Sunday, 29 March 2015

FAST & FURIOUS சீரிஸ் - ஒரு பார்வை -3இந்த FF தொடரை எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ , நேற்று ஒருவரின் வீரசாகசத்தை நேருக்குநேர் பார்க்கவேண்டியிருந்தது . டீசல் காரை வைத்திருந்ததால் மனதில் வின் டீசல் என்ற நினைப்பு வந்துவிட்டதோ என்னவோ ! நேற்று ஒருவர் அட்டகாசமானதொரு ட்ரிஃப்டைச்செய்யப்போய் மூஞ்சுமுகரையெல்லாம் பேற்றுக்கொண்டு 108 –ல் அள்ளித்தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றார்கள் . அப்படி  ஒன்றும் அவர் ரேஸ் செய்யவேண்டுமென்ற நினைப்பிலெல்லாம் செய்யவில்லை . மனதில் குடியை நினைக்காமல் குடியில் வண்டியை ஓட்டினார் . வண்டியின் முழுவேகத்தில் எங்கள் கிராமத்தைக்கடக்க முயன்றபோது குறுக்கே ஒரு நாய் புகுந்துகொள்ள தலைவர் ஸ்டேரிங்கை வளைக்க ,  வண்டி எப்படியும் ஒரு 20 சுற்றுகள் சுற்றி ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தது . நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை . நாய்க்கன்பட்டி என்ற எங்களின் ஊர்ப்பெயரைப்பார்த்தாவது உஷாராகியிருக்கலாம் . சரி , சமூகப்புரட்சியிலெல்லாம் ஈடுபட்டு சமூகப்பதிவர் , புரட்சிவாதியென்று பெயரெடுக்கும் ஆசையெல்லாம் எனக்கில்லை என்பதால் நேராக படத்திற்குச்செல்லலாம் . என்னது ? டிக்கெட் நாந்தான் போட்டுக்கனுமா ? யோவ் , படத்துக்குப்போலாம்னா படம் எப்டி இருக்குனு பார்க்கலாம்னு அர்த்தம் . (ஓவர் மொக்கையோ ?)

அதற்குமுன் புதியவர்களுக்கு ,

இத்தொடரின் முதல் பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .
இரண்டாம் பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .

சென்ற பதிவில் நான்கு மற்றும் ஐந்தாம் பாகத்தைப்பார்த்தோம் . இந்த பதிவில் ஆறாவது பாகத்தையும் மூன்றாவது பாகத்தையும் அப்படியே ஏழாவது பாகத்தைப்பற்றிய சில இணையச்செய்திகளையும் பார்ப்போம் .


FAST & FURIOUS 6 – 2013


சென்ற பாகத்தில் அனைவரும் கொள்ளையடித்த பணத்தை வைத்து செட்டிலாகி விட்டார்கள் என்று கூறியிருந்தேன் அல்லவா ? இந்த பதிவின் ஆரம்பமே மாஸ்கோவில் ஒரு கும்பல் தங்களின் கார்வரிசையைக் காட்டிவிட்டு எதையோ திருடிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள் . இன்டர்போல் , அதில் சம்பந்தப்பட்ட ஒருவனைக்கைது செய்திருக்க , ஹாப்ஸ் சென்று ட்யூப்லைட் , டேபிள் முதலானவற்றை அவனைப்பயன்படுத்தி உடைத்துப்போட்டு அவனிடம் உண்மையையும் கறக்கிறார் . பழைய பாகங்கள் அனைத்திலும் வில்லன் என்பவன் ஒரு அட்டுக்கூமுட்டைகளாகவும் , யோசிப்பதற்கே சங்கடப்படும் அடிமுட்டாள்களாகவும் இருப்பார்கள் . ஆனால் முதல் முறையாக ஒரு இன்டலிஜென்ட் பவர்புல் வில்லனை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருப்பார்கள் . அவன் தான் ஷா . இவனைச்சாதாரணமாக பிடிக்கமுடியாது , அதேநேரத்தில் அவனுடன் லெட்டியும் வேலை செய்கிறாள் என்பதால் இந்த கேசில் உதவக்கோரி டாமினிக்கை அனுகுகிறார் ஹாப்ஸ் . தன் முன்னாள் காதலியைப்பார்த்ததும் காதல் ஊற்றுப்பெருக்கெடுக்க , ஐந்தாம் பாகத்தில் இருந்த தன்னுடைய டீமை மீண்டும் வரவழைக்கிறான் டாமினிக் . அதன்பின்னென்ன ஆக்சன் தான் . ஆனால் இம்முறை ஆக்சனைக்காட்டுவது வில்லன் கும்பல் . வில்லன் கும்பல் கொடுக்கும் புழுத்த அடியுடன் , லெட்டி வேறு டாமினிக்கை சுட்டுவிடுகிறாள் . நான்காம் பாகத்தில் இறந்ததாக நம்பப்பட்ட லெட்டி எவ்வாறு உயிருடன் வருகிறாள் என்பதை ஷா கூறும் காட்சிகளின்வழியே அறிந்துகொள்ளலாம் . நினைவு தப்பப்பட்ட நிலையில் இருக்கும் லெட்டியை ஷா காப்பாற்றி தன்னுடன் இணைத்துக்கொள்வான். தோற்றுப்போய் திரும்பியவர்களுக்கு ஒரு உண்மை தெரிகிறது . இந்த ஷாவுடன் வேலை செய்த நான்காம் பாகத்தின் வில்லன் பிராக்கை அனுகினால் ஏதாவது மேட்டர் சிக்கலாம் என்று ப்ரெய்ன் அமெரிக்கா கிளம்புகிறார் . அவரை அமெரிக்க அரசாங்கம் தேடிக்கொண்டிருக்க , FBI யில் உள்ள ஒருவனின் உதவியோடு பிராக் இருக்கும் ஜெயிலில் கைதியாக அடைக்கப்படுகிறான் . அந்த பிராக்கிடம் இருந்து கறந்த மேட்டர் என்னவென்றால் , அவனை அவ்வளவுச்சுலபமாக பார்க்கமுடியாது . அவனாக நினைத்தால் மட்டுமே பார்க்கமுடியும் என்கிறான் . அதன்பின் ப்ரெய்ன் திரும்ப ரிட்டர்ன் ஆகிறார் . இன்னொருபுறம் பழைய காதலியான லெட்டியிடம் ஏதேதோ பேசி கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார் டாமினிக் . அந்நேரத்தில் வில்லன் ஷா வருகிறான். இருவரும் கொஞ்சநேரம் குடும்ப மொக்கைகளை போடுகிறார்கள். அதன்பின் ஷா கிளம்புகிறான் .  வில்லன் அடுத்ததாக தாக்க இருப்பது ஸ்பெய்னின் நேட்டோ படையினரிடமிருக்கும் ஒரு ரானுவ ஆயுதத்தை என்பதை அறிந்து அவனைச்சுற்றி வளைக்கிறார்கள் . அவனைப்பிடிப்பதற்குள் பல நூறு கார்கள் அப்பளமாகிவிடுகிறது . அங்கு நடக்கும் சண்டையில் லெட்டியை காப்பற்றுகிறார் டாமினிக் . கைது செய்யப்பட்ட ஷாவோ , ப்ரெய்னின் மனைவியைக் கடத்திவைத்திருப்பதாக தெரிவிக்க , வேறு வழியின்றி அவனை ரிலிஸ் செய்கிறார்கள் . அதன்பின் அவன் ஒரு பிளைட்டில் தப்பிச்செல்ல முயற்சிக்க அவனை டாமின் டீம் எப்படிக்கொல்கிறார்கள் என்பதே இத்திரைப்படம் . இந்த கிளைமேக்ஸ் சண்டையின்போது ஹேனை விரும்பும் ஜிஸ்லி இறந்துபோகிறாள் . டாமினிக்கும் ஷாவும் இடையில் சந்திக்கும் காட்சியில் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாக ஷா தெரிவிப்பான்.  அந்த அண்ணன் வேறு யாருமில்லை , நம்ம ஜேசன் ஸ்டாத்தம் தான் .

