கொலை - சிறுகதை



நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன்.

சிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா? கெட்டதா ? எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன்.

என் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது.

என்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தாற்போல் கத்தியது. ஆம்! அது தன் இரையைக் கண்டுவிட்ட சந்தோஷத்திலும் என்னால் அதற்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையிலும் கத்தியது.

‘இனிமேல் அந்த பூன தூங்குனமாதிரி தான். நைட்டு முழுக்க அத பாத்துக்கிட்டே ஏங்கிக் கிடக்கும்’ என் தாயின் குரல் அப்பூனைக்கு சாதகமாகிவிட்டது. ஒருவேளை மறைமுகமாக  என்னை அதற்கு உதவிபுரியவைக்க அந்த பரிதாப வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். எப்படியாயினும் அவ்வார்த்தைகள் என்னை அச்செயலைச் செய்வதற்கான முனைப்பை ஊட்டியிருக்கவேண்டும்.

பூனையின் இரையை நான் பார்த்தேன். பெரிய, கம்பீரமான தும்பி. படபட-வென அதன் சிறகுகள் அடித்தபடி மேலுள்ள அம்மின்குழல் விளக்கைச் சுற்றிச் சுற்றி வந்தது. கருப்பும் இளம்பச்சையும் கலந்த சிறிது பெரிதான தட்டான். அதன் சிறகுச்சத்தம் பக்கத்து வீட்டில் ஓடும் தறியின் சத்தத்தைத் தாண்டி கேட்டது. ஒரு பெருமிதத்துடன் அது பறந்துகொண்டிருக்கலாம். கடவுளின் அதிசயப் படைப்பு என சின்னஞ்சிறியவனாய் இருக்கும்போது பார்த்துப் பார்த்து ரசித்து, கயிற்றில் கட்டி விளையாட, தட்டான் வேட்டைக்கு சென்றது நினைவுக்கு வந்தது.

அதைப் பிடிப்பது சற்று கடினமான காரியம் தான்; ஆனால் என்னை மாத்திரமே நம்பி , என்னிடம் தன் ஈனக்குரலால் உதவிகேட்டுக் கதறும் பூனையின் இரைச்சலை அடக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரு சட்டையை எடுத்தேன்; பூனையைப் பார்த்தேன். அதன் கண்ணில் சந்தோஷம் வெளிப்பட்டிருக்கலாம் அல்லது அதுமாதிரியான பிரமை எனக்குள் தோன்றியிருக்கலாம். ஒருநிமிடம் யோசித்தேன்; எதனால் என்று தெரியவில்லை.

படாரென்று ஒரு சத்தம் வந்தது. நான் அத்தட்டானை நோக்கிவீசிய துணியின் பிடியில் அது சிக்கி  பறக்க இயலாமல் கீழே மெதுவாக விழுந்தது. பூனைத் தயாரானது. தும்பி கீழிறங்கிய அடுத்த நொடி அதன் முழு உடலும் என் பூனையின் விரல்களுக்கு இடையில் இருந்தது. அதன் இறக்கைகள் என் பூனையின் விரல்களால்  பிடித்தமுக்கப்பட்டு, பூனை தன் வாயால் அதைக் கவ்விக் கொண்டது.  யோசித்த விடயம் நினைவுக்கு வந்தது. எதற்காக அதை அடித்தோம்?

இத்தனைக்கும் தட்டானைப் பூனை சாப்பிடாது என்று எனக்குத் தெரியும். என் வீட்டுப் பூனை ஆட்டூனையேச் சாப்பிடாது என்பது கூடுதல் தகவல். அப்படியாயின் நான் அதை அடித்து கீழே வீழ்த்தியது எதற்காக ?

