FLIGHT OF PHOENIX- சினிமா விமர்சனம்



உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பயணம் என்றால் சத்தியமாக அது வான்வழிப்பயணம் தான் . இன்னமும் என்னதான் பந்தாவாக விமானத்தில் ஏறினாலும் , டேக் ஆஃப் ஆகும் போது நம் உயிர் டேக் ஆஃப் ஆகிவிடக்கூடாதென்று காயத்ரி மந்திரத்தையும் கந்த சஷ்டி கவசத்தையும் , பைபிளையும் மனதினுள் நினைத்துக்கொள்ளும் பலர் இருக்கின்றனர் . ரைட் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடித்த ப்ளைட்டுக்கு எலுமிச்சை பழி கொடுக்காததாலோ என்னவோ இன்னும் விமானப்பயணத்தால் பலவிதமான விபத்துகள் நடந்தவாறே இருக்கின்றன . நீர் ,நிலம் . நெருப்பு , காற்று ஆகியவற்றால் அதுவரை மக்களைக் கொத்துகொத்தாக கொலைசெய்துகொண்டிருந்த ஹாலிவுட் இயக்குநர்களுக்கு   விமானங்கள் என்ற பெயரில் வரப்பிரசாதம் கிடைக்க அதன்வழியேயும் முடிந்தவரை மக்களைக்கொன்று வருகிறார்கள் . விமானக்கடத்தல் , மோசமான வானிலையில் சிக்கிக்கொள்ளும் விமானங்கள் , விமானத்தில் விஷஜந்து என்ற மேட்களையெல்லாம் கொண்டு அந்த தம்மாத்துண்டு விமானத்தை வைத்து படத்தை எடுத்துவிடுகிறார்கள் . 1972 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 2000 –க்கும் மேற்பட்டோர் விமான விபத்தில் இறந்துள்ளார்கள் . மலேசிய விமானம் , ஆல்ப்ஸ் மலையில் நொறுங்கிய விமானம் என்று கடந்த ஒரு வருடத்துள் நமக்குத்தெரிந்தே இருபெரும் விமானவிபத்துகள் நடந்துள்ளன .

விமானப்பயணத்தில் பறவைகளின் தாக்குதல் , விமானத்தின் பாகங்கள் தீப்பிடித்தல் , மோசமான வானிலை , கார்கோ எடை அதிகமாயிருத்தல் , விமானியின் கவனக்குறைவு,  எரிபொருள் பற்றாக்குறை , மின்னல் ,  விமான வடிவமைப்பு போன்ற பலகாரணங்களால் விபத்து ஏற்படுகிறது . கடந்த 10 ஆண்டுகளில் 400 – க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நடந்திருக்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ? இவ்வளவு விபத்துகள்ள நடைபெறுவதாலோ என்னவோ ராபர்ட் செமிக்கிஸ் கூட தன்னுடைய முந்தைய படத்தில் இதை ஒரு முக்கிய அங்கமாக வைத்திருந்தார் . வெறும் ப்ளைட் ஹைஜாக்கை மட்டும் மையமாக வைக்காமல் , வேறுபலகாரணங்களை வைத்து , ப்ளைட்டுக்குள்ளேயே ஏதேதோ கதையெல்லாம் கூறி படமெடுத்துள்ளார்கள் ஹாலிவுட்டின் பல இயக்குநர்கள் .  திரில்லராக வெளிவந்த FLIGHT PLAN திரைப்படத்தில் தன்னுடன் வந்த மகளைக் காணவில்லை என ஹீரோயின் புலம்ப , உங்களுடன் மகளே வரவில்லை என்று விமானத்திலுள்ளவர்கள் கூற அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என நம்மை கொத்தாக படத்துடன் ஒன்றவைத்திருப்பார்கள் .  SNAKE AT THE PLANE எனும் திரைப்படத்தில் விமானத்துக்குள் தப்பிய பாம்புகளின் அட்டகாசம் என்றெல்லாம் பில்டப் செய்து அட்டகாசமான வசூலை வாரிக்குவித்தனர் . தமிழில் விமானக்கடத்தலை மையமாக வைத்து பெரியளவில் வெற்றி பெற்ற படமென்றால் பயணம் திரைப்படத்தைக் கூறலாம் . தாயகம் படத்தில் கூட ஓரளவு தத்ரூபமான ப்ளைட் ஹைஜாக்கையும் தொடர்ந்து நடக்கும் க்ராஷ்ஷையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள் . டாம் ஹேங்ஸின் கேஸ்ட் அவே திரைப்படம் கூட மோசமான வானிலையால் ஏற்படும் விபத்தில் தப்பிப்பிழைக்கும் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படி சர்வைவல் செய்கிறான் என்பதனையே அடிப்படையாக கொண்டிருக்கும் .

உங்களுக்கு கேஸ்ட் அவே திரைப்படம் பிடிக்குமெனில் இத்திரைப்படமும் பிடிக்கும் . ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது தெரியுமா ? உடனே தார் என்றோ சஹாரா என்றோ உங்களின் பொது அறிவைக்கொட்ட வேண்டாம் . மங்கோலியப்பாலைவனம் என்றழைக்கப்படும் கோபி பாலைவனம் தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது .  கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவை உடைய இப்பாலைவனம் உருவானது நம்முடைய இமயமலையால் தான் . வரும் மழையினை தன் உயரத்தால் தடுத்த இமயமலை , வெறும் வெப்பக் காற்றை அங்கே அனுப்பிவிடும் . இந்த கோபி பாலைவனத்திலிருந்து வந்தவர்கள் தான் நம்மையெல்லாம் 800 வருடங்களாக ஆண்ட முகலாயர்கள் . இந்த பாலைவனத்தின் சிறப்பு என்னவென்றால் இரவு நேரங்களில் 0 டிகிரியையும் குறைத்து உறையவிடும் அளவிற்கு குளிரும் , பகல்நேரத்தில் வேகவைக்காமலேயே மசாலா பூசிய கோழியை சாப்பிடும் அளவிற்கு கொடூர உஷ்ணமுமாக மாறிவிடும் . இந்த நிலை போதாதென்று அமெரிக்காவில் வீசும் புயல்களைப்போல் வலுவான பூயல்களும் உருவாகும் . ஆனால் இது மணற்புயல் . 

சரி , கண்ட குப்பையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு படத்தினைப் பற்றி பார்க்கலாம் . இத்திரைப்படம் 1964 –ல் இதே பெயரில் வெளிவந்த நாவலைத் தழுவி 1965 –ல் இப்படத்தின் பெயரையே வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ரீமேக் .  புரியவில்லையா ? 1964 –ல் FLIGHT OF PHOENIX எனும் நாவலை எல்லஸ்டன் ட்ரேவர் என்பவர் எழுதினார் . நம் ஹாலிவுட்காரர்கள்தான் எவன் நாவல் போடுவான்னு பார்த்துக்கொண்டிருப்பார்களே ! விடுவார்களா ? அடுத்த ஆண்டே இதே பெயரில் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டு வங்கிக்குச் சென்றார்கள் . அதன்பின் 2004 – ம் ஆண்டு ஸ்பில்பெர்க்கே கதையில்லாமல் தவிர்த்துக்கொண்டிருந்த காலம் . அக்காலத்தில் விழிபிதுங்கிய ஸ்டுடியோக்கள் , ஏற்கனவே எடுத்த திரைப்படத்தையே மீண்டும் தற்காலத்திற்கேற்றவாறு பில்லாவாக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள் . அப்படி 20TH CENTURY FOX – க்கு மாட்டியதுதான் இத்திரைப்படம் . பழைய படத்தின் திரைக்கதையைத் தூசு தட்டி சரிபார்க்கும் வேலையை எட்வர்ட் எடுத்துக்கொள்ள , படம்பிடிக்க ப்ரென்டனை அப்பாய்ன்ட் செய்துவிட்டு இத்திரைப்படத்தை இயக்க ஜான்மூரிடம் சென்று நின்றார்கள் . அப்போது தலைவர் பிகைன்ட் எனிமி லைன்ஸ் திரைப்படத்தினால் உலகமெங்கும் புகழ்பெற்றிருந்தார் . அதுவும் சர்வைவல் கான்சப்ட் , இதுவும் சர்வைவல் கான்செப்ட் என்பதால் சிறிது தயங்கியபடியே ஜான் ஒப்புக்கொண்டார் ( இவரின் மற்ற திரைப்படங்களின் பெயரைச் சொன்னால் கண்டிப்பாக உங்களுக்கு இவரைத்தெரிந்திருக்க வாய்ப்புண்டு . ஓமன் , டைஹார்டின் ஐந்தாம் பகுதி  போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான் ). அதன்பின் 2004 –ல் வெளிவந்து வசூலை இத்திரைப்படம் அள்ளினாலும் விமர்சகர்கள் கிழிகிழயென்று கிழித்துத்தொங்கப்போட்டு விட்டார்கள் . எல்லாரும் கூறிய காரணம் ஒரிஜனலின் சுவாரஸ்யமும் தாக்கமும் இத்திரைப்படத்தில் இல்லை என்பதுதான் . அதனால் இப்போதே கூறிவிடுகிறேன் . யாராவது 1965 –ல் வெளிவந்திருந்த ப்ளைட் ஆஃப் பீனிக்ஸ் பார்த்திருந்தால் இத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டாம் . நான் அத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்பதால் இத்திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது .

படத்தின் கதைப்படி மங்கோலியப் பாலைவனத்தில் உபயோகமற்ற ஒரு எண்ணெய்கிணற்றைவிட்டு (கிணறுனா கிணறே கிடையாது . பெட்ரோல் பங்க் மாதிரி தான் இருக்கும் ) கிளம்பும்படி கெல்லி ஜான்சன் குழுவிற்கு உத்தரவு வருகிறது . அவர்களின் குழுவை அழைத்துச்செல்ல  கேப்டன்  ஃப்ராங்க் மற்றும் அவரது உதவியாளர் AJ உடன் அவர்களை  அழைத்துச்செல்ல வருகிறார் . கெல்லியின் குழுவை அழைத்துச் செல்லும்  வழியில் பாலைவனமணற்புயல் வர அதில் சிக்கி விமானம் கட்டுப்பாட்டை இழந்து நடு பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறது . கேப்டனோ உதவி வரும்வரை காத்திருக்கலாம் என்று கூற , உதவி எதுவும் வராது என்று கெல்லி கூறுகிறார் . பின் இருக்கும் நீரை  வைத்து இரண்டுநாட்களைக் கடத்துகிறார்கள் . உதவி எதுவும் வராது என்று தெரிந்தபின்னர் எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும்போது கெல்லியின் குழுவில் இருக்கும் எல்லியாட் என்பவன் தான் விமானத்தயாரிப்பில் பணிபுரிந்ததாகவும் , அந்த அனுபவத்தைக்கொண்டு இருக்கும் விமானப்பகுதிகளை வைத்து புதுவிமானம் தயாரிக்கலாம் என்றும் கூறுகிறான் . கூட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்ப அதையெல்லாம் சமாளித்து விமானத்தின் மீந்த பாகங்களை வைத்து புது விமானம் உருவாக்க ஆரம்பிக்கிறார்கள் . இந்நேரத்தில் பாலைவனக்கொள்ளையர் கும்பல் வர , அவர்களுடன் நடக்கும் மோதலில் இவர்கள் பக்கம் ஒருவர் இறந்துவிட , கொள்ளையர் கூட்டத்தைச் சார்ந்த ஒருவன் தப்பிவிடுகிறான் . விமானத்தயாரிப்பு முடியும் நேரத்தில்தான் ஒரு உண்மை தெரிகிறது . எல்லியாட் உண்மையிலேயே வேலைசெய்தது குழந்தைகளுக்கான சிறிய ரிமோட் விமானம் செய்யும் தொழிற்சாலையில் . இந்த உண்மை தெரிவதற்குமுன் ஒரேயடியாக எல்லாரையும் ஆட்டுவித்துக்கொண்டிருந்த எல்லியாட்கு தாழ்வுமனப்பான்மை உருவாகிறது . இருந்தாலும் தன் கண்டுபிடிப்பு வேலை செய்யும் என்றுகூறி அனைவரையும் சமாதனப்படுத்தி மேற்கொண்டு வேலைகளைச் செய்கிறான். அதேநேரம் தப்பித்தோடிய கொள்ளைக்காரன் தன் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கூட்டி வர , அதேநேரம் இவர்களிடமிருந்த FUEL , நீர் , உணவு எல்லாம் முடிந்துவிட , தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை .


கேப்டன் ஃப்ராங்காக டென்னிஸ் , AJ வாக ஃபாஸ்ட் சீரிஸ் புகழ் டைரிஸ் கிப்சன் , எல்லியாட்டாக ரிபிசி மற்றும் கெல்லியாக மிரன்டா . விமானத்தில் ஏறும்முன்பும் ஏறிய பின்பும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்காலத்தைப்பற்றிக் கொண்டிருக்கும் கனவைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதே நமக்குத் தெரிந்துவிடுகிறது ; பயபுள்ளைங்க வாழ்க்கைல அனுபவிக்கமுடியாத கஷ்டத்த இன்னைக்கு அனுபவிக்க போறாங்கனு . அதேபோல் எண்ணற்ற துயரங்கள் , கோவம் , குரோதம் , தாழ்வு மனப்பான்மை , உதவும் மனப்பான்மை , இரக்கம் , காதல் என அனைத்து மனித உணர்வுகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பதாலே எனக்கு இத்திரைப்படம் பிடித்திருந்தது . படத்தில் தன் நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் என்றால் எல்லியாட்டாக வரும் ரிபிசி தான் . தாழ்வு மனப்பான்மை , தான் தான் இங்கு எல்லாம் என்ற திமிர் , தன் குட்டு அம்பலமாகிவிட்டதே என்று பதறும் இடம் , தான் கண்டுபிடித்தது வெற்றுபெறும் என்கிற நம்பிக்கை என ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார் . தெனாவெட்டாக இருக்கும் ஆசாமியாய் அறிமுகமாகும் டென்னிஸ் , கடைசியில் எந்தளவு மனிதஉணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக மாறுகிறார் என்பதை கண்டிப்பாக கவனிக்கவேண்டும் . இசையமைப்பாளர் மார்ரக்கோ , படத்திற்கு ஏற்ற பசைபோன்ற இசையை வழங்கியிருக்கிறார் . ஒளிப்பதிவாளர் படத்தில் நிகழும் வெப்பத்தைக் காட்க நம் கண்களையும் வெப்பப்படுத்தும் மாதிரியான வைல்ட் டோனில் எடுத்திருப்பது எனக்குப்பிடிக்கவில்லை . மற்றபடி பத்து நிமிட மணற்புயல் சி.ஜி அட்டகாசம் . 


மொத்தமாக CAST AWAY , THE WAY BACK , BURIED , THE EDGE , THE PIANIST அளவிற்கு இல்லையெனினும் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கும் ஒரு சர்வைவல் திரைப்படம் இது . 

Comments

  1. தலைப்பே சொல்லி விட்டதே ,விமானம் உயிர்த்து எழுந்து விட்டதை :)

    ReplyDelete
  2. ப்ளைட் ஆஃப் பீனிக்ஸ் பார்த்ததில்லை என்பதால் இதையும்........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை