ஹீரோ ப்ரெய்ன் தப்பிக்கவைத்துவிடுவார் . பின் தன்னுடைய போலிஸ் பணியைத்துறந்து முழுநேர கார் ரேசர் ஆகிவிடுவார் . ரேஸ் புரோக்கரான டெஜ்ஜுடன் இனைந்து ஸ்ட்ரீட் ரேசில் பந்தயம் கட்டி , ஜாலியாக இருக்கிறார் ஹீரோ . ஒருமுறை FBI – யிடம் மாட்டிக்கொள்ள , அவர்களோ இவனை வலுக்கட்டாயமாக ஒரு மிஷனில் ஈடுபடுத்துகிறார்கள் . கார்டர் எனும் ஒரு புள்ளியை கையும் களவுமாய் பிடிப்பதே அந்த மிஷன் . அந்த கார்டர் , தனக்கு ட்ரைவர்கள் தேவையென சொல்வதை மோனிகா எனும் அன்டர்கவர் ஏஜென்ட் மூலம் அறிந்துகொள்ளும் FBI , அவ்வேலையில் ப்ரெய்னைச்சேர்த்து விட்டு அவன்மூலம் அவனைப்பிடிக்கலாமென்று முடிவெடுக்கிறது. இந்த மிஷனில் தனக்கு பார்ட்னராக வேலைசெய்ய , ரோமன் பியர்ஸ் என்பவனைத் தேடிச்செல்கிறான் . ரோமனுக்கும் ப்ரெய்னுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு இருக்க , அதையெல்லாம் சரிசெய்துவிட்டு பின் மிஷனில் இறங்குகிறார்கள் . இதற்கிடையே லோக்கல் போலிஸ் வேறு அவ்வப்போது குறுக்கே மூக்கை நுழைக்கிறது . ஒருகட்டத்தில் மோனிகா தான் உளவாளி என்பதை வில்லன் கார்ட்டர் கண்டுபிடித்துவிட , அவளைக்கடத்திச் செல்லமுயலுகிறான் . அதேநேரத்தில் ஹீரோவும் வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார் . அதன்பின் சண்டைபோட்டு மோனிகாவையும் காப்பாற்றி , ஹீரோக்கள் இருவரும் எஸ் ஆகி , வில்லனைப்போலிசில் மாட்டிவிடுவதே கிளைமேக்ஸ் .

படத்தில் முதல்பாகத்தில் இருந்த விறுவிறுப்பு மிஸ்ஸிங் என்றாலும் படத்தின் ஆரம்ப காட்சி  , லோக்கல் போலிசிடமிருந்து ப்ரெய்னும் ரோமனும் தப்பிக்கும் காட்சிகள் , தங்களுக்கு மேலும் இரு கார்கள் தேவைப்பட அதற்காக ஒரு ரேஸ் வைத்து அசத்தும் காட்சி , கிளைமேக்ஸ் காட்சி என அலுப்புத்தட்டாமல் படம் நகரும் . எப்படி பிரெய்ன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தார் என்பதை அறிய TURBO CHARGED PRELUDE எனும் குறும்படத்தை பாருங்கள் . கதை என்னவோ மிகமிக சிம்பிளாக இருந்தாலும் படம் போரடிக்காமல் சென்றதால் .கே . வானது . இப்படத்தில்வரும் ரோமன் பியர்ஸ் மற்றும் தெஜ்  இருவரும் வின் டீசலின் குடும்பத்தில் ஐந்தாம் பாகத்தில் இணைவார்கள் .


இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .
உங்கள் விருப்பம்

5 comments:

 1. உப்பு சரியாகத் தான் சேர்க்கப்பட்டு உள்ளது தம்பி... ஹா... ஹா...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. நல்லது தொடரட்டும் த.ம 3

  ReplyDelete
 3. ஸூப்பர் தொடர்கிறேன் நண்பரே...
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 4. How great it would be if our boys get a phd for their movie info?

  ReplyDelete