பூனை அந்த தும்பியை அங்குமிங்குமாக தூக்கிப் பிடிக்க,  அத்தும்பி பூனையின் கொடூர நகங்களிடமிருந்து தப்பிக்க படபட-வென துடித்தது. ஆனால் இம்முறை அப்படபடப்பில் பெருமைக்குப் பதில் தப்பியாகவேண்டும் என்ற போராட்டகுணம். ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. நான் அடித்தது அதன் இறக்கைகளுக்கு பலமாய் இருந்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறை பூனையிடமிருந்துத் தப்பிக்கும் பொருட்டு அது உயரப்பறக்க முயலும்; ஆனால் பாதியிலேயே கீழே விழுந்துவிடும். பூனை ஓடிச்சென்று மீண்டும் நகங்களுக்கும் பற்களுக்குமிடையே வைத்து சித்திரவதைச் செய்ய ஆரம்பித்துவிடும்.

எதற்காக அதை அடித்தேன்? போயும்போயும் பூனையின் விளையாட்டு ஆர்வத்திற்காக சுதந்திரமாக பறந்து திரிந்த அந்த தும்பியை வீழ்த்தி, இப்போது அதனை அணுஅணுவாக சித்திரவாதைக்குள்ளாக்கியிருக்கும் இப்பாவச்செயலின் முழுபொறுப்பும் என்னையல்லவா வந்து சாரும். உயிருக்காக எப்படியாவது தப்பிக்கமுடியாதா எனத்தவிக்கும் அத்தட்டான் என்ன தவறு செய்திருக்கமுடியும்? என் அறைக்கு வந்தது தான் தவறா? அதன் படபட சத்தம் என்னைப் பல்வேறுவகையான மனக்குமுறலுக்கு உள்ளாக்கியது. ஒரு முடிவு செய்தேன்.

பூனையிடம் சென்று தட்டானைப் பிடித்தேன். பூனை விடவில்லை; நன்றியும் மதியும் கெட்ட பூனையே! இதை உனக்குப் பிடித்துத் தந்தவன் நானல்லவா? திரும்பக்கொடு அதனை என்னிடம். ஆனால் தரவில்லை அது. என்னிடமும் விளையாட்டுக் காட்டியது. மூடமனிதனே! கொடுத்தப்பொருளை திரும்பக்கேட்கும் மனித வழக்கத்தை என்னிடம் காட்ட முயற்சிக்காதே என்று என்னிடம் அது சொல்லியிருக்கும். விடாமுயற்சியில் அந்த தட்டானை அதனிடமிருந்து காப்பாற்றினேன்; மனிதனல்லவா!!! என்னை ஓர் ஐந்தறிவு ஜீவன் வெல்லமுடியுமா? என் காலதர் அருகில் சென்றேன்; உயிருள்ளதா? எப்படி பரிசோதிப்பது?

ஆ! இறக்கைகள் அசைகின்றன; காப்பாற்றிவிட்டேன். காலதரின்வழி வெளி உலகிற்கு அனுப்பிவைத்தேன். பெரியகாயம் ஆகியிருக்கலாம். ஆனால் உயிர்பிழைத்துவிட்டது; அதுவரை போதும். மனம் நிம்மதியடைந்தது. கட்டிலில் படுத்தவாறு ஒருவித மனநிம்மதியில் ஆழ்ந்தேன்! பாவம்! பூனையின் நிலை?

பரவாயில்லை. பால் சேர்த்து ஊர்த்திவிடலாம் அல்லது கருவாடு போட்டு சமாதானப்படுத்திவிடலாம். பூனையைத் தேடினேன். கட்டிலுக்குக் கீழே ஏமாற்றமடைந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அதை அழைத்தேன்; வரவில்லை. பிடித்தேன்; என் பிடியிலிருந்து நழுவி மீண்டும் அது வெறித்த இடத்திற்கேச் சென்றது.

அங்கு சென்று பார்த்தேன். என்ன அது? ஏதோ உருண்டையாக குண்டுமணி அளவில். அருகில் சென்று பார்த்தேன்; அந்த தும்பியின் தலை.


( ஆட்டூன் – ஆட்டுக்கறி; காலதர் – ஜன்னல்; தும்பி – தட்டான்பூச்சி )

Comments

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை