S/O சத்யமூர்த்தி – சினிமா விமர்சனம்



நான் இதுவரை எனக்குப்பிடிக்காத படங்களுக்கு விமர்சனம் எழுதியதே இல்லை . அதை முறியடித்த பெருமை இத்திரைப்படத்திற்கேச் சாரும் . பொதுவாக தெலுங்குப்படங்கள் என்றாலே ஒரு டாக் இருக்கும் . அரைச்ச மாவையே அரைக்கிறாய்ங்களேப்பா என்று படம் பார்த்தவர்கள் கூறுவார்கள்.  கதை என்னதான் ஒரேமாதிரியாக இருந்தாலும் திரைக்கதை எனும் கிரைன்டரில் சரியான விகிதத்தில் மாவை ஆட்டி , ஓரளவு ருசிக்கும்படியான தோசையைத்தான் தருவார்கள் . ஆனால் இப்படத்தில் த்ரிவிக்ரம் கொஞ்சம் ஓவராக அரைத்துவிட்டார் என்று நினைக்கிறேன் . மாவே இல்லாமல் தோசை சுட முயன்று நம்மைப்போட்டு வாட்டியெடுத்துவிட்டார் .

அத்தடு என்ற மெகா ப்ளாக்பஸ்டரின்மூலம் பெயர்பெற்ற த்ரிவிக்ரமின் ஜல்சா என்னுடைய ஆல்டைம் பேவரைட் படங்களுல் ஒன்று . அதிலும் ஒன்றும் பெரிய கதையெல்லாம் இல்லை என்றாலும் துளிகூட போர் அடிக்காமல் லாஜிக்கே இல்லாமல் ஜாலியாக பயணிக்கும் . அதன்பின் எடுத்த கலேஜா மற்றும் ஜுலாயியும் செம ஜாலியான படங்கள் . ஜல்சாவிற்குப்பின் பவன்கல்யாணுடன் இணைந்து எடுத்த அத்தாரின்டிக்கு தாரேடி தென்னிந்தியாவிலேயே  மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக 2013 –ல் அமைந்தது . வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் அனைத்தின் சாதனையையும் முறியடித்தது . டோலிவுட்டே அதிர்ச்சியில் உறைந்தது . அந்த நம்பிக்கையாலோ என்னவோ , அதே கான்செப்டை வைத்து அல்லு அர்ஜுனுடன் ஜோடிசேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார் . த்ரிவிக்ரமின் படம் என்று சொல்ல ஓரிரு காட்சிகள் தான் உள்ளன . இம்மாதிரி ஒரே மாவை எப்படி நன்றாக அரைக்கவேண்டும் என்று சீனு வைட்லாவிடமும்  போயபட்டி ஶ்ரீனு போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம் .

படத்தின் கதைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை . ஏனென்றால் எனக்கு மட்டுமல்ல , என்னுடன் படம் பார்த்த நூற்றைம்பது சொச்சம் பேருக்கும் கதை என்னவென்று தெரியாது . என் பக்கத்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் வெறித்தனமான அல்லு அர்ஜுன் ரசிகன் போல . மொபைல் வால்பேப்பரில் கூட அல்லு அர்ஜுன் தான் . படம் ஆரம்பித்தபோது ஹே என்று கத்தியவன் படம்போக போக மொபைலின் வால்பேப்பரை மாற்றிவிட்டு கேம் விளையாடிக்கொண்டிருந்தான் . ‘ரே பாவா . காலேஜ்லயே இருந்திருக்கலாம்’டா என்று அருகிலிருப்பவனிடம் பரிதாபமாக கூறினான் .

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடையிடையே கரென்ட் போய் , ஸ்க்ரீனில் SNAPSHOT எடுத்ததுபோல் நின்றது . இம்மாதிரியான சூழ்நிலையில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த தியேட்டரின் முதலாளியிலிருந்து மின்சாரத்துறை அமைச்சர் வரைக்கும் சகட்டுமேனிக்குத்திட்டுவதை நிறையமுறை பார்த்திருக்கிறேன் . இப்படத்திலும் அதேமாதிரி கரென்ட் கட்டானது . ஆனால் அங்கே தான் ட்விஸ்ட் . யாரும் கத்தவே இல்லை . ஒருவன் ‘நின்னுசாரி பக்கமத்து அன்டோ’ என்று மொபைலில் பாட்டை அலறவிட்டிருந்தான் . இன்னொருவன் டெம்பள் ரன் விளையாடிக்கொண்டிருந்தான் . அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக என் பக்கத்தில் இருந்த ரசிகன் படுத்து தூங்கியே விட்டான் .

