Friday, 17 April 2015

காஞ்சனா 2 – சினிமா விமர்சனம்

நான் பார்த்தவரை பேய்க்கதைகளை , காமெடியுடன் இயக்கி முதன்முதலில் வெற்றிகண்டவர் லாரன்ஸ்  . இவர் ஆரம்பித்துவைத்த பயணம் யாமிருக்க பயமே , அரண்மனை, டார்லிங் போன்ற பல திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருந்தது எனலாம் . இன்று பேய்ப்படம் என்றாலே மினிமம் காமெடி கியாரன்டி என்ற நிலையில் வந்ததற்கும் லாரன்ஸ்தான் காரணம் . மேலும் தமிழ்சினிமாவில் முதன்முதலில் பார்ட் 2 எடுக்க ஆரம்பித்தவர் கமல் என்றாலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் லாரன்ஸ் . என்னதான் சிங்கம் – 2 , பில்லா – 2 என்று வந்தாலும் அதன்முதல் பாகங்களை ஒப்பிடும்போது இரண்டாம்பாகம் கொஞ்சம் அடிவாங்கத்தான் செய்தது . ஆனால் இரண்டாம் பாகத்தை முதல்பாகத்தைவிட சிறப்பாக எடுத்து அதில் பெருவெற்றியும் பெற்ற ஒரே இயக்குநர் ராகவா லாரன்ஸ் த . தமிழில் முதல்முறையாக ஒரு படத்தின் மூன்றாம் பாகம் ரிலிசானது இப்போதுதான் என எண்ணுகிறேன் . அஃபிசியலான மூன்றாம் பாகமாக வராமல் , ஏதோ சில காரணங்களால் காஞ்சனாவின் இரண்டாம் பாகம் என   பெயர் வைத்திருக்கிறார் .

இன்று மணியின் ஓ.கே.கண்மணிக்குத் தான் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . ஆனால் சுகாசினி அக்கா வேறு மவுஸ் எடுத்தவன் எல்லாம் விமர்சனம் பண்றானுங்கனு சொல்லிவிட்டார் . ஓ.கே.கண்மணிக்கு நான் போகலாம் என்று நினைத்ததற்கு காரணமே விமர்சனம் எழுதலாம் என்பதற்காகத்தான் . ஆனால் இந்தக்கா இப்படிச்சொல்லிவிட்டதால் என்பார்வையை லாரன்ஸிடமே திருப்பி விட்டேன் . எப்படியும் இன்னும் இரண்டுமாதங்களில் ஓ.கே.கண்மணி ஜெயாவில் ரிலிசாகிவிடும் . சரி , ஏதேதோ அறுத்துக்கொண்டிருப்பதால் நேராக படத்தைப்பற்றிப் பார்க்கலாம் .

படிக்காதவன் படத்தில் விவேக்  டான் ஆனபின் , அவரின் சகாக்கள் அவரிடம் கேட்பார்கள் .
‘உங்களையே நம்பிட்ருக்க இந்த மக்களுக்கு என்ன செய்யப்போறிங்க ? ’
‘இதுவரைக்கும் உங்களுக்கு என்ன பண்ணிருக்கேன் ?’
‘ஒன்னுமே பண்ணல ’
‘அதேதான் அவங்களுக்கும்’

