78 ரூபாய் – சிறுகதை




‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’


அவரின் குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது.


‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான்.


‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே இருந்தார். அவரின் அனுபவங்கள் அனைத்தும் டாம் ஹேங்ஸின் ஃபீல்குட் படங்களை ஒத்திருந்தாலும் சிலவற்றை நம்பமுடியவில்லை. அப்போதுதான் அவரை நான் உற்றுகவனித்தேன்.வாட்டசாட்டமாக, பத்துநிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு கிங்ஸ் சிகரெட், கழுத்தில் 2 பவுன் தங்கச்சங்கிலி, மின்னுவதைப் பார்த்தால் எடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் இருக்கலாம்; கையில் ஒரு மோதிரம். அவரது சட்டைப் பையில் பணக்காகிதங்கள் நிறைந்திருந்தன. நடுவே ஒரு பழங்கால ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ மொபைல்.


‘நமக்கு லஞ்சம் வாங்குர பழக்கமெல்லாம் கிடையாது தம்பி. யாருகிட்டயும் ஒருபைசா வாங்கமாட்டேன். ஒத்தரூவாவ கொடுத்துபுட்டு ஏழாயிரம் சாபத்த விடுவாங்க. அந்த சாபமெல்லாம் நமக்கெதுக்கு?’


இவ்வார்த்தையைக் கூறியதும் என்னவோ அவரின் பேச்சுகளைக் கவனிக்கவேண்டும் என்று என் உள் மனது என்னை பணித்தது. என்னைப்போலவே வீட்டு உரிமையாளனுக்கும் இருந்திருக்கவேண்டும்.  மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்.


‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒத்த லைட்டுனு கவர்மென்ட்ல ஒரு ஸ்கீமு வந்துச்சி. ’

‘ஆமா சார். இப்போ நாயக்கம்பட்டில கூட ஒரு வீட்டுல தான் இருக்குனு நினைக்கிறேன்.’

‘அந்த ஸ்கீமுலாம் இப்போ இல்ல பா. எடுத்துட்டாங்க. எங்கயாச்சும் ஒன்னு, ரெண்டு இருக்கலாம். அதான் எல்லாரும் வீட்டு சர்வீஸே எடுத்துக்கிறாங்களே’

வீட்டு உரிமையாளனின் நினைவாற்றல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ ஒரு முனைப்பான விஷயத்தை அவர் கூற முற்படும்போது பேச்சை திசைத்திருப்பும் தோணியிலேயே இவன் பேசுகிறானே என்ற எரிச்சல் வேறு எனக்குள்.

‘அப்போ புதுரோட்டுல நா கம்பம் ஏறுர வேல பாத்துகிட்டு இருந்தேன். இந்த ஸ்கீம் வந்தபின்னாடி ஒரு ஏரியாவுக்கு நானும் என்னோட சீனியரும் போனோம். அந்த ஸ்கீம்படி வூட்டுக்கு ஒரு லைட்டு கவர்மென்ட் காசுல போட்டுக்கொடுக்கும். அதுக்கு கரண்ட்பில்லுலாம் வராது.’

அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறே தொடர்ந்தார்.

‘எங்கூட வந்த சீனியரு , இவங்கலாம் இனிமே கரண்ட்பில்லுதான் கட்டப்போறதில்லையே! அதுனால வூட்டுக்கு 100ரூபா வாங்கிகிட்டு கனெக்சன கொடுத்துடலாம்னு சொன்னாரு. எனக்கு காசப் பத்தி கவலையே இல்ல. எங்களுக்கு என்ன வேலைனா வூட்டுக்கு ஒரு கம்பத்த வச்சி, அதுல ஒரு லைட்ட போட்டு கனென்கசன் கொடுக்கனும். அப்படியே கொடுத்துகிட்டு வந்தோம். அவரும் நூறுநூறா வசூல் பண்ணிக்கிட்டே வந்தாரு.’

திடீரென அவருக்கு ஒரு போன் வர, அதை எடுத்து காதில் வைத்து சத்தமாகவே பேசினார். அவரின் அந்த போன் பேச்சு வழக்கமான மழை விசாரணைகளும் , குடும்ப விசாரனைகளுமாக கடந்தது. அப்பேச்சில் உருப்படியானதொரு விஷயமும் இல்லாவிடினும் அது அவரின் குடும்பத்திற்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் சிறு நூலாக அவரைப் பொறுத்தவரை இருந்திருக்கும்.

‘என்னோட அத்தமவ. பவானில இருக்கா. ரெண்டாந்தாரமா ஒருத்தருக்கு கட்டிக் கொடுத்துட்டுங்க. அவங்க வூட்ல வசதி கெடயாது. அதுனால எனக்குக் கட்டிக்கொடுக்கல. அவ புருசனும் நல்ல மனுசன்தான்; ஆனா வயசானவரு. சீக்கிரமா இறந்துபோய்ட்டாரு. பாவம், ஒத்தையா நின்னு ரொம்ப கஷ்டப்படுரா ’

அப்போது அவரின் முகத்தில் ஒரு தோற்றுப்போனவரின் சாயல் மின்னியதை என்னால் உணரமுடிந்தது. அதன்பின் இரண்டு நிமிடங்கள் இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தார்.

‘ஒவ்வொரு வூட்டுக்கும் நூறு ரூபா அவரு வாங்கிப்பாரு. நா கம்பத்துல ஏறி கனெக்சன் கொடுத்துட்டு இருந்தேன். மதியானத்துக்குள்ள 30, 35 வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டோம். அப்போ சேரிக்குப் பக்கத்துல ஒரு வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டு இருந்தோம். நா கம்பத்துல ஏறி கனக்சனு கொடுத்துட்டு இருந்தேன். அப்போ கீழயே நின்னுகிட்டு ஒரு அம்மா பாத்துக்கிட்டு இருந்துச்சி. எப்படியும் அதுக்கு ஒரு 70 வயசு இருக்கும். என்னோட சீனியருகிட்ட அது வந்துச்சி.’

‘யெய்யா மவராசா!னு அது கூப்ட, என்னோட சீனியரும் அத பாத்தாரு. அவருக்கு தெரிஞ்சிடுச்சி. அந்தம்மா சேரிக்கார அம்மானு.’

‘என்னா?னு வேகமா கோவமா கேட்டாரு. அந்தம்மா கொஞ்சம் பயந்துபோச்சு.’

‘அது கையில கசங்கி, நைஞ்சு போன காச வச்சிருந்துச்சி. ஐயா சாமி! எங்கிட்ட 78 ரூவாதாம்யா இருக்கு. எங்கூட்டுக்கு ஒரு விளக்கப் போடுயா! உனக்குப் புண்ணியமா போவும். அந்த அம்மா தலகுனிஞ்சிகிட்டு கெஞ்சுற மாதிரி கேட்டுச்சி. அத்து கண்ணுலாம் கலங்கி கிடந்துச்சி. அதோட குரலு இன்னமும் என்னோட காதுலயே இருக்கு. ஒருமாதிரி பாவத்தோட அழுகை. ஏழப்பட்டவங்களோட கெஞ்சல். எனக்கு மனசு ஒருமாதிரி ஆயிருச்சி.’

‘ந்தா! நூற கொடுத்தா கொடு. இல்லாட்டி ச்சும்மா போய் கெட. சாவுர வயசுல உனக்கு என்னாத்துக்கு லைட்டு? அப்படினு கத்திட்டாரு’

‘அவரு பேச்சக் கேட்டதும் கலங்கிப்போன கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சி. அழுதுகிட்டே அந்தம்மா பொலம்ப ஆரம்பிச்சிடுச்சி. ஐயோ மவராசா! எம்பன்னாடி வேற சந்தைக்கு போய்ட்டாரே. அவரு வந்ததும் கொடுத்துப்புடரேயா. ’

‘ஹங். உம்பன்னாடி வந்து மிச்சத்த அவுத்து வச்சிட்டுதா மறுவேலை பாப்பாப்படி. போ! போ! உங்களப்பத்தில்லாம் தெரியாதா எங்களுக்குனு அந்த சீனியரு மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசிப்பிட்டாரு.’

‘யெய்யாச் சாமீ. எல்லா வூட்டுலயும் ராத்திரிலகூட சூரியனாட்டும் மின்னுதே! எங்கூட்டுல இல்லையே. இருட்டுல இந்த ரெண்டுச்செவமும் செத்தாக்கூட யாருக்கும் கண்ணுத்தெரியாதே. யெய்யா கொஞ்சம் கருண காட்டுயா. உம் வம்சமே நோய்நொடியில்லாம நல்லா இருக்கும்யா. கம்பத்து மேல இருக்க யெய்யா! கொஞ்ச இந்தச் சாமிகிட்டச் சொல்லி கருணக்காட்டச் சொல்லுயா. உனக்குப் புண்ணியமா போவட்டும் னு அந்தம்மா என்ன பாத்து கெஞ்சுது.’

‘எஞ் சீனியரோ அத கண்டுக்கடல. என்னாலயும் எதுவும் பண்ணமுடில. புதுசா வேலைக்குச் சேந்துருக்க எனக்கு என்னாப் பண்றதுனு தெரில. அது பொலம்பிகிட்டே அதோட குடிசைக்குப் போயி ஒரு செம்பு அண்டாவ எடுத்துகிட்டு பக்கத்துல ஒரு குடியான வூட்டு வாசலுக்கு போச்சு.’

‘யம்மா மவராசி! எம்பண்ணையக்காரம்மானு அது கூப்டதும் உள்ளயிருந்து ஒரு பொம்பள வந்துச்சி. தாயி! இந்தண்டாவ வச்சிகிட்டு 25ரூவா கந்தா குடு தாயி. நா வாரவாரம் கட்டிப்புட்ரனு அது சொன்னுச்சி. அந்த வூட்டுக்காரம்மாவும் ஒரு பொம்பள தான. சரி அண்டாவ கொண்டுபோய் பொறத்தால வச்சிட்டு வானு அது சொன்னதும் இந்தம்மாவும் அண்டாவ கொண்டுபோய் கொல்லைல வச்சிட்டு வந்துச்சி. ஏன்னா அவுங்க பொருள வூட்டுக்குள்ள குடியானவங்க பொழங்கமாட்டாங்கள்ல  ’

‘ஆம்’ என்பதுபோல் நானும் வீட்டின் உரிமையாளனும் தலையை ஆட்டினோம். பிறகு என்ன என்பதை எங்கள் பார்வையாலயே அவரிடம் கேட்டோம். அவரும் புரிந்துகொண்டு தொடர்ந்தார்.

‘அந்த பண்ணையக்காரிச்சிக்கிட்ட காச வாங்கிட்டு வந்து எண்ணிக்கூட பாக்கமா எஞ் சீனியர்கிட்ட கொடுத்துச்சி. எப்படியோ அதோட வூட்டுக்கும் லைட்டு வரப்போவுதுங்ற சந்தோஷம் அது மூஞ்சில. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அந்த வையுவஞ்ச சீனியருகிட்டியே வந்து இந்தா சாமீனு அது சிரிச்சிகிட்டே கொடுத்துச்சி. ’

‘என்னோட சீனியரும் அந்த காச வாங்கிக்கிட்டு மிச்சக்காச எடுத்தாரு. அந்தம்மா மடிய விரிச்சி நின்னுச்சி. பிச்சப்போட்ர மாதிரி அது மடியில மிச்ச 3ரூவாய போட்டாரு. எனக்கு மனசே கனத்துப்போச்சு. அதுல இருந்து யாருகிட்டயும் நா காசு வாங்குரதில்ல.’

அவருக்கு மட்டுமல்ல! எனக்கும் மனம் கனத்தது. வெளியில் தூறிய மழை இப்போது எனக்குள்ளும் தூற ஆரம்பித்தது. என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு வித அவமான உணர்ச்சி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதற்குமேல் அவர் கூறியதைக் கேட்க மனம் விரும்பவில்லை. என்னை நானே மறைத்தாக வேண்டும்.

‘சரிங்ணா! நா கிளம்புறேன்’ என்றவாறு அவரிடமிருந்து எப்பதிலையும் எதிர்பார்க்காமல் மழையில் நனைந்தவாறே நடக்க ஆரம்பித்தேன்.

‘தம்பி மழையில ஏன்யா போற? இருயா மழ விட்டதும் நானே கொண்டு போய் வுடறேன்’ என்று அவர் கூறியது கேட்டது. வெளியில் பெய்யும் மழை மட்டுமே அவருக்குத் தெரியும்; என் கண்ணிலும் மனதிலும் பெய்யும் மழை, அம்மழைக்கு மட்டும்தான் தெரியும்.


Comments

  1. தங்களின் மின்நூல் இன்றுதான் வாசித்தேன் மிகவும் விறுவிறுப்பாகவும் காதல் ஏக்கமும் நேர்த்தியாக கதைப்பாங்கும்.விரைவில் என் தளத்திலும் கருத்தினைப்பகிர்கின்றேன் சகோ.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்