படத்தில் ரசிக்கும்படியான காட்சிகளே இல்லையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது . காமெடிக்காட்சிகள் ஓ.கே ரகம் . அதிலும் கடைசி 20 நிமிடத்தில் வரும் பிரம்மானந்தம் அதகளம் புரிந்துள்ளார் . பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம் . கடைசிப்பாடலைத்தவிர்த்து மற்ற பாடல்களுக்குஅல்லு அர்ஜுனின் நடனம் சுமார்தான் . சண்டைக்காட்சிகள் ஒன்றும் சொல்லுக்கொள்ளும்படி இல்லை . காதல்காட்சிகளும் மிகசுமார் தான் . சென்டிமென்ட் காட்சிகளோ நம்மூர் சீரியல் போலத்தான் இருக்கிறது . ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தாலும் அசுவாரஸ்யமான திரைக்கதையால் கொட்டாவிதான் பல இடங்களில் வருகிறது . ஹீரோயின்களாக வரும் நித்யாமேனனையும் சமந்தாவையும் சைட் அடித்துக்கொண்டே இருக்கலாம் . ஹீரோவின் அண்ணியாக வருபவர் கூட செம அழ்கு . இந்த தெலுங்குப்படங்களில் எங்கிருந்துதான் நடிக்க பெண்களைக்கூட்டிவருவார்களோ ? எல்லோருமே அழகாக இருக்கிறார்கள் . அதுவும் நித்யாமேனன் , தொப்புள்கூட காட்டாமல் என்னை எக்கச்சக்கமாக கவர்ந்துவிட்டார் .

அதற்காக படம் படுமொக்கை என்று சொல்லவில்லை . உங்களுக்கு சீரியல் பார்த்த அனுபவம் இருந்தால் தொடர்ந்து பார்க்கலாம் . ஒரு அட்டகாசமான கருவை வைத்துக்கொண்டு இப்படி த்ரிவிக்ரம் கோட்டைவிடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை . ஏதோ அதுபோக்கில் பயணிக்கிறது . அடுத்தது என்ன என்று எதிர்பார்ப்பும் வரவில்லை , பார்க்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை . கொஞ்சம் செதுக்கியிருந்தால் அட்டகாசமானதொரு படமாக இருந்திருக்கும் .   

தெலுங்கு சினிமா உலகில் சிரஞ்சீவி ஆதிக்கம் வளர்ந்தபின் இரு கோஷ்டிகள் உருவானது . ஒன்று பெத்த தேவுடு என்.டி.ஆரின் வாரிசுகள் . மற்றொன்று மெஹாஸ்டாரின் வம்சாவழி . என்.டி.ஆர் வம்சத்தில் பாலகிருஷ்ணா ‘தப்பு ! ஒதலது ! கூடது’ என்று முறுக்குமீசையை வைத்து இன்னும் நடனம் ஆடுகிறேன் பார் என்று பெல்லிடான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் . அவர் அண்ணனும் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணாவைப்பார்த்தால் ஹீரோ என்று ஒருநொடிக்கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . ஏன் அவராலே அவர் ஒரு சினிமா ஹீரோ என்பதை ஏற்கமுடியாமல்தான் அரசியலுக்கு ஓடிவிட்டார் . ஏதோ நந்தமுரிக்குடும்பத்தில்  தப்பிப்பிழைத்து சீரஞ்சீவி குடும்பத்துக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருப்பது ஜூனியர் என்.டி.ஆர் மாத்திரமே . இம்முறை டெம்பரைச்சாய்க்க பெரும் படையையே சிரஞ்சீவி குடும்பம் இறக்கியிருந்தாலும் அல்லு தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது . அடுத்து பவர்ஸ்டாரும் , மெகா பவர்ஸ்டாருமாவது டெம்பரின் வெற்றியைத்தாண்டுவார்களா என்று பார்ப்போம் . ஆனால் யார் என்ன செய்தாலும் இவ்வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாகப்போவது ராஜ்மௌலிதான் என்பது வேறு விஷயம் .


சத்தியமூர்த்தி மகன் - சத்தியசோதனை  

Comments

  1. தெலுங்கையும் விடலையா ?
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. பத்தோடு இதுவும் ஒண்ணு:)

    ReplyDelete
  3. பலரும் வெயிலுக்கு பயந்து உள்ளே வந்திருப்பார்களோ....? ஹிஹி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை