PERFUME – ஒரு பார்வை





THE STORY OF A MURDERER



இப்படத்தின் இயக்குநர் டாம் டய்க்வர் பற்றிக்கூறவேண்டுமெனில் அவரும் ஒரு கிறிஸ்நோலன் போன்றவரே . சிறுவயதில் 8 mm கேமராவைத்தூக்கிக்கொண்டு படம் எடுக்கிறேன் என்று சுற்றி இருந்த நண்பர்களை பாடுபடுத்தியது  ; முதல் குறும்படத்தை சினிமா நண்பர் ஒருவரின் துணையுடன் வெளியிட்டது ; அதன்பின் நண்பர்களிடம் கடன்வாங்கி டெட்லி மரியாவை இயக்கி நல்ல இயக்குநர் என்று பேரெடுத்து வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்தது; அடுத்து மூன்றாவது படமான ரன் லோலா ரன்னை எடுத்து கடன் பிரச்சனை உட்பட அனைத்தையும் தீர்த்து கொஞ்சம் செட்டிலானது போன்ற விஷயங்களைக் கவனித்தால் அவருடைய வாழ்க்கையை வைத்தே மிகப்பெரிய ஒரு தன்னம்பிக்கைத்தரும் FELLGOOD திரைப்படத்தை எழுதி , இயக்கிவிடலாம் . இத்தனைப் பிரச்சனைகளையும் சமாளித்து தலைவர் இயக்கிய ஒரு அட்டகாசமான ப்ளாக்பஸ்டர் சைக்கலாஜிக்கல் திரில்லர் தான் PERFUME .

பேட்ரிக் சுய்ஸ்கின்ட் எனும் ஜெர்மானிய எழுத்தாளரால் 1985 எழுதப்பட்டு வெளிவந்த தஸ் பர்ஃபூம் (DAS PARFUM) எனும் நாவல் உலகமெங்கும் மெகாஹிட்டானது . அந்த நாவலைப்படித்தபின் குப்ரிக் உட்பட உலகின் பல முண்ணனி இயக்குநர்கள் அதைத்திரைப்படமாக எடுக்க ஆர்வம் காட்டினார்கள் . ஆனால் எழுத்தாளரின் நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான பெர்ன்ட் , தன் நண்பரிடம் பேசி அதன் உரிமையை வாங்கிக்கொண்டார் . இதன்பின் இவரிடமிருந்து உரிமையை வாங்க கான்ஸ்டன்டின் நிறுவனம் 10 மில்லியன் செலவளித்ததாக கூறப்படுகிறது . எது எப்படியோ ! கான்ஸ்டன்டின் நிறுவனம் உரிமையை பெற்ற பின் திரைப்படத்தை இயக்க ஒரு நல்ல இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் சிக்கியவர்தான் டாம் . ஒரு படத்தினை எப்படி உலகமே போற்றும்படியான அவார்டு வாங்கும்படமாக இயக்கவேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவர் டாம் . ஆனால் பிஸினஸ் மிக முக்கியம் என்பதை கொஞ்சம் லேட்டாக உணர்ந்திருந்தாலும் ரன் லோலா ரன் திரைப்படத்திற்குப்பின் கல்லா கட்டும் வித்தையையும் நன்கு உணர்ந்திருந்தார் . அதன்பின் உருவானதுதான் இத்திரைப்படம் .  