அதேபோல்தான் . இதற்குமுன் காஞ்சனாவில் என்ன செய்தாரோ அதேதான் இப்படத்திலும் . ஆனாலும் படம் துளிகூட சலிக்காமல் , செம ஜாலியாக போகிறது . வழக்கம்போல் ராகவனுக்கு பேய் பயம் . கோவை சரளா அம்மா . டி.வி சேனலில் கேமரா மேனாக பணியாற்றும் ராகவா க்கு , அங்கு ப்ரோகிராம் இயக்குநராக பணியாற்றும் தாப்ஸியின் மேல் காதல் . ஒருமுறை டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கும் இவர்களின் சேனல் இரண்டாம் இடத்திற்கு வருகிறது . எதிர் டிவி சேனல் சாமியைப்பற்றிய ஒரு ப்ரோகிராம் எடுத்து முதலிடத்துக்கு வருகிறது . இதன்காரணமாக தாப்ஸியின் ஐடியாவின் பேரில்  ஒரு பேய் ப்ரோகிராம் இயக்குவதற்காக ஒரு பங்களாவிற்கு செல்கிறார்கள் . அந்த வீட்டினை ஒட்டிய பீச்சில் எதேச்சையாக தாப்ஸிக்கு ஒரு தாலி கிடைக்கிறது . அதன்பின் என்ன ? தாப்ஸியையும் பேய் பிடிக்கிறது . ராகவாவையும் பேய் பிடிக்கிறது . இம்முறை அந்த பேயிற்கு என்ன பிளாஷ்பேக் , அதை எப்படிச்சமாளிக்கிறார்கள் என்பதையும் நானே சொல்லிவிட்டால் , நீங்கள் படம் பார்க்கவே தேவையில்லாமல் போய்விடும் .

எப்படித்தான் அதேகதையை வைத்து மீண்டும் ஒரு ஜாலியான படத்தினை லாரன்ஸ் கொடுத்திருப்பார் என்பது ஆச்சரியமாயிருக்கிறது . முதல் பாதி முழுக்க ஶ்ரீமன் , மனோபாலா , மயில்சாமி,  தாப்ஸியுடன் இணைந்து சிரிக்கவைப்பதாகட்டும் , இரண்டாம் பாதியில் கோவைசரளாவை வைத்து காமெடி செய்வதாகட்டும் , செம அட்டகாசம் . லாரன்சுக்கும் மயில்சாமிக்கும்  ஹோமோசெக்ஸ் உறவு இருப்பதாக நினைக்கும் மனோபாலா  , தாப்ஸியின் உடலில் பேய்புகுந்து லாரன்சையும் கோவைசரளாவையும்  அடிக்கும் காட்சிகள் , லாரன்சின் உடலில் விதவிதமான பேய்கள் புகுந்து கோவைசரளாவை பந்தாடும் காட்சிகள் என காமெடிக்கு குறைவில்லை . நான் சென்ற மொக்கைத்தியேட்டரில் , அனைத்து ஸ்பீக்கர்களையும் அதிரவிட்டதாலோ என்னவோ சென்ற பாகத்தினைக்காட்டிலும் திகில் காட்சிகள் அவ்வளவாக என்னைப் பயமுறுத்தவில்லை . ஆனாலும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புக்கு குறைவில்லை . பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் . நித்யா மேனன் , லாரன்சைக்காதலிப்பதாக கூறிவிட்டு, இன்னொருவருடன் திருமணத்தின்போது தெனாவெட்டாக வருவதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . காஞ்சனாவின் பிளாஷ்பேக்கில் இருந்த அழுத்தம் இல்லாமல் போனது கொஞ்சம் மைனஸ் . இந்த தமனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை . எல்லா வாத்தியத்தையும் கடார் முடார் என தட்டி சில இடங்களில் இசையை இரைச்சலாக்கி விட்டார் . பாடல்களும் ,பாடல் காட்சிகள் ஓ.கே ரகம் . கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எனக்கு மேன் ஆஃப் ஸ்டீலின் நியாபகத்தை உண்டாக்கியது . இருந்தாலும் தமிழில் அம்மாதிரியான கிராபிக்ஸ் சண்டைக்காட்சிகள் இல்லை என்பதால் , எனக்கு மிகப்பிடித்திருந்தது.  ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாம் சிறப்பாக இருப்பதால் படத்துடன் ஒன்றி பார்க்கமுடிந்தது . லாரன்ஸின் தம்பி என்று ஒருவரைப்பாடலில் அறிமுகப்படுத்திவிட்டு , அத்துடன் அத்தாந்தரத்தில் விட்டுவிட்டார்கள் .

லாரன்ஸ் வழக்கம்போல அதே ரஜினி மேனரிசம் என்றாலும் பேய் பிடித்தபின் நடிப்பது , சிவாவாக வந்து கெத்து காட்டும் இடங்கள் என தன்னால் முடிந்தவரை வெரைட்டியாக நடித்திருக்கிறார் . தாப்ஸிக்குள்ளும் இவ்வளவு திறமை இருக்கிறதா என்பது இப்படத்தில் தான் தெரிகிறது . அநியாயத்துக்கு பேய் வேடம் நன்றாக செட்டாகியிருக்கிறது .ஶ்ரீமன் , மயில்சாமி , மனோபாலா போன்றோர் முதல் பாதியை கலகலப்பாக்குகிறார்கள் . படத்தின் முக்கிய பாத்திரம் என்றால் அது கோவை சரளாதான் . பேயிடம் ‘இரு இரு . நானே வரேன் ’ என்று வந்து அடிவாங்கும் போது சிரிக்காமல் இருந்தால் ஆச்சரியம் தான் . மேடம் தான் படத்தின் பெரிய ப்ளஸ்ஸே . முதல்பாதியில் சாதாரணமாக இருந்துவிட்டு இரண்டாம் பாதியை மொத்தமாக லாரன்சையும் சேர்த்து இடுப்பில் சுமர்ந்திருக்கிறார் . நித்யா மேனன் , மாற்றுத்திறனாளியாக வந்து அசத்தியிருக்கிறார் . உண்மையாகவே அப்படித்தானோ என்று எண்ணுமளவிற்கு தன் நடிப்பால் கவர்ந்திழுத்திருக்கிறார் (நான் அவங்களோட தீவிர ரசிகன் ஆயிட்டோங்கோ . அதனால அப்படித்தான் எழுதவேன் . கண்டுக்கிடாதிங்க . இந்த பொன்னொட செல்பியோ , குளியல் அறைக்காட்சியோ வெளியாகிடக்கூடாது ஆன்டவா .). மற்றபடி சுஹாசினி அக்கா இரு காட்சிகளில் வருகிறார் . சிலரின் பெயர் எனக்குத்தெரியாததால் அவர்களை தனித்தனியாக குறிப்பிடமுடியவில்லை எனினும் அனைவரும் தத்தம் பாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் . காஞ்சனா முதல் பாகம் தமிழில் ரிலிசாவதற்கு முன்பே ரிலிசாகி வசூலில் ஒரு கை பார்த்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதேபோல் இந்த பாகமும் தமிழைக்காட்டிலும் அங்கு ஒரு சுற்று அதிகமாகவே கலக்கும் என்று நினைக்கிறேன் . கிராபிக்ஸ் பிரியர்களான சுந்தரத்தெலுங்கர்கள் பக்கா பிளாக்பஸ்டர் ஆக்கிவிடுவார்கள் .


மொத்தத்தில் ஜாலியான ஒரு திரைப்படம் . தைரியமாகச்சென்று குடும்பத்துடன் பார்க்கலாம்.  எப்படியோ மூன்றாவது பாகத்தையும் வெற்றிகரமாக கொடுத்துவிட்டார் . பார்க்கலாம் நான்காவது பாகம் எப்படி இருக்கப்போகிறது என்று . ஹாலிவுட் படங்களைப்பார்க்கும்போது அவனவன் ஏழெட்டு பாகங்கள் எடுக்கிறானே , தமிழில் ஒன்றுமே இல்லையே என்று ஏங்கியதுண்டு . அதை ராகவா  லாரன்ஸ் போக்கிவிடுவார் என நினைக்கிறேன் . என்னது  சிங்கம் – 3 ஆ ? அத மறக்கமுடியுமா ? தமிழில் உருப்படியான சூப்பர்ஹீரோ படமே அதுதானே . என்ன , போலிஸ் ட்ரஸ் போட்ட சூப்பர்மேன் . கொஞ்சம் காதுச்சவ்வு கிழிய கத்துவார் .
உங்கள் விருப்பம்