இத்திரைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு எக்கச்சக்கமான காட்சிகள் நம் மனதை அள்ளும் . அதுவும் ஷாவின் அறிமுகமும் அவனைத்துரத்திச்செல்லும் டாமினிக்கின் குழு வாங்கும் பல்ப்பும் அட்டகாசமாக இருக்கும் . பாலத்தில் நடக்கும் கார் ஸ்டன்ட் காட்சிகள் சான்ஸே இல்ல ரகம் . மொத்தத்தில் ஒரு அட்டகாசமான ஆறாவது பாகமாக இருக்கும் .


FAST AND THE FURIOUS – TOKYA DRIFT (2006)


வெல் , இத்திரைப்படம் எடுக்கப்பட்ட போது இதுதான் கடைசியாக வரும் என்று இயக்குனர் ஜஸ்டின் லீனே நினைத்திருக்கமாட்டார் . முதலிரண்டு பாகங்களிலும் ரேஸை வைத்தே மையமாக்கப்பட்டிருந்ததால் இதில் டிஃப்ரண்டாக செய்யலாம் என்று ஜப்பானிற்கு சென்று ட்ரிஃப்ட் எனும் வகையறாவைக் கையிலெடுத்தார் . இப்படத்தில் சீன் போஸ்வெல் எனும் மாணவன் , கார் ரேசின்மீது வெறியாக இருப்பான் . பொறுத்துப் பொறுத்துப்பார்த்த அவனுடைய தாய் , ஜப்பானில் இருக்கும் அவனது அப்பா வீட்டிற்கு அனுப்பிவிடுவார் . அங்குசென்ற சீன் , பள்ளியில் ட்விங்கி என்பவனுடன் நட்பாக இருக்க , அந்த ட்விங்கி மூலம் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு செல்கிறான் . DRIFT KING என்றழைக்கப்படும் டகாசி என்பவனுடன் நீலா என்பவளுக்காக ரேசில் மோதி தோற்கிறான் . இந்த ரேசில் சீன் போஸ்வெல்லுக்கு கார் கொடுத்து உதவுபவன் ஹேன் . தன் காதலி ஆறாம் பாகத்தில் இறந்தபின் டோக்கியோ சென்று அங்கே தன் வாழ்க்கையை போதைப்பொருள் கும்பலுடன் வாழ்ந்து வருகிறான் ஹேன் . ரேசில் காரை கண்டமாக்கிய சீன் , தனக்கு கீழ் பணியாற்றவேண்டும் என்று ஹேன் கூற , பதிலாக தனக்கு ட்ரிஃப்ட் கற்றுத்தரவேண்டுமென்று சீன் கூறுகிறான் . ஒருபுறம் ஹேன் , சீனுக்கு ட்ரிஃப்ட் கற்றுத்தர , இன்னொருபுறம் டகாசியின் மாமா மற்றும் பெரிய டானாக இருப்பவர் , பணவிஷயத்தில் டகாசி ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார் . பணத்தை ஹேன் தான் ஏமாற்றிவிட்டதாக டகாசி கோவமடைந்து ஹேனிடம் வர , சீனும் ஹேனும் தப்பிக்கமுயற்சிக்கிறார்கள் . தப்பிக்கும் முயற்சியில் ஹேன் ஒரு விபத்தில் மரணமடைகிறான்  (அவனைக்கொன்றது ஷாவின் அண்ணனான ஜேசன் ஸ்டாதம் தான் என்று ஆறாம் பாகத்தின் இறுதியில் வரும் ) . இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று டகாசியின் மாமாவைச்சந்தித்து ரேஸ் ஒன்று ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறான் . அதன்படி டகாசிக்கும் , சீனுக்கும் இடையே ரேஸ் நடக்கிறது. ரேசில் டகாசி தோற்றுப்போகிறான் . அதன்பின் ஹேனின் நண்பரான டாமினிக் , சீனுடன் ரேஸ் வைத்துக்கொள்ள இருப்பதாக படம் முடிவடையும் . படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறா விட்டாலும் இப்போது ரிலிசாக இருக்கும் 7 – வது பாகத்திற்கு அடித்தளம் என்பதால் எப்படியும் டி.விடி விற்பனையால் கொஞ்சம் மேலே வந்திருக்கலாம் .சரி , இந்த ஆறு பாகங்களில் முதல் பாகத்தை ராப் கோகனும் , இரண்டாம் பாகத்தை ஜான் சிங்கள்டனும் இயக்கினார்கள் . அதன்பின் வெளிவந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் ஜஸ்டின் லீன் தான் . சற்றுநேரத்தில் குப்பையாக போகவேண்டிய சீரிஸை , சீரியஸாக எடுத்து உலகளவில் FF சீரிஸ்க்கென்று ஒரு மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர்தான் . ஆறாம் பாகம் முடிந்ததும் ஏழாம் பாகத்தை எடுக்க ஜஸ்டின் லீனை அனுகியது யுனிவர்சல் நிறுவனம் . ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்சனைதான் . ஒரே ஆண்டில் அடுத்த பாகம் எடுது கல்லா கட்டிவிடவேண்டும் என்ற யுனிவர்சலின் பேராசையை ஜஸ்டின் நிராகரித்தார் . குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது வேண்டுமென்று ஜஸ்டின் கூற   , அதை ஏற்க மறுத்த யுனிவர்சல் வேறு ஒரு இயக்குநரைத்தேடியது . அப்போது சிக்கியவர் தான் ஜேம்ஸ் வான் . ஜேம்ஸ் வானின் படம் ரிலிசானால் உலகமெங்கும் பினாயில் , டாமெக்ஸ் போன்ற நிறுவனங்கள் நன்கு கல்லா கட்டிவிடும் . ஏனென்றால் படம் பார்க்க வருபவர்களை பீதியில் ஆழ்த்தி பேதிக்கு தள்ளுவதில் வல்லவர் . CONJURING , INCIDOUS , SAW என இவர் எடுத்த திரைப்படங்களைப்பார்த்து வாந்தி , பேதி ஆனவர்கள் பலர் . ஆனால் சம்பந்தமே இல்லாமல் இவரைக்கூட்டியாந்து இந்த சீரிஸில் கோர்த்துவிட்டார்கள் யுனிவர்சல் நிறுவனத்தார் என்றே தோன்றுகிறது . மனிதர் நல்ல இயக்குநர் தான் என்றாலும் FF மாதிரியான அதிவேக சீரிஸ்களை எடுப்பதில் இவர் எப்படி என்பதைப்பார்க்கவே படத்திற்குச்செல்ல வேண்டும் . படம் துவங்கிய சிறிது நாட்களில் பால் வாக்கருக்கு பால் ஊற்றப்பட்டதால் படம் நின்றது . பால் வாக்கரின் இறப்பு என்னைப்போன்ற அவரது ரசிகர்களுக்கு ஒரு பெருத்த இழப்பு தான் . படத்திலேயே ஸ்மார்ட்டாகவும் பணத்துடன் மனதைக் கொள்ளையடிப்பவராகவும் இருக்கும் ஒரே ஆள் இவர் தான் .  ஒரு படத்தில் தம்பி இப்போலாம் ஊனா கூட்டம் கூட்டி கொடியபுடிச்சிகிட்டு கிளம்பிடறாங்க . அங்க பாருங்க மஞ்சக்கலர் கொடிய புடிச்சிகிட்டு ஒரு கும்பல் வருதுனு வடிவேலிடம் ஒரு ட்ரைவர் சொல்லுவாரே , அது மாதிரி யாரோ ஒரு அறைகுறை ட்ரைவரை நம்பி புளியமரத்தடியில் முக்தி அடைந்தார் வாக்கர் . அவர் இறந்தபின் சிறிது காலம் நின்ற படபிடிப்பு , அவரைப்போலவே தோற்றம் கொண்ட நடிகர்கள் , வாக்கரின் இரு சகோதரர்கள் போன்றோரையெல்லாம் பயன்படுத்தி படத்தை முடித்தார்கள் . படத்தில் முக்கிய வில்லன் ஜேசன் ஸ்டேதம் என்பது ஊரறிந்த உண்மை . இன்னொரு வில்லனாக ஆங்-பேக் புகழ் டோனி ஜாவும் வருகிறார் . மேலும் மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த சீன் போஸ்வெல் கேரக்டரும் இப்படத்தில் வருகிறது . முதலிரண்டு பாகங்களும் அமெரிக்காவில் நடக்க , மூன்றாவது பாகம் டோக்கியோவிலும்  , நான்காவது டொமினிக் குடியரசு மற்றும் மெக்ஸிகோவிலும் , ஐந்தாவது பாகம் ரியோவிலும் , ஆறாவது பாகம் லண்டனிலும் எடுக்கப்பட்டிருந்தது . ஏழாவது பாகம் ரோட்டிற்கு பெயர் போன அரபுநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாம் . FF தொடர்களில் வில்லன் என்பவன் கண்டிப்பாக சப்பையாக இருப்பான் , அவனுடன் அளவெடுத்து தைத்தது போல ஹீரோக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லக்கைகள் இருப்பார்கள் . எகா ராக்கிற்கு ஏற்ற சைசில் ஆறாவது பாகத்தில் ஒரு பயில்வானும் , வின் டீசலுக்கு ஏற்றவாறு வில்லனும் , லெட்டிக்கு ஏற்றவாறு ஒரு பெண் வில்லியும் மாதிரி . ஆனால் வரப்போகும் படத்தில் இப்பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன் . ஏனென்றால் ஸ்டேதம் ஒருவரை சமாளிக்கவே எப்படியும் 3 பேர் வேண்டும் . இன்னொருபக்கம் யானை எலும்புக்கூட்டை க்ளவுசாக மாட்டிக்கொண்டு திரியும் டோனி ஜா வேறு வருகிறார் . இதைத்தொடர்ந்து 8 மற்றும் 9 தாவது பாகத்தினை மீண்டும் ஜஸ்டின் எடுப்பார் என்று விக்கியில் போடப்பட்டிருக்கிறது . ஆனால் பேப்பரில் வரும் போஸ்டர்களில் ONE LAST RIDE என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள் . வெற்றிபெற்ற சீரிசை , ரீபூட் செய்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ செய்யும் ஹாலிவுட் ஸ்டுடியோக்களை நம்ப முடியாது .  என்ன நடக்கப்போகிறது என்பதை ஏப்ரல் 2 ந்தேதி பார்க்கலாம் .
உங்கள் விருப்பம்

5 comments:

 1. பால் வாக்கரின் இறப்பு பெரிய இழப்பு...

  நகல் ஜெயிப்பது சிரமம் தான்...

  ReplyDelete
 2. டீசல் காரை வைத்திருந்ததால் மனதில் வின் டீசல் என்ற நினைப்பு வந்துவிட்டதோ என்னவோ ! நல்லதுதானே....த.ம.2

  ReplyDelete
 3. சக்திமான் பார்த்த குழந்தைகள் பால்கனியிலிருந்து பறந்து கிழே விழுந்த கதையாகவுல இருக்கு,,,,
  த.ம. 3

  ReplyDelete
 4. Padam semma hit......racing with unmatched fight sequence made this movie,a action packed block buster

  ReplyDelete
 5. ஹலோ ஜேம்ஸ் கலக்கீட்டான் ... பாருங்க பாருங்க பார்த்துகிட்டே இருங்க...

  ReplyDelete