திரைப்படத்தைப்பற்றி பார்க்கும்முன் கொஞ்சம் வரலாற்றையும் பார்ப்போம். ரோமானியப்பேரரசர் கான்ஸ்டன்டைன் ஆட்சியின்போது கிறித்துவசமயத்தையும் திருச்சபையையும் அங்கிகரித்தார் . அதன்பின் இத்தாலியில் போப்பின் செல்வாக்கு அதிகரித்தது . ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் செல்வாக்கு மிக்கவராக போப் விளங்க ஆரம்பித்தார் . அதுவரை ஏழை , எளியமக்களுக்கான இயக்கமாக இருந்த கிறித்துவம் , அதன்பின் சமயமூடக்கருத்துகளுல் மூழ்க ஆரம்பித்தது . மேலும் ஐரோப்பாவின் அரசவம்சங்களையும் போப் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் . இக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கும் , கிறித்துவர்களுக்குமிடையே சிலுவைப்போர் வேறு மூன்டது . சிலுவைப்போரில் ஈடுபட்ட நாடுகள் என்று பார்த்தால் போப்பின் கொள்கைகளைக் கண்மூடித்தனமாக நம்பிய நாடுகளான இங்கிலாந்து ,பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகள் தான் . ஒருகட்டத்தில் 12 வயதுகூட ஆகாத சிறுவர்களை இந்நாடுகள் சிலுவைப்போரில் ஈடுபடுத்தவைத்தன . அதற்கு ஒரே காரணம் , மதத்தின்மீது இந்நாடுகள் கொண்டிருந்த நம்பிக்கை .இதை முதன்முதலில் லூதர் என்பவர் எதிர்க்க , அவரைப்போட்டுத்தள்ளுமாறு ரகசிய ஆனை பிறப்பிக்கப்பட்டது . லூதர் ஜெர்மனுக்குத்தப்பியோட , ஏற்கனவே சிலுவைப்போரினால் கடுப்பாகியிருந்த  ஜெர்மானியர்களும் லூதரை ஆதரித்தனர் . அதேநேரம் இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி , தன் செட்டப்பைத்திருமணம் செய்துகொள்ள போப்பிடம் அனுமதிக்கேட்க , போப்போ மறுத்துவிட , காண்டான அரசர் இங்கிலாந்தில் போப்பின் செல்வாக்கினை காலிசெய்தார்.

ஆனாலும் போப்பை தங்களுக்கும் மேலானவராக கருதிய இத்தாலி , பிரான்ஸ் நாடுகளில் தொடர்ந்து திருச்சபையின் ஆட்சி நடைபெற்று வந்தது . முக்கியமாக பிரான்ஸானது கண்மூடித்தனமான மதவழிபாடுகளாலும் , பிரபுக்களின் ஆதிக்கத்தாலும் கொடும்நிலையிலிருந்தது . பிரபுக்கள் மேன்மேலும் பணபலம் வாய்ந்தவர்களாகவும் , மதகுருமார்களின் ஆட்சி நடைபெற ஆரம்பித்ததாலும் சாதாரண மக்கள் தங்களின் அரசர்களின்மீது நம்பிக்கையை இழந்தனர் . இக்காலகட்டத்தில் பிரெஞ்ச் மன்னர்கள் வலிமையற்றவர்களாகவும் , திருச்சபையின் சட்டத்திற்கு உட்பட்டு மிக்சர் தின்பவர்களாகவும் இருந்தனர்  . திருச்சபையோ அம்மன்னர்களை இனிஷியலுக்காக சோறுபோட்டு வளர்த்தி வந்தது . இக்காலகட்டத்தில் மன்னரைக்காட்டலும் அதீத வளம் மற்றும் பலம் பொருந்தியவர்களாக பிரபுக்கள் விளங்கினர் . இவர்கள் திருச்சபைக்குத்தேவையான நன்கொடைகளைத்தருவதாலும் , திருச்சபை இயற்றும் புதிய சட்டங்களை மக்களிடையே செயல்படுத்தியதாலும் திருச்சபைக்கும்  , மன்னருக்கும் நெருக்கமானவர்களாக மாறினார்கள் . அதன்காரணமாக தங்களின் சுதந்திரங்களைவைத்து மக்களின் சுதந்திரங்களைப்பறிக்க ஆரம்பித்தனர்கடுமையானமுறையில் மக்களிடமிருந்து வேலைவாங்கிக்கொண்டு மிகச்சொற்பமான சம்பளத்தைக்கொடுத்தார்கள் . மக்களால் எதுவும் செய்ய இயலாத நிலைமைக்குத்தள்ளப்பட்டார்கள் . ஒருகட்டத்தில் ரொட்டிக்குக்கூட வழியில்லாத நிலைக்குத்தள்ளப்பட்ட மக்கள் வெகுண்டெழுந்தார்கள் . அன்றையநாள்தான் பிரெஞ்ச் புரட்சி என்றழைக்கப்படுகிறது .

இப்போது படத்தினைப்பற்றிப் பார்க்கலாம் . ஆரம்பகாட்சியிலேயே பலநாட்களாக சோறுதண்ணியில்லாத ஒரு வற்றிப்போன எலும்பனைக் காட்டுகிறார்கள் . அவன் ஒரு சிறைச்சாலையில் இருக்கிறான் . அவன்முகம் மிகவும் பரிதாபத்திற்குரியாதாகவும் , வாழ்வில் ஏதோ சாதிக்கப்போகும் உத்வேகத்துடன் இருப்பதைப்போல் தோன்றுகிறது . திடீரென ஒரு பரபரப்பு. அவனை நாலைந்து அதிகாரிகள் அலைத்துச்சென்று மக்களின்முன் நிறுத்துகிறார்கள் . ஆயிரக்கணக்கான மக்கள் அவன் சங்க அருத்துடுங்க ! அவன போட்டுத்தள்ளுங்க !’ என்று வெறியுடன் அவனைப்பார்த்து கத்துகிறார்கள் . அவனோ பே என்று விழித்துக்கொண்டிருக்கிறான் . திடீரென ஒருவர் அவனுக்குரிய தண்டணையினை மக்கள்முன் சொல்கிறான் . ‘ நாளை இவன் கை தனியாக , கால் தனியாக வெட்டப்பட்டு , ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்கச்செய்யப்பட்டு பின் சாகும்வரைத் தூக்கிலிடப்படுவான் என்று அவன் சொல்ல , மக்களெல்லாம் ஆராவரமாக கத்துகிறார்கள் . அப்படி என்னதான் பயபுள்ள பண்ணுச்சி என்று யோசிக்கும் நமக்கு ப்ளாஷ்பேக் போடுகிறார்கள் .

ஜீன் பாப்டிஸ்டு க்ரினோய்லி என்ற நமது ஹீரோ ஜூலை 17 , 1738 –ல் வளமிகு நகரங்களில் ஒன்றான பாரிஸில் பிறக்கிறார் . உடனே அவன்தாய் பிரசவ வழியில் துடிக்க , அவன் தந்தை அக்கணத்தில் அங்குமிங்கும் உலாவர பிறக்கிறான் என்றெல்லாம் நினைக்கவேண்டாம் . மீன்மார்க்கெட்டில் மீன்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு ஐந்தாவது குழந்தை . அவளின் கணவன் யாரென்று நாவலிலும் தெரியவில்லை . படத்திலும் காட்டவில்லை . ஒருவேளை அவள் அப்படிப்பட்டவளாகக்கூட இருக்கலாம் . ஆனால் ஒன்றைக்கவனிக்கவேண்டும் . நாவலின்படி அவளுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தைகள் ஏதும் உயிருடன் இல்லை . பிறக்கும்போதே இறந்துவிட்டது என்று கூறிவிட்டோ , கருவிலேயே கலைந்துவிட்டது என்று கூறியோ அவள் அக்குழந்தைகளைக்கொன்று விடுகிறாள் . காரணம் , வேறென்ன மேலே படித்தீர்களே பிரபுத்துவம்  மற்றும் மக்களின் வறுமை என்று. மீன்மார்க்கெட்டில் அமைதியாக நின்று வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவளிடம் ஒரு பெருசு வந்து மீனின் விலையைக்கேட்கிறது . அவள் சொல்லத்தயாராகும் நேரத்தில் ஏதோ அவளுக்கொரு பிரச்சனையாகிறது . உடனே நின்றிருந்த இடத்திலேயே அமர்ந்து யாருக்கும் தெரியாமல் சத்தம்கூட போடாமல் பிள்ளையைப் பெற்றுக்கொள்கிறாள் . வெளியில் விழுந்த குழந்தையைக்காலால் தள்ளிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கிறாள் . அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது . பிறந்த அக்குழந்தைக்கு ஒரு சக்தி  கிடைக்கிறது . அதெல்லாம் கடவுளின் அருளினால் அல்ல .ஒவ்வொருத்தருக்கும் ஒரு சக்தி கிடைப்பதுபோல் பிறவியிலேயே அக்குழந்தைக்கு எல்லாவற்றையும் முகர்ந்துப்பார்த்து உணரும் அபூர்வ சக்தி கிட்டுகிறது . திடீரென அக்குழந்தை அழ , அங்கிருக்கும் பொதுஜனங்கள் தாயின் கடையின்கீழே கிடக்கும் குழந்தையைப் பார்க்கிறார்கள் . அடுத்து என்ன ? அடுத்தநொடி அக்குழந்தையின் தாய் தூக்கிலிடப்படுகிறாள் . இதற்கு காரணம் திருச்சபையின் மதக்கட்டுபாடு . இவ்வாறாக பிறந்தவுடனேயே தாயைப்பழிவாங்கிய அக்குழந்தை ஒரு அநாதை இல்லத்திற்கு அனுப்பப்படுகிறது . அநாதை இல்லம் என்றவுடன் ஆங்காங்கே குழந்தைகள் கையைக்கோர்த்து விளையாடிக்கொண்டிருக்கும் . சிலகுழந்தைகள் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் அப்படி , இப்படியென்று தமிழுலக கற்பனைக்குச் செல்லவேண்டாம் . அந்த அநாதை இல்லத்தில் நன்கு வேலைச்செய்யக்கூடிய சிறுவர்களே இருக்கிறார்கள் . அவர்களுக்கு அங்கே தூங்குவதற்குக்கூட போதிய இடமில்லாமல் வெறுப்பில் வாழ்கிறார்கள் . அம்மாதிரியான நேரத்தில் தன்னிடத்தை அக்குழந்தை அபகரித்ததாக நினைத்து அதைக்கொல்லமுயலுகிறான் ஒரு சிறுவன் . அப்போது கத்தி கூப்பாடுபோட்டு அச்சிறுவனை மாட்டிவிடுகிறது . அக்குழந்தைதான் நம் படத்தின் நாயகன் ஜீன் .



அவ்வநாதை இல்லத்தில் வளரும் ஜீனுக்கு 5 வயதுவரை பேச்சு கிடையாது . ஆனால் அபரீதமான மோப்பசக்தி கிடைக்கிறது . எந்தளவு எனில் , நாமெல்லாம் கறிக்குழம்பின் மணத்தை முகர்ந்துபார்ப்போம் . மிஞ்சி மிஞ்சி போனால் அக்குழம்பில் சேர்த்தப்பட்டுள்ள சாந்தின் மணம் வரை நம்மால் முகர இயலும் . ஆனால் ஜீன் அக்குழம்பில் சேர்க்கப்பட்டுள்ள மிளகாய் விதை , கறியின் வாசம் , கறிக்குள் இருக்கும் கண்ணுக்குத்தெரியாத புழுக்களின் வாசம் வரை அனைத்தையும் முகர்ந்தே கண்டுபிடிப்பான் . தன் எட்டாவது வயதில் க்ரைமல் என்பவனிடம் ஜீன் வேலைக்குச்சேருவான் . ஒரு கட்டத்தில் அவன் சென்ட் தயாரிப்பாளரான பால்டினியைச்சந்திப்பான் . வாசனைப்பொருட்களின் அற்புதமணத்தினால் கவரப்படும் ஜீன் , பால்டினியிடம் தன் திறமையை ஒருமுறைக்காட்டுவான் . பால்டினியும் இவனிடம் பற்பல திறமைகள் இருக்கிறது என்றுணர்ந்து க்ரைமலிடமிருந்து ஜீனை விலைக்கு வாங்கிக்கொள்வான் . ஜீனின் அறிய சக்தியைக்கொண்டு பால்டினி தன் வியாபாரத்தைப்பெருக்கிக் கொள்வார் . அதேநேரம் ஜீனுக்கும் ஒரு பர்ஃபெக்டான சென்ட் உருவாக்குவது எப்படி ? PERFUME உருவாக்குவதற்கான வழிமுறைகள் போன்றவற்றைக்கூறுவார் . ஒவ்வொரு சென்ட்டும் தயாரிக்க 12 வழிமுறைகள் உள்ளதாகவும் அவ்வழிமுறைகளைப்பின்பற்றி தான் சரியான வாசனைதரும் பெர்ஃப்யூமை உருவாக்கமுடியும் என்றும் பால்டினி தெரிவிக்கிறார் . எனக்கு சத்தியமா அந்த மெத்தேட்களைப்படித்துப்பார்த்தாலும் மண்டையில் ஏறவில்லை . உங்களில் யாருக்கேனும் அதன்முறைகளை (படத்தில் சொல்லப்பட்டதைத் தவிர்த்து) தெரிவித்தால் நானும் அறிந்துகொள்வேன் . சரி , அந்தமுறைப்படி  அவனும் உலகின் பர்பெக்டான PERFUME உருவாக்க முயற்சிக்கிறான் . பூனையை வேகவைத்து அதிலிருந்து சென்ட் தயாரிக்க முயற்சிக்கிறான் . இதையெல்லாம் பார்த்த பால்டினி அவனுக்கேற்ற இடம் கிரேஸ் என்றுகூறி அவனை அவ்விடத்திற்கு அனுப்பிவைக்கிறார் .  



ஒருமுறை பால்டினியிடம் சேரும்முன் ஜீன் ஒரு பார்வையற்ற இளம்பெண்ணை பார்க்கிறான் . அவளிடமிருந்து ஒரு அற்புதமான மணம் வருகிறது . நெல்லிக்கனி விற்கும் அப்பார்வையற்ற பெண்ணை பின் தொடர்கிறான் . அவளிடம் இருக்கும் வாசனையை அறியமுற்படும்போது நிகழும் தவறுதலால் அவள் இறக்கிறாள் . அவள் இறந்தபின் அவளின்மேல் வரும் வாசம் அழிந்துவிடுகிறது . அந்த நினைவுகள் அவன் மனதில் ஓரத்திலேயே தங்கிவிடுகிறது . அக்காலத்தில் உலகின் மிகபெர்ஃபக்டான பெர்ஃப்யூமாக அறியப்பட்டவை எல்லாம் அப்பெண்ணின் உடலில் வரும் வாசனைமுன் தூசி என எண்ணுகிறான் . அதன்காரணமாகத்தான் அவன் வெளியேறுகிறான் . கிரேஸை அடைந்தவன் ஒரு விபச்சாரியிடமிருந்து அவ்வாசனையை கொண்டுவர முயற்சிக்கிறான் . ஆனால் அவளிடமிருக்கும் வாசனை அவனுக்குப்போதுமானதாக இல்லை . மேலும் அவள் இறந்துவிடுகிறாள் . அப்போதுதான் உணருகிறான் , இதுவரை அவன் தேடிய அந்த வாசம் கன்னிப்பெண்களிடமே இருக்கிறது என்பதை . அதைத்தொடர்ந்து நகரில் இருக்கும் கன்னிப்பெண்களை கடத்தி , அவர்களிடமிருந்து வாசனையைப்பெற்று பின் அவர்களைக் கொன்றுவிடுகிறான் . இவ்வாறாக 12 பெண்களிடமிருந்தும் வாசனையைப்பெற்றுவிடும் நேரத்தில் அவன் கைதுசெய்யப்படுகிறான் . இப்போது மேலே பார்த்த காட்சியை நியாபகப்படுத்திக்கொள்ளுங்கள் . அதன்பின் அவன் என்ன ஆனான் என்பது மீதிக்கதை .


ஒரு காலத்தில் நான் பார்க்கும் வகையறாப்படங்கள் என்றால் பெரும் பட்ஜெட்டில் இருக்கும் கிராபிக்ஸ் அடிதடிப்படங்கள்தான் என்று நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருப்பேன் . அச்சமயம் இந்த படம் ஒரு பிட்டுப்படம் என்று என்னிடம் கொடுத்து என் நண்பன் என்னைப்பார்க்கவைத்தான் . ஆரம்பத்தில் அதே நினைப்பில் பார்க்க ஆரம்பித்த எனக்குப்போக போகத்தான் புரிந்தது , இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்று . இப்படியும் உலகில் படம் எடுக்கிறார்களா என்று அதிசயிக்கவைத்த முதல் படம் இதுதான் .  இவ்வளவு வாசனையை முகரும் தன்மையுடைய ஜீன் ஒரு வாசனையற்றவன் . அவனுக்குத்தேவை பேரோ , புகழோ , பணமோ , மரியாதையோ அல்ல . அவன் நினைத்த ஒரு அதி அற்புதமான PERFUME –ஐ உருவாக்குகிறான் . அதற்காக யாருக்கு என்ன ஆனாலும் அவனுக்கு கவலையில்லை . ஏன் , நமக்குக்கூட இறக்கும் பெண்களின்மீது பரிதாபம் ஏற்படுவதைக்காட்டிலும் ஜீனின் மேலே பரிதாப எண்ணம் அதிகரிக்கும் . அவனை நியாயப்படுத்தவேண்டிய அவசியமில்லை , ஆனால் அவன் திறமையை அங்கிகரிக்கும்பொருட்டு அவன் செய்யும் தவறுகளை நாம் பெரிதுபடுத்தவும் தேவையில்லை . நாம் உணவுக்காக தாவரங்களைக்கொல்லவில்லையா ? அதேபோல் தான் அவனும் . அவனின் திறமைக்காக சிலரைக்கொல்கிறான் . பார்க்கும் நமக்கும் அது தவறாகத்தெரியவில்லை .

இப்படத்தைப்பார்க்கப்போகும்முன் ஒரு சிறிய எச்சரிக்கை . இப்படத்தில் ஏறத்தாழ 30 நிமிடத்திற்கு பக்கமாக நிர்வாணக்காட்சிகள் வரும் . அதுவும் கிளைமேக்ஸில் 100 பேருக்கும்மேல் கலவியில் ஈடுபடும் ஒரு மாஸ்ஓஜியே நடைபெறும் . இப்படத்தில் காட்டப்படும் நிர்வாணம் நம்மிடையே எதிர்விளைவுகளை ஆற்றாமல் சாதாரணமாகவேத்தெரியும் என்றாலும் ரசனையின்றி பார்க்கப்படும்போது ஒரு பிட்டுப்படமாகத்தான் தெரியும் . அதனால் கும்பலாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள் . அப்றம் இந்தாளு ஆஹோ ! ஓஹோனு எழுதனாதாலே குடும்பமா உட்கார்ந்து பார்த்து வெலக்கமாத்தடி வாங்கிட்டேன்னு என்மீது குற்றம் சாட்டவேண்டாம் .  படத்தின் கலை , ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகிய மூன்றும் அற்புதம் . இப்படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமே இல்லை , டைரக்டர் டாமே தான் . அவர் இப்படத்திற்கு மட்டுமல்ல , பெரும்பாலான அவருடைய படங்களுக்கும் அவரே தான் இசை . அதேபோல் அருவருப்பான காட்சியகளைக்கூட மிக அழகாக படம்பிடித்திருப்பார்கள் . நடிப்பைப்பற்றி எழுதினால் இன்னும் ஐந்துபக்கம் தாண்டிவிடும் . அந்தளவு பிரமாதமான நடிகர்கள் . மொத்தத்தில் ஒரு அட்டகாசமான திரில்லரான இத்திரைப்படத்தை பார்க்காமல் விட்டிருந்தால் உடனே டவுன்லோடிப்பாருங்கள் .


Comments

Post a Comment

Popular posts from this blog

MALENA (18+) – சினிமா விமர்சனம்

FIGHT CLUB – சினிமா விமர்